ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பேச்சு வழக்கில் தொடரும் இலக்கண மரபுகள்

முனைவர் சு.விமல்ராஜ்                                           உதவிப்பேராசிரியர்   தமிழாய்வுத்துறை அ.வ.அ.கல்லூரி(தன்.)                                           மன்னன்பந்தல் 31 Oct 2019 Read Full PDF

SYNOPSIS:

TITLE: The grammatical traditions that persist in speech

Everyone knows that grammar came from literature. There was a grammatical structure in the language style that people were talking about since ancient times. Rational history of the linguistic dialects of the world's linguistic grammar can take the history of the beginnings of the earliest and present the most basic character of the language. There is a claim that the literary, grammar base traditions of Tamil language have begun to slow down in the course of discussion. The regional dialects of the Tamil language have reached a new image from the antiquity of the phonological system and shape. Even if it has a new form, it can not be a creepy thing. It is entirely different from the basic character of the language that it is far from the basic character of the original languag.It continues to be the source of the primitive source and never loses it.Based on the elements of the Ollen and Urban, there is a continuation among people in today's speech case. This article travels to the conclusion that there are such elements in which cases.

திறவுச்சொல்: பேச்சுவழக்கு, இலக்கண மரபு, தொடரும் மரபு, மக்கள் பேச்சு மொழி, தொடரும் இலக்கண மரபு

முன்னுரை:

      தமிழ் மொழியின் பேச்சுக்கூறுகள், பழமரபு இலக்கணக் கோட்பாட்டுத் தொடர்ச்சியின் பொதிவாக இருப்பது யாவரும் அறிந்தது. இலக்கியத்தின், பேச்சு வழக்கின் கூறுகளை பொதுமைப்படுத்தி இலக்கணக் கோட்பாடுகளாக முன்னோர்கள் வகுத்துள்ளனர். இலக்கிய வழக்குகள் பேச்சு மொழியில் பின்பற்றப்படுவதும்  பிறகு திரிவதும், கெடுவதும், மறைவதுமாகிய நிலைகளுக்கு உட்படுவது காலப்போக்கில் நடப்பதுண்டு. அவ்வகையில் இலக்கிய வழக்கில் மறைந்து பேச்சு வழக்கு மரபில் தொடர்ந்து வரும் கூறுகளை ஆராய இக்கட்டுரை முனைகிறது.

      பொதுவாக அறிஞர் பெருமக்களிடமும் பேச்சு வழக்கில் பழமைக்கூறுகள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்னும் கருத்து நிலவுகிறது. தமிழ் அறிஞர்கள் பேசும் மொழிநடை பழமரபையொட்டி வந்த வழக்காக இருக்கும். அவர்கள் பயன்படுத்தும் இலக்கிய வழக்கும் பழமையானதாக இருக்கும். அவ்வகையிலான இலக்கிய வழக்கில் இருந்து மறந்து போன சில வழக்குகள் பேச்சு மொழியில் நிரம்பிக்கிடக்கக் காணலாம். இலக்கிய இலக்கண மரபுகள் முற்றிலும் அழிந்துவிடாமல் பேச்சு வழக்கில் தொடர்வது ஒருவகையில் அழியா மொழி மரபுக்கான நிலைப்பாடுகளுள் ஒன்றானதாகக் கருதலாம்.

ஒலிக்கூறுகள்:

      மொழியின் ஒலிக்கூறுகள் பழ மரபையொட்டி பேச்சு வழக்கில் பின் தொடர்வது நடக்கின்றது. ஒலியன்கள் மொழிக்கு அடிப்படையான கூறென்பது திண்ணம். “ஒலியன்கள் மொழியின் சிறப்புடைய மிகச்சிறிய அடிப்படை அலகாகும்”(டாக்டர் சு.சக்திவேல், தமிழ் மொழி வரலாறு, ப.19) ஒலியன் பேச்சு வழக்கில் ஒலிப்பு முறையில் உறழ்ச்சியாகவும் ஒலிக்கும். “ஓரொலியன், ஒரே சூழ்நிலையில் ஒருவரால் அல்லது பலரால் வௌ;வேறு ஒலிப்புகளாக ஒலிப்பது ஒரு வகை ஒலிப்பியல்பு. இத்தகைய  ஓரொலி, ஒரு சூழ்நிலை, ஒலிப்பு வேறுபாட்டிற்கு உறழ்ச்சிஜகுசநந ஏயசயைவழைஸெ என்று பெயர்.”(சி.சுப்பிரமணியன், பேச்சொலியியல், ப.135) அவ்வாறு பிறழ ஒலிக்கும் ஒலிப்பு முறையின் வழி சொற்களின் வடிவம் மறுவிய புதிய உருவம் பெறுவதற்குத் தொடங்கிவிடுகிறது.

      தஞ்சை வட்டாரத்தில் ‘எயிறு’ என்னும் சொல் புழக்கத்தில் உள்ளது. இது பற்களை இறுக்கியிருக்கும் தசைப்பகுதியைக் குறிக்கும். இச்சொல் பழங்கால இலக்கிய வழக்காகக் கொள்ளப்பெற்றுள்ளது. “பாலொடு தேன் கலந் தற்றே பணிமொழி வால்எயிறு ஊறிய நீர்” (குறள்.1121)ஸ இச்சொல் போன்று பஃரு, எஃகு என்னும் சொற்கள் மக்கள் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்பெறுகின்றன. இது ’ஃ’ என்னும் ஒலியன் வடிவின் தற்காலத்திய வடிவம். பஃறுளி என்னும் சொல் ஃ ஒலியனின் பழங்காலச் சான்று. ("பஃறுளி யாற்றுப் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள”சிலம்பு.11:19-20,“எங்கோ வாழிய.... நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே”புறம்:9) ஒலியன் ஃ பழந்தமிழில்  வழக்கில் இருந்திருக்கிறது(ந.அருணபாரதி, பேச்சு மொழியில் பழமைக்கூறுகள், ப.72) என்னும் கூற்றைப் பதிவு செய்கிறார் அறிஞர் ந.அருணபாரதி. எயிறு சொல்லின் ‘யி’ இடத்தில் ‘ஃ’ உள்ளது. அது, எஃறு- எயிறு என்றாகிறது.

      எஃகு தஞ்சை வட்டார பேச்சு மொழியில் எஃகம் என்று பேசப்படுகிறது.

      தஞ்சைக் கிளை மொழியில் ஒலியன் ‘ழ’ அந்த உச்சரிப்பில் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பழைய தஞ்சை(தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டிணம்) மற்றும் தென் தென்னார்க்காடு மாவட்டங்களைத் தவிர ஏனைய இடங்களில் ‘ழ’ வழக்கொழிந்து விட்டது. ‘ழ’ மற்ற ஒலியன்களின் வடிவத்தில் வழங்கப்படுகிறது.

சான்று:

ள - ழ       ,      குளம்பு      -     குழம்பு

ண் -ழ்,      ஆண்மை     -     ஆழ்மை

ய - ழ ,      மயக்கம்      -     மழக்கம்

      ‘பஃது’ என்னும் சொல் எண்ணியற் பெயராக ‘பத்து’ என்று குறிப்பிடப்பெறுகிறது. ‘பஃதென்பதின் (“பஃதென் கிளவி” தொல்.எழுத்து.445) ஃ அம் இருந்த இடத்தில் ‘த்’ என்னும் மெய்யெழுத்து இயங்குகிறது. ‘ழ’ ஒலியன் ‘ள’, ‘ண்’, ‘ய’ ஆகிய ஒலியன்களின் இடத்தில் பயின்று வருகின்றது.  ‘ஃ’ உம் ‘ழ’ உம்,

      1.இரண்டும் மக்களின் பேச்சு வழக்கிலிருந்து மறைந்து     கொண்டிருக்கின்றன.

      2.இரண்டும் மற்ற ஒலியன்களின் இடத்தில் பயின்று       வருகின்றன.

      3.இந்நிலை ஒரே மொழிப்பகுதியில்  காணப்படுகிறது.

எனவே, ‘ழ’ வைப்போன்று  ‘ஃ’  கடைசியாக கீழைப்பகுதியில் புழக்கத்தில் இருந்திருக்கிறது என்பதும் ‘ழ’ வைப்போல மற்ற ஒலியன்களிடத்தில் வழங்கப்படுவது  அப்பகுதி மக்களின் ஒலிப்பு இயல்பின் கடைசி எச்சம் என்பதான நிலையைக் காட்டுகிறது.

2.உருபனியல்  கூறுகள்

      சொற்கள், பல உருபன்கள் கூடி உருவெடுக்கிறது. சொற்களின்  உருவிற்கு உருபன் அடிப்படைக் கூறாக விளங்குகிறது. “ஒரு மொழியில் காணப்படும் பொருளைக் காட்டும் சின்னஞ்சிறு கூறுகளே ‘உருபன்’ எனப்படும்.” என்பர். (டாக்டர் சு.சக்திவேல், தமிழ் மொழி வரலாறு, ப.19) தொல் பழங்கால இலக்கிய இலக்கண மரபுகளில் தொடர்ச்சியாய் இருந்த மூல உருபன் இன்றும் பேச்சு வழக்கில்  மிச்ச சொச்சமாய் இருந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. அவற்றிற்குச் சான்றாக, 

1.ஆறாம் வேற்றுமை உருபு ‘அ’

      ஆறாம் வேற்றுமை உருபு ‘அ’ மூலத்திராவிட மொழிக்கு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வுருபு  மிகவும் அரிதாகவே சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. ஆனால் பிராமிக் கல்வெட்டுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. .(Dr.S.V.Shanmugam, Dravidian Nouns, p.271,385) இதனை தொல்காப்பியர் வேற்றுமை உருபாகக் கொள்ளாமல் சாரியை என்று குறிப்பிடுகிறார். இவ்வுருபு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வழக்கொழிந்து போனதை இது காட்டுகிறது எனக்கொள்ளலாம். இவ்வாறு வழக்கத்தில் இல்லாத இவ்வுருபு தஞ்சை வட்டார பேச்சு மொழியில் வழக்கில் உள்ளது.

சான்று:

1.பந்தையக் கொல்லை

2.சந்தையத்தோப்பு

3.கிடைய மாடு

2.முன்னிலை ஒருமைப்பெயர் ‘நீன்’

      மூலத்திராவிட மொழியின் ‘நீன்’ என்ற முன்னிலை ஒருமை இடப்பெயர் ‘உம்’ என்ற இடைச்சொல்லுடன் கூடி பேச்சு வழக்கில் இடம்பெறுகிறது. இது இலக்கிய வழக்கன்று. இலக்கிய வழக்கில் இல்லாமல் பேச்சு வழக்கில் இன்று மக்களிடம் பேசப்பட்டு வருகிறது.

சான்று:

      நீனும் நானும்

3.முன்னிலைப் பன்மை ‘நீர்’, அதன் முற்று ‘ஈர்’

      பேச்சு வழக்கில் தாய்த்திராவிடத்தின் முன்னிலைப் பன்மை இடப்பெயர் ‘நீர்’ உம் அதன் ஒத்த வினை முற்றான  ‘ஈர்’ உம் பெருவழக்காக உள்ளன. (நன்னூல்.285)

சான்று:

      நீர் என்ன சொல்கிறீர்?

4.முன்னிலைப் பன்மை இடப்பெயர்  ‘நீம்’ அதன் வினை முற்று ‘ஈம்’

       முன்னிலைப் பன்மை இடப்பெயரான ‘நீம்’   அதன் வினை முற்று ‘ஈம்’  உம் தாய்த் திராவிடத்திற்கு ஒப்புருவாக்கம் (சுந-ஊழளெவசரஉவ)  செய்யப்பட்டுள்ளன. ( (ந.அருணபாரதி, பேச்சு மொழியில் பழமைக்கூறுகள், ப.74) இலக்கிய மொழியில் ‘நீம்’ உடன் ‘கள்’ சேர்ந்த நீங்கள் என்ற வடிவம் பயன்படுத்தப்படுகிறது. கன்னியாகுமரி மீனவர் கிளை மொழியில் ’நீமே’ என்று பழைய ‘நீம்’ வழங்கி வருகிறது (முனைவர் எம்.சண்முகம், கன்னியாகுமரி மீனவர்கள் பேச்சுமொழி) அதன் ஒத்த வினை முற்றான ‘ஈம்’ உம் என அடுத்து வரும் மகரத்தால் மாற்றப்பட்டு தஞ்சை வட்டாரத்தில் வழங்கி வருகிறது. முன்னிலைப் பன்மை ‘நீர்’, அதன் முற்று ‘ஈர்’ உம் மாற்றமுற்று வழங்கி வருவதுபோல், ‘நீம்’, ‘ஈம்’ இவ்வாறு உருமாறி பேச்சு வழக்கில் வழங்கப்படுகிறது.

சான்று:

      வாரும், போம்

5.எதிர்மறை இடைநிலை ‘ஆ’

      எதிர்மறைப் பெயரடைகளில் காணப்படும் எதிர்மறை இடைநிலை ‘ஆ’ மூலத்திராவிட மொழியைச் சார்ந்தது. பிற்காலத்தில் இவ் இடைநிலையுடன் ‘த’கர இறந்தகால இடைநிலையும் அதன்மேல் பெயரடை இடைநிலையான ‘அ’ உம் சேர்ந்து (ஆூத்ூஅஸ்ரீ ஆத) ‘ஆத’ என்னும் இடைநிலையாகிவிட்டது. இது தென் திராவிடத்தின் வளர்ச்சி காலத்திலேயே உண்டாகிவிட்டது. இலக்கிய மொழி பின்னர் தோன்றிய தென் திராவிடத்தின் ‘ஆத’ இடைநிலையையே கொண்டுள்ளது. பேச்சு மொழி மிகப்பழமையான தாய்த்திராவிடத்தின் இடைநிலையாகிய ‘ஆ’வையும் புழக்கத்தில் கொண்டுள்ளது.

சான்று:

1.ஆடு தின்னாப் பாளை(மூலிகைப்பெயர்)

2.உழாக் கலப்பை

3.உண்ணா முலை

7.தன்வினை  பிறவினை ‘தின் - தீற்று’

      பல இலக்கிய வழக்குகள் தற்கால பேச்சு வழக்குகளில் தொடர்ந்து வருவது போன்று தன்வினை, பிறவினை உருபின் தொடர்ச்சியும் மக்கள் பேச்சு வழக்கில் தொன்றுதொட்டு வருகிறது. ’தின்’னும் ‘தீற்று’ம் தாய்த்திராவிடத்தின் தன்வினையும் அதற்கிணையான பிறவினையுமாகும். இக்கால இலக்கிய மொழியில் ‘தின்’  மட்டுமே உள்ளது. ‘தீற்று’ இறந்து விட்டது. சங்க இலக்கியத்தில் தீற்று வழக்கில் இருந்திருக்கிறது. ‘தின்னும்’, ‘தீற்றும்’ தஞ்சை இசுலாமியர் கிளைமொழியில் இன்றும் வழங்கி வருகின்றன.

8.பெயரடைகள் ஒருஃஓர்; இருஃஈர்

      பெயரடைகள் இலக்கணக்கூறுகளுள் ஒன்று. “உலக மொழிகள் பலவற்றை ஆராயும் மொழியியல் அறிஞர்கள் பெயரடைகளை (யுனதநஉவiஎந)இலக்கணக் கூறுகளுள் ஒன்றாகக் கூறுவர்”(டாக்டர் ச.அகத்தியலிங்கம், புலமை பல்கலைக் காலாண்டிதழ், ப.1) அடுத்து வரும் சொல்லின் முதல் உயிரான ‘ஓர்’, ‘ஈர்’ உம் மெய்யாயின் ‘ஒரு’, ‘இரு’ உம் வரும் என்பது விதியாகும். சங்க இலக்கியங்களில்  இவ்விதி கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. தற்கால இலக்கிய மொழியில்  இது பெரும்பாலோரால் கையாளப்படுவதில்லை. பேச்சு மொழியில் மிகச் சில சொற்களில் இவ்விதி இருப்பதைக் காணலாம்.

சான்று:

      ஓரிணை மாடு

      ஓரறிவு(க்காரப் பயல்)

      ஈரிணை மாடு

3.சொற்பொருளியல்

      சொற்றொடர், சொற்பொருள் என்னும் கட்டமைப்பியலில் சொற்பொருள் பொருள் சார்ந்து சொல்லை ஆய்ந்துணர்வது. சொற்பொருளியல் என்பது பொருள் (Meaning) பற்றிய ஆய்வாகும். சொற்பொருளியல் பெரும்பாலும் சொற்றொடரியலுக்கு எதிர்மறையானது, ஏனெனில், சொற்பொருளியல் ஏதாவதொன்று என்ன பொருள் குறிக்கின்றது என்பதுடன் சம்பந்தப்பட்டிருக்கும் அதேவேளை சொற்றொடரியல், ஏதாவதொரு கருத்தை வெளிப்படுத்துகின்றதன்  முறையான அமைப்பு அல்லது வடிவம் சம்பந்தப்பட்டது

’உண்’ என்ற சொல்லுக்குத் தாய்த்திராவிடத்தில் நீர் உணவை உண்ணுதல் என்றே பொருள். திட உணவை ‘தின்’ என்ற சொல் குறித்தது. நடுத்திராவிட  மொழிகள் இவ்வேறுபாட்டை இன்னும் காத்து வருகின்றன. ஆனால், கோத்த மொழியைத் தவிர எல்லாத் தென் திராவிட  மொழிகளும் இப்பொருள் வெற்றுமையை  இழந்து விட்டன.(முனைவர் பி.எஸ்.சுப்பிரமணி  யம், திராவிட வினை உருபனியல் ப.80-82)

      சங்க காலத்தில்  இப்பொருள் மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. ‘உண்’ நீர்ப்பொருள்  உண்டலுக்கும் வழங்கி வந்துள்ளது.

சான்று:

      “ஊருணி நீர் நிறைந்தற்றே”(குறள்:)

கன்னட மொழியில் ‘தின்’ என்ற  சொல் சிற்றுண்டியை உண்பதற்காக குறிக்கப்படுகிறது. இக்கால இலக்கியத் தமிழில் ‘உண்ணும்’ ‘தின்னும்’ ஒரே பொருளைக் குறிக்கின்றன. பேச்சுத் தமிழிலும் இதுதான் நிலை என்றாலும் ஓரிரு சொற்களில் ‘குடி’ என்ற பொருள் இருத்தலைக் காணலாம்.

சான்று:

      உண்ணா முலை

      உண்ணி

4.சொற்கோவை:

      சொற்கோவை என்பதற்குப் பொதுவாக "குறித்த ஒரு நபருக்குத் தெரிந்தனவும், பயன்படுத்தப்படுவனவுமான எல்லாச் சொற்களினதும் தொகுதி" என வரைவிலக்கணம் கூறப்படுகிறது. சொல்லொன்றை அறிந்துகொள்வது என்பது வெறுமனே அதை அடையாளம் காண்பதும் பயன்படுத்துவதும் மட்டுமல்ல. சொல்லறிவை அளப்பதற்குச் சொல்லறிவின் பல்வேறு அறிநிலைகளைக் காட்டி நிற்பது எனவும் சொல்லலாம். தாய்த் திராவிடத்தையோ பழந்தமிழையோ சார்ந்த பல சொற்கள் இலக்கிய மொழியில் மறைந்து விட்ட போதிலும் அவை இன்றும் பேச்சு மொழியில் நின்று நிலவுகின்றன. அத்தகைய சொற்களின் சிலவற்றை கீழ்க்காணலாம்.

1.ஈற்று

      ஈனு என்ற சொல்லின் பெயர் வடிவம் ஈற்று. இது சங்க காலத் தமிழில் காணப்படுகிறது.

சான்று:

      ”ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் “ (குறள்.)

      தற்காலத்தில் ‘ஈனு’, ‘ஈற்று’ இரண்டு சொற்களும் மறைந்து விட்டன.  ஈடாகப் ‘பிற’, ‘பிறப்பு’ என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. பேச்சு மொழியில் ‘ஈற்று’ என்ற சொல் வழங்குதலைக் காணலாம்.

சான்று:

      1.முதல் ஈற்று

      2.நான்காம் ஈற்று

2.அகம்-புறம்

      சங்க காலத்தில் அகம் புறம் என்னும் சொற்கள் பொருள் வாழ்க்கைப்  பொருளமைவில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இச்சொற்கள் இலக்கிய வழக்காக மட்டும் அல்லாமல் பேச்சு வழக்கிலும் பயின்று வந்துள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது.  பேச்சு வழக்கில் இன்றும் பாயின் உட்புறத்தை ‘அகம்பாய்’ என்றும் வெளிப்புறத்தை ‘புறம்பாய்’ என்றும் அழைக்கும் வழக்குள்ளது.  இவ்விரண்டு சொற்களையும் சேர்த்து மக்கள் பயன்படுத்தும்பொழுது ‘அகம்’ என்ற சொல் ‘புறம்’ என்ற சொல்லால் ஒப்பாக்கம் செய்யப்பட்டு ‘அறம்’ என்று வழங்கி வருகின்றது.

சான்று: அறம்பாய்(பாயின் உட்புறம்)

            புறம்பாய்(பாயின் வெளிப்புறம்)

3.அற்றை

      அற்றை சொல் ‘அன்று’ என்பதன் பெயரடை.()(அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்-புறம்.) இலக்கிய வழக்கில் இருப்பது மட்டுமன்று(வழக்காறன்று), பேச்சு வழக்கில் அன்றே அவித்து காய வைத்து  இடித்த புழுங்கள் அரிசியை ‘அற்றைப் புழுங்கல்’ என்று அழைக்கின்றனர்.

4.அங்காடி

      இச்சொல் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. ‘நாளங்காடி’, ‘அல்லங்காடி’ ()ஸ தஞ்சை வட்டாரத்தில் அங்காடி என்னும் சொல் வழக்கில் உள்ளது.

சான்று: அங்காடிக்கடை(பொருள் விற்கும் கடை)

            அங்காடிக்காரி(திண்பண்டம் விற்பவள்)

            அமுதம் அங்காடி(அரசு குடிமைப்பொருள் வழங்ககம்)

முடிவுரை:

      சங்கத்தமிழ் காலம்  முதற்கொண்டும் அதற்கு முந்தைய தமிழின் மூல வடிவத்தின்கண் நின்றும் வழங்கிய பல்வேறு இலக்கிய, இலக்கண மரபுகள் பேச்சு வழக்கில் இன்றும் வழங்கி வருகின்றன. வேற்று மொழிச்சொற்கள் பல இரண்டறக் கலந்து விட்டப்பிறகும் ஊர் பகுதிகளில் இன்றும் அதன் மரபு தொடர்கின்றது. ஒலியியன், உருபன் கூறுகள் பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டப்பின்னும் பேச்சு வழக்கில் தொடர்ந்து வருவது தமிழின் நிலைத்த தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று கூறுவது பொருந்தும். தமிழ் காலத்திற்கு ஏற்றாற்போன்று வடிவத்தில் மாற்றிக்கொள்வதன் வழியாக வாழும் மொழியாக தன்னை  வடிவமைத்துக் கொள்கிறது. பல்வேறு மொழிச்சொற்கள், பண்பாட்டுப் படையெடுப்புகள் நிகழ்ந்தும் தன்னுடைய பழங்கூறுகளை அது விட்டுக்கொடுக்கவில்லை.

சுருக்கக்குறியீட்டு விளக்கம்:

1.     உ.ஆ.-உரை ஆசிரியர்

2.     க.ஆ.-கட்டுரை ஆசிரியர்

3.     குறள்.-திருக்குறள்

4.     சிலம்பு-சிலப்பதிகாரம்

5.     ப.ஆ.-பதிப்பு ஆசிரியர்

6.     புறம்-புறநானூறு

துணை நூல்கள்:

1.     சுப்பிரமணியன்,சி.

      பேச்சொலியியல்,

      நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்,

      பாளையங்கோட்டை,1998

2.     டாக்டர் சக்திவேல்,சு.

      தமிழ்மொழி வரலாறு,

      மணிவாசகர் பதிப்பகம்,

      சென்னை,1984

3.     அருணபாரதி,ந.(க.ஆ.)

      புலமை(பல்கலைக் காலாண்டிதழ்)

      சென்னை,1975

4.     திருக்குறள்,

      ப.திருமுருகன்(உ.ஆ.)

      நியூ செஞ்சூரி புக் ஹவுஸ்,

      சென்னை,1993(மு.ப.)

5.     தொல்காப்பியம்(எழுத்து),

      சேனாவரையம்,

      கோ.இளவழகன்(ப.ஆ.),

      தமிழ்மண் பதிப்பகம்,

      சென்னை,2003

6.     நன்னூல்(விருத்தியுரை),

      (ச.தண்டபாணி தேசிகர் விளக்கக்குறிப்புடன்)

      பாரி நிலையம்,

      சென்னை,2003(நா.ப.)

7.     Dr. S. V. Shanmugam,

Dravidian nouns,

Annamalai University, 1971.

8.     Dr.K.Agasthiyalingam,

Dravidian Lingustic,

Annamalainagar,

Annamalai University, 1972
 

9.     Va.Suba.Manikkam,

Tamil verbs.

University of Madras, 1948.

10.    P. S. Subrahmanyam,

Dravidian verb morphology: a comparative study,

Annamalai University, 1971

11.    Thomas Burrow

Dravidian Linguistics

Annamalai University, 1968