ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஒப்பீட்டு நோக்கில் அகத்திணை மரபும் காமத்துப்பாலும்

முனைவர் ப. விமலா அண்ணாதுரை 06 Oct 2019 Read Full PDF

முனைவர் ப. விமலா அண்ணாதுரை,

தமிழ்த்துறைத்தலைவர்,

செல்லம்மாள் மகளிர் கல்லூரி,

கிண்டி, சென்னை – 32,

 

ஆய்வுச்சுருக்கம்:

சங்ககால தமிழ்கவிஞர்களால் எழுதப்பட்ட கவிதைகள் பின்னாளில் அவற்றின் உள்ளடக்கத்தை கருத்திற்கொண்டு அகநூல்களாகவும் புறநூல்களாகவும் தொகுக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் அகம்சார்பான கவிதைகளே மிகப்பெரும்பான்மையின. இத்தகைய அகத்துறை கவிதைகளை மொத்தமாக நோக்கும் போது, அவை வேறு வேறு கவிஞர்களால் எழுதப்பட்டிருந்தாலும், அவற்றிடையே பாடல் அமைப்பு ,உணர்த்து முறை ஆகிய பல விடயங்களிலும் நிரம்பிய ஒற்றுமைஇருப்பதை காணமுடிகிறது. இதன் மூலம் பாடல்கள் தோன்றிய காலப்பகுதியில் கவிஞர்கள் குறிப்பிட்ட ஓர் இலக்கிய மரபைப்பின்பற்றியே கவிதைகளை ஆக்கியுள்ளமை தெளிவாகிறது. இம்மரபேசங்க அகத்திணை மரபு என்று அறிஞர்களால் கூறப்பெறுகின்றது. இவ்வகையில் அகத்திணைமரபும், காமத்துப்பாலும் தலைப்பின்கீழ் இக்கட்டுரை ஆராயப்பட உள்ளது.

           

திறவுச் சொற்கள்:

அகத்திணை, காமத்துப்பால், பரத்தையர், தலைவன், தலைவி, தோழி

           

சங்க அகத்துறைக்கவிதைகள் வாயிலாகப் பெறப்பெற்ற விடயங்கள் தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் நான்கு இயல்களில் நிரல்படுத்தப்பட்டுள்ளன சங்ககாலத்தை ஒட்டிய அடுத்தகாலப்பகுதியில் (காலநிர்ணயம் தொடர்பான கருத்து முரண்பாடுகள் இன்றளவும் காணப்படுகின்றன.)தோற்றம் பெற்ற திருக்குறள்நூலில் அகத்துறை தொடர்பான தனித்தபிரிவு காமத்துப்பால் என்னும் பெயரில் உள்ள 25 அதிகாரங்களாகும்.

           

பெரியகால இடைவெளி இன்றி அடுத்தடுத்து தோன்றியுள்ள சங்க அகத்துறை கவிதைகளுக்கும் திருக்குறள்-காமத்துப்பால் கவிதைகளுக்கும் இடையே சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் காணப்படுகின்றன. இவற்றைச்சற்று விரிவாகக்காண்பதே இந்தஆய்வின் நோக்கமாகும் (ஆய்வுவிரிவிற்கு அஞ்சி, சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறாமை, பரத்தையர் பிரிவு, உள்ளுறை உவமம். நாடக வழக்கும் கூற்றும் ஆகியநான்கு அடிப்படையில் மட்டும் இங்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.)

           

அகத்திணை -விளக்கம்

‘ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப்பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்கு புலனாக இவ்வாறு இருந்த தெனகூறப்பட்டதாய், யாண்டும் உள்ளத்துணர்வேநுகர்ந்து இன்பம் உருவ தோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்’என்பது நச்சினார்க்கினியரின் வரைவிலக்கணம் ஆகும்.

அகம் என்பது மக்களின் உள்ளம் தொடர்பானகாதல் உணர்ச்சியாகும். திணை என்பது ஒழுக்கம் ஆகும் . எனவே காதல் உணர்ச்சிசார்ந்த ஒழுக்கத்தையே அகத்திணை எனப்பெரியோர் வழங்கியுள்ளதாகக் கொள்ளலாம்.

இக்காதல் ஒழுக்கத்தை ஏழுதிணைகளாக வகைப்படுத்தி நோக்குவது சங்க அகத்திணை மரபாகும்.

           

            ”கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

           முற்படக் கிளந்த எழுதிணைஎன்ப’ (தொல் 947)

என்னும் தொல்காப்பிய சூத்திரம் இதனை உறுதி செய்யும். இவ்வேழு திணைகளையும் கைக்கிளை, குறிஞ்சி, முல்லை ,பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை எனவரிசைப்படுத்தலாம், இவை ஏழும்சங்க அகத்துறைப்பாடல்களில் பயின்றுவந்துள்ளன எனினும், இடையே கூறப்பெற்றுள்ள குறிஞ்சிமுதலான ஐந்துதிணைகளையுமே சங்கக்கவிதைகள் பெரிதும் போற்றி உள்ளன. அவற்றோடு ஒப்பிடுகின்ற விடத்துகைக்கிளை ,பெருந்திணை ஆகியனமுக்கியத்துவமுடையன அல்ல .இதனையே,

           ”கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

           முற்படக் கிளந்த எழுதிணை என்ப.. ” (தொல் 947)

           மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்—(தொல் 1000)

எனும் தொல்காப்பிய சூத்திரங்கள்தெரிவிக்கின்றன. ஐந்திணைகளை பலப்பட விளக்கிய தொல்காப்பியம் கைக்கிளை, பெருந்திணைகளை இறுதியில்இருதனிச்சூத்திரங்களில்மட்டும்பாடியிருக்கின்றமைகவனிப்புக்குரியது. சங்க அகத்திணைப்பாடல்களுள் முக்கியத்துவம் இல்லாதவையும் உயர்த்திப் பேசப்படாதவனவாயும் விளங்கிய கைக்கிளையும், பெரும்திணையையும் திருவள்ளுவர் தமது நூலில் குறிப்பிடவில்லை. ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்பதை பெரிதும் வலியுறுத்தும் திருவள்ளுவர் ஒரு தலை காமத்தையும், பொருந்தாகாமத்தையும் தமது நூலில் குறிப்பிடாமல் தவிர்த்திருப்பார் என்பதைபுரிந்து கொள்வதில் சிரமம் இல்லை.

இவ்வாறு அகத்திணை மரபு கூறும் முதல், கரு. உரிப்பொருள்களாகிய மூன்றனுள்ளும் உரிப்பொருளையே திருக்குறள் பெரிதும் எடுத்தோதுகிறது. நெய்தல் நிலத்தலை மகனாகியதுறைவன் குறித்தும் (குறள்கள் 1157. 1277), சிறுபொழுதுகளுள் ஒன்றாகியமாலை குறித்தும் சிலகுறள்களை வள்ளுவர்படைத்துள்ள பொழுதும் இவ்வாறு நிலம்குறித்தோ பொழுது குறித்தோ தனித்த அடையாளம் சுட்டிப்பாடுவது வள்ளுவரது வழக்கு இல்லை. பொது மறையாகிய நூலைத்தந்த வள்ளுவர் முதல், கருப்பொருட்களாக விவரிப்பதன் ஊடாக உரிப் பொருளை விளக்கவிரும்ப வில்லை யென்பதையே இதுகாட்டுகிறது.

           

சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாமை:

அகத்திணை மரபில் காதல் தலைவன் அல்லது தலைவியுடைய பெயரை சுட்டிக்கூறாமல் கவிதைபாடுவது பிரதானமான ஒன்றாகும்.

            மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்

           சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப்பெறாஅர். (தொல் 1000)

என்பது தொல்காப்பியம். பெயர் சுட்டிக் கூறப் பெற்ற காதல் பாடல்கள் அவற்றின் உரிப்பொருளைக் கருத்திற் கொள்ளாமல். பெயர் சூட்டிய பண்பொன்றையே கருத்திற்கொண்டு, புறத்திணையுள் அடக்கப் பெற்றுள்ளன. பெயர்சுட்டிக்கூறின் அதனால் பல்விதமான பாதக அம்சங்கள் தோன்றி இலக்கியத்தை ஊறுபடுத்திவிடும் என்று அக்கால அறிஞர்கள் கருதியிருந்துள்ளமையாலேயே மேற்படி விதி கடுமையாகப் பின்பற்றப்பட்டது எனலாம்.பெயர் சுட்டி காதற்பாடல்களை ஆக்குவதனால் ஏற்படக்கூடிய பிரச்னைகளை விமர்சகர் பலவாறாகக் கூறுவர். அவற்றுள் பின்வருவன மிகமுக்கியமானவை.

           

ஒருவரின் பெயர்சுட்ட அனுமதித்தால் பெரும்பான்மையும் கவிஞர்கள் தமது புலவர்களையோ மன்னர்களையோ தாம் நாயகர்களாக்கிப் பாடுவர். இதனால் கவிஞர்களுடைய முக்கிய நோக்கமாகிய படைப்பாக்கம் இரண்டாம்பட்சமாகிவிடும்.

காதலரின் மறைமுகச்சந்திப்பை கவிதையாக்கும் அகத்துறையில், இன்னஊர், இன்னாரின்பெண். என்னபெயருடையாள். இன்னபெயருடைய இளைஞனைசந்தித்து காதல்மொழி பேசினாள் என்று உரைப்பது பெருந்தீங்காக முடியும்.

கவிதை கற்பனை என்றமலை முடியுனின்று, வரலாறு என்றபள்ளத்தாக்கில் வீழ்ந்து விடும்.1

           

இவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாக இருப்பினும் இவற்றுக்கு மேலாக கொள்ளப்படக்கூடிய ஒருகாரணமும் உண்டு. அது அனைவருக்குமுரிய காதலைப் பெயர்சுட்டுவதன் மூலம், தனிமைப்படுத்திவிடாமல் வாசித்து அனுபவிக்கும் ஒவ்வொருவருக்கும் அதுதன்னுடைய அனுபவம் என்பதான சிந்தனையை ஏற்படுத்திவிட வேண்டும் என்பதே.

உண்மையில் இந்த நோக்கம் உயர்வானது தான் என்ற போதும் சங்க அகத்திணைப்பாடல்கள் அத்துணையும்வாசிப் போர்க்கு மேற்படி உணர்ச்சியை ஏற்படுத்தவல்லன அல்ல என்பதைப்புரிந்து கொள்ள முடியும். இத்தகைய தொருநிலை ஏற்பட்டதற்கு பின்வரும் இருவிஷயங்களை முக்கிய காரணங்களாகக் காணலாம்.

  • காதல் தலைவனுடைய பெயர் சுட்டப்பெறாத போதும், அப்பாடல்களில் புலவர்க்கு நெருக்கமான மன்னர்களுடைய பெயர்சுட்டப்பெற்று, அம்மன்னர் புகழ் அதிகம் போற்றப்பட்டதனால் காதல் உணர்ச்சி எனும் அடிப்படை நோக்கம் திசைமாறிச்செல்ல தொடங்கியமை
  • உரிப்பொருளுக்கு மாத்திரம் முதன்மை வழங்காமல் பல அகக்கவிதைகள் முதல் பொருள் மற்றும் கருப்பொருள்களுக்கும் மிகுந்த இடமளித்ததனால் அந்தந்த நிலஞ்சார்ந்தவாசகர்களுக்கு மட்டுமே அக்கவிதைகள் பெரிதும் நெருக்கமாக இருந்தது. அதேவேளை மற்றவர்க்கு அந்நியத்தன்மையை தோற்றுவித்தமை.

உவமை முதலியவற்றால் மன்னர் முதலிய புரவலர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்தால் எவ்வாறு அகவுணர்ச்சி அகத்திணைப்பாடல்களில் பின் தள்ளப்பட்டது என்பதற்கு ஓர் எளிய உதாரணமாக பின்வரும் அகநானூற்றுப்பாடலைக் குறிப்பிடுதல் முடியும். தலைவன், “நறும்பல் கூந்தல் குறுந்தொடி மடந்தை யொடுவதுவை அயர்ந்தால்’’ ஊரில் எழுந்த அலர்குறித்துப் பாடப்புகுந்த கவிஞர் , “அவ்வலரானது பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனது போர்வீரர்கள் செய்தவெற்றி ஆரவாரத்திலும் பெரிது’’ எனக்கூறிப் பின்வருமாறு அப்புறப்போர் வெற்றியைச் சொல்லத் தலைப்படுகிறார்.

           

            கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்,

           ஆலிங்கனத்த கன்றலே சிவப்பச்

           சேரல் செம்பியன், சினங் கெழுதிதியன்,

           போர் வல்யானைப் பொலம் பூண் எழினி,

           தாரகி நறவின் எருமையூரன்,

           தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்

            இருங்கே வேண்மான், இயல் தேர்ப்பொருநன் என்று

           எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல்

           முரசொடு வெண்கொடை அகப்படுத்துரை செலக்

           கொன்று களம் வேட்ட ஞான்றை

           வென்றி கொள்வீரர் ஆர்ப்பினும் பெரிதே அகநானூறு 38

           

(மதுரை நக்கீரர்)

இத ஒரு புறப்பாட்டோ என எண்ணத்தூண்டும் அளவுக்குப் பாண்டியன் யார்யாரைஎல்லாம் வென்றான் என்பது குறித்து விரித்து சொல்லுகிற கவிஞர் போக்கு கூறப்புகுந்த காதல்விஷயத்தை விடஅ திகமாகி. உரிப்பொருளை வாசகர் இனிதாக உணர்வதற்கு இடையூறு செய்வதைக் காணமுடிகிறது. இவ்வாறு எல்லா மக்களுக்கும் பொதுவாய் அமையத்தக்க காதலற் கவிதை பாண்டிய மன்னனது புகழ்ச்சிப் பாடலாகி யிருப்பதன் மூலம் பாண்டியரல்லாத பிறர்க்கு அந்நியவுணர்வைத் தோற்றுவிப்பதாய் விளங்கிநிற்கிறது.

ஆனால் திருக்குறள்-காமத்துப்பாலோ இத்தகைய வேறுபாட்டுணர்ச்சியை கூட வாசகர்களுக்கு வழங்காமல் அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஏற்புடைமைத் தன்மையை கொண்டதாக விளங்குகிறது. காதல்க விதைகளில் உவமையணி முதலியவற்றை அமைக்க வேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்த இடங்களிலெல்லாம், தனித்துச்சிறு குழுமத்துக்கு மட்டும் பொருந்தக்கூடிய உவமைகளைத்தராமல், அனைத்து மக்களுக்கும் பொருந்தக்கூடிய உவமைகளையே பெரிதும் பயன்படுத்தியிருப்பதன் மூலம் தமது காதல் குறட்பாக்களுக்கு ஒரு எல்லையை வகுக்காமல் திருவள்ளுவர் பொதுத்தன்மையோடு இருந்துள்ளமை புலனாகிறது. அதுவும் மனிதகுலத்திற்கு அவசியம் என்று கருதுகின்ற அறச்செயல்பாடுகளே காதல் நடவடிக்கைகளுக்கும் வள்ளுவரிடம் உவமைகளாகப் பெரிதும் வெளிவந்துள்ளன.

            தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால்

           அம்மா அரிவை முயக்கு (குறள் 1107)

           (உரை:அழகிய மாநிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம்ஈட்டிய பொருளைப்பகுந்து கொடுத்து உண்டாற்போன்றது.).

           அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

           செறிதோறும் சேயிழைமாட்டு.(குறள் 1110)

           (உரை ;செந்நிற அணிகலன்களை அணிந்தஇவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல், நூற்பொருள்களை அறிய அறிய அறியாமைகண்டாற்போன்றது).

           உடம்பொடு உயிரிடை என்னமற்றன்ன

           மடந்தை யொடு எம்மிடை நட்பு. (குறள் 1122)

           (உரை ;இம்மடந்தை யோடு எம்மிடையே உள்ளநட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.)

           

இவ்வாறு சுட்டி யொருவர் பெயர் கொளப்பெறாத சங்க அகத்திணைப் பாடல்களில் மன்னர் தம் புகழ்ச்சி முதலியவற்றால் வெளித்தெரிவது போன்றதனித்த அடையாளங்கள் கூட திருக்குறள் காமத்துப்பாலில் காணக்கிடைக்காது என்பதும், இதனால், காமத்துப்பாலானது சங்க அகப்பாடல்களைவிடவும் இன்னும் பொதுமையானதாய் விளங்குகிறது என்பதும் புலனாகின்றன.

           

பரத்தையர்பிரிவு;

சங்க அகத்திணைமரபில், தலைவன் தலைவியைப்பிரிந்து செல்வதற்கான காரணங்களுள் ஒன்றாகப்பரத்தையும் குறிக்கப் பெற்றுள்ளாள். இதனை‘ஊடலும் ஊடல் நிமித்தமும்’குறித்த மருதத்திணைப்பாடல்கள் பெரிதும் பேசுகின்றன. தொல்காப்பியமும் அகத்திணை இயலில்தலைவனுக்குரிய பிரிவுகளாக ஓதல், பகை, தூது ,பொருள் ஆகியவற்றைச் சுட்டிய தோடு அமையாமல் பொருளியலில் பரத்தையர்பிரிவையும் சுட்டியுள்ளது. இவற்றினடிப்படையில் பரத்தை தொடர்பாகத் தலைவன் பிரிந்து சென்றிருப்பதையும் மீளத்தலைவியை நாடும் தலைவனோடு பரத்தை தொடர்பாகத்தலைவி ஊடியிருப்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. இவ்விடத்தில்எழக்கூடியமுக்கியவினாஇப்பரத்தையர்பிரிவுஉண்மையில்சங்ககாலமக்கள்வாழ்வியலில்இடம்பெற்றிருந்ததுதானா? என்பதாகும். சிலர்இதனைஉடன்படுவர். வேறுசிலரோ, கவிஞர்கள் புலனெறி வழக்கில் தலைவியரின் ஊடற்காரணங்களுள் ஒன்றாக பரத்தையர் பிரிவைக்குறித்தனரேயன்றி உண்மையில் இத்தகு பிரிவுமக்கள் வாழ்வியலில் காணப்படவில்லை என்பர்.2

ஆனால் மருதத்திணைப் பாடல்களைக் கூர்ந்து நோக்கினால் பரத்தையர் பிரிவு சங்ககால மக்கள் வாழ்வியலிலும் இருந்தமையை உணர்ந்து கொள்ளமுடியும் இதனையே.

           “இங்ஙனம் பலவகையாலும் உயர்நெறியாகிய அன்புடைவாழ்க்கை பூவிற்குப் புள்ளிகள் வைத்தார் போலவும். மதிக்குமறு வாய்த்தாற்போலவும் பரத்தையர் பிரிவென்னும் இழிந்த ஒழுக்கத்தினால் சிறிதுகலக்கம் அடைகின்றது… இப்பரத்தையிற்பிரிவு உலகியலையே கருதி அமைந்தது போலும். தலைவியின் ஊடலுக்குக் காரணம் வேண்டும் என்பதற்காக இப்பரத்தையிற் பிரிவு அமைந்ததென்பது அத்துணைச்சிறந்த காரணமாகத் தோற்றவில்லை’”3

எனும் உ.வேசாமிநாதையரின் வரிகளும் மெய்ப்பிக்கின்றன.

ஆனால் அறத்தை முதன்மைப்படுத்தியே இன்பத்தையும் கூறப்புகுந்த திருவள்ளுவரோ பரத்தையிற் பிரிவை ஏற்றுக் கொள்ளவில்லை. உடல் குறித்து சில அதிகாரங்களைக் காமத்துப்பாலில் எழுதியுள்ள போதும் அவற்றுள் பரத்தையின் தொடர்பு பற்றித் தலைவி ஊடுவதாக வள்ளுவர் காட்டவில்லை. எனினும் சங்க அகத்திணை மரபுக்குள் திருவள்ளுவருடைய காமத்துப்பால் முழுமையையும் காணவிரும்பிய உரையாசிரியர்கள் வலிந்து சில குறட்பாக்களை பரத்தையிற் பிரிவு தொடர்பாக சுட்டியிருப்பது பொருத்தமானதாகப் படவில்லை. உதாரணமாக,

            ”நாண் எனஒன்றோ அறியலம் காமத்தால்

           பெணியார் பெட்ட செயின்.”(குறள் 1257)

           

           (உரை ;நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்துவிடுகிறதே).

எனும் நிறையழிதல் அதிகாரக்குறளுக்குத் துறைவகுத்துள்ள பரிமேலழகர் “பரத்தையிற் பிரிந்து வந்ததலைமகனோடு நிறை அறிவால் கூடிய தலைமகள் நீபுலமைக்கு காரணம் யாது? என்ற தோழிக்குச் சொல்லியது” எனக் குறிப்பிட்டுள்ளமை குறளின் நேரடிக் கருத்திற்கு எவ்விதத்திலும் பொருத்தமானதாகப் படவில்லை. இங்கு தலைவன் பிரிந்து வந்தமை கூறப்பட்டுள்ளதேத விர. அப்பிரிவு பரத்தை தொடர்பானது தானா? என்பது கவிஞரால் கூறப்படவில்லை அப்பிரிவு எது பற்றியதாயும் இருக்கலாம். இங்கு பிரிவுக்கான காரணம் முக்கியமானதல்ல. அதன்பின்பான உணர்ச்சியே முக்கியமானதாகும்.

இவ்வாறு அவசியமற்றிருக்கிற இடத்திற்கூட தலைவனுக்கான பிரிவைபரத்தை தொடர்பாகக்காணுகின்ற உரையாசிரியர் போக்கானது. நூலாசிரியரின் ஆழ்ந்திருக்கும் கவியுளத்தைக் கவனியாது சங்க அகத்திணை மரபை முழுமையாகத் திருக்குறளிலே காணுகின்ற ஆசையினால் விளைந்தது என்பது புலப்படுகிறது. ஆக வேபரத்தை தொடர்பாக உரையும் துறையும் வகுத்துள்ள உரையாசிரியர் தம் உரைகளைப்பின் வந்த குறளியல் அறிஞர்கள் பலரும் மறுத்துரைத்துள்ளனர். எனினும் அவர்களுடைய கருத்துக்கு எதிராகப்பின்வரும் குறளைச் சிலர் எடுத்துக்காட்டுவது முண்டு.

            பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்

           நண்ணேன் பரத்த நின்மார்பு .. (குறள் :1311)

           

            உரை: பரத்தமை உடையாய்! பெண்தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள; ஆகையால் உன்மார்பைப் பொருந்தேன்.

இக்குறளில் வள்ளுவர் பரத்தையிற் பிரிவையே சுட்டினார் என்பது வெளிப்படையாகத் தெரிவதாக சிலர் கூறுவதும். அதற்கு எடுத்துக்காட்டாக குறளிலுள்ள ‘பரத்த’ எனும் விளிப்பெயரை எடுத்துகாட்டுவதும் உண்டு. எனினும் அது உண்மை யன்று. இங்கு ஊடுருவதற்காகப் பிறகாரணங்கள் இல்லாத பொழுது பொய்க்காரணம் ஒன்றை ஏற்றியே தலைவி ஊடியிருப்பதனை நுட்பமானவாசிப்பின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இங்கு செயல் என்பது தலைவன் மேல் இல்லை. பெண்கள் மேல் உள்ளது. அதாவது ‘நீ பெண்ணியலாளரை உண்டாய்’ என்று தலைவனைக் குற்றஞசாட்டப் படவில்லை. பெண்ணியலாரே உன்னை கண்ணாலுண்டனர் என்றே கூறப்பட்டுள்ளது. ஆதலால் தலைவி ஊடுவதற்கான காரணச்செயல் தலைவனுடையது அல்ல என்பது புலனாகும். எனினும் இவ்விடத்தில் இன்னொரு கேள்வி எழுகிறது. பெண்கள் தலைவனை கண்ணால் உண்டனரென்றால் அது அப்பெண்களுடைய அறவுள்ளம் தொடர்பான சந்தேகத்தை ஏற்படுத்திவிடுகிறது. இத்தலை விக்குரிய தலைமகனை பிறதலைவர்களுக்கு உரித்தான பெண்கள் கண்ணால் உண்ணுதல் அறப்பிறழ்வு இல்லையா? என்பது நியாயமான கேள்வியே. ஆனால் கவிஞர் அக்கேள்வியைக்கூட பயனில் கேள்வியாக்கி விடுகிறார். இங்கு ஆடவனை நோக்கிய பெண்கள் கூட அவனை பொதுப்பார்வை தான்பார்த்தார்கள் எனும்படிக்கு“பொதுவுண்பர்’ எனும் வார்த்தையைக்கவிஞர் அமைந்திருக்கும் நுட்பம் நோக்கத்தக்கது. இதன்படி பிறபெண்களை கண்ணால் உண்ணாமலும், அப்பெண்களால் சிறப்புப்பார்வையாலன்றிப் பொதுபார்வையால் மாத்திரம் நோக்கப் பெற்றும் வந்ததனது தலைமகன் மீது பிறகாரண மேதும் இல்லாதபோதும், இதனையே மெல்லிய கோபத்திற்குரிய ஓர்ஊடற்காரணமாகக்கொண்டு ஊடுகிற ஒருதலைவியையே வள்ளுவர் இங்கேகாட்டியிருக்கிறார் என்பதே பொருத்தமானது. இக்குறளைக்கூட பரத்தையிற் பிரிவை திருவள்ளுவர் ஏற்றார் என்பதற்கான சான்றாகக் கொள்ள. முடியவில்லை. மாறாகக் கொண்டால்.

            ‘”இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்

           வல்லது அவர் அளிக்குமாறு’”. (குறள் 1321)

           உரை: எந்த தவறும் இல்லாதநி லையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பைமிகுதியாக வளர்க்கக்கூடியது.

என்னும் குறள் முரண்படுவதைக் காணலாம். எனவே, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் குறிப்பிடுவதைப் போன்று பரத்தையர் என்ற பேச்சே காமத்துப்பாலில் இல்லை எனதுணிவது தான் சிறப்பானது.4

           

உள்ளுறை உவமம் :

சங்க அகத்திணை மரபில் உள்ளுறை உவமப்பிரயோகம் மிகப் பெரியமுக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒரு பாடலின் திணையை உணர்ந்து கொள்வதற்கு உள்ளுறை உவமமும் பயன்படுகிறது என்பதையும் தெய்வம் நீங்கலாக ஏனைய கருப்பொருள்கள் அனைத்தையும் நிலைக்களனாகக் கொண்டு உள்ளுறை உவமம் தோற்றம் பெறலாம் என்பதையும் தொல்காப்பியத்தின் மூலம் அறிந்து கொள்ளமுடிகின்றது.

            உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள்முடி கென

           உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம்.(தொல் 994)

           

           ஏனை உவமம் தானுனர்வகைத்தே (தொல் 995)

           

இவ்வாறு, முதற்பொருளும் கருப்பொருளும் முதன்மை வழங்கும் – அகத்திணைப்பாடல்களுக்கு மட்டுமே சிறப்பாக விளங்கி நிற்கும்-- உள்ளுறை உவமையை வள்ளுவர் காமத்துப்பாலில் அமைத்துக் கொள்ளவில்லை. இதற்குக்காரணமாக அடிச்சிறுமையை உடைய குறள் வெண்பாவை வள்ளுவர் தமது நூலுக்குரிய வடிவமாகத் தேர்ந்துகொண்டமைதான் காரணமெனப் பலரும் குறித்துள்ளனர்.

‘”பாடலின் அடிக்குறுமை நெடுமை கட்கு ஏற்ப முதல் கருப்பொருட்களின் புனைவு அக இலக்கியங்களில் அமைந்திருக்கும்—தாம்க ருதும் செய்திகளை வெளிப்படையாகக்கூறாது கருப்பொருள் களின்துணையாக உள்ளுறை, இறைச்சி என்பனவற்றைக் கொண்டு குறிப்பினால் உணர்த்துதல் சங்கப்புலவர்களின் தனிச்சிறப்பாகும் – இங்ஙனம் செய்திகளைக்குறிப்பின் உணர்த்த கருப்பொருள்களின் புனைவுபயன்படுத்தலைச்சங்க அகப்பாடல்களில் காணலாம். குறுகிய அடிகளால் இயன்றகாமத்துப்பாலில் அதனை காணவியலாது’”5

மேலே சொல்லப்பெற்ற காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. அடி எண்ணிக்கை குறைந்துவரக்குறைந்துவர முதல் கருவாகிய பொருள்களைத் தவிர்த்துப் பிரதானமான உரிபொருளிலேயே நிலைகொள்ளுகின்ற பாங்கை சங்கஅகநூல்களிலேயே காணமுடியும். ஒப்பீட்டு ரீதியில் அகநானூற்றை விடவும் கருப்பொருள் விவரிப்பும் உள்ளுறை உவமைப்பயன்பாடும் குறுந்தொகையில் மிகவும் குறைந்திருக்கக் காணலாம். எனினும் இக்காரணம் ஒன்றையே முன்னிட்டு திருவள்ளுவர் காமத்துப்பாலில் உள்ளுறை உவமத்தை அமைக்கவில்லை எனும் முடிவுக்கு வருதல் எத்துணைத்தூரம் பொருத்தமானதுஎன்பதுஆய்வுக்குரியது. ஏனெனில், உள்ளுறையின் வளர்ச்சியாகக் கருதத்தக்க நுவலாநுவற்சிஅணியை வள்ளுவர் பொருட்பாலில் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே உள்ளுறையைவள்ளுவர் தவிர்த்தமைக்குக்காரணமாக ஈரடிச்சிறுமையைமட்டும் குறிக்க முடியவில்லை. வேறொரு காரணம்பற்றி அவர் உள்ளுறையைத்தவிர்த் தவராகலாம் அக்காரணம் அவருடைய படைப்புக் கொள்கை எனக்குறிப்பிடுவது தவறாகாது. படைப்பை மக்கள் அனைவரும் விளங்கிக்கொள்ளக்கூடியதாகத்தர வேண்டுமென்பது வள்ளுவருடைய படைப்பு கொள்கையாக விளங்கியிருக்க வேண்டும்.

           

           ‘”வேட்பத்தாஞ் சொல்லிப்பிறர் சொல்பயன் கோடல்

           மாட்சியின் மாசற்றார் கோள்.’”( குறள் 646)

           

           உரை:பிறர் விரும்பும்படியாகத் தாம்சொல்லின் பிறர் சொல்லும் போது அச்சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.

என்னும் சொல்வன்மை அதிகாரக்குறளையும்.

           

           ‘”எண் பொருளவாகச் செலச்சொல்லித் தான் பிறர்வாய்

           நுண் பொருள் காண்ப தறிவு’” (குறள் ; 0424)

           (உரை: தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லித், தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்).

என்னும் அறிவுடமை அதிகாரக்குறளையும் நோக்கும் பொழுது வள்ளுவருடைய படைப்புக் கொள்கை குறித்த தெளிவை அறிந்து கொள்ள முடிகிறது. படைப்பைத் தருகின்ற படைப்பாளி பெரிய கல்வியறிவல்லாத வாசகர்களும் விளங்கிக்கொள்ளக்கூடியதாகச் சொற்களைக்கூட மிகஎளிமையாகக் கையாள வேண்டும் என்பது வள்ளுவருடைய கொள்கை என்பதை இக்குறள்கள்அறிவிக்கின்றன. ‘”எண்பொருளவாக’’ எனும் குறளுக்கு உரை விளக்கஞ் செய்த பரிமேலழகர்“சொல்லுவனவழுவின்றி இனிது விளங்கச்சொல்லுக என்பார்சொல் மேல்வைத்தும்… கூறினார்’”என தெரிவித்திருப்பது இதனை அரண்செய்கிறது

 

எனவே வள்ளுவர் கற்றோர்க்கன்றி மற்றோர்காகவுமே தம் படைப்பை வழங்கியுள்ளார் என்பது தெளிவு. அவர் பாட எடுத்துக் கொண்ட விஷயமும் எல்லோருக்கும் உரியதே. இந்நிலையில் கற்றோரால் மட்டும் அறியக்கூடியதாக விளங்கும் உள்ளுறை உவமையை அமைத்துப்படைப்பை இறுக்கமாக வள்ளுவர் விரும்பவில்லை.

 

           

           ‘”குறிப்பாக அமைக்கும் பொருளாதலின் அதனை உள்ளமைப்புக்கூறலும் கடினம்; உய்த்துணர்ந்த பொருள்கோடலும் கடினம். கண்டவர் கண்டவாறெல்லாம் பொருள் கொள்ள இடம் தரும். கூறுவோரும் ‘முன்னமரபின்’ அல்லது’ முன்னைமரபில்’ (பாடவேறுபாடு) கூறவேண்டும்; பொருள்கொள்வோரும் கற்றுத்தெளிவு உடையவராயிருத்தலே உண்மையான உள்ளுறையை உய்த்துணரமுடியும் என்பதை இங்கு தொல்காப்பியர் சுட்டிக்காட்டுகிறார் ‘”6

என அறிஞர் குறிப்பிடுவதிலிருந்து உள்ளுறை உவமத்தை படிக்கும் வாசகரும் கற்ற தெளிவுடையோராக இருந்தாலே பொருளைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும் என்பது புலனாகிறது. எனவே இத்தகைய அணியைசங்க அகத்திணைப்பாடல்களில் பயின்றிருப்பது போன்று மிகுதியாகப் பயில வள்ளுவர் விருப்பம் கொண்டிருக்கவில்லை என்று அறிய முடிகிறது.எனினும் முதலில் குறிப்பிட்டபடி சங்க அகத்திணை மரபைத் திருக்குறட்காமத்துப்பாலில், காணவிரும்பிய கல்வியாளர்கள் சிலர் திருக்குறளில் உள்ளுறை உவமமும் பயின்றுவருவதாக எடுத்துக்காட்டுவர்.உள்ளுறை உவமம் (தொ.பா.50) காமத்துப்பாலில் உண்டு

           

            “தொடி நோக்கி மென்தோளும் நோக்கி அடி நோக்கி

           அஃதாண்டவள் செய்தது” (குறள்;1279)

           (உரை: தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்தகுறிப்பு காதலனைத் தொடர்ந்து செல்வதென்றதாகிய அது வேயாகும்).

என்ற குறளில் ஒரு பொருளைச் சுட்டிப்பிரிதோர் பொருட்படுவதால் உள்ளுறையாகும்’ 7 என ஆய்வாளர் கொண்டிருப்பது வலிதிற்கொண்டதாகவே இருக்கின்றது.

           

நாடக வழக்கும் கூற்றும்;

அகத்துறைச் செய்திகளை நாடக வழக்கில் பாத்திரங்களின் கூற்றாக வெளிப்படுத்திக்காட்டுவது தமிழர்தம் சிறப்பானநூல் மரபாகும். சங்கப்பாக்களில் காணப்பெறும் இம்மரபையே திருவள்ளுவர் காமத்துப்பாலிலும் பின்பற்றியிருக்கிறார். எனினும், அகத்துறைப்பாடல்களில் காணப்பெறுவது போன்று அவ்வாறே கூற்றுகளைப்பயன்படுத்தாது அவற்றில் மாற்றம் செய்தே பயன்படுத்தியிருக்கக்காணலாம்.

அகத்திணை மரபில் தலைவன் தலைவி ஆகிய பிரதானபாத்திரங்களுக்கு மட்டுமல்லாமல் தோழி ,பாங்கன். செவிலி, கண்டனர் முதலிய பல உபபாத்திரங்களுக்கும் கூற்றுகள் உள்ளன. அதுவும் தோழியாகிய பாத்திரத்திற்குச் சில இடங்களில் தலைமைப்பாத்திரங்களைவிடவும் அதிக இடம்கூற்றுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக அகநானூற்றின் முதல் 50 பாடல்களில் தலைவிகூற்றாக 13 பாடல்களே அமைந்திருக்கத் தோழி கூற்றாக 17 பாடல்கள் அமைந்திருக்கக்காணலாம்.

இவ்வாறு அமைந்துள்ளமைக்கான காரணத்தையும் ஒருவாறு ஊகித்துக் கொள்ளமுடியும். தமது காதலை தாமே கூற்றாக வெளிப்படுத்தும் இயல்பில்லாத தலைவிக்காக – அவள் தம்பிரதிநிதியாக – தோழியேகூற்று நிகழ்த்துவதாக அகத்திணை மரபு கொள்கிறது. தோழியும் பெண் ஆதலின் அவளும் அனைத்தையும் வெளிப்படையாக தெரிவிக்கமுடியாதென கருதி உள்ளுறை உவமம் ,இறைச்சி என்பனவற்றை அதிகமாகப யன்படுத்தும் மரபு இருந்தது. எனினும், தலைவிக்காகத் தோழிகூற்று நிகழ்த்தலாம் எனும்தன்மை. தலைவியாகத் தன்னைப்பாவித்து உரைநிகழ்த்துகிற அனுமதியையும் தோழிக்கு ஓர் குறிப்பிட்ட எல்லையில் வழங்கியது.

           

           ‘”படர்க்கையிடத்தாலாகிய தலைவியையே தோழியான் எனத்தன்மைப்பெயரால் தானாகவே கொண்டு கூறுகின்றாள். இவ்வாறு தான் அவள் எனும் வேற்றுமையறவொன்றிய நட்புரிமை காரணமாகத் தோழிதலைவியை அவள் எண்ணாதுயான் எனக்கூறுதலும், அங்ஙனமே தலைவிதோழியை அவள் என்னாது யான்எனக் கூறுதலும். வழுவாயினும், அகப்பொருள் புலனெறி வழக்கில்அவ்வாறு கூறுதலு முண்டு.’’8

என உரையாசிரியர் அமைதி கண்டாலும் தலைவியாகத் தன்னைப்பாவித்துத் தோழிகூற்று நிகழ்த்துவது. அறச்சிறப்பிலது என்பதோடு தலைவன் தலைவிக்கிடையேயான அகவுணர்ச்சித் தொடர்பையும் பாதிப்பதாகும். எனவே, இவ்வாறு தலைவன் தலைவிக் கிடையிலான நேரடியான தொடர்பில் தலையீடு செய்யும் தோழி முதலிய துணைப்பாத்திரங்களின் கூற்றுகளுக்கு தமது நூலில்வள்ளுவர் இடமளிக்கவில்லை.

           

           ‘”இந்த நாடகம் முழுவதும் மூன்றேபாத்திரங்களை கொண்டது, அப்பாத்திரங்களாவன தலைமகன், தலைமகள், தோழி என்பவர்களே. இந்த மூன்றிலும் நடிப்பு, பேச்சு. பாவனை போன்றவை தலைமகன் தலைமகள் என்ற இருவருக்கும்ம் மட்டும் தான். தோழி என்பவள் தலைமகளுக்கு துணையாக பக்கத்தில் இருக்கிற உபகரணம் தான்”9

எனும் நாமக்கல் கவிஞரின் கூற்றும் இதையே குறிக்கிறது. என்ற போதும் பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்கள் தோழிக்கும் கூற்று வழங்கியே உரை செய்திருக்கக்காணலாம். குறிப்பாகப் பரிமேலழகர் உரையில் தோழிக்குரிய கூற்றுகளாக 1150, 1151, 1279 .1288, 1301, 1302, 1231. 1235 ஆகியகுறள்கள் குறிக்கப்பெற்றுள்ளன. ஆனால், இவ்வாறு கொள்வதற்குகூட சந்தேகம் உள்ளது.

           செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

           வல்வரவு வாழ்வார்க் குரை. (குறள் 1151)

           (உரை: பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால் எனக்குச் சொல்; பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர் வாழ வல்லவர்க்குச் சொல்).

என்ற குறளுக்கான சந்தர்ப்பத்தைக் குறிப்பிடுகிற பொழுது‘”பிரிந்துகடி தில்வறுவல்’”என்று தலைமகற்குத் தோழி சொல்லியது என்பார் பரிமேலழகர், தோழிக்கு தலைமகள் ஆற்றாமையாற்கூறியது என்பார் மணக்குடவர். இவ்வாறு ஒரே கூற்றை வெவ்வேறு பாத்திரங்கள் கூறியதாக உரையாசிரியர்கள் தமக்குள் மாறுபடுவதால் இது குறித்த தெளிவான உறுதியான முடிவு இல்லையென்பதே வெளிப்படுகிறது. மேலுள்ள குறளை தோழியின் கூற்றாகக் கொண்டாலும்., தலைவியின் கூற்றாகக் கொண்டாலும் குறளின் உரிப் பொருள் மாறவில்லை என்பது தெளிவு. இவ்வாறு தோழியின் கூற்றாகக் குறிக்கப் பெற்றுள்ள பிற குறள்களைக்கூட தலைவியின் கூற்றாகவே கொள்ளமுடியும். எனவே குரலில்நற்றாய், செவிலி, பாங்கன் ஆகியோருக்குக் கூற்றில்லை என்பது போல தோழிக்கும் கூற்றில்லையென கொள்ளலாம்.

அவ்வாறாயின் தமது காதலை கூற்றாகவே வெளிப்படுத்தும் இயல்பில்லாத தலைவிக்கு வள்ளுவர்யாது வழியை காட்டுகிறார் என்பது எழக்கூடிய நியாயமானவினாவே. இதற்கு கூற்றுகளைப் பிரதானப்படுத்தவள்ளுவர் மெய்ப்பாட்டை பிரதானப்படுத்தி தமது காமத்துப்பால் அகநாடகத்தை கொண்டு நடத்தியள்ளார் என்பதே பொருத்தமானதாகும்.

           

           கண்ணோடுகண் இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

           என்னபயனும் இல.(குறள் :1100)

           (உரை: கண்களோடு கண்கள் நோக்கால் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச்சொற்கள் என்னபயனும் இல்லாமற் போகின்றன.)

           

           தொடி நோக்கி மென்தோளும் நோக்கி அடி நோக்கி

           அஃதாண்டு அவள் செய்தது …(குறள் :1279)

           

           (உரை: தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித்தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு காதலனைத் தொடர்ந்து செல்வ தென்றதாகிய அது வேயாகும்.)

எனும் குறள்கள் கூற்றைவிடவும் கண்முதலிய உறுப்புகளால் வெளிப்படுத்தப் பெறும் மெய்ப்பாடு தலைவன் தலைவர்க் கிடையிலான அகவணர்ச்சித் தொடர்பில் பெரும்முக்கியத்துவத்தையே வலியுறுத்துகின்றன. எனவே சங்க அகத்திணை மரபில் தலைவன் தலைவியர்க் கிடையிலான உறவில் தோழி முதலிய துணைப்பாத்திரங்களுக்கு கூற்று வழங்கப்படும் தன்மை பெரிதும் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதும். ஆனால் திருக்குறள் காமத்துப்பாலில் துணைபாத்திரங்களின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு தலைவன்-தலைவி ஆகியோருக்கு இடையிலான மெய்ப்பாடு பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கன,

இவற்றால் சங்க அகத்திணை மரபின் தொடர்ச்சியாகத் திருக்குறள்-காமத்துப் பால்விளங்கியிருக்கின்ற அதே வேளை ,அது, முன்னைமரபிலிருந்து சில இடங்களில் வேறுபட்டு அறத்துக்கு பெரிதும்முக்கியத்து வம்வழங்கி – அதனால் காமத்துப்பால் மரபு என புதிய போக்கு ஒன்றை தொடங்கி உள்ளதையும் காணலாம்.

           

சான்றாதாரம்

1. அறவாணன், கா,பா., (1994) கவிதையின் உயிர் உள்ளம் உடல், தமிழ்க் கோட்டம், புதுச்சேரி;ப. 84.

2. சாரங்கபாணி.இரா. (1994) வள்ளுவர் வகுத்த காமம், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம் :ப.70

3. சாமிநாதய்யர்.உ.வேகு றுந்தொகை நூலாராய்ச்சி ப. 73

4. மீனாட்சிசுந்தரனார்.தெ.பொ.. (1984) வள்ளுவர் கண்ட நாடும் --காமமும் .பழனியப்பா பிரதர்ஸ் சென்னை, ப; 205

5. சாரங்கபாணி.இரா. (1994) வள்ளுவர்வகுத்தகாமம், அண்ணாமலை பல்கலைக்கழகம் .சிதம்பரம்; பக்;24, 25

6. தமிழண்ணல். (1986) தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள் – உள்ளுறை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை: ப. 19

7. ஆனந்த நடராசன்.அ (1978)‘அகத்திணையியலும் காமத்துப்பாலும்’. தொல்காப்பியச்சிந்தனைகள் அண்ணாமலை பல்கலைக்கழகம்சிதம்பரம் 158

8. அகநானூறு களிற்றி யானை நிரை – போவே சோமசுந்தரனார் எழுதிய பதவுரை. (1981), திருநெல்வேலி தென்னிந்தியசை வசித்தாந்த நூற்பதிப்பு க்கழகம், சென்னை,பக்.17,18

9. நாமக்கல்கவிஞர், (1999), திருவள்ளுவர்இன்பம், வர்த்தமானன்பதிப்பகம், சென்னை, ப. 40…