ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாட்டில் கடல்கோள்(வட தமிழ்நாடு)

சிங்கநெஞ்சன் 08 Oct 2019 Read Full PDF

சிங்கநெஞ்சன்,

இயக்குனர்(ஓய்வு)

இந்திய புவியியல் ஆய்வுத் துறை,

சென்னை

 

ஆய்வுச்சுருக்கம்

ஆண்டிற்குச் சில மில்லிமீட்டர்கள் எனும் அளவில், சில ஆயிரம் ஆண்டுகளில் கடல்மட்டம் சில மீட்டர்கள் உயர்ந்து ஒரு பெரும் நிலப்பரப்பைக் கடல் தன்னகத்தேக் கொள்வதே கடல்கோள் ஆகும். சுமார் 5000 ஆண்டுகளுக்குமுன், வடதமிழகத்தின் கிழக்குக்கரையில் பல நூறு சதுரகிலோமீட்டர்கள் பரப்பளவுள்ள நிலப்பகுதி கடலின் கீழ் அமிழ்ந்து கிடந்தது. இதற்கான புவியியல் சான்றுகள் பல பகுதிகளில் கிடைத்துள்ளன. தேவாரத்திலும், திவ்யப்பிரபந்தத்திலும் கிடைக்கும் குறிப்புகள் புவியியல் சான்றுகளுக்குத் துணை நிற்கின்றன.

 

திறவுச் சொற்கள்:
கடல்கோள், புவியியல் குறிப்புகள், தேவாரம், தமிழ் நாடு, கிழக்குக் கரை

 

ஒரு பெரும் நிலப்பரப்பு கடலுக்குக் கீழ் அமிழ்ந்துபோகும் நிகழ்வே கடல்கோள்எனப்படுகிறது. இது ஒரு நாளிலோ, ஒரு இரவிலோ நிகழ்வது அல்ல. புயலின் போது கடல் முன்னேறி, பின், பின்வாங்குவதையோ அன்றி சுனாமியின் போது கடல்நீர் உள்புகுந்து பின்வாங்கியதையோ கடல்கோள் எனக்கொள்ளலாகாது. மாறாக ஆண்டிற்கு சில மில்லிமீட்டர்கள் எனும் அளவில், சில ஆயிரம் ஆண்டுகளில் சில மீட்டர்கள் உயர்ந்து ஒரு பெரும் நிலப்பரப்பைக் கடல் தன்னகத்தேக் கொள்வதே கடல்கோள் ஆகும். தமிழ்நாட்டில் கடல்கோள் நிகழ்ந்ததா? ஆம் எனில் எப்போது நிகழ்ந்தது? எந்தெந்தப் பகுதிகள் கடலின் கீழ் சென்றன? போன்ற கேள்விகள் பலர் மனதில் அவ்வப்போதுத் தோன்றி மறைகின்றன. சுமார் 18000 ஆண்டுகளுக்கு முன் கடல்மட்டம் இப்போது உள்ளதைவிட சுமார் 125 மீ தாழ்ந்திருந்தது என்பதற்கான சான்றுகள், தமிழகம் உட்பட உலகின் பல பகுதிகளில் கிடைத்துள்ளன1,2. கடந்த 18000 ஆண்டுகளில் கடல் மட்டம் 125மீ உயர்ந்து, சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் இன்றைய நிலையை அடைந்திருக்கிறது. அதுபோது பெரும் நிலப்பரப்பை தன் கீழ் கொண்டுள்ளது. ஆதலின் தமிழ்நாட்டில் கடல்கோள் நிகழ்ந்து உண்மையே. ஆனால் இது நடந்தது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில். ஆதலின், இலக்கியங்களில் கூறப்படுவது இதுவாக இருக்க வாய்ப்பில்லை.

 

அதன்பின் சுமார் 4000 - 6500 ஆண்டுகளுக்கு முன் கடல்மட்டம் இன்றுள்ளதைவிட சில மீட்டர்கள் (2 - 4 மீ) உயர்ந்து பின் தாழ்ந்து, தற்போதுள்ள நிலையை அடைந்தது என்பதற்கும் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியங்களில் காணப்படும் கடல்கோள் பற்றிய செய்திகள் இது குறித்தே இருக்கலாம். சங்க இலக்கியங்களான கலித்தொகை3யிலும், புறநானூற்றிலும்4 கடல்கோள் பற்றய செய்திகள் காணப்படுகின்றன. முதலில் புறநானூற்றுக்குள் போய்வருவோம். (பாடல் எண் 122; காரியை கபிலர் பாடியது)

 

“கடல் கொளப் படாஅ துடலுந ரூக்கார் கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே...............”

 

இதற்கான உ.வே.சா. அவர்களின் உரை:

‘காரியின் நாடு மலையும் மலைசார்ந்த இடமுமாதலின், இங்ஙனம் கூறினார்; இவன் இராசதானி பெண்ணையாற்றங் கரையிலுள்ள திருக்கோவலூரென்று,“துஞ்சா முழவிற் கோவற் கோமான், நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப், பெண்ணையம் பேரியாற்று நுண்ணுறல்” (அகநா.35) என்பதனால் தெரிகின்றது.’

 

இதற்கான அவ்வை சு.துரைசாமிப் பிள்ளை அவர்களின் உரை:

‘திருமுடிக்காரி தன வன்மையிற் சலியாதிருத்தலைக் கண்ட கபிலர் பெரு வியப்புற்று, “திருமுடிக்காரி, நின் நாடு கடலாலும் கொள்ளப்படாது.” என்கிறார். இந்தப்பாடலால் நாம் அறிவது: “கபிலரின் காலத்திலோ அல்லது அதற்கு முன்போ ஏதோ ஒரு நாடோ அல்லது சில நாடுகளோ கடலால் கொள்ளப்படிருக்கின்றன. ஆனால், எந்த கடல்கோளும் திருக்கோவலூர் போன்ற உட்பகுதிகளில் வரும் அபாயமில்லை என கபிலர் முடிவு செய்திருக்கிறார்.” என்பதே.(திருக்கோவலூர் கடற்கரையிலிருந்து 70 கி.மீ. கிழக்கே உள்ளது.) தொடர்ந்து கலித்தொகை காட்டும் கடல்கோளைக் காண்போம். முல்லைக்கலியில் 104 ஆம் பாடலில் தென்னவனாம் பாண்டிய மன்னனைப் பற்றிப் பாடுங்கால்,

 

“மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வெளவலின் மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட புலியோடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன்.” என்கிறார் புலவர்.

 

இதில் நாம் உற்று நோக்கத்தக்கன:

1. “ஊர்ந்து”- ஊர்தல் எனும் சொல்லிற்கு, நகருதல், பரவுதல், தினவுறுதல், நெருங்குதல், வடிதல், ஏறி ச்செல்லுதல், என அகரமுதலி பொருள் சொல்கிறது. 2. “வெளவ்வுதல்” - கவர்ந்து கொள்ளுதல். அலைகள் மெல்ல ஊர்ந்து வந்து தனது நிலப்பரப்பை ஆக்ரமித்துக் கொண்டதால், தென்னவனான பாண்டியன், மேற்கே சென்று சோழ, சேர நாடுகளை வென்றான். சங்க இலக்கியங்களில் கடல்கோள் பற்றியக் குறிப்புகள் இவை இரண்டன்றி வேறில்லை. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடல்மட்டம் சில மீட்டர்கள் உயர்ந்திருந்து என்பதற்கான புவியியல் சான்றுகள் பல இடங்களில் கிடைத்துள்ளன.முதலில் தமிழ்நாட்டின் வடபகுதியிலிருந்து வருவோம். தமிழக ஆந்திர எல்லையிலுள்ள புலிகாட்ஏரியின் வடபுறம் சூளுர்பேட்டைப் பகுதியில் தொல்மகரந்தத் துகள்கள் அடிப்படையில் இந்திய புவியியல் ஆய்வுத் துறை மேற்கொண்ட ஆய்வுகள், அங்கே சுமார் 6500 ஆண்டுகளுக்கு முன் சதுப்புநிலக்காடுகள் இருந்ததைத் தெரிவிக்கின்றன5,6. இதன் மூலம் அப்போது கடற்கரை இப்போதுள்ள இடத்திலிருந்து 18 கி. மீ. மேற்கே இருந்தது எனத் தெரியவருகிறது. சென்னை நகரில் அடையாறு, கிண்டி, மயிலாப்பூர், தியாகரராய நகர், மடிப்பாக்கம் போன்ற பல்வறு இடங்களில் பூமிக்குக் கீழே கிடைத்தக் கடல் சிப்பிகளைக் கொண்டு, கடல் இப்பகுதியில் 7 கி.மீ. தூரம் முன்னேறி பிறகு பின் வாங்கியிருக்கிறது என அறிய முடிகிறது. சென்னையிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் புவியியல் ஆய்வுகள் மேற்கொண்ட இந்திய புவியியல் துறையின் நிபுணர் இராபர்ட் ப்ருஸ் ஃபுட்7 அவர்கள் இந்தத் தரவுகளின் அடிப்படையில், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், கடல் பல்லாவரம் மலையின்கிழக்கு அடிவாரத்தைத் தொட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கிறார். சென்னைப் பகுதியைப் பொறுத்தவரை திருஞான சம்பந்தர் மயிலாப்பூரில்பாடிய பூம்பாவைப் பதிகமும்8,திருமழிசையாழ்வார் திருவல்லிக்கேணியில் பாடிய திவ்யப்பிரபந்தமும்9 மேற்சொன்ன புவியியல் சான்றுகளுக்குத் துணை புரிகின்றன. முதலில் பூம்பாவைப் பதிகத்தின் முதல் வரி,

 

           “மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்

           கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்” இதில் வரும் கானல் எனும் சொல்லிற்குக் “கடற்கரைச் சோலை” என்பதே பொருள். (சிலம்பில் வரும் “கானல் வரிகளை” நினைவு கூர்க). மயிலைக் கோவிலுக்கு அருகே கடற்கரைச் சோலைகள் இருந்திருக்கின்றன. அடுத்து மூன்றாம் பதிகத்தில் முதல் வரி

           “ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்”

           ஊர்ந்து வரும் அலைகள் உலா செய்கின்ற மயிலை.

           அடுத்து, திருமழிசை ஆழ்வாரின் பாசுரங்களைப் பார்ப்போம்.

           “வந்துதைத்த வெண் திரைகள் செம்பவள வெண்முத்தம்

           அந்தி விளக்கும் அணி விளக்காம் - எந்தை

           ஒருவல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன்

           திருவல்லிக்கேணியான் சென்று “

           ‘நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா

           அல்லிக் கேணியான்’

 

உயர் ஓதத்தின்போது மயிலையிலும் திருவல்லிக்கேணியிலும் அலைகள் வந்து சென்றனவாம், அவை முத்தும் பவழமும் கொண்டு வந்து சேர்த்தனவாம். இந்தத் தேவார, திவ்யப் பிரபந்த வரிகளைப் பார்க்கும்போது மயிலாப்பூரும் திருவல்லிக்கேணியும் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் கடற்கரைக்கு வெகு அருகாமையில் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. சென்னையிலிருந்து சில கி.மீ தெற்கே வருவோம். அக்கரை- மாமல்லபுரம் பகுதியில் காணப்படும் உப்பங்கழிகளும், கல்பாக்கம் - மரக்காணம் இடையே, இடைக்கழிக்கு வடக்கேயும் தேற்கேயும் உள்ள காயல்களும், இந்தப் பகுதியிலும் கடல் 7-8 கி.மீ. முன்னேறி பிறகு பின் வாங்கியுள்ளது என்பதை உணர்த்துகின்றன.

 

 

தொடந்து புதுச்சேரிக்கு இருபது கி.மீ.தெற்கேயுள்ள கடலூர் பகுதிக்கு வருவோம். மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில், திருநாவுக்கரசர் சமண சமயத்தில் இருந்து மீண்டும் சைவ சமயத்தில் சேர்ந்தாராம். அது பொறுக்காத சமணர்கள், மன்னரிடம் சொல்லி, நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் தூக்கி வீசச் செய்தார்களாம். அவர் நமச்சிவாய என ஐந்தெழுத்தை ஓத, கல் தெப்பம் போல் மிதந்ததாம் அப்படியே மிதந்து வந்து கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் இன்றும் கரையேறவிட்டகுப்பம் என்றழைக்கப்படும் இடத்தில் அவர்கரை ஏறினாராம்.

 

           “சொற்றுணைவேதியன் சோதி வானவன்

           பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

           கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

           நற்றுணை யாவது நமச்சி வாயவே”8

 

இதில் நாம் கவனிக்கவேண்டியது, அந்தக்குப்பம் தற்போது கடற்கரையிலிருந்து 4 கி.மீ. மேற்கேயுள்ளது என்பதே. மேலும், இந்தப் பகுதி கெடிலம் ஆற்றின் பழைய வழித்தடமாக இருந்திருக்கும் என்பதை செய்கோள் பதிமங்கள் காட்டுகின்றன. ஆதலின் கரையேறவிட்டக்குப்பம் அன்றைய கெடிலம் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்திருந்த கிராமமாக இருதிருக்கும் என எண்ண இடமுண்டு. கடந்த பன்னிரண்டு நூற்றாண்டுகளில் கடல் இந்தப் பகுதியில் 4 கி.மீ. பின்வாங்கியுள்ளது.

 

தொடர்ந்து தெற்கே செல்வோம். கடலூருக்கு தென்மேற்கேயுள்ள பெருமாள் ஏரியின் தென் கரையில் குண்டியமல்லூர் எனும் கிராமம் அருகே பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய புவியியல் ஆய்வுத் துறையை சேர்ந்த ஆய்வாளர்கள், பலஅடி கனத்திற்கு கடல் சிப்பிகள் உள்ளதைக் கண்டறிந்தனர்10. இந்த குண்டியமல்லூர் கிராமம் இன்றைக்கு கடற்கரையிலிருந்து பத்து கி.மீ. மேற்கேயுள்ளது. மேற்சொன்ன கரையேறறவிட்டகுப்பத்திற்கும்,குண்டியமல்லுருக்கும் இடைப்பட்ட பகுதியில், சற்று கிழக்கே, சில ஆண்டுகளுக்கு முன் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்ற காரைக்காடு, மணிக்கொல்லை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் சங்க காலத்தில் கடற்கரையில் அமைந்திருந்தன என்று தொல்லியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பெருமாள் ஏரியை ஒட்டி, பறங்கிப்பேட்டைக்கு மேற்கேபுதுச்சத்திரம், முட்லூர் ஆகிய கிராமங்களுக்கு இடையே கொத்தட்டை, சின்னக்கொமுட்டி போன்ற கிராமங்களில் கடற்கரைக்கு இணையாக, கடற்கரையோர மணல்மேடுகளின் எச்சங்கள் இன்றளவும் ஏராளமாகக் காணப்படுகின்றன. தற்போது மேற்சொன்ன இரண்டு இடங்களும் கடற்கரையிலிருந்து சுமார் 8-9 கி.மீ. உள்ளே தள்ளி இருக்கின்றன. இந்தப் பகுதியில் கடல் 8-9 கி.மீ.பின் வாங்கியுள்ளது என்பது இதனால் தெளிவாகிறது.

 

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்- பிச்சாவரம் இவற்றிற்கிடையே நடந்த ஆய்வுகள், இன்றைக்கு 8 கி.மீ உள்தள்ளியுள்ள நடராஜபுரத்தில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சதுப்பு நிலக் காடுகள் இருந்ததை தெரிவிக்கின்றன.

 

 

திருவேட்களத்தில் ஞானசம்பந்தர்பாடிய பதிகத்தில், மூன்றாவது பாடலைப் பார்ப்போம்.8

 

           “ஓதமும் கானலும் சூழ்தரு வேலை, உள்ளம் கலந்து இசையால் எழுந்த

           வேதமும் வேள்வியும் ஓவா, வேட்கள நன்நகர்.”.....1.39.3

 

இந்தப் பாடலுக்கு உரை எழுதும் ஆசிரியர்கள், “கடல் நீர் பெருக்கும், சோலையும் சூழ்ந்தது. அந்தணர்கள் மனங்கலந்து பாடும் இசையால் எழுந்த வேத ஒலியும் அவர்கள் இயற்றும் வேள்விகளும்இடையறாது நிகழும் தன்மையது.” என்று, திருவேட்கள நன்னகர் பற்றித் திருஞான சம்பந்தர் பாடுவதாகக் குறிப்பிடுகிறார்கள்.

 

 

தொடர்ந்து இதே பதிகத்தில் வரும் நான்காவது பாடல்.

 

           “தேன் நல் அம் கானலில் வண்டு பண் செய்ய விரை புல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே8“ 1.39.4

இந்தப் பாடலுக்கு உரை,

‘சிவபெருமான்,அலைகளையுடைய தெளிந்த கடல் நீர் பெருகி வரும் உப்பங்கழிகளை உடையதும் வண்டுகள் இசைபாடும் தேன்பொருந்திய கடற்கரைச் சோலைகள் உடையதும் மணம் கமழும் பைம்பொழில் சூழ்ந்ததுமாகியதிருவேட்களநன்னகரில் எழுந்தருளியுள்ளார்.’ இதைப்போன்றே, இன்றைக்கு சிதம்பரம் என்று அழைக்கப்படுகின்ற தில்லையிலும் உப்பங்கழிகள் இருந்தன என்று ஞானசம்பந்தர் தன தேவரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

 

           “மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்

           கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுட்......”8(தேவாரம் 1.80.3)

 

இந்தப்பாடலின் பொருள்:

பொருள்: மைதீட்டப் பெற்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள், நீண்ட வீதிகளிலுள்ள மாட வீதிகளில் தம் கைகளால் பந்தோச்சி விளையாடும் அழகுடையதும், உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தில்லையுள், இந்தப் பாடல்கள் வாயிலாக, இன்றைக்கு 10 கி.மீ. கிழக்கேயுள்ளகடல்அன்று சிதம்பரத்தையும், திருவேட்களத்தையும் ஒட்டி இருந்திருக்கிறது; கடந்த 1300 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் கடல் 10 கி.மீ. பின்வாங்கியிருக்கிறது என அறிய முடிகிறது. மேற்சொன்ன புவியியற் சான்றுகள் மற்றும் இலக்கிய சான்றுகள் வாயிலாக, சுமார் 4000 - 6000 ஆண்டுகளுக்கு முன் தமிழகக் கிழக்குக் கடற்கரையின் ஒரு பகுதி கடலின் கீழ் கிடந்தது என்பதுத் தெளிவாகிறது.

 

உதவிய நூல்கள்:

  • Gaitan Vaz. G. (1996): Relict coral reef and evidence Pre-Holocene sea level stand off Mahabalipuram, Bay of Bengal. Current Science Jan. 1996.
  • Gaitan Vaz. G. (2000):Age of relict coral reef from the continental shelf off Karaikal. Bay of Bengal. Evidece of Last Glacial Maximum. Current Science. July 2000
  • கலித்தொகை: Tamil Virtual Academy
  • புறநானூறு: Tamil Virtual Academy
  • Anjum Farooqui, Vaz G,G.:(2000) Holocene sea level and climtic flectuations: Pulicat Lagoon - A Case Study. Current Science. Nov. 2000
  • Gaitan Vaz. G, Banerjee P,K. :(1997) Middle and late Holocene sea level changes in and around Pulicat lagoon, Bay of Bengal, India.
  • Memoirs of Geological Survey of India Volume x (1873) pp 20 - 25
  • தேவாரம் : Tamil Virtual Academy
  • நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் :Tamil Virtual Academy
  • Memoirs of Geological Survey of India Volume IV (1865) pp 32