ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

குறிஞ்சிப்பாட்டில் தோழியின் சொல்வன்மை

முனைவர் ப.விமலா அண்ணாதுரை, உதவிப்பேராசிரியர் (ம)தலைவர். செல்லம்மாள் மகளிர் கல்லூரி, கிண்டி , சென்னை - 32 31 Oct 2019 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்;

பண்டைய அகத்திணைப் பாடல்களில் தோழியின் தன்னிகரற்ற சொல்வன்மை மிகுந்து நிற்றலை அதிகம் காணலாம். அவளன்றி அகத்திணைப் பாடல்கள் முழுப்பெறமுடியாது என்றே கூற வேண்டும். இக்கூற்று ஐவகை நிலத்தின் கண்ணும் நமக்கு தெரிகிறது ஐவகை நிலத்தில் காணப்பெறும் அன்பு வாழ்க்கையில் தோழி முழுமையாக ஊடுருவி நிற்பதைக் காண்கிறோம்.அதனை கபிலரின் குறிஞசிப்பாட்டின் வழி ஆராய்வதே இக்கட்டுரை.

திறவுச்சொற்கள்;

குறிஞசிப்பாட்டு, கபிலர்தோழி, சங்க இலக்கியம்,  அகத்திணை, அறத்தோடு நிற்றல்.

குறிஞ்சிப்பாட்டில் தோழியின் சொல்வன்மை

அக  இலக்கியத்தில் இன்றியமையாத இடத்தினைப் பெறுபவள்  தோழி. அகத்திணை மாந்தர்களுள்  தோழிக்கெனத்  தனிச்சிறப்பிடம் உண்டு.  களவு ,கற்பு இரு நிலைகளிலும் பெரும்பங்கு ஏற்பவள் தோழி. தலைவியின் குழந்தைப்பருவத்தில் உடலை போற்றி வளர்ப்பவள் செவிலி. இளமைப்பருவத்தில் உள்ளத்தை போற்றி காப்பவள் தோழி. தோழியரே பின்னால் செவிலியர் என்ற நிலையை அடைகின்றனர். தலைவியின் விளையாட்டுப் பருவத்தில் இருந்து தோழியாக இருந்து., மகப்பேறு நிலையில் செவிலியாக மாறுகின்றாள். செவிலியின் மகள்தான் தோழி என்பதை.

தோழி தானே செவிலி மகளே (தொல்பொருள் – 127)

எனவும்.,

‘சூழ்தலும்   உசாத்துணை  நிலைமையிற் பொலிமே                                                                                                 (தொல் -பொருள் 128)

 என்றும் கூறியுள்ளார் தொல்காப்பியர்..பிறமொழி இலக்கியங்களை விட தமிழ் மொழியில்தான் தலைவியுடன் தோழி சமநிலையில் சுட்டப்படுகிறாள். இகுளை. பாங்கி. சில்லடி. இணங்கி. துணைவி. தோழி. செடி போன்ற சொற்கள் தோழியைக் குறிப்பன. ஆனால் தோழி என்ற சொல்லே பழமை சிறப்புடையது தொல்காப்பியம் ,இறையனார் அகப்பொருள், .வீரசோழியம் முதலிய இலக்கண நூல்களிலும் சங்க இலக்கியங்களிலும் தோழி என்ற சொல்லே பயன்பாட்டில் உள்ளது.

தோழி பற்றி அறிஞர்கள் கூற்று;

  1.  ‘அறிவுசார்ந்த அக்காலப் பெண்ணுலகிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றவள் தோழி’ என்கிறார் புலவர் குழந்தை
  1. ‘தோழியானவள்  அன்பும். அறிவும். அறமும் முறையே உள்ளம் உரை செயல்களாகத் திறண்டு பெண்ணுருக் கொண்டு வந்தாள் போலும் பெருமையுடையவள் என்றால் சாலும்’ என்பர் அவ்வை  சு துரைசாமி பிள்ளை
  2.  ‘தலைவன் தலைவி என்னுமீருவர் கூற்றிலும் இவ்விருவர் அன்பினையும் வளர்க்கும் நன்மதி நாட்டம் அமைந்த தோழியின் கூற்றே இக்களவொழுக்கத்தின் இயல்பினை இனிது விளக்குவதாகும்’ என்கிறார் வெள்ளை வாரணனார்
  3. ‘தோழி இன்றி காதலர்களின் களவு ஒழுக்கம் நீளாது என்பதும் ஐந்திணை இலக்கியப் படைப்புக்கு தோழி என்னும் ஆள் இன்றியமையாதவள் என்பதும் தோழியின் புணர்ச்சிக்குரிய துறைகளே புலவர்களின் நெஞ்சைக்  கவர்ந்தன என்பதும் பெறலாம்’ என்கிறார் வ சுப மாணிக்கம்
  4.  ‘அரிய நட்புடையவராய் அன்னையாய் அமைச்சராய் விளங்கும் தோழி தலைவியின் வாழ்வு வளம்பெறச் செய்யும் சேவை பெரிது பெரிது’” என்கிறார் நா. ஜெயராமன்.

தோழியின் சிறப்பு;

 சங்ககப் பாடல்களில் தலைவன். தலைவி ஆகிய பாட்டுடைத் தலைமக்கள் இருந்தும் அவர்களின் செயல்பாட்டுக்கு உறுதுணையாய் விளங்கும் தோழியின் நிலையும். பணியும் அதிக அளவில் நமது கருத்தை செலுத்தச் செய்கின்றன. தோழி எனும் பாத்திரத்தின் பங்கு பயிலும் பாடல்களில் எல்லாம் பரவி நிற்கிறது. இடைக்காலத் தமிழ் இலக்கியத்தில் தோன்றி வளர்ந்த தூது இலக்கியங்களுக்குச் சங்க இலக்கியத்தில் பல முன்னோடி சான்றுகளைக் காணமுடிகிறது சங்க இலக்கியத்தின் அகப்பாடல் இயக்கத்திற்கு முக்கிய பங்காற்றும் தோழியும் பாங்கனும் ஒருவகை தூதுவர்களாகவே விளங்கினார் என்றால் மிகையாகாது.

            தொல்காப்பியத்திலும் சங்க சான்றோர் தம் இலக்கியப் படைப்புகளிலும் குறிப்பிடப்படும் தோழி – அறிவு -  அழகு ஆற்றல் முதலியவற்றால் தலைமகளோடு ஒத்த சிறப்புடையவளாக தலைவிக்கு உற்றுழி உதவும் நட்பினளாக விளங்குகின்றாள். அவளுடையச் சிறப்பினை ‘தாங்கரும் சிறப்பின் தோழி’ எனவும் ‘உறுகண் ஓம்பல் தன்னியல்பாகலின், உரியதாகும் தோழிகண் உரனே’ எனவும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிச் சென்றுள்ளார்,

 பண்டைய அகத்திணைப் பாடல்களில் தோழியின் தன்னிகரற்ற சொல்வன்மை மிகுந்து நிற்றலை அதிகம் காணலாம். அவளன்றி அகத்திணைப் பாடல்கள் முழுப்பெறமுடியாது என்றே கூற வேண்டும். இக்கூற்று ஐவகை நிலத்தின் கண்ணும் நமக்கு தெரிகிறது ஐவகை நிலத்தில் காணப்பெறும் அன்பு வாழ்க்கையில் தோழி முழுமையாக ஊடுருவி நிற்பதைக் காண்கிறோம்.

      களவுக் காலத்தில் தோழியின் உதவியோடு தலைமக்கள் சந்தித்தலும்., தலைமகனுக்குத் திருமணத்தின் இன்றியமையாமையை எடுத்து உரைத்தலும், செவிலி தலைவியின் உடல் மெலிவு கண்டு வருத்தமுறும் காலத்திலும, அறத்தொடு நிற்கும் சமயத்திலும், இவற்றை போன்ற இதர பல இடங்களிலும் தோழியின் அறிவாற்றலும் சொல் வன்மையும் வெளிப்படுவதை நாம் நன்கு உணரலாம்.

      தமிழ் இலக்கிய பெருங்கடலில் சங்ககாலப் பாடல்களில் ஒரு பகுதி ஆயினும் அச் சிறு பகுதியினும் நீந்திக் கரைசேர்வது எளிதன்று எனவே பத்துப்பாட்டில் ஒரு பகுதியாக விளங்கும் குறிஞ்சிப்பாட்டினைத் துணைகொண்டு தோழியின் மாண்பினை உணர்வோம்.

ஆரிய அரசர் பிரகத்தத்தனுக்கு அறத்தொடு நிற்றலின் சிறப்பினை உணர்த்தவும்,,தமிழ்மொழியின் தனியிலக்கிய மாண்பினை காட்டவும் சங்கச் சான்றோர் கபிலர் 261 அடியில் குறிஞசிப்பாட்டை இயற்றினார். அறத்தொடு நிற்றலின் சிறப்பினை கபிலர்  தோழி கதாபாத்திரத்தின் மூலம் நமக்கு விளக்குகிறார்.

அறத்தொடு நிற்றல்

தலைவியின் உடல் மெலிவு கண்டு வருந்தும் செவிலிக்கு ஆறுதல் கூறும் வகையுடன் உண்மை நிலையையும் உணர்த்த முற்படுகிறாள் தோழி. இதனை இலக்கியச் சான்றோர் அறத்தொடு நிற்றல் எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால் தோழி தானே வலிய சென்று அறத்தொடு நிற்பதாக இங்குக் காட்டப்படவில்லை. இக்கருத்து எல்லா பாடல்களுக்கும் பொதுப்படையாக விளங்குகிறது எனக்கூறலாம். அறத்தொடு நிற்றல் என்ற மரபினை கூறும் தொல்காப்பியனார்,

‘அறத்தொடு நிற்கும் காலத் தன்றி

           அரசியல் மரபிலள் தோழி என்ப’ (பொருளியல்)

எனக் கூறியுள்ளார். இவ்வாறு தோழி அறத்தொடு நிற்கும் காலத்தில் தலைவியின் குடிப்பிறப்பும் கற்பு முதலியவற்றிற்கும், செவிலியின் அறிவிற்கும்., தலைவனின் பெருமைக்கும், தன் பாதுகாவலுக்கும், மாறுபடாத சொற்கள் நிறைந்த பேச்சுத் திறமையினால், செவிலிக்கு உண்மையை உணர்த்துகிறாள்.

      அறத்தொடு நிற்கும் தோழி, செவிலிக்குத் தான் கூற விரும்புவதை பல நிலைகளில் இருந்து உணர்த்துகிறாள்.அந்நிலைகளை ஏழு வகையாகப் கொண்டு விளக்கும் தொல்காப்பியச் சூத்திரம் ஒன்று பின்வருமாறு கூறுகிறது.

எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல்

கூறுதல் உசாதல் ஏதீடு தொகைஇய

ஏழுவகை என்மனார் புலவர்’  (பொருளியல்)

இந்த ஏழு திறத்தினுள்  ‘கூறுதல்  உசாஅதல’ என்று ஒழிய இதர ஆறு வகையாலும் தோழி அறத்தொடு நிற்பதாக குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

      தலைவியின் உடல் மெலிவுக்குக் களவு  வாழ்க்கையே காரணம் என்று உணராமல் வருந்தும் செவிலியை ‘அன்னாய் வாழி வேண்டு அன்னை’ எனத் தோழி அழைக்கின்றாள். ஏதேனும் ஒரு நினைவில் அழுந்தி இருப்பவர்களை தம் அசால்லை ஏற்றுக்கொள்ளும்படி முன்னிலைப் படுத்தும் பொழுது ஒருமுறைக்கு இருமுறை அழைக்கும் வழக்கம் சொல்வன்மையுடன் உரையாடுபவர்களுக்கு அமைந்த இயல்பாகும். இந்த இயல்பை தோழி எடுத்த எடுப்பிலேயே கையாளத் தொடங்குகிறாள். மேலும் செவிலிக்கு முன்னமேயே தெரிவித்திருக்க வேண்டிய இம்மறைவு வாழ்க்கையினை இந்நாள் வரையும் அவள் அறியாதபடி மறைத்தமைக்கு காரணம் கூற வேண்டும் என்பதற்கும் தம் உயிரினும் சிறந்த நாணமே இச்செய்தியினை வெளிக்கொணராதபடி தடைப்படுத்தி நின்றது என்பதையும் கூற வேண்டும்.இதனைக் கருத்தில் கொண்ட தோழி, செவிலியை இரு முறை அழைத்தாள். அன்னாய் என விளித்த தோழி, தாயின் கருத்தை தன்பால் முழுமையாக திருப்புதற் பொருட்டு  வாழி என வாழ்த்துகிறார் வேண்டு எனும் சொல் யான் கூறப் போகும் செய்தி., உன் நோய்க்கும் தலைவியின் வருத்ததிருக்கும் கழுவாயாக அமையும் அதனை விரும்பிக்கேள்  என்னும் பொருளை முன் நிறுத்துகிறது.

 துன்புற்று உழலும் செவிலியின் மனநிலையுடன் தன்னை இணைத்துக் கொள்ளத் தோழி முயற்சிக்கிறாள். இதனால் அவள் அடைந்த துயரத்தில் தானும் ஈடுபட்டு உள்ளம் வருந்துகிறாள்

‘அன்னாய் வாழி! வேண்டு அன்னை! ஒண்ணுதல்
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,
பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும்,
  
வேறு பல் உருவில் கடவுள் பேணி,
நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று,
எய்யா மையலை நீயும் வருந்துதி!   (குறிஞ்சிப்பாட்டு;1-8)

என்னும் தொடர்களினால் செவிலித்தாயின் வருத்தத்தினை தானும் உணர்ந்து வருந்துவதாக தோழி கூறுகின்றாள். இதனால் செவிலித்தாய் உள்ளத்தில் மற்றொரு மாற்றத்தையும் தோழி ஏற்படுத்துகிறாள்.அறியுநர் என்றது இகழ்ச்சிக் குறிப்பையே வெளிக்கொணருகிறது. தன் தலைவியின் நோய்க்கு காரணம் தலைவன் மார்பேயாகவும்., அதனை அறியாமல் தெய்வத்தால் வந்தது என்பர் மடவோர் என்பது தோழியின் கருத்தாக தென்படுகிறது, தோழி இவ்வாறு குறிப்பிடுவது செவிலிக்கு சற்று மனக்குறையை உண்டுபண்ணி இருப்பினும் அது தோழியின் கூற்றினை கூர்ந்து கேட்க அவளைத் தூண்டுகிறது.

செவிலித் தாய் மனவாட்டம் கொள்வதற்கு காரணமான தலைவியின் நோய்., அவள் மனத்துள் வாழும் கவலையால் ஏற்பட்டது என்று கூற நினைத்த தோழி.,

‘நல் கவின் தொலையவும், நறும் தோள் நெகிழவும்,
புள் பி்றர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும்,
   10
உள்கரந்து உறையும் உய்யா அரும் படர்
செப்பல் வன்மையின் செறித்தியான் கடவலின்’

                                  (குறிஞ்சிப்பாட்டு;9-12)

 எனக் கூறிச் செவிலியின் கருத்தினைத் தன்பால் ஈர்த்துக் கொள்ள முயற்சிக்கிறாள். இக்கூற்றினால் ‘புறஞ்செய சிதைதல்’., ‘புலம்பித் தோன்றல்’ எனும் இரண்டு மெய்ப்பாடுகளைத் தலைவி எய்தினாள் என்பதை செவிலிக்கு உணர்த்தினாள். தலைவி தானுற்ற நோயை தாய்,தமர் அறியாவண்ணம் மறைக்கும் பொருட்டு தான் எப்பொழுதும் போல அழகியத் தோற்றத்துடன் வெளியே (பொய்)க் கோலம் புனைந்தாலும்., அவள் அகத்தே நின்ற வருத்தம் அவளுடைய நலத்தை சிதைத்தே காட்டியது. இந்நிலையில் அவள் தன் தாய் முதலிய சுற்றம் சூழ இருந்தும்., தனித்திருப்பதாக உணர்ந்தாள். அத்தனிமை உணர்ச்சியையே தோழி ‘புலம்பு வந்தலைப்பவும்’ என்று குறிப்பிட்டுக் காட்டுகின்றாள். தலைவி தனது செறிவுடைமையால் தன் நோயைத் தன்னகத்தே மறைத்தொழுகியதால்., தோழி தன் சொல் வன்மையால் அவளை மாற்றி அவளே கூறுமாறு செய்தேன் என்று கூறுகிறாள். ஆனால் தலைவியின் களவு ஒழுக்கத்தை உடனே கூறாமல் அவளுடைய மன வருத்தத்தை மேலும் கூறிச் செவிலியின் உள்ளத்தையும் உருக செய்கிறாள். இதனை.,

‘முத்தினும், மணியினும், பொன்னினும், அத்துணை
நேர்வருங் குரைய கலங்கெடின் புணரும்
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
   15
மாசறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்,
ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல் மருங்கு அறிஞர்

                                    (குறிஞ்சிப்பாட்டு;13 -18)

என்று ஒழுக்கத்தின் இழுக்கா உயர்குணச் சிறப்பையும்..

மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப,
நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி,
   20
இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென
நாம் அறி உறாலின் பழியும் உண்டோ?
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால், நமக்கென.

                                  (குறிஞ்சிப்பாட்டு;19-24)

என்று மனக்கவலையையும் உள்ளத்திண்மையையும் தோழி ஒருவாறு வெளியிடுகிறாள்.இவ்வடிகளில் .தலைவியின் குடிப்பிறப்புக்கு  குற்றம் ஏற்படாத வண்ணம் உரைக்கின்றாள்.

தன்னிலை கூறும் தோழி ;

தோழி இந்த உண்மையை காலந்தாழ்த்தி   வெளியிடுவதற்குச் செவிலிழ சீற்றம் கொள்ளுவாளோ என்ற அச்சத்தினால் .தன்னுடைய சொல்வன்மையின் திறத்தினை உடனே கையாள்கிறாள். இதனை.,

‘இகல் மீக் கடவும் இரு பெரு வேந்தர்
வினை இடை நின்ற சான்றோர் போல,
இரு பேர் அச்சமோடியானும் ஆற்றலேன்.’

                                    (குறிஞ்சிப்பாட்டு;27-29)

எனத் தன் நிலையை தாய்க்கு புலப்படுத்துகிறாள். செவிலிக்கு தலைவியின் களவினை எடுத்துரைத்த தோழி., தொடர்ந்து களவு ஏற்பட்ட முறையினையும்., அது வளர்ந்த வகையினையும் விளக்கி செல்கிறாள்.

      அறத்தொடு நிற்கும் தோழி, தலைவியின் கற்பு முதலான குண நலன்களுக்கு இழுக்கு நேராவண்ணம் பல செய்திகளை கூறுகிறாள். தலைவி தலைவனை கண்டது சூழ்வினை காரணத்தினாலேயே என்பதை மதம் பிடித்த யானையை கொண்டு விளங்குகின்றாள். அதனிடமிருந்து உயிர் பிழைத்தற்குரிய வேறுவழியின்றி., செய்வதறியாது தம் உயிரினும் சிறந்த நாணையும் மறந்து., தம் முன் நின்ற தலைவனையே பாதுகாவலாக சார்ந்தோம் என்கிறாள்.

‘மையல் வேழம் மடங்கலின் எதிர்தர,  

உய்வு இடம் அறியேம் ஆகி, ஒய்யெனத்

திருந்து கோல் எல் வளை தெழிப்ப, நாணு மறந்து,

விதுப்புறு மனத்தேம் விரைந்து அவற் பொருந்திச்

சூர் உறு மஞ்ஞையின் நடுங்க,’

                                 (குறிஞ்சிப்பாட்டு;165-169)

 என்று தலைவியின் நாணத்தைக் கூறுகிறாள்.

 தலைமகள் தன் உயிரினும் மேலான நாணத்தையும் அதனினும் சிறந்த கற்பினையும் பாதுகாப்பும் இயல்புடையவள் என்பதனை ‘ஆற்றின வாரா ராயினும் ஆற்ற ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு’ என வரும் தலைவியின் வாய்மொழியால் அறிவுறுத்துகிறாள்,

 தகை சான்ற தலைவனின் பெருமையையும் தலைவி அவனை பெறுதலால் அமையும் உவகையும் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறாள். தலைவியை மணந்து கொள்ளத் தக்க ஒத்த அன்பும் பிற தகுதியும் உடையவன் இவனே என்பதைக் .,

குன்றுகெழு நாடன் எம்விழைதரு பெரு விறல்’

என்னும் அடியில் குறிப்பிடுகிறாள். களிறு கண்டு நடுங்கும் தலைவிக்கு ‘அஞ்சல் ஓம்பு’ என ஆறுதல் கூறவே அவளை அணைத்தான் என்றும்.., பெண்கள் பால் பெறும் இன்பமே குறிக்கோள் எனக் கொள்ளாது இல்லறமே நல்லறம் எனக் கூறும் தலைவனின் உயர்வையும்.,

‘பெறாஅன் பெயரினும், முனியல் உறாஅன்,
இளமையின் இகந்தன்றும் இலனே, வளமையின்
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே;’

                                   (குறிஞ்சிப்பாட்டு;237-245)

என்று தலைவனின் ஒழுக்கச் சிறப்பையும்,,

நேர் இறை முன் கை பற்றி நுமர் தர,
நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள்!
கலங்கல் ஓம்புமின், இலங்கு இழையீர்!
என,

(குறிஞ்சிப்பாட்டு;231-233)

 அவ்வொழுக்கத்தைப் பிறருக்கு உணர்த்தும் தலைவனின் அறிவுடைமையினையும் தோழி தன் சொல்வன்மையினால் எடுத்தியம்புகிறாள்.

தலைவன் நாட்டின் சிறப்பு:

தலைவனின் உருவத்தை முனைந்து பாடி., அவனை உயர்ந்தவனாக காட்டுகிறாள், தலைவனின் மலையை வருணித்து அவனுடைய நாட்டின் செல்வச் சிறப்பைச் செவிலிக்கு எடுத்துரைக்கிறாள்.

‘———- ———அவ்வழி
பழுமிளகு உக்க பாறை நெடுஞ்சுனை
முழு முதற் கொக்கின் தீங்கனி உதிர்ந்தெனப்,
புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்  

நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்ச்
சாறு கொள் ஆங்கண் விழவுக் களம் நந்தி,
அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல்
வரையர மகளிரின் சாஅய் விழைதக,  

விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்
தண் கமழ் அலரி தாஅய் நன் பல
வம்பு விரி களத்தின் கவின் பெறப் பொலிந்த
குன்று கெழு நாடன் (குறிஞ்சிப்பாட்டு;186-199)

 என்னும் பகுதி தலைவனது மலையின் இயல்பினைப் புனைந்துரைப்பதோடு.., செவிலியின் எண்ணத்தில் தலைவனின் பெருமையை நிலைநாட்டி இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதனால் தலைவனின் வீரமிக்க நாட்டையும் அவன் பிறந்த சிறப்புமிக்க குடும்பத்தையும் தலைவி தலைவன் இடையே நடந்த களவு வாழ்வினையும் தோழி திறம்பட மொழிகிறாள்.

      களவு வாழ்க்கை மேம்பட்ட தலைவன்., இரவுக் குறியில் வந்து ஒழுகிய பொழுதும் உள்ளப் புணர்ச்சி அளவில் நின்று அளவளாவுதல் இன்றி மெய் தொட்டு அளவளாவவில்லை என்பதனை தோழி செவிலிக்கு விளக்கமாக அறிவுறுத்துகின்றாள்.

‘வேய் புரை மென் தோள் இன்துயில்
பெறாஅன் ……’
(குறிஞ்சிப்பாட்டு;242-243)

 எனக் கூறுவதனால்., இரவுக் குறியினும்  மெய்யுறு புணர்ச்சி நிகழாமையை அறியலாம். ஆயினும் புணர்ச்சி அளவில் நிற்கும் காதலிலும் தலைவன் தலைவி ஆகியோரிடையே அன்பு தலைதூக்கி நின்றது என்பதைத் தோழி குறிப்பிட மறக்கவில்லை.

‘காவலர் கடுகினும், கத நாய் குரைப்பினும், 

நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும்,

                                                                                       (குறிஞ்சிப்பாட்டு;240-241) என்னும் அடிகளில் தலை மக்களின் அன்பு வேட்கை பல இடர்கள் இடையிலும் வளர்ந்தோங்கி உணர்த்துகிறாள்.

அன்பின் உயர்வினை காட்டும் நோக்கத்திலும் இருவரும் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள் என்று உணர்த்தும் நோக்கத்திலும் இருவரின் காதலும் மெய்யுறு புணர்ச்சி அற்றது என தோழி குறிப்பிட்டாள். இதனால் இருவர் இடையிலும் அன்பு இல்லை எனச் செவிலி தவறாகக் கருத்துக் கொள்வாளோ., என்ற நோக்கத்தில் அவர் தம் அன்பு வேட்கையை மறவாது குறிப்பிடுகிறாள் தோழி. தலைவியின் நலம் காக்க அவளுக்குக் காவலாகச் செல்வது தோழியின் பணி. தோழி தன் காவலில் தவறியதால் தான் செவிலியின் வளர்ப்புக்கு இழுக்கு நேர்ந்தது என செவிலி கருதக்கூடும். இதை உணர்ந்த தோழி தன் காவலுக்கு இழுக்கு நேராவண்ணம் நிகழ்ச்சிகளை அடுக்கிச் சென்று முடிக்கிறாள். தலைவன்-தலைவி இடையே நட்பு இயற்கைப்புணர்ச்சியாலேயே  ஏற்பட்டது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறாள். ‘விளைந்த திணையின் கண் வீழும் கிளிகளையோட்டி மாலைப்பொழுதில் வருவீராக’ எனச்சொல்லி செவிலி அவர்களை தினைப்புனத்திற்கு  அனுப்பி வைத்ததை எடுத்துக் கூறுகிறாள். தலைவனின் மலை வளத்தை உள்ளுறை உவமத்துடன் கூறுங்காலமும் ‘தேன் அடையில் இருந்து ஒழுகிய தேன்’ என்னும் கூற்றால்,, இருவரையும் கூடியது பால்வரை தெய்வமே என்றும் கூறுகிறாள். மேலும் இருவர் நெஞ்சமும் விரும்பிய நிலையில் நேர்ந்த உள்ளப் புணர்ச்சிக்கு மலையில் வாழ்ந்த மதயானை ஏதுவாக இருந்ததை,

 ‘அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி: (குறிஞ்சிப்பாட்டு;212)என்ற வரிகள் நமக்கு சொல்லுகிறது.

தலைவியின் துயரம்;

தலைவன் தன் மேல் வைத்த காதலால் இரவுக்குறியில் வந்து ஒழுகுவதை அறிந்த தலைவி அவன் வரும் வழியில் இடையூறுகளை எண்ணிக் கலங்கி அழும் இயல்பினை.,

‘———- ———- கொன் ஊர்
மாய வரவின் இயல்பு நினைஇத் தேற்றி,
நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா,
ஈரிய கலுழுமிவள் பெரு மதர் மழைக் கண்
ஆகத்து அரிப் பனி உறைப்ப, நாளும்
வலைப்படு மஞ்ஞையின் நலம் செலச் சாஅய்  

நினைத்தொறும் கலுழுமால் இவளே. ———-“                       (குறிஞ்சிப்பாட்டு;245-251)

 எனச்சொல்லிச் செவிலிக்கு அறத்தொடு நிற்கின்றாள். இந்த இந்த இறுதிப்பகுதியிலும் தோழி தலைவியின் கவலை உணர்ச்சியை முன்னுக்குக் கொண்டு  வருவதின் மூலம் செவிலியின் உள்ளத்தில் இரக்க மனப்பான்மையை ஏற்படுத்துகிறாள்.

 சங்ககால இலக்கியத்தைப் பயின்று இன்புறும் போது ஒரு சில நேரங்களில் தலைமகன் - தலைமகள் ஆகியோரின் உள்ளத்து உணர்ச்சிகளுக்கு உருவம் தரும் சிற்பியாக தோழி உருவாவதை நாம் உணரவே செய்கிறோம்.குறிப்பாக குறிஞ்சிப்பாட்டில் பாடல் முழுக்க தோழி தன் அறிவினாலும் சொல்வன்மை ஆனாலும் மாட்சிமைப் பெறுகின்றாள்.

பயன்பட்ட நூல்கள்:

  1. பத்துப்பாட்டு -- சோமசுந்தரனார் ஊரை
  2. பத்துப்பாட்டு   -- உ வே சாமிநாதய்யர் உரை
  3. சொற்பொழிவுகள் சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் பழகம்
  4. சங்கப்புலவர் நூல் வரிசை  - புலவர் கா .கோவிந்தன்