ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென …

முனைவர் மு.ஜெகதீசன், உதவிப்பேராசிரியர், தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி – 12. 31 Oct 2019 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

      சங்கப்பாடல்களில் கருப்பொருள் மாந்தரின் உரிப்பொருளுக்கு ஏற்ப கையாளப்பட்டுள்ளத் திறம் அதன் தனித்தன்மைகளுள் ஒன்று. அஃறிணைகளின் பண்புகள் இயல்புகளாகவும், உவமைகளாகவும் பாடப்பெற்ற போதிலும் அவை மாந்தர்களின் உணர்வைப் பிரதிபலிப்பதாகவே அமைகிறது. உவமைகளில் உள்ளுறை, இறைச்சி, குறிப்புப்பொருள் ஆகிய பண்புகள் பாடலின் அர்த்தப்படுத்தல்களை மேலும் மெருகூட்டுவதாக அமைகிறது. இக்கட்டுரை, வெள்ளாங்குருகு என்றொரு பறவையைப் பற்றி பாடப்பட்ட பாடற்செய்திகளில் இயல்பான நிலையிலும், உள்ளுறை, குறிப்புப்பொருள் தன்மையிலும் பொருண்மை காணுகையில் அதன் வழியாக உணர்த்தப்படும் உரிப்பொருள், மாந்தர்களின் உணர்வுகளையும் கவிதையின் பொருள்புரிதலையும் பன்முகப்படுத்துகின்றது என்பதை உணர்த்த முயல்கிறது.

திறவுச்சொற்கள்

வெள்ளாங்குருகு, பரத்தை, பிள்ளை சாதல், நாரை ,வாயில்

குருகு – வெள்ளாங்குருகு

சங்க இலக்கியங்களில் ’குருகு’ என்பது பறவையினத்தைச் சார்ந்தது. பறவையினத்தில் குருகு என்பது கொக்கு என்றும், நாரை என்றும் பொருள் கூறுவர். நீர்வாழ் பறவையான கொக்கு நீண்ட கறுப்பு நிறமுடைய அலகு, கால்களை உடையது. உடல் பகுதி வெள்ளை நிறமுடையது. தமிழ்நாட்டின் நிலவியற் சூழலில் இரு வகையான கொக்குகள் உண்டு. உடல் முழுவதும் வெள்ளை நிறங்களால் தூவி (சிறகு) சூழ்ந்தவை ஒரு வகை. பிடறி மயிர், சிறகின் இறகுகள் கறுப்பும், காவியும் கலந்த நிறத்தில் அமைந்த கொக்குகள் மற்றொரு வகையும் உள்ளன. இவை நீர்நிலையோரங்களில் தங்கி மீன், புழுக்களை உணவாகக் கொண்டு வாழ்பவை. சங்க இலக்கியத்தில் குருகு என்ற சொல்லாட்சியில் இப்பறவைக்கான குறிப்புகள் அநேக இடங்களில் பாடப்பட்டுள்ளன. அகநானூறு, கலித்தொகை, நற்றினை, ஐங்குறுநூறு, குறுந்தொகை ஆகிய நூல்களில் நாற்பத்தேழு (47) இடங்களில் இடம் பெற்றுள்ளன. கொக்கு, நாரை என்ற பொதுப்பொருளாள் ஆனவை. நற்றிணை (70), ஐங்குறுநூற்றில் (151-160,122) ஆகிய பாடல்களில் ‘வெள்ளாங்குருகு’ என்று பாடப்பட்டுள்ளது. இவ்வெள்ளாங்குருகு, குருகிலிருந்து வேறுபட்ட பறவைவையா? அல்லது அதே தன்மைத்தானதா? என்ற ஐயம் எழாமலில்லை. இவ்வெள்ளாங்குருகினை வெண்மை நிறத்தால் ஆன குருகு எனப்பகுக்கலாம்.

வெண்மை + குருகு என்பது புணரும் வழி ‘மை’ விகுதி கெடுவதால்  வெண் + குருகு என்றாகியது. முன்னின்ற மெய்திரிதலால் ‘வெண்’ என்பதில் ‘ண’கரம் ‘ள’கரமாகத் திரிந்து ‘வெள்’ என்றாகியது. ‘தன் ஒற்று இரட்டல்’ விதி மூலம் ‘வெள்’ என்பது ‘வெள்ள்’ என்றாகியது. பின் ஆம் சாரியை ஏற்கையில் வெள்+ ஆம்+ குருகு ₌ வெள்ளாம் குருகு என்றாகியது. இதில் ‘ம’கரம் குருகு என்பதில் ‘க’கரத்தோடு இணைகையில் ‘க’கரத்திற்கு இனமாகிய ‘ங’கரமாக மாறி வெள்ளாங்குருகு என்றாகியது. வெள்ளாங்குருகு ”ஒரு சிறு பறவை, நாரை இனமாகிய ஒரு பறவை, வெள்ளைக்கொக்குமாம். தோற்றத்தில் பெரும்பான்மையும் நாரையை ஒக்கும், நிறமட்டும் தூய வெள்ளை நிறமாக இருக்கும். இஃதறியாது இதனை உள்ளான் என்னும் குருவி எனக் கருதி பாரித்து உரை வகுப்பாரும் உளர்” (பொ.வே.சோமசுந்தரன், ஐங்குறுநூறு (உரை), ப. 191) என விளக்குகிறார்.

      சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே

துறையோடு அறுவைத் தூமற அன்ன

நிறம்கிளர்  தூவிச் சிறுவெள்ளாங் குருகே  ( நற். 70)

நற்றிணையில் வெள்ளி வீதியார் தூதுப் பொருளாகக் கையாளுகிறார். கற்பினை வெகுவாகப் பாடிய மருதத்துறையில் களவிற்கு தூதனுப்பி தலைவியின் நிலைப்பாட்டைப் பாடுகிறார். அழகிய வெண்மை நிறத்தாலான ஆடையை உடலில் போர்த்திய சிறகினைக் கொண்ட குருகே வெள்ளாங்குருகு. நீர்த்துறையில் துழாவி மீன் உண்ணும் பண்பானது இப்பண்பினை கொண்ட பறவையை, உண்ணும் உணவிற்கு அன்பாக யாம் உறும் துன்பத்தினைத் தலைவனிடம் சொல்லுவாயோ? எனக் கேட்பதாக அமைந்துள்ளது.

ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்கும்

கழனி நல்ஊர் மகிழ்நர்க்கு என்

இழை நெகிழ் பருவரல் செப்பா தோயே. (நற். 70)

வெள்ளாங்குருகு – உள்ளுறை ;

வெள்ளாங்குருகு ஐங்குறுநூற்றில் உள்ளுறை உணர்த்தும் கருப்பொருளாகக் கொள்ளமுடிகிறது. நாரையைப் போல் நீர்த்துறைகளிலும், மீனை உண்டும் வேறு இனமாகக் காட்டிக் கொள்ளாமல் வாழும் உயிரி. மருதம், நெய்தல் நிலப்பகுதிகளில் மிகுந்துள்ளதால் அகத்திணை சார்ந்த பாடல்களில் இப்பறவை பற்றிய குறிப்பும், அதன் மீதான கருத்தோன்றலில் கவிதை அமைத்துப் பாடுவதும் மிகுதி. இயல்புமாம். ஐங்குறுநூறு நெய்தல் திணையில் ‘வெள்ளாங்குருகுப் பத்து’ பாடியுள்ளதால் அந்நிலத்தில் இப்பறவையின் முக்கியத்துவம் விளங்கும்.

வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென

காணிய சென்ற  மடநடை நாரை    (ஐங். 151)

நாரைகள் நீர்த்துறையில் கூட்டமாக வாழ்வது. அக்கூட்டத்தினுள் வெள்ளாங்குருகான கொக்கும் கலந்து தனக்கான உணவினைத் தேடும். வெள்ளாங்குருகின் பிள்ளை (பார்ப்பு) இறத்தல் இயல்பு. அவ்விடத்தில் நாரையும் இருத்தல் இயல்பு. இவ்வியல்பினை, வெள்ளாங்குருகின் பிள்ளை இறந்ததாகவும், அதனைக் காண (தன் பார்ப்பாய் (குஞ்சு) இருத்தலாயிருக்குமோ என ஐயுற்று) நாரை ஓரிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் பாடியுள்ளது அம்மூவனாரின் கற்பனைத் திறனாம். ஓரிடத்தில் உறவினரும் யாரேனும் இறந்துபட்டால் அவ்விறப்பிற்குச் செல்லுதல் மனித இயல்பு. அது விலங்கு, பறவைகலிலிருந்து வேறுபட்ட பரிணாம வளர்ச்சி. இக்கருத்து பறவையினமான நாரைக் கூட்டத்தோடு இயைபுபடுத்துதல் கவிதையின் மகத்துவத்தினை மெருகூட்டல், இந்நிகழ்வு மனிதப் பண்பினோடும், வாழ்வியலோடும், ஏற்றி, கவிதை உரிப்பொருள் ஏற்று கருத்துரைக்கிறது. பரத்தை ஒழுக்கம் விரும்பிய தலைவனால் ஊடலுற்ற தலைவி வருத்தத்தினோடு வாயில் மறுக்கிறாள். இச்சூழலில்,

வெள்ளாங்குருகு – பரத்தைக்கும்,

பிள்ளை சாதல் – பரத்தமையோடு ஒழுகிய தலைமகன் ஒழுக்கமும்,

நாரை – வாயில்களாகவும்,

காணியச் செல்லுதல் – வாயில்கள் தலைவியின் ஊடலைத் தீர்க்கச் செல்லுதலும்,

இயைபுபடுத்திக் காணலாம். வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, காணிய சென்ற மடநடை நாரை என்ற பொருண்மை பொது பரத்தமை ஒழுகிய தலைவனின் ஒழுக்கத்தோடு இயைபு படுத்தப்படுகிறது. சங்க அகச் சமூகக் கற்பு வாழ்வில் தலைவன் பரத்தமை நாடுதல் இயல்பு. மாறாதது. அன்றைய பண்போடு ஒன்றியதே. தலைவி ஊடுவதும் வாயில் மறுப்பதும் அப்பண்பினோடு ஒன்றியதே. இத்தலைவன் தலைவியுடன் ஊடல் தீர்ந்து இல் வாழ்விற்குத் திரும்புவதற்கு வழிகோலுபவர்களாகவும், அதனை நெறிப்படுத்துபவர்களாகவும் வாயில்களும், அவர்களுள் ஒருவரான தோழியும் இயல்பது இயல்பு. தோழி தலைவியோடு தலைவனை வாயில் மறுப்பதற்கு உரிமை பூண்டவள். இவ்வியல்பு நடத்தைகள் வெள்ளாங்குருகின் இயல்பு நடத்தையோடு இயைபுபடுத்தப்படுகிறது.

மட நடை நாரையின்  இயல்புகள் – உள்ளுறை

காணிய சென்ற மடநடை நாரை, நெய்தல் மலர்களை மிதித்தல் (151) மருட்கையால் செயலற்று அழுதல் (152) மூக்காலே சிறகைக் கோதுதலால் தூவி மண்மேட்டில் உதிர்தல் (153) மனம் பதைத்தல் (155, 156) அதே நீர்த்துறையில் நாள் முழுதும் பசியைப் பொருட்படுத்தாது தங்குதல் (154,157,158), வயல் வெளி முழுதும் சுற்றித் திரிதல் (158) ஆகிய செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. நீர்த்துறையில் நாரைகள் இரவு பகல் பாராது தன் உணவிற்காகத் தங்கி, ஓய்வு நேரங்களில் சிறகு கோதுதல்  இயல்பு. அவ்வியல்பினைத் தலைவன் ஒழுகிய பரத்தமை ஒழுக்கத்தால் ஊடலுற்ற தலைவியிடம் வாயில்களாகச் சென்றோர். அந்நாரையைப் போல் தன்பசி அறியாது. இரவு பகலாகத் தங்கி,மனம் பதைத்து, தன் நலன் சிதைத்து அவளது இல்லத்தருகே தலைவி ஊடலறுத்து தலைவனுடன் நலம் பெற்ற வாழ்விற்கு வழிகோல முயல்வதாக உள்ளுறை பொருனண்மை உணர்த்துகிறது.

தலைவனின் இயல்புகள்

இந்நிகழ்வுகள் மனம் மாறி வாயில் நேர்வதற்காக வழியுறுத்திய தோழியிடம் கூறிய கூற்றுக்களில் தலைவனின் ஒழுக்கமும், பண்பையும் தலைவி புலப்படுத்துகிறார்.

வெள்ளாங்குருகின்  பிள்ளை செத்தென

காணிய சென்ற மடநடை நாரை

கானல்அம் பெருந்துறைத் துணையோடு கொட்கும்

தண்ணம் துறைவ -  கண்டிகும்

அம்மா மேனிஎம் தோழியது துயரே. (ஐங். 150)

பரத்தமை ஒழுக்கத்தால் சென்ற தலைவன் தான் மணந்த காமக்கிழத்தியுடன் சுற்றித் திரிந்தான். இந்நிகழ்வினை அனைவரும் பார்த்துள்ளனர். தற்போது அவளோடு ஊடல் கொண்டதால் மீண்டு நம் இல்லிற்கு வந்துள்ளான். நம்மைப் போலவே தோழியரும் ( காமக்கிழத்தி) அங்கு ஊடலால் துயருறுவாள். ஆகவே தலைவன் பரத்தமைச் சேரி செல்லுதலே நலம் என வாயில் மறுத்தல், வெள்ளாங் குருகு பிள்ளை செத்தென காணிய சென்ற நாரை கானலம் பெருந்துறையில் கொட்கிய நிகழ்வு தலைவனை உணர்த்துவதற்குப் புலப்படு பொருளானது.

தலைவியின் நிலைப்பாடு

பரத்தமை ஒழுகிய தலைவன் வாரா பொழுதுகளில் அவனை நினைந்து வருந்திய நெஞ்சத்துடனும், வாய்மையுடையவன் போல் தன்னை பாவித்து அவனது வாய்மையின்றி நடத்தையை எண்ணுவதும்,அவள் இல்லத்திற்கேற்ப ஒழுகாமல் புறவொழுக்கம் விரும்புதலால் துன்புறுவதும்,காமக்கிழத்தியிடம் ஊடலுற்று தன் இல்லிற்கு வருவதை தன் சினத்தினால் வசை மொழிவதும், தலைவியின் நிலைப்பாடுகளாம். தலைவன் ஊடல் தீர்த்தற்கு தலைவன் கையாளும் உத்தி புதல்வனாம். புதல்வனுடன் இல் புகும் சூழலில் தலைவனிடம் ஊடும் மரபு சங்க காலத்தில் இல்லை.   அத்தகைய தருணங்களில் ஊடல் தீர்த்தல், தவிர்த்தலே மரபாயிருந்துள்ளது.

வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென

காணிய சென்ற  மடநடை நாரை

காலை இருந்து மாலை சேக்கும்

தெண்கடற்  சேர்ப்பனொடு வாரான்

தான் வந்தனன் எம்காத லோனே. (ஐங். 157)

தோழி வாயில் மறுத்தல்

தலைவியின் உணர்வுகளை முழுவதுமாக புரிந்தவர்களுள் தோழி முதன்மையானவள். தலைவி இன்புற்றும், துன்புற்றும் வாழ்நெறியின் அனைத்து நிகழ்வுகளிலும் உடனிருப்பவள். தலைவனும் தன் நடத்தையில் நெறி தவறும் பட்சத்தில் வாழ்வியல் பண்பினை உணர்த்தி நெறிப்படுத்தலும், கண்டித்தலும் தோழியின் கடமையாகும். வாயில் மறுத்தலும் அத்தகைய சூழலுக்கும், அறிவுறுத்தலுக்கும், முக்கிய தருணமாகவும் வாய்ப்பினை ஏற்படுத்துவதாகவும் அமைகிறது. அவ்வேளையில் தலைவியின் இன்ப துன்ப உணர்வுச் சூழலுக்கேற்றாற்போல  நெறிப்படுத்தலை அறிவுறுத்துகிறாள். பரத்தை வாயில் மறுத்தலால் இல்லத்தினை நினைத்து வாயில்களை அனுப்பிய தலைவனின் இயல்புகளைச் சுட்டுகிறாள்.  பரத்தையிடம் பொய்ம்மொழிகளைக் கூறி இன்புற்று தலைவியின் உள்ளத் தூய்மை மறந்த பண்பினை மொழிகிறாள்.

”எனக்கோ காதலன் அனைக்கோ வேறே” (ஐங். 156)

”பசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப

நின் ஒன்று இரக்குவென்  அல்லேன்

தந்தனை சென்மோ கொண்டஇவள் நலனே” (ஐங். 159)

பசியைப் பொருட்படுத்தாது பரத்தையிடம் தங்குகிறாள். பசியைப் பொருட்டாகக் கொண்டு இல் புகினும், வாயில் மறுக்கப்படுகிறது. உனது பசியை விட இவளது நலனே முக்கியப்படுத்துவதைச் சுட்டுகிறாள்.

 அணிநலன்

வெள்ளாங்குருகின் உவமை நலம் தற்குறிப்பேற்ற அணியை உணர்த்தவல்லது.

இயல்பின் விளைதிறன் அன்றி அயலொன்று

தான்குறித் தேற்றுதல் தற்குறிப் பேற்றம் (தண்டியலங்காரம், நூற். 55)

இயல்பாய் நடக்கும் செயலும், அச்செயலல்லாமல் மற்றொரு நிகழ்வினை ஏற்றி இணைத்தும் பொருள் காண்பது தற்குறிப்பேற்றம். இது கவிதையின் பொருள் உணர்த்தன்மைத்தானது. இத் தற்குறிப்பேற்றம் இருவகைத்து. 1. மெய்பொருள், 2. அல்பொருள்(நிலையியற் பொருள்)

வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென

காணிய சென்ற மடநடை நாரை  (ஐங். 155)

என்ற வரி அல்பொருள் (நிலையியற் பொருள்) அமைந்த தற்குறிப்பேற்றம். வெள்ளாங்குருகு, நாரை கூட்டமாக நீர்த்துறையில் வாழும் பறவையினங்கள். அக்கூட்டத்தினுள் ஒரு பறவை இறத்தல் இயல்பு. அப்பகுதியில் நாரை செல்வதும் இயல்பு. இந் நிலையியற் பொருளால் அமைந்த நிகழ்வினை, அந்நிகழ்வோடு தொடர்பில்லா நிகழ்வான பரத்தமை ஒழுக்கம் நாடிய தலைவன் மீது ஊடல் கொண்ட தலைவியின் ஊடலைத் தவிர்க்க வாயில்கள் சென்ற நிகழ்வினை இயைத்துப் பாடிய திறம் நிலையியற் பொருளான தற்குறிப்பேற்றம் என்பவாம். பொருளுணர் தன்மைத்தால் புலவனின் புலமையும் வாசகனின் கவிதை நோக்கு முறையில் உவமை நலம், உள்ளுறை ஏற்றிப் பொருள் காணப்படுகிறது.

முடிவுரை

வெள்ளாங்குருகின் (கொக்கு) வாழ்வின் சிறுநிகழ்வினில் உவமை செழுத்தி பாடிய புலமை நலத்தில் கவிதையின் நுட்பத்தினை உணரமுடிகிறது. சங்ககால அகச் சூழலையும், மரபினையும், தொல்காப்பியர் வகுத்த ‘உள்ளுறை’ பொருள் விளக்கத் தன்மையில் உரிப்பொருளேற்றி தலைவன், தலைவி, வாழ்வில் பிணக்கமும் நெகிழ்வும் அதன் சூழலான சமூகமும் உணர்த்துதலால் கவிதையின் பண்பையும் கருப்பொருளின் பொருளாழத்தோடு மெருகூட்டுவதைக் காணமுடிகிறது.

உதவிய நூல்கள்

  1. இளம்பூரணர் (உ.ஆ.), 1969: தொல்காப்பியம், கழக வௌயீடு, சென்னை.
  2. நாராயணசாமி பின்னத்தூர் (உ.ஆ.), 2017: நற்றிணை, கழக வௌயீடு, சென்னை.

சாமிநாதயைர் உ.வே. (உ.ஆ.), 1920: ஐங்குறுநூறு, கழக வெளியீடு, சென்னை.