ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

குறுந்தொகையின் கட்டமைப்பில் அகமரபு கூறுகள்

முனைவர் சு.பேச்சியம்மாள் 08 Oct 2019 Read Full PDF

முனைவர் சு.பேச்சியம்மாள்,

தமிழியல் துறை,

உதவிப் பேராசிரியர்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,

திருநெல்வேலி,

 

ஆய்வுச்சுருக்கம்:

ஒரு நூலின் கட்டமைப்பு என்பது ஒரு நூலை அணுகும் முறைகளில் ஒன்று. எந்த ஒரு நூலானாலும் ஒரு குறிக்கோளை முன்னிறுத்தியே இயற்றப்படுவது உண்டு. அதற்காகப் பல கூறுகளையும், உத்திகளையும் படைப்பாளன் கையாளுவதுண்டு. அதனை முழுமையாகப் படிக்கும் போதுதான் உணர முடிகிறது. இந்த முறையில் ஒரு நூல் கட்டமைப்பட்டிருப்பதையே ‘கட்டமைப்பு’ என்கிறோம். அந்த வகையில் குறுந்தொகை குறித்தான பொதுவான பார்வையும், பாடல் அமைக்கப்பட்டிருக்கும் உத்திகள், நோக்கம், வடிவம், மரபு, மாற்றங்கள் அவை புலப்படுத்தும் தன்மை சமூக மதிப்பீடுகள் ஆகியவை குறித்துப் பேசப்படுவதோடு கட்டமைப்பில் அகமரபின் கூறுகளையும் குறுந்தொகை எவ்வாறு எடுத்துரைக்கிறது என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்

           

திறவுச் சொற்கள்:

குறுந்தொகை, கட்டமைப்பு ,அணுகுமுறை, பழந்தமிழ், தலைவி

           

முன்னுரை:

பழந்தமிழ்ச் சமூகம் பல படிநிலைகளைக் கடந்து வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களின் உற்பத்தியிலும் வாணிகத்திலும் சிறந்து விளங்கின. இனக்குழுக்கள் தோன்றி குடும்பம், ஊர், நகரம், நாடு போன்ற சமுதாயம் வளர்ச்சியோடு மொழியின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தன. பல்லாயிரம் ஆண்டின் வரலாற்றை உணர்த்துவதோடு பிறமொழி இனத்தவர் தமிழகத்தில் ஊடுருவி இருத்தலையும் தங்கள் பண்பாட்டின் மரபுகளையும் நடைமுறைகளையும் தமிழ்மண்ணில் ஊன்றிவிட முயன்று கொண்டிருந்த சூழலையும் தமிழர்களால் கட்டமைக்கப்பட்டிருந்த சமுதாயத்தைப் படம்பிடித்துக் காட்டுவதால்தான் அவை இன்றும் அழியாமல் நிலைத்து நின்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. சங்க அக இலக்கியங்கள் ஒரு தனித்தன்மையைக் கொண்டு விளங்குவதற்கு ஏற்றதாகவே திணை, துறை, முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய வரையறைகளை வகுத்து வைத்துள்ளனர் புலவர்கள். இந்த ஒழுங்குமுறையை வைத்துக் கொண்டதால்தான் சங்க அகப்பாடல்கள் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன எனலாம், இத்தகைய கட்டுக்கோப்பான அகப்பாடல்களைக் கொண்ட இலக்கியங்கள், பிற மொழிகளில் இல்லை என்பது உண்மை. கிரேக்கம், சமஸ்கிருதம் போன்ற செம்மொழிகளில் அகப்பாடல்கள் இருந்தாலும் வரைவின் ஒழுங்கிலும் போக்கிலும் நோக்கிலும் தமிழ் அகப்பாடல்கள் பெரிதும் மாறுபட்டு தனித்தன்மையுடன் திகழ்ந்து இருப்பதை உலகின் பலமொழி இலக்கியங்களை ஆய்வு செய்தோர் கண்டறிந்து உரை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் வடபுலத்தில் தோன்றிய பழந்தமிழோடு ஆரியமும் கலந்து விட்டது. அந்தக் கலப்பின் மொழிதான் பிராகிருதம் என்பர். மொழியியல் அறிஞர்கள் பிராகிருதத்திற்கும் தமிழிற்கும் பல ஒற்றுமைகள் காணப்பட்டுள்ளன. மராட்டிய ஆந்திர நாடுகளில் பிராகிருதம் வளர்ச்சியடைந்ததால் அம்மொழியில் தமிழ் அகப் பாடல்களின் சாயலைக் கொண்ட அகப்பாடல்கள் தோன்றின என்பது கவனிக்கத்தக்கது. அவ்விலக்கியங்களில் அகமரபான திணைப் பாகுபாடு, களவு, கற்பு என்ற கைகோள் வரையறை இயற்கையின் பின்புலம் போன்ற அமைவுகள் எதுவும் இல்லை. சங்க அக இலக்கியத் தலைவியின் உணர்வு நிலைகளையோ பண்பு நிலைகளையோ அப்பாடல்களில் காணக் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் காதல் பாடல்களில் பெண்ணின் உணர்வை வரைந்து காட்டுவதில் பாணர்களின் அகப்பாடல்களில் பெண் ஓர் அஃறிணைப் பாத்திரமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளதையும் இங்கு சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

           

குறுந்தொகை:

குறுந்தொகை ஒரு தொகை நூல். பலகால இடைவெளிகளில் பல புலவர்கள், தனித்தனியே, அக இலக்கணத்தில் வரும் தலைவன், தலைவி தோழி முதலிய பாத்திரங்களைப் பாட்டுடைத்தலைவர்களாக அவரவர் உணர்வுகளுக்கு ஏற்றவண்ணம்உருவாக்கி அவர்களின் பல்வேறுபட்ட ஒழுகலாறுகளின் தொகுப்பாகும். குறுந்தொகையில் காட்டப்படும் தலைவன், தலைவி. தோழி, பாங்கன் செவிலி நற்றாய் ஒருவரல்ல என்பது உண்மை. இக்காரணத்தினாலேயே டாக்டர் வ.சு.ப. மாணிக்கம் அவர்கள்,‘ஒரு திணை ஒரு துறை வல்லவர்கள் சங்க காலத் இருந்தனரேயன்றி முற்றும் அகத்திணை ஐந்திணை பாடிய புலவோர் என்போர் அக்காலத்தில் இலர். அதற்குக் காரணம் அகத்திணை நிரல்பட நிகழ்ச்சிகளைப் பாடத்தக்க ஒரு பேரிலக்கிய அமைப்புடையது அன்று’ என்கிறார்.

அக்கால மக்கள் எது பிறரோடு பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றதோ அது புறம் என்றும் எது பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாததாக உள்ளதோ அது அகம் என்றார் அறிஞர் அண்ணா .ஒருவனும் ஒருத்தியும் தனியே சந்தித்துக் காதலித்து, பெற்றோர் இசைவுடன் மணம் செய்து கொள்வது ஒரு வழி. பெற்றோர் இசைவு கிடைக்காத காதலனோடு காதலி பெற்றோரை விட்டுப் பிரிந்து சென்று காதலன் இல்லத்தில் திருமணம் செய்துகொள்வது மற்றொரு வழி. குறுந்தொகைப் பாடல்கள் ஒவ்வொன்றின் கீழும் அப்பாடல் யாருக்கு யாரால் கூறப்படுகிறது என்றும் எந்த நிகழ்வைக் கூறுகிறது என்றும் குறிப்பு ஒன்று காணப்படுகிறது. இத்தகு குறிப்புகள் யாரால் குறிக்கப்பட்டன என்பது பற்றித் தெரியவில்லை. குறுந்தொகைக்கு கடவுள் வாழ்த்து எழுதிச் சேர்த்துள்ள பாரதம் பாடிய பெருந்தேவனார் இக்குறிப்புக்களை எழுதியிருக்கலாமென்று சிலர் எண்ணுகின்றனர். இந்தப் பெருந்தேவானரென்பவர் சங்க காலத்திலிருந்த பெருந்தேவனாரா அல்லது பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் அவன் அவைப்புலவராக இருந்த பாரத வெண்பா இயற்றிய பெருந்தேவனாரா என்பதும் விவாதத்துக்கு உரியதாக உள்ளது. பிற்கால உரையாசிரியர்கள் இப்பாடல்களை மேற்கோளாகக் காட்டும்போது சிலவற்றுக்கு அடிக்குறிப்பில் காணப்படும் செய்தியல்லாத வேறு செய்தியைக் குறிப்பிடுகின்றனர்.

தமிழ்ப்பெரியார் உ.வே.சாமிநாத ஐயரவர்கள் தாம் உரை எழுதி பதிப்பித்த குறுந்தொகை நூலின் முன்னுரையில், “பல புலவர்கள் தனித்தனியே இயற்றிய அகப்பொருட் செய்யுட்களைத் தொகுத்து அவற்றை அடியளவால் வகைப்படுத்தியபின் அவற்றைத் தொகுத்தவர்கள் ஒவ்வொன்றிலும் நானூறு பாக்கள் இருக்கும்படி தம் காலத்துப் புலவர்கள் இயற்றியவற்றையும் சேர்த்து அமைத்தார்களென்று கருத இடமுளது” என்று கூறியுள்ள கருத்து நோக்கத்தக்கதாகும். இந்நூலில் உள்ள பாடல்களை எழுதிய புலவர்கள் 205 பேர். ஆயினும் பத்துப்பாடல்களை இயற்றிய ஆசிரியர்களுடைய பெயர்கள் காணப்படவில்லை. சில பாடல்களை இயற்றியவர்களின் இயற்பெயர்கள் சரியாகத் தெரியவில்லை. அவர்கள் எழுதிய பாடல்களில் உள்ள சிறப்பான தொடர்களாலேயே அவர்கள் குறிக்கப்பட்டுள்ளனர். பெண்பாற் புலவர்கள் பன்னிருவர் 51 பாடல்களை இயற்றியுள்ளனர். பெயர் தெரியாதவர்களிலும் சிறப்புப் பெயர் பெற்றவர்களிலும் இன்னும் சிலர் இருக்கலாம். குறுந்தொகையைத் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை. நூல் முடிவில் இத்தொகை முடித்தான் பூரிக்கோ என்று உள்ளது. குறுந்தொகையைப் பொறுத்தவரையில் அது சொல்ல வருவது என்ன? தமிழன் எப்படி காதலித்தான் என்பதும் காதலனும் காதலியும் ஒருவர் மேல் ஒருவர் எத்தகைய அன்பு செலுத்தினர் என்பதும் எப்படி அவர்கள் தங்கள் திருமணத்தை நடத்திக்கொண்டனர் என்பதும் திருமணத்துக்குப்பின் அவர்கள் எப்படி வாழ்ந்தனர் என்பதும் போன்றனவே. இவற்றைப் புரிந்து கொள்ளுமாறு குறுந்தொகைப் பாடல்கள் வரிசையாக அமைந்திருக்கின்றனவா என்றால் இல்லை. குறுந்தொகை மட்டுமல்லாமல் சங்ககால அகப்பாக்களைப் பற்றி டாக்டர் மு. வரதராசன் அவர்கள் “சங்க இலக்கியத்தில் உள்ள அகப்பாடல்கள் எல்லாம் காதலி, தோழி, காதலன், அவனுடைய நண்பன் முதலானவர்களுள் யாரேனும் ஒருவர் கூறும் கூற்றாக நாடகப்போக்கில் அமைந்துள்ளன. ஒரு தனிக்கூற்று நாடகம் (Drumatic Monologue) என்ற வகையிலேயே ஒவ்வோர் அகப்பாட்டின் அமைப்பு உள்ளது” என்று அவர் எழுதியுள்ள தமிழ் இலக்கிய வரலாறு என்று நூலில் குறிப்பிட்டுள்ளமை இங்கு நினைவுகூரத்தக்கது. மேலும் இலக்கியத்தில் பின்புலம் மிக இன்றியமையாதது என விளக்கும் நீதிவாணன் ”கருத்து, பின்புலம் கட்டுக்கோப்பு, கதைமாந்தர் போன்றவையே அப்பகுதினுள் இடம் பெறுவனவாகும் என்பார்”(பின்புலமும் மொழிநடையும்.பக்.415) எனவே, பாடல் கருத்தினை விளக்க பின்புலமும், கதைமாந்தர் பற்றிய விளக்கமும் இன்றியமையாததாகின்றன. தன்னுணர்ச்சிப் பாடல்களின் கட்டமைப்பை விளக்கிச் சொல்லும் பவுல் குட்மேன், ”கூற்று நிகழ்த்துவோர் ஏதோ சிலவற்றை மரபுபடி குறியீடாக அல்லது மறைமுகமாக

நகரும்படியாகச் சொல்கிறார். (Paul Goodman, “The Structure of Literature, “Myth a Symposium, P.191)

சங்க இலக்கியத்தை அறிந்துகொள்ள கூறுவோர் கேட்பார் பற்றிய புரிதல்களே முக்கியமானதாகும் கூறுவோரையும், கேட்போரையும் புரிந்துகொள்ளாவி்ட்டால் பாடக்கருத்தினை முழுமையாகப் பெறமுடியாது. ”ஒருவர், பாடலில் பேசுவோர் பலர் யாரிடம் அச்சொற்றொடர்கள் பேசப்படுகின்றன, என்ன சூழ்நிலையில் அவை பேசப்படுகின்றன. கூறவரும் கருத்து ஒரு கணவைக் குறிப்பதா அல்லது கடந்த நிகழ், எதிர்காலத்தைக் குறிப்பதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. இயற்கையாகவே இவ்வெவ்வேறு கருத்துக்களுடன் மரபும் சேர்ந்ததாகிறது என்பது தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் கருத்தாகும்” (Meenakshi Sundaram, T.P., A History of Tamil Literature p.22) சங்கப் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இலக்கியமாகவும் இருக்கின்றன. பாத்திரக் கூற்றுக்களாக அமையும் பாடல்களின் துறைக்குறிப்புகள் கூற்று செயல் சூழலை விளக்குவனவாக உள்ளன. கூறுவோர், கேட்போர் பாடல் பின்புலம் இதனை மையப்படுத்தி சூழல் அமைகிறது.

           

குறுந்தொகையின் கட்டமைப்பு:

குறுந்தொகையின் ஒவ்வொரு பாடலும், சிறுசிறு நாடகக் காட்சி போல் இருக்கின்றன. பெயர் சொல்லப்படாத தலைவன், தலைவி, தோழி, செவிலி ஆகிய பாத்திரப்படைப்புகள் உள்ளன. அதில் தலைவனும் தலைவியுமே தலைமைப்பாத்திரங்கள். நற்றாய், செவிலித்தாய், பாணன் பாங்கன், வழிப்போக்கர் போன்ற ஏனைய நடிகர்களையும் அக்காட்சிகளிலே காணலாம். “குறுந்தொகைப் பாடல்கள் காதலி, தோழி, காதலன் அவனுடைய நண்பன் முதலானவர்களுள் யாரேனும் ஒருவர் கூறும் கூற்றாக நாடகப்போக்கல் அமைந்துள்ளன. இதனைத் தனிக்கூற்று நாடகம் (Drumatic Monologue)” என்பார் மு.வரதராசன் (பக்.30). நாடகப் பாங்கில் உள்ள குறுந்தொகைப் பாடல்களைத் அந்தக் காலத்தில் பலப்பல உத்திகளைக் கொண்டு இயற்றப்பட்டுள்ள அப்பாடல்கள் தனித்தனியே பல காட்சிகளைக் கண்முன் நிறுத்திப் பல உணர்வுகளை அகக்கண் முன் நிறுத்துகின்றன.

ஆனால், அதன் பாடல்கள் களவு, கற்பு என்ற அடிப்படையிலோ புலவர் பெயர்களின் அடிப்படையிலோ தலைவன், தலைவி, தோழி, செவிலி போன்ற பாத்திரங்களின் கூற்றுக்கள் அடிப்படையிலோ தொகுக்கப்படவில்லை. தலைவியின் கற்பின்பால் ஆழமான நம்பிக்கை கொண்ட தலைவன் பரத்தைபால் செல்வதை, ஊடல் வழியாகக் காட்டுவதோடு, அமையும் தலைவியின் நிலைபாட்டை உணர்த்தும் அன்றைய சமுதாயம். பிற சங்க இலக்கியங்களைப் போல இதுவும் தொகுப்பு நூலே. எந்த அடிப்படையில், எப்போது, எவர் தொகுத்தார்கள்? என்று சரியாகத் தெரியவில்லை. அகம் புறம் என்று வகைப்படுத்தியது மட்டும் தெரிகிறது. காலவரிசையோ, சம்பவரிசையோ இருப்பதாகத் தெரியவில்லை. “அகப்பொருள் என்பது மனத்தால் சுவைத்து மகிழ்ச்சியடைவது. சொற்களால் வெளிப்படையாக விளம்ப முடியாமல் உள்ளத்தால் சுவைத்து இன்புறுவது” (எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்.ப.7) என்று சுவாமி சிதம்பரணார் குறிப்பிடுகிறார். அகம் பற்றி குறுந்தொகையில் என்னைத் துறந்து பொருளைத் தேடிச் சென்றார் என்றால், ”பொருள் தான் பெரிது அருள் விரும்பத்தகாதது” என்று நினைத்து விட்டாரே (குறு.174).”பொருளுக்காக என்னைப் பிரிந்து செல்லும் உரம் அவருக்கு இருக்குமானால் உரம் உடையவர் உரம் உடையவராகவே இருக்கட்டும். நான் மடமடந்தையாகவே இருக்கிறேன்” என்று நினைத்துப் பொருமுகிறாள் தலைவி (குறு.20). சென்ற இடத்தில் தலைவனுக்குத் தன்னைப் பற்றிய நினைவே வராதா என்று ஏங்குகிறாள் தலைவி (16,67). கார்காலம் தொடங்கியதும் வினை முடிந்து திரும்பும்போது, தலைவனுக்குத் தலைவியின் நினைவு அதிகமாகிறது. முல்லையைப் பார்த்து “முல்லையே! நீ என்னைப் பார்த்து உன் சிறிய மொட்டுகளை வெண்பற்களாகக் கொண்டு புன்முறுவல் செய்து சிரிப்பது போல் காட்டுகிறாயே. அதுவும் நான் தலைவியைப் பிரிந்து தனியாக இருக்கும்போது இது உனக்குத் தகுமா? என்று கேட்கிறான் (குறு.162). தன் தேர்ப்பாகனைப் பார்த்து “தலைவியுடன் படுத்துறங்கும் நாள்களே வாழும் நாள்கள். மற்றவையெல்லாம் பதடி நாள்கள் என்கிறான் தலைவன். ஆகவே விரைவாகத் தேரைச் செலுத்து” என்கிறான் (குறு.323,250). டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் “வெளிநாட்டுக்குச் சென்ற காதலன் மாலையில் திரும்பி வருவதாகப் பாடும் பாட்டுக்கள் பழங்காலத்தில் எழுந்தன. இன்று மாலை நேரத்துக்கும் காதலன் திரும்புவதற்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது.

பழங்காலத்தில் வெளிநாட்டுக்குச் சென்றவன் தேர் ஊர்ந்தும் காலால் நடந்தும் வரவேண்டும். அதனால் பொழுது போவதற்குள் வீடு திரும்புமாறு பயணத்தை அமைத்துக் கொள்வான். அதனால் அவன் மனைவி அவளை மாலையில் எதிர்பார்ப்பாள். இப்போது வண்டிகளின் கால அட்டவணை தபால் தந்தி ஆகியவை இதை மாற்றிவிட்டன” என்ற தாம் எழுதிய இலக்கிய மரபு என்ற நூலில் கூறுவது அழகாக விளக்குகிறது

தலைவியை நெருங்கி அவளது கூந்தலின் மணத்தை நுகர்ந்த தலைவன் இந்த மணம் வேறு எந்தப் பூவுக்காவது உண்டா என்று உரிய வல்லுநரிடம் கேட்கிறான். பூ விடயத்தில் வல்லுநர் தும்பி இனத்தைச் சார்ந்த வண்டுதானே, “எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்” என்ற வரியின் மூலம் குலம் கோத்திரம் பாராது அன்பை மட்டும் நோக்கக் கூடியது என்பது புரிகிறது. இப்படி ஆரம்பித்த சந்திப்பு பலவழிகளில் தொடர்ந்து அது திருமணத்தில் அல்லது ‘உடன்போக்கு’ என்பதில் முடிகிறது. உடன்போக்கு போன தலைவி தலைவன் வீட்டையடைந்ததும், தலைவிக்கு சிலம்பு கழி சடங்கு நடத்தப்படுகிறது (குறு.7,15). சிலம்பு கழித்தல் என்பது மணமாகாத பெண் அணிந்திருக்கும் ஒருவகைச் சிலம்பைத் திருமணத்தின்போது கழட்டிவிடுவது. அடுத்து ஒரு பாடல் தான் ஒருவனைக் காதலிப்பதாகவும் அவனுக்கு மணம் செய்து கொடுக்கவில்லையென்றால் மடலேறுவேன் என்றும் அவளால் சொல்ல முடியவில்லை. “கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்டிற் பெருந்தக்கதில்” என்று திருக்குறள் இதைப் பெண்ணுக்குரிய பெருந்தன்மையாகக் கூறுகிறது. தலைவன் திரும்புகிறான். தலைவியின் பெற்றோர் விரும்பினால் திருமணம் நடக்கிறது. பெற்றோர் விரும்பவில்லையென்றால் காதலனோடு உடன்போக்கு மேற்கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு வழி இல்லை.

தலைவன் நிலை அப்படி அல்ல. காதலித்த தலைவியை அவன் வந்து காண விரும்புவதை நண்பராலும் தடை செய்ய இயலவில்லை. தோழி உதவ மறுத்தால் மடலேறுவேன் என்கிறான். இவ்வாறு சொல்லப்பட்டவை ஒரே பாடலில் அமைக்கப்பட்டிருக்கா இல்லை. பல்வேறு பாடல்களின் கூறுகளாகத் தான் பார்க்க முடிகிறது.

பிறகு துவங்கிய கற்பு வாழ்வில் - குடும்ப வாழ்வில் - பிரிவு என்பது வருகிறது. பொருள் ஈட்டுவதற்காக வரும் பிரிவில் உடல் ரீதியானது மட்டுமே இருந்தது. அதைக்கூட தாங்கிக் கொண்டாள் தலைவி. பரத்தையின் காரணமாய் வருவதில் உள்ளத்து ரீதியான பிரிவும் இருந்தது. அப்போதுதான் நெருப்பில் இடப்பட்ட மெழுகாய் உருகி அதையும் சகித்துக்கொண்டு தலைவனை ஏற்கிறவளாகத்தான் பெண் இருந்துள்ளாள். இன்னொருபுறம் பார்த்தால், பரத்தை என்கிற பெண்ணின் வாழ்வும் சோகமானதாகக் காட்டப்படுகிறாள்.

மரத்திலிருந்து தானே விழும் பழத்தைக் கவரும் வாளைமீனைக் கொண்ட ஊரான் தலைவன் என்கிறாள் பரத்தை. இதன் உள்ளுறையானது இவள் தானாகப் போய் அவனை சேரவில்லை, அவனாக வந்தவனைத்தான் ஏற்கிறாள். அவன் போக்கானது இவள் வீட்டுக்கு வரும்போது ‘பெருமொழி’ கூறினான். தன் வீட்டுக்குப் போனாலோ அங்கே மனையாளின் சொல்படி நடக்கும்

           

           ‘கையும் காலும் தூக்கத் தூக்கும்

           ஆடிப்பாவை’ போல” (குறு.8)

           

ஆனான்.அதாவது கண்ணாடியில் காணப்படும் நிழல் போல இருந்தான். இப்படி இருந்தது ஆணின் நிலை. இது புரியாமல் மனையாள் இந்தப் பரத்தையைத் திட்டிக்கொண்டிருந்தாள். இது இவளின் காதுகளுக்கு வருகிறது.

           

           “தண் பெரும் பெளவம் அணங்குக – தோழி

           மனையோள் மடமையின் புலக்கும்”

           அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எளினே!”(குறு.164)

           

அந்தச் சொற்கள் கேட்கின்றன. தலைவனைத் திட்டமுடியாத தலைவி பாவப்பட்ட ஜென்மமாகிய பரத்தையைத் திட்டுகிறாள். எய்தவனிருக்க அம்பை நோவதுதானே பலவீனர்களின் செயல். அது நடக்கிறது. வெந்துபோன பரத்தை சொல்கிறாள், ”என்னால் அவளுக்கு துன்பம் நேர்ந்திருந்தால் அந்தப் பெருங்கடல் என்னை வந்து அடித்துப் போகட்டும்” இந்த மனத்திட்பம் அவளுக்கு ஏன் இருந்தது என்றால் இவளாகப் போய் அவனைப் பிடிக்கவில்லை. தானாக வந்தவனையே ஏற்றாள். ஆகவே, தலைவியின் துன்பத்துக்குக் காரணகர்த்தா இவள் இல்லை என்பது புலனாகிறது.

பரத்தை மீது கொண்ட மோகம் தீர்ந்ததும் தலைவன் திரும்பி வந்தபின் நடந்ததைக் குத்திக் காட்டுகிறாள் தலைவியின் தோழி. களவின்போது தலைவி வேப்பங்காயைக் கொடுத்தாலும் ’தேம்பூங்கட்டி’ கருப்பக்கட்டி (குறு.196) என்ற ரசித்துச் சுவைத்து, கற்பிலோ பறம்பு மலையின் இனிய சுனை நீரைக் கொடுத்தாலும் “உவர்க்கும்” உப்புக் கரிக்கிறதே என்றீர். இப்போது எந்த முகத்தோடு திரும்பி வந்தீர். இவ்வளவுக்குப் பிறகும் தலைவனை ஏற்கத்தான் செய்கிறாள் தலைவி. பெண்ணுக்கு வேறு வழியில்லை. மறுத்தால் தலைவியும் “பரத்தை” எனும் பழிக்கு ஆளாவாள். பரத்தையரை நாடிச் சென்று திரும்பிய தலைவிடம் தோழி உழவர் களை எடுத்து வரப்பில் வாடும்படி எறிந்து விட்டாலும், அவரைக் கொடியவர் என்று எண்ணாமல், அவர் ஏர் உழும் நிலத்தில் மீண்டும் மலரும் உன்னூர் நெய்தலை நிகர்பாய், எம் தலைவா! நீ எமக்குத் துயர் பல புரிந்திட்டாலும் நீயின்றி நாம் ஆற்றல் அற்றோர் ஆகிவிடுவோம் என்கிறாள். (குறு.309) தலைவியைப் பிரிந்து, பரத்தையை நாடிச் சென்ற தலைவன் சில நாட்களில் அவளையும் பிரிந்து தன் மனைவியை நாட வாயில் மறுத்த தோழி நீரில் நெடுநேரம் நின்று ஆடினால் கண்கள் சிவந்துவிடும் உண்போர் வாயினில் தேனும் புளித்துவிடும். எம்மைப் பிரிய வேண்டும் என்று நினைத்தாயனால் எம் தந்தைக்குரிய ஊாரில் என்னைக் கொண்டு போய்விடு என்கிறாள் தோழி. இவை தொல்காப்பியா் காலத்திற்கு முன்பே தோன்றிவிட்டது. இவ்வாறு பல இன்னல்கள் ஏற்பட்ட சமுகத்தில் தீர்வு காணும் நோக்கில்

           

           ”பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

           ஐயர் யாத்தனர் கரணம் என்ப” (தொல்.கள 7)

           

என்ற விதியை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.

அடுத்து குழந்தையின் அன்பு. எதற்காக இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்காகவாகிலும் குடும்பம் என்கிற அமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வு அன்றைக்கே வந்திருக்கிறது. இதற்காகத் தியாகியாக்கப்பட்டாள் பெண். வேறுவழியின்றியும், பிள்ளைப் பாசத்தாலும் மனமுவந்து மாதர்கள் இந்தத் தியாகத்தைச் செய்தார்கள் எனலாம். பரத்தையை விட்டு வந்த தலைவனை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை தலைவி. அவனோ புத்திசாலித்தனமாக இவளின் அனுமதியைப் பெறாமலேயே வீட்டினுள் நுழைந்து உறங்கும் மகனைத் தழுவுகிறான். அதுவும் எப்படியென்றால் படுத்திருக்கும் யானை பெருமூச்சு விடுவது போல விட்டுக் கொண்டு தழுவினான்.

           

           “பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ” (குறு.319) - என்றான் பாவலன்.

           

தலைவி அவனது முதுகுப்புறத்தைத் தழுவினாள்.

           

           “புதல்வற் தழீஇயினன் விறலவன்

           புதல்வன்தாய் அவன்புறம் கவைஇயினளே” (குறு.359)

           

இப்படியொரு சங்கமம் நிகழவே மீண்டும் அவளின் அன்பைப் பெறுகிறான். அந்தப் பேதையோ நடந்தையை எல்லாம் மறந்துவிட்டு ஒரேயடியாய் உருகி கொஞ்சல் மொழி கூறுகிறாள்

           

           ”அணிற் பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து

           மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப!

           இம்மை மாறி மறுமை ஆயினும்

           நீ ஆகியர் எம் கணவனை

           யான் ஆகியர் நின் செஞ்சு நேர்பவளே ” (குறுந்.49)

           

அணிலின் பல் போன்றமுட்களையும் பூந்தாதையும் உடைய செடிகளையும் கரிய நீரையுடைய கடற்கரையையும் கொண்டவனே! “இம்மை மாறி மறுமை ஆயினும்” நீதான் எனக்குக் கணவன்! நானே உனது நெஞ்சுக்கு உரியவள் என்கிறாள் தலைவி.

தலைவனின் பரத்தமையைத் தலைமகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைதான் இருந்தது என்றும் கூறுகின்றார். அது மட்டுமன்று, அப்பரத்தையரைத் தலைவியர்கள் என் தங்கை என்று பாராட்டிய செய்திகளும் இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. பரத்தமை சங்ககாலச் சமூகத்துள் இடம்பெற்றதும், அதனைச் சமூகம் ஏற்றுக்கொண்டதும்

ஒரு வரலாற்று நெருக்கடி என்று தான் கூற வேண்டும். சங்க காலத்தை ‘வீரயுகம்’ என்பார்கள். போரும் காதலும்தாம் அவர்கள் பொழுதுபோக்கோ என்று எண்ணுமாறு அமைந்தது அவர்தம் வாழ்க்கை. பண்டைத் தமிழ் மக்களுடைய தினசரி வாழ்க்கை நெறியை அவர்கள் இயற்றியுள்ள பாடல்களிலிருந்து ஊகிப்பதே தக்கதாகும். (குறு.15) வயதானவர்கள் போருக்குப் போவது கிடையாது. இளைஞர்கள் போரிலே மாண்டால் வாழ்க்கையை இழப்பவர்கள் அவர்களைவிட வயதில் குறைந்த அவர்தம் மனைவிமார்களே. ஆண் குரங்கு வழக்கம்போல் மரந்தாவிச் செல்லும் சமயம் பிடி தவறி வீழ்ந்திறந்தது. அன்புடைய மந்தி கைம்பெண்ணாய் வாழ விரும்பில்லை. குட்டிகளை மரக்கிளையில் விட்டுவிட்டு மலையேறி உயிர் விட்டது. (குறு.69) தலையாய கற்பினை மந்திக் குரங்கினிடம் கண்டு போற்றுவதோடு. ஒரு மந்தியின் களவொழுக்கத்தையும் ஒரு மந்தியின் கற்பொழுக்கத்தையும் சங்க சான்றோர்கள் நமக்குப் புலப்படுத்தியுள்ளனர். பெண்கள் தம் கணவனைத் தெய்வமாக மதித்ததோடு, கணவன் இறந்தால் மறுமணம் செய்யும் வழக்கம் இல்லை. இதனை வள்ளுவர் ,”தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை”(குறள்.55) எனக் கூறுகிறார். சங்க காலத்தில் பெண்கள் மறுமணம் புரிந்துகொண்டதாக எந்த ஆதாரமும் இல்லை. கணவனை இழந்த மகளிர்க்கு அச்சமூகம் ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்தது. கைம்மையுற்ற மகளிர் பழைய சோற்றைப் பிழிந்தெடுத்து. சுவை குறைந்த புளிக்கறியைத் துணையாகக் கொண்டு உண்ணவேண்டும். பரற்கற்கள் நிரம்பிய தரையில் பாயில்லாமல் படுத்து உறங்க வேண்டும். (புறம்.246) என்கிறது.

           

முடிவுரை

குறுந்தொகை உரிப்பொருளுக்கு மட்டுமே முதன்மை கொடுத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஆகும். கருப்பொருள் பற்றிய செய்திகள் இதில் மிகுதியாக இடம்பெறவில்லை. கருப்பொருள் விளக்கம் மிகுதியாக உள்ள பாடல்களில்தான் மனித வாழ்க்கையின் புறநிலைகள் விரிவாகப் பேசப்படுகின்றன. சங்கப் புலவர்கள் தாம் கூற வரும் நிகழ்வுகளுக்கு ஏற்ற பின்புலத்தைத் சித்திரித்து, அப்பாடல்களில் வரும் பொருள்களை விளக்க பல அடைமொழிகளைக் கொடுத்து உவமை கூறி விளங்க வைப்பதோடு சொல்லப்பட வேண்டிய கருத்து வெளிப்படையாகச் சொல்ல முடியாததாக இருக்கும்போது அவற்றை உவமையாகவோ உள்ளுறையாகவோ குறித்தனர். குறுந்தொகைப் பாடல்கள் தொகுக்கப்பட்ட முறை ஐவகைத்திணை வரிசையிலும் இல்லை, களவு கற்பு எனும் கைகோள் வகையில் நிகழ்வுத் தொடர்ச்சி முறையிலும் இல்லை. அவற்றை எழுதிய ஆசிரியர்கள் இருநூற்று ஐவர். அவர்கள் வரிசை முறையிலும் இது தொகுக்கப்பட்டிருக்கலாம். குறுந்தொகைப் பாடல்களில் தலைவன், தலைவி, தோழி, தோழன், செவிலி போன்ற இன்னும் சில பாத்திரங்கள் வருகின்றன. அப்படிப்பட்ட பாத்திரங்களின் கூற்று வரிசையிலும் இல்லை. ஒரு பாடலில் கூறப்படும் நிகழ்வுக்கும் அடுத்த பாடலில் கூறப்படும் நிகழ்வுக்கும் தொடர்பு இல்லை. பல்வேறு துணுக்குகளாகச் சிதறி கட்டமைப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

           

துணைநூற்பட்டியல்

  • வரதராசன், மு. தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அகாடமி, புதுடெல்லி, 1972.
  • வரதராசன், மு., இலக்கிய மரபு, பாரி நிலையம், சென்னை, 1960.
  • சாமிநாதையர், உ.வே. குறுந்தெகை மூலமும் உரையும், ஸ்ரீதியாகராச விலாச வெளியீடு, சென்னை, 1962.
  • மாணிக்கம், வ.சு.ப, தமிழ் காதல், நியூ செஞ்சுரி புக் ஹாவுஸ், 2012
  • சாமி சிதம்பரனார். எட்டுத்தொகையும் தமிழர் பண்பாடும்.
  • Meenakshi Sundaram, T.P., A History of Tamil Literature
  • Paul Goodman, “The Structure of Literature, Myth a Symposium.
  • நீதிவாணன், பின்புலமும் மொழிநடையும்.