இலக்கியங்கள் காட்சிப்படுத்தும் கோட்டை அமைப்புமுறைகள்- ஓர் ஆய்வு

முனைவர்.நா.அமுதா தேவி 25 April 2019 கட்டுரை Read Full PDF

முனைவர்.நா.அமுதா தேவி

உதவிப் பேராசிரியர்

தமிழ்த்துறை

உதவிப் பேராசிரியர்

இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி

கோவை

 

பால் மருள் சொற்கள்

ஆய்வுச்சுருக்கம்
பண்டைய காலம் முதல் இன்று வரை நம்மில் பலரும் பல இடங்களில் அமைந்துள்ள நம் மன்னர்களின் வாழ்விடத்தைப் பார்க்கும் பொழுது வியப்பு மேலோங்குகிறது. அவ்வகையில் என்னுள்விழுந்த விதையே இலக்கியங்களில் கோட்டை எனும் இக்கட்டுரையின் பொருண்மையாகும். அன்றைய காலத்திய மன்னர்களின் வாழ்விடம் சிறப்புக்கள் பல பெற்றுத் திகழும் பொழுது இதனைக் கண்ட மனிதனின் படைப்பு எவ்வாறு இருக்கும் என்பதனைத் தெரிந்துகொள்ளவே இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இலக்கணநூலான தொல்காப்பியம் முதல் பல காப்பியங்களும் சிறுகதைப்பாடல்களும் திறனாய்வு நூல்களும் கோட்டையின் அமைப்புமுறையினை எவ்வாறு பதிவுவெய்துள்ளது என்பதனை இக்கட்டுரையின் வாயிலாகக் கூறமுற்பட்டுள்ளேன். பெரும்பாண்மையான இலக்கியங்கள் உண்மையான கோட்டையின் அமைப்புமுறைகளுடன் ஓத்திருப்பதனைப் பதிவு செய்துள்ளமையைக் காணமுடிகிறது. இக்கட்டுரையில் இலக்கியங்களின் பதிவுகளுடன் கோட்டையின் பிற பாகங்கள், வகைகள், கோட்டையின் பாதுகாப்புமுறைகள், அரண் அமைப்பு முறைகள் ஆகியவை குறித்தும் அக்காலத்திய மக்களின் மதிநுட்ப அறிவினையும் சுருக்கமாகச் சுட்டியுரைத்துள்ளேன். திறவுச் சொற்கள்:
கோட்டைஇ அரண்இ அரண்வகைகள்இ இலக்கியம் இ தொல்காப்பியம்

 

முகவுரை

பண்டையகாலத்து மனிதன் ஓரளவு இயற்கையமைப்புடைய இடங்களைத் தேர்வுசெய்து அங்கு செயற்கைமுறையால் அரண் அமைத்து வாழ்ந்து வந்தான். இத்தகைய அரண்களைத் தனக்குச் சாதகமாகவும் எதிரிகளுக்குப் பாதகமாகவும் வடிவமைத்து இருந்தனர். அரசன் தன் நாட்டில் உள்ள செல்வங்கள்,படைக்கருவிகள்,உணவுத்தானியங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கவும் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் கோட்டை என்ற அமைப்புமுறையினை உருவாக்கினான். இக்கோட்டைகள் மலையிலும் மலைகள் சூழ்ந்த நடு இடத்திலும் சமவெளிகளிலும் அமைத்து இருந்தனர். இவ்வாறு அமைந்த கோட்டையின் பாதுகாப்பு அரண்களாகக் காடும் அகழியும் நிலமும் மதிலும் மலையும் அமைந்திருந்தன.. இலக்கியங்கள் இத்தகைய பாதுகாப்பு அரண்களைக் காட்டரண்,நீரரண்,நிலவரண்,மதிலரண்,மலையரண் எனப் பகுத்துக்காட்டியுள்ளது. இத்தகைய அரண்களைப் பெற்ற கோட்டைகளே சிறந்த பாதுகாவலை உடைய கோட்டைகளாகக் கருதப்பட்டது. இவ்வாறு கோட்டைகள் உருவாகக் காரணமாக இருந்த அரண் குறித்தும் அதன் வகைகள் குறித்தும் இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்பட்ட அரண்களின் அமைப்பு முறை குறித்தும் ஆய்வதாக இக்கட்டுரையின் பொருண்மை அமைகின்றது.

 


அரண் விளக்கம்

அரணிடுதல் என்பது இயற்கையாகவும் படைக்கருவிகளைக் கொண்டும் ஓர் இடத்தைப பாதுகாப்பதாகும். பகைவர்களால் துன்பம் ஏற்படும் பொழுது தன்னையும் தன் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டி நாட்டின் பல இடங்களிலும் அரண் அமைத்துப் பாதுகாத்தனர்.இத்தகைய அரண்கள் எதிரிகளின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்தது. இன்றும் பல கிராமத்து மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் விலங்குகளிடம் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள கல்,மண்,மரம் போன்ற இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு நீண்ட மதில்சுவரையும் அவற்றில் பலவகையாக பொறிகளையும் அமைத்துக் காத்து வந்துள்ளனர். இதன்மூலம் அரணிடும் முறையில் மக்களுக்கு இருந்த தொழில்நுட்ப அறிவினையும் ஈடுபாட்டினையும் அறியமுடிகின்றது. எனினும் இடைக்காலத்தில் உருவாக்கப்பட்ட கோட்டைகளின் அமைப்பு முறையினை நோக்கும் பொழுது அவை உயரமானவையாகவும் எண்திசையில் இருந்து வரும் முற்றுகையைச் சமாளிக்கும் வகையிலும் பலவகையான தற்காப்பு முறைகளை உருவாக்கியிருந்தமையைக் காணமுடிகின்றன. ஓர் இடத்தின் இயற்கை அமைப்பிற்கு ஏற்றவாறும் கால மாற்றத்திற்கு ஏற்பவும் அரணிடும் முறையில் பல மாற்றங்களைச் செய்து வந்துள்ளனர். இன்று இயந்திரங்களின் வளர்ச்சியினாலும் அணுகுண்டின் தோற்றத்தினாலும் அரணிடும் முறை பயனற்றுப் போயின எனினும் இலக்கியங்கள் இத்தகைய அமைப்பு முறையினைப் பலவாறாகப் பதிவிட்டுள்ளது. தன்னைத் தற்காத்துக் கொண்டு பிறருக்குப் பயன்படும் படியாக வாழ்ந்த சமுதாயம் நம் தமிழ்ச்சமுதாயம். இவ்வாழ்வியல் முறையை முறையான வழியில் ஆவணமாகப்; பாதுகாக்காவிடினும் இன்று நமக்குக் கிட்டியுள்ள தரவுகளின் வாயிலாகப் பல வரலாற்று உண்மைகளைக் கண்டறிய முடிகின்றன. இலக்கியம் புனைவதற்குத் தூய்மையான மனநிலை அவசியமாகின்றது. அப்படிப் பல இடங்களை நாடிச் செல்லும் பொழுது நம் சான்றோர்களின் வாழ்வியல் தடங்களைத் தனது நூல்களில் பதிவிட்டுவிடுகிறான். இலக்கியம் தோன்றுவதற்கு முன்பே அதற்குச் சான்றுகாட்டி வாழ்ந்தவர்கள் நம் சான்றோர். இவ்வாறாக இவர்கள்தான் கண்ட வாழ்வியலை இலக்கியங்களில் பதிவுசெய்த பான்மையினைக் காணலாம்.

 

தொல்காப்பியம்

தொல்காப்பியத்தால் அறியப்படும் கட்டிடக்கலைக் கூறுகள் மிகச்சிலவாகும். பண்டைய வேந்தர்கள் தம் அரண்மனைகளைப் பாதுகாத்த திறனை முழுமுதல் அரண் எனப் புறத்திணையியலில் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பு என்பது அந்நாட்டில் அமைந்துள்ள அரண்களைப் பொருத்தே அமைந்திருந்தன. இத்தகைய வலிமையான அரண்களை அழிப்பதிலும் காப்பதிலும் பல போர்கள் நடைபெற்றன. இத்தகைய போர் நிகழ்வுகளைத் தொல்காப்பியர் உழிஞை என்னும் துறையில் காப்பியர் சுட்டியுள்ளார்.

 

திருக்குறள்

அரணுக்குள் இருப்பவர்கள் நெடுநாளைய முற்றுகையையும் தாங்குவதற்கு ஏற்றவாறு அது எல்லா வகையான போர்த் தளவாடங்களையும் உணவுப்பொருள்களையும் குடிதண்ணீரையும் தன்னிடத்தே கொண்டிருக்க வேண்டும் எனவும் அரண் அகலமான இடம் உடையதாகவும் பகைவர்கள் எளிதாக நெருங்க முடியாத வகையில் மலையும் காடும் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் எனத் திருவள்ளுவர் அரணியல் எனும் அதிகாரத்தில் அரணிற்கு விளக்கம் கூறியுள்ளார்.

 

கலைக்களஞ்சியம்

“அரண் என்பது பகைவர் அணுக அரியதாகவும் வஞ்சனைமிக்கதாகவும் ஆழமான அகழியை உடையதாகவும் இருக்கும். அதனைச் சுற்றிலும் அடர்ந்த காவல் காட்டினையும் தோட்டி,முள் போன்ற தடைகளையும் அமைத்திருந்தனர். இதில் பகைவர்களுக்குத் தொல்லை விளைவிக்கும் பல பொறிகளும் இருந்து வந்துள்ளது. அதில் உணவுப்பொருள்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.”( கலைக்களஞ்சியம் - தொகுதி -1-ப.178) என அரணிற்கு விளக்கம் தருகின்றது.

 

அபிதானசிந்தாமணி
“பகைவர்களால் துன்பம் நேர்ந்த இடத்து அது தனக்கும் அரசனுக்கும் காத்தலாக உள்ளது”(அபிதான சிந்தாமணி – பக்-81) எனச் சுட்டுகிறது.

 

புறத்திறட்டு

“பகைவர்களால் கைப்பற்றப்படாதவாறும் அழிக்கப்படாதவாறும் நாட்டிற்கும் தலைவருக்கும் அரசனுக்கும் பாதுகாப்பளிக்கும் இயற்கையும் செயற்கையுமாகிய இருவகையமைப்பு அரண் எனப்படும்”(புறத்திரட்டு - இரா. இளங்கோவன் -பக்- 190)

 

மனுதர்மசாஸ்திரம்

“பன்னிரண்டு முழ உயரமுள்ள கற்கோட்டையாவது,மிகுந்த ஆழமுள்ள ஜலக்கோட்டையாவது,ஒரு யோசனை தூரம் உள்ள வனக்கோட்டையாவது,சதுரங்க பலக்கோட்டையாவது,மலைக்கோட்டையாவது சுற்றிலும் ஐந்துயோசனை தூரம் உள்ள நீரற்ற பூமிக்கோட்டையாவது ஏற்படுத்திக்கொண்டு அதற்குட்பட்ட பட்டணத்தில் அரசன் வாழ்தல் வேண்டும்.”(கி.வீரமணி – அசல் மனுதர்மசாஸ்திரம் -பக்.159) எனக்குறிப்பிடுகிறது.

 

அர்த்தசாஸ்திரம்

கௌடில்யர் நான்கு வகையான அரண்களைத் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். அவை “நீர் அரண் - நடுவில் தீவுடையதும் சூழ்ந்திருக்கும் பள்ளங்களைக் கொண்டும் அமைவது. மலையரண் - நீர்,புல் ஆகியவை இல்லாத களர் நிலமாக அமைவது. காட்டரண் - பெரிய முள் மரக்கூட்டங்கள் சூழ்திருக்குமாறு அமைவது. மதிலரண் - இட்டிகைகளாலும் கற்களாலும் எடுக்கப்பட்ட சுவர்களாகிய கோட்டை.”(மாணிக்கம் - அர்த்தசாஸ்த்திரம் பொருள்நூல் -பக் - 108) இத்தகைய நூல் கருத்துக்களின் வாயிலாக நோக்கும் பொழுது அரண் என்பது பாதுகாப்பானதாகவும் ஆயுதம் மற்றும் உணவு நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதனை அறியலாம். இந்நூல்கள் அனைத்தும் அரண் எவ்வாறு இருந்தது என நமக்கு உணர்த்திச் செல்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் சான்றோர்கள் எப்படியெல்லாம் தம்மைத் தற்காத்துக் கொண்டனர் என்பதற்கு இவை சான்றுகளாக அமைகின்றது. கடந்து வந்த நம் வாழ்வியலின் பதிவு இலக்கியங்களின் வாயிலாகப் புலப்படுகிறது. இனி இலக்கியங்கள் அரண் வகைகளை எவ்வாறு சுட்டியுரைக்கிறது எனக்காணலாம். பண்டையகாலத்திய நகர அமைப்பின் பாதுகாவலனது முறையே காட்டரண்,நீரரண்,நிலவரண்,மதிலரண்,மலையரண் என வரிசையாக அமைக்கப்பட்டு இருந்தமையையும் இக்காவல் நிலைகளைக் கடந்த பின்பே கோட்டைக்குள் செல்ல முடியும் என்பதனை உணரலாம்.

 

இலக்கியங்கள் உணர்த்தும் காட்டரண்

மரம் செடி கொடிகள் வளர்ந்து ஒன்றோடொன்று பின்னிக் கொண்டு இருப்பதால் மக்களும் விலங்குகளும் எளிதில் கடந்து செல்லாதவாறு இடையூறு விளைவிக்கும் பெரும் மரக் காடுகளை அழித்துக் கொண்டு செல்வது என்பது எதிரிகளுக்கு முடியாத செயல் என்பதனை அறிந்த அரசர்கள் தங்கள் தலைநகரைச் சுற்றி இயற்கையாக வளரப்பெற்ற பெருங்காடுகளை விரும்பி வளர்த்தனர். பிற்காலத்தில் நாடு வளர காடு அழிந்து போன நிலையில் இத்தகைய காட்டரண்களை இயல்பாகப் பெறுதல் இயலாத போது தம் நாட்டினைச் சுற்றிச் செயற்கைக் காடுகளை வளர்த்தார்கள். இதனைக் காவல்காடு என அழைத்தனர்.

 

காட்டரண் விளக்கம்

“படைமறவர் பகைவர்களுக்குத் தெரியாமல் மறைந்திருக்கக் கூடியதும் தொகுதியாகப் பகைவர் புகமுடியாததுமாய் மரம் அடர்ந்து அமைந்திருப்பதாகும்.”(தேவநேயன்-பழந்தமிழாட்சி-பக்.63) என தேவநேயன் காட்டரணிற்கு விளக்கம் கூறியுள்ளார். காட்டரண்கள் மதிலைச்சுற்றியும் தனியாகவும் அமைந்திருக்கும். இக்காடுகளில் மூங்கில் மரங்களும் கூரிய முள் செடிகளும் கள்ளிச்செடிகளும் பிறவகையான மரங்களும் யானைகள் உள்ளிட்ட சில விலங்கினங்களும் மிகுதியாக இருப்பதால் இதனை உம்பற்காடு எனவும் அழைத்தனர்.

 

காவல்காடு சூழ்ந்த நகரம்

நன்னனின் நாடு காட்டரண்களால் நிறைந்ததாக இருந்தது. பகைவர்கள் அச்சம் அடையும் வகையிலும் அவர்களின் நிலையைக் கெடுக்கும் வகையிலும் காட்டரண் இருந்தது. பின்னிவைத்தது போன்ற கொடிகளையுடையதாகவும் இக்காட்டினை முன்பு கடந்த வீரர்கள் பின்பு வரும் வீரர்களுக்கு வழி காட்டும் வகையில் ஊகம் புல்லை முடிந்துவிட்டுச் செல்வார்கள் என்பதனை மலைப்படுகடாம் (378-93) மூலம் அறியலாம். காவல் காடு நகரைச்சூழ்ந்து பாதுகாப்புச் செய்தமையை நற்றிணை (பா.எ.95) அகநானூறு (367,22) புறநானூறு (325,326,181) பெரும்பாணாற்றுப்படை (பா.வரி.401) போன்ற நூல்களின் வாயிலாக அறியலாம்.

 

முள்வேலி

காவல்காட்டினுள் வேலியாக நொச்சிமரங்களும் முள்வேலிகளும் அமைந்திருந்தன. இதனை வாழ்முள்வேலி,இடுமுள்வேலி எனப் பகுத்து காட்டரணைப் பலப்படுத்தியுள்ளனர். வாழ்முள்வேலி என்பது முள் செடிகளையும் மரங்களையும் வளர்த்து அவற்றால் ஆக்கிய வேலியைக் குறிப்பது. இத்தகைய வாழ்முள்வேலியைப் பெரும்பாணாற்றுப்படையின் (பா.வரி.125-126) புலப்படுத்துகிறது. முள்ளை வெட்டிக்கொண்டு வந்து பிற இடத்தில் இடப்படும் வேலி இடுமுள்வேலி எனப்படும். அகநானூறு(பா.எ.394) இதனை ;சுட்டியுள்ளது. காட்டில் முள்வேலியை அமைத்து பாடிவீடு அமைத்தமையை

           “காட்ட இடுமுள் புரிசை ஏமுற வளை இப்படு

           நீர்ப் புணரியிற் பரந்த பாடி”(முல்.பா .பா.வரி.26-28)

இவ்வரிகளின் மூலம் அறியலாம்.

 

காவல்காட்டின் சிறப்பு

காட்டரணின் சிறப்பினைக் கண்டு போரிட வந்த பகைவர் திரும்பி ஓடிய நிகழ்வினை அகநானூறு (பா.எண்.336) வாயிலாக அறியலாம். வல்லம் என்னும் ஊரில் உள்ள காவல்காட்டினை வந்தடைந்த பகைவர்கள் அந்நாட்டில் உள்ள காவல்காட்டின் சிறப்பினைக் கண்டு அஞ்சியோடியமையை அறியலாம். காவல்காடு நீண்டு இருந்தமையை இன்னா நாற்பது(பா.எண்.33) சிலப்பதிகாரம் (14-62) மணிமேகலை (28-25-26) மூலமும் அறியமுடிகின்றது.

 

காட்டரணை அழித்தல்

இளஞ்சேரல் இரும்பொறை பகைவர்கள் புகுவதற்கு அரிய காவல்காட்டினை அழித்தான் என்பதனை பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்தின் “அருமிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து”(பதி.பத்.பா.வரி-5) என்ற வரி தெளிவுபடுத்துகிறது.

 

கௌடில்யர் உணர்த்தும் மறைச்செயல்கள்

காட்டரணை முற்றுகையிடும் பகைவர்களின் உயிரைக் கவரும் வகையில் பல நிறம் கொண்டதவளை,பூராண்,நண்டு.கம்பளிப்புழு,பல்லி,பூதிப்புழு,கவுதாரி ஆகியவற்றுடன் கீழாநெல்லியின் பட்டை,இலை,மலர்,கனி,வேர்,தண்ணீர்முட்டான் கிழங்கு,சேங்கொட்டை மரம்,எருமையாட்டம் கொடிகளின் சாற்றுடன் சோர்த்துப் புகையை உருவாக்கினால் அப்புகை பகைவர்களின் திறனை அழித்து அவர்களின் கண்களைக் குரடாக்குவதுடன் பகைவர்களைக் கொல்லும் திறன் உடையதாகவும் உள்ளதனைக் கௌடில்யர் குறிப்பிட்டுள்ளார். (அ.மாணிக்கம் -அர்த்த சாஸ்;திரம் பொருள் நூல் - ப-777) இவ்வஞ்சகமுறையினைப் பகைவர்கள் உள்ளே நுழைந்தவுடன் துவக்கிவிட்டால் அவர்களின் முயற்சி வீணாகிவிடும். காட்டரணின் சிறப்பினைக் கண்ட படைவீரர்கள் போரிடாமல் திரும்பச் சென்றுவிடுவர்.

 

இலக்கியங்கள் உணர்த்தும் நீரரண்

நீரரண் என்பது எதிரிகள் கோட்டைக்குள் நுழையாத வகையில் கோட்டையைச் சுற்றி நீரினால் பாதுகாப்புச் செய்து காத்தலாகும். இவ்வரண்களை இயற்கை அரண், செயற்கை அரண் என இருவகையாகப் பகுத்துள்ளனர். அகழி,கிடங்கு என்ற சொற்களின் வாயிலாக இதனை அறியமுடிகிறது. “கி.மு.நான்காம் நூற்றாண்டில் அரசாண்ட சந்திரகுப்த மன்னனுடைய தலைநகராகிய பாடலிபுத்திரத்தின் அகழி 600 அடி அகலமும் 45 அடி ஆழமும் உடையதாக இருந்தது என்று மெகஸ்தனிஸ் கூறியுள்ளார்.”(வி.எஸ்.வி.இராகவன் -மெகஸ்தனிஸ் -ப114)

 

திருவள்ளுவர்
நாட்டினைச் சுற்றி நீர்ரிலைகளும் மலைகளும் அமைந்திருந்தால் அந்நாடு சிறப்புடையதாக இருக்கும்.நீரினைப் பொதுவாக ஆற்றுநீர்,ஊற்றுநீர், வேற்றுநீர் என மூவகையாகப் பகுத்துக் காட்டியுள்ளார். இதனை

           “இருபுனலும வாய்ந்த் மலையும் வருபுனலும்

           வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு”( குறள் -737)

என்ற குறளின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இருபனல் என்பது ஊற்றுநீராகிய கீழ்நீரையும், வேற்று நீராகிய மேல் நீரையும் குறிப்பதாகும். கிணறு, குளம், ஏரி முதலியவை கீழ்நீரையும் மழை நீர் வேற்றுநீரையும் சுட்டுகின்றது. “மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அச்சமயம கோட்டையைச் சுற்றியுள்ள அகழியிலும் நீர் நிறைந்து காணப்படும். ஆறு உற்பத்தியாகும் மலைப்பகுதியில் உள்ள காடுகளும் அதனைச் சுற்றியுள்ள நிலப்பரப்பும் மழைநீரைத் தம்முள் உட்கொள்ளும். மழைக்காலம் முடிவடைந்த பின்பு காடும் மணற்பரப்பும் உறிஞ்சிய நீரை; மலையின் கிழ்நோக்கிப் பாயச்செய்யும். இதனால் ஆண்டு முழவதும் ஆற்றில் நீரோட்டம் இருக்குமாறும் பயிர் உற்பத்திக்கும் அகழியில் நீர் வற்றாமல் இருக்கவும் உதவுகிறது.” (கே.ஆர்.திருவேங்கடசாமி – வள்ளுவத்தில் நீர் வளமும் வாழ்வியலும் -பக் -13)

 

அகழி அமைப்பு

இலக்கியங்களில் இருவகையாக அகழியின் அமைப்புமறையினைக் காணமுடிகின்றது. ஒன்று நகரின் மதிலுக்கு வெளியில் அமைந்துள்ள அகழி, மற்றொன்று மன்னனின் அரண்மனையைச் சுற்றி அமைந்த அகழி. இவ்விருவகை அகழியிலும் கொல்லும் ஆற்றலையுடைய விலங்குகளும் பலவகையான பொறிகளும் இருந்துள்ளன. அகழியில் உள்ள நீர் பாசிபடர்ந்தும் முந்நீரும் பாய்ந்ததாகவும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. “எதிரிகள் அகழியில் உள்ள நீரை அருந்தும் பொழுது அவர்களை அழிக்கும் வகையில் அவர்கள் அறியாவண்ணம் சேங்கொட்டை, அரங்கன்,நாயுருவி,மருதமரம் ஆகியவற்றின் மலர்களுடன் ஏலமரம், தானிமரம், குங்கிலியம், ஆலாலம் ஆகியவற்றின் சாறும் செம்மறியாட்டின் குரதியுடன் மக்களின் குரதியையும் சேர்த்து நன்கு அரைத்து அதனைப் பிண்ணாக்குடன் நீரில் கலந்து விட்டால் இந்நிரை அருந்துபவனும் தொடுபவனும் உடனே இறந்துவிடுவான்”(அ.மாணிக்கம் - அர்த்தசாஸ்திரப் பொருள் நூல் -ப-778) இத்தகைய மறைச்செயல்கள் மூலம் நீரரணிற்கு அவர்கள் கொடுத்துள்ள முக்கியத்துவமும் அக்காலத்திய மக்களின் மதிநுட்பத்திறனும் புலப்படுகிறது. அகழிஆழமானதாகவும் அகன்றதாகவும் கொல்லும் ஆற்றலையுடைய பல உயிரினங்கள் வாழக்கூடியதாகவும் இருந்தமையை இலக்கியங்களில் பதிவுசெய்துள்ளனர். இன்று நம்மிடையே காணப்படும் சில கோட்டைகளின் எச்சங்களைக் காணும் பொழுது நாம் இதனை அறிந்துகொள்ள முடிகின்றது. இத்தகைய சிறப்பான நீரரண் நகரில் வடிவமைக்கப்பட்டு இருந்தமையால் அந்நாட்டு மன்னர்களுடன் போரிடாமல் சென்றமையைத் தேம்பாவணி(பா.எ.7,10), இரட்சணிய யாத்திரிகப் பாடல்கள்(பா.எண்.36) சான்றுகாட்டி நிற்கிறது. பேரூர்கள் பெரும்பாலும் ஆற்றங்கரையின் ஓரத்தில் தோற்றம் பெற்றன. எகிப்து நாட்டு நகரங்கள் நைல்நதியின் கரையிலும் மெசபடோமிய நாகரீகத்தை நல்கிய டைகிரஸ்,யூப்ரடிஸ் ஆற்றங்கரையிலும் மொகஞ்சதாரோ, அரப்பா நகரங்கள் சிந்துநதிக் கரையிலும் தோற்றம் பெற்றது. இதுபோலவே சேரநாட்டின் தலைநகரம் கருவூர் பொருநையாற்றங்கரையிலும், சோழநாட்டுத் தலைநகரங்கள் உறையூர், புகார் நகரங்கள் காவிரிக்கரையிலும் பாண்டியநாட்டுத்தலைநகரம் மதுரை வையைக்கரையிலும் அமைந்திருந்தமையை நோக்கும் பொழுது அக்கால மக்கள் நீரரணிற்குக் கொடுத்துள்ள முக்கியத்துவத்தினை அறிய முடிகிறது.

 

நிலவரண்

காட்டரணையும் நீரரணையும் கடந்து வெற்றி பெற்ற மன்னர்கள் அதனை அடுத்து தண்டை நிலப்பகுதியில் அமைந்துள்;ள நிலவரணை முற்றுகையிடுகின்றான். “நிலவரண் இருநிலைகளில் அமைந்திருக்கும். பகைவர்கள் புறமதிலைப் பற்றாமை பொருட்டு அதன் புறத்தேயுள்;ள வெள்ளிடை நிலமும் பகைவர் முற்றுகை நீடித்திருக்கும் போது அகத்தாருக்கு வேண்டும் உணவுப்பொருள்களைப் பயிர் செய்யும் வகையில் மதிலின் உட்புறமாக விடப்படும் தண்டை நிலம் நிலவரணாகும் எனத் தேவநேயப்பாவாணர்( தேவநேயன்- பழந்தமிழாட்சி-பக்-64) நிலவரணிற்கு விளக்கம் கூறியுள்ளார்.

அகழிக்கும் மதிலுக்கும் இடைப்பட்ட இடமான புறநகரினை நிலவரண் என்பர். இங்கு காவல் வீரர்கள் தம் பாசறையை அமைத்துக் காவல் காட்டினையும் அகழியையும் அழித்துக்கொண்டு வரும் பகைவர்களின் படைகளை எதிர்த்துத் தடுத்து நிறுத்துவர். கோட்டைக்குள் வசிக்கும் மக்கள் தத்தம் வீடுகளில் பயன்படுத்தி வெளியேற்றும் கழிவுநீரும், மழைக்காலத்தில் கோட்டையில் இருந்து வெளியேறும் நீரும் அகழியைச் சென்று அடைவதற்கு முன்பாக இந்நிலவரணைக் கடந்து செல்கிறது. கோட்டைக்குள் வசிக்கும் மக்கள் இந்நீரை பயிர்செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்வர். இதனால் பகைவர்களின் நீண்ட நாள் முற்றுகையைச் சமாளிக்க இயலும். இத்தகைய சிறப்பிற்குரிய இவ்வரணைப் பாதுகாக்காவிடில் மக்கள் முற்றுகைக்காலங்களில் துயர்பட நேரிடும். இதனைப் புறநானூற்றுப்பாடல் (பா.எ.44) படம்பிடித்துக்காட்டியுள்ளது.

 

மதிலரண்

ஆதிமனிதன் விலங்குகளிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள தன் வாழ்விடத்தைப் பாதுகாப்பாக அமைக்கத் தொடங்கினான். காலப்போக்கில் போட்டியும் பொறாமையும் பேராசையும் அவற்றால் எழும் பகையும் வஞ்சகமும் ஒருவரை ஒருவர் தாக்கி அழிக்கும் நிலையைத் தோற்றுவித்தன. இந்நிலையில் இருந்து தங்களை எதிரிகள் அணுகாமல் இருக்கப் பலமான தடைகளை ஏற்படுத்திக்கொண்டனர். பகைமன்னர்கள் மூன்றுவகையான அரண்களைக் கடந்துவந்த பின்பு மதிலரணைத் தாக்க முற்படுகின்றனர். இவ்வரணை அனுபவமும் தொழில் நுட்பத்திறனும் கொண்ட சான்றோர்களின் ஆலோசனைப்படி பல நிலைகளைக் கொண்டதாக வடிவமைத்திருந்தனர். இலக்கியங்களில் மதிலரணின் பல்வேறு உறுப்புகளைக் காணமுடிகின்றன. இஞ்சி,எயில்,ஞாயில்,புரிசை எனப் பல்வேறு வகையான உறுப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளது. பகைவர் மதில் மீது ஏணிவைத்து அல்லது உடும்பைப் போட்டு ஏறமுடியாத அளவு உயரமானதாகவும் மதில் மேல் படைகளும் படைக்கருவிகளும் வைத்துப் போர்புரிகின்ற வகையிலும் திண்மையானதாகவும் பகைவர்கள் உள்ளே புகமுடியாத வகையில் அருமையினை உடையதாகவும் பகைவர்களால் முற்றுகையிட்டும் அழிக்க முடியாததாகவும் மதிலரண் அமைதல் வேண்டும் எனத் திருக்குறள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. (திருக்குறள்-அதிகாரம்-75)

 

கௌடில்யரின் மதிலரண்

மதிலரண் அகழியில் இருந்து நான்கு கோல் இடைவெளி உடையதாகவும் ஆறு கோல் உயரமும் பன்னிரண்டு கோல் அகலமும் உடையதாகவும் தடைபடுத்தப்பட்டும் இருக்க வேண்டும். மதிலரண் அடி அகன்று நுனி சுருங்கியதாகவோ அடியும் நுனியும் ஓத்த அகலமுடையதாகவும் அடியும் நுனியும் சுருங்கி இடைப்பகுதி அகன்றதாகவோ அமைதல் வேண்டும். அகழியை உருவாக்குவதற்குத் தோண்டிய மண்னைக் கொண்டு மதில் சுவருக்கு ஆதாரமாகவும் எஞ்சிய மண்ணைக் கொண்டு அரண்மனை கட்டுவதற்கான இடத்தில் பள்ளங்களைச் சமன்படுத்தியும் மதிலரணை உருவாக்குதல் வேண்டும். செங்கல்லாலும் கருங்கற்களாலும் மதில்சுவர் அமைந்திருக்க வேண்டும். அச்சுவரின் மீது ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஏற்ற படிக்கட்டுகளை உருவாக்க வேண்டும் எனக் கௌடில்யர் மதிலரணில் செய்ய வேண்டிய நுட்பத்திறனை சுட்டிக்காட்டியுள்ளார். (அ.மாணிக்கம்- அர்த்தசாஸ்திரம் பொருள் நூல் -பக்-109)

மலை உள்ள இடங்களில் எல்லாம் அம்மலையே மதிலாகவும் மலையில்லாத இடங்களில் மலையை விட உயரமானதாகவும் உறுதியானதாகவும் எடுக்கப்படட; மதில் அரணாகவும் விளங்குகிறது. இவ்வாறு அமைந்த மதிலைப் புறமதில்,இடைமதில், அகமதில் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியிருந்தனர். புறமதில் வளைந்த இடங்களை உடையதாகவும் இடைமதில் பகைவர்களின் முற்றுகை நீடித்து இருப்பினும் உள்ளே இருப்போர் உணவிற்கு எவ்விதக் குறையும் இல்லாமல் தமக்கு வேண்டிய உணவினை விளைவித்துக் கொண்டும் வாழும் வகையில் பரந்த நிலப்பரப்பினை உடையது. இவற்றிற்கு இடையில் பலவகையாக ஆயுதங்களைப் பொருத்திப்பாதுகாத்து வந்துள்ளனர்.

 

மதிலரண் வகை
வள்ளுவர் மதிலரணை நான்கு வகையாக வகைப்படுத்தியுள்ளார். அவை உயர்மதிலரண், அகன்மதிலரண், திண்மதிலரண், அருமதிலரண் என்பதாகும். பல இலக்கியங்களில் இவை சுட்டிக்காட்டப்பட்டு இருப்பதனால் சான்றுக்காக சிலவற்றை மட்டும் இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.

 

உயர்வு

           “வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை”(பதி.பத்.53)

 

திண்மை

           “புனைமான் இஞ்சி பூவல் ஊட்டி மனைமணல் அடுத்து”(அகநானூறு- பா.எ.198)

 

அருமை
அருமதிலரண் என்பது மதிலைத் தகர்த்திடாதவாறு மதிலைக் காவலர்களாலும் இயங்கும் இயக்கும் பொறிகளைக் கொண்டும் பாதுகாத்தும் உறுதியான கதவினைப் பொருத்தியும் சிற்பநூல் முறைப்படி கட்டமைத்திருந்தனர். யவன தேசத்து வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்தமையை கம்பராமாயணமும்(103) சிலம்பும்

           “கடிமதில் வாயில் சிறந்த

           அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்காங்கு

           ஆயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு”(சிலப்-14-66-68)

           என்ற இவ்வரிகளில் உணர்த்திநிற்கிறது.

 

மதில் பொறி வகைகள்

மதில்பொறிகளை நிலையியல்பொறிகள், இயங்கியல்பொறிகள், அலமுகப்படைப்பொறிகள் என மூவகையாகப் பகுத்துக் கூறலாம். நிலையியல் பொறிகள் என்பது சருவோதபத்திரம், சாமதக்கினியம், பன்முகம், விசுவாசகாதி, சங்காடி, யாநகம், கொண்டல்வாகு, ஊர்த்துவவாகு, அருந்தவாகு என்பதாகும். இயங்கியல்பொறிகள் என்பது பாஞ்சாலிகம்,துருகனாம், முற்கரம், கதை, முட்கதை, குத்தாலி, பெருமுழக்கு, விற்காடிமம், நூற்றுவரைக்கொல்லி, முத்தலை, வேல், ஆழி போன்றவைகளை உள்ளடக்கியதாகும். அலமுகப்படைப்பொறிகள் என்பது கலப்பையின் நுனி போன்று கூரிய படைக்கருவிகளைக் குறிப்பதாகும். இது வேல்,ஈட்டி, குந்தம், சூடகம், பிண்டிபாலம், தோமரம், பன்றிச்செவி, கணையம், கற்பணம், அச்சுருத்தி, கொம்பு, நாராசம், பட்டசம், அரிவாள், பொறிக்கல், எறிகல், உடைக்கல், உலக்கல், உலோகவலை, உலோகச்சிறுவலை, உலோகத்தகடு, நூற்கவசம், தலைக்காப்பு, கஞ்சுகம், பட்டை, முழுக்கவசம், அராவயிறு, பேடி, யானைச்செவி, அடிப்பனை, தமனிகை, கவாடம், கிடுகு, வலிககாந்தம் போன்ற வடிவங்களில் செய்யப்பட்ட பொறிகளாகும்.(அ.மாணிக்கம்- அர்த்தசாஸ்திரம் பொருள் நூல்- பக்-111) பல்வேறுவகையான இலக்கிய நூல்கள் பலவகைப்பட்ட பொறிவகைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இடத்தேர்வுமுறை

இன்றைய அறிவியல் உலகில் எத்தகைய மண் தளத்திலும் அதற்கு ஏற்புடைய அடித்தளம் அமைத்து கட்டிடத்தினை எழுப்ப இயலும். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் இடத்தேர்வுமுறை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இம்முறையினை இன்று பலர் பின்பற்றி வருவது கண்கூடாகும். நிலத்தை வன்பால், மென்பால், இடைப்பால் என மண்ணின் இயல்பிற்கு ஏற்ப மயமதம் என்னும் நூல் பகுத்துரைக்கிறது. நிலத்தைத் தோண்டி எடுக்கப்பட்ட மண்ணினை மீண்டும் அதே குழியில் இட்டு நிரப்பும் பொழுது மண் மிகுதியாக இருந்தால் அந்த நிலம் கட்டிடம் கட்ட ஏற்புடையதாகும். ஆடியார்க்கு நல்லார் இதனை நிறைகுழிப் பூழிகுழி நிறைவாற்றி எனச்சுட்டியுள்ளார். நிலத்தின். இயல்பிற்கு ஏற்றது போல உரிமையாளருக்கு நன்மை, தீமை, செல்வம், வலிமை போன்ற முன்குறியீpடுடாக இதனை ஏற்றுக்கொள்கின்றனர். இதனை

 

           “அளந்தோர் குழியின் மண்னை அகழ்ந்து அதன் மேலேயிட்டால்

           வளர்ந்திடில் செல்வம் உண்டாம் ஓத்திடில் மிகுதியில்லை

           குளந்தனில் குறையுமாகிற் குறைந்திடும் சம்பத்து அன்றே

           உளந்தனில் கருதி நல்லோர் உரைத்தனர் புவியின் மேதே”

(பவுன்ராஜ்-தமிழக்கோயில் கட்டிடக்கலை தொழில்நுட்பம் - பக்- 10)

 

சித்திரை மாதம் முதல் பத்துநாட்களும் இறுதி;பத்து நாட்களும் தவிர நடுவில் உள்ள பத்து நாட்களில் ஏதாவது ஒரு நாளில் பகல் பொழுதில் வடக்குத்தெற்காக அமைந்த கோல்களுக்கு இடையில் இரு கோல்களின் நிழல் நேர்கோட்டில் விழும் சமயம் மனைவகுத்தமையை நெடுநல்வாடை(73-78) சுட்டியுள்ளது. அன்றைய காலங்களில் நாம் பின்பற்றிய பல நடைமுறைப்பழக்கங்கள் இலக்கியங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

கட்டுமானப்பொருள்கள்

கோட்டையை உருவாக்கும் பொழுது மண், கல், செங்கல், மட்டும் அல்லாது இயற்கையாகக் கிடைக்கும் கருப்பட்டிச்சாறு, வெல்லச்சாறு, முட்டையின் கரு, ஆகியவையையும் பயன்படுத்தியுள்ளனர். பாஞ்சாலங்குறிச்சிக்கோட்டையினை உருவாக்கும் பொழுது “வரகு, வைக்கோல், ஆகியவைகளை மண்ணுடன் சேர்த்துக் குழைத்துக் கம்பங் கொம்பைகளை அதனுடன் போட்டு மிதித்து சுவர் வைத்து இடையில் பஞ்சுப்பொதியைக் கஞ்சிப்பசையால் ஒட்டி அடுக்கி இருபுறமும் சுவர் அமைத்தமையைக் கதைப்பாடல் (கட்டபொம்மன் கதைப்பாடல் -பக்-1737) வாயிலாக அறியமுடிகிறது.

உயரமான மாடங்களும் அம்மாடங்களில் பல வகையாக தூண்களும் பல மண்டபங்களும் அதிலும் வெப்பம் தெரியாத வகையில் சூரிய,சந்திர காந்தக் கற்கள் பொருத்தப்பட்டதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்ததையை பல நூற்கள் சான்றுகாட்டியுரைத்துள்ளது.

 

நிறைவுரை

அரண் பகைவர்கள் அணுகமுடியாத வகையில் உயரமானதாகவும் அகலமானதாகவும் பல பொறிகளைக் கொண்டதாகவும் முற்றுகையைச் சமாளிக்கும் வகையிலும் வடிவமைத்திருந்தமையை இலக்கியச்சான்றுகள் வெளிக்காட்டி நிற்கிறது.அன்றைய மக்களின் வாழ்வியல் நிலைப்பாட்டினை இலக்கியமாகப் பதிவிட்டு உலவவிட்டுள்ளனர். பலவகையான அரண்களை அமைத்து அதில் இயற்கையும் செயற்கையுமாகப் பல பொறிகளை அமைத்து நாட்டினையும் நாட்டில் உள்ள செல்வத்தையும் காவல்காத்து வந்துள்ளனர். சிற்பநூல் விதிப்படி இடத்தினைத்தேர்வு செய்து அவற்றில் கோட்டையை வடிவமைத்துள்ளனர். இன்று பல கோட்டைகள் அழிவின் எல்லையை அடைந்து கொண்டிருக்க நம் நாட்டின் பாரம்பரியத்தினைக் காத்து வருகின்றனர் தொல்லியல்துறையினர். இவர்களின் முயற்சியால் பல கோட்டைகள் இன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. வாழ்வியல் தடையங்களை நேரில் கண்டு வந்த பின் இலக்கியங்களை மீள்வாசிப்பு செய்கின்ற போது நம் முன்னோர்களின் மதிநுட்பம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. எவ்விதத் தொழில்நுட்பங்களின் துணையும் இல்லாத போnது ஆழ்ந்த சிந்தனையில் பல அரிய பாதுகாப்புக்கருவிகளைப் படைத்து நாட்டைக்காத்து வந்துள்ளமை போற்றுதலுக்குரியதாகும். இக்கட்டுரையில் இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்பட்ட அரண்வகைகளில் காலத்தினைக் கருத்தில் கொண்டு சிலவற்றை மட்டும் சுட்டியுரைத்துள்ளேன். இன்றும் தமிழகக் கோட்டைகளின் அமைப்புமுறைகளை நோக்கும் பொழுதும் இவை பொருந்திவருகின்றன. செஞ்சிக்கோட்டை இலக்கியங்கள் காட்டிய வகைமையின் அடிப்படையில் முற்றிலும் பொருந்தி வருகின்றது. தாம் கண்டுணர்ந்த இன்பத்தை, தமிழர்களின் பரந்து பட்ட சிந்தனையை இலக்கியமாகப் பதிவுசெய்தமையைக் கருத்தில் கொண்டு இன்னும் தனித்த பரந்துபட்ட நோக்கில் ஆராயும் பொழுது மேலும் பல பண்பாடுகள் மீட்டுருவாக்கம் செய்யப்படும் என்பது திண்ணம்.

 

துணைநூல் பட்டியல்
1. தொல்காப்பியம் - இளம்பூரணர் (உ.ஆ) – கழகவெளியீடு – சென்னை -1 2. திருக்குறள் - ஜெ. நாராயணசாமி – ஜெமினஜ அச்சகம் -கோவை 3. கலைக்களஞ்சியம் - தமிழ் வளர்ச்சிக்கழகம் - சென்னை 4. அபிதானசிந்தாமணி – சிங்காரவேலு -ஸி.குமாரசாமிநாயுடு சன்ஸ் - 5. புறத்திரட்டு - இரா. இளங்கோவன் - கழகவெளியிடு – சென்னை -1 6. அசல்மனுதர்ம சாஸ்திரம் - கி.வீரமணி – திராவிடகழக வெளியீடு – சென்னை -7 7. அர்த்தசாஸ்திரம் பொருள்நூல் -மாணிக்கம் -வர்த்தமானன் பதிப்பகம் - சென்னை-17 8. பழந்தமிழாட்சி – தேவநேயன் - கழகவெளியீடு – சென்னை -1 9. மலைப்படுகடாம் - போ.வே.சோமசுந்தரனார் - கழகவெளியீடு – சென்னை -18 10. பெரும்பாணாற்றுப்படை - போ.வே.சோமசுந்தரனார் - கழகவெளியீடு – சென்னை -18 11. முல்லைப்பாட்டு- போ.வே.சோமசுந்தரனார் - கழகவெளியீடு – சென்னை -18 12. அகநானூறு – செயபால் (உ.ஆ) -என்.சி.பி.எச் வெளியீடு -சென்னை -98 13. சிலப்பதிகாரம்-ந.மு.வேங்கடசாமிநாட்டார் - ராமையாபதிப்பகம் -சென்னை- 14 14. மணிமேகலை-உ.வே.சா.நூல்நிலைய வெளியீடு- சென்னை - 90 15. மெகஸ்தனிஸ் - வி.எஸ்.வி.இராகவன் -தமிழ்நாட்டுப்பாடநூல் கழகம்- சென்னை-1 16. வள்ளுவத்தில் நீர்வளமும் வாழ்வியலும் -கே.ஆர்.திருவேங்கடசாமி – என்.சி.பி.எச் வெளியீடு -சென்னை -98 17. தேம்பாவணி -சேதுராமன் -(உ.ஆ) – கழகவெளியீடு – சென்னை -18 18. இரட்சணிய யாத்திரிகம் -எச்.ஏ.கிருட்டினப்பிள்ளை – கிறிஸ்துவ இலக்கிய சங்கம் -சென்னை-3 19. புறநானூறு – சு.துரைசாமிப்பிள்ளை – கழகவெளியீடு -சென்னை -1 20. பதிற்றுப்பத்து – போ.வே.சோமசுந்தரனார் - கழகவெளியீடு – சென்னை -18 21. கம்பராமாயணம் - புலவர்குழவினர் - கம்பன் அறநிலை -கோவை-37 22. தமிழகக்கோயில் கட்டிடக்கலை – பவுன்ராஜ் - மெய்யப்பன் பதிப்பகம் - சிதம்பரம்- 1 23. நெடுநல்வாடை – போ.வே.சோமசுந்தரனார் - கழகவெளியீடு – சென்னை -18 24. கட்டபொம்மன் கதைப்பாடல் -ச.இரவி- தன்னனானே வெளியீடு – சென்னை -24