கலித்தொகையில் புணர்ச்சிக்குப் பின் களவு வெளிப்படும்போது நிகழும் மெய்ப்பாடுகளும் அதன் பரிணாமவளிர்ச்சி நிலையும்

வ.மீனாட்சி 25 April 2019 கட்டுரை Read Full PDF

வ.மீனாட்சி,

முனைவர் பட்ட ஆய்வாளர்

நெறியாளர்

முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை,

பேராசிரியர் & இயக்குநர்,

தமிழ்ப் பண்பாட்டு மையம்,

அழகப்பா பல்கலைக்கழகம்,

காரைக்குடி 630003.

 

ஆய்வுச்சுருக்கம்

அகவுணர்வுகளை ஆராய்ந்து அறியும் முன்னே அவர்களின் உடலில் தோன்றும் வெளிப்பாடுகளின் வாயிலாக எண்ணவோட்டத்தினை நமக்கு அறிவுறுத்துவது மெய்ப்பாடுகளாகும். உள்ளத்தே தோன்றும் எண்ணங்களை உடலின் அசைவு, அசைவற்ற தன்மை, உடற்குறிப்புகளாலும் மற்றவர்களைச் சிந்திக்கவும் ஆராயவும் இடம் தராமல் மெய்ப்பாட்டின் வாயிலாகத் தனது உள்ளத்து உணர்வுகளைத் தலைவி, தலைவனுக்கு அறிவுறுத்துவதைப் பாராட்டெடுத்தல், மடந்தப உரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் என்னும் நான்கு மெய்ப்பாட்டின் வழி கலித்தொகையில் இடம்பெற்ற அம்மெய்ப்பாடுகளைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய நிலையில் அந்நான்கு மெய்ப்பாடுகளின் பரிணாம வளர்ச்சி நிலையினையும் ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது.

           

திறவுச் சொற்கள்

கலித்தொகை, களவு, கற்பு,மெய்ப்பாடுகள், பரிணாமம்

           

முன்னுரை

அகத்துறையில் காதல் இன்பத்தைத் துய்ப்பதில் களவு கற்பு என்ற இருவேறு நிலைகள் உள்ளன. தலைவனும் தலைவியும் விதியின் வசத்தால் முன்பின் அறியாதவர்களாக இருந்தாலும் ஓரிடத்தில் சந்தித்துக் காதல் கொண்டு கலந்து இன்பம் துய்க்கின்றனர். இதுவே களவு வாழ்க்கை ஆகும். புணர்ச்சிக்குப் பின் களவு வெளிப்படும்போது நிகழும் மெய்ப்பாடுகளே தொல்காப்பியர் சுட்டும் நான்காம் நிலை அவத்தைகளாகும். இம்மெய்ப்பாடுகள் கலித்தொகையில் அமைந்துள்ள முறை குறித்து ஆராய்வதும் அம்மெய்ப்பாடுகளின் இன்றைய பரிணாம வளர்ச்சி நிலைகளைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

           

புணர்ச்சிக்குப் பின் களவு வெளிப்படும்போது நிகழும் மெய்ப்பாடுகள்

தலைவன், தலைவியரிடையே நிகழும் புணர்ச்சிக்குப் பின் களவுக் காதல் பெற்றோருக்கும் உற்றாருக்கும் ஊராருக்கும் வெளிப்படும்போது நான்காம் நிலை அவத்தைக்காண மெய்ப்பாடுகள் தோன்றுவதை தொல்காப்பியர்,

           

           “பாராட்டெடுத்தல்மடந்தபவுரைத்தல்

           ஈரமில்கூற்றம்ஏற்றலர்நாணல்

           கொடுப்பவைகோடல்உளப்படத்தொகைஇ

           எடுத்தநான்கேநான்கெனமொழிப” (தொல்.நூ.1210)

           

என்னும் நூற்பா வாயிலாகக் குறிப்பிடுகின்றார். தன் உள்ளத்தில் பெருகும் உணர்ச்சி வேட்கையைத் தலைமகள் மெய்ப்பாட்டின் வாயிலாகத் தலைவனுக்குப் புலப்படுத்துவாள். இதனால் தலைவியிடம் தோன்றும் இந்நான்கு மெய்ப்பாடுகளும் சிறப்பிடம் பெறுகின்றன.

           

பாராட்டெடுத்தல்

புணர்ச்சிக்குப் பின் தலைமக்களுள் தலைவன் தலைவியையோ, தலைவி தலைவனையோ உள்ளம் மகிழ்ந்து பாராட்டுதல் இயல்பான ஒன்றாகும். தலைமக்களின் அழகும் அன்பின் பெருமையும், நல்லியல்புகளும் பாராட்டுதலுக்குக் காரணமாகின்றன. காதல் வயப்பட்ட நிலையில் தோன்றும் காதலரின் பாராட்டு மொழிகள் அவர்தம் அன்பின் பெருமையைப் புலப்படுத்துவதோடு மனமகிழ்ச்சியையும் கொடுக்கின்றன.

கலித்தொகையில் தலைவியைவிடத் தலைவன் தலைவியைப் பாராட்டிக் கூறும் இடங்களே மிகுதியாக உள்ளன.

           

           

தலைவன் தலைவியைப் பாராட்டுதல்

தலைவன் தலைவியைப் பாராட்டும் மெய்ப்பாடானது கலித்தொகையில் 22 இடங்களில் காணப்படுகின்றது. தலைவன் தலைவியின் கண், நுதல், பல், தோள், கூந்தல், முலை, அல்குல் என்பன போன்ற உறுப்பு நலன்களைப் பாராட்டுகின்றான்.

தலைவன் பெரும்பாலும் தலைவியின் தோள்களையே புகழ்கின்றான். மூங்கிலை ஒத்த மென்மையான தோள்கள் என்றும் மூங்கில் போன்ற திரண்ட தோள்கள் 1 என்றும் வர்ணித்துள்ளான்.

           

           “முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன

           பல்லும், பணைத் தோளும், பேர் அமர் உண்கண்ணும்” (கலித்.108.15-16)

           “வார்உறு வணர் ஐம்பால், வணங்குஇறை நெடுமென்தோள்” (கலித்.58.1) - என்னும் பாடலடிகள் இதனை நன்கு விளக்கும்.

           

தலைவியின் கண்களைத் தலைவன் அழகான கருநீல மலரைப் போன்ற மைதீட்டிய கண் எனவும் அகன்ற கண் எனவும் மான் போன்ற மருண்ட பார்வையை உடையவள் 2 எனவும் பலவாறாகப் பாராட்டுகின்றான்.

தலைவியின் பற்களை முல்லை மொட்டுப் போன்ற ஒழுங்கான வரிசையுடையன இதழ்களிடையே அமிழ்தத்தைப் போன்ற வாயு+ரல்ஊறும் பல்வரிசையினை உடையவள் 3 எனப் பாராட்டுகின்றான்.

தலைவியின் நெற்றியினை ஒளிவீசும் பிறையுடன் ஒப்பிட்ட தலைவன் சிறிய நுதலையும் 4 வருணிக்கிறான். ஐந்துவகையாகப் பிரித்துப் பின்னிய மணம் கமழும் கரியது எனக் கூந்தலும் 5 அகன்ற அல்குலும் 6 தலைவனால் புகழ்ந்துரைக்கப்படுகிறது.

தலைவியின் பேச்சிற்குக் கிளியின் மொழியினையும் 7 அவளின் சாயலுக்கு மயிலின் சாயலையும் 8 நிறத்திற்கு மாந்தளிரினையும் 9 அவளது இளைய முலைகளுக்கு தாமரை மொட்டினையும் 10 தலைவியின் உடலிற்கு மெல்லிய கொத்து நீங்காத கொடி போன்றவள் 11 எனவும் பாராட்டுகின்றான். மேலும்,

           

           “அகல் அல்குல், தோள், கண் என மூவழிப்பெருகி

           நுதல், அடி, நுசுப்பு, என மூவழிச் சிறுகி” (கலித்.108.2-3)

           

என்னும் பாடலடிகளில் தலைவியானவள் தோள், கண், அல்குல் என மூன்றிடமும் பெருத்தும் நெற்றி, அடி, இடை என மூன்றிடமும் சிறுத்தும் இருப்பதாகப் பாராட்டுகின்றான்.

           

தலைவனைத் தலைவி பாராட்டுதல்

தலைவனைத் தலைவி ஆறு இடங்களில் 12 மட்டுமே பாராட்டுகின்றாள். தலைவி தலைவனின் குணநலன், வீரம், பண்பு ஆகியவற்றைப் பாராட்டுகின்றாள். தலைவன் போரிலே பகை அரசனைக் கொன்று அவன் நாட்டைக் கைப்பற்றி களிற்றின் மேலேறி அமர்ந்து வரும் அழகையும், பகை நாட்டை வென்று குதிரையின் மேலமர்ந்து வரும் அழகையும், பகையை வென்று திறையைப் பெற்றுப் பாய்ந்து வரும் தேர் மேலேறி வருபவருடைய கூறுபாடு கொண்ட தலைமைச் சிறப்புடைய வீரத்தால் பிறந்த அழகையும் பாராட்டுகின்றாள். மேலும்

           

           “மாறுகொண்டு ஆற்றார் எனினும், பிறர்குற்றம்

           கூறுதல் தேற்றாதோன் குன்று” - (கலித்.43.18-19)

           

என்னும் பாடலடிகளில் வறுமையால் வாடியோர் வந்து தன் இல்லாமையை தலைவனிடம் கூறினால் அவர்தம் இல்லாமையைப் போக்கி நிறைவுடையவராக ஆக்குபவன் எனத் தலைவி புகழ்வதை அறியமுடிகின்றது.

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு சிறிய முயற்சிக்குக் கூடப் பாராட்டுதல் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. யார், யாரை வேண்டுமானாலும் அவர்களின்

செயலையோ, அழகையோ, நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பாராட்டலாம் என்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

           

மடந்தப உரைத்தல்

தலைவி தன் உள்ளத்து வேட்கையைத் தலைவனிடமோ அல்லது தோழியிடமோ மடம் கெடக் கூறுதலே மடந்தப உரைத்தல் என்னும் மெய்ப்பாடாகும். தொல்காப்பியர் பெண்களுக்கு உரிய பண்புகளாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கினைச் சுட்டுகின்றார். இதில் குறித்த காலத்தில் வருவேன் என்று கூறி வராமல் இருக்கும் தலைவனின் மேல் உள்ள கோபமே தலைவியின் மடமைத் தன்மை நீங்கியக் கூற்றிற்கு காரணமாகின்றன.

மடந்தப உரைத்தல் என்னும் மெய்ப்பாடானது கலித்தொகையில் பதினொரு 13 இடங்களில் பயின்று வந்துள்ளது. தலைவன் தன்னைப் பிரிந்ததால் தன்னிடம் ஏற்படும் உணர்வுகளை,

           

           “வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின்,

           கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து, ஆங்கே,

           மையல்கொள் நெஞ்சொடு மயக்கத்தால், மரன் நோக்கி,

           எவ்வத்தால் இயன்ற போல், இலை கூம்ப” (கலித்.134.19-22)

           

என வெளிப்பட உரைப்பதால் இது மடந்தப உரைத்தலாகிறது. தலைவி தன்னை அன்பினால் பிணித்துக்கொண்டவர் பிரிந்து சென்றுவிட்டார். அவர் வருவேன் எனக் கூறிச் சென்ற காலமும் வந்துவிட்டது. ஆனால் அவர் வரவில்லை எனத் தனது மடமைத் தன்மை நீங்க வாய்விட்டுப் புலம்புவதை,

           

           “அரிதே, தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்

           பெரிதே காமம்@ என் உயிர் தவச் சிறிதே

           பலவே யாமம்@ பையுளும் உடைய

           சிலவே, நம்மோடு உசாவும் அன்றில்” (கலித்.137.1-4) - என்னும் பாடலடிகள் புலப்படுத்தும்.

           

அக்காலத்தில் தலைவனைப் பிரிந்த தலைவிக்கு என்று இருந்த மடந்தப உரைத்தல் என்ற மெய்ப்பாடானது இன்று ஒருவர் தான் விரும்பிய ஒன்றை இழக்கும்போது அந்தச் சூழ்நிலையை மறந்து புலம்புகின்றபோது அப்புலம்பல் மடமைத் தன்மை நீங்கியதாக உள்ளது.

           

ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல்

தலைவியைக் கண்ட ஊரார் அவளின் மனதைப் பற்றிய கவலையில்லாமல் ஈரமில்லாத சொற்களைக் கூறுகின்றனர். அதைக் கேட்ட தலைவி அதற்கு நாணுதல் என்பதே ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் என்னும் மெய்ப்பாடாகும். கலித்தொகையில் ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் என்னும் மெய்ப்பாடு இருபத்தியாறு 14 இடங்களில் வந்துள்ளது. ஐந்திணை இலக்கியத்திற்கு அழகு செய்பவர்கள் உள்ளுர்ப் பெண்டுகளாவர். தமிழ்ச் சான்றோர்கள் ஊராரையும் அகத்திணை இலக்கியத்துள் படைத்துள்ளனர். களவு, கற்பு இரண்டிலும் ஊராருக்கு இடமுண்டு அவர்களின் முக்கிய பங்கே அலர் தூற்றுதல் என்றே கூறலாம். “ஊரார் என்பது ஆண், பெண் என இரண்டு பேருக்கும் பொதுச் சொல்லாயினும் அகத்திணையில் பெண்டிரையே குறிக்கும் வீட்டகத்துச் செய்திகளை அடுக்களைப் புகை போல நுழைந்து காணும் ஆசையும், கூடியிருந்து முணுமுணுத்துப் பேசும் துணிவும் எப்படியோ பெண் சமுதாயத்திற்குப் புறஞ்சொல் கூறல் என்பது பிறவிக் குணம் போல் அமைந்துவிட்டன” 15 என்கிறார் வ.சுப.மாணிக்கனார்.

ஒரு பெண்ணின் களவொழுக்கம் பற்றி ஊர்மக்கள் வாய்க்குள் பேசிக் கொள்வது அம்பல் என்றும் வெளிப்படையாகப் பலர் அறிய பேசுவது அலர் எனவும் கூறப்படுகின்றது.

தலைவன், தலைவியை விட்டுப் பிரிந்து சென்று திரும்பி வராத சூழலில் தலைவியின் நலனே ஊரார் அலர் தூற்றக் காரணமாகின்றது. தலைவனது செயலை வெளியே கூறினால் அவனது அருளில்லாத செயலைக் கேட்டுப் பிறர் தலைவனைப் பழி கூறுதலை ஏற்க முடியாமல் நாணி அதனைத் தலைவி மறைத்தலை,

           

           “தன் எவ்வம் கூரினும், நீ செய்த அருள் இன்மை

           என்னையும் மறைத்தாள், என் தோழி அதுகேட்டு,

           நின்னையான் பிறர் முன்னர்ப் பழி கூறல் தான் நாணி” (கலித்.44.8-10) - என்னும் பாடலடிகள் புலப்படுத்தும்.

           

“இனையள்” என்ற சொல்லை அலர் தூற்றப் பயன்படுத்தியுள்ளனர். இதனை,

           

           “இனையள் என்று எழடுத்து அரற்றும் அயல் முன்னர், நின் சுனைக்

           கனைபெயல் நீலம் போல்” (கலித்.48.14-15)

           

என்பதில் தலைவி களவு ஒழுக்கம் உடையவள் என ஊரார் கூறுவதைப் பதிவு செய்துள்ளனர். மேலும் ஒரு தாய் தன் மகளைச் சிறிது கடிந்துரைக்கின்றாள். அதைக் கண்ட முல்லை நிலப் பெண்கள் இப்பெண்ணுக்கு இத்தலைவனோடு தொடர்பு உண்டு என அலர் தூற்றினர். இதனைக் கேட்ட தலைவி வருத்தப்படவில்லை மாறாக அலர் தூற்ற தூற்ற அவளுக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஊராரின் பேச்சைக் கேட்டு தனது பெற்றோர் அத்தலைவனுக்கே தன்னை மணம் செய்து வைப்பர் என்றும் இதனால் தனது கற்புக்குக் களங்கம் நேராது எனவும் தலைவி கூறுவதை,

           

           “கண்ணுடைக் கோலள் அலைத்ததற்கு, என்னை

           மலர் அணி கண்ணிப் பொதுவனோடு எண்ணி,

           அலர் செய்துவிட்டது இவ்ஊர்” (கலித்.105.63-65) - என்னும் பாடலடிகள் உரைக்கும்.

           

இனி அலரைத் தடுக்க முடியாது என்றும் ஊரில் உள்ளோரின் பேச்சினைத் தடை செய்யத் திருமணம் செய்வதே சிறந்தது என்ற எண்ணம் தலைவியிடம் மேலோங்குகிறது. ஆனால் திருமணம் உறுதி செய்தால் களவொழுக்கம் இனி இருக்காது என்பதே தலைவனின் வரைவு நீட்டிப்பிற்கான காரணமாகிறது. ஆனால் தலைவன் ஊர் தூற்றும் அலருக்கு அஞ்சாமல் இருப்பதை,

           

           ”மாணா ஊர்அம்பல் அலரின் அலர்க என,

           நாணும் நிறையும் நயப்பு இல்பிறப்பு இலி” (கலித்.60.28-29)

           

என்னும் பாடலடிகள் விளக்கும். மேலும் தலைவியானவள் ஊரார் தனது நிலையை அறியாமல் பழித்துப் பேசுவரே என்ற நாணத்தால் குன்றிப் போவதையும் பசலைப் பாய்தலால் மேனி அழிந்தமை கண்டும் அலர் தூற்றுகின்றனர்.

அன்றைய சூழலில் தலைவன் தலைவியின் களவு வாழ்க்கையை வெளிக்கொணர அலர் தூற்றல் என்னும் மெய்ப்பாடு பெரிதும் பயன்பட்டது. ஆனால் இன்று ஒருவரின் வளர்ச்சியையோ, முகமலர்ச்சியையோ, வருத்தத்தையோ, ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் ஒன்றிற்கு இரண்டாகப் பேசுவது (அ)புறங்கூறுவது என்ற நிலையில் அனைவருக்கும் பொதுவான மெய்ப்பாடாக பரிணாம வளிர்ச்சி பெற்றுள்ளது.

           

கொடுப்பவை கோடல்

உள்ளத்தால் ஒன்றிய காதலர்களின் அன்பு வெளிப்பாட்டைப் புலப்படுத்துவது கொடுப்பவை கோடல் என்னும் மெய்ப்பாடாகும். தலைவன் தன் மனம் கவர்ந்த தலைவியைச் சந்திக்கும்போது கையுறையாகத் தருவனவற்றைத் தலைவி உள மகிழ்வோடு ஏற்றுக் கொள்வாள். தனக்கும், தலைவனுக்கும் உள்ள உறவை உலகோர் அறிந்து ஏதேனும் கூறுவர் என்பதைக் கருதாமல் தலைவனோடு தனக்குள்ள அன்பின் ஆழத்தைப் புலப்படுத்த வேண்டி தலைவனின் பரிசை ஏற்றுக்கொள்வாள். முல்லைக்கலியில் தலைவன் தலைவிக்கு பு+க் கொடுத்ததாக மூன்று 16 இடங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.

கலித்தொகையில் முல்லைத் திணையில் மட்டுமே கொடுப்பவை கோடல் என்ற மெய்ப்பாடு இடம்பெறுகின்றது. தலைவியின் கூந்தலில் எண்ணெய் மணம் வருவதற்குப் பதிலாக முல்லைப்பு+வின் மணம் வந்ததை அறிந்த சுற்றத்தார் கோபம் கொள்கின்றனர். இதில் இரவுக் குறியில் தலைவிக்குத் தலைவன் முல்லைப்பு+வினை கொடுக்க அதனைத் தலைவி தன் கூந்தலில் சூடிக் கொண்டாள் என்ற குறிப்பு காணப்படுகிறது. மேலும் ஆட்டினத்து ஆயனான தலைவன் முல்லைப் பு+வினைச் சூடித் தலைவியைக் காண வருகிறான். அவன் சூடியிருந்த பு+வினைப் பெற்று தலைவி தன் கூந்தலில் சூடிக்கொள்வதை,

           

           “புல்லினத்து ஆயர்மகன் சூடி வந்தது ஓர்

           முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்!

           கூந்தலுள் பெய்து முடிந்தேன்மன்@” (கலித்.115.4-6)

           

என்னும் முல்லைக்கலி பாடலடிகள் உரைக்கும். ஏறுதழுவுதலின் போது தலைவன் சூடியிருந்த முல்லைப் பு+வினை ஏறானது தன் கொம்பினாலே எடுத்து வீசியது. அப்பு+வானது தலைவியின் தலையிலே வந்து வீழ்ந்தது. இதனைத் தலைவன் தனக்குக் கொடுத்ததாகத் தலைவி இன்புறுகின்றாள். (கலித்.107.6-9)

அக்காலத்தில் தலைவன், தலைவிக்கோ அல்லது தலைவி, தலைவனுக்கோ காதல் பரிசாக ஒருவர் கொடுக்க மற்றொருவர் பெற்றுக்கொண்ட கொடுப்பவை கோடல் என்னும் மெய்ப்பாடானது வளர்ச்சி அடைந்து நாம் யாரேனும் ஒருவரைச் சந்திக்கச் செல்லும் போதோ, ஓருவரின் வீட்டிற்குச் செல்லும் போதோ ஏதேனும் பழங்களோ, இனிப்பு வகைகளோ அல்லது அந்நபருக்குப் பிடித்தமான ஒன்றையோ பரிசுப் பொருளாக வாங்கிச் செல்வது என்பது நமது மரபாக உருப்பெற்றுவிட்டது.

           

முடிவுரை

புணர்ச்சிக்குப் பின் களவு வெளிப்படும்போது நிகழும் மெய்ப்பாடுகளாகத் தொல்காப்பியர் நான்கினைச் சுட்டுகின்றார். இந்நான்கினுள் பாராட்டுதல், அலர் என்ற இரு மெய்ப்பாடுகள் மட்டுமே மிகுதியாக இடம்பெற்றுள்ளன. தலைவன், தலைவிக்குப் பு+ கொடுத்ததாக மட்டுமே காணப்படுகிறது. தலைவி தலைவனுக்கு மடல்மாவை கொடுத்ததாக குறிப்புகள் உள்ளன. ஆனால் இது கைக்கிளை பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளில் இடம்பெறும், களவுக்குரிய மெய்ப்பாடுகளில் இடம்பெறாது. ஒரு சிறிய செயலுக்குப் பாராட்டுதல் என்பதும், ஒருவரைச் சந்திக்கச் செல்லும்போது ஏதேனும் ஒரு பொருளைக் கையுறையாகக் கொண்டு சென்று கொடுப்பதும், ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் தேவையற்றதைக் கூறுதலும், விரும்பிய ஒன்றை இழக்கும்போது மடங்கெடக் கூறலும் என அனைவருக்கும் பொதுவான மெய்ப்பாடாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. அன்றைய சூழலில் தலைவன் தலைவியின் களவு வெளிப்பட்ட பின் மட்டுமே நிகழும் மெய்ப்பாடு எனத் தொல்காப்பியரால் வரையறுக்கப்பட்ட நான்கு மெய்ப்பாடும் கால மாற்றத்தாலும் நாளுக்கு நாள் வளர்ச்சியடையும் சமூகத்தாலும் அனைவருக்கும் அனைத்து சூழ்நிலைகளிலும் தோன்றும் மெய்ப்பாடுகளாக வளர்ச்சியடைந்துள்ளதைக் காணமுடிகின்றது.

           

சான்றெண்விளக்கம்

 • கலித். 14:1, 20:15, 55:7, 57:1, 58:1, 108:2-3, 108:15-16, 113:1
 • கலித். 14:2, 55:1, 56:17, 108:16, 108:37, 108:52, 113:2
 • கலித். 14:3, 20:11, 22:9-10, 58:1-4, 108:15-16
 • கலித். 14:4, 60:1-2
 • கலித். 14:4, 22:12-13, 57:1, 60:1-2
 • கலித். 14:5, 55:7
 • கலித். 20:7
 • கலித். 57:2, 108:37-38
 • கலித். 108:52-53
 • கலித். 14:5, 22:15-16
 • கலித் 62:5
 • கலித். 26:11-12, 26:15-16, 26:19-20, 31:13-14, 31:17-18, 43:8-19
 • கலித். 18:1-3, 23:9-13, 27:11-12, 27:17-18, 28:16-17, 34:10-11, 122:21-22, 131:19-20, 131:29-30, 134:19-22, 137:1-4
 • கலித். 3:1, 24:15-17, 27:13-14, 33:13-14, 38:20-21, 39:47-49, 44:8-10, 44:11-13, 44:14-16 47:15-16, 48:14-15, 48:17-19, 52:21, 53:9-10, 53:14-15, 60:28-29, 61:22-25, 76:3-4, 77:16-17, 105:63-65, 118:22-23, 124:5-6, 124:9-10, 124:13-14, 132:23-24, 136:18-19
 • வ.சுப.மாணிக்கனார். தமிழ்க்காதல் ப.56
 • கலித்.105:53-55, 107:6-9, 115:4-6

           

பார்வை நூல்கள்