சங்க இலக்கியத்தில் நீர் மேலாண்மை

திருமதி. அ. முத்துஇளஞ்சியம், 25 April 2019 கட்டுரை Read Full PDF

திருமதி. அ. முத்துஇளஞ்சியம்,

முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,

நெறியாளர்: முனைவர்.பு.பாலாஜி

உதவிப் பேராசிரியர்

மாநிலக்கல்லூரி (தன்னாட்சி)

சென்னை - 600 005

 

ஆய்வு சுருக்கம்:

இயற்கை காரணிகளான நிலம், நீர், தீ, விசும்பு,காற்று என்ற ஐம்பூதங்களில் ‘நீர்’ இன்றியமையாதது. இது பல்லுயிர்களுக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுகிறது. நீர் வளத்தை மையப்படுத்தி நில உயிர்கள் அனைத்தும் வாழ்கின்றன என்பதை அறிந்த பழந்தமிழர் அதன் சிறப்பினை எடுத்துக் கூறும் விதமாக இலக்கியங்கள் இயற்றியுள்ளனர். எட்டுத்தொகை பத்துப்பாட்டு பாடல்கள் நீர் மேலாண்மையை எடுத்துக் காட்டுகின்றன. நீர், அதன் வடிவம், நீர் நிலைகள், நீர்சூழற்சி முறை, நீர் சேமிப்பு, நீர் தேக்கங்கள், நீரின் பயன்பாடு ஆகியனவற்றை பயன்பாட்டடிப்படையில் விளக்குகின்றன. ‘நீரின்றமையாதது உலகு’ – என உலகிற்கு எடுத்துக் காட்டியது, சங்க இலக்கியமே. உணவிற்கும், உடைக்கும், மருந்திற்கும், வேளாண்மை நீர் அவசியம் என்பதை உணர்ந்து நீரினை பாதுகாக்கும் முறைகள் சில எடுத்துக்கூறியுள்ளன. அவை இன்றைய காலத்திற்கும் தேவைப்படுகின்றன. அம்முறைகளை இன்று நாம் கடைப்பிடித்தால் எதிர்கால சந்ததியினருக்கும் பயன்படும் என்பதனை கருத்தில் கொண்டு சங்க இலக்கியத்தில் நீர்மேலாண்மை ஆய்வு கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

 

திறவுச் சொற்கள்
மதகு, கற்சிறை,கலிங்கல்,கூவல்,முந்நீர்

 

முன்னுரை
உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியல் காதலையும், வீரத்தையும் இரு கண்களாக கருதினர். இயற்கையின் அழகியல் நெறிக்கு உட்பட்டு தமது வாழ்க்கை, திட்பமாகவும், நுட்பமாகவும் அமைத்து நெறி பிறழாமல் வாழ்ந்தவர்கள் சங்ககால மக்கள். நிலத்தை பண்படுத்தி ஐந்து திணைகளாக பகுத்து அந்நிலத்திலுள்ள நீரின் வளத்தை மேம்படுத்திய திறத்தை அக, புற இலக்கியங்கள் மூலம் எடுத்து காட்டியுள்ளனர். இது பல்வேறு நாடுகளில் நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. மனிதன் இயற்கைக்கு கேடு நிகழா வண்ணம் பயன்பாட்டு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டால் தீங்கு நேர்வதில்லை. மாறாக பேராவல் கொண்டு சுரண்டும் போதுதான் இயற்கைக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. நீரின் வளம் குறைந்து நீருக்காகப் போர் செய்யும் காலம் வெகு தூரம் இல்லை என்பது மெய்மையான ஒன்று. இக்கால கட்டத்தை நாம் நெருங்கிக் கொண்டு இருக்கிறோம். எனவே இத்தகைய சூழலில் நம் முன்னோர்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு இலக்கியங்களின் வழி நீர் மேலாண்மையில் எத்தகைய திறனுடையிவர்களாக இருந்தனர் என்பதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

 

நீர் மேலாண்மை
சங்க இலக்கியப் பாடல்களில் நீர் சார்ந்த கருத்து புலன்கள் மிகுதியாக இருப்பதால் சங்க இலக்கியம் சமூகப் பயன்பாட்டு இலக்கியம் எனலாம். மழைநீர் தொடங்கி அனைத்து வகை நீர் நிலைகளையும் பயின்பாட்டு முறையில் எடுத்தியம்புவதால் காலங் கடந்த இலக்கியப் பெட்டகமாய் இருந்து வருகிறது. மழைப் பொழிவினால் பல் உயிர் பெருக்கம், வேளாண்முறை, நீர் சேமிப்பு, நீர்த்தூய்மை, நீர் பாதுகாப்பு, சுழற்சி, பயன்பாடு போன்றவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. இம்முறையானது தற்கால மேம்பாட்டிற்கு பயன்பெறும் வகையில் அமைந்துள்ளன. இதற்கு கீழ்க்கண்ட பாடல் எண்கள் சான்றாதாரமாகத் திகழ்கிறது.

           "நீரின் ....." புறம் 18 : 23,

           "பெயில்....." புறம் 355 : 1-2

           "வண்புகுதலை......" நற் : 347 : 4-5

           "மழை விளை........" குறு : 180 :1

           "மழை முற்றிய....."மதுரை : 84 -88

           "மழையே மலை......." மதுரை : 355

           "மடவ வாழி......." குறு : 251 : 1-3

           "பருவம் வாரா......" குறு : 66 - 3-5

           "கால மாரி மாலை....." குறு : 20 : 5-6

           "வானம் பொழு......." பதற் : 89 : 1-6

           "நீரின் டிமை......." பதிற் : 1:67

           "தற் பாடிய........" பட் : பா : 3-4

           "துளி நடை......." கலி : 46 : 20

           "மழை து......" மதுரை : 10-14

           "சாலிநெல்லிள்......" பொரு : 246 -7

           "உருகெழு........" பரி : 4-13.

நீர்
இவ்வுலகில் நீருக்கு நடுவே நிலம் இருந்தாலும் நன்னீரின் ஒரு துளி நீரே நமக்கு உயிர்நீர். இந்த உயிர் நீர் விஷநீராக மாறும் நிலை உருவாகலாம் அல்லது இல்லாமல் போகலாம். நிலக்கோளத்தின் பரப்பளவு 510.066.000 ச.கி.மீ. இதில் நீர் பரப்பளவு 148.429.00 ச.கி.மீ. இவற்றில் 97.5% நன்னீர், உவர்நீர் 2.5% மட்டும் பயின்பாடு உடையது. நன்னீர் மட்டும் அனைத்து உயிரினங்கள் வாழ ஆதாரமாக உள்ளது. இதனை வள்ளுவர் பெருந்தகை "நீரின்றி அமையாது உலகு"1 (குறள் : 20)எனக் கூறியுள்ளார். நீர் என்பது இரு மூலக்கூறுகள் கலந்த சேர்மம் என சொல்லப்படுகிறது. "ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்த கனிம சேர்மம் (H20) இந்நீர் திரவவளி (நீராவி)" மற்றும் திடப்பொருள் (பனிக்கட்டி) ஆகிய நிலைகளிலும் கிடைக்கிறது. அரை வெப்பநிலை உள்ளது நிறமற்றது. மணமற்றது, சுவையற்றது2 என்பது அறிவியிலாளர்கள் கருத்து.

 

நீர் வடிவம்
நீர் திரவ வடிவம், திடவடிவம் என இரு வடிவங்களைக் கொண்டுள்ளது. திரவவடிவமாக மழைநீர். நீராவியையும்; திடவடிவமாக, உறைபனி, உப்புக்கல் போன்றவற்றையும் குறிப்பிடுகிறோம். கண்ணுக்கு புலப்படாத காற்றின் ஈரபதம் கூட நீரின் மற்றொரு வடிவம் என்கின்றனர். மழைநீரானது கடல், ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் நீர் வடிவதில் பெய்து மீண்டும் நீர் வடிவம் கொண்டு நீராவியாக வானுக்குச் சென்று அடைகிறது. பனிக்கட்டி திட வடிவம் கொண்டிருந்தாலும் உலகம் வெப்பமயமாதலினால் நீராய் உருகும் நிலை ஏற்பட்டு உலக உயிர்களுக்கும் அச்சத்தை உண்டாக்கும் பிலை வருமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

மழைநீர்
தட்பவெப்பத்தின் சீரான நிலையினால் மழைநீர் பொழிகிறது. நிலத்தின் உயிர்கள் அனைத்தும் நன்மையடைகின்றன. பறவைகளின் பயணப்போக்கும் விலங்குகளின் இனப் பெருக்கமுறையும், தாவரங்களின் வளர்ச்சியும், மனிதனின் வளமான வாழ்வும், இதனையொட்டி அமைகின்றன. மழையைப் போற்றும் விதமாக சிலப்பதிகாரத்தின் இளங்கோவடிகள் ‘மா மழை போற்றுதும் மாமழை போற்றுதும், நாமநீர் வேலியுலகிற்கு அவனளி போல்’3 எனப் பாடியுள்ளார்.

 

பதிற்றுப்பத்து பாடலில் மழையினால் பல்வகை உயிரினங்களும் மகிழ்வு எய்துகின்றன என்ற செய்தியை எடுத்துக்காட்டியுள்ளது.

           வானம் பொழுதொரு சுரப்பக் கானம்

           தோடுறு மடமானேறு புணர்ந்தியலப்

           புள்ளு நிமிறு மாச்சிணை யார்ப்பப்

           பழனங் கிழங்கு மிசையிற வறியாது

           பல்லான் என்பிரை புல்லருந் துகளப்

           பயங்கடை யறியா வளம் (பதி:89, 1-6)

 

பண்டைய காலத்துப் பருவநிலைக் காலங்களில் காலம் தவறாது மழை பொழிந்து மக்களுக்கும், மாக்களுக்கும் நன்மை நல்கிய செயலை காலமாரி என்றும் காலம்தப்பி கேடு விளைவித்த செயலை வம்ப மாரி என்றும் அழைக்கப்பட்டன என்பதை

 

           மடவாழி மஞ்சை மாயினம்

           கால மாரி பெய்தென ஆதெனதின்

           ஆலறு மாலின பிடவும் பூத்தன (குறு: 251: 1-3)

           பருவம் வாரா அளவை நெரிதரக்

           கொம்பு சேர் கொடியிணர் ஊழ்த்த

           வம்ப மாரியை காரென மதித்தேதி (குறு: 66: 3-5)

 

என்ற பாடல் வரிகளில் காணப்படுகிறது. அதேபோன்று திருவள்ளுவர் ,மழை இல்லை எனில் கடலால் சூழப்பட்ட நில உலகம் பசியால் வாடும் என்கிறார்.

 

           விண்இன்றி பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

           உள்நின் றுடற்றும் பசி4 (குறள்: 13)

 

நீரியல் சிந்தனை
சங்ககால பெருமக்களுக்கு ‘நீரியல் சிந்தனையறிவு’ மிகுதியாக இருந்துள்ளது. ஆற்றுநீர், ஊற்றுநீர் மழைநீர் என்ற மூந்நீர் கொள்கை பற்றிப் பேசப்பட்டுள்ளன. நீர் நிலைகள் (ஆறு, குளம், ஏரி, குட்டை), மழைநீர், நீர் சுழற்சி, நீர் தேக்கம் நீர், சேமிப்பு, நீர் தூய்மை, நீர் பயன்பாடு போன்றவற்றை நீர் மேலாண்மை பற்றி பாடல்கள் வழி அறியப்படுகின்றன.

 

நீர் நிலைகள் நீர், நீர் வாழ் உயிரினங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றை நன்கு அறிந்து தம் பாடல்கள் மூலம் காட்சிப் படுத்தியுள்ளனர். நன்னீர் வாழிடம், உவர் நீர் வாழிடம் என இரு கூறாகப் பிரித்து மருதம், முல்லை, குறிஞ்சி ஆகியவை நன்னீர் வாழிடம், நெய்தல் உவர் நீர், வாழிடம் என நிலப் பின்னணியில் நீர் அமைப்பு ஏற்படுத்தினர். உயிர்கள் வாழும் புவி மண்டலத்தில் நிலத்தடி நீரை நன்னீர், உவர்நீர், உறைநீர் (பனி), மழைநீர், நீராவி, எனப் பல்வேறு இருந்தாலும் அனைத்தும் பயன்பாட்டிற்கு ஏற்றத்தல்ல கதிரவன் ஒளியில் கடல்நீர் ஆவியாக மீண்டும் மழையாகப் பொழியும் நீர் பற்றி பட்டினப்பாலையில் உருத்திரங்கண்ணனார் கீழ்வரும் பாடலை இயற்றியுள்ளார்.

 

           வான் முகந்த நீர் மலைப் பொழியவும்

           மழைபொழிந்த நீர் கடல் பரப்பவும்

           மாரி பெய்யும் பருவம் போல

           நீரின்று நிலத்து ஏற்றவும்

           நிலத்தினின்று நீர் பரப்பவும்

           அளந்த றியா பல பண்டம் (பட். 126-131)

 

ஆண்டு தோறும் நிலப்பரப்பிலிருந்து ஏறத்தாழ 500.000 லிட்டர் நீர் ஆவியாகின்றது. இவற்றில் 86% கடல்நீரும், 14% நிலத்தடி நீரிலிருந்தும் செல்கின்றன. அருவி, ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய், நன்னீர் நிலையாகவும் கடல் பகுதி உவர்நீர் நிலையாகவும் சுட்டப்படுகிறது. "நறுநீர் பொய்கை அடைகரை" (சிறுபா:8) ‘மலைவரை மாலை அழிபெயல்’ (நற்: 10:1-10) போன்ற பாடல்கள் பாலை சங்க கால நீர்நிலைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

 

நீர் சுழற்சி
சுழல் என்பது ஒன்றோடு ஒன்று மாறுவது அல்லது சார்ந்திருப்பது. எடுத்துகாட்டாக. கடல்நீர் ஆவியாகி மேகம் என்ற பெயர் கொண்டு மழைநீராக நிலத்தில் பொழிகிறது. அந்நீர் மலையில் பெய்யும் போது அருவி நீராகவும், தரைக்கு வரும் போது ஆறு, ஏரி. குளம், குட்டை, என்ற பெயர்தாங்கி நிற்கின்றது. இந்த நீரை ஆவியாக மீண்டும் மேகத்திற்கு (வான்) அனுப்புகின்றது. இத்தகைய நிலைகளை சங்க இலக்கியங்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

 

           குணகடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி

           மண்திணி ஞாலம் காலம் விளங்க (நற். 453: 14-4)

           பாடிமிழ் பனிகடல் பருகி வான்ஏர்பு

           கோடு கொண்டு எழுந்த கொடுங்செலவு எழிலி (முல். 4-5)

           திரை இரும் பனிபௌவம் செவ்விதா அறமுந்து

           உரஉரும் உடன்று ஆர்ப்ப (பரி. 6:1-5)

 

நீர்த்தேக்கம்
மழைநீர் அல்லது ஆற்றுநீரை தேக்கி ஏரி, குளம், குட்டை போன்ற இடங்களிலும் நீரைத் தேக்கி மடு, மதகு, அணை போன்ற இடங்களிலும் நீர் சேமிக்கும் முறை சங்க காலம் தொட்டுஇன்றுவரைஇருந்து வருகின்றன.

 

கற்சிறை, கலிங்கல், மோடு, கரை, கால்வாய், மதகு, தூம்பு, குளம், பொய்கை, தடாகம், ஏரி போன்ற சொற்கள் இலக்கியப் பயன்பாட்டில் இருந்துள்ளன. ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்" (கலி. 56:1) ‘வறுமை கூரிய மண்நீர் சிறு குளம்’ - (அகம் : 121 : 5 ‘இது பல்கேணிப் பிடிஅடி நசைஇ’ (137: 2, ‘நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய’ (அகம். 55:8) போன்ற பாடல்வரிகள் நீர் தேக்கம் பற்றிய குறிப்புகளை உணர்த்துகிறது.

 

நீர் தேக்கத்தை போன்று நீர் சேமிப்பு முறை பற்றியும் இலக்கியக்குறிப்புகளில் உள்ளன. இக்குறிப்புகள் தற்கால நீர் தட்டுபாட்டிற்கு பயன்படும் ஊர்உண் கேணி உண்தொக்க’ (அகம். 399:1) வையை உடைந்த மடை அடைத்த கண்ணும்’ (பரி. 6:82), ‘நிலவு பயன்கொள்ளும் நெடுவெண் முற்றத்து’ (நெடு. 95:97) போன்ற பாடல் வரிகளில் நீர் நிலை சேமிப்புப்பற்றி குறிப்பிடுகிறது.

 

நீரின் பயன்பாடு
நாவலம் தண்பொழில் என்று சொல்லக்கூடிய தமிழகம் நீர் வளம் மிக்கது. நீரின் அடிப்படை ஆதாரங்கள் இன்றியமையாத ஒன்று, அதனால் தொல்காப்பியர் நிலம், நீர், விசும்பு. தீ, வளி கலந்தது. இந்த உலகம் என்கிறார். முந்நீர் உடைய நாடு (புறம். 60) என்றும் கூறப்படுகிறது. உழவுத் தொழிலில் பாசன முறை, நீரின்றி நடைபெறாது என்பதை வள்ளுவர் விசும்பின் துளி இல்லை யென்றால் நிலத்தில் பசும் புல் கூட தலைகாணாது என இயம்பியுள்ளார். (குறள். 16) உணவு, உடை, உறையுள் என அனைத்திற்கும் நீரின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் பாடப்பட்டுள்ளது.

 

           நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்

           உண்டி கொடுத்தோரே யிர் கொடுத்தோர்

           உண்டி முதற்றே உணவின் பிண்டம்

           உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

           நீரும் நிலனும் புணிரியோரின்

           உடம்பும் உயிரும் படைதினோரே (புறம். 18:18-23)

 

என்ற பாடலில் நீர் பயன்பாட்டில் உழவுத்தொழில் அடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

 

           பொன் செய் கணிச்சித் திணி உடைத்து

           சிரறுசில ஊறிய நீர்வாய் பத்தல் (பதிற். 22:12-14)

           புன்புலம் வித்தும் வன்கை வினைஞர்

           சீருடைப் பல்பகடு ஒலிப்பப் பூட்டி

           நாஞ்சில் பூடிய கொழுவழி (பதிற். 58:15-18)

 

போன்ற பாடல்கள் நீர்ப்பாசன முறையை எடுத்தியம்புகின்றன.

 

முடிவுரை
நீரினால் அழிவு சக்தியை விட ஆக்கல் சக்தியே அதிகம். நீர் உணவாகவும், உட்கொள்ளும் மருந்தாகவும், பல் உயிரினம் செழிக்கவும், வேளாண்மை உற்பத்திக்கும் தொழிற் சார்புக்கொள்கைக்கும் காலத்திற்காலம் நீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வழிபாட்டு முறைகளில் கல்லையும், மண்ணையும் வழிபட்டவன் நீரையும் விட்டு வைக்கவில்லை. ‘ஆலயம் இல்லா ஊர் பாழ்’ எனச் சொல்லுவர் ஆலயங்களில் மூர்த்தி விருட்சம் நீரையும் (தீர்த்தம்) சேர்த்து அருவி, ஆறு, குளம், கடல் போன்ற இடங்களில் தீர்த்தம் ஆடி வருகின்றனர். நீரைப் புனித நீர் என்ற பெயரில் அனைத்து சமயத்திலும் பயன்படுதப்படுகிறது. துளசி, வேம்பு, செம்பு கலந்த நீர் புனிதம் என்கின்றனர். நீரின் பயன்பாட்டு முறைக்கு முன்னோடியாகத் திகழ்வது சங்க கால வாழ்க்கை முறை எனக் கூறலாம். ஏனென்றால் தொன்மை கால மக்கள் தத்தம் வாழ்விடத்தின் நிலம், நீர், காற்று, மண், மரம், செடி, கொடி ஆகியவற்றை ஆராய்ந்து இவை உணவுக்கும், உடைக்கும், உணர்வுக்கும், உடலுக்கும், உயிருக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் என ஆராய்ந்து அதன் வண்ணம் வாழ்ந்துள்ளனர். இச்சங்க கால இலக்கியங்களை உற்று நோக்கும் போது ‘நீர் மேலாண்மையில்’ சிறப்புடன் வழ்ந்தனர் என்பது நன்கு புலனாகிறது.

 

அடிக்குறிப்பு

  • திருக்குறள் தெளிவுரை, மு.வ. குறள். 20
  • பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம், ப. 681.
  • சிலப்பதிகாரம்,
  • திருக்குறள் தெளிவுரை, மு.வ. குறள். 13.
  • விக்கிபீடியா. www.valaitamil.com/tami-language,