Life CellOfBrahmi Numerals

முனைவர் இரா.மோகனா, 25 April 2019 கட்டுரை Read Full PDF

முனைவர் இரா.மோகனா,

உதவிப்பேராசிரியா,

ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி,

சென்னை-40,

 

ஆய்வுச் சுருக்கம்:

கல் என்னும் வேர்ச்சொல்லிலிருந்து கலை என்ற சொல் தோன்றியது. கலை எனும் சொல்லுக்கு ஆண்பால், கால அளவு, கல்கி, 64 கலை, மோனை, காஞ்சி எனப் பல்வேறு பொருள்கள் உள்ளன. ஆழமாக என்னும் அறிவுநிலை பிறருக்கு எடுத்துரைக்கும் கற்பிக்கும் நிலை ஆகியவற்றின் அடிப்படையிலேயே கலை என்ற சொல் உருவாகியிருக்கின்றது. சங்க இலக்கியங்களில் என்னென்ன கலைகள் இடம் பெற்றிருக்கின்றன என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக உள்ளது.

அக்கலைகளுள் இசைக்கலை பற்றிக் குறிப்பிடும்போது பாணர், பொருநர், கூத்தர், விறலியர் போன்றோர் வறுமையின் காரணமாக இசையோடு பாடி வாழ்ந்த செய்திகளும் இசைக்கருவி பற்றிய செய்திகளும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. துடி என்பது உடுக்கை. கள்வர்கள் ஆடும் பொழுதெல்லாம் அழகிய வாயினை உடைய அச்சத்தைச் செய்யும் கரிய துடியிடையும் வளைந்த வில்லினையும் பயன்படுத்தியுள்ளனர். பறை,மத்தளம்,பரத்தையர் மத்தளத்துடன் காண்பவரை மகிழ்விக்கவும் கூட்டத் தலைவன் காணுமாறும் மத்தளத்தைக் கொட்டியபடி துணங்கைக் கூத்து ஆடுவர். முரசு, குழல், கொம்பு, யாழ், கழங்கு ஆடல்,ஓவியக்கலை, மாலை கட்டுதல் மாலை தொடுத்தமையால் செவ்விய தன் விரல் மேலும் சிவந்துவிட்டதாக ஐங்குறுநூற்றிலே ஒரு குறிப்புள்ளது.

கட்டடக்கலை, விருந்தோம்பல் கலை, வேலன் வெறியாடல்இக்கூத்தானது சமயச் சடங்காக காணப்படுகிறது. தவிர சமூக நடனமாக இது காணப்படவில்லை. பாட்டிலும் தொகையிலும் காணப்பட்ட தமிழரின் கலைகள் இயன்றவரை இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பொருண்மை சார்ந்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ள இது வழிவகுக்கும்.

           

திறவுச் சொற்கள்:

துடி- உடுக்கை-கொம்பு- ஊதுகொம்பு- யாழ

கல் என்னும் வேர்ச்சொல்லிலிருந்து கலை என்ற சொல் தோன்றியது. கலை எனும் சொல்லுக்கு ஆண்பால், கால அளவு, கல்கி, 64 கலை,மோனை, காஞ்சி எனப் பல்வேறு பொருள்கள் உள்ளன. கலைகள் அறுபத்துநான்கு என்பதற்குரிய சான்றை

           

           ‘எண்எண் கலையும் இசைந்து உடன் போடுப்

           புண்ணும் திறனும் புறங்கூற நாவலின்’

           

எனும் சிலப்பதிகார வரியில் இருந்து அறியலாம்.
தமிழர்கள் பல்வேறு கலைகளை வளர்த்துள்ளனர். கலையைக் கண்களால் பார்த்தும் காதுகளால் கேட்டும் மனதினால் உணர்ந்தும் இன்புறலாம். மரத்தின் நிழலிலும் ஓலையிலும் குடியிருந்த தமிழர்கள் நாகரிக உச்சநிலை காரணமாகப் பல்வேறு கலைகளைத் தோற்றுவித்தனர். சங்கப் பனுவல்களில் கலை பற்றிய குறிப்புகள் நிரம்பியுள்ளன. ஆடல், பாடல், ஓவியம், சிற்பம் ஆகிய பல்வேறு கலைகளில் தேர்ச்சி குறித்தும் பலச் செய்திகளை வழங்கும் சங்க இலக்கியங்களில் கலை என்ற சொல் காணப்படவில்லை என்பது வியப்புக்குரிய ஒன்றாகும்.

கல்லுதல் என்பதற்கு தோன்றுதல், அகழ்தல் ஆகிய பொருள்கள் உண்டு. ஆசிரியர் மாணவனை அழைத்து வினாவிடை பாங்கில் ஐயம் திரிபு அகற்றும் நிலையை களவியலுரை தெளிவுறக் காட்டும். ஆழமாக என்னும் அறிவுநிலை பிறருக்கு எடுத்துரைக்கும் கற்பிக்கும் நிலை ஆகியவற்றின் அடிப்படையிலேயே கலை என்ற சொல் உருவாகியிருக்கின்றது. சங்க இலக்கியங்களில் என்னென்ன கலைகள் இடம் பெற்றிருக்கின்றன என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக உள்ளது.

           

இசைக்கலை:

இசை என்பது இனிமை, சங்கீதம், இசைப்பாட்டு என்றெல்லாம் சொல்லப்படும். பாணர், பொருநர், கூத்தர், விறலியர் போன்றோர் வறுமையின் காரணமாக இசையோடு பாடி வாழ்ந்த செய்திகளும் இசைக்கருவி பற்றிய செய்திகளும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கையில் கிளிகடிதல் ஒரு சிறப்பான அம்சமாகும். கிளிகடிதல் என்பது திணைப்புனத்தில் கதிர்களைத் தின்ன வரும் கிளிகளைக் காவல்புரியும் பெண்கள் இசைக்கருவிகளை இசைத்து விரட்டுவதைக் குறிக்கும்.

           

           ‘சிறுகிளிகடிதல் பிறக்கியாவயதோ

           குளிர் படுகையள்’(நற்றிணை 309)

           

காலையில் பாடும் இராகம்எது எனப்பொழுதுக்குப் பண் அமைத்துப் பாட்சைத்த செய்தியும் உண்டு

           

           ‘சீரினது கொண்டு நரம்பினிது இயக்கி

           யாழோர் மருதம் பண்ண’ (மதுரைக்காஞ்சி 657)

           

மாலைப்பொழுதில் செவ்வழிப்பண் பாடினர் என்பதை அகநானூறு கூறும்

           

           ‘அருளா யாகலோ கொடிதே இருள்வர

           சீறியாழ் செவ’வழி பண்ணி யாழநின்

           காரெதிர் கானம் பாடினே மாக’(அகம்144)

           

எனத் தமிழ்ப்பண் வகை விளக்கப்பட்டுள்ளது.
தங்களின் பணிகளைச் செய்யும் பொழுது பெண்கள் புல்லாங்குழல், யாழ், முழவு, முரசு ஆகியவற்றை இசைத்தார்கள் என்பதைப் பட்டினப்பாலை பின்வருமாறு கூறுகிறது.

           

           ‘‘செறிதொடி முன்கை கூப்பி செவ்வேற்

           வெறியாடு மகளிரொடுசெறியத் தாஅய்’ (பட்டினப்பாலை)

           

வெறியாடு மகளிரொடுசெறியத் தாஅய்’ (பட்டினப்பாலை)
இப்பாடலில் சங்ககாலப் பெண்கள் இசைக்கலையிலும் சிறப்புற்று விளங்கினர் என்பதை அறிய முடிகிறது. இசைக்குரிய தன்மையை நோக்குமிடத்து மக்களின் மனதைக் கவரும் கலைகளில் ஒன்றாக இக்கலை இருந்ததை அகநானூறு மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது.
அகநானூற்றில் மத்தளம், துடி, பறை, முரசு குழல், கொம்பு, யாழ், தூம்பு போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்திய செய்திகள் கிடைக்கின்றன.

           

துடி:

துடி என்பது உடுக்கை. கள்வர்கள் ஆடும் பொழுதெல்லாம் அழகிய வாயினை உடைய அச்சத்தைச் செய்யும் கரிய துடியிடையும் வளைந்த வில்லினையும் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் காட்டு வழியாக செல்வோரின் கைப்பொருட்களைக் கொள்ளும் நோக்குடன் சுற்றி வளைத்துக் கொள்வார். அவர்களின் வெற்றிக்கு அறிகுறியாக துடியினை முழங்கினர் என்ற செய்தியை,

           

           ‘ஆடுதொறு கனையும் அவ்வாய்க் கடுந்துடிக

           கொடுவில் எயினர் கோட்சுரம் படர’ (அகம்-79)

           என்ற அகநானூற்றின் பாடல் வழி அறியலாம்.

           

பறை

           

தலைவனின் பிரிவால் தலைவி உடல் வேறுபட்டாள். அதுகண்டு வருந்திய தோழிக்குத் தலைவி பறை முழங்கினாற் போன்று ஊரெங்கும் அலர் தூற்றுகின்றனர் என்பதை

           ‘அவரோ சென்றனர்

           பறை அறைந்தன்ன அலர்நமக்கு ஒழித்தே’

           

என்ற பாடல் வழி விளக்கியுள்ளார். தொண்டகப் பறையின் தாளத்திற்கு ஏற்ப ஆடவர் பெண்களுடன் கலந்து தெருக்களில் கூத்தாடுவர். அப்படிப்பட்ட ஊர் தலைவியின் சிறுகுடிப் பாக்கம் என்பதை அகப்பாடல் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

           

           ‘தொண்டகப் பறைச்சீர் பெண்டிரொடு விரைஇ

           மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து’ (அகம்118) என்று கபிலர் குறிப்பிடுகிறார்.’

           

மத்தளம்

பரத்தையர் மத்தளத்துடன் காண்பவரை மகிழ்விக்கவும் கூட்டத் தலைவன் காணுமாறும் மத்தளத்தைக் கொட்டியபடி துணங்கைக் கூத்து ஆடுவர் என்பதை,

           

           ‘முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்’ (அகம்336) என்ற வரியும்

           ‘மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்க

           தண்துறை ஊரன் எம்சேரி வந்தென’

           என்ற அடிகளின் வழி அறியலாம்.

           

முரசு

புது நீர் வருகையை அறிவிப்பதற்காக இடைவிடாது முழவு ஒலிக்கப்பட்ட, ஆரவாரம் மிக்க விழாக்கோலம் பூண்ட நீர்த் துறையை உடையது கழாஅர் என்னும் ஊர் என்பதை,

           

           ‘முழவுமுகம் புலராக் கலிகொள் ஆங்கண

           கழாஆர்ப் பெருந்துறை விழவின் ஆடும்’ என்ற பாடல் குறிப்பிடுகிறது.

           காரியின் ஊரில் இடைவிடாது முழவு சத்தம் கேட்கும் என்பதை

           ‘துஞ்சா முழவிற் கோவற் கோமான்’ (அகம்35) என்ற பாடல் சுட்டுகிறது

           

குழல்

மாலைப் பொழுதிலே அழகான வாயினை உடைய சிறிய குழலோ தலைவியின் துன்பத்தை மேலும் அதிகரிக்கிறது என்பதை

           

           கல்லாக் கோவலர் ஊதும

           வல்வாய்ச் சிறுகுழல் வருந்தாக்காலே’(அகம்74)

           

கொம்பு

பால் தரும் பசுக்கள் பாலை நிலத்தில் செல்வதை அறிந்த ஆயர்கள் ஊதுகொம்பினால் ஒலிஎழுப்பி அவற்றை அவ்விடத்தினின்று விலக்கிக் கொன்றைமரத்தின் நிழலில் தங்கச் செய்தனர் என்பதை

           

           ‘பயன்கெழு பெருநிரை

           வாடுபுலம் புக்கென, கோடுதுவைத்து அகற்றி

           ஒல்கு நிலை கடுக்கை அல்குநிழல் அசைஇ’(அகம்399) என்ற பாடலின் வழி அறியலாம்.

           

யாழ்

கரிய சிறகினை உடைய வண்டின் கூட்டம் ஒலி எழுப்பும்;. அவ்வொலியினை யாழின் இசை எனக் கருதி பெரிய மலைகளில் உள்ள அசுணங்கள் அவ்விசையை உற்றுக் கேட்கும் என்பதை,

           

           ‘யாழ் செத்து

           இருங்கல் விடல்அளை அசுணம் ஓர்க்கும்’ என்ற பாடலின் வழி அறியலாம்.

           

ஒளிபொருந்திய மகளிர் பழைய யாழினை இசைத்துப் பாட, இசைத் தலைவனுக்கு இன்பத்தையும் காமத்தையும் அதிகரிக்கும். ஆதலால்தான் பரத்தையர் வீடுகளில் யாழ் இசைக்கப்பட்டது என்பதை,

           

           ‘ஒண்தொடி மகளிர் பண்டை யாழ்பாட’ என்ற பரணர் பாடல் சான்று பகர்கின்றது

           

மனித வாழ்வில் ஏற்படக்கூடிய இன்பம், துன்பம், பிரிவு, போரின் தன்மை, வெற்றியின் சிறப்புப் போன்றவற்றை விளக்குவதற்காக இசை உவமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை இதன்வழி அறியமுடிகிறது.

           

கழங்கு ஆடல்

ஆண் பெண் வேறுபாடின்றி இருபாலரும் சேர்ந்து விளையாடிய விளையாட்டுகள் பல இருக்கின்றன. பெண்கள் மட்டும் விளையாடக் கூடிய விளையாட்டாக கழங்காடல் என்று சொல்லப்படுகின்ற கல்லாட்டம், காயாட்டம், கழங்காட்டம், கரகாட்டம், சொட்டாங்கல், சொட்டாங்காய், சொக்கட்டான், செல்லி ஆட்டம் என அழைக்கப்படுகிறது. ஓண்ணாங்காய், ரெண்டாங்காய், பாண்டிக்காய், ஐந்தாம்காய், ஏழாம் காய் இவ்விளையாட்டுகள் கணக்கு முறையை வலுப்படுத்துகின்றன. கருங்கற்கள், புளியங்காய், சிறுகற்கள்,ஈச்சங்காய், கூழாங்கற்கள் ஆகியவை கொண்டு இந்த விளையாட்டை விளையாடுவார்கள். பெண்கள் விளையாடும் சங்க இலக்கிய விளையாட்டுகளில் இன்றும் தொடர்ந்து விளையாடப்பட்டு வரும் முக்கியமான விளையாட்டு கழங்கு என்பதாகும். இவ்விளையாட்டு கழற்சிக்காய் அல்லது பெரியமுத்துகள் வடிவில் இருக்கும் மரக்கட்டை அமைப்புகள் கொண்டு விளையாடப்படும். யானையின் தந்தத்தை கடைந்து செய்த கழற்சிக்காய் போன்று செய்யப்பட்டதாக அகநானூறு கூறுகிறது.

           

           ‘ஆடுதளிர் இருப்பைக் கூடுகுவி வான்பூ

           கோடு கடை கழங்கின்’

           

என்ற குறிப்பு இதனை உணர்த்தும். வீட்டிற்கு வெளியே மணற்பகுதியில் பெண்கள் கூட்டமாக கழங்கு விளையாடினர் என்பதை நற்றிணையும் எடுத்துரைக்கிறது

           

           ‘கூரை தன்மனைக் குறுந்தொடி மகளிர்

           மணல் ஆடு கழங்கின் அறைமிசைத் தாஅம்’

           

என்று பாடிய இடம் இப்பாடலில் சுட்டப்பட்டுள்ளது. கழற்சிக்காய் மூலிகை மருந்தாகும். உருண்டை வடிவமாக உள்ளதால் அதை வைத்துக் கொண்டு விளையாடி இருக்கிறார்கள் இது பற்றிய ஒரு குறிப்பு காணப்படுகிறது.

           

           ‘காதலன் தந்தமை அறியாது உணர்ந்த

           அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன்’ (நற்றிணை -282)

           

என்ற கருத்து மேற்கூறிய கருத்தினை விளக்குவதாக உள்ளது. நார்முடிச் சேரலைப் போரில் வெல்வதற்கானக் கழற்காய்களை உருட்டி அதன்வழி கணக்கிட்டு வந்து பகைவர் அனைவரும் கழற்காய் பொய் சொன்னது என்னும் அளவிற்குத் தோல்வியை உணர வைத்த அரசனே எனும்படியாக பின்வரும்பாடல் அமைந்துள்ளது.

           

           ‘பொய் புடுபு அறியாக்கழங்கே! மெய்யே!

           மணிவரைக்கட்சி மடமயில் ஆலும்நம்’ (ஐங்குறுநூறு)

           

பொய்த்தலைத் தராத கழங்கு என்று குறிப்பிட்டு அது பொய்யான நிலையைக் கபிலா

           

           ‘பொய்யா மரபின் ஊர்முதுவேலன்

           கழங்கு மெய்ப் படுத்து கன்மை தூக்கி’(ஐங்குறுநூறு)

           

என்கிறார். பதிற்றுப்பத்திலும் கழங்கு பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. நன்மை தீமை அறியும் முன்னோட்டமாகவும் இது செவ்விலக்கிய காலத்தில் இருந்துள்ளது என்பதை

           

           ‘எல்லாம் எண்ணின் இடு கழங்கு தபுந்’

           

என்று பதிற்றுப்பத்து பாடல் இதனைக் குறிக்கிறது

           

ஓவியக்கலை

நாவாய் எனும் பெரிய களத்தில் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பால் போன்ற வெள்ளை நிறத்தை உடைய குதிரைகள் நீர்ப்பெயற்று துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டதைப் பெரும்பாணாற்றுப்படையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

           

           ‘நீர்ப் பெயர் எல்லை போகுப் பாற்கேழ

           வாலுளைப் புரவியொடு வடவளம் தரூவும்

           நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை’

           

காலத்தால் பிற்பட்ட ஓவியத்தையும் சங்க இலக்கிய விளக்கத்தினையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தென்னிந்திய கடல்வழி வணிகத்தில் குதிரை இறக்குமதி உண்மையாகிறது

           

மாலை கட்டுதல்

சங்க இலக்கியத்தில் மாலை கட்டுதல் ஒரு கலையாகவே கருதப்பட்டது. தளிரால் தொடுத்த மாலை படலை எனப்பட்டது. தலையில் அணிந்த மாலை கண்ணி எனப்பட்டது. ஆடவர் கழுத்தில் அணிந்த மாலை தார் எனப்பட்டது. ஆடவர் தலையில் அணிந்த மாலை கண்ணி எனப்பட்டது. பெண்கள் அணிந்த மாலை கோதை எனப்பட்டது.

           

           ‘புகை வதை தைஇயினார் பூங்கோதை நல்லார்

           தகை வகை தையினார் தார்’ (பரிபாடல்)

           

தகை வகையாவது தார்களைத் தொடுக்கும் தொழில் திறத்தோர் புனையப்பட்ட வகையாகும். மகளிர் பல்வகையான இயல்புடைய மாலைகளை அணிந்த நிலைமையைச் சங்க இலக்கியங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன. அவனுடைய மார்பில் நிறைய பூமாலை பொலிவாக விளங்கியது என்பதை குறிஞ்சிப்பாட்டு மிக சிறப்பாகச் சுட்டியுள்ளது

           

           ‘அணி மிகுவரி மிஞிறு ஆர்ப்ப தேம் கலந்து

           மணிநிறம் கொண்ட மாஇருங் குஞ்சியின்’ (குறிஞ்சிப்பாட்டு)

           

தழையையும் பூவுடன் கலந்து மாலை கட்டுவது உண்டு இது படலைக் கண்ணி என்றும் குறிக்கப் படுகிறது என்பதை நெடுநல்வாடை,

           

           ‘படலைக் கண்ணி பருஞர் ஏறுழ்’ (நெடுநல்வாடை) என்றும் பெரும்பாணாற்றுப்படை

           ‘முடலை யாக்கை முழுவலி மாக்கள் (பெரும்பாணாற்றுப்படை) என்றும் குறிப்பிடுகிறது.

           

பரிபாடலில் திருப்பரங்குன்ற அழகைப் பற்றிக் குறிப்பிடும்போது, பச்சிலை கொடியுடன் இளம் கொழுந்தும் அல்லியும் காந்தளும் எருவையும் கொத்துக்கொத்தாய் மலர்ந்த வேங்கையும் இலவமும் தெற்றப்பட்ட மாலைகள் போல் மலர்களால் நிறைந்திருந்தன. கோத்த மாலைகள் போல் நிறம் வேறுபட்டன. தொடுத்த மாலை போல இடையிட்டுத் தோன்றின. தூக்கிக் கட்டின மாலைகள் போல் நெருங்கி தோன்றின என்பதை,

           

           ‘பசும்பிடி இளமுகில் நெகிழ்ந்த வாய் ஆம்பல்

           கை போல் பூத்த கமழ் குலைக் காந்தள்’ (பரிபாடல்)

           

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது. பட்டினப்பாலையில் மதுவின் மயக்கத்தால் மகளிர் தம் கணவர் சூடிய கண்ணியைத் தம் கோதையாக நினைத்து தங்கள் கூந்தலில் சூடிக் கொள்வர். மகளிர் கூந்தலில் அணிந்திருந்த கோதையை, ஆடவர் தம் கண்ணியாக நினைத்து தங்கள் தலையில் சூட்டினர் என்பதை,

           

           ‘மைந்தர் கண்ணி மகளிர் சூடவும

           மகளிர் கோதை மைந்தர் சூடவும்’ - என்ற பட்டினப்பாலை அடிகள் மூலம் அறியலாம்.

           

செந்நிற வயலைக்கொடியால் மாலை தொடுத்தமையால் செவ்விய தன் விரல் மேலும் சிவந்துவிட்டதாக ஐங்குறுநூற்றிலே ஒரு குறிப்புள்ளது.

           

           ‘வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச்

           செவ்விரல் சிவந்த சேயரி மழைக்கண் (ஐங்குறுநூறு)

           

துணங்கைக் கூத்து குறித்து குறுந்தொகை ‘மகளிர் தழீஇய துணங்கை’ என்ற அடிகளின் மூலம் அறியலாம் அகநானூற்றிலும் ‘முழவிமிழ் துணங்கை தூங்கும் விழாவில’; என்ற அடிகளின் மூலம் அறியலாம் ஆரியக் கூத்து என்ற ஒன்று பழங்காலத்தில் இருந்ததை குறுந்தொகை நமக்கு எடுத்தியம்புகிறது ‘ஆரியர் கயிறு ஆடு பறையின் கால் பொரக் கலங்க’p என்ற குறுந்தொகைப் பாடலின் வழி அறியலாம்

           

கட்டடக்கலை

சங்ககாலத்தில் அரசன் குடியிருக்கும் வீடு கோயில் என்றழைக்கப்பட்டது. யானை, குதிரை நுழைந்து உள்ளே செல்லும் அளவிற்கு மிகப்பெரிய நுழைவாயில்கள் அமைக்கப்பட்டன. கதவு இரும்பால் செய்யப்பட்டது. பெரும் மதில்கள் எழுப்பப்பட்டன. மாட மாளிகைகள் தவிர எளிய மக்களும் கட்டடக்கலையில் தேர்ச்சிபெற்றிருந்தனர். ஒரு கட்டடம் சிறந்து விளங்க வேண்டுமெனில் அதன் அமைப்பு, அரண்மனை கோபுர வாயில்,முற்றம், நிலா முற்றம், அந்தப்புர அமைப்பு, பலகணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நெடுநெல்வாடை மிக அழகாக எடுத்தியம்பி உள்ளது.

           

           ‘விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்

           இருகோல் குறிநிலை வழுக்காது குடக்கேர்பு

           ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து

           நூலறி புலவர் நுண்ணீதிற் கயிறிட்டு

           தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்

           பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து

           ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பின்; (72-79) - என்ற அடிகளால் அறியலாம்.

           

விருந்தோம்பல் கலை

தமிழரின் பாரம்பரியப் பண்பாடுகளுள் விருந்தோம்பல் சிறப்பானதொரு இடத்தைப் பெறுகிறது. விரும்தோம்பல் என்பது விருந்தினரைப் பேணுதல் என்று பொருள்படும். பசிக்கு உணவளித்தலில் தொடங்குகின்ற இக்கலை மக்களின் அன்றாட வாழ்வில் குறிப்பாக இன்றைய கிராமங்களில் பழந்தமிழரின் உடை, உணவு, பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் எனப் பலவற்றிலும் அறியாது இருப்பதைக் காண முடிகின்றது. நற்றிணைத் தலைவன் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்லியல் என்று தலைவியின் பண்பைப் போற்றுகிறான். பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை போன்ற நூல்கள் விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்ட உணவுகள் குறித்து விளக்குகின்றன. சிறுபாணாற்றுப்படை நெய்தல், முல்லை, மருதநிலம் வழிசெல்லும்போது கிடைக்கப்பெறும் உணவுகளைக் குறித்து விளக்குகிறது. இப்படி விருந்தோம்பலின் அடிப்படையாக அமையும் உணவுகளைச் சமைத்து விருந்தினர்களை உபசரிக்கும் பண்பைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது, சாவா மருந்தெனினும் விருந்தினரைப் புறக்கணித்து உண்ணாத தமிழரின் ஆழ்ந்த உள்ளக்கிடக்கையை

           

           ‘முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து திருமலர் அன்ன

           புதுமலர் மரபின் மட்டே அன்றியும் அமிழ்தான மரபின்

           ஊன்சுவை அடிசில்’ - என்ற பாடல் வழி அறியலாம

           

வேலன் வெறியாடல

சங்க இலக்கியங்களில் குரவைக்கு மேலாக அதிகமாகப் பேசப்படுகின்ற கூத்து வெறியாடல் ஆகும். வெறியாடல் விளக்கப்படுவது போல சங்க இலக்கியங்களில் வேறு எந்த ஒரு கூத்தும் விளக்கப்படவில்லை;. இதற்குக் காரணம் பிறக் கூத்துக்களைவிட மக்கள் வாழ்வோடு மிக நெருங்கி அமைந்ததே ஆகும். தெய்வம் மக்கள் மீது ஆடுவதை வெறியாட்டு என்பர். வெறி எனும் பலப் பொருள் ஒரு சொல் இங்கு தெய்வத்தைக் குறிக்கும். முருகக்கடவுளை வழிபடுவதற்காக நிகழ்த்தப்படும் சடங்கு சார்ந்த ஆட்டக்கலை வேலன் வெறியாட்டு எனப்பட்டது. வெறியாடுதலைத் தமிழ் இலக்கியத்தில் வெறியாடுதல், வெறிசெறிதல், வெறியுறுதல், வெறிகொள்ளல் என்றெல்லாம் இந்த ஆட்டம் குறிக்கப்படுகிறது.

           

           ‘வேலன் வெறியர் களனும்

           வெறி செறிந்தனனே வேலன்

           வெறியுறுவனப்பு

           வெறி கொள்பாவையின் பொழிந்த’

           

ஒருவர் தாமாக ஆடாது வேறு சத்தி ஆட்டுவிக்க ஆடும் கூத்து வெறிக்கூத்தாகும். தலைவனும் தலைவியும் பெற்றோரும் மற்றோரும் அறியாமல் சந்திக்க களவொழுக்கம் நிகழ்த்தும் காலத்தில் இருவரும் சந்தித்துக் கொள்ளும் காலத்தைவிட சந்திக்க முடியாத காலமே மிகுதியாக அமையும். ஆகையால் தலைவி தலைவன் நிகழ்வால் சோர்ந்து இழைத்துக் காணப்படுவாள். அவன் நிலை கண்ட செவிலி நற்றாய் அந்நில வழக்கப்படி வேலனை அழைத்து கட்டுவிச்சி தாம் பார்த்துக் கட்டினாலும் கலங்கினாலும் தலைவியின் இந்நிலைக்குத் தெய்வமே காரணமென்று கண்டறிந்து கூறித் தெய்வத்திற்கு சிறப்பு செய்யும்படி கூறுவர். தலைவியின் உடல் மெலிவிற்குக் காரணம் அறிய வேலனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்தினர் என்பதை

           

           ‘கையறு நெஞ்சினால் வினவலின் முதுவாய்ப

           பொய்வல் பெண்டினர் பிறப்புணர்வு இரிஇ

           முருகன் ஆரணங்கு என்றலின் அது செத்து’ (அகம் 98) - எனக் கூறப்பட்டுள்ளது.

           

மேலும் ஐங்குறுநூற்றிலும் இது பற்றிய ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது

           

           ‘நம்முறு துயரம் நோக்கி அன்னை

           வேலற் றந்தாள் ஆயின் அவ்வேலன்

           வெறிகமட் நாடன் கேண்மை அறியுமோ’ (ஐங்குறுநூறு) - என்ற அடிகள் எடுத்தியம்புகின்றன.

           

தொண்டகப் பறை இசையை வழங்கியதாக இலக்கியம் சுட்டுகின்றது இக்கூத்தானது சமயச் சடங்காக காணப்படுகிறது. தவிர சமூக நடனமாக இது காணப்படவில்லை. சங்க காலத்தில் வெறியாடல் மேற்கொண்ட மகளிரை ஆடுமகள் என்று அழைப்பர். இவள் மீது தெய்வம் இரங்கல் பெற்றவளாக சித்திரிக்கப்படுவாள். பெண்களால் ஆடப்படும் வெற,பெண்களால் இவ்வகை ஆடல் நிகழ்த்தப்படுகிறது. இது பற்றிய ஒரு குறிப்பு குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.

           

           அறியாதுண்ட மஞ்ஞை ஆடுமகள

           வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்’ (குறுந்தொகை 105) - என்ற அடிகளின் வழி அறியலாம்

           

சமையல்கலை

சங்ககாலத்தில் அரிசியைச் சோறாக்கி சமைத்தும் கறி அல்லது குழம்பு வகைகளைச் சுவையூட்டும் உணவாக சமைத்து உண்டுள்ளனர். உணவு உடம்பை வலுப்படுத்தி நோய் வராது பாதுகாக்கும் பலவகையான மருந்துப் பொருட்களைச் சேர்த்து ஆக்கியும் உண்டுவந்துள்ளனர். அதைப் பற்றி விளக்கும் மடைநூல் இருந்துள்ளதை சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது. சமையல் கலை வல்லுநரை மதுரைக்காஞ்சி வாலுவன் என்று குறிப்பிடுகிறது.

           

           ‘ஆடுற்ற ஊன்சோறு

           நெறி அறிந்த கடிவாலுவன்’ (மதுரைக்காஞ்சி)

           

நம் நாட்டின் முக்கிய உணவு அரிசி. இவை தவிர செந்நெல், வெண்ணெல், மலைநெல், திணை, வரகு, தேன் போன்றவையும் முக்கிய உணவாகும். எறும்புகளின் புற்றுக்களில் உள்ள அரிசியைத் தோண்டி எடுத்துச் சமைத்துள்ளனர் என்பதை

           

           ‘இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்ந்த

           அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு

           

என்ற சிறுபாணாற்றுப்படை பாடல் சுட்டுகின்றது. சங்க காலத்திலேயே புழுங்கலரிசியும் பச்சரிசியும் இருந்துள்ளன. இன்று நாம் உண்ணும் பிரியாணி என்ற உணவானது அன்றே முல்லைநில மக்கள் வெள்ளாட்டு இறைச்சியுடன் அரிசியைச் சமைத்து உண்ட குறிப்புகள் பெரும்பாணாற்றுப்படையில் இடம்பெற்றுள்ளன.

           

           ‘கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை

           வல்லோனட்ட பல்லூன் கொழுங்குறை

           யரிசெத் துணங்கிய பெருஞ் செந்நெல்லின்

           றெரிகொளரிசித் திரணெடும் புழுக்க

           லருங்கடித் தீஞ்சு யழுதொடு பிறவும்’ (பெரும்பாண்.470)

           

சங்ககாலத்தில் மக்கள் பறவைகள், விலங்குகள் அவற்றின் இறைச்சிகளை மிக அதிகமாக உண்டனர். கட மான், ஆடு, மான், பன்றி, முயல், முள்ளம்பன்றி, உடும்பு, எலி, கோழி போன்றவற்றை விரும்பி சமைத்துள்ளனர் என்பதை மலைபடுகடாம் சிறப்பாக சுட்டுகிறது.

           

           ‘பரூஉக்குற பொழிந்த நெய்க்கண் வேவையொடு’ (மலைபடுகடாம் 168)

           

வேக வைத்த இறைச்சியைச் சுடு, சுட்டு என்ற பெயர்களால் வழங்கி உள்ளனர் என்பதைப் பட்டினப்பாலை பின்வருமாறு சுட்டுகிறது.

           

           ‘கடலிறவின் சூடு தின்றும்’ (பட்டினப்.63)

           ‘வயல் ஆமை புழுக்குண்டும்’ (பட்டினப்.63)

           

இறைச்சியைப பொரித்தும் சமைத்தும் உண்டனர் என்பதை,

           

           ‘புலவு நாற்றத்;த பைந்தடி

           குறிச் சோறுண்டு வருந்து தொழிலல்லது’ - என்ற வரிகளின் மூலம் அறியலாம்.

           

பாட்டிலும் தொகையிலும் காணப்பட்ட தமிழரின் கலைகள் இயன்றவரை இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பொருண்மை சார்ந்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ள இது வழிவகுக்கும்.

           

துணை நூற்பட்டியல

  • நற்றிணை, மூலமும் உரையும், உரையாசிரியர் குழு, என.; சி. பி. எச, சென்னை, 2004.
  • குறுந்தொகை தொகுதி-1 மூலமும்உரையும், உரையாசிரியர் குழு, என.சி.பி.எச, சென்னை, 2004.
  • கலித்தொகை மூலமும் உரையும,; உரையாசிரியர் குழு, என. சி. பி. எச, சென்னை, 2004.
  • பதிற்றுப்பத்து மூலமும் உரையும், உரையாசிரியர் குழு, என. சி. பி. எச, சென்னை, 2004.
  • அகநானூறு தொகுதி-1மூலமும் உரையும், உரையாசிரியர் குழு, என. சி. பி. எச,சென்னை, 2004.
  • புறநானூறு மூலமும் உரையும், உரையாசிரியர் குழு, என. சி. பி. எச, சென்னை, 2004.
  • ஐங்குறுநூறு மூலமும் உரையும், உரையாசிரியர் குழு, என. சி. பி. எச, சென்னை, 2004.
  • குறுந்தொகை மூலமும் உரையும், உரையாசிரியர் குழு, என. சி. பி. எச, சென்னை, 2004.
  • பத்துப்பாட்டு மூலமும் உரையும், உரையாசிரியர் குழு, என. சி. பி. எச, சென்னை, 2004