ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

புகார் காண்டத்தில் மலர்கள்

தே.தீபா 08 Oct 2019 Read Full PDF

தே.தீபா

முனைவர் பட்ட ஆய்வாளர்

நெறியாளர்

பேரா.சே.செந்தமிழ்ப்பாவை

இயக்குநர்;

தமிழ்ப்பண்பாட்டு மையம

அழகப்பா பல்கலைக்கழகம்

காரைக்குடி – 3

 

ஆய்வுச்சுருக்கம்:

ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம். இதனுள் முதன்மை காண்டமான புகார் காண்டத்தில் இடம்பெறக் கூடிய மலர்கள் குறித்து ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். இதில் பதினொரு வகையான மலர்கள் எழுபது இடங்களில் இடம்பெற்றமைகிறது. இவ்வகையான மலர்கள் மகளிரது உறுப்பு நலன்களுக்கு ஒப்புமைப்படுத்தப்பட்டும்இ தங்களது ஒப்பனைகளுக்கு மலர்களைப் பயன்படுத்தியது குறித்தும்இ தங்களது மன எண்ணங்களை இயற்கைக் கூறுகளிடத்துத் தெரிவிப்பது குறித்தும் நிலப்பரப்புகளுக்கு மலர்களை வேலியாகப் பயன்படுத்தியது குறித்தும் பகுக்கப்பட்டு விளக்கப்படுவதாக இக்கட்டுரை அமைகிறது.

 

திறவுச் சொற்கள்:

மலர்கள்இகமலம்இ குமிழம்இகழுநீர்இதாழை
காப்பியத் தோற்ற வகையினில் முதன்மையாகவும், அடித்தளப் பாங்கிலும் அமைவது சிலப்பதிகாரம் ஆகும். இதனை இயல், இசை, நாடகமென்ற முத்தமிழும் விளங்கும் வகையிலும், தெய்வத்தைப் போற்றி நூலைத் துவக்கம் செய்யும் காலநிலையில் திங்கள், ஞாயிறு, மாமழை ஆகிய இயற்கைக் கூறுகளைப் போற்றி நூல் துவக்கம் செய்திருப்பதும் புதுமை நிலையாம். இச்சிறப்பு மிக்க இயற்கைக் கூறுகளில் ஒன்றான மலர்கள் குறித்தப் பதிவுகளை புகார்;காண்டத்திலிருந்து ஆய்ந்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

மலர்கள்

மலர்களென்பது சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவராலும் விரும்பக்கூடிய ஒன்றாகும். இறைவனை வழிபடுதலுக்கெனவும் அற்றைக் காலந் தொட்டு காலங்காலமாக மலர்களானவை பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணமுடிகிறது. இலக்கியங்களில் இம்மலர்களை மகளிரது உறுப்பு நலன்களுக்கு ஒப்புமைப்படுத்தி உரைப்பதைக் காணலாகிறது. இத்தகைய தன்மை கொண்ட மலர்களான, தாமரை141, குவளை 132, காந்தள் 13, குமிழம்34, செங்கழுநீர்ப்பூ 85, தாழம்பூ 56, அசோகம் 17, முல்லை 58, இலவம் 19, ஆம்பல் 310, மல்லிகை 511, இருவாட்சி 212, நெய்தல் நிலப்பூ 213, செண்பகம் 414, மாதவி 215, கோட்டுப்பூ 116 ஆகிய பதினாறு வகையான மலர்கள் எழுபத்தொன்று இடங்களில் இடம்பெற்றமைகின்றன. இவற்றில் முதன்மையாக மகளிருக்கும், பொய்கையைப் பெண்ணாகப் பாவித்தும், நகரைப் பெண்ணாகப் பாவித்தும் உறுப்புக்களை மலர்களுக்கும் ஒப்புமைப்படுத்தி எடுத்துரைத்துள்ளமையைக் குறித்துக் காண்போம்.

 

கற்பு
மகளிரின் கற்புத்திறத்திற்கு அருந்ததியின் கற்பினை ஒப்புமைப்படுத்துமிடத்து, மங்கல வாழ்த்துப் பாடலில் கண்ணகியை அறிமுகப்படுத்துமிடத்து,

 

           “போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்

           தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும்

            மாதரார் தொழு தேத்து வயங்கிய பெருங்குணத்துக்

            காதலான் பெயர் மன்னுங் கண்ணகி யென்பாள் மன்னோ!”

           (சிலம்பு.1:26-30, பக்.44-45)

 

எனத் திருமகளுக்கு ஒப்புமைப்படுத்தும் பாங்கில் தாமரை மலரின் பதிவினைக் காண முடிகிறது. முகம் பெண்ணின் முகத்தை வருணிப்பது போன்று, இந்திர விழாவூரெடுத்த காதையில் புகார் நகரினைப் பெண்ணாகப் பாவித்து,

 

           “திருமகள் புகுந்ததுஇச் செழும்பதியாமென” (சிலம்பு.5:213, ப.135)

என்றுரைத்தல் மூலம், தாமரையை எடுத்துரைப்பதைக் காணமுடிகிறது.

 

கண்

மகளிரது கண்களை வருணிப்பது மட்டுமன்றி, புகார் நகரினையும், பொய்கையையும் பெண்ணாகப் பாவித்து கண்களைபத்து இடங்களில், குவளை 417, தாமரை 418, செங்கழுநீர்ப்பூ 119, இலவம் 120 ஆகிய மலர்களைக் கொண்டு வருணிப்பதைக் காணமுடிகிறது. இதில் கண்ணகியின் கண்கள் இரு இடங்களிலும்21, மாதவியின் கண்கள் நான்கு இடங்களிலும்22, தலைவியின் கண்கள் இரு இடங்களிலும்23, புகார் நகரம் மற்றும் பொய்கையின் கண்களென முறையே ஓர் இடங்களிலும்24 வருணிக்கப்படுதலைக் காணமுடிகிறது.

 

கண்ணகியின் கண்கள் 2

மனையறம் படுத்த காதையில், கோவலனோடு கண்ணகியானவள் இல்லறத்தில் ஈடுபட்டு இன்புற்றிருந்த வேளையில் அவளது கண்களானது இன்பத்தால் குவளை மலரினை (சிலம்பு.2:11, ப.54) ஒத்திருந்ததையும், இன்பந்தரும் மாலைப் பொழுதில், கோவலனைப் பிரிந்த துன்பத்தால் செங்கழுநீர்ப்பூ வினை ஒத்து (சிலம்பு.5:236, ப.137) இருந்தது என்றுரைக்கப்படுகிறது. இவற்றால் இன்பத்தில் இருக்கும் பொழுது ஆனந்தத்தால் கண்கள் சிவந்து குவளையை ஒத்திருந்;ததையும், பிறகு துன்பத்தால் கண்கள் சிவந்து செங்கழுநீர்ப்பூவினை ஒத்து இருந்ததென உரைக்கப்படுதலையும் அறிய முடிகிறது.

 

மாதவியின் கண்கள் 4

மாதவியின் கண்களானவை தாமரை (சிலம்பு.3:170; 8:16; 5:237) மூவிடங்களிலும், குவளை (சிலம்பு.8:75) ஓரிடத்திலும் ஒப்புமைப்படுத்தி உரைக்கப்படுதலையும் காணமுடிகிறது. அரங்கேற்றுக் காதையில் மாதவியின் அறிமுகவிடத்து,“தாமரை போன்ற அகன்ற கண்களையுடைய மாதவி” (சிலம்பு.3:170, ப.101; 8:16, ப.187) எனவும், கோவலனோடு சேர்ந்து இன்புற்றிருந்த வேளையில் மாதவியின் கண்களானது,

 

           “……………………..மாதவி செங்கணும்

           உள்நிறை சுரந்தகத் தொளித்துநீ ருகுத்தன” (சிலம்பு.5:237-238, ப.137)

 

என இருந்ததெனவும், வசந்தமாலையிடம், மாதவியின் தன்மைப் பற்றி கோவலனுரைக்குமிடத்து,

 

           “குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட” (சிலம்பு.8:75, ப.193)

 

எனவும், மாதவியின் கண்களானது தாமரை மற்றும் குவளை மலர்களுக்கு ஒப்புமைப்படுத்தி எடுத்துரைக்கப் பெறுவதையும் அது இன்பமான நிலைகளிலே மாதவியின் கண்கள் வருணிக்கப்பட்டு உரைக்கப்படுவதையும் காணலாகிறது. தலைவியின் கண்கள் 2

கானல் வரியில் கடல் தெய்வமாகிய வருண பகவானை முன்வைத்து குவளை மலரை ஒத்த கண்களையுடைய தலைவியைஇ தலைவன் கரம் பற்றிய நிலையிலும் (சிலம்பு.7:5-33, ப.158) மற்றும் தலைவனைப் பிரிந்த நிலையில் தலைவியின் கண்களானது,

 

           “எதிர் மலர் புரை யுண்கண்

           எவ்வ நீரு குத்தனவே” (சிலம்பு.7:41-180, ப.177)

 

எனும் நிலையிலும் காணப்பட்டன. இந்நிலையில் தலைவனைக் கைகூடும் இன்ப நிலையில் குவளை மலர் போன்றும், தலைவனைப் பிரிந்த துன்ப நிலையில் தாமரை மலர் போன்றும் தலைவியின் கண்களானவை; காணப்பட்டதை அறியமுடிகிறது.

 

புகாரின் கண்கள் 1

இந்திர விழா வூ ரெடுத்த காதையில் பூம்புகார் நகரின் சிறப்பு குறித்துக் குறிப்பிடுகையில், அந்நகரைப் பெண்ணாகப் பாவித்து அதன் கண்களாக இலவ மலரானது திகழ்கிறது (சிலம்பு.5:214, ப.135) என எடுத்துரைப்பதன் வாயிலாய் இலவ மலரானது கண்களுக்கு உவமைப்படுத்தி உரைக்கப்படுதலையும், பூம்புகாரின் கண்களென ஓரிடத்தில் மட்டும், உவமைப்படுத்தி எடுத்துரைக்கப்படுதலையும் காணலாகிறது.

 

பொய்கையின் கண்கள் 1

அந்திமாலைச் சிறப்புச் செய்காதையில், பொய்கையைப் பெண்ணாகப் பாவித்து, பொய்கைக்கு கண்களாக குவளை மலரானது திகழ்கிறது (சிலம்பு.4:76, ப.112) என்றுரைப்பதன் வாயிலாய், பொய்கையின் கண்களுக்கு குவளை மலரை எடுத்துக் காட்டுவதைக் காணமுடிகிறது.

 

காது

பெண்களது காதுகளை வருணிக்குமிடத்து பூம்புகார் நகரைப் பெண்ணாகப் பாவித்து அதன் காதுகளுக்கு முல்லை மலரை ஒப்புமைப்படுத்தி ஓரிடத்தில் மட்டும் ஒப்புமைப்படுத்தி உரைப்பதாக புகார்;காண்டத்தில் காண முடிகிறது. இந்திர விழா வூரெடுத்த காதையில் பூம்புகார் நகரினது சிறப்பானது எடுத்துரைக்கப்படுமிடத்து, புகார் நகரைப் பெண்ணாகப் பாவித்து தாமரை போன்ற முகத்தில் முல்லை மலர் போன்ற காதுகளானது இருந்தது (சிலம்பு.5:214, ப.135) என்றுரைக்கப்படுதலால் முல்லை மலர் குறித்த பதிவைக் காணமுடிகிறது.

 

மூக்கு

ஐம்பொறிகளில் ஒன்றான மூக்கினைக் குறித்து மாதவியின் மூக்கானது ஓரிடத்திலும்25, புகார் நகரின் மூக்கானது ஈரிடத்திலும்26 ஒப்புமைப்படுத்தி உரைக்கப்படுதலைக் காணமுடிகிறது. இதில் குமிழம் மலர் ஈரிடத்திலும் (5:215; 8:75) குவளை மலர் ஓரிடத்திலும் (5:215) ஒப்புமைப்படுத்தி உரைக்கப்படுதலைக் காணலாகிறது.

 

மாதவியின் மூக்கு 1

வேனிற்காதையில், மாதவி கொடுத்தனுப்பிய கடிதத்தைப் பெறாத கோவலன் வசந்த மாலையிடம், மாதவியின் தன்மைகளை உரைக்குமிடத்து, குமிழம் மலர் போன்ற மூக்கினை உடையவளென (சிலம்பு.7:75, ப.193) உரைக்குமிடத்து, குமிழம் மலர் குறித்த பதிவினையும், குமிழம் மலரை ஒத்த மூக்கானது செந்நிறத்தை உடையது என உரைக்கப்படுதலையும் காணமுடிகிறது.

 

புகார் நகரம் மூக்கு 2

புகார் பெண்ணாகப் பாவித்து அதன் வளத்தை எடுத்துரைக்குமிடத்து குவளை மலர் போன்றும் குமிழம் போன்றும் புகார் நகரது மூக்கானது திகழ்ந்ததென (சிலம்பு.5:215, ப.135) எடுத்துரைக்கப்படுமிடத்து குவளை, குமிழம் ஆகிய மலர்களைக் குறித்து பதிவினைக் காணமுடிகிறது.

 

வாய்

அந்தி மாலை சிறப்புச் செய்காதையில், அன்னப் பறவைகள் உலாவுகின்ற தன்மையுடைய பொய்கையாகிய நங்கைக்கு “தாமரையானது சிவந்த வாயாகத் திகழ்ந்த தென்று” (சிலம்பு.4:74, ப.112) உரைக்கப்படுமிடத்து, பொய்கையானது பெண்ணாகப் பாவிக்கப்பட்டு, அப்பொய்கையில் மலர்ந்திருக்கும் தாமரை மலரானது அப்பொய்கைக்கு வாயாக அமைந்தது எனச் சிறப்பிக்கப்படுவதையும் மேலும் வாயிற்கு மலரை ஒப்புமைப்படுத்தி இவ்வோரிடத்தில் மட்டும் எடுத்துரைக்கப்படுவதையும் அறியலாகிறது.

 

கைவிரல்

கானல் வரியில் கோவலன் பாடி முடித்த பிறகு யாழைப் பெற்று காந்தள் மலரையொத்த வடிவத்தையுடைய கைவிரலால் இசைத்து செவ்வழிப் பண்ணைப் பாடினாள் (சிலம்பு.7:204, ப.184) என உரைக்குமிடத்து கைவிரலை மலரோடு ஒப்புமைப்படுத்தி ஓரிடத்தில் மட்டும் உரைக்கப்படுதலையும்,“காந்தள் மெல்விரலென”, காந்தள் மலர் குறித்த பதிவினையும் காணலாகிறது.

 

கழுத்து

கோவலன் கண்ணகி ஆகியோருக்கு மணமுடிந்து இருவரும் கூடியிருந்த வேளையில் வண்டுகள் மொய்த்து மலரும் தன்மையுடைய மல்லிகை மலர் மாலையைக் கோவலனும், செங்கழுநீர்ப்பூ மாலையினை கண்ணகியும் அணிந்திருந்தரென (சிலம்பு.2:33-34, ப.57) உரைப்பதன் வாயிலாய் மணமுடிந்து கணவன் மனைவி இணைந்திருக்கும் வேளையில் மலர் மாலையினை கழுத்திலணிந்திருந்தமையையும், மல்லிகை, செங்கழுநீர்ப் பூமாலை குறித்த பதிவினையும் காணமுடிகிறது. கானல் வரியில் சிறுமியர் மணல் வீடு செய்து விளையாடிய நிலையில், கடலலை அதனை அழிக்க, அவர்கள் சினங்கொண்டவர்களாய் தங்கள் கழுத்திலணிந்திருந்த ‘குவளை’ மலர் மாலையினை கழற்றி கடலலை மீது எறிந்தார்கள் (சிலம்பு.7:7-43, ப.159) என்பதன் என்பதன் வாயிலாய் சிறுமியர்களும் கழுத்தில் மலர்மாலை அணிந்திருந்த நிலையையும், குவளை மலர் குறித்த பதிவினையும் காணமுடிகிறது. இவ்வாறாக ஆண், பெண், சிறுமியர் தங்கள் கழுத்தில் மலர்மாலை அணிந்திருந்தமையாக ஈரிடங்களில் (2:33-34, 7:7-34) செய்தி பெறுகிறது.

 

தலை

மகளிர் தங்கள் கணவர்களோடு கூடி இன்புறும் பொருட்டு, பிற நிலைகளில் அணிகலனோடு மலர்களை தங்கள் கூந்தலில் சூடி திகழ்ந்த தன்மையை மூவிடங்களில் (4:39-41, ப.106; 5:191-193, ப.134; 6:106, ப.146) இதில் தாமரை ஓரிடத்திலும் (4:39), குவளை ஈரிடத்திலும் (4:40; 5:192), செங்கழுநீர் மூவிடங்களிலும், (4:40; 5:192; 6:106) முல்லை ஓரிடத்திலும் (5:191), மல்லிகை ஓரிடத்திலும் (1:191), இருவாட்சி ஓரிடத்திலும் (5:191) இடம் பெற்றமைகிறது. அந்தி மாலைச் சிறப்புச் செய்காதையில் மகளிர் தங்கள் கணவன்மார்களோடு கூடி இன்புறும் பொருட்டு தங்களை அழகுபடுத்துமிடத்து,‘தாமரை, குவளை, செங்கழுநீர்ப்பூ’ ஆகியவற்றைத் தங்கள் தலையில் சூடி மகிழ்ந்ததைக் (சிலம்பு.4:39-41, ப.106) காணலாகிறது. கோவலனைக் கூடி இன்புறும் பொருட்டு மாதவி, முல்லை, மல்லிகை, இருவாட்சி, குவளை, செங்கழுநீர்ப்பூ ஆகியவற்றை (சிலம்பு.5:191-193, ப.134) தலையில் சூடி அழகு பெறத் திகழ்ந்ததையும், மேலும் மாதவி தன்னை அழகுபடுத்துமிடத்து தலையில் சூடக்கூடிய அணிகலனோடு செங்கழுநீர்ப்பூவினை (சிலம்பு.6:106, ப.146) தலையில் சூடியமையையும் அறியலாகிறது. இவ்வாறாக மகளிh ;தங்கள் கணவன்மார்களைத் தங்கள் பால் ஈர்த்துக் கொள்ளும் வகையிலும், தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் நிலையிலும் தலையில் அணிகலனோடு மலர்களைச் சூடி திகழ்ந்தமையைக் காணமுடிகிறது.

 

காலநிலையில் மலர்கள் மலர்தல்

புகார் நகரில் அந்தி மாலைப் பொழுது வந்த நிலையில் மல்லிகை மற்றும் முல்லை (சிலம்பு.4:27, ப.106) ஆகிய மலர்கள் மலர்ந்த தன்மையையும், வேனிற் காலம் வந்த பொழுது தாமரை மற்றும் அசோக மலர்கள் (சிலம்பு.8 வெண்பா 1-2, ப.196) ஆகியன மலர்ந்ததெனவும், புகார் நகரில் அந்தி மாலைப் பொழுதில் “அரும்பவிழ் முல்லை” (சிலம்பு. 9:1, ப198) மலர்ந்ததென உரைக்குமிடத்தும், புகார் நகரச் சிறப்புக் குறித்து குறிப்பிடுகையில் பொய்கையிலுள்ள ஆம்பல் மலரானது புன்னை மரத்திலிருந்த அன்னத்தைக் கண்டு வெண்மதியும் நட்சத்திரமென்று எண்ணி மலர்ந்தது (சிலம்பு.7: 29:133-134, ப.172) என்றுரைப்பதன் வாயிலாய் இரவுப் பொழுதில் ஆம்பல் மலரானது மலரும் தன்மையுடையது என்பதை அறியலாகிறது. முல்லை மலரானது மாலைப்பொழுது மலர்தலென்பது இயல்பாம். இருப்பினும் இம்மாலைப் பொழுதிலும் இளவேனிற் காலத்திலும், தாமரை 127, அசோகம் 128, முல்லை 229, மல்லிகை 130, ஆம்பல் 131 ஆகிய மலர்கள் மலர்ந்த தன்மையைக் காண முடிகிறது.

 

மலர்நிறைந்த பொய்கை 2

கடலாடு காதையில் கோவலன் கண்ணகி ஆகிய இருவரும் நீராடும் பொருட்டுச் சொல்லும் வழியில் தாமரை மலர் நிறைந்த பொய்கை காணப்பட்டதென (சிலம்பு.6:115, ப.148) உரைக்குமிடத்தும், கோவலன் கண்ணகியிடம் கவுந்தியடிகள் மதுரை செல்லும் வழியாக உரைக்குமிடத்து தாமரை மலர் நிரவப்பட்ட பொய்கை நிறைந்த சோலை (சிலம்பு.10:113, ப219) என்றுரைக்குமிடத்து, மருத நிலமானது தாமரை மலர் நிறைந்த பொய்கையினை வேலியாகக் கொண்டு திகழ்கிறது என்றுரைக்குமிடத்தும் (சிலம்பு.6:148, ப.151) தாமரை குறித்த பதிவினையும், இது மூவிடங்களில்32 அமைந்து விளங்கும் தன்மையையும் காணமுடிகிறது.

 

மலர்களாலான வேலி
மலர்களை வேலியாக அமைக்கப்பட்ட கருத்து, இடம் பெறும் மூவிடங்களிலும் (6:113,150,166) நெய்தற் நிலப்பரப்பு குறித்து காணமுடிகிறது புகார் நகரில் மக்கள்,

           “மடல விழ் கானல் கடல்விளை யாட்டுக்

           காண்டல் விருப்பொடு வேண்டின ளாகிப் (சிலம்பு.6:113-114, ப.148)

சென்றனர் என்றுரைப்பதன் வாயிலாய் தாழம் பூவினைக் கொண்டு வேலியமைக்கப்பட்ட தன்மையையும்,

புகார் நகரில் கடற்கரையானது தாழம் பூக்களை வேலியாகக் கொண்டு திகழ்கிறது என்பதையும், (சிலம்பு.6:150, ப.151) கடற்கரையில் உலரும் மீன்களைக் காவல் புரியும் மகளிர் தாழம் பூக்களை வேலியாக அமைத்தனர் (சிலம்பு.6:166-167, ப.153) என உரைப்பதன் வாயிலாயும் தாழைமலர் எனப்படும் தாழம் பூவினைக் குறித்த பதிவினை மூவிடங்களில் காணலாகிறது. தூழை மலரென்பது இடம் பெறும் மூவிடங்களிலும் கடற்கரையை மையப்படுத்தியுள்ளமையால் மலரானது நெய்தல் நிலத்தில் மலரும் மலராக அமைகிறதையும் காணமுடிகிறது.

 

செம்பஞ்சுக் குழம்பு செய்யப்பட்டமை

வேனிற் காதையில், மாதவி கோவலனுக்கு கடிதம் எழுதும் பொருட்டு,“செண்பகம், மாதவி, பச்சிலை, மரிக்கொழுந்து, இருவாட்சி, மல்லிகை, வெட்டிவேர் ஆகியவற்றோடு செங்கழுநீர்ப்பூ தாழைமலர் ஆகியவற்றாலான (சிலம்பு.8:45-55, பக்.189-190) செம்பஞ்சுக் குழம்பானது செய்யப்பட்டதையும், செண்பகப்பூ அரும்பினைக் கொண்டு கடிதம் எழுதப்பட்டதையும் பயன்படுத்தப்பட்டது என்பதையும், செண்பகம், மாதவி, இருவாட்சி, மல்லிகை, செங்கழுநீர்ப்பூ ஆகிய மலர்கள் குறித்த பதிவினையும் காணமுடிகிறது.

 

வண்டுகள் தேனுண்ணல்

நிலப்பூ எனப்பம் செண்பகம், மல்லிகை (2:16) கொடிப்பூவாகிய முல்லை முதலியன (2:16), கோட்டுப்பூ முலைப்பகுதியில் பூக்கும் பூ (2:16) தாழம்பூ (2:17), மாதவிப்பூ (2:18) ஆகியவற்றில் வண்டுகளானவை, மகரந்தத் தாதுக்களை ஆராய்ந்து உண்டு களித்த நிலையிலும்,கடற்கரையிலுள்ள தாழம்பூவில் மாலைப் பொழுதில் தேனுண்ணச் சென்ற வண்டுகளானவை தேனை உண்ட களிப்பில் அம்மலரிலே உறங்கிய நிலையிலும் (6 வெண்பா:1, ப.153) செண்பகம், மல்லிகை, முல்லை, கோட்டுப்பூ, தாழம்பூ, மாதவிப் பூ ஆகிய மலர்கள் குறித்த பதிவினைக் காணமுடிகிறது.

 

பிற

அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையில் பொய்கையினைப் பெண்ணாகப் பாவித்து உரைக்குமிpடத்து, அப்பொய்கைக்கு ஆம்பல் மலரானது நறுமணத்தை அளித்தது (சிலம்பு.4:73, ப.112) என்பதன் மூலம், மகளிர் தங்கள் மீது நறுமணம் மணக்கும் நிலைக்கு மலர்களைப் பயன்படுத்திய நிலையையும், ஆம்பல் மலர் குறித்த பதிவினையும் காணமுடிகிறது. கணவனைப் பிரிந்த நிலையில் வாடும் மகளிர், குவளை மலரும், செங்கழுநீர்ப்பூ ஆகியவற்றால் விரவப்பட்ட படுக்கையில் துயில் கொள்ள விரும்பாது அதனைப் புறக்கணித்த நிலையில் (சிலம்பு.4:63-65, பக்.109-110) மகளிர் மலர்களால் விரவப்பட்ட படுக்கையில் துயில் மேற்கொண்டு வந்த நிலையையும், குவளை மலர், செங்கழுநீர்ப் பூ ஆகிய மலர்கள் குறித்த பதிவினையும் காணமுடிகிறது. கானல் வரியில் இளவேனில் காலம் வந்தும், தலைவன் வாராத துன்ப நிலையில் தலைவியானவள், நெய்தல் நிலப்பூவிடம் தன் மன வருத்தத்தை எடுத்துரைப்பதன் வாயிலாய் (சிலம்பு.7:33: 148-150, ப.176) மகளிர் தங்கள் வருத்தநிலையை இயற்கைக் கூறுகளிடத்துத் தெரிவிக்கும் பாங்கினையும், நெய்தல் நிலப்பூ குறித்த பதிவினையும் காணலாகிறது. மேலும் உலர வைத்த மீன்களைக் காவல் புரியும் மகளிர் தங்கள் கைகளில் நெய்தல் (7:22:10, ப.163) மலர்க்கொத்தையும், குவளை (7:22:10, ப.167) மலர்க்கொத்தையும் கையில் கொண்டு, மீன்களைக் கவரவரும் பறவைகளை விரட்டி வந்த நிலையையும், நெய்தல் மலர், குவளை மலர் குறித்த பதிவினையும் காணமுடிகிறது. கோவலன் கண்ணகி இருவரும் அரண்மனை எழுநிலை மாடத்தில் இன்புற்றிருந்த வேளையில், ஆம்பல், செங்கழுநீர்ப்பூ, குவளை, தாமரை (சிலம்பு.2:14-16, ப.54) ஆகிய நீர்ப்பூக்களானவை நறுமணத்தை நல்கின என்பதால் ஆம்பல், செங்கழுநீர்ப்பூ, ஆம்பல், குவளை, தாமரை ஆகிய மலர்கள் குறித்த பதிவினைக் காணமுடிகிறது. கவுந்தியடிகள், கோவலன் கண்ணகியிடம் மதுரைக்குச் செல்லும் வழியாக மலர்கள் நிறைந்த சோலை குறித்து குறிப்பிடுகையில், வள்ளிக் கிழங்கைத் தோண்டி எடுத்த பள்ளங்களை செண்பக மரங்களிலிருந்து விழுந்த பூக்கள் மறைத்திருக்கும் (சிலம்பு.10:69, பஃ214) என்றுரைத்திருப்பது வாயிலாய் இயற்கை வளத்தினையும், செண்பக மலர் குறித்த பதிவினையும் காண முடிகிறது.

 

முடிவுரை

புகார்; காண்டத்தில் காணப்படும் மலர்களில் பெரும்பான்மையாக மகளிரது உறுப்புகளுக்கு ஒப்புமைப்படுத்தப்பட்டும், இயற்கை வளம் சிறப்பிக்கப்படுமிடத்தும், மக்கள் மலர்கள் விரவப்பட்ட படுக்கையை பயன்படுத்தியிருப்பது குறித்தும், கடிதமெழுத செம்பஞ்சுக் குழம்பு தயாரிக்க பயன்படுத்தியது குறித்தும், மலர்களை மகளிர் தங்களை அழகுபடுத்திக் கொள்ள பயன்படுத்தியது குறித்தும், சிறுமியர் முதலா திருமண உறவிற்கென மக்கள் தங்கள் கழுத்தில் மலர் மாலை அணிந்தமை குறித்தும், மகளிர் இயற்கைக் கூறுகளிடத்தும் மலர்களது பயன்நிலையை இக்கட்டுரை வாயிலாய் அறியமுடிகிறது.

 

அடிக்குறிப்பு
1. தாமரை – 1:26, 2:15, 3:170, 4:39,74, 5:213,217,237, 6:115,148, 7:41-180, 8:16, வெண்பா:1
2. குவளை – 2:11,14, 4:40,64,76, 5:192,215, 6:39, 7:5-33, 7:7,43, 7:22-101, 8:75, 10:86
3. காந்தள் - 7:47-204
4. குமிழம் - 5:205,215, 8:75
5. செங்கழுநீர்ப்பூ - 2:14,34. 4:40,64, 5:192,236, 6:106, 8:46
6. தாழம்பூ - 2:17, 6:113,150,166, வெண்பா:1
7. அசோகம் - 8 வெண்பா:2
8. முல்லை – 2:16, 4:27, 5:191,214, 9:1
9. இலவம் - 5:214
10. ஆம்பல் - 2:14, 4:73. 7:29-134
11. மல்லிகை – 2:16,33, 4:27, 5:191, 8:46
12. இருவாட்சி – 5:191, 8:45
13. செய்தல் நிலப்பூ - 7:13-67, 33-149
14. செண்பகம் - 2:18, 18, 8:45, 10:69
15. மாதவி – 2:18, 8:45
16. கோட்டுப்பூ -2:16
17. குவளை – 2:11, 4:76, 7:5-33, 8:75
18. தாமரை – 3:170, 5:237, 7:41-180, 8:16
19. செங்கழுநீர்ப்பூ - 5: 236
20. இலவம் - 5:214
21. கண்ணகியின்கண்கள் - 2:11, 5:236
22. மாதவியின் கண்கள் - 3:170, 5:237, 8:16,75
23. தலைவியின் கண்கள் - 7:5-33, 41-180
24. புகார் - 5:214, பொய்கை – 4:76
25. மாதவி மூக்கு – 8:75
26. புகார் நகரம் மூக்கு – 5:125
27. தாமரை – 8 வெண்பா :1
28. அசோகம் - 8 வெண்பா:1
29. முல்லை – 9:1
30. மல்லிகை – 4:27
31. ஆம்பல் - 7:29-134
32. தாமரை – 6:115,148, 10:113

 

வேறுபெயர்கள்

  • 1. தாமரை – போது (1:26), மாமலர் (3:170, 8:16), எதிர்மலர் (7:41-180), செந்தாமரை (8 வெண்பா:1) செழும்பதி (5:213), கமலம் (5:217)
  • 2. குவளை – கயமலர் (2:11), கரியமலர் (7:5-33), நீலப்போது (6:39), குவரை (4:40), நீலம் (7:22- 101)
  • 3. குமிழம் - குமிழ் (5:205, 8:75)
  • 4. செங்கழுநீர்ப்பூ - கழுநீர் (2:14,34, 4:40, 5:236) செழுநீர் (6:160)
  • 5. தாழம்பூ - தாழை (2:17, 6:166), கைதை (6:150), மடல் (6:113), மடல் தாழை (6:வெண்பா:1)
  • 6. முல்லை – கொடிப்பூ (2:16)
  • 7. மல்லிகை – நிலப்பூ (2:16)
  • 8. இருவாட்சி – மயிலை (5:19), கருமுகை (8-45)
  • 9. நெய்தல் நிலப்பூ - நெய்தால் (7-33-149), அடும்பு (7:13-67)
  • 10. செண்பகம் - நிலப்பூ (2:16), சண்பகப் பொதும்பர் (2:10)
  • 11. மாதவி – கோதை மாதவி (2:18)