வள்ளுவர் காட்டும் கல்விக் கொள்கை -ஓர் ஆய்வு

முனைவர்; மா. தாமரைச்செல்வி 25 April 2019 கட்டுரை Read Full PDF

முனைவர்; மா. தாமரைச்செல்வி

அ.மா.ஜெயின் கல்லூரி (சுழல் 2)

மீனம்பாக்கம், சென்னை-600 114.

 

ஆய்வுச் சுருக்கம்

கல்வி என்பது ஒருவரின் பிறப்புரிமை. அனைவருக்கும் அது பொதுவானது. 'உண்மையறிவு" என்று சொல்லப்படும் அடிப்படை அறிவு எல்லோருக்கும் இயற்கையாகவே உண்டு. எனி;னும் அதனைத் தோண்டி வெளிக் கொணர்வதற்கும், வளர்ந்து அறிவைப் பெருக்குவதற்கும் கல்வி தேவை. அக்காலக் கல்வியின் நோக்கமும் இக்காலத்தே உள்ள கல்வியின் நோக்கமும் முற்றிலும் வேறுபட்டுள்ளது. சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் முரணான இக்காலக் கல்விக்கொள்கை மாற்றம் பெற வேண்டும். மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டும் பெருமைக்குரியதாகக் கல்விக் கொள்கை வகுக்கப்பெற வேண்டும். கற்றலின் போக்கு மாறுபட வேண்டும் என்பதை அடியொற்றியே 'வள்ளுவரின் கல்விக்கொள்கை" என்னும் இவ்வாய்வுக் கட்டுரை அமைந்துள்ளது.

 

திறவுச் சொற்கள்

கல்விக்கடல். கல்வி அழகே அழகு, சாந்துணையும் கல்லாத நிலை, அகரமுதல, கற்றதனால் ஆயபயன்

 

அறிமுகம்

கல்விக் கடல் போன்றது; ஆனால் கரையற்றது எல்லையின்றி விரிந்த பரப்புடையது. அளவற்ற ஆழம் உடையது. பூமியின் அமைப்புக்கேற்ப வேற்றுமைகள் பலவாக விரிந்து கிடப்பினும் அவ்வேற்றுமைகளைக் களைந்து ஒன்றி வாழும் உயர்வுக்கு வழிகாட்டியாக அமைவது கல்வி. (கல்வி அழகே அழகு) காலம் செல்லச் செல்ல அதன் அளவும் வளர்கிறது. தேவையும் மிகுகிறது. இன்று கல்வித்துறைகள் பலவாகப் பெருகியுள்ளன. துறைப்பெருக்கம் போலவே கல்வி கற்பதற்குரிய வாய்ப்பு வசதிகளும் பெருகியுள்ளன. ஆனால் கல்வி அதற்குரிய தனித்துவத்தோடு விளங்குகிறது என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

 

பழந்தமிழர் கல்விக்கொள்கை

பழந்தமிழர் கல்விக்கொள்கையில் இன்று போல் பலதுறைக் கல்வியில்லை. பல துறைக் கல்வியில்லை எனினும் கல்விக் கொள்கை வானுயர உயரமாய் வளர்ந்திருந்தது. கல்வியினால் உலகத்தை ஒன்றிணைத்து உயர்ந்ததாக்கிக் காட்ட முடியும்; காணமுடியும் என்னும் உயர்ந்த கொள்கை பண்டைக் காலத்தில் இருந்துள்ளது. உலகில் எது அழகு என்று சொல்லவந்த நாலடியார்

           குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
            மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
           நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
           கல்வி அழகே அழகு

என்று கல்வியின் அழகைச் சிறப்பாய் எடுத்துரைக்கிறது.

குஞ்சி ஆண்களுடைய தலைமுடியையும், மஞ்சள் பெண்களின் அழகு முகத்தையும் ~கொடுந்தானை| என்னும் ஆடையை இருவர்க்கும் பொதுவாகவும் சொல்லி, ஆண், பெண் இருபாலர்க்கும் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்துகிறது. பெண் கல்வி சான்றோர்களால் ஆதரிக்கப்பட்டது என்பதற்கு இவ்வரிகள் சான்றாக அமைகின்றன. சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் ஒரு பக்கமாய்க் கோடுதல் - சாய்தல் - சாருதல் இல்லாத நடுவுநிலைமையைத் தருவது கல்வி. இதனால்தான் கல்வி அழகே அழகு என்கிறது நாலடியார். தலைமயிரைப் பிடரி மறையவிட்டு நறுக்கிக் கொள்வது 'குஞ்சி" எனப்படும். பெண்கள் தலைமுடி கூந்தல் எனப்பட்டது. இன்றைய ஆடவரின் தலைமுடியைக் 'குறுங்குஞ்சி" என்கிறார் புலவர் குழந்தை. முடி, ஆடை, மஞ்சள் இவைகளால் செய்துகொள்ளும் புறஅழகை விட 'யாம்நல்லவர்" - நடுவு நிலைமை உடையவர் என்றெண்ணும் அகவழகைத் தருகின்ற கல்வியே அழகுடையது என்கிறது நாலடியார்.

அக்கல்வியால் யாதும் ஊராய் யாவரும் கேளிராய் ஆகும் நிலையைக் குறள் குன்றிலிட்ட விளக்காக ஒளிரச் செய்கிறது. இதனை,

           'யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
            சாந்துணையும் கல்லாத வாறு?" - குறள் -397

என்று ஒற்றுமைக்கு வழிகாட்டுகிறது.

'கற்றவர்க்குச் சென்றவிட மெல்லாம் சிறப்பு" என்பதனால் உலகமே சொந்தமாகிவிடும்.

' கல்வியைப் பதித்து வைத்த இடத்திலிருந்து யாராலும் கவர்ந்துவிட முடியாது, தக்கவர்க்குக் கொடுப்பதனால் குறைவுபடாது. செல்வத்தைப் பறித்துக் கொள்ளும் அரசராயினும், பிறராயினும் அதனைக் கவர்ந்துக் கொள்ள முடியாது. எனவே ஒருவன் தனது மக்களுக்குப் பின்னர் தேவைப்படும் எனத் தேடிவைத்துச்; செல்ல வேண்டியது பொருட்செல்வமன்று. அதனைவிட உயர்ந்த கல்விச் செல்வமே.

           'எச்சமென ஒருவன் மக்கட்குச் செய்வன
            விச்சைமற் றல்ல பிற" (134)

என்பது நாலடியார் தரும் கருத்து. இக்கல்வியானது,

           'வெள்ளத்தே போகாது வெந்தணலால் வேகாது
            வேந்தராலும்
            கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவு றாது
            கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது
            கல்வி யென்னும்
            உள்ளத்தே பொருளிருக்க உலகெல்லாம் பொருள் தேடி
            உழல்வதென்னே" (69)

'என்பது விவேகசிந்தாமணி பாடல்

           'வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
           கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
           மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே” (183)

என்று புறநானூறும்,

           'எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
           அக்குடியில் கற்றோரை வருக என்பர்” (38)

என்று வெற்றிவேற்கையும், கற்றவர்கள் எக்காலத்தும் மதிக்கப்பட்டார்கள் என்பதை உணர்த்துகின்றன. கற்றவர்களை அரசன் விரும்பி ஏற்பான்; கற்றவர்கள் பார்வையில் சாதியில்லை; மதமில்லை; இனமில்லை; கீழோர் மேலோர் என்ற வேறுபாடில்லை; சமமாக மதிக்கும் மாண்பே அவர்களுடையது என்பது பெறப்படுகிறது.

எத்தகைய அறிஞனாயினும், பெரியோராயினும் ஆற்றைக் கடக்க நினைப்பவர்கள் தோணியில் செல்லும் போது தோணியோட்டி எந்தச் சாதி, எந்த இனம், எந்த மதம், எந்த நாடு, எந்த மொழி என்று பார்ப்பதில்லை. அவன் துணை கொண்டே அந்த ஆற்றைக் கடக்கின்றனர். ஏனெனில் அவன் அத்தொழிலைக் கற்றவன், கற்றவர்க்கு என்றைக்கும் மதிப்புண்டு. கல்வி இளையவர் என்றோ முதியவர் என்றோ, ஆண் என்றோ பெண் என்றோ பார்ப்பதில்லை. அது எல்லோரையும் சமமாக இணைத்து எழுச்சி கொள்ள வைக்கிறது.

           'கற்றோர்க்குத் தம்மூர் என்று ஊரில்லை" என்று நான்மணிக்கடிகையும்,
           'இளமையில்கல்" என்று ஒளவையும் மொழிந்தனர்.
           'மன்னர்க்குத்
           தன்தேச மல்லாற்; சிறப்பில்லை கற்றோர்க்குச்
           சென்றவிட மெல்லாம் சிறப்பு" (26)

என்று மூதுரை நல்வழி காட்டுகிறது.

இப்படிப் பல்வேறு சிறப்புகளையும் கொண்ட பழந்தமிழர் கல்விக் கொள்கையை உள்ளபடி உணர்ந்து, அவ்வடிப்படையில் இன்றைய அறிவும் கொண்டு இக்காலக் கல்விக் கொள்கை வகுக்கப்பட்டால் பயன் பெரிதாகும்.

 

வள்ளுவரின் முரணற்ற கல்விக் கொள்கை

பழந்தமிழர் கல்விக் கொள்கை முரணற்றது; தெளிவுடையது; ஆயிரம் ஆண்டுச் சிந்தனையின் அறிவின் பயனாக மலர்ந்தது. வள்ளுவமே அக்கல்விக் கொள்கையை முற்ற, முழுக்க உணர்வதற்கு வழிகாட்டி.

'நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்ற வள்ளுவர் நடையே இதற்குச் சான்று. முந்தைய அறிஞர் தொகுத்த அறக்கருத்தெல்லாம் ஆய்ந்தவர் வள்ளுவர் என்பதும் அத்தொகுப்பினுள்ளும் தலையாயது இது என்று தேர்ந்து கண்டவர் வள்ளுவர் என்பதும் இந்நடையால் விளங்கும். பல செய்திகளை 'என்ப” என்று நடைப்படுத்திப் பேசியுள்ளார்.

           ''யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை”

என்பார். பல அறிவு நூல்களை, அறிஞர் தொகுத்த அறிவுச்செல்வத்தை ஆய்ந்து, முன்னோர் சொல்லும் பொருளும் தேர்ந்து, அவற்றுள்ளும் சிறந்தன தெளிந்து மெய்ப்பொருள் கண்டு நூல் செய்தவர் வள்ளுவர் என்பது தெளிவாகிறது. ஆகவே பழந்தமிழரின் கல்விக் கொள்கையை குறள் நூலொன்று கொண்டு பலநிலையிலும் அறிய முடிகிறது.

குறளின் முதலதிகாரம் கடவுள் வாழ்த்து. இப்பகுதியில் இறைவனைச் சிந்திக்கும் முன்பே வள்ளுவர் மொழியையும் கல்வியையும் சிந்திக்கிறார்.

           'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
           பகவன் முதற்றே உலகு" குறள் -1

           'கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
           நற்றாள் தொழாஅர் எனின்" குறள் -2

'இறைவனை முதலாக உடையது உலகு" என இறையைப் பற்றிக் கூற வந்த வள்ளுவர், அப்பேருண்மையை விளக்குவதற்கு முன்பாக எழுத்தெல்லாம் அகரத்தை முதலாக உடையன" என்கிறார்.

இரண்டாவது குறளிலும் இறைபக்தி பற்றி குறிக்க வந்தவர் 'கல்வி கற்றதன் பயன் என்ன? என்ற வினாவை எழுப்புகிறார்."

 

கல்வியின் முக்கூறுகள்

வள்ளுவரின் கல்விக் கொள்கை கல்வி, அறிவு, ஒழுக்கம் என்ற மூன்று கூறுபாடுகளையுடையது. இம்மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையன. பரிமேலழகரும் 'கல்வியின் பயன் அறிவு" 'அறிவின் பயன் ஒழுக்கம் ” என்கிறார். கல்வியின் உயிர் நிலைகளாகிய இம்மூன்றையும் பல குறள்களில் வள்ளுவரே நாம் உணர்கின்ற வகையில் எடுத்துரைக்கின்றார்.

           'கற்க கசடறக் கற்பவை கற்றபின்
           நிற்க அதற்குத் தக" குறள் - 391

இக்குறள் கற்றல் - அறிதல்-ஒழுகுதல் என்ற மூன்று நிலைகளையுடையது.

           'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
           கல்லார் அறிவிலா தார்" குறள் - 140

இக்குறளில் அந்த மூன்று கூறுகளையும் பயனடிப்படையில் முறை மாற்றி, ஒழுக்கம், கல்வி, அறிவு என்று வகைப்படுத்தி ஒழுக்கமில்லாதவர் பலகற்றும் அறிவில்லாதவர் என்கிறார்.

கல்வி, அறிவு, ஒழுக்கம் என்ற மூன்று நிலைகளும் இயல்பான மனித வளர்ச்சிப் படிகளாகும். இதனை இன்னும் விளங்கச் சொல்ல வேண்டுமெனில் உண்ணல், செரிதல், உரமாதல் ஆகிய வினைகளைப் போன்றது தான் கல்வி, அறிவு ஒழுக்கம் என்ற இந்த மூன்று வினைகளும் உண்ணுவதும் கற்பது போன்ற ஒரு செயலே. முறைப்படி வாழ்வதற்குக் கற்றல் தேவை. உயிர் வாழ்வதற்கு உண்ணுதல் என்னும் வினை தேவை. இவையிரண்டும் மனிதனுக்கு இன்றியமை யாதன. இவையிரண்டிற்கும் மேலாக செவியுணவாகிய கல்வி வயிற்றுணவினும் உயர்ந்தது எனப் பேசும் வள்ளுவரைவிடக் கல்விச் சிறப்பை யார் பேச முடியும்? உணவு உண்ணுதல் என்பது பசி போக்குவதற்காக எனினும் உண்டது செரித்தல், செரித்தது உரமாதல் என்று தொடர்வினைகள் இல்லையெனில் உண்டது வீணாகும். முழுப்பயன் தராமல் போகும். அது போன்றே கற்றது அறிவாகவில்லையென்றால், அறிவானது ஒழுக்கம் என்ற செயலாகவில்லை யென்றால் கற்றது வீணாகும். ஆகவே இம்மூன்றையும் இணைத்துப் பேசும் வள்ளுவர் கல்விக்கொள்கை வளம் பொருந்தியது என்பது தெளிவு.

 

ஒழுக்கத்தை ஊக்காத கல்வி கடையானதே

கல்விப் பயன் என்பது இறந்த கால, நிகழ்காலக் கருத்தறிவு எனலாம். ஆகவே கல்வியென்பது, இறப்பும் நிகழ்வும் பற்றியது. அறிவென்பது நிகழ்வும், எதிர்வும் பற்றியது, இறந்த கால, நிகழ்காலக்கல்வி எதிர்கால அறிவைத் தர வேண்டும். நிகழ்ந்தன கொண்டு நிகழப்போவதை அறிவதும், அவ்வறிவு கொண்டு செய்யும் ஒழுக்கமும் கைவர வேண்டும்.

           'அறிவுடையார் ஆவதறிவார் அறிவிலார்
           அஃதறி கல்லா தவர்" குறள் - 427

            'எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
            அதிர வருவதோர் நோய்" குறள் -429

ஆகிய இக்குறள் தொடர்களே வள்ளுவரின் கல்விக் கொள்கைக்கு சான்றாக உள்ளன. அறிவுக்கு வள்ளுவர் தரும் இவ்விளக்கம் இறந்தகாலக் கருத்துகளைக் கற்றுத் தெளிவதால் அறிவு வளரும் என்ற உண்மையை உணர்த்துகிறது. மேலும் அந்த அறிவு எதிர்காலத்தில் வரவிருப்பதை அறிவதற்கும். இக்காலத்தில் செய்ய வேண்டியவை இவை என்று காட்டுவதற்கும் பயன்படும். இப்படிப்பட்ட நற்செயல் செய்யும் ஒழுக்கமில்லை என்றால் கல்வியும் அறிவும் பயனில்லாமல் போகும். உண்பதும் செரித்தலும் உடலுக்கு உரமாகி, உழைக்கும் ஆற்றலைத் தராமல், உண்டது பயனின்றிப் போவது போல், வள்ளுவரின் கொள்கைப்படி ஓதுதல், உணர்தல், பிறர்க்குரைத்தல். அனைத்தும் ஒன்று சேராதபோது கற்றது பயனின்றிப் போகும். கற்றவனை அறிந்தவனை அவன் கற்ற கல்வியும், பெற்ற அறிவும் அடக்கமுடையவனாக மாற்ற வேண்டும். இல்லையென்றால் கல்வியும் அறிவும் பயனில்லாமல் போகும். கற்றல், உணர்தல், தெளிதல் அளவில் நின்றுவிூட்ட அறிவு, ஒழுக்கச் செயலுக்குத் துணை நிற்கவில்லையெனில் அவ்வறிவு வள்ளுவர் நோக்கில் அறிவென்ற பெயர் பெறுவதில்லை. எழுத்துக் கல்வி, சொற்கல்வி, பொருட் கல்விகளில் சிறந்த பன்னூல் கல்வியுடையாரையும், பலமொழி வல்லாரையும் கூட அவர்கள் கற்ற கல்வி செயலாக மாறாதபோது வள்ளுவர் இகழ்ந்து பேசக் காண்கிறோம். 'பழுத்தும் பயன்தராத மரம்போல, படித்தும் உலகிற்குப் பயன்படாமல் இருத்தல் கூடாது"

            'அரம்போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
           மக்கட் பண்பில் லாதவர்" குறள் -997

           உலக இயல்பை அறிந்து நடப்பதுதான் மக்கட்பண்பு.
            'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
           கல்லார் அறிவிலா தார்" குறள் - 140

என்பர். வெறுங்கல்வி, தெளிந்த செயலாக மாறாத கல்வி, தீய செயலை விடுக்கவும், நற்செயலைப் போற்றிச் செய்யவும் துணைப் போகாத கல்வியறிவு கடையானதென்று வேறுபல இடங்களிலும் இகழப்படுகிறது.

           'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை" குறள் - 315

            'அறவினுள் எல்லாந் தலையென்ப தீய
            செறுவார்க்கும் செய்யா விடல்" குறள் -
            'சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
           நன்றின்பால் உய்ப்ப தறிவு" குறள் - 422

            'அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மட்டும்
           வெஃகி வெறிய செயின்" குறள் - 175

வள்ளுவர் அறிவு பற்றிக் கொண்டுள்ள கருத்தினை மேற்குறித்த கருத்துகள் தெளிவுற உணர்த்துகின்றன. 'மற்றொரு உயிரின் நோயைத் தன் நோய்ப்போல் போற்றி தன் மகனைத் தேர்க்காலின் கீழே கிடத்தி கன்றைப் போலத் தானும் மகனை இழந்து துயரடைந்த மனுநீதிச் சோழன் போல் பிறர் துன்பம் துடைக்க முந்தும் நற்செயல்" (குறள் கண்டவாழ்வு) 'கேடு செய்தார்க்கும் தீமை செய்யாதொழியும் பொறுமையுடன் கூடிய தலையாய அறிவு, தீயவை நீக்கி நல்லனவற்றில் மனதை ஈடுபடுத்தும் அரியபண்பு, பிறர் வெறுப்பன செய்யாமை முதலிய செயல்களே, அச்செயல்களைத் தூண்டும் உயர்ந்த உளப்பண்பே அறிவெனக் கருதப்படுகிறது". (தேட வைக்கும் திருவள்ளுவர்) உயர் பண்புடையவராய், உயர்செயல்களைச் செய்யாதவர் அறிஞர் என்னும் தகுதி பெறமாட்டார் என்பதே வள்ளுவர் முடிவு.

'அறிவினான் ஆகுவதுண்டோ; என்ற வினா இரக்கச் செயலில்லா அறிவு இழிந்தது எனக் காட்ட வள்ளுவர் எழுப்பிய வினாவாகும். " 'அறிவு என்ஆம்" என்பது ஒழுக்கச் செயலுக்குத் தூண்டாத அறிவு பயனற்றது என்று காட்ட வள்ளுவர் மேற்கண்ட நடையாகும். சுருக்கமாக ஒழுக்க உணர்வில்லாத நூற்பயிற்சியுடையார் அழுக்குப்பொதி சுமக்கும் கழுதை போல, வெற்றுக் கருத்துச் சுமக்கும் சகடரேயன்றி, அறிவுடை அறிஞராக மாட்டார் என்பது தெளிவு.

            'ஒழுக்க மிலான் கண் உயர்வில்லை "
            'ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்"

என்ற குறட்கருத்துகளை காரணங்காட்டி ஒழுக்க உயர்வுரைப்பவர், எத்துணைக் கோடி கல்வி வளர்ச்சிக்கு வாரி இறைப்பினும், கல்வியானது எழுத்து சொற் பொருள்களின் தெளிவு என்ற அளவோடு நின்று விடுமென்றால் ஒரு பயனுமில்லை உயர்வேதுமில்லை. உடலுக்கு வளமை தராத உணவு போல உயிர் வளர்க்காத, உணர்வு வளர்க்காத - ஒழுக்கம் வளர்க்காத கல்வியறிவு கடையானதே. 'அறிவுடையார் எல்லாம் உடையார்" என்ற பாராட்டுரைக்குச் சொற்பொருள் மட்டும் காணும் வெற்றுக் கல்வியாளர் உரியவராக மாட்டார். ஒழுக்க உயர்வுடையாளரே அப்பாராட்டுக்கு உரியராவர். கல்வி உயிர் நோய்க்கு உறுமருந்தாய் அமையும் போதுதான் 'கேடில் விழுச் செல்வம் கல்வி" என்ற பாராட்டுக்குரியதாகும். கிளி போலச் சிலவற்றை ஒலிப்பதால் மட்டுமே கற்றவர் என்ற பெயருக்கு உரியராக மாட்டார்.

 

இன்றைய நிலை :

கல்விச்சிறப்பு, அறிவுத்தெளிவு, ஒழுக்க உயர்வு என்ற நிலையில் வள்ளுவர் வகுத்த முந்நிலைக் கல்விக்கொள்கை, பழந்தமிழ்க் கல்விக் கொள்கை என உரைக்கலாம். அவ்வாறே வள்ளுவர்க்குப் பின்பு வந்த தமிழறிஞர்களும் இக்கொள்கைகளையே கொண்டிருந்தனர் என்பதற்கு அவர்தம் நூல்களே சான்று. இக்கல்விக்கொள்கை இன்று போற்றப்படவில்லை என்றே எண்ண வேண்டியுள்ளது. துறை பல பெருகுவதும் பொருள்பல செலவாவதும் தவிர மனிதப்பண்பை, ஒழுக்கத்தை வளர்க்கும் நன்னெறிகளில் நாட்டம் குறைந்து விட்டமையால் கல்வியின் பயன் மிகவில்லை. கல்வியின் பயன் பற்றிய கொள்கையே இன்று நம்மிடம் தெளிவாக இல்லை.

புறச்செல்வவளம் அளவின்றிப் பெருகிவரும் நாடுகளிலும் கூட உண்மையின்பமும், உள்ள அமைதியும் அருகி வருவதற்கும் இது காரணம் எனக் கருத வேண்டியுள்ளது. மண்ணுடை நிலத்தில் உரமிட்டு விளைச்சலைப் பெருக்கத் துணை நிற்கும் நம் கல்வி, உணர்வுடை நெஞ்ச நிலத்தில் வாய்மை உரமிட்டு இன்பவிளைவைப் பெருக்கத் துணை போகவில்லையே! ஏன்? எனச் சிந்திக்க வேண்டும். இலட்சியம் எப்பொழுதும் 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்றும் 'எண்ணியாங்கு எய்துவர்" என்றும் 'நல்லவே எண்ணல் வேண்டும்" என்றும், 'எனைத்தானும் நல்லவை கேட்க" என்றும் முன்னோர் சொன்ன வழியில் உயர்ந்து விளங்க வேண்டும். இன்றைய அமைதியற்ற பூசல் நிறைந்த உலகச்சிக்கலை அறுக்க மேற்கூறிய சிந்தனைகள் துணை போகலாம்."

வள்ளுவரின் கல்விக்கொள்கை நிலை மூன்றுடையது. எண், எழுத்து என்ற இரண்டு இயலும் கல்வியின் இரு கண்கள் என்கிறார் வள்ளுவர். இதன்வழி கல்வியை இயல்களாகப் பகுக்கும் நோக்கம் இருந்தது என அறியலாம்.; அவ்வியல் பகுப்பு 'மேல், கீழ்" எண்ணத்தைத் தரவில்லை. வேளாண்மை, மருத்துவம், வணிகம், கடல்சார்படிப்பு, உளவியல், மனையியல் என்று பலநிலைகளில் பகுத்துப் பேசப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வோரியலையும் துறைப் பகுப்பு தனியே இருந்ததா என்பது வினா. இன்று கலைக்கல்வி, இலக்கியக் கல்வி, அறிவியல் கல்வி முதலியவை தனித்துறையாக விளங்கக் காண்கிறோம். கற்கத்தகும் செய்திகள் எல்லையின்றிப் பரந்து கிடப்பதால், எண்ணின்றி இயல்களைப் பிரிக்கலாம். யார்க்கும் பல்வேறு இயல்களைக் கற்பது வாழ்வுக்கு இன்றியமையாததாகும். தொடக்கநிலையில் எல்லா இன்றியமையாத இயல்களும் அடிப்படைக் கல்வித்திட்டத்தில் இடம் பெறவே செய்யும். அதனால் தான் வள்ளுவர் எல்லா இயல்களும் வாழ்வுக்கு இன்றியமையாதவையே என்று கொண்டு எவ்வியல் கல்வியையும் போற்றத்தக்கதாகவே கருதினார். அறிவியலே வாழ்வுயர்த்தும்; கலையியல் அவ்வளவு இன்றியமையாததன்று என்னும் இச்சிந்தனை கல்வியையே கருவறுக்கும் என்று கருதியதால்தான் அனைத்தியல்களும் கற்கத்தகுந்தன என்ற கருத்தை வலியுறுத்தினார். அதனால்தான் கல்விக்குரிய கால அளவு சில பல ஆண்டுகள் எனக் கருதவில்லை. கல்விக்காலம் ஒருவனுக்கு அவன் வாழ்நாள் முழுவதும் எனக் கருதினார். அதனால்தான் 'என்னொருவன் சாந்துணையுங் கல்லாதவாறு" என வினவினார்.

சாகும் வரையிலும் கற்றாலும் அனைத்துத் துறையறிவும் கைவராது என்பது அவர் முடிவு. அதனால் தான் கல்விக்கு இயற்பகுப்பும் செய்யாமல் அவரவர் நிலைக்குத் தகுந்தவாறு பகுப்புகளை மேற்கொள்ள விடுத்தார். வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும் என்பதோடல்லாமல் ஒவ்வொரு நாளும் கற்க வேண்டும் என்று வலியுறுத்துவதையும் காண்கிறோம். 'நாளென ஒன்று போற் பாராட்டி உயிரீரும் வாள்" (334) என்ற குறளின் வழி வாழ்நாளில் ஒரு நாள் என்று இகழாது எல்லா நாளையும் போற்றிக் கற்க ஊக்கமூட்டுவர். நாள் என அழைக்க வேண்டாம். வாள் என அழையுங்கள் என்கிறார். நாள் ஒன்றாயினும் வரையறுக்கப்பட்ட வாழ்நாளின் ஒரு பகுதியாதலால், நாள் வாளாக மாறி ஆயுளின் ஒரு பகுதியை அறுத்துவிட்டது என்ற நோக்கில் கால அருமையை உணர்த்துகிறார். ஒவ்வொரு நாளும் கற்கத்தகுந்த நாள்; அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லிச் சொல்கிறார்.

 

கற்கும் முறை :-

கல்வித்திட்ட அமைப்பில் கற்கும் முறை, கற்பிக்கும் முறைகளுக்கு உரிய இடம் அமைதல் வேண்டும். கற்கத் தகுவன இவை என்று காட்டும் கல்வியாளன், அவற்றைக் கற்க வேண்டிய முறை இதுவென்றும் கூறக் கடமைப்பட்டுள்ளான். கற்கத்தகும் நூல்கள் பலவற்றைப் பலகாலமாக உடைமைகளாகப் பெற்றிருந்தும், தமிழினம் கற்கும் முறையறிந்து கல்லாமையால், வறுமையை அனுபவித்து வந்திருப்பது உலகறிந்த செய்தி. பாரதியின் நடையில் சொல்வதென்றால் 'கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய் நாவிருந்தும் ஊமையராய்" வாழும் வாழ்வு எவ்வளவு துன்பம் தர வல்லது. ஞாயிறு எத்துணை ஒளியை உலகத்துப் பரப்பினும், கண்ணில்லார் அவ்வொளியால் காட்சிப் பயன்பெற முடியாது. அதுபோல வாழ்வுயர்த்தும் பல நூல்களைத் தமிழினம் பெற்றிருந்தும் அவற்றைப் பயன் கொள்ள அறியாமையால் வாழ்வில் உயர்வு பெறவில்லை. 'கம்பன் பிறந்த காரணத்தால் தமிழ்நாடு கல்வியில் சிறந்தது" என்பார் பாரதியார். இவையெல்லாம் தகுதியுடைய நூல்கள் தமிழில் உள்ளன என்று காட்டப் போதுமானவை. ஆனால் அந்நூல்கள் இருப்பதால் மட்டுமே தமிழினம் வாழ்வு பெற்றிட முடியாது; உரிய முறையில் அந்நூல்களை முறைப்படி கற்றால் தான் வாழ்வு பெற முடியும்.

 

கசடறக் கற்க :-

நூல் எவ்வளவு நுண்மையானதாக இருந்தாலும் ஆசான் எவ்வளவு நுண்மையாகக் கற்பிப்பினும், கற்பவனின் வேட்கையளவு, முயற்சியளவு, உணர்திறன் அளவு ஆகிய இவற்றின் அடிப்படையிலேயே கல்விநலன் அமையும். 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்" என்பது போல கற்பவனின் உணர்திறன் அளவு கல்வி சிறக்கும் எனலாம். இதனையே, தொல்காப்பியர் 'உணர்ச்சிவாயில் உணர்வோர் வலித்தே" எனக் கூறுவர். உணர்வோரின் திறன் உயர்வாக இல்லையென்றால், உணர்முறைக்கு உரிய பயிற்சி இல்லையென்றால், முயற்சி எவ்வளவு இருப்பினும் எதிர்பார்க்கும் பயன் விளையாது. களர்நிலத்து உழவன் உழைப்புப் போல் வீண் முயற்சியாகி விடும்.

            'நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
           உண்மை அறிவே மிகும்" குறள் - 373

கற்றநூல் பலவாயினும், உற்றுணரும் திறன் இல்லாதபோது கல்வி சிறக்காது என்று காட்டுவதே இங்கு வள்ளுவர் நோக்கம். ஆகவே வள்ளுவர் கல்விக்கொள்கையில் கற்பார் கற்கும் முறைக்கு உரிய பெரிய இடமுண்டு என்பதை உணரவேண்டும். 'கற்றனைத்தூறும் அறிவு" 'உண்மையறிவே மிகும்" என்ற குறட்பகுதிகளில் கற்பார் முயற்சிக்குத் தக, கற்கும் முறையறிந்து, கற்றுணரும் திறனுக்குத் தக அறிவு விளக்கம் அமையும் என்பது வள்ளுவர் கொள்கை.

முடிவு

KbT

'வள்ளுவரின் கல்விக்கொள்கை தனிமனிதநலம், சமுதாயநலம் பேணத் துணை புரிவதோடு, மனிதநேயத்துடன் அனைத்து உயிர்களும் வாழவழி காட்டும் வாழ்வியல் கல்வி என்றால் மிகையில்லை"

இக்காலச் சூழலில் திருவள்ளுவரின் கல்விக் கோட்பாடுகள் நாடு, மொழி, இனம், மதம் கடந்து அனைவரும் பயில வேண்டிய கோட்டுபாடுகள். அறிவியல் துறைகளில் மாந்தரினம் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டிருப்பினும், மனிதனை மனிதன் நேசிக்கும் மனிதநேயப்பண்பு தற்காலத்தில் வெகுவாகக் மலிந்து கிடப்பது கண்கூடு. (இக்கால உலகிற்குத் திருக்குறள்) இந்நிலை மாற்றம் பெற வேண்டுமெனில் திருக்குறளின் வாழ்வியல் கருத்துகளை வெகுமக்களுக்கு நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வழி பரப்புதல் வேண்டும். அப்போதுதான் பண்பட்ட, அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.

 

குறிப்புதவி நூல்கள்

  • ஆத்திச்சூடி - ஒளவையார், நர்மதா பதிப்பகம்
  • இக்கால உலகிற்குத் திருக்குறள் - தொகுப்பாசிரியர் , தி.சே.சுப்பராமன், முனைவர் சேயோன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113.
  • கல்வி அழகே அழகு - கவிமாமணி குமரிச்செழியன், மங்கை வெளியீடு, சென்னை-19.
  • குறள் கண்டவாழ்வு - அ.சா. ஞானசம்பந்தன், விகடன் பிரசரம்,
  • திருக்குறள் - திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை, தென்னிந்திய சைவ சித்தாந்த பதிப்பகம்
  • தொல்காப்பியம் - முனைவர் ச.வே.சுப்பிரமணியன், மணிவாசகர் பதிப்பகம்
  • நாலடியார் நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், சாரதா பதிப்பகம், கௌரா ஏஜென்சீஸ், சென்னை-15.
  • புறநானூறு மூலமும் வ.த.இராம சுப்பிரமணியம் உரையும் - திருமகள் நிலையம், சென்னை-17.
  • விவேக சிந்தாமணி - பேராசிரியர் மாணிக்கம் உரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை-03.
  • வெற்றிவேற்கை - jagadhguru_needhinoolgal.blogspot.com