ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கம்பனின் இறைமனிதன்

முனைவர் ல.குமாரி கிருஷ்ணவேணி, உதவிப் பேராசிரியை , ஐயப்பா மகளிர் கல்லூரி, சுங்கான்கடை 31 Oct 2019 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

            காத்தல் கடவுளாகிய திருமாலின் அவதாரம் இராமன் எனக் கம்பர் குறிப்பிடுகிறார்.  கம்பராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்களும் இறைவன் என்றே இராமனை வாழ்த்துகின்றன.  ஆனால் இராமன் வாயிலிருந்தோ, செவியிலிருந்தோ தான் இறைவன் என்பதை வெளிப்படுத்தவில்லை.  இராமனுடைய சொல்லும், செயலும் ஒரு மனிதனின் தன்மையையே வெளிப்படுத்துகிறது.  மன்னன் கடவுளாகக் கருதப்படுகிறான்.  இராமன் மனிதனாகப் பிறந்த காரணத்தால் மனித உணர்வுகளைப் பூரணமாக அனுபவித்தார்.  பதினான்கு ஆண்டுகள் இல்வாழ்க்கையை இழக்க வேண்டிய விதி இராமனுக்கு.  மரவுரி தாங்கிக் கானகம் வந்தபோதும் மனைவியை இழக்க வேண்டியதாகிவிடுகிறது.  தாய், தந்தை, அரசு மற்றும் சுற்றம், உற்றார், உறவினர் இவர்களையெல்லாம் இழந்து கானகம் வரும் இராமன் தன் மனைவி சீதையை இழந்தவுடன் சாதாரண ஒரு மனிதனுக்கு நேரும் துன்பமாகிய தன் நிலையை இழக்கிறார்.  அதனால் தான் செய்யும் செயல்கள் சரியா?  தவறா?  என்ற சிந்தனை இல்லாமல் தவறான காரியங்கள் செய்ய நேர்கிறது.  இவற்றையெல்லாம் மனிதமாகப் பிறந்து, மனிதனாக வாழ்ந்து, மனிதனாக வெளிப்பட்டு, மனித முன்மாதிரியாக இருக்க முயற்சி செய்த மனிதன் என்பது புரிகிறது.           

திறவுச் சொல் : திருமால், கம்பர், இராமன், இறை மனிதன், மனித உணர்வு.

            இன்றைய உலகில் ஆய்வானது இயந்திர வேகத்தில் வளர்ந்து வருகிறது.  இதில் தமிழாய்வும் சிறப்பான இடத்தை வகிக்கின்றது.  தமிழில் காலத்தைக் கடந்து வாழும் தகுதி பெற்ற இலக்கியங்கள் ஏராளம்.  அதில் இராமாயணமும் ஒன்று.  இராமாயணம் வாழ்க்கை அனுபவத்தைச் சொல்லும் உலகம் அறிந்த கதை.  இந்தக் கதையை முதன்முதலில் உலகுக்குத் தெரிவித்தவர் வால்மீகியே.  வால்மீகி இல்லற வாழ்க்கையில் அழுந்திய ஞானியாவார். அதனால் அவரது காப்பியத்திலும் வாழ்வோடு இயைந்த தன்மை காணலாம்.  வால்மீகி இராமாயணத்தை மூலமாகக் கொண்டு கம்பர் தமிழில் இராமாயணம் யாத்தார்.  இராமன் கடவுள் அவதாரம் என நாம் கருதினாலும் காப்பியத்தின் பல்வேறு இடங்களில் ஒரு தாயின் வயிற்றுக் கருவறையில் தோன்றிய சாதாரண மனிதனாகவே நடந்து கொள்கிறார்.  தான் பிறந்த குலம் அரசகுலமாகையால் சீரும் சிறப்புமாக வளர்ந்தார்.  கல்வி, கேள்விகளில் வல்லவனானார்.  விசுமாமித்திரனின் வேள்விக்குக் காவல் காத்து உண்ணாமலும், உறங்காமலும் இருப்பதற்கான மந்திரத்தைக் கற்றுக் கொள்கிறார்.  தெய்வத்தன்மை கனிந்திருந்தாலும் மானிட குணாம்சங்கள் நிறைந்தவனாகவே இராமன் காணப்பட்டார்.  இராமனின் அத்தகைய நிலைகளை இக்கட்டுரையில் காண்போம்.

பிறர் ஆலோசனை கேட்கும் நிலை

            பின்னே நிகழப்போகும் பேராபத்தை முன்னே அறியும் வாய்ப்பு சாதாரண மனிதகுணம் படைத்தவனுக்குக் கண்டறிய முடியாது.  ஆரண்ய காண்டத்தைப் பார்க்கும் போது இதே நிலைதான் இராமனுக்கு. தன் முன்னே துள்ளித்திரிந்த மான் பொன்மான் இல்லை; பொய்மான் என்பதை உணர்ந்து கொள்ள இராமனால் இயலவில்லை.  சீதை கேட்ட மானை கொண்டு வராமல், கொன்று விட்டு வருகிறார் இராமன்.  தன் குடிலில் வந்த பார்க்கும் போது சீதையைக் காணவில்லை என்பதோடு அவள் சென்ற இடமோ! யார் கடத்திச் சென்றார்கள்? என்பதோ அறியமுடியாத நிலையில் மூன்றாவது ஒரு நபர் (சடாயு) சொல்லத் தான் தெரியவருகிறது.  சடாயு வழி சீதையின் நிலைமையை அறிந்து கொண்ட இராமன் அவளை மீட்க வேண்டிய வழி தெரியாமல் தவிக்கிறார்.  அங்கேயும் மற்றொரு நபரின் (சபரி) ஆலோசனை தேவைப்படுகிறது.  இவ்விதம் பிறரின் ஆலோசனை பெற்று வழிதேடிக் கொள்வது சரியான மானிடத்தின் அடையாளம் ஆகும்.

தந்தைக்கு நல்ல மகன்

            கைகேகியின் மீது கொண்டுள்ள காதலால் அவளின் நிர்பந்தத்திற்கு இணங்கி பரதன் நாடாள வேண்டும்; இராமன் பதினான்கு வருடம் கானகம் வாழ வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பிக்கிறார் தசரதன். இதை தன் மகன் இராமனிடம் கூற வெட்கப்பட்டு மனவேதனைப்பட்டு கூனிக் குறுகி நிற்கிறார் தசரத மன்னன்.  அப்போது கைகேயி இராமனைப் பார்த்ததும் எங்கே மன்னன் மாறிவிடுவாரோ எனப் பயந்து மன்னன் அழைப்பதாகக் கூறி இராமனை அழைத்து வரும் வழியிலேயே அவனை (இராமன்) தடுத்து நிறுத்தி மன்னனது ஆணையாகச் செய்தியைக் கூறுகிறாள்.  அதனைக் கேட்ட இராமன் “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” எனச் சிற்றன்னையிடம் மன்னன் (தசரதன்) சொன்னதாக மட்டுமன்று என் சிற்றன்னையாகிய நீவிர் சொன்னாலும் நான் இதை நிறைவேற்றுவேன் எனக் கூறி இப்போதே நாடு நீங்கி கானகம் புறப்படுகிறேன் எனத் தன் கடமையை நிறைவேற்றுகிறார்.  தந்தையின் வார்த்தையை நிறைவேற்றுவதே நல்லமகன் கடமை. இதை,

            “மன்னவன் பனியென்றாகின் நும்பனிமறுப்பனோ

            என்னிதின் உறுதி அப்பால் இப்பணி தலைமேற்கொண்டேன்

            மின்னொளிர் கானம் என்றே போகின்றேன் விடையும் கொண்டேன்”

எனக் கைகேயி சூழ்வினைப் படலம் பாடல்வழி அறியலாம்.

சகோதர பாச உணர்வு நிலை

            சிற்றன்னையின் சூழ்ச்சியால் தன்கு உரிமையுடைய அரச பதவி தம்பி பரதனுக்குப் போய் விடுகிறது.  இந்தச் செய்தி சிற்றன்னை கைகேயி வாயிலாக இராமன் அறிகிறார்.  உடனே சிறிதும் தயங்காதவனாய், “பின்னவன் பெற்ற செல்வம் அடியேன் பெற்றதன்றோ?” எனக் கூறுகிறார். இராமன் காட்டிற்குச் சென்று விட்ட பிற்பாடு பரதனும் இராமனைத் தேடி கானகம் ஏகுகின்றான்.  பரதன் இராமனை அயோத்தி வருமாறு அழைக்க, அண்ணலும் பரதனிடம்  நீ ஆட்சிப் பொறுப்பிலும் நான் கானகத்திலும் பதினான்கு ஆண்டுகள் வாழவேண்டுமென்பது நமது தந்தையின் ஆணை.  அதை நாம் மீறக் கூடாது,  அயோத்தியை நான் ஆட்சி செய்வதும் நீ ஆட்சி செய்வதும் ஒன்றே எனக் கூறி அனுப்புகிறார்.

            தனக்கு கிடைக்க வேண்டிய பதவி, புகழ், பெருமை எல்லாவற்றையும் அடுத்தவருக்கு விட்டுக் கொடுக்காத சமூகத்தில் இப்படி ஓர் உடன்பிறப்பு.  தன்னுடைய பதவிக்குப் பங்கம் வருகிறது எனத் தெரிந்ததும் அதற்குக் காரணமானவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அழித்துவிடும் உலகத்தில் தன் ஆட்சியைத் தம்பிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு மரவுரி தாங்கி கானகம் செல்கிறார் இராமன். இச்செய்தியைக் கேட்டுக் கொதித்தெழும் இலக்குவனையும் சமாதானப்படுத்துகிறார் இராமன்.   சகோதர பாசத்திற்கு இதைவிட வேறு ஒன்று தேவையா? இலையெல்லாம் சாதாரண மனிதர்களிடையே உள்ள உறவு நிலையாகும்.

ஆராயும் திறன் இழத்தல்

            தன்னைப் போல பாதிக்கப்பட்ட சுக்ரீவன் நிலையைக் கேட்டவுடன் எந்த விதமான அறிவு ஆராய்ச்சியும் செய்யாமல் “உனது பகைவனைக் கொன்று உன் மனைவியை மீட்டுத் தருவேன்” என உறுதியளிக்கிறார் இராமன்.  இங்கே “ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு” என்ற விதியைக் காணலாம்.

            இராமனின் நிலைமையைக் கண்ட சுக்கிரீவன் அனுமன் மூலம் இராமனின் முழு வரலாற்றையும் அறிந்த பின்னர் தன்னைப் போலவே பாதிப்படைந்திருக்கும் இவன் (இராமன்) வலிமையான வாலியைக் கொல்லமுடியுமா? எனச் சந்தேகம் எழ அதை அனுமனிடமே கேட்கவும் செய்கிறான்.  இங்கே ஒரு குரங்கினம் ஆராய்ந்து பார்க்கிறது. ஒரு நாட்டின் இளவரசனோ ஆராயாமல் முடிவெடுக்கிறார்.  இதுவும் மனித பண்பின் இயல்பே.

பழிக்கு அஞ்சுதல்

            சுக்கிரீவன் ஓர் அணிகலன் மூட்டையை இராமனிடம் காண்பிக்க, அதைக் கண்ட இராமன் மூர்ச்சையுறுகிறார்.  நிலைமை தெளிந்தெழுந்த இராமன் சுக்ரீவனிடம் தந்தையின் சத்தியத்தை மீறினால் வழியுண்டாகுமே என நினைந்து முடிசூட்டிக் கொள்ளாமல் வனம் வந்தேன்.  இங்கு மனைவி சீதையே இழந்த பழிக்கு ஆளாகி விட்டேன் எனப் புலம்புகிறார்.  இங்கே தான் கானகம் வந்தது தன் மனம் விரும்பியன்று; தந்தைக்காக ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.

            “விரும்புயெழில் எந்தையார் மெய்ம்மை வீயுமேல்

            வரும்பழியென்று யான் மகுடஞ் சூடலேன்”

எனும் கலன்காண் படலப் பாடல் வழி அறியலாம். இதுபோல் சுக்ரீவனுக்கு முடிசூட்டு விழா நடத்த பிற்றை, இராமனைக் கிட்கிந்தை அரண்மனையில் தங்குமாறு சுக்ரீவன் கேட்க மறுத்து விடுகிறார் இராமன்.  சீதை இல்லாமல் அரண்மனையில் சந்தோஷமாக இருப்பது எப்படி?  அது தனக்குப்பெரிய பழியைத் தருமென அஞ்சுகிறார்.  இதை,

            “யாழிசை மொழியோடு அன்றி, யான் உறும் இன்பம் என்னோ?”

            “. . . . . . . அரிய இன்பம்

            மேவிளான் இராமன் என்றால் ஐய இவ்வெய்யமாற்றம்

            மூவிகை உலகம் முற்றும் காலத்தும், முற்றவற்றோ?”

என அரசியற் படலத்தின் வழி அறியலாம்.  உலகமே அழிந்தாலும் தனக்கு நேரும் பழி அழியாது எனப் பழிக்கு அஞ்சும் நிலையை இராமனிடம் காணலாம்.   இந்த மனித நினைப்பு இராமனையும் விட்டு வைக்கவில்லை.

மாறுபட்ட கருத்து கொள்ளல்

            சுக்கிரீவன் அழைக்கப் போருக்கு வருகிறான் வாலி.  வாலியை மறைந்திருந்து கண்ட இராம இலக்குவர் வியப்படைகின்றனர்.  அவ்வேளை இராமனிடம் இலக்குவன் அண்ணனை அழிப்பதற்குக் கூற்றுவனைத் தேடிய இவனுக்கு (சுக்ரீவன்) யோசிக்காமல் உதவத் துணிந்தோம்.  தன் அண்ணனையே கொல்ல நினைப்பவன் அயலாருக்குத் துணையாய் இருப்பான் என்று எப்படித் துணிவது?  எனக் கேட்கிறான்.  அதற்கு இராமன் விலங்கின் ஒழுக்கத்தினைக் குறித்துப் பேசுவது சரியன்று.  எல்லாச் சகோதரர்களும் நம் பரதன் மாதிரி சிறந்தவர்கள் ஆகிவிட முடியுமா?  எனப் பதிலளிக்கிறான்.  மாறாக இராமனின் அம்பினால் அடிபட்டுக் கிடக்கும் வாலி இராமனைப் பார்த்துக் குரங்கினத்திற்கு ஒழுக்கக் குறைபாட்டைக் குற்றம் சாட்ட வேண்டாம் எனக் கூற அதற்கு இராமன் நீங்கள் குரங்கின தருமத்திற்கு உட்பட்டவர்கள் இல்லை.  மனித தருமத்திற்கு உட்பட்டவர்கள் எனப் பதிலளிக்கிறார்.  இவ்விதம் இலக்குவனுக்கு ஒரு வித பதிலையும், வாலிக்கு ஒரு வித பதிலையும் முன்னுக்குப் பின் முரணாகக் கூறுகிறார் இராமன்.  இது மனிதனின் சுயநலப் பண்புகளில் ஒன்று.

பெண்ணிற்கு அநீதி இழைத்தல்

            இராமன் ஒரு சராசரி மனிதர்களின் கோபதாபங்களோடு பின்னிப் பிணைந்தவரே.  மனித தருமங்களும், அதருமத்தை தருமத்தின் பெயரால் நிகழ்த்தியுள்ளார்.  அரக்கர் செய்யும் நாசவேலைக்குத் தீர்வு காண அவர்களை வதம் செய்வது தான் அறநெறி என்று அரக்கர், அரக்கியர்களை வதம் செய்கிறார்.  ஆனால் சூர்பனைக்கு நிகழ்ந்தது மட்டும் அறத்திற்கு மாறுபட்டது.  தருமத்திற்கு மாறுபட்டு நடந்த சூர்பனகையை ஏனையோர்களை வதம் செய்தது போல் செய்திருக்கலாம்.  அதை விட்டு விட்டு அவளை அங்ககீனப்படுத்தியது எந்தத் தருமத்திற்கும் உட்பட்டதல்ல. அடிப்படையில் இது ஒரு பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அவமரியாதைச் செயலாகும்.  அறத்தின் நாயகன் அல்லவா இராமன்.  ஒரு பெண் அவமரியாதைச் செய்யப்படுவதற்கு எவ்விதம் காரணமானான்?  மேலும் இராமன் வாலியைக் கொன்று விட இறுதிக் கடனும் முடிந்து மாலைப் பொழுது வந்து விட்டது.  கிட்கிந்தையே ஒரு சோகநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.  ஒரு மாவீரனைக் கொன்று அவன் மனைவியை விதவையாக்கிய பின் வரும் இரவு.  அந்த இரவில் தன் மனைவி சீதை தன்னுடன் இல்லையே என்று இராமன் ஏங்குகிறானே அல்லாமல், தன்னால் ஒரு பெண் இன்று விதவையாகி விட்டாளே என்ற எண்ணம் துளிகூட இல்லை.  இது தான் மனித மன முரண்பாடுகள்.

நம்பகமற்ற நிலை

            அரச போகம் கிடைத்தச் சுக்கிரீவன் கள் மயக்கத்தாலும், கன்னியர் களிப்பாலும் இராமனுக்குக் கொடுத்த வாக்கை மறந்து சீதையைத் தேடும் பணியில் காலம் தாழ்த்துகிறான்.  பொறுமையிழந்த இராமன் அரசாட்சியும் மனைவியும் கிடைத்து விட்டதனால் ஒருவேளை சுக்கிரீவன் மாறியிருக்கலாம் எனக் கருதி இலக்குவனைக் கிட்கிந்தை அனுப்பி காலதாமதத்திற்கான காரணம் அறிந்து வா என்றும், அவன் வாக்கு மாறியிருந்தால் இந்த உலகம் மூன்றிலும் உன்னை (இலக்குவன்) வெல்ல யாருமில்லை என்பதையும் உணர்த்தி வா என்று அனுப்பி வைக்கிறார்.  வாலி வதைப் படலத்தில் இதே சுக்கிரீவனை “நம்பலாமா” என இலக்குவன் கேட்க, அன்று சுக்கிரீவனை நம்பிய இராமன் இன்று சந்தேகிக்கிறான்.  இதுவும் மனிதனின் இயல்பான குணங்களில் ஒன்றே.

சமூகத்தை அறிந்திராத நிலை

            மறைந்திருந்து இராமனால் எய்யப்பட்ட அம்பு வாலியின் மார்பைத் துளைக்கிறது.  அந்த அம்பு இராமனுக்குச் சொந்தமானது என்பதை உணர்ந்து கொள்கிறான் வாலி.  இப்போது வாலி முன் எதிர்ப்பட்ட இராமனை நோக்கி இருவருக்கிடையே போர் நடக்கும் போது எக்காரணமுமின்றி ஒருவர் பக்கம் சாதகமாக நிற்பது உனக்குச் சரியா?  நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்.  இப்படிப்பட்ட உனககு இராவணனிடம் கோபம் கொள்ள என்ன தகுதி உள்ளது?  உன் மனைவியை ஒருவன் கவர்ந்தான் என்பதற்காகப் பிறிதொருவனை மறைந்திருந்து கொல்வது தருமமா? எனக் கேட்கிறான் வாலி.  இதிலிருந்து வாலி ஏற்கனவே இராமனை நன்றாக அறிந்து வைத்திருக்கிறான் என்பதும்.  ஆனால் வாலியைப் பற்றிய எந்த விபரமும் இராமனுக்கு முன்னமே தெரியவில்லை என்பதும் தெரிய வருகிறது. வாலியின் வலிமையும், பண்பும் சாதாரணமானவையல்ல இருந்தும் வாலியைப் பற்றிய விபரம் சுக்கிரீவன் மூலமே இராமன் தெரிந்து கொள்கிறார்.

            இரு அரசர்கள் போர் புரியும் போது தோற்ற அரசன் உடமை அனைத்தும் வென்ற அரசனுக்குச் சொந்தம்.  இது மரபு.  இதைத் தான் வாலியும் செய்தான்.  சுக்ரீவன் மனைவியிடம் வாலி தவறாக நடந்து கொண்டதாகக் கம்பராமாயணத்தில் எந்த ஓர் இடத்திலும் கட்டப்படவில்லை.  அபகரித்தான் (கவருதல்) என்று தான் கூறப்பட்டுள்ளது.  கம்பர் வாலியை அழைத்த அடைமொழியே “சிறியன சிந்தியாதான்” உருமையிடம் தகாத உறவை வாலி கொண்டிருந்தால் வாலியை அவ்வாறு அழைப்பதில் பொருளேயில்லை.  இதை வாலிவதைப் படலத்தில்,

            “நாயென நின்ற எம்பால் நவையற உணரலாமே?

            தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான்”

எனக் கூறுவதன் மூலம் அறியலாம்.  இத்தன்மையான வாலியை இராமன் அறியவில்லை என்பது இறைப்பண்பா?  மனிதப்பண்பா?.

நிறைவுரை

            மன்னன் கடவுளாகக் கருதப்படுகிறார்.  கம்பர் தாம் வணங்கும் கடவுளாகத் திருமாலைப் பெற்றிருந்தார்.  எனவே அரச இராமனைத் திருமாலாகக் கம்பர் கருதியிருக்கக் கூடும்.  இராமன் மனிதனாகப் பிறந்த காரணத்தால் மனித உணர்வுகளைப் பூரணமாக அனுபவித்தார்.  இன்னரால் இன்னின்ன காரியங்கள் நடக்க வேண்டும் என்பது விதி.  மனிதன் என்பவன் தன்னுடைய குணாதிசயத்தால் வாழ வேண்டிய முறைப்படி வாழ்ந்தால் தெய்வமாக ஆக்கப்படுகிறார்.  இராமன் மொத்த முழு தெய்வமன்று பிரச்சனைகளால் பின்னப் பெற்று அவற்றிலிருந்து தரும நியதிப்படி விடுபட்டு வெல்லக்கூடிய மானுட சக்தி.  மேலும் இராமன் கடவுளல்லன் என்றும் மனிதனாக வாழ்ந்து மனிதனாக வெளிப்பட்டு மனித முன் மாதிரியாக இருக்க முயற்சி செய்த மனிதன் என்பது புரிகிறது.  இராமன் தன்னலமில்லா கர்ம வீரன் செருக்கும் மிடுக்கும் இல்லாதவன்.  மூத்தோர் சொல் மீளாதவன் பிறப்பால் கருணை உள்ளம் கொண்டவன் என்றெல்லாம் வாழ்ந்து காட்டிய இராமன் தன் நடத்தையால் உலகத்தையே நல்வழிப்படுத்த எண்ணினான்.  வாழ்க்கையின் உயர்ந்த பண்புகளை ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு பாத்திரமாக அவனே வாழ்ந்து காட்டி அவையெல்லாம் மனித வாழ்க்கையில் உள்ளவர்களுக்கும் பொருந்தும் என நிறுவியர் கம்பர். 

பார்வை நூல்கள்

1.   கம்பராமாயணம்          -     வை.மு. கோபாலகிருஷ்மாச்சிரியர்

2.   கம்பன் கண்ட இராமன் -  மு.மு. இஸ்மாயில்

3.     அத்யாத்ம இராமாணம்     -     ஹரிணி