வில்லிசையும் மகுட இசையும் - ஓர் ஒப்பீடு

கிருஷ்ணமூர்த்தி. சோ 25 April 2019 கட்டுரை Read Full PDF

முனைவர் பட்ட ஆய்வாளர்

கிருஷ்ணமூர்த்தி. சோ

முனைவர் டி.ஆதித்தன்

இணைப்பேராசிரியர்

அரியகையெழுத்துச்சுவடித்துறை

தமிழ்ப்பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

 

ஆய்வுச் சுருக்கம்:

நாட்டார் வழக்காறுகளின் கலைகள் சடங்குகள் சார்ந்தும் சடங்குகள் சாராமலும் எனப் பல்வேறு வகையினவாக இருப்பினும், சமய எல்லைக்குள் மட்டுமே நிகழ்த்தப்படும் கலைகள் தமிழ்நாட்டில் மிகவும் அருகியும் வழக்கொழிந்தும் வருகின்றன.இவற்றுள் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், தேவராட்டம், காவடியாட்டம், சேவாட்டம், பேயாட்டம், உறியடியாட்டம், பத்மசாலியார் கூத்து, தெருக்கூத்து ஆகியனவாகும்.இவற்றில் வில்லுப்பாட்டு மற்றும் கணியான் ஆட்டமானது சடங்கு சார்ந்து நிகழ்த்தப்படுவதாகும்.இவற்றைச் சடங்கிலிருந்து பிரிக்க முடியாததாகும்.இரட்டைக் காப்பியங்களான சிலம்பு, மணிமேகலை போன்று இரட்டைக் கலைகளாக வில்லுப்பாட்டும் கணியான் ஆட்டமும் விளங்குகின்றன.இவை இரட்டைக் கலைகளாக விளங்கினாலும் இவற்றிலுள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றியும் இக்கலைகளுக்குத் தற்போதுள்ள நிலைகளைப் பற்றியும், நாட்டுப்புறக் கோவில் விழாக்களில் கலைநிகழ்ச்சியாக இல்லாமல் விழாவின் ஒரு கூறாகவும் வழிபாட்டு முறைகளில் முக்கியமான அங்கமாகவும் திகழ்வதால் இக்கலைகளின் தனித்துவத்தைப் பற்றியும் ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

 

திறவுச்சொற்கள்
நாட்டார் கலைகள், நாட்டுப்புறக் கலைகள், கணியான் ஆட்டம், மகுட இசை, வில்லுப்பாட்டு வில்லிசை.நாட்டார் வழக்காறுகளின் கலைகளை நிகழ்த்துக் கலைகள், நிகழ்த்தாக் கலைகள் என இருவகைப்படுத்துவர்.அதிலும் குறிப்பாக நாட்டார் வழக்காறுகளுக்கே உரியதாகவும் வட்டாரத் தன்மையின் அடிப்படையிலும் சில நிகழ்த்துக் கலைகள் தமிழ்நாட்டின் தென்மாவட்டப் பகுதிகளில் மண்ணின் மணம் மாறாது அவை சமயச் சடங்குகளுடன் பின்னிப் பிணைந்திருப்பதே முதற்காரணமாகும்.இந்த நிகழ்த்துக்கலைகளுள் சில இன்னும் அழியாது நிலைத்திருப்பதற்கு அடிப்படைக் காரணம் அவை சமயச் சடங்குகளுடன் பின்னிப் பிணைந்திருப்பதேயாகும். நாட்டார் வழக்காறுகளின் தாயகமான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கோவில் சார்ந்து சில நிகழ்த்துக் கலைகள் இன்றுவரை வழக்கில் உள்ளன.அவற்றுள் வில்லிசையும் மகுட இசையும் (கணியான் கூத்து) மிகவும் குறிப்பிடத்தக்கன.வில்லிசையும் மகுட இசையும் பாடக்கூடிய பொருளாலும், கோவில் விழாக்களில் நிகழ்வதாலும், தெய்வத்தை வருவிக்கப் பாடுதலாலும், நிகழக்கூடிய இடத்தாலும் ஆகியவற்றால் இவ்விரு கலைகளும் பல்வேறு வகையினவாக ஒத்துப் போகின்றன.இருப்பினும் பாடல் அமைப்பாலும், இசைக் கருவிகளாலும், விளக்கம் சொல்லும் பான்மையாலும், பாடும் முறையாலும், பண்டைய மரபைப் போற்றுதலாலும் போன்ற சிலவற்றால் வேறுபட்டும் நிற்கின்றன.இவற்றிலுள்ள கலைஞர்களுக்கு இடையிலும் பல்வேறு வேறுபாடுகளுமுண்டு. தற்போது வில்லுப்பாட்டு என்று பலராலும் வழங்கப்பெற்று வருகின்ற வில்லிசையானது வில்+ இசை எனப் பிரிந்து வில் எனும் கருவியை ஆதாரமாகக் கொண்டு இசை ஏற்படுத்துவதால் இப்பெயர் பெற்றது.அதாவது, தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்1 என்னும் விதிப்படி வில் + இசை = வில் + ல் + இசை எனப் புணர்ந்து வில்லியாயிற்று.இது தோன்றல் விகாரப் புணர்ச்சியாகும்.இதுபோல் மகுட இசையானது மகுடம் + இசை = மகுட இசை.அதாவது, கெடுதல் விகாரப் புணர்ச்சியால் நிலைமொழியின் ஈறு கெட்டு மகுடம் + இசை = மகுட இசையானது.வில்லிசையில் வில் முதன்மையாக இடம் பெறுவதாலும் மற்ற கருவிகள் துணைக்கருவிகளாகவும் இருப்பதாலும் அப்பெயர் பெற்றிருக்கலாம்.அதேபோல் மகுட இசையில் (கணியான் கூத்து) மகுடமே முதன்மைக் கருவியாகச் செயல்படுவதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது. வில்லிசையை வில்லு, வில்லுப்பாட்டு, வில்லடி, வில்லடிச்சான் பாட்டு, வில் பாட்டு எனப் பல்வேறு பெயர்களில் வழங்கினாலும் வில்லுப்பாட்டு என்ற சொல்லே இன்றும் நிலைத்து நிற்கிறது.படித்தவர்கள் பலராலும் வில்லிசைக்கலை எனப் போற்றப்படுகிறது.இதேபோன்று மகுட இசையானது மகுடாட்டம், மகிடம், மகுடக் கச்சேரி, கணியான் கூத்து எனப் பல்வேறு பெயர்களால் வழங்கப்பட்டாலும் கணியான் கூத்து என்று பலராலும் அறியப்படுகின்றது.கணியான் என்னும் சாதியினரால் நிகழ்த்தப்படுவதால் இதற்கு இப்பெயர் வந்தது என்பர்.சாதியின் பெயரால் கலையை அழைக்கக் கூடாது என்பதால் மகுடாட்டம் அல்லது மகுடக் கச்சேரி என வழங்கி வருகிறது. பறை என்னும் இசைக் கருவியைக் கொண்டு நிகழ்த்தப்படும் பறையாட்டக் கலை மிக அண்மைக் காலமாகத் தப்பாட்டம் என வழங்கப்படுவது2 போன்று கணியான் ஆட்டமும் அவ்வாறு வழங்கப்படுகின்றது. போர் ஆயுதமான வில், இசைக் கருவியாக மாற்றப்பட்டது.போர்வீரர்கள் ஓய்வாக இருந்தபோது தங்கள் களைப்பைப் போக்கிக் கொள்வதற்குப் பாடினார்கள்.சிலர் கையிலிருந்த வில் ஆயுதத்தின் நாணை அடித்தார்கள்.இது பிற்காலத்தில் வில்லிசைக் கருவியாயிற்று.3

 

           விநாயகர் குடம் போட - வெற்றி

           வேலவர் வலம் பாட

            பார்வதியாள் வில்லடிக்க - எங்கள்

           பரமசிவன் கதைகள் கேட்க4

 

என்னும் பழம்பாடலிலும்,

 

           வில்லை வளைச்சு அம்பை மாட்டினா

           சொல்லும் செயலாகும் - தம்பி

           சொல்லும் செயலாகும்5

 

என்னும் பாடலிலும் குறிக்கப்படும் வில் என்னும் சொல் வில்லிசைக் கலையைக் குறிப்பதாகும். தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கியமான சங்க இலக்கியம் பெரும்பாணாற்றுப் படையில்,

 

“.....................................................குமிழின்

           புழற்கோட்டுத் தொடுத்த மரல்புரி நரம்பின்

            வில் யாழிசைக்கும், விரலெறி, குறிஞ்சி”6

 

என்ற வரிகளுக்குக் ‘குமிழ’ மரத்தின் கொம்பை வளைத்து ‘மரல்’ என்று சொல்லப்படும் நாரால் நாணைக் கட்டிக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் குறிஞ்சிப்பண் பாடியதாகச் சங்க காலத்திலேயே வில்லிசைக் கலை பற்றிய குறிப்பு காணப்படுவதன் மூலம் இதன் தொன்மையையும் பழமையையும் நாம் அறிந்து கொள்ள ஏதுவாகிறது. வில்லிசை பற்றியும் கணியான் கூத்தினைப் பற்றியும் முக்கூடற்பள்ளு என்னும் நூலில் மூத்த பள்ளியானவள் தன்னுடைய பள்ளனைப் பற்றிக் பண்ணைக்காரனிடம் முறையிடுவதாக,

 

           “…………………………புதியவள்

            ஊட்டுக்குக் குறித்தான் - வில்லடிப்

            பாட்டுக்குப் பொறித்தான்”7

 

(ஊட்டுக்கு - கோவில் கொடைவிழா) என்றும்,

 

           “ஆருக்கும் பணியான் - சீவலப்

           பேரிக்குள் கணியான் - வில்லென்னும்

           அரிப்பிட்டுப் போட்டான் - பள்வரி

            தெரிப்பிட்டுக் கேட்டான்”8என்றும் கூறுகிறாள்.

 

கவிமணியின் நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்பியம் என்னும் நூலில் தன்னுடைய மருமகனிடம் தனக்கு ஏற்பட்ட செலவினைப் பற்றி எடுத்துக்கூறுமாறு,

 

           “போன கொடைக்குப் புதிதாய் வந்த

           வில்லுக்காரி வீரம்மைக்கு

           நாலுசேலையும் நாற்பது ரூபாயும்

           கொடுத்தது..................................”9

 

என்ற வரிகள் மூலம் வில்லுப்பாடல் பாடுபவர்களுக்குத் தந்த கொடை பற்றியும் வில்லிசையில் பெண் அண்ணாவி இருந்த நிலையைப் பற்றியும் அறிய முடிகின்றது. கைவெட்டு நிகழ்வினை,

 

            மாடனென்ற தேவதைக்கு வைச்சு வணங்குவானாம்

            ஆடுபன்றி கோழி இவை அல்லாமல் பாடுகின்ற

           வில்லாம் முரசாம் கைவெட்டுக் கணியானாம்

           எல்லா வகைக்கும் எழுபது பொன் செல்லுமென்று10

 

எனக் குறிப்பிடுகிறது. இதேபோன்று கணியான் கூத்தின் பழமையை நோக்கும்போது கணியான் எனப்படுவோர் பார்வதி தேவியின் காற்சிலம்பின் மணியிலிருந்து பிறந்ததாகவும் சிவனின் தலையிலுள்ள கீரிடமே மகுடமாகவும் தோன்றியது எனவும் கூறுவர்.சிவனும் சுடலையில் சாம்பலைப் பூசி ஆடுவதாகக் கூறுவர்.கணியான் சுடலை மாடனுக்குப் பல வழிகளிலும் அவனுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.தன் குருதியைச் சிந்திச் சுடலை மாடனுக்குக் கையை அல்லது நாக்கை அறுத்து மூன்று சொட்டிலிருந்து இருபத்தொரு சொட்டுகள் வரை கொடுப்பான்.இதைக் ‘குருதி கொடுத்து மாடனுக்கு உறுதியாக உதவும் கணியான் பருதி இருக்கும் காலம் வரை இறுதியின்றி வாழ்வான்’ என்னும் பாடல் குறிப்பிடுகிறது.எவ்வாறாயினும் கணியான் கூத்தானது புராணத் தொடர்புடையதாக விளங்குகிறது. இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதையில் சுடுகாடு பற்றிய செய்தி வருகிறது.

 

           மிக்க மாதவர் விரும்பினர் உறையும்

           சக்கரவாளக் கோட்டம் புக்கால்

           கங்குல் கழியினும் கடு நவை எய்தாது

           அங்கு நீர் போம் என்று அருந் தெய்வம் உரைப்ப

           வஞ்ச விஞ்சையன் மாருதவேகனும்

           அம் செஞ்சாயல் நீயும் அல்லது

           நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம்

           சுடுகாட்டுக் கோட்டம் அஃது என

           மிக்கோய்! கூறிய உரைப் பொருள் அறியேன்

           ஈங்கு இதன் காரணம் அறியக் கூறுவன்11

           மணிமேகலை,6 : வரி. 23- 33

 

அதாவது, கோட்டம் என்பது கோட்டை போன்ற அமைப்புடையது.நான்கு பக்கமும் வாசல்கள் இருக்கும்.அதனுடைய ஒவ்வொரு வாசலிலும் காவல் தெய்வங்கள் கையில் ஆயுதங்களுடன் இருப்பதைத் தெளிவாக விளக்குகிறது.இந்தக் காவல் தெய்வங்களைத்தான் தற்போது நாட்டுப்புறங்களில் உள்ள நாட்டார் காவல் தெய்வங்களாக இருக்கலாம்எனக் கருத வாய்ப்புள்ளது. கணியான்களின் காவல் தெய்வமான சுடலை மாடனும் கையில் ஆயுதத்துடன் எல்லையில் காவல் காப்பதாகக் கூறுவர். இதேபோன்று பல்வேறு நிகழ்வுகள் அறிஞர்களால் எடுத்தாளப்பட்டிருந்தாலும் புகார் நகரில் நடக்கும் கூத்து மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

 

           உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று

            'உண்ம்'என இரக்கும் ஓர் களிமகன் பின்னரும்

           கணவிர மாலையின் கட்டிய திரள் புயன்

            குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன்

           சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடுஞ்சினைத்

           ததர் வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்

           வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇப்

           பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு

           அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்

           தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்12

           மணிமேகலை,3 : வரி. 102-111

 

மணிமேகலையும் சுதமதியும் உவவனம் நோக்கிச் செல்கின்றனர்.செல்லும் வழியில் முதலில் உண்ணா நோன்பு இருக்கும் ஒருவனைக் கள்ளுண்ணுமாறு கேட்கும் களிமகனைச் சூழ்ந்திருக்கும் மக்கள் கூட்டத்தினைப் பார்க்கின்றனர்.பின்னர் அதனைக் கடந்து செல்லும் போது பித்தனொருவன் அவ்விடத்தில் அழுவதும், விழுவதும், அரற்றுவதும், சத்தமிடுவதும், எழுவதுமாகச் செயல்கள் செய்வதைப் பலர் கூடி நின்று வேடிக்கை பார்ப்பதையும் காண்கின்றனர்.இக்கூட்டத்தினையும் கடந்து அவர்கள் செல்லுகையில் பெண் வேடமிட்டு ஆடுவதைப் பார்க்க மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும்,

 

           வாணன் பேர் ஊர் மறுகிடைத் தோன்றி

           நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய

           பேடிக் கோலத்துப் பேடு காண்குநரும்13

           மணிமேகலை,3 : வரி. 123-125

 

இதைப் பேடிக் கூத்து என்று கூறுவர்.அதாவது ஆணுமல்லாது பெண்ணுமல்லாது இருக்கும் திருநங்கைகள் அல்லது திருநம்பிகள் நடத்திய கூத்தாகும்.இந்த மூன்று நிகழ்வையும் வைத்துப் பார்க்கும்போது, முதல் நிகழ்வான கள்ளுண்பவன் நிகழ்வினைப் போல, தற்போதும் நாட்டுப்புறக் காவல் தெய்வமான சுடலை மாடனுக்குக் கள்ளைப் படைத்து வழிபடும் நிகழ்வு இன்றும் வழக்கில் உள்ளது.இரண்டாவது நிகழ்வான பித்தனுடைய நிகழ்வினைப் போலவே, கணியான் கூத்திலும் சோகம், கொடூரம், அவலம் போன்ற சுவைகளே மிகவும் அதிகம்.மூன்றாவது நிகழ்வான பேடிக் கூத்தினைப் போன்று நாட்டார் கலையான கணியான் கூத்திலும் இரு ஆடவர்கள் பெண் வேடமிட்டு மகுட இசைக்கேற்ப ஆடுவர்.எனவே, கணியான் கூத்து மணிமேகலையில் வரும் பேடிக் கூத்தோடு தொடர்புடையது எனக் கருத இடமுள்ளது. சுடுகாடு பற்றியும் பேய்கள் பற்றியும் பல்வேறு புறப்பாடல்களிலும் சங்கப் பாடல்களிலும் மிகவும் விரவிக் காணப்படுகின்றன.சான்றாக, கலித்தொகையில் பேய்மகள் நடுஇரவில் துணங்கைக் கூத்து ஆடுவதாகச் செய்தி வருகின்றது. நடுஇரவில் துணங்கைக் கூத்து ஆடுவதாகச் செய்தி வருகின்றது.

 

           தணந்ததன் றலையுநீ தளரிய லவரொடு

            துணங்கையாய் எனவந்த கவ்வையிற் கடப்பன்றோஒளிபூத்த நுதலாரோ டோரணிப் பொலிந்தநின்

            களிதட்ப வந்தஇக் கவின்காண இயைந்ததை14

            கலித்தொகை, மருதக்கலி,66 : வரி, 17- 20

 

இந்தத் துணங்கைக் கூத்தைச் 'சிங்கிக் கூத்து'என நச்சினார்க்கினியர் தம் உரையில் குறிப்பிட்டுள்ளார்.இது கொற்றவையைத் தெய்வமாகக் கொண்டு நிகழ்த்தப்படுவதாகும்.இதை நாட்டுப்புறத் தெய்வங்களான சுடலை மாடன், இசக்கியம்மன், பேச்சியம்மன், அங்காளம்மன் போன்ற தெய்வங்களுடனும் ஒப்பிட்டுக் கூறலாம். துணங்கைக் கூத்தைப் போன்றே கணியான் ஆட்டத்திலும் ஒரு பிரிவாக அம்மன் கூத்து மற்றும் பேயாட்டம் என்ற நிகழ்வுகளும் நிகழ்த்தப் படுகின்றன.அதாவது, கணியான் ஆட்டத்தின் துணை ஆட்டங்களாக இதைக் கூறுவர்.நாட்டுப்புறப் பெண் தெய்வங்களான இசக்கியம்மன், பேச்சியம்மன் போன்ற கோவில்களில் கணியான் ஆட்டம் நிகழும்போது அதன் துணையாக அம்மன் கூத்து நடுஇரவில் நடைபெறும்.இதில் வேப்பிலையைக் கணியான் ஆட்டக்காரர்கள் தங்கள் இடுப்பில் கட்டிக்கொண்டு சுடுகாட்டிலுள்ள சாம்பலைப் பூசிக்கொண்டு (துணங்கை) கூத்தாடுவர்.இதைப்போல, சுடலை மாடன் என்னும் ஆண் நாட்டுப்புறத் தெய்வக் கோவில்களில் பேய் போன்ற முகமுடி அணிந்த கணியான் ஆட்டக்காரர்கள் இடுப்பில் கறுப்பு நிறத்திலான ஆடையைக் கட்டிக் கொண்டு உடம்பில் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு ஆடுவர்.இவ்வாறு சங்க காலத் துணங்கைக் கூத்தானது கணியான் கூத்தோடு தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் கருத இடமுள்ளது. வில்லிசைக் கலையானது வில்லுப்பாட்டு என்று பெயர் பெற்றதன் மூலமாக அனைவராலும் அறியப்பட்ட கலையாக மாறியதன் மூலம் கணியான் கூத்தையும் கணியான் பாட்டு என்று கூறும் வழக்கமும் இருந்து வருகிறது. வில்லிசைக் கலையின் தாயகம் திருநெல்வேலியாகத்தான் இருக்க முடியும்.ஏனெனில் வில்லுப்பாட்டில் பாடப்பெறும் கதைப்பாடல்கள் பலவும் திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்களையே கருப்பொருளாகக் கொண்டிருப்பதால் அவ்வாறு கருத முடிகின்றது.அதேபோன்று கணியான் என்னும் சாதியினர் மிக அதிகமாக இருப்பதும் திருநெல்வேலிப் பகுதியில்தான்.எனவே கணியான் கூத்தின் தாயகமும் திருநெல்வேலிதான் என்று கருத இடமுள்ளது. ஆனால், அ.கா.பெருமாள் அவர்கள் வில்லிசைக் கலையின் தாயகம் கன்னியாகுமரி என்று பல்வேறு ஆதாரங்களைச் 'சடங்கில் கரைந்த கலைகள்' என்ற தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். வில்லுப்பாட்டானது மிக வேகமாக மாற்றங்களை அடைந்து வரும் ஒரு கலையாகும்.இது கோவிலைச் சாராத மேடைகளிலும் இடம் பெறுகின்றது.வில்லிசைக் கலை சாதியத் தொடர்பற்றது, பொது மேடைகளிலும் நிகழ்த்தப்பெறுகிறது.தற்போது தலைவர்களையும் அகாலமான முறையில் மரணித்தவர்களையும் பாடுபொருளாகக் கொண்டு பாடப்பெறுகின்றது.ஆனால் கணியான் கூத்தானது சாதியத் தொடர்பானது.மரணித்தவர்களைப் பாடுவது மிகவும் அபூர்வமாகத்தான் உள்ளது.சான்றாக முத்துப்பட்டன் கதையைப் பாடுகின்றனர்.கணியான் கூத்துக் கலைஞர்கள் கலையை மட்டுமே நம்பி வாழ்பவர்கள்.எனவே, அவர்கள் மாற்றத்தை விரும்பாமல் பழமையான மரபுகளையும் மீறாமல் பார்த்துக் கொள்கின்றனர். சுடலைமாடன், இசக்கியம்மன் போன்ற நாட்டுப்புறத் தெய்வக் கோவில்களில் வில்லிசையும் கணியான் கூத்தும் கட்டாயம் நிகழ்த்தப்படும் கலைகளாகும்.இவ்விரு கலைகளும் தெய்வத்திற்கு முன்னால் நிகழ்த்த வேண்டுமென்று நியதி உள்ளது.இருப்பினும் தெய்வத்திற்கு இடப்பக்கமோ வலப்பக்கமோ நடத்தவும் படுகின்றது.மேலும் கோவில் விழாக்களில் வில்லிசைக்குத் தனி மேடை அமைப்பது போன்று கணியான் கூத்திற்கு அமைப்பதில்லை.வில்லிசையானது முழுவதும் அமர்ந்த நிலையிலேயே நிகழ்த்தப்பெறும் கலையாகும்.ஆனால் கணியான் கூத்து நின்றுகொண்டும் நின்ற இடத்திலேயே ஆடிக்கொண்டும் நிகழ்த்தப்பெறும் கலையாகும். வில்லுப்பாட்டுக்குரிய இசைக் கருவிகள் வில், உடுக்கை, ஜால்ரா, குடம், கட்டை என்பது பொதுவான வழக்கு.இவை தவிர பம்பை, உறுமி, தக்கை, துந்துபி ஆகியவையும் இக்கலைக்குரியனவாகப் பேசப்பட்டாலும் இவை வழக்கில் இல்லை.

 

           தானை தந்தானை தன்னா தன்னை

           வில்லை அடித்துக் குடத்தோடு கட்டை

            உடுக்கை தாளம் ஒன்றாயடித்து

            தோம் தனை தானை நன்றாய் அரிஓம்15

 

என்னும் வில்லிசைக் கலைஞர்களின் பாடல் மூலம் அறியலாம். கணியான் கூத்துக் கலைக்குரிய இசைக்கருவிகள் மகுடமும் ஜால்ராவும் ஆகும்.இதில் மகுடமே மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றது.மகுடத்தைத் தப்பு அல்லது தப்பட்டை எனக் கூறினாலும் இரண்டுமே வேறு வேறானவை.பறையாட்டத்தில் உள்ள தப்பு என்கிற இசைக்கருவியும் மகுட இசைக் கருவியும் தோற்றத்தில் ஒத்திருந்தாலும் எழுப்புகின்ற ஓசையினால் வேறுபடுகின்றன.மகுட இசை தெய்வத்தன்மை உடையதாகக் கருதப்படுகின்றது.இந்த இசைக்கருவியானது உச்சம், மந்தம் என இருவகைப்படும்.மிக அதிகமான ஓசையைத் தர உச்சமும் மிக இளகிய ஓசையைத் தர மந்தமும் பயன்படுகின்றன.கணியான் ஆட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் கைவெட்டும் நிகழ்ச்சியிலும், அம்மன் கூத்து மற்றும் பேயாட்ட நிகழ்ச்சியிலும் இக்கருவியானது மிக முக்கியப் பங்கினை வகிக்கின்றது. வில்லிசைக் கலையில் தலைமைப் பாடகரான அண்ணாவி என்னும் புலவர் ஒருவரும், இசைக் கருவிகளை இயக்குபவர்கள் நால்வராக மொத்தம் ஐவர் இடம்பெறுவர்.மேலும் துணைப்பாட்டுப் பாடுபவர், பின்பாட்டு இசைப்பவர் என வேறு சிலரும் இடம்பெறுவர். கணியான் கூத்துக் கலையின் குழுத்தலைவரையும் புலவர் அல்லது அண்ணாவி என்றே வழங்குவர்.இந்தக் குழுவில் ஐந்து அல்லது எட்டு நபர்கள் வரை இடம்பெறுவர்.இந்த எண்ணிக்கையானது மாறுபடவும் செய்கிறது.அண்ணாவி அல்லது குழுத்தலைவர், பின்பாட்டுக்காரர், மகுடம் அடிப்பவர், ஆட்டக்காரர்கள், தாளம் அடிப்பவர் என இக்குழுவில் அடங்குவர்.இதில் ஆண்களே பெண் வேடமிட்டு ஆடவும் செய்வர்.கைவெட்டுக்காரர், அம்மன்கூத்து ஆடுபவர், பேயாட்டம் ஆடுபவர்களும் இதில் தனியாக இருப்பர். கணியான் கூத்தின் மிக முக்கியமான நிகழ்வு கைவெட்டும் நிகழ்வாகும்.இதைக் கோவில் கொடை விழாவில் காப்புக் கட்டிக் கொண்டவர் நிகழ்த்துவார்.அப்போது, அவர் ....

 

           அம்மையே நீங்கள்

            அப்பாவும் நீங்கள்

           அன்பும் நீங்கள்

           ஐம்புலனும் நீங்கள்

           அன்புக்குள்ளிருக்கும்

           அஞ்செழுத்தும் நீங்கள்

           அஞ்செழுத்தின் உள்ளிருக்கும்

           மெய்ப்பொருளும் நீங்கள்

           ஆதிஜோதி மலையாக

           வளர்ந்து நின்றதும் நீங்கள்

            அண்ணாமலைத் தீயாக

           சுடலையும் சுடலையாடியும்

            எப்போதும் சிறியோர்கள்

           ஆறுகுற்றம் நூறு பிழை

           தெரியாமல் செய்தாலும்

           அத்தனையும் பொறுத்து

           ஆதரிக்க வேண்டும்

            அப்பா அம்மா குருபாதமே16

 

என்ற பாடலை மிகுந்த சிரத்தையுடன் பாடுவார்.அவ்வாறு பாடும்போது பலரும் சாமியாடி விடுவர்.கோவிலிலுள்ள சாமியாடிகளும் கணியான்களை மிகவும் மதிப்பர். தற்போது இக்கலைகளானது நிகழ்த்தும் முறைகளில் மாற்றங்களைப் பெற்றாலும் அதனதன் தனித்தன்மைகளை இழக்காமல் நாட்டார் தெய்வக் கோவில்களில் பழமை மாறாமல் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.குறிப்பாக வில்லிசைக் கலையானது தொழில்முறை சார்ந்தும் பொழுதுபோக்கிற்காகவும், விளம்பரத்திற்காகவும் மரபை உடைத்துக் காலச் சூழலுக்கேற்ப மாறியும் புதுமைகளைப் புகுத்தியும் வருகிறது.ஆனால் கணியான் கூத்துக் கலையோ குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே உரியதால் பழமையான மரபு போற்றிக் காக்கப்பட்டு வருகின்றது.இருப்பினும் மாறிவரும் புதுமையான உலகில் நலிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கலைகளையும் நலிவுற்ற கலைஞர்களையும் மீட்டெடுக்கும் முயற்சியாகவும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு நாட்டுப்புற மண்ணின் மணத்தை அறிய வைக்கும் விழிப்புணர்ச்சியாகவும் இக்கட்டுரை அமையும் என்பதில் சிறு மனநிறைவு உள்ளது.

 

சான்றெண் விளக்கம்
 • நன்னூல், எழுத்ததிகாரம், மெய்யீற்றுப்புணரியல், நூற்பா 205.
 • சடங்கில் கரைந்த கலைகள், அ.கா.பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் -629001,நான்காம் பதிப்பு, மார்ச் 2016,ப.எண் : 85.
 • மேலது,ப.எண் : 25.
 • மேலது,ப.எண் : 55.
 • மேலது,ப.எண் : 55.
 • பெரும்பாணாற்றுப்படை, மின்நூல், தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.வரி. 180-182.
 • முக்கூடற்பள்ளு, பதிப்பாசிரியர் மு.அருணாசலம், தமிழ் நூலகம், சென்னை, இரண்டாம் பதிப்பு,14-01-1949,பாடல் எண் : 86. ப.எண் : 111.
 • மேலது, பாடல் எண் :88,ப.எண் : 113.
 • மருமக்கள்வழி மான்பியம்,மின்நூல்,(https://www.jeyamohan.in/3217#.W69jJ2gzZPY)
 • சடங்கில் கரைந்த கலைகள், அ.கா.பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் -629001,நான்காம் பதிப்பு, மார்ச் 2016,ப.எண் : 28.
 • மணிமேகலை, சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை,6: வரி 23-33
 • மணிமேகலை, மலர்வனம் புக்க காதை,3 : வரி 102- 111
 • மேலது,3 : வரி 123-125
 • கலித்தொகை, மருதக்கலி,66: வரி, 17-20
 • சடங்கில் கரைந்த கலைகள், அ.கா.பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் -629001,நான்காம் பதிப்பு, மார்ச் 2016,ப.எண் : 35
 • மேலது, ப.எண் : 80.