ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சங்ககால நோக்கில் பெண்ணினம் - ஒரு பார்வை

முனைவர் க.லெனின் 08 Oct 2019 Read Full PDF

முனைவர் க.லெனின்,

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி,

ஓசூர் - 635 130,

 

ஆய்வுச் சுருக்கம்:

சங்ககால மக்கள் காதலிலும் வீரத்திலும் சிறந்து விளங்கினார்கள். சங்கப்பாக்கள் ஒவ்வொன்றும் தமிழரின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் எடுத்தியம்பும். அகத்திணையில் தலைவனுக்காகத் தலைவி ஏங்குவதும் தலைவிக்காகத் தலைவன் நெஞ்சிற்குச் சொல்லியதும் குடும்பத்தின்பால் கணவன் மனைவியின் உறவை வெளிக்காட்டி நிற்பதாகும். ஒவ்வொரு மனிதனும் உள்ளத்தில் பேரன்போடு வாழ்வானாயின் இவ்வுலகம் பேறுபெற்றதாய் விளங்கும். ஆனால் கோபம், பொய், பொறாமை, வஞ்சகக் குணத்தோடுதான் நிறைய மனிதர்கள் உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். சங்ககாலத்தில் மனிதர்களின் கோபம் எங்கே வெளிப்படுகிறது? புறத்திணையில் போர்க்களங்களில் அடிமனதில் தோன்றும் கோபத்தின் எல்லையே ஒருவரை ஒருவர் வீழ்த்துகின்றனர். போரின் காரணமாக இறந்து போன மனிதப் பிணங்கள் குவிக்கப்படுகின்றன. அவர்களின் தாய், தாரம், மகள் எங்கே? அவர்கள் இவ்வுலகத்தில் எத்தனை துன்பங்களை அனுபவித்தாக வேண்டும். சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு சூழ்நிலை மாற்றத்திற்கும் பெண்ணே பாதிக்கப்படுகிறாள். குடும்பத்தின் சுமையையும் சுமக்க வேண்டும். சமுதாயத்தின் பார்வையையும் தவிர்க்க வேண்டும்.

 

           கற்பு நெறியில் வாழும் பெண்கள் நல்லறத்துடன் குடும்பம் நடத்தி

           விருந்தோம்பல், கல்வி பயின்று குழந்தைச்செல்வம் பெற்ற பெண்ணினம்.

 

           பரத்தையர், கணிகையர், காமக்கிளத்தியர் என்ற குலத்திலே பிறந்து தங்களின்

           வாழ்க்கையில் திருப்பம் காணத்துடிக்கும் பெண்ணினம்.

 

சங்ககாலப் பெண்களின் உயர்வு தாழ்வை வெளிப்படுத்த முற்படுகிறது இவ்வாய்வு.

 

திறவுச் சொற்கள்:

பெண்ணினம், கற்பு நெறி, சங்ககால மகளிர், விருந்தோம்பல், பரத்தையர்

சங்க இலக்கியங்கள் பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளைப் படம் பிடித்துக் காட்டுவன. அதனால்தான் சங்க இலக்கியங்கள் தமிழர்களின் இரு கண்களாகத் திகழ்கின்றன. சங்ககாலத்திலே பெண்கள் வீரமிக்கவர்களாகவும், புலமை பெற்று அரசர்களுக்குக் கூட அறிவுரை வழங்கியும், விருந்தோம்பல் என்ற தலையாயப் பண்பைப் பெற்றவர்களாகவும் இருந்தனர். நற்றாய், செவிலித்தாய், மகள், மனைவி, தோழி என பல்வேறு படிமை நிலைகளில் தன்னை இவ்வுலகிற்கு அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இது ஒருபுறம் இருக்க, சங்ககாலத்தில் காமக்கிளத்தி, பரத்தை என்ற பிரிவினரும் வாழ்ந்து வந்துள்ளனர். பெண்கள் வாழுகின்ற இடம் அல்லது சூழ்நிலை கொண்டே அவள் இச்சமூகத்தில் மதிப்பிடப்படுகிறாள். ஒவ்வொரு பெண்ணும் தனக்குண்டான சூழலைத் தேர்ந்தெடுப்பதில்லை. வாழும் சமூகத்திடமிருந்து திணிக்கப்பட்டதைத் திறம்பட செயல்படுத்தவே முயல்கின்றாள். சங்ககாலச் சமுதாயத்தில் பெண்ணினம் வாழக்கற்றுக்கொண்டதா? என்பதை இவ்வாய்வு முன்வைக்கிறது.

 

 

பெண்ணினம்

‘‘அச்சமும் நாணும் மடனும்முந் துறுதல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப’’(தொல்.பொருள்.களவு.நூ.8) பெண்களுக்கு அச்சம், மடம், நாணம் என்ற மூவகைப் பண்புகள் இருக்க வேண்டும் என்கிறார் தொல்காப்பியர். அச்சம் - பெண்களின் மனதில் குறிப்பின்றித் தோன்றும் நடுக்கம். நாணம் - பெண் தன்மைக்குப் பொருந்தாத செயல்களில் ஒதுங்கி இருப்பது. மடம் - மனதால் புரிந்தும் புரியாமல் இருத்தல். பெண்ணினம் பண்பாலும் நெறியாலும் சிறந்தவர்கள். இவ்வுலகம் தழைக்க மக்களைப் பெற்றுக்கொடுத்தவர்கள். பெண்ணினம் இல்லையாயின் மனித இனமே இல்லா ஒன்றாகியிருக்கும்.

 

கல்வி நெறியில் பெண்கள்
பெண்கள் இல்லாத சமூகம் வெறுமையுற்றது. இவ்வுலகில் பெண்மையைப் போற்ற வேண்டும் ‘‘சங்ககாலப் பெண்கள் ஆண்கள் அளவிற்குச் சமவுரிமை பெறவில்லை என்றாலும் அடிமைகளாய் வாழ முடியாதவர்களாய் இல்லை. சமயம், கல்வி, காதல் ஆகியவற்றில் உரிமை மகளிராய்த் திகழ்ந்தனர்’’1 என இறையரசன் கூறுவது உண்மையானது. சங்க காலத்தில் நச்செள்ளையார், நன்முல்லையார், ஆதி மந்தியார், நப்பசலையார், ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு, நக்கண்ணையார், நெட்டிமையார், நெடும்பல்லியத்தை, பொத்தியார், பேய்மகள், இளவெயினி, வருமுலையாரித்தி, வெண்ணிக்குயத்தியார், வெள்ளிவீதியார், பாரி மகளிர்கள், காமக்கண்ணியார், முடத்தாமக்கண்ணியார், பொன்முடியார், காக்கைப்பாடினியார், ஒளவையார் போன்ற பெண்பால் புலவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியுள்ளனர். அவர்களின் செருக்கு பற்றிக் கூறும்போது.

 

           ‘‘வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப்

           பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!

           கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி

           தன் அறியலன் கொல்? என் அறியலன் கொல்?

           அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,

           எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே’’ (புறம்.206:4-13)

 

எனக் குறிப்பிட்டுள்ளனர். என்னிடம் புலமை இருக்கிறது. நான் எந்த ஒரு மன்னனையாவது புகழ்ந்து பாடிப் பரிசிலைப் பெற்றுவிடுவேன். நெடுமான் அஞ்சியைப் பற்றி எனக்குத் தெரியாதா? என்னைப் பற்றி நெடுமான் அஞ்சிக்குத் தெரியாதா? நீ இல்லையென்றால் என்ன? எனக்கு எந்த திசைச் சென்றாலும் சோறு கிடைக்கும் என ஒளவையார், அதியமானிடம் கேட்பதிலிருந்து பெண்களுடைய உயர்வை சங்ககாலத்தில் நலமாக உள்ளது என அறியலாம். ‘‘மகளிர் தம் குடும்பப்பாங்கிற்குத் துணை செய்யும் கல்வியினைப் பயின்றனர். மகளிர் கற்ற கல்வி அவர்தம் உடலுறுப்புக்களுக்குப் பயிற்சி தருவதாகவும் திருமணத்திற்குப் பிறகு இல்லற வாழ்வில் ஈடுபடுவதற்குத் துணைசெய்யும் கருவியாகவும் அமைந்தது. குடும்பக் கல்வியினைத் தாயிடமும், செவிலித்தாயிடமும், தோழியிடமும் கற்றாள்’’2 என்று பெண்களின் கல்விநிலை பற்றி சி.பாலசுப்பிரமணியன் கூறுகின்றார்.

 

காதல் மகளிர்
சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள பெண்கள் சுதந்திரமாகவும், அதே நேரத்தில் தன்னுடைய தலைவனைத் தானே தெரிவு செய்யும் மனப்பான்மையையும் பெற்றிருந்தனர். தங்கள் தலைவர்களோடு தினைப் புனம், காடு, வயல், கடற்கரை மணல், சுனை போன்ற இடங்களில் காதலை வளர்த்துக்கொண்டார்கள்.

 

           ‘‘நிலத்தினும் பெரியதே, வானினும் உயர்ந்தன்று

           நீரினும் ஆர் அளவின்றே

           கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு

           பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’’ (குறும்.3:1-4)

 

இங்கு தலைவனோடு தலைவி கொண்ட காதலானது நட்பு, மொழி, மனம், மெய் என்பதைக் கடந்து நிற்பது ஆகும். நிலம், வான், நீர் என மூன்றினையும் விட உயர்ந்தது என்கிறார் ஆசிரியர். ஊரில் ஏற்பட்ட அலரால் தலைவியுடைய காதல் பெற்றோர்க்கு தெரிய வருகிறது. பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கும் நேரத்தில், தலைவி தன் தலைவனோடு உடன்போக்கு செல்வதற்கும் தயங்க மாட்டாள் என்கிறது சங்க இலக்கியப் பாக்கள்.

 

துள்ளித் திரிந்த மகளிர்கள்
எப்போதும் மகிழ்ச்சியும் மனநிறைவுமாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இல்லையென்றால் குறிஞ்சிப்பாட்டிலே தலைவி ஒருத்தி தன் தோழிகளுடன் சுனை நீராடுகையில் அங்கே இருக்கும் கற்பாறையில் தொண்ணூற்று ஒன்பது வகையான மலர்களைப் பறித்து வைத்து அழகு பார்த்திருக்க மாட்டாள்.

 

           ‘‘செறி அரிச் சிலம்பின், குறுந் தொடி மகளிர்

           பொலம்செய் கழங்கின் தெற்றி ஆடும்

           தண் பொருநை வெண் மணல் சிதைய,

           கருங் கைக் கொல்லன் அரம் செய் அவ் வாய்

           நெடுங் கை நவியம் பாய்தலின், நிலை அழிந்து,’’ (புறம்.36:3-7)

 

அழகிய வளையல்களை அணிந்த மகளிர்கள் வண்டல் மண்ணால் பாவை செய்வதும், மணல் மேட்டிலே கழற்சிக் காய்களை ஒருவருக்கொருவர் வீசி விளையாடுவதும், பொற்சிலம்பு ஒலிக்க மேல்நிலை மாடத்தில் பந்தாடுவதையும், சுனை நீராடல், சிற்றில் இழைத்தல், துணைங்கையாடல், குரவை ஆடல் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவதுமாக இருந்துள்ளனர்.

 

நல்லறமே இல்லறம்
ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் தவிர்க்க முடியாதது. தன்னைத் திருமணப் பந்தத்திலே ஈடுபடுத்தி வாழ்க்கையை முழுமை ஆக்குகின்றாள். ஒவ்வொரு பெண்ணும் தனக்கு எவ்வாறு கணவன் அமைய வேண்டும் என கனவு காண்பாள். அக்கால மகளிரும் தனக்கு வாய்க்கும் கணவன் வீரம் உடையவனாகவும், அஞ்சா நெஞ்சம் உடையவனாகவும் இருக்க வேண்டுமென விரும்பினர். காளையை அடக்கும் வீரர்கள், வட்டக்கல் தூக்கும் வீரர்களுக்கே தங்கள் மனதினைப் பறிக்கொடுத்தனர். வீரம் இல்லாத ஆண்களை வேண்டாம் என ஒதுக்கினர் என்பதை,

 

           ‘‘கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்

           புலலாளே, ஆயமகள்

           அஞ்சார் கொலைஏறு கொள்பவர் அல்லதை,

           நெஞ்சினர் தோய்தற்கு அரிய - உயிர்துறந்து

           நைவாரா ஆயமகள் தோள்’’ (கலித்.103:63-67)

 

கலித்தொகை தலைவி மறுபிறப்பும் கூட அந்த வீரமற்றவனைத் திருமணம் செய்யமாட்டேன் என்கிறாள். சங்க இலக்கியத்தில் ஒத்த வயதுடைய தலைவனும் தலைவியும் காதல் கொண்டு திருமணம் செய்யலாம் என்கிறது. தொல்காப்பியர் கூட,

 

           ‘‘பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு

           உருவு நிறுத்த காம வாயில்

           நிறையே அருளே உணர்வோடுதிரு என

           முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே’’ (தொல்.பொருள்.மெய்.நூ.25)

 

என பத்து வகையான ஒழுகலாறுகளைக் கூறிச் செல்கின்றார். தலைவியின் திருமணத்தின் போது, பந்தலிட்டு, புதுமணல் பரப்பி, மனைவிளக்கு ஏற்றி மாலைகளைத் தொங்க விட்டனர் என்றும், புதல்வனைப் பெற்றெடுத்த மகளிர்கள் நெல்லும் மலரும் கலந்ததை அம்மணமக்கள் மேல் தூவி வாழ்த்துவதாகக் கூறுகிறது,

 

           ‘‘உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை

           பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்

           தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி,

           மனை விளக்குறுத்து, மாலை தொடரி,

           கனை இருள் அகன்ற கவின்பெறு காலை,

           கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்

           உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,

           பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்

           முன்னவும் பின்னவும் முறை முறை தரதர,

           புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று

           வால் இழை மகளிர் நால்வர் கூடி,

           கற்பினில் வழாஅ, நற்பல உதவிப்,

           பெற்றோற் பெட்கும் பிணையை ஆக! என’’ (அகம்.86:14)

 

அகநானூற்றுப் பாடல் கூறுகிறது. நல்லநேரம் பார்த்தல், சகுனம் பார்த்தல், திருமணத்தின் போது உணவு பரிமாறுதல், (அகம்.136) முரசு கொட்டுதல் போன்ற நிகழ்வுகள் சங்க காலத்தில் இருந்ததாக அறிகின்றோம். ஆனால் அக்காலத்தில் தாலிகட்டும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. மலைப்பக்கத்தில் வாழும் குறவர்கள் தம் மனைவிமார்கள் தவறாது தங்கள் கணவர்களைத் தினம்தினம் தொழுதெழுவதால் அக்குறவர்கள் தொடுக்கும் அம்புகள் குறிதவறிச் செல்லாதாம் என சங்கப்பாடல் கூறுகிறது. சங்ககாலத்து மகளிர் தங்களுடைய கணவர்களையும் கண்ணுக்குக் கண்ணாக போற்றி வந்தனர். திருமணத்திற்கு முன் துள்ளித் திரிந்த மகளிர் திருமணம் ஆனபிறகு தன் கணவனே உயிர் என்று அன்பிற்கு ஏங்கும் பாவைகளாகவும் திகழ்கின்றனர்.

 

           ‘‘இம்மை மாறி மறுமை ஆயீனும்,

           நீ ஆகியர் எம் கணவனே

           யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே’’ (குறும்.49:3-5)

 

இந்தப்பிறப்பு மட்டுமின்றி இனி வருகின்ற ஏழ்எழு பிறப்புகளிலும் நீயே என் கணவனாக வர வேண்டும் எனச் சங்ககால மகளிர் ஆசைப்பட்டனர். மேலும், பொருள் தேடத் தன் தலைவன் பிரிந்து சென்றால் அவன் இல்லாத நாட்களை ஒவ்வொரு நாளும் யுகமாகக் கழித்தும், முள் படுக்கையில் இருப்பது போன்று எண்ணியும், பிரிந்து சென்ற தலைவனின் காட்டு வழிக் கொடுமையினை எண்ணி வருந்தியும், கார்காலத்தை எதிர் நோக்கியும், சுவரிலே கோடிட்டு தலைவன் வரவை எதிர்ப்பார்த்தும் காத்துக்கொண்டிருந்தனர் என நற்றிணைப் பாடல் (நற்.324) மூலம் அறியலாம். அதுபோல் ஐங்குறுநூற்றில் ஒரு தலைவி திருமணமாகித் தலைவனுடன் தன் புகுந்த வீட்டிற்குச் செல்கிறாள். புகுந்த வீட்டிற்குச் சென்ற ஓரிரு மாதம் கழித்து முதன் முதலில் தன் பிறந்த வீட்டிற்கு வரும் தலைவியிடம் நலம் விசாரிக்கிறார்கள் உறவினர்கள் என்பதனை,

 

           ‘‘அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைத்

           தேன் மயங்கு பாலினும் இனிய - அவர் நாட்டு

           உவலைக் கூவற் கீழ

           மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே’’ (ஐங்,203:1-4)

 

என்னும் பாடல் வரியில், குளத்திலே கலங்கிய தண்ணீரை வெப்பம் மிகுதியால் அந்தப்பக்கம் சென்ற மானானது உண்டது. அந்த எச்சில் தண்ணீர் கூட எனக்கு இனிய தேனோடு கலந்த பசுவின் பாலை விட இனிமையானது என்கிறாள் தலைவி. தன் புகுந்த வீடும், நாடும், ஏழ்மை வறட்சி உடையது என்பதை அறிந்திருந்தும், உறவினர்களிடம் தன் கணவனின் நலன் கெடாதவாறு தலைவி கூறுகிறாள். இதைவிட ஒரு பெண் தன்னுடைய புகுந்த வீட்டிற்கு வேறென்ன பெருமை சேர்க்க முடியும்.

 

விருந்தோம்பல்
நம் தமிழ்ப் பண்பாட்டில் பகைவர்களாக இருந்தாலும் வீட்டிற்கு வந்தால் அவர்களை வா என்று அழைக்கும் வழக்கம் நம் மக்களிடையே உள்ளது. மகிழ்ச்சியிலும் பெரும் மகிழ்ச்சி மற்றவர்களுக்கு உணவு அளித்து ஆனந்தப்படுவதே ஆகும். அப்படிப்பட்ட உயர்வான பண்பினை எப்போதும் குறையாத அளவிற்குப் பெற்றிருந்தனர் சங்ககாலப் பெண்கள். தொல்காப்பியர் கூட,

 

           ‘‘விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்

           பிறவும் அன்ன கிழவோன் மாண்புகள்’’ (தொல்.பொருள்.கற்பு.11)

 

எனக் கூறுகிறார். ஒழுக்கமும், பொறுமை குணத்தையும், அடக்கமான உடைமையினையும் கொண்ட பெண்கள் விருந்தினரை நன்றாகக் கவனிப்பார்கள். ‘‘விருந்தினரை வரவேற்று அவர்கள் விடைபெறும்போது அவர்கட்கு வெற்றிலை பாக்கு கொடுக்கும் வழக்கம் உள்ளது’’3‘‘விருந்தினரை வழி அனுப்பும்போது ஏழடி உடன் பின் சென்று அனுப்புதல் வழக்கம்’’4 போன்றவை தமிழரின் பண்பாட்டைக் கூறுகிறது.

 

           ‘‘கொழுங் கிழங்கு மிளரக் கிண்டி, கிளையோடு,

           கடுங் கண் கேழல் உழுத பூமி,

           மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்,

           மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி

           வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி,

           சாந்த விறகின் உவித்த புன்கம்

           கூதளம் கவினிய குளவி முன்றில்,

           செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்’’ (புறம்.168:3-13)

 

பன்றி தோண்டிய வயலில் தினை விதைத்து, அவற்றை அறுவடையும் செய்த உழவுப் பெண்கள் தினைச் சோற்றோடு பாலை உலை நீரோடு வார்த்த மானிறைச்சியைத் தன்னுடைய விருந்தினர்க்குப் படைத்தனர். மேலும் தங்கள் கணவன் இல்லாத நேரங்களில் விருந்தோம்பல் செய்வதில்லை என்ற செய்தி அவர்களின் கற்புத்திறத்தைக் காட்டுவதாக அமைகிறது.

 

குழந்தைச் செல்வம்
செல்வம் எவ்வளவு இருப்பினும் அது குழந்தைச் செல்வத்திற்கு ஈடாகாது. ஒரு பெண் பிறந்து விட்டால் அவள் தாய்மையை எய்தாவிடில் அவளுடைய உடல் தீயிலே வேகாது.

 

           ‘‘படைப்பப் பல படைத்துப் பலரோடு உண்ணும்

 

           உடைப் பெருஞ் செல்வர் ஆயினும், இடைப் படக்

           குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,

           இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,

           நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,

           மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

           பயக் குறை இல்லை - தாம் வாழு நாளே’’ (புறம்.188:4-5)

 

குழந்தையானது குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி இட்டும், பிசைந்தும், வாயால் கவ்வியும், கையில் துழாவியும், சோற்றை தன் உடம்பிலே கொட்டியும் உண்ணுகின்ற அழகைப் பார்ப்பதற்கு அந்தத் தாய்க்கு ஆயிரம் கண்கள் வேண்டும். இப்படிப் பாசம் மிகுந்த தாயாக மட்டும் அல்லாமல் வீரம் மிகுந்த தாயாகவும் இருக்கின்றாள். புறநானூற்றிலே ஒரு தாய் முதல் நாள் தந்தை, அடுத்த நாள் கணவன், அடுத்த நாள் தன் மார்மேலும் தோள்மேலும் போட்டு வளர்த்த பிள்ளையைப் போருக்கு அனுப்புகிறாள். அப்போரிலே தன்மகன் மார்பிலே புண் பட்டு வீரமரணம் அடைந்ததை எண்ணி மார்பிலே பால் சுரந்ததாம் அந்தத் தாய்க்கு என்கிறார் ஆசிரியர்.

 

பரத்தை மகளிர்கள்
கணவன் பரத்தையர் பால் பிரிந்து சென்றாலும் அவன் மேல் கோபம் கொள்ளாமல் ஊடலை மட்டும் காட்டும் மகளிரையும் சங்ககாலத்தில் காணமுடிகிறது. சங்ககாலத்திலே கற்புடைய மகளிர் இருப்பினும் பரத்தை போன்ற விலை மகளிரும் இருக்கவே செய்கிறார்கள். அவ்வாறு தொன்று தொட்டுவரும் மனிதர்களின் வாழ்க்கையில் பரத்தையர் என்றொரு குலம் காலம் காலமாய் மனித சமுதாயத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

 

யார் இந்த பரத்தையர்கள்?
பழங்காலத்தில் தன் நகரத்தை விட பக்கத்தில் உள்ள நகரம் செல்வச் சிறப்புமிக்கது எனில், உடனே அந்நகரைக் கைப்பற்ற அக்கால மன்னர்களுக்கு எண்ணம் உண்டானது. அதன் விளைவாக எதிர் நாட்டு மன்னனை வழிய அழைத்துப் போரிட்டனர். இப்போரில் வெற்றி தோல்வி என்பது இரு நாட்டு மன்னர்களுக்குத்தான். ஆனால் இப்போரிலோ உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையோ பல. மனிதர்கள் மட்டுமின்றி குதிரை, யானை போன்ற விலங்குகளும் தான். இப்படிப்பட்ட பொறாமை, வஞ்சகம், ஆசை உள்ள காலக்கட்டத்தில் பகை நாட்டு மன்னனைத் தோற்கடித்த கையோடு அவ்வீரர்கள் அந்நாட்டில் உள்ள பொன், பொருட்களை எல்லாம் கொள்ளையடித்து தன் நாட்டிற்கு எடுத்துச் சென்றார்கள். இது போதாது என்று பெண்களின் தலைமுடியினை அறுத்து தன் தேரை இழுக்கப் பயன்படுத்தினான் எனப் பதிற்றுப்பத்து கூறுகிறது. மேலும் போரிலே இறந்த வீரமறவர்களின் மனைவி அன்றிரவே தன் கணவனோடு தீயினுள் புகுவாள். இல்லையென்றால் பகை நாட்டு மன்னன், பெண்களை வலிய இழுத்துச் செல்வான். அங்கு அவன் நாட்டிலே அடிமைகளாகவும், வீரர்களுக்கு தன் உடல் மூலம் விருந்து படைப்பவளாகவும் இருந்து சாகவேண்டும். இப்படியெல்லாம் புண்படுவதைவிட இன்றே கணவனோடு தீ புகுதல் தகும் என மகளிர்கள் நினைத்திருக்க வேண்டும். ‘‘இதுவே, பின்னாளில் உடன்கட்டை ஏறுவதற்குக் காரணமாய் இருந்ததது’’5 என முனைவர் ச.முத்துச்சிதம்பரம் கூறுகின்றார். கணவனோடு தீ புகுந்த மகளிரின் மகள்கள் தன் பெற்றோரை இழந்து அநாதை ஆக்கப்பட்டு இருக்கலாம். அந்தச் சின்னஞ்சிறு வயதில் தனது வயிற்றுப் பிழைப்பிற்காக அந்த ஊரில் உள்ள கோவில்களில் வாசலைக் கூட்டியும், பெருக்கியும் வேலை செய்து அங்கு கொடுக்கும் உணவினை உண்டு தனது வாழ்க்கையினை நடத்தியிருக்கலாம். சொந்தபந்தம் இல்லாத அவர்களை சில ஆண் நாயக வர்க்கத்தினர் பாலியல்ரீதியாகத் தொந்தரவு கொடுத்திருக்கலாம். காலம் செல்லச் செல்ல இதுவே தொழிலாக மாறி இருக்க வேண்டும்.

 

தொல்காப்பியர் கூறும் பரத்தையர்கள்
பரத்தைப்பெண்கள் தொல்காப்பியர் வாழ்ந்த காலத்திற்கு முன்பே வாழ்ந்திருக்க வேண்டும். அதனால்தான் தனது கற்பியலில்

 

           ‘‘பரத்தையற் பிரிந்த காலையான’’ (தொல்.கற்பு.185)

எனத் தலைவன் பரத்தையரின் இல்லத்திற்குச் செல்வான் எனக் கூறுகிறார். தொல்காப்பியர் பரத்தையரைக் காமக்கிளத்தியர் எனவும் அழைக்கின்றார். சங்க கால இலக்கியத்தில் அகப் பொருள் பாடல்களில் பரத்தையர் பிரிவுச் செய்தியைக் காணலாம். குறிப்பாக மருதத்திணை பாடல்களில் மிகுதியாகக் காணப்படும். சங்க காலத்தைப் பொறுத்தவரை பரத்தமை என்பது ஒழுக்கமாகவே கருதப்பட்டிருக்கிறது. பரத்தை, கணிகையர், சேரிப் பரத்தையர், காம கணிகையர், காதல் பரத்தையர், காமக்கிளத்தியர், உரிமை மகளிர் எனப் பல்வேறு பெயர்களுடன் அவர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

 

பரத்தையர்களின் வாழ்க்கை
மதுரைக் காஞ்சியில் பரத்தை ஒருத்தி கூர்மையான பற்களையும், மூங்கில் போன்ற தோளினையும், கைவந்திகை என்னும் அணிகலனும், நீண்ட கருமுடியினை உடையவளும், இனிமையாகப் பேசும் திறனுடையவளான இவள், தன்னை அழகு செய்து கொண்டு வீதிகளில் மெத்தென நடந்து இளைஞர்களைக் கைத்தட்டி அழைத்தாளாம் என்பதனை,

 

           ‘‘செந்நீர்ப் பசும்பொன் புனைத்த பாவை

           செல் சுடர்ப் பசுவெயில் தோன்றியன்ன

           செய்யர், செயிர்த்த நொக்கினர், மடக்கண்,

           ஐஇய கலுழும் மாமையர், வை எயிற்று

           வார்த்த வாயர், வணங்கு இறைப்பணைத் தோள்,

           சோர்ந்து உகுவன்ன வயக்குறு வந்தகை

           தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இளமுலை,

           மயில் இயலோரும், மட மொழியோடும்,

           கைஇ மெல்லிதின் ஒதுங்கி, கைஎறிந்து,

           கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப’’ (மதுரை.410-420)

 

என ஆசிரியர் கூறுகின்றார். இவர்கள் நீண்ட வீதிகளிலும் வீடுகள் தோறும் கையில் மணம் கமலும் பூக்களை ஏந்தியவர்களாய் நிற்பார்களாம். ஐங்குறுநூற்றில் பரத்தையர் வீட்டிற்குச் சென்றிருந்த கணவன் மேல் மனைவி மிகுந்த கோபத்துடன் இருந்தாள். அவனைக் கண்டவுடன் அவள் கோபம் மாறிவிட்டது, இதற்கு அன்பே காரணம் என ஆசிரியர் கூறுகிறார். ‘‘ஆண்கள் பரத்தையர்களின் வீட்டிற்குப் போகும் குணமுடையவராக இருப்பினும், இல்லாவிடினும் எப்போதும் அன்புடன் தான் இருந்தார்கள்’’6 என சாமி சிதம்பரனார் கூறுகிறார். பண்டைய தமிழர்கள் பலதார மணம் புரிந்து வந்துள்ளனர். தலைவன் பரத்தையரிடம் செல்வதும், தலைவி ஊடல் கொள்வதும் தன் குழந்தையை முன்னால் நிறுத்தி தலைவன் தலைவியின் ஊடலைத் தணிப்பதும், பரத்தை தன் தலைவனின் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவதும் அதனைக் கண்ட தலைவி பரத்தையைத் திட்டுவதும் மருதத்திணையில் நடக்கும் அன்றாட நிகழ்வாகும். இப்பரத்தையர்களால் பல குடும்பங்களில் சண்டைசச்சரவும் எழுந்தது. இப்பரத்தையர் ஒழுக்கத்தினைச் சான்றோர்களும், பிறப்பெண்களும் கண்டித்தும் இருக்கிறார்கள்.

 

கணிகையர்கள் கற்று வைத்திருக்க வேண்டிய கலைகள்

           1. ‘‘வேத்தியல் மற்றும் பொதுவியல் கூத்துக்கள்

           2. பந்தெறிந்து ஆடுதல்

           3. உணவு வகை பற்றிய கலை

           4. காதற்கலையின் எல்லா செயல்களும்

           5. திறம்படவும் நயம்படவும் பேசுங்கலை

           6. பிறர் காணாது திரியும் கலை

           7. பிறர் எண்ணங்களை உய்த்துணரும் வன்மை

           8. வேடமணிதல்

           9. சோதிடம் முதலிய 64 கலைகளை உணர்ந்திருத்தல்’’7

 

கணிகையர்கள் இவையெல்லாம் கற்றிருக்க வேண்டுமென முனைவர் ந.சுப்ரமண்யன் கூறுகின்றார். இப்பரத்தையர்கள் தங்களது தொழிலைச் செய்யாது விடுப்பின் தண்டனையும் தரப்பட்டது. தலைவனின் பிள்ளையைக் கடைத்தெருவில் பார்த்தாள் ஒரு பரத்தை. அக்குழந்தையின் மீது ஆசைக்கொண்டு வேண்டியவனவற்றை வாங்கிக்கொடுத்தாள். அதைக் கண்ட தலைவி கோபத்துடன் பரத்தையைத் திட்டுவதுடன் குழந்தையையும் அடிக்கிறாள் எனச் சங்கப்பாக்கள் சுட்டுகின்றன. குழந்தையின் மீது காட்டும் பாசம் கூட பரத்தையர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

 

கைம்பெண்ணும் கலக்கமும்
பெண்ணாகப் பிறந்து பல தருணங்களில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அவளுடைய கணவன் இறந்துபட்டால் அப்பெண்ணின் நிலை என்ன? இழிவு, துன்பம், போராட்டம் தான் வாழ்க்கையாக அமைகிறது. கைம்மை பற்றி பா.இறையரசன் கூறும்போது, ‘‘கணவன் இறந்த பிறகு வாழும் மகளிர் கைம்பெண்கள், ஆளில் பெண்டிர், கழிகல பெண்டிர், படிவ மகளிர், உயவர் பெண்டிர், பருத்திப் பெண்டிர் எனப்பட்டனர், மேலும் அவர்கள் அணிகலன்கள் அணியாமலும், உப்பில்லாத உணவை மட்டுமே உண்டனர்’’8 என்கிறார். இப்படிப் பெண்கள் சிறுவயதில் மகிழ்ச்சியும் இன்பமும், பெற்றவர்கள், திருமணம் ஆகி கைம்பெண் ஆனால் அவர்கள் உடன்கட்டை (புறம்.247) ஏறுவது என்பது வருத்தம் அளிக்கக் கூடியதாக உள்ளது. பாதுகாப்பு அற்றவராகி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

முடிவுரை
சங்ககாலத்தில் மூவகை மகளிர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். குடும்பத்து நலன் சார்ந்த நல்உறவுகளைக் கொண்ட பெண்கள் என முதல் வகையும், புலமைத்தன்மையோடு வாழும் பெண்பாற்புலவர்கள், எதிர் காலத்தை அறியும் கட்டுவிச்சி, வெறியாட்டு நடத்தும் குறமகள் முதல் விறலியர்கள் வரையிலான இரண்டாம் வகையும், தன்னை விற்றுப் பிழைப்பு நடத்தும் விலைமாதர்கள் என்ற மூன்றாம் வகையாகவும் இருந்து வந்துள்ளனர். ஒவ்வொரு கால நிகழ்வுகளிலும் பெண்களின் வாழ்வானது அலைக்கழிக்கப்படுவதும், தூக்கி எறியப்படுவதும் வாடிக்கையாகவே இருக்கிறது. குடும்பத்தில் உள்ள பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வதும் பரத்தையர் போன்ற பெண்கள் வாழ்க்கையே பிரச்சனையாக எதிர்கொள்ளவும் தயாராகின்றனர். பிரச்சினையுள்ள ஒரு சாராரைத் தவிர்த்துப் பார்த்தால் ஒவ்வொரு பெண்ணினுடைய வாழ்வும் சமூக மதிப்பீட்டில் முதன்மை அடைந்தே வருகிறது எனலாம். பண்டையக் காலத் தமிழ்ப் பெண்ணினம் அகப்புற வாழ்வில் சிறப்புற்று விளங்கியதை இதன்மூலம் காணமுடிகிறது.

 

சான்றெண் விளக்கம்

 

  • தமிழர் நாகரிக வரலாறு, பா.இறையரசன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு . 1993, பக்.296-297.
  • சங்ககால மகளிர், டாக்டர் சி.பாலசுப்பிரமணியன், பாரிநிலையம், சென்னை, முதற்பதிப்பு: டிசம்பர்-1983, ப.18
  • தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், டாக்டர்.கே.கே.பிள்ளை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. மறுபதிப்பு: 2000, பக்.65
  • தமிழர் நாகரிக வரலாறு, பா.இறையரசன், பூம்புகார் பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு: 1993, பக்.266.
  • பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், முனைவர் ச.முத்துச்சிதம்பரம், முத்துபதிப்பகம், திருநெல்வேலி. ஐந்தாவது பதிப்பு-அக்டோபர் 2005,ப-91.
  • எட்டுத்தொகையும் தமிழர்பண்பாடும், சாமி.சிதம்பரனார், அறிவுப்பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு-ஜூலை 2008,ப-37
  • சங்ககால வாழ்வியல், முனைவர் ந. சுப்ரமண்யன், நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. இரண்டாம் பதிப்பு-ஜனவரி 2010, ப-398
  • தமிழர் நாகரிக வரலாறு, பா.இறையரசன், பூம்புகார் பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு: 1993, பக்.257.