ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

எளியமுறையில்இலக்கணம்கற்றல் - கற்பித்தல் (புகழுவமைஅணியின் சிறப்புகள்)

இரா.அருணா 08 Oct 2019 Read Full PDF

இரா.அருணா,

முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,

நெறியாளர்

முனைவர் ச மரகதமணி

இணைப்பேராசிரியர்

தமிழ்த்துறை

பி.கே.ஆர்மகளிர்கலைக் கல்லூரி,

கோபிசெட்டிபாளையம்.

 

ஆய்வுச் சுருக்கம்

அணிகளுக்கெல்லாம் மணிமகுடமாக விளங்குவது உவமைஅணிஆகும். இவ்வுவமை அணிக்குச்சிறப்பு சேர்ப்பது புகழுவமை அணியே ஆகும்.இப்புகழுவமை அணியின் சிறப்புகளை எளிமையாக எவ்வாறு கற்பிப்பது என்பதைப்பற்றியதே இவ்வாய்வு ஆகும். மேலும் புகழுவமை அணியை எளியமுறையில் விளக்க எடுத்துக்காட்டுகளாக தொல்காப்பியம், தண்டியலங்காரம், சங்கஇலக்கியம், திருக்குறள், இக்காலஇலக்கியம், திரையிசைப்பாடல்கள் ஆகியவற்றை எடுத்து விளக்கப்பட்டுள்ளதே இவ்வாய்வு ஆகும்.இதனால் நன்கு எளிமையாகவும், தெளிவாகவும் புகழுவமை அணியின் சிறப்புகளைஅறிந்து கொள்ள முடிகிறது.

 

திறவுச்சொற்கள்:

புகழுவமைஅணி, அகப்பொருள், புறப்பொருள் ,உபமானம், உபமேயம்
புகழுவமைஅணியின்சிறப்பைவிளக்கவேண்டுமெனில்முதலில்உவமையின்சிறப்பைக்கூறிவிளங்கவைத்தபிறகு, அதில் ஒருவகையான உவமையே புகழுவமை என்றும், புகழுவமை அணியினை சங்ககாலம் முதல் இக்காலம் வரையும் எவ்வாறு பயன்படுத்தியுள்ளார்கள் என்பதையும், மேலும் தமிழுக்கு எவ்வாறு அது சிறப்பாக அமைகிறது என்பதையும் கூறி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்ஆகும்.

 

கவிக்கு அழகு தரும் அணிநலன்கள் பொருந்திய பாடல்கள் பல. அணிகளுக்குள் தலைமையான உவமையையும் அதற்கு அடுத்தபடி வரும் உருவகத்தையும் திருவள்ளுவர்பல வகையில் ஆளுகிறார். உபமானம் என்ற வடசொல்லுக்கு நெருங்கிய அளவு என்பது பொருள். பிற அளவுகளால் தெளிவாக்க முடியாதவற்றை மிக நெருக்கமாக அணுகிக் காட்டுவது உவமை. அறிந்திராத பொருளுக்கு அறிந்த பொருளைக் கூறுவது உவமையில் ஒரு வகை.

 

பொருளியலிற் கூறிய அகப்பொருள் புறப்பொருள் என்னும் இரண்டினையும் குணம் அலங்காரம் என்னும் இருவகையானும் சுவைபட விளக்கி நிகழ்வது அணியின் இலக்கணமாம். (இ.வி.அணியியல்2) புலவரால் தொடுக்கப்பட்ட கவிகளுக்குப் பொருளானும் சொல்லானும் அழகு எய்தப் புணர்க்கப்படும் பொருள் உறுப்பு அணி என்று பெயர்பெற்றது.

 

உவமை அணி என்பது ஒன்றின் பொருள் குணம் தொழில் பயன் இவற்றை மற்றொன்றிற்கு ஒத்திருப்பதாக வார்ணிப்பதாகும். இதை வடமொழியில் உபமாலங்காரம் என்று அழைப்பார். இவ்வுவமை அணி மூன்று வகைப்படும்.

 

           1. பண்பு உவமை அணி

           2. தொழில் உவமை அணி

           3. பயன் உவமை அணி

 

உவமை அணியின் உறுப்புகள் :

  • உபமானம்
  • உபமேயம் - உபமிக்கப்படும் பொருள்.
  • உவமை உருபு - போல, புரைய, ஒத்த, உறழ, மான, கடுப்ப, இயைப, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன.
  • பொதுத்தன்மை - ஒப்பிடுவதற்கு ஆதாரமாக இருப்பது உலகில் அனைவருக்கும் தெரிந்த பொதுத்தன்மை கொண்டிருப்பதே ஆகும்.

 

உவமையின் உயர்வே புகழுவமை

புகழுவமை என்பது உவமை அணியின் சிறப்பாகக் கருதப்படுகிறது. உவமேயத்தை உயர்வாக எடுத்துக்கூறவே செய்யுள்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன்காரணமாக உவமிக்கப்படுவதின் சிறப்பை உணரமுடிகிறது.

 

  • இதரவிதரம் என்று தண்டியலங்காரத்தில் மூலம் அறியப்படும் புகழுவமை ஆகும்.
  • உபமேயோபமாலங்காரம் என்று வடநூடலார்புகழுவமையை எடுத்தியம்புகிறார்.

 

உபமானத்தையும் உபமேயத்தையும் ஒத்தபொருளாகக் கொண்டு வர்ணிக்கப்படுகிறது. இதில் உவமையினும் புகழ் பொருளில் உபமேயம் சிறந்து இருப்பதைக் காணமுடிகிறது. அதாவது உவமையைப் புகழ்ந்து உவமித்துக் கூறுவது புகழுவமை எனப்படும்.
முதலில் உபமானத்தைப் புகழ்ந்து சிறப்பித்த பின் அதை உபமிப்பது இவ்வணிக்கு உரிய இலக்கணம் ஆகும்.

 

 

பண்பு உவமை அணி

 

  • தாமரை முகம்
  • தாமரை + முகம்
  • தாமரை + போன்ற + முகம்

 

இதில் உபமானமாகிய தாமரைக்கே உயர்வில் முதலிடமாகும். இதை ஒத்திருக்கும் முகத்திற்கு அடுத்த இடமேயாகும். ஆனாலும் உபமேயத்திற்குரிய பொருளைச் சிறப்பிக்கவே உபமாகமாக கூறுவதால் இதனைப் புகழ்பொருள் உவமை என்கிறோம்

 

தண்டியலங்காரத்தால் அறியப்படும் புகழுவமை

உவமானத்தை முதலில் புகழ்ந்து அதன்பின் அதை உபமிப்பது இவ்வணிக்குரிய இலக்கணம். இது சுலபமான அணியே. இதற்கு உதாரணமாகும் தண்டி நூல் செய்யுள்ளில்,

 

           “இறையோன் சடைமுடியே லெந்நாளும் தங்கும்

           பிறையோர்திருநுதலும் பெற்ற - தறைகடல் சூழ்

           பூவையந் தாங்கு மரவின் படம் புரையும்

           பாவைநின் னல்குற் பரப்பு.”

 

என்பது தண்டிநூற் செய்யுளில்'ஒலிக்கும் கடலாற் சூழப்பெற்ற நிலப்பரப்பைத் தாங்கும் ஆதிசேஷனுடைய படத்தை ஒக்கும் உன்றன் அல்குல் பிரதேசம். சிவபெருமானது சடைமுடியில் ஸ்திரமாய்த் தங்கியிருக்கும் பிறைச்சந்திரனது அழகை உன் நெற்றிப் பெற்றுளது. ஏனின் உன்னழகின் தன்மை சொல்லுந் திறத்தது ஆமோ”என்பது இச்செய்யுளின் பொருள்.

 

பிறைச்சந்திரன் சிவபெருமான் சடைமுடியில் இருக்கும் சிறப்பினது. ஆதிசேஷன் நிலவுலகத்தைத் தாங்கும் சிறப்பினது. அச்சிறப்பினைப் பாராட்டிப் பின்பிறையையும் பாம்பையும் நெற்றிக்கும் அல்குல் தடத்திற்கும் உவமையாக்கினமை காண்க. இவ்வாறு வர்ணித்தல் புகழுவமை புகழ்பொருள் உவமை என்று யாம் கூறிய அணி வேறு; இது வேறு.

 

           “சடைமுடியே லெந்நாளுந் தங்கும் பிறையே திருநுதலும்(நெற்றி, புருவம், தலை)

           ஈசனின் தலையில் உள்ள பிறையை புகந்து அதனை ஒத்த”

 

நெற்றிப் புருவத்தை புகழ்வதைக் கூறுவது போல் அமைகிறது. எனவே இதனைப் புகழுவமை எனப்படுகிறது.

 

வடமொழி அலங்கார நூல்களிலும் தண்டியலங்கார நூலிலும் வேறு சில உவமைகளும் காணப்படுகின்றன. அவற்றை யாம் கூறிய உவமை வகைகளில் அடக்கிவிடலாமேனும் அவற்றில் சிலவற்றைச் சுருக்கமாய்க் கூறுவோம்.

 

தொல்காப்பியர்உணர்த்தும் புகழுவமை

           1. வினையுவமம் - புவியன்ன மறவன்

           2. பயனுவமம் - மாரியன்ன வண்கை

           3. மெய்யுவமம் - துடியிடை

           4. உருவுவமம் - பொன்மேனி

என்று நான்கு வகைகளாகக் கூறப்படுகிறது.

 

புலியன்ன மறவன் :

புலிபாயுமாறு போலப் பாய்பவன் எனத் தொழில் பற்றி ஒப்பித்தமையால் வினையுவமம் னப்படும்.

 

மாரியன்ன வண்கை :

மாரியால் விளைக்கப்படும் பொருளும் வண்கையால் பெறும் பொருளும் ஒக்கும் என்பது பட வந்தமையின் பயன் உவமம் எனப்படும்.

 

துடியிடை :

           அல்குலும் (இடுப்பின் கீழ்ப்பகுதி)

           ஆகமும் (இடுப்பின் மேல்பகுதி)

           அகன்று காட்ட அஃகித்(சுருங்கி)

           இவை மருங்குலால்(இடுப்பு)துடி அதனோடு ஒத்தது.

இது வடிவொத்தமையின் மெய்யுவமம் எனப்படும்.

 

பொன்மேனி :

பொன்னின் கண்ணும் மேனியின் கண்ணும் உள்ள நிறம் ஒத்தலால் உருவுவமம் ஆயிற்று.ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமையாகக் கூறும்போது மேலே கூறப்பட்ட நான்கில் ஒன்றும் பலவும் வருவதை,

 

விரவியும் வரூஉம் மரபின் என்ப

 

தொல்.உபம.நூற்-2(இளம்)

 

சங்க இலக்கியங்களில் புகழுவமையின் வெளிப்பாடு

கலித்தொகையில் குறிஞ்சிக்கலியில் கபிலர், கூடி மகிழ்ந்த தலைவனும் தலைவியும் தமக்குள் உரையாடுகின்ற அழகிய காட்சியில் தலைவியைப் புகழும்போது

 

           “அணிமுகம் மதிஏய்ப்ப அம்மதியை நனிஏய்க்கும்

           மணிமுக மாமழை நின்பின் ஒப்பப் பின்னின்கண்

           விரிநுண்ணூல் சுற்றிய ஈரிதழ் அலரி

           அரவுக்கண் அணிஉறழ் ஆரல்மீன் தகையொப்ப,

           அரும்படம் கண்டாரைச் செய்து ஆங்கு இயலும்

           விரிந்துஒலி கூந்தலாய் கண்டை எமக்குப்

           பெரும்பொன் படுகுவை பண்டு ”.

  • உன் அழகிய முகன் மதியைப் போன்றுள்ளது,
  • மணிகளை உடைய உன்னுடைய பின்னிய கூந்தல் உன் முகமதிக்குப் பொருந்துமாறு கார் மேகம் போன்றுள்ளது,
  • பின்னிய கூந்தலில் சூடிய புதுமலர்கள் கரிய பாம்பினிடத்தில் கிடந்து அதன் கரிய நிறத்தோடு மாறுபடுகின்ற கார்த்திகை விண்மீன் போன்றுள்ளது,

 

இவ்வாறு இச்செய்யுளில் தலைவன் தன் எண்ணத்தை எடுத்தியம்புவதற்குப் புகழுவமையைப் பயன்படுத்தி, தலைவியைப் புகழுவதை உணரமுடிகிறது, மேலும் தலைவியின் சிறப்பை உணரமுடிகிறது.

 

ஐங்குறுநூறில் தலைவனின் குறிஞ்சி நிலத்தின் உயர்வை உணர்த்த இச்செய்யுளில்,

           “பெருவரை வேங்கைப் பொன்மருள் நறுவீ

           மானினப் பெருங்கிளை மேயல் ஆரம்

           கானக நாடன் வரவும், இவண்

           மேனி பசப்ப தெவனகொல்? அன்னாய்!”

 

பெருமலையிடத்துள்ள வேங்கை மரத்தின், பொன்னைப் போல விளங்கும் நறிய புதிய பூக்களை, மானினத்தின் பெரிய சுற்றமானது மேய்ந்து தம் பசி தீர்கின்ற கானகத்தையுடையவன் நம் தலைவன்,என்று கூறும் போது தலைவனின் மலையில் உள்ள ஒவ்வொரு சிறிய பொருளின் மேன்மையை உணர்த்த அதாவது சிறப்பிக்கவே இப்பாடல் புகழுவமையைக் கையாண்டமையை விளங்கிக் கொள்ள முடிகிறது. சங்க காலத்தில் அகமோ, புறமோ எதை எடுத்துக்காட்டவும் உவமையைப் பயன்படுத்தும் போது, அதில் அவ்வுவமையைச் சிறப்பிக்க புகழுவமையைப் பயன்படுத்தியுள்ளதை நாம் இச்செய்யுள்கள் மூலம் உணர்ந்து கொள்ள முடிகின்றன.

 

திருக்குறளில் புகழுவமையின் பங்கு:

உபமானத்தையும் உபமேயத்தையும் ஒத்த பொருளாக கொண்டு வர்ணிக்கப்படுகிறது. இதில் உவமையினும் புகழ் பொருளில் உபமேயம் சிறந்து இருப்பதைக் காணமுடிகிறது. இதனை விளக்க வள்ளுவர்கூறும் குறள்,

           “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

           இகழ்வார்ப் பொறுத்தல் தலை.”

(குறள்-151)

 

விளக்கம்
தோண்டுகின்ற வரையும் தாங்கிநிற்கும் நிலத்தைப் போல தம்மை இகழ்பவரின் இகழ்ச்சியைத் தாங்கிப் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதாகும். இதில்:

           உவமை: அகழ்வாரைத் தாங்கும் நிலம்

           உவமேயம்: இகழ்வார்ப் பொறுத்தல்

           உவம உருபு: போல

           பொதுத்தன்மை: பொறுத்துக் கொள்ளுதல்

இதில் உபமானமாகிய நிலம் உயர்வில் முதலிடமாகும். இதை ஒத்திருக்கும் இகழ்வாரைப் பொறுத்தலான குணமேயாகும். ஆனாலும் உபமேயத்திற்குரிய பொருளைச் சிறப்பிக்கவே உபமானமாகக் கூறுவதால் இதனைப் புகழ்பொருள் உவமை என்கிறோம். குளிர்நிறைந்த பகுதியில் வாழும் கவரிமான்களுக்கு அக்குளிரைத் தாங்க இயற்கையாக அடர்ந்த மயிர்இருக்கிறது. மயிர்உதிர்ந்து விட்டால் அது குளிர்தாங்காமல் இறந்து விடும். இதனை உவமையாக்குகிறார்,

           “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

           உயிர்நீப்பர்மானம் வரின்.”

(குறள்-969)

           உவமை: மானின் ஒரு மயிர்நீங்கினாலும் உயிர்விடும்

           உவமேயம்: மானம் இழந்தால் உயிர்நீப்பர்

           உவம உருபு: ஒத்த

           பொதுத்தன்மை: தன்மானத்தின் மாண்பு

இயற்கையாக நடக்கும் நிகழ்வைத் தனது கருத்துக்குள் ஏற்றி தான் கூறவரும் கருத்தை உயர்வாகக் காட்ட இயற்கை நிகழ்வைப் புகழ்ந்து விளங்கச் செய்வது புகழுவமை.

 

இக்காலஇலக்கியத்தில்புகழுவமையின்அணியின்பயன்பாடு

 

என்றன்உள்ளவெளியில் - ஞானத்(து)

           இரவிஏறவேண்டும்.

           குன்றம்ஒத்ததோளும் -மேருக்

           கோலஒத்தவடிவும்

           நன்றைநாடுமனமும் - நீஎந்

           நாளும்ஈதல்வேண்டும்

           ஒன்றைவிட்டுமற்றோர் - துயரில்

           உழலும்நெஞ்சம்வேண்டாம்.

(பாரதியார்)

 

என்னுடையமனமென்னும்ஆகாயத்தில்மெய்யறிவாகியசூரியன்உதயமாகிப்பிரகாசிக்கவேண்டும்.

           மனம் - ஆகாயம்

           மெய்யறிவு - சூரியன்.

 

சிறுமலையைப்போன்றவலிமையானதோள்களும்,

           தோள் - மலை

மேருபர்வதத்தின்பெரும்தோற்றம்போன்றகம்பீரமானஉருவமும்,

           மேருபர்வதத்தின்தோற்றம் - கம்பீரம்

 

பாரதியார் இப்பாடலில் உள்ளதை உள்ளவாறு கூறாது புகழ்ந்து உயர்வாய் அழகுற கூறுவதால் இது புகழுவைமை அணி ஆகும்.

 

திரையிசைப் பாடலில் புகழுவமையின் பங்கு :

 

வைரமுத்து பாடலில் நாம் பார்க்கும்போது புகழ் பொருள் உவமை விளக்கமாக விளக்கியுள்ளதை நாம் அறியமுடிகிறது. எடுத்துக்காட்டு :

 

           “விண்ணின் மீனைத் தொடுத்து

           சேலையாக உடுத்து ”

(வைரமுத்து, ஆ.பா.எண். 106)

இப்பாடலில் விண்மீன் நம்மால் பார்க்கத்தான் முடியும். ஆனாலும் அதனை சேலையில் தொடுப்பது என்பது விண்மீனை உபமானத்தைச் சிறப்பித்து அச்சேலையின் மதிப்பை உயர்த்தியுள்ளார்என்பதை உணரமுடிகிறது. இதிலிருந்து உபமானத்தைச் சிறப்பிப்பதனால் உவமேயத்தின் சிறப்பு தானாகவே உயர்வதை நாம் அறியமுடிகிறது.

 

           “நிலவைக் கொண்டு வா கட்டிலில் கட்டி வை

           மேகம் கொண்டு வா மெத்தையில் போட்டு வை ”

(வைரமுத்து ஆ.பா.எண்.626)

 

இப்பாடலில் நிலவைக் கொண்டு வந்து கட்டிலில் கட்டி வைக்க முடியாது என்றாலும் கட்டிலினை மேன்மைப்படுத்த அதாவது புகழ்ந்துரைக்கவே நிலவை உவமேயமாக அமைத்துள்ளார்.கவிஞர்வைரமுத்து இப்பாடலில் வாயிலாக இதை அறியமுடிகிறது.

 

  • உவமைக்கு மணிமகுடமாக புகழுவமை அமைவதை இக்கட்டுரை மூலம் விளக்கப்பட்டுள்ளது.
  • புகழுவமை உவமையை மேம்படுத்தும் ஒரு உத்தியாகக் கையாளப்படுகிறது.
  •  சிறப்பிற்கெல்லாம் சிறப்பு புகழுவமையே ஆகும்.

 

இவ்வாறுபுகழுவமைஅணியின்சிறப்பைதொல்காப்பியம், தண்டியலங்காரம், சங்கஇலக்கியம், திருக்குறள், இக்காலஇலக்கியம், திரையிசைப்பாடல்கள்மூலம்இக்கட்டுரையில்தெளிவாகவிளக்கப்பட்டுள்ளது.

 

துணை நூற்பட்டியல்:

  • இலக்கண விளக்கம்(அணியியல்) - கலா நிலையம் - கே.இராஜகோபாலாச்சாரியார் - அன்னை அறிவுப் பதிப்பகம், சென்னை - முதற் பதிப்பு - 2011.
  • தமிழ் இலக்கணப் பேரகராதி - பொருள் அணி1 - பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர் - தமிழ் மண் பதிப்பகம் - பதிப்பு-2013.
  • தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - ந.சுப்புரெட்டியார் - பாவை பப்ளிகேஷன்ஸ் - முதற்பதிப்பு-மே2012.
  • திருக்குறள்(ஆராய்ச்சிப்பதிப்பு) - பதிப்பாசிரியர்- கி.வா.ஜகந்நாதன் - ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் - இரண்டாம் பதிப்பு - 1963.
  • திருக்குறள் - குறளும்-விளக்க உரையும் - எம்.சிவசுப்ரமணியன் - பதிப்பு-2016 - கமர்சியல் பப்ளிகேஷன்ஸ்.
  • எட்டுத்தொகை - கலித்தொகை(மூலமும் உரையும்) - தமிழமுதன் - சாரதா பதிப்பகம் - பதிப்பு-ஜுலை 2012.
  • ஐங்குறுநூறு (குறிஞ்சி,பாலை,முல்லை)- இரண்டாம் பகுதி - தெளிவுரை : புலியூர்கேசிகன் - பாரிநிலையம் - முதல் பதிப்பு - 2008.
  • பாரதியார்கவிதைகள், உரையாசிரியர்- கவிஞர்பத்மதேவன், முதல்பதிப்பு-ஆகஸ்ட்,2014, கணபதிஎண்டர்பிரைசஸ்,சென்னை.