ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்ச் செவ்வியல் நூல்களில் திருநர்

முனைவர் கி.அய்யப்பன் 08 Oct 2019 Read Full PDF

முனைவர் கி.அய்யப்பன்

கெளரவ விரிவுரையாளர், தமிழ்த் துறை,

உ.நா. அரசினர் கல்லூரி

பொன்னேரி-601204

 

ஆய்வுச் சுருக்கம்

தமிழ்ச் செவ்வியல் நூல்கள் நாற்பத்தி ஒன்று. இதில் தொல்காப்பியம், அகநானூறு, நாலடியார், திருக்குறள், முதுமொழிக்காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் திருநர் பற்றியப் பதிவுகள் உள்ளன. அந்நூல்களில் திருநரை அலி, பேடி, பேடு, பேடன், ஆண்மை திரிந்கிய சொற்களால் குறிப்பிடப்பட்டுள்ளனர். தற்போது ஆணாய்ப் பிறந்து பெண்தன்மை அதிகம் உள்ள பேடியரைத் திருநங்கை என்றும், பெண்ணாய்ப் பிறந்து ஆண்தன்மை அதிகம் உள்ள பேடரைத் திருநம்பி என்றும் அழைக்கின்றனர். மேலும் திருநங்கை, திருநம்பி ஆகிய இருவரும் திருநர் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்படுகின்றனர். இச்சொல் ஏறக்குறைய 2010-2011 ஆம் ஆண்டுகளில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ் இலக்ண, இலக்கியத் தடத்தில் முதல் முதலாக பிறப்பில் ஆணாகப் பிறக்கும் ஒருவன் பெண் தன்மையை அடைவதையும், பிறப்பில் பெண்ணாகப் பிறக்கும் ஒருவள் ஆண் தன்மையடைவதையும் ஆராயும் முதல் கட்டுரை இது எனலாம்.

 

திறவுச் சொற்கள்

திருநர், திருநம்பி, திருநங்கை, அரவாணி, பேடி, பேடு, அலி
தமிழ்ச்செவ்வியல்நூல்கள்தொல்காப்பியம், எட்டுத்தொகைநூல்கள்; நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பத்துப்பாட்டு; திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், பதினெண்கீழ்க்கணக்குநூல்கள்; நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஐந்திணைஐம்பது, திணைமொழிஐம்பது, ஐந்திணைஎழுபது, திணைமாலைநூற்றைம்பது, பழமொழி, சிறுபஞ்சமூலம், திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை, காப்பியங்கள்; சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார்களவியல்உரைஆகிய 41 நூல்கள். இவற்றில் சில நூல்களில் திருநர் அலி, பேடி, ஆண்மைதிரிந்தமுதலியபெயர்களில்சுட்டப்பெற்றுள்ளனர்.

 

பால் மருள் சொற்கள்

உலக மனித உயிர்கள் ஆண், பெண் எனும் இரு பால் பகுப்பில் அமைவது இயல்பாகும். இவ்வாறின்றி, அருகி, மாறுபட்டமையும் மானுடப் பிறவியும் உண்டு. இதனைப் பால் மருள் அல்லது உறுப்பு மருள் எனக் கூறலாம். மன ஊனமாக அறிவு மருள் அமைய உடல் ஊனமாகப் பால் மருள் என்று கூறும் பேராசிரியர் அன்னிதாமசு, மேலும்“அண்ணகன், அண்ணாளன், அல்லி, அலி, அழிதூஉ, ஆண்பெண்ணல்லாதவன், ஆணலி, இடபி, இப்பந்தி, கிலிபம், கிலீபம், கிலீவம், கோஷா, சண்டம், சண்டன், சிகண்டி, தூவரன்,நபுங்கிஷம், நபுஞ்சகம், நபுஞ்சகன், நபுஞ்சம், நபும்ஸகம், நாமர்தா, பண்டகன், பெட்டையன், பெண்டகம், பெண்டகர், பெண்டகன், பெண்டர், பெண்டு, பெண்ணலி, பெண்ணைவாயன், பேடர், பேடர்கள், பேடன், பேடி, பேடியர், பேடு, பேடுகள், பேதை, மகண்மா, மருள், வசங்கெட்டவன், வண்டரன், வருடவரன், வறடன்”(அன்னிதாமசு, 2004: 117) முதலிய பால் மருள் சொற்களையும் அடையாளம் காட்டுகிறார்.இத்தகையவர்கள் சமகாலத்தில் திருநர் என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர்.

 

பேடி+பேடன்=பேடு

பால் திரிந்த மக்களும் அவர்களைக் குறிக்கும் சொற்களும் பின்வருமாறாம். “ஆண்மை திரிந்து பெண்மை கொண்டவன் பேடி; பெண்மை திரிந்து ஆண்மை கொண்டவள் பேடன்; இவ்விருவருக்கும் பொதுப்பெயர் பேடு. இம்மூவர்க்கும் பலர்பால் பெயர் முறையே பேடியர் பேடர் பேடுகள் என்பன. புணர்ச்சி உணர்ச்சியில்லாததும் பால் காட்டும் உறுப்பால் ஆணும் பெண்ணுமல்லாததும் அலி. பேடி என்னும் பெயர் பேடிமார் பேடிகள் எனவும் பலர்பால் ஏற்கும்” (தொல்காப்பியம், சொல்லதிகாரம்- சேனாவரையம், 1956: 7) என்று கழகப்பதிப்பின் குறிப்புரை கூறுகின்றது.

 

ஆணலி+பெண்ணலி= அலி

ஆண்மை திரிந்த பெயராவது பேடி. அச்சத்தி ஆண்மையிற் திரிந்தாரைப் பேடி யென்ப வாகலான். “தெய்வசிலையார் அலி மூவகைப்படும் என்கிறார். ஈண்டு அப்பெயர் பெற்றது அலி யென்று கொள்க. அலி மூவகைப்படும்: ஆணுறுப்பிற் குறைவின்றி ஆண்டன்மை இழந்ததூஉம், பெண்ணுறுப்பிற் குறைவின்றி பெண்டன்மைஇழந்ததூஉம், பெண்பிறப்பிற் தோன்றிப் பெண்ணுறுப்பின்றித் தாடிதோற்றி ஆண்போலத் திரிவதூஉமென. அவற்றுட் பிற்கூறியது ஈண்டுப் பேடி எனப்பட்டது” (தொல்காப்பியம், சொல்லதிகாரம்- தெய்வசிலையார், 1929: 11). “பெண் தன்மையிலிருந்து பிறழ்ந்து ஆண் தன்மையை அதிகம் பெற்றவர்களை அலி என்ற சொல் குறிக்கிறது’ (முனிஷ், 2013: 60)) என்று கூறும் முனிஷின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. ஏன் எனில் அலி என்பவன், பெண்ணிலும் ஆணிலும் சேராத உறுப்பை உடையவன். இது ஆணலி, பெண்ணலி என இருவகைப்படும். ஆணுருவம் இருந்தால் ஆணலி எனவும், பெண்ணுருவம் இருந்தால் பெண்ணலி என்றும் சொல்வதுண்டு (sambasivampillai, 1931: 125). மேற்கண்டவற்றின் அடிப்படையில், பெண்தன்மையிலிருந்து பிறழ்ந்து ஆண் தன்மை அதிகம் பெற்றவர்களையே அலி என்று கூறும் முனிஷின் கருத்து சரியானவையாகத் தோன்றவில்லை.அவர்களை ஆணலி என்று கூறுவதே சரியானதாகும்.

 

அலி= பேடு

முன் சொல்லப்பட்ட அலி, பேடுக்கான விளக்கங்கள் அடிப்படையில் அலி, பேடு சொற்கள் ஒரே பொருண்மையைக் குறிப்பதாகவே உள்ளதைக் காணமுடிகிறது. ஆணலி+பெண்ணலி= பேடி+பேடன்=அலி,பேடு என்று கூறுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

 

அரவாணி- திருநங்கை

அரவாணி என்னும் பெயர் 12-05-1997 அன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பெயரை வைத்தவர் ஆர். இரவி அப்போதைய விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.திருநங்கை எனும் பெயர் திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்களால் 2006ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

 

திருநர்

இப்பெயர்களும் மாறி தற்போது ஆணாய் பிறந்து பெண்தன்மை அதிகம் உள்ள பேடியரை திருநங்கைஎன்றும், பெண்ணாய் பிறந்து ஆண்தன்மை அதிகம் உள்ள பேடரை திருநம்பிஎன்றும் அழைக்கின்றனர். திருநங்கை, திருநம்பி ஆகிய இருவரும் திருநர் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்படுகின்றனர்.இச்சொல் 2010-2011 ஆம் ஆண்டுகளில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
“திருநர்/Transgenderஎன்பவர்கள் தங்களது பிறப்பு ரீதியான பாலும், பாலினத்தன்மையும் மாறுபட்டதாக உணர்பவர்கள்.திருநங்கை/Male To Female Transgender (MTF) என்பவர்கள் பிறப்பால் ஆண்பாலும், மன அளவில் பெண்பாலாகவும் அடையாளம் காண்பவர்கள், மற்றும் இந்த வேறுபாட்டை மாற்ற அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர்கள். இவர்கள் திருநரில் ஒரு பிரிவு.திருநம்பி/Female To Male Transgender (FTM) என்பவர் பிறப்பால் பெண்பாலும், மன அளவில் ஆண்பாலாகவும் அடையாளம் காண்பவர்கள், மற்றும் இந்த வேறுபாட்டை மாற்ற அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர்கள். இவர்கள் திருநரில் இன்னொரு பிரிவு’’ என்று ஓரினம் என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள இயலுகிறது. மேலும், விக்கிபீடியா, சிருஷ்டி மதுரை ஆகிய இணைய பக்கங்களும் திருநரைப் பற்றி பேசுகின்றன.

 

கல்வெட்டில் பேடு எனும் சொல்

இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டில் கூட பேடு எனும் சொல் எடுத்தாளப்பட்டு இருக்கிறது. அக்கல்வெட்டு, தேனிமாவட்டம் அருகே 2006ஆம் ஆண்டு பங்குனி மாதம் தஞ்சைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கா. இராஜனின் வழிகாட்டலில், அவரது மாணவர்கள் செய்த நடுகல் ஆய்வின் போது கிடைத்தது. அக்கல்வெட்டில்,

 

           "“கல் பேடு தீயன் அந்துவன் கூடல் ஊர் ஆகோள்”

 

என எழுதப்பட்டுள்ளது.சங்ககால இலக்கியங்கள் நடுகற்கள் பற்றியும் ஆகோள் பற்றியும் அதிகமாகவே சொல்கின்றன. ஆகோள் என்றால் பசுக்களை கவர்ந்து வருதலாகும். ஓர் அரசனின் போர் வீரர்கள், வேறோர் அரசனின் எல்லைக்குள் இருக்கும் பசுக்களைப் பிடித்து வருவார்கள். அதனால் இரு அரசர்களுக்கும் இடையே போர் நடக்கும். அக்கல்வெட்டு கூறும் பேடு தீயன் அந்துவன் அப்படி நடந்த போரில் இறந்துள்ளான். இது பெண்ணாக இருந்து ஆணாக மாறிய பேடன் என்பதை அவனின் பெயரைக் கொண்டு அறியலாம். அப்பெயர் தீயன் அந்துவன் என னகர மெய் எழுத்தில் முடிவதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அந்த நடுகல்லுக்கு உரிய பேடு தீயன் அந்துவன், சிகண்டி போல் ஒரு திருநம்பி என தெரிந்துகொள்ள முடிகிறது. 41 தமிழ்ச் செவ்வியல் நூல்களில் தொல்காப்பியம், அகநானூறு, நாலடியார், திருக்குறள், முதுமொழிக்காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய ஏழு நூல்களில் திருநர் பதிவுசெய்துள்ள பாங்கினைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.

 

 

தொல்காப்பியம்

தமிழில் கிடைத்த முதல் நூல். இது தொல்காப்பியரால் எழுதப்பட்ட இலக்கண நூல். இந்நூலில் திருநர் குறித்தும் பேசப்படுகின்றன.

 

           “பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்

 

           ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்

           தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்

           இவ்என அறியும் அந்தம் தமக்கு இலவே

           உயர்திணை மருங்கின் பால்பிரிந் திசைக்கும்”

(சொல்லதிகாரம், கிளவியாக்கம்:4)

 

என்ற தொல்காப்பிய நூட்பாவிற்கு “உயர்திணையிடத்துப் பெண்மைத் தன்மையை யெய்த வேண்டி ஆண்மைத் தன்மையினீங்கிய பேடி யென்னும் பொருளும் தெய்வத் தன்மையைக் கருதின தெய்வ மென்னும் பொருளும், இவையிரண்டும், இவையெனத் தம்மை வேறுபால் அறிவிக்கும் ஈற்றெழுத்தினை யுடைய சொற்களையுடைய வல்ல; மேற்கூறிய மக்களென்றும் உயர்திணை யிடத்து முப்பாலினையும் உணர்த்தும் சொற்கள், அவ்விடத்தினின்று நீங்கி வந்து தம்மையுணர்த்தும். அந்தத் தமக்கிலவே என்றதனான், மக்களும் தேவருமல்லாத நிரயப் பாலரும் மக்களையுணர்த்தும் முப்பாற் சொல்லாறு சொல்லப்படுவரென்பது கொள்க” (தொல்காப்பியம், சொல்லதிகாரம் உரைக்கோவை, 1963: 37- 38) என்று கல்லாடர் உரைக்கிறார்.

 

            “ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி

            ஆண்மை அறிசொற்கு ஆகிடன் இன்றே”

(சொல்லதிகாரம், கிளவியாக்கம்: 12)

 

எனும் தொல்காப்பிய நூற்பாவனது, ஆண் தன்மையிலிருந்து பெண்மையைப் பெரும்பான்மையாகப் பெற்றவர்களைப் பெண்ணாக கூறுதல் வேண்டும். ஆணாகக் கூறுதல் கூடாது. ஆண்மை அறி சொல் என்றால் என்ன? இவன் ஆண் என்பதை அறியும் சொல் - ஆண்பால் என்பதை அறியும் சொல். மருத்துவன், அமைச்சன், வந்தான், படித்தான் என ‘ன்’ ஆகிய னகர மெய் எழுத்தில் முடியும் ஆண்பாலைக் குறிக்கும் சொல் ஆண்மை அறிசொல்லாகும். ஆண் தன்மையில் இருந்து மாறி (திரிந்து), பேடான பின்னர் பேடி வந்தான் என்றோ, பேடி படித்தான் என்றோ வராது. பேடி வந்தாள் எனவும், பேடி படித்தாள் எனவும் வரும் என்று கூறுகிறது. “பால்மயக் குற்றஐயக் கிளவி தான்அறி பொருள்வயின் பன்மை கூறல்” (சொல்லதிகாரம், கிளவியாக்கம்: 23) எனும் தொல்காப்பிய நூற்பாவானது, திருநர் தோற்றத்தைப் பார்க்கும்பொழுது அவர்கள் ஆணா- பெண்ணா என்பதைக் கண்டறிய முடியாது. அத்தகைய சூழலில் அவர்களைப் பன்மையில் அழைப்பது இலக்கண முறையாகும். பேடு மாற்றமடைகின்ற தன்மையைப் பொறுத்து ஆண்பால் பெண்பாலாகவும், பெண்பால் ஆண்பாலாகவும் சொல்லப்படும் “இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே” என்பதால் சொல்லின் இறுதியைக் கொண்டு ஆணா, பெண்ணா என்பதை அறியமுடியாது என்று கூறுவதைக் காணமுடிகிறது.

 

 

சங்க இலக்கியம்- அகநானூறு

அகநானூற்றில் மதுரை மருதன் இளநாகனார் மருதத்திணைப் பாடலில் பரத்தையிடம் சென்ற தலைவன் தலைவின் ஊடல் போக்கும் பொருட்டு விறலியைத் தூது அனுப்புகிறான். தலைவி தோழியிடம் சொல்லுவது போன்று வாயில் மறுக்கிறாள். வாயில் மறுத்துக் கூறும்போது திருநங்கையர் பற்றிப் பேசுவதாக அமைந்துள்ளது.

 

           “என்எனப் படும்கொல் – தோழி!- நல்மகிழ்ப்

           பேடிப் பெண்கொண்டு ஆடுகை கடுப்ப

           நகுவரப் பணைத்த திரிமருப்பு எருமை

           மயிர்க்கவின் கொண்ட மாத்தோல் இரும்புறம்

           சிறுதொழில் மகாஅர் ஏறி சேணோர்க்குத்

           துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்”

(அகநானூறு, பா.எண். 206)

 

எனும் பாடலில், கள் உண்டதால் ஏற்பட்டக் களிப்புடன் பேடிப்பெண்ணின் உருவம் பூண்டு ஆடும் தலைவனின் செயல் மேலே வளைந்தக் கையைப் போன்று முறுக்குண்ட கொம்புகளையுடை கருநிறத் தோலையும், மயிர்கள் அடர்ந்தும் இருக்கும் எருமையின் முதுகில் சிறிய செயல்களைச் செய்யும் சிறுவர்கள் எறி அமர்ந்திருப்பர். அச்செயலானது தொலைவிலிருந்து காண்பார்க்கு உருண்டைக் கல்லில் முதுமந்தி அமர்ந்திருப்பது போன்று தோன்றும் என்று கூறப்பட்டுள்ளது.

 

 

திருக்குறள்

திருவள்ளுவர் இயற்றிய நூல் திருக்குறள். இந்நூல் அறம், பொருள், இன்பம் என மூன்று இயல்களையும், 133 அதிகாரங்களையும், அதிகாரத்திற்கு 10 குறள்கள் வீதம் 1330 குறள்களையும் கொண்டுள்ளது. இதில், ஆள்வினையுடைமை, அவையஞ்சாமை அதிகாரங்களில் திருநங்கையர் பற்றி திருவள்ளுவர் பேசுகிறார்.

 

           “தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை

           வாளாண்மை போலக் கெடும்” (குறள்: 614)

 

உழைப்பு இல்லாதவன் பிறருக்கு உதவும் உதவி, பேடி (திருநங்கை) போர் செய்யக் கையில் வாளெடுத்ததுபோலப் பயன் அற்றுப் போகக் கூடியது என்று கூறுகிறது. மேலும்,

 

           “பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையத்து

           அஞ்சுமவன் கற்ற நூல்” (குறள்: 727)

 

எனும் குறளில், திருநங்கையரைக் கற்றவர்கள் கூடிய சபையில் எதிர்வாதம் பேச அஞ்சுகிறவனோடு ஒப்பிட்டுள்ளார். திருநங்கையர் கற்றல் மற்றும் பேசுவதில் திறமையற்றவர்கள் என்றும் கோழைகள் என்றும் காட்டப்பட்டுள்ளனர். பேடியின் கையில் எவ்வளவு நல்ல ஆயுதம் இருந்தாலும் அது பிறரைக் காக்கவும் பயன்படாது, தன்னைக் காக்கவும் பயன்படாது. இதேபோன்று எதிர்வாதம் செய்பவனோடு பேசுவதற்குப் பயப்படுகிறவன் எவ்வளவு கற்றறிந்தும் பிறருக்குப் பயனில்லை என்று கூறுகிறது.

 

 

முதுமொழிக்காஞ்சி

முதுமொழிக்காஞ்சி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலை மதுரைக் கூடலூர்க்கிழார் இயற்றியுள்ளார். இது பத்து அதிகாரங்களாக அதிகாரத்திற்கு பத்து செய்யுள்கள் வீதம் 100 செய்யுள்களைக் கொண்டுள்ளது. இதில் துவ்வாப்பத்தில் உள்ள பாடலடிகளில் பேடியின் (திருநம்பியின்) தன்மைப் பற்றி பேசப்படுகின்றன.

 

           “கழிதருகண்மை பேடியிற் றுவ்வாது”

(துவ்வாபத்து, பா.2)

 

என்னும் பாடல் அடியில் இடமும் காலமும் அறியாது ஒருவன் மிகுந்த வீரத்தைக் காட்டுவது என்பது பேடித்தன்மைக்கு ஒக்கும் என்று கூறுகிறார். அறியாது மிகுந்த வீரம்கொண்டு செயல்படுபவன் பேடித்தன்மைக்கு ஒப்புடைமையாகக் கூறப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. அஞ்சவேண்டியதற்கு அஞ்சாதிருத்தல் பேடியின் தன்மை என்கின்றது. “கழி தறுகண்மை பேடியின் துவ்வாது” அளவுக்கு அதிகமான வீரம் கழி தறுகண்மை எனப்படும். பெண்தன்மையிலிருந்து மாறி ஆண் தன்மை அடைந்த பேடனை முதுமொழிக்காஞ்சி சொல்கிறது.

 

 

சிலப்பதிகாரம்

இளங்கோவடிகள் இயற்றிய காப்பிய நூல் சிலப்பதிகாரம். இக்காப்பிய நூலில் திருநர்ப் பற்றி பதிவுசெய்துள்ள பாங்கு ஆராயப்படுகின்றன.

 

           “ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்

           காமன் ஆடிய பேடியாடலும்”

(கடலாடுகாதை, பா. அடிகள்56-57)

 

கடலாடு காதையில் ஆடல்வல்ல மாதவி தாளமுறை கெடாமல் தாளகதியுடன் கொடுகிட்டி ஆட்டம் முதற்கொண்டு பதினொரு வகை ஆடல்களை நிகழ்த்திக் காட்டுகின்றாள். அதில் ஒருவகை ஆடலாக பேடியாடல் அமைகின்றது. ஆண் தன்மையை இழந்து பெண்தன்மை பெற்ற கோலத்துடன் மன்மதன் ஆடிய பேடிக் கூத்தை மாதவி நிகழ்த்திக் காட்டுகின்றாள். இதன்மூலம் காமன் தன்மகனைச் சிறைமீட்டு ஆண் தன்மை திரிந்த பெண்மைக் கோலத்தோடு பேடியாக (திருநங்கையாக) இருந்து பேடிக்கூத்தினை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகப் பேடிக்கூத்தினைக் காமனோடு தொடர்பு படுத்திப் பார்க்கப்படுகிறது. இவை புராணக் கதைகள் சொல்வனவாகும். பேடிக்கூத்து என்பது பிற்காலத்தில்தான் இறைவனைக் குறித்து நிற்கிறது. அதற்கு முன்னர் பேடிகளால் மட்டுமே இக்கூத்து நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும் எனவேதான் அக்கூத்திற்கு ,பேடிக்கூத்து என்ற பெயர் வந்திருக்கவேண்டும்.

 

 

மதுராபதி தெய்வம்- இருபால் கூறு உடையது

 

 

           “வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள்

           இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும்

           வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்

           வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால்

           தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள் பனித்துறைக்

           கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்

           பொற்கோட்டு வரம்பன் பொதியில் பொருப்பன்

           குலமுதல் கிழத்தி”

(கட்டுரைக் காதை, பா.அடிகள்:6-13)

 

மதுரைக்காண்டத்தில் கட்டுரைக்காதையில் கண்ணகி மதுரையை எரித்த பின் அவள் பின்புறம் தோன்றி முன்னர் நடந்த முற்பிறவிக் கதையைச் சொல்லும் தெய்வம் மதுராபதியாகும். இத்தெய்வம் இருபால் கூறுடையது. இடது கையில் தாமரை மலரும், வலது கையில் கொடுவாளும், வலது காலில் வீரக்கழலும், இடது காலில் ஒலி செய்யும் ஒற்றைச் சிலம்பும் அணிந்து காட்சி அளிக்கிறார். மூவேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் குலதெய்வம் மதுராபதி. இத்தெய்வம் இருபால் தன்மை அமைந்த திருநங்கையாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். வஞ்சிகாண்டத்தில் நீர்படைக் காதையில் சேரன் செஞ்குட்டுவன் பத்தினி தெய்வம் கண்ணகிக்குக் கல் எடுத்ததைப் பதிவு செய்கிறது. தமிழரின் வீரத்தை நிலைநாட்டவும் வடதிசை நாடுகள் மீது படையெடுத்துச் சென்று கனகவிசய மன்னர்களைத் தோற்கடித்து இமயத்தில் கல்லெடுத்து கங்கை ஆற்றில் நீர்படை செய்து தென்திசை நோக்கித் திரும்புகின்றான். அவ்விடத்தில் ஆரியப் பேடிகள் பற்றிப் பேசப்படுகின்றன.

 

           “சுருளிடு தாடி மருள்படு பூங்குழல்

           அரிபரந்து ஒழுகிய செழுங்கயல் நெடுங்கண்

           விரிவெண் தோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச்

           சூடக வரிவளை ஆடமைப் பணைத்தோள்

           வளரிள வனமுலை தளரியல் மின்னிடைப்

           பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு”

(நீர்படைக் காதை, பா.அடிகள்: 181-186)

 

என்ற பாடலில் போர்க்களத்தில் தவவேடம் பூண்டு தப்பியோடிய அரசர்களையும் கறுத்த கூந்தலும் செவ்வரி படர்ந்த பெரிய கெண்டை மீன் போன்ற கண்களும் வெண்சங்கு தோடணிந்தவர்களும் வெள்ளைப் பற்களும் சிவந்த வாயும் கைவளையல் அணிந்த கைகளும் அசையும் மூங்கில் போன்ற தோளும் அழகிய இளமார்பும் மின்னல் இடையும் பாடகம் என்னும் காலணி அணிந்த ஆரிய பேடிகளையும் கைது செய்து சேரனின் வீரம் குறித்துச் சோழ பாண்டிய மன்னர்கள் அறிந்திட அனுப்புகின்றான் என்று கூறப்படுகிறது. மேலும்,

 

           “மான்மதச் சாந்தும் வரி வெண் சாந்தும்

           கூனும் குறளும் கொண்டன ஒருசார்

           வண்ணமும் சுண்ணமும் மலர்ப்பூம் பிணையலும்

           பெண் அணிப் பேடியர் ஏந்தினர் ஒருசார்”

(நடுகல் காதை, பா. அடிகள்: 56-60)

 

என்ற பாடலில், செங்குட்டுவனின் மனைவியும் அரசியுமான வேணம்மாள், வெண்ணிலா காணுவதற்கு நிலாமுற்றும் வருகின்றாள். ஒளிவீசும் வளையல் அணிந்த பணிப்பெண்கள் மங்கல விளக்கை எந்தி வாழ்த்துகின்றனர். ஒருபக்கம் மத்தள ஒலியும் யாழிசையும் பண்ணமைத்துப் பாடும் பாடல் முழக்கமும் மிகுந்திருக்கின்றன. கஸ்தூரிக் குழம்பையும் தொய்யில் எழுதும் வெண்சந்தனத்தையும் கூனரும் கள்ளரும் ஏந்தி நிற்கின்றனர். அப்போது பெண்போல் அழகுடைய பேடிகள் அதாவது திருநங்கையர் சுண்ணப்பொடிகளையும் வாசமலர் மாலைகளையும் ஏந்தி நிற்கின்றனர் என்று கூறுவதின் மூலம் திருநங்கையர் அரண்மனை அந்தப்புரங்களில் அரசிக்குப் பணிவிடைகள் செய்பவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

 

 

மணிமேகலை

மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய காப்பிய நூல் மணிமேகலை. இக்காப்பியத்தில் பேடி என்ற சொல் மலர்வனம் புக்க காதையில் 25வது வரியிலும், 125வது வரியிலும், 146வது வரியிலும் ஆகிய மூன்று இடங்களில் வருகின்றன. மேலும் மணிமேகலை பாத்திரமே மறுபிறப்பில் ஆணாய் மாறுவதாக இக்காப்பியம் பதிவு செய்துள்ளது. ஆக மொத்தத்தில் பெண் ஆணாவதையும், ஆண் பெண்ணாவதையும் முதன் முதலில் இக்காப்பியமே பதிவு செய்துள்ளது எனலாம்.

 

           “மணிமே கலைதன் மதிமுகம் தன்னுள்

           அணிதிகழ் நீலத் தாய்மல ரோட்டிய

           கடைமணி உரு நீர் கண்டன னாயிற்

           படையிட்டு நடுங்குங் காமன் பாவையை

           ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?

           பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்? ”

(மணிமேகலை, 3: 20-25)

 

என்ற பாடலில் மணிமேகலையின் அழகை சுதமதி கூறுகின்றபொழுது திருநங்கையர் பேசப்படுகின்றனர். மணிமேகலை என்பவள் மிகவும் அழகானவளாகயிருக்கிறாள். இவளது அழகைக் காணும் ஆண்கள் மயங்கிவிடுவர். அவ்வாறு மயங்காது இருப்பவர்கள் பேடியர் மட்டுமே எனக் கூறுகிறாள். மேலும்,

 

           “கரியல் தாடி மருள் படு பூங்குழல்

           பவளச் செவ்வாய் தவளவாள் நகை

           ஒள் அரி நெடுங் கண் வெள்ளி வெண்தோட்டு

           கருங்கொடிப் புருவத்து மருங்கு வளைபிறை நுதல்

           காந்தள் அம் செங்கை ஏந்து இன வன முலை

           அகன்ற அல்குல் அம்நுண் மருங்குதல்

           இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து

           வாணன் பேர்ஊர் மறுகிடைத் தோன்றி

           நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய

           பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்”

(மணிமேகலை, 3: 116-125)

 

என்ற பாடலில், சுருள் சுருளான தாடியும், கரிய அழகிய கூந்தலும், பவளம் போன்ற சிவந்த வாயும் வெண்மையான ஒளிபொருந்திய பற்களும், ஒளிரும் செவ்வரி படர்ந்த நீண்ட கண்களும், வெண்சங்கால் செய்த காதணியும், கரியகொடி போன்ற வளைந்த புருவங்களின் மேல் வளைந்த பிறை போன்ற நெற்றியும், செங்காந்தள் மலர்போல் அழகிய சிவந்த கையும், ஏந்திய வனப்புடைய இளங் கொங்கைகள், அகன்ற அல்குலும், அழகமைந்த நுண்ணிய இடையும், கணுக்கால் வரை இல்லாமல் முழங்கால் வரை உடுக்கப்படும் வட்டவடிவான உடையும், தோள், முலை முதலியவற்றில் எழுதப்பட்ட வரிக்கீற்று உடைய கோலத்தோடு பேடியர் (திருநங்கையர்) பேடிக்கூத்து ஆடுகின்றனர் என்று கூறுகிறது. காமன் என்ற தெய்வத்திற்குச் சொந்தமான கூத்தை திருநங்கையர் ஆடுவதாக மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் “சங்க இலக்கியப் பாடலும், சங்கம் மருவிய இலக்கியப் பாடலும் அரவாணிகள் ஆடிய கூத்தை எந்தவொரு தெய்வத்தோடும் ஒப்பிட்டுக் கூறவில்லை. திருநங்கைகளால் ஆடப்பட்டு அவர்களுக்குச் சொந்தமான கூத்து ஒன்று இருந்திருப்பதை மட்டுமே கூறுகின்றன. காப்பியக் கதைகளும், புராணக்கதைகளும் பேடிக்கூத்தினைக் கடவுளோடு சார்புபடுத்தியிருக்கிறது. எனவே, பேடிக்கூத்து திருநங்கைகளுக்குரிய கூத்தாகும்” (முனிஷ், 2010: 125- 126) என்று கூறும் முனிஷின் கருத்து சரியானதுதான் எனத் தோன்றுகிறது.

 

           “உத்திர - மகத்து உறுபிறப்பு எல்லாம்

           ஆண்பிறப்பு ஆகி, அருளறம் ஒழியாய்”

(மணிமேகலை, 21: 175-176)

 

என்றும்

 

           “கல்லாக் கயவன் கார் இருள் – தான்வர

           நல்லாய்! ஆண் உரு நாள் கொண் டிருந்தேன்”

(மணிமேகலை, 23: 94-95)

 

என்றும் கூறும் பாடலின் மூலம் மணிமேகலை என்கின்ற பாத்திரத்தின் மூலம் மறுபிறப்பு உணர்த்தப்படுகிறது. அம்மறுபிறப்பில் சமூக நன்மைக்காக மணிமேகலை திருநம்பியாக மாறுகிறார். பல சமயங்களிலும் ஆண் பெண்ணாவதும், பெண் ஆணாவதும் (உருவமாற்றம்) நன்மை பயப்பதற்காகவே காட்டப்பட்டிருக்கிறது.

 

 

முடிவுகள்

திருநரை, தொல்காப்பியம் ஆண்மை திரிந்த என்று பதிவு செய்கிறது. இவர்கள் அகநானூறு, முதுமொழிக் காஞ்சி, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் பேடி என்னும் சொல்லின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ்ச் செவ்வியல் நூல்களில் திருநரைக்குறிக்கும் அலி எனும் சொல் நாலடியாரில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கே கவனிக்கத் தக்க ஒன்றாகும். மேலும் இதில் திருநரைக் குறிக்கும் மற்றொரு சொல்லான பேடி என்னும் சொல் வீரமில்லாத, கோழை என்ற பொருளில் திருநங்கையரைக் குறிக்க வந்துள்ளது.
உயர்திணைக்குரிய பால்களாக ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகிய மூன்றையும் தொல்காப்பியர் வரையறுக்கின்றார். பாலின தன்மைத் திரிபு ஆண்பால் பெண்பால் ஆகிய இரண்டு பாலினங்களிலும் உள்ளன.அதாவது ஆண்தன்மை திரிந்து பெண் தன்மையைப் பெறுதலும், பெண்தன்மை திரிந்து ஆண்தன்மையைப் பெறுதலும் இருப்பதால், பாலின தன்மை திரிந்தவர்களை ஒரே பாலினத் தன்மையுள் அடக்கிக் கூற முடியாது. எனவே பாலின தன்மைத் திரிந்த திருநரை பேடி வந்தான்; பேடி வந்தாள்; பேடியர் வந்தார் என மூன்று பாலினுள்ளும் அழைக்கலாம் என்று உரையாசிரியர்கள் தரும் விளக்கங்கள் வழி தெரிந்துகொள்ள முடிகிறது.
உயர்திணையில் ஒருவர்களான திருநரை ஆணா பெண்ணா எனத் தெரியாத நிலையில் அவர்களைப் பன்மையில் மரியாதையுடன் அழைக்க வேண்டும். அதாவது பலர்பால் விகுதியான ‘அர்’ சேர்த்துக் கூற வேண்டும். தொல்காப்பியம் நூற்பாவின்படி திருநரை திருநங்கைகள், திருநம்பிகள் என்று அழைக்கக் கூடாது. திருநங்கையர், திருநம்பியர் என்று அழைப்பதே சரியான சொல்லாகும் என்கின்றனர். இதனை உரையாசிரியர்கள் பால்வழூஉ என்கின்றனர்.
சங்க இலக்கிய அகநானூறு பாடல் திருநங்கையரை வேடிக்கை மனிதராகத்தான் பதிவு செய்கிறது. இது அன்றைய சமூக நிலை என்பதை உணர முடிகிறது. முதுமொழிக்காஞ்சியானது இடமும் காலமும் அறியாது ஒருவன் மிகுந்த வீரம் காட்டுவது என்பது பேடித்தன்மையை ஒக்கும் என்று கூறுவதன் மூலம் இது ஆண் பேடியை அதாவது சிகண்டி போன்ற ஒருவரைக் கூறுகிறது என்பது தெளிவாகிறது. இவர்களையே தற்போது திருநம்பி என்கிறோம். திருக்குறள் மற்றும் நாலடியாரில் பேடி என்ற சொல்லால் குறிப்பிடப்படும் திருநங்கையர் வீரமில்லாத, கோழை என்ற நோக்கிலேயே பதிவு செய்துள்ளதை அறியமுடிகிறது.
ஆண் தன்மையிலிருந்து பிறழ்ந்து பெண் தன்மையை மிகுதியாகப் பெற்ற மனிதர்கள் வாழ்ந்தனர். இம்மனிதக் கூட்டத்திற்கு, பேடி என்றொரு ஆடல் இருந்துள்ளதை சிலப்பதிகாரம் வழி அறிய முடிகிறது. மேலும், தங்கள் அரண்மனைகளில் பணிப்பெண்களாக திருநங்கைகளை அங்கீகரித்து உள்ளனர்.பௌத்த சமயக் கொள்கையை முழுக்கவும் தாங்கி எழுதப்பெற்றுள்ள மணிமேகலை காப்பியத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள மறுபிறப்புக் கொள்கையில் திருநம்பிகளும் பேசப்பட்டுள்ளனர். அத்தோடு திருநங்கை வாழ்வியல் சார்ந்த செய்திகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பௌத்த சமயத்தைத் தழுவிய மன்னர்கள் தங்கள் அரண்மனைகளில் திருநங்கைகளை அங்கீகரித்து உள்ளனர்.பௌத்த மதத்தில் மற்றொரு முக்கியமான கொள்கை தன்னுயிர் போல் மண்ணுயிர்களை நேசித்தலாகும். இக்கொள்கையின்படி திருநங்கையர் புறக்கணிக்கப்படாமல் பெளத்தர்களால் அரவணைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்ச் செவ்வியல் நூல்களில் சிலவற்றில் மட்டுமே திருநர் (அலி, பேடி, பேடு) பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் கூட இன்ன நபர் திருநங்கையாக (அலி, பேடி) இருந்தார், இன்ன நபர் திருநம்பியாக (பேடன்) இருந்தார் என்று எங்குமே பதிவு செய்யப்படவில்லை. இது திருநரைப் பற்றிய அன்றைய சமூக நிலையாகக் காணமுடிகிறது. இதன் மூலம் அன்றைய சமூகத்தில் திருநர் மதிக்கப்படவில்லை என்று கருதுவதற்கு இடமாகிறது. தமிழகத்தில் திருநர்களுக்கான உரிமைக் குரல் 1990ஆம் ஆண்டு வாக்கில் ஒலிக்கத் தொடங்கியது. அவர்களின் தொடர் போராட்டத்தின் மூலம் இன்று பல உரிமையும் பெற்று வருகின்றனர். எல்லா நிலையிலும் அவர்களின் உரிமை கிடைக்க பாடுபடுவோம்.

 

உதவிய நூல்கள்

  • அழகரடிகள் (உரை), 1976, முதுமொழிக் காஞ்சி, சென்னை: கழக வெளியீடு
  • அன்னி தாமசு, 2004, சமூகத்திலும் இலக்கியத்திலும் ஊனமுற்றோர், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
  • ஆபிரகாம் அருளப்பன், வி.ஐ. சுப்பிரமணியம் (ப. ஆ), 1963, தொல்காப்பியம்- சொல்லதிகாரம் உரைக்கோவை (முதல் பாகம்), பாளையங்கோட்டை: அருள் அச்சகம். கோமளபுரம் இராஜகோபால பிள்ளை உரை), 2000, நாலடியார், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
  • சாம்பசிவம் பிள்ளை.டி.வி., 1931, தமிழ்-ஆங்கில அகராதி, சென்னை: தி ரிசர்ச் இன்டியூட் ஆப் சித்தா.
  • செயபால் (உரை), 2007, அகநானூறு, சென்னை: நியூ சென்சுரி புக் ஹவுஸ் (பி)லிட். சேனாவரையர் (உரை), 1956, சொல்லதிகாரம்- சேனாவரையம், சென்னை: கழக வெளியீடு.
  • சோமசுந்தரனார்.பொ.வே., (உரை), 1979, சிலப்பதிகாரம், சென்னை: கழக வெளியீடு.
  • தெய்வ சிலையார் (உரை), 1929, சொல்லதிகாரம், கரந்தை: கரந்தை தமிழ்ச் சங்கம் பரிமேலழகர் (உரை), 2005, திருக்குறள், சென்னை: கங்கை புத்தக நிலையம்.
  • புலியூர் கேசிகன், 2005, மணிமேகலை, சென்னை: பாரி நிலையம் முனிஷ்.வெ., 2010, அரவாணிகளின் பன்முக அடையாளங்கள், கொல்லவீரம்பட்டி: ஜெயம் பதிப்பகம்.
  • முனிஷ்.வெ., 2013, காலந்தோறும் தமிழ் இலக்கியங்களில் மூன்றாம் பாலினம், சென்னை: சொல்லங்காடி.