ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஐவர் அம்மானையில் சமுதாயம்

முனைவர் ம. ஷீலா ஸ்ரீநிவாசன்,                               உதவிப் பேராசிரியர்,                               தமிழ்த்துறை,  இராசேசுவரி வேதாசலம் அரசுகலைக்கல்லூரி,  செங்கல்பட்டு - 603 101. 31 Oct 2019 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்:
    உயிர்கள் இன்புடைய வாழ்வையே விரும்புகின்றனர். இவ்வின்பமும் என்றும் நிலைத்திருக்க வேண்டுமெனவும் எதிர்பார்க்கின்றனர். அந்த சூழல், உணர்வு உயிர்களின் வாழ்வில் இல்லாததால் ஒரே உண்ர்வு திகட்டும் என்பதெல்லாம் நினைப்பதில்லை. சில நேரங்களில் சோர்வடைந்தாலும், தன் எண்ணம் செயல்களைத் தொடர்ந்து கொண்டே உள்ளதால், இவ்வுடல் பற்றும் மாறாதவனாய் (வாழ, இன்பங்களைத் துய்க்க உடலும் தேவையன்றோ? ) இவ்வுலகவாழ்வும் தான் நினைப்பது போலில்லாமல் இன்பும் துன்பும் தொடர்ந்து வருவதால் இவ்வுலகிற்குப் பின்னாவது நிலையான, நிம்மதியான, இன்பமான வாழ்க்கை வாழ விரும்பி என்ன செய்யலாம் என யோசிக்கலானான். மெய்ஞ்ஞான உலகில் ஆழ்ந்தகன்று செல்லும் புராண இதிகாசங்கள் இதற்கு வழிகாட்டுகின்றன. உடலுடன் சொர்க்கம் விரும்பிய திரிசங்கு முறையற்ற வழியில் முயல, பாண்டவர்களோ அவர்கள் கால அவதார நாயகனாம் கண்ணனின் வைகுந்தம் செல்வாராய் சென்றனர். அவர்கள் முயற்சியின் வெற்றி, தோல்வி பற்றி வியாசபாரதம் விரிவாய் கூற, நாட்டுப்புற மரபில் ‘ஐவர் அம்மானையும்’ பேசுகின்றது. இவ்வம்மானை கூறும் நிலையான இன்பத்திற்கான வழிகள், செயல்பாடுகள் பற்றி அறிவது பயனுடையதாதலின், இவ்வாய்வு இங்கு செய்யப்படுகின்றது.

திறவுசொற்கள்:
    அம்மானை, தான்தோன்றி, வினைப்பயன், அறவழி, அறவாழ்வு

முன்னுரை :

    மனிதன் தன் நிலையிலிருந்து மேம்பட்டு விளங்க வேண்டும்; சிறந்த நிலையை அடைய வேண்டும் என்றே எண்ணுகிறான். தான் என்றும் மகிழ்வாய் யாவும் பெற்று பூரணமாக விளங்க வேண்டும் என்பதே அவன் ஆசை விருப்பம். அதை நோக்கியே அவன் எண்ணம், சொல், செயல்கள், வாழ்க்கையென யாவும் செல்கின்றன. ஆயின் நடைமுறை வாழ்வின் இயற்கையோ வேறு; துன்பங்கள் நிறைந்ததே வாழ்வு; இன்பம் ஆங்காங்கே தான் கண் சிமிட்டுகின்றது என்பதை உணரும் அவன் இவ்வுலக வாழ்க்கைக்குப் பின்னாவது நிலையான இன்பத்தைப் பெற விழைந்து அதற்கான வழிமுறைகளை நாடுகின்றான். அவ்வகையில் நம் இதிகாச கதைகள் ‘இவ்வாறு நடந்தது” என்று மொழிந்து செல்வதால் அவை அவன் நம்பிக்கைக்குப், பிடிப்புக்குரியதாய் விளங்குகின்றன. ‘மகாபாரதம்” மொழியும் “பாண்டவர் சொர்க்கம் சென்ற கதை” அவன் இகபர வாழ்விற்கு ஒளியூட்டும், வழிகாட்டும் நிலையினதாய் உள்ளதாம். இதனைக் கதைப்பாடலாய் மொழிவதே “ஐவர் அம்மானை!” இக்கதைப் பாடல் வழி உணரலாகும் சமுதாயச் செய்திகளைக் காண்போம்.


1. ஐவர் அம்மானை என்னும் கதைப்பாடல் :

    அம்மானை என்பது பெண்கள் இருவர் மூவராய் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. இதுவெறும் விளையாட்டாக உடலுக்கு உற்சாகம் தருவதாய் மட்டும் அமையாமல், அறிவுக்கு வலுவூட்டுவதாய் வாழ்க்கையின் வினாக்களுக்கு விடையளிப்பது போல் வினாவும் விடையுமாய் அமையும் விளையாட்டாகும். இந்த எளிமை அறிவூட்டல், வாழ்வியலை விளக்கும்; பாங்கு என வளர்ந்து மக்களின் சமுதாயத்தின் வாழ்வியலை உணர்த்தும் இலக்கியமாய் வளர வழி வகுத்தது எனலாம். காப்பியங்கள் தோன்றுவதற்குக் கதைப்பாடல்களே மூல காரணமெனில் மிகையாகாது1 ஆங்கிலத்தில் பாலட் என்று சொல்லும் கருத்தே தமிழில் அம்மானையாம்.2

    கதையை இசையுடன் கேட்கும் பழக்கமே கதைப்பாடலுக்கு வழி வகுத்ததாம். இவ்விசைப்பாடல் மரபு வாழ்க்கையில் தனித்தாக்கத்தை ஏற்படுத்த திருவிழாக்களில் பாடப்பட்டன. அவ்வகையில் மக்களின் வாழ்வோடு கலந்த இதிகாசமாம் (பங்காளிச் சண்டைகள், விளைவுகள்) மகாபாரத்தில் பேசப்படும் இறுதிக்கூறே 'பாண்டவர் சொர்க்கம் சென்ற கதையாம்". நாற்பொருள் பேசல் இலக்கியமரபாயினும் பெரும்பாலும் 'கண்டவர் விண்டதில்லை: விண்டவர் கண்டதில்லை" என 'வீடு பற்றிய சொல், முறை, சோதனைகள், வழிகள் போல்வனவற்றோடு நிற்றலே வழக்கம். ஆயின் ஆதிகாலத்தே. பூமி தவிர்ந்த பிறவுலகுமுண்டு: மனிதன் மரணத்திற்குப் பின் செல் உலகுகளும்; உண்டெனக் கூறியவர்கள் நல்வழியில், நற்சிந்தனை¸ செயல்களுடன் எந்நிலையிலும் மாறாதிருப்பின் இவ்வுடலுடன் கூட சொர்க்கம் செல்லலாமென கூறியுள்ளனர். அதற்கான சான்றாக விளங்குவதே மகாபாரதத்தின் ‘சொர்க்காவரணபர்வமாம்.” இராமாயணமோ மாறுபட்டுத் திரிசங்கு தந்திரமாய் உடலோடு சொர்க்கம் செல்ல முயன்றதைக் கூற மகாபாரத்தைப் பின்பற்றி ‘ஐவர் அம்மானையும்” நம் நற்சிந்தனை¸ செயல்கள் என மலையெனத் துளங்காது அறநெறியின் வழி செல்லும் வாழ்க்கையே அதனை சாத்தியப்படுத்தும் என்று விளக்குகின்றது. மக்களுக்கு அறவாழ்வில் நாட்டமுடன் சற்றும் கலங்காது வாழ்வின் போக்கில் எவ்வளவு சிக்கல்கள், அவமானங்கள்வரினும் அறநெறியிலேயே செல்வதுடன், மீண்டும் அதனையே உறுதியாகக் கொண்டு, வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் கடந்தால் உடலுடன் சொர்க்கம் செல்லல் இயல்பே என உறுதிபட மொழிவதாகவும் உள்ளது.

    உலக வாழ்வில் வாழும் மனிதன் ஒவ்வொருவனுக்கும் ஒரு சூழலில் 'மரணம்" பற்றிய சிந்தனை பயம் வரல் இயல்பே. அதைத் தடுப்பதுபோல் அதிலிருந்து மீளலாம்: இங்கு போல் உடலுடன் இதைவிட சிறந்த வாழ்க்கை அங்கு வாழலாம்: மகிழ்வுடன் இருக்கலாம்" என்பதை அறிவுறுத்தல் போல் மக்கட்கு தன்னம்பிக்கை ஊட்டுவது போல் 'இவ்ஐவர் அம்மானை வருகின்றது.

    பாண்டவ அர்ச்சுன அபிமன்யு-சுந்தரியின் மகன் பரீட்சித்து: பாண்டவ வாரிசு பரீட்சித்துவின் விளையாட்டான செயலால் அவனுக்குப் பாம்பால் மரணமென சாபம் ஏற்படுகின்றது. பரீட்சித்துவின் மகன் தன் தந்தையின் இறப்புக்கு பழிவாங்கவென யாகம் செய்து பாம்புகளை அழிக்க முயல்கி;றான். ஆயின் இந்திரனோ 'செத்தார் பிழைக்கமாட்டார்: கோபமதை விட்டு தந்தைக்காக வேண்டியன செய்யென" ஓலையனுப்ப சமாதானமாகின்றான். பின்னாளில் தன்னைக் காணவந்த வியாசரிடம் 'நீர் அருகிருந்து அறிவுரை கூறியிருந்தால் போரும் வந்திருக்காது யாரும் மாண்டிருக்கார். என பழியிட்டு வாதாட, கூறியும் கேளாமையில் 'நீர் செய்யநினைந்த யாகமும் பலியாது: பிரமையும் உண்டாம்" என சாபமிட்டு செல்ல அதன்படியே நடந்தது (1835-1840). பாண்டவர் சொர்க்கம் சென்ற கதையைக் கேட்பின் சித்த பிரமை விலகுமென வியாசர் கூற கேட்க ஆரம்பிக்கின்றான். கலியுக தோற்றம், கிருஷ்ண பலராம மறைவு, பீமார்ச்சுனர்களின் வலி குன்றல் என நிகழ்வுகள் தொடர, கிருஷ்ணரைப் பிரிந்திரோமென தருமருடன் பாண்டவர், திரௌபதியென யாவரும் வனம் புகுந்து வைகுந்தம் செல்லவென செல்கின்றனர். வழக்கமாக வனம் சென்று தவம் செய்து  உடல் நீத்து மேனிலையடைவர் இவர்களோ மன ஒருமையுடன் கிருஷ்ணரை மனதில் நினைத்து செல்கின்றனர். வழியில் திரௌபதி, சகாதேவன், நகுலன், அர்சுனன், வீமன் என ஒவ்வொருவருவராக மறைகின்றனர். ஒவ்வொருவர் மறைவுக்கும் தருமர் கூறும் காரணங்கள் (2373-2385: 289-2903: 2971-2976, 3073-3079) கேட்கும் நம்மை யோசிக்க வைக்கின்றது. இறுதியில் புழு நெளியும் நாய் ஒன்று தருமரைச் சரணடைகின்றது.  அது ஆற்றைக் கடக்க உதவுகின்றார். படிப்படியாகத் தண்ணீர் உயர தலைமீது தூக்கிவைத்தவாறு ஆற்றைக் கடக்கின்றார். எச்சூழலிலும் தருமநெறி தவறாது செயல்பட்டமையின் சொர்க்கம் வரை உடலுடன் செல்கின்றார். 'சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்றார் போல்,  நரகத்துயரில் தவிக்கும் துரியோதனையும் கைத்தூக்கி காக்கின்றார்  'நற்கருமம் செய்தார் நல்ல தவம் பெறுவார், அற்கரும வினை செய்தார் அவதிமிகப் படுவார் (3340-3341); இவ்வுலகில் துயருனினும் நல்வழி வாழ்வார்; என்றும் இன்பே பெறுவார் என்றார் போல் வைகுந்தமும் அடைகின்றார். 

    இவ்வம்மானை பாடியவர்,  ‘தென் வீரையம்பதியார்; புகழேந்திப் புலவர் கவிமரபினர்; சிவபக்தருமாவார்.

2. ஐவர் அம்மானையும் சமுதாயமும் :

    பசு (உயிர்கள்) தனித்து நிற்கும் ஆற்றல் இல்லாதவை என்று ஆன்மீகம் கூறுவது போல் மனிதன் தனித்து வாழ அறியாதவனே. ஏனெனில் அவனொரு ‘தான்தோன்றி” (சுயம்பு) அல்லவேஇ பலருடனும் பழகிப், பலரது உழைப்பிலும் வாழும் இயல்புடையவன் மனிதன் ஆகையால் கூட்டுறவாய சமுதாய வாழ்வே அவனுக்குரியதும் சிறப்பு தருவதுமாய வாழ்வாம். இது அவனின் பண்பை, இணைந்து வாழும் பக்குவத்தை மேம்படுத்தி பண்பட்ட நற்சமுதாயம் உருவாக வழிவகுக்குகின்றதாம். ‘ஐவர் அம்மானையில்” வரும் சமுதாய கூறுகளை மக்கள் வாழ்வியல் சடங்குகள் நற்சமுதாய உருவாக்கு காரணிகள் பரவாழ்விற்கான இகவாழ்வின் முறைகள் என்னும் நிலைகளில் காணலாம்.

2.1. மக்கள் வாழ்வியல் சடங்குகள் :

    மனிதன் சமுதாயமாய் வாழத் தொடங்கியதால் அதனை வரன்முறைப்படுத்த, மகிழ்வுடன் தன் உணர்வுகளை வெளிப்படுத்த சடங்குகள் - நிகழ்வுகள் உருவாக்கப்பட்டன. இவை அவர்கள் நல்லது நன்மையென உணர்ந்த தன் விளைவாய நிலைகளேயெனலாம். “சடங்கென்பது நிர்ணயிக்கப்பட்ட விரிவான நடத்தைகளின் வடிவமாகும்" என ரூபத் பெனிடிக்கும் 'புனிதப் பொருட்களின் முன்னால் மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமெனக் கூறும் ஒழுக்க விதிகளே சடங்குகள்” என டூர்தைமும் கூறுவது இங்கு நினையத்தக்கதாம்.3 

    பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகளை இதிலடக்கலாம். கதைப் பாடலாய ஐவர் அம்மானை காவிய மாந்தர்களின் மூன்று தலைமுறைகள் பற்றிய வரலாற்றைக் கூறுவதால் பிறப்பு முதலாய கூறுகள் இயல்பாக வருகின்றன. குழந்தைக்குப் (பரீட்சித்) பெயரிடல் (117); வளர்நிலைகள் (118 - 136); அரசகலைகள் குருகுல கல்வி கற்றல் (137 - 161); வேட்டையாடல் (161 - 170); மண நிகழ்வுகள் (187 - 348); கர்ப்பம் பிள்ளைப் பேற்றுக்காய் முதுகில் நீர்விடல் (353 - 360); சாதகம் பார்த்தல் (365 - 375; 1479 - 1525); முடிசூடல் (பரீட்சித்து 1131 - 1154; 1171 - 1183) வாழ்ந்தனுபவித்ததன் பின் வனம்புகல் (கண்ணன் பா13; பாண்டவர் முதலியோர்1121 -1123); மறைவு (கண்ணன் 18.10.145; திரௌபதி 2315 - 2318; சகதேவன் 2855 - 2867; நகுலன் 2947 - 2959; அர்ச்சுனன் 3042 - 3047; வீமன் 3096 - 3105). இவ்வாறு மக்கள் வாழ்வியலோடு பிணைந்த சடங்குகளை நாம் காண்கின்றோம். மன்னர் வாழ்வின் நிகழ்வுகளாய் இச்சடங்குகள் இயலினும் மக்கள் நம்பிக்கை செயல்கள் ஆங்காங்கு ஊடாடக் காண்கின்றோம். 

2.1.2. நற்சமுதாய உருவாக்கு காரணிகள் :

    சமுதாயம் என்பது ஒரு கூட்டமைப்பே. ஓர் அமைப்பு சிறப்புற நடக்க ஒழுங்கும் கட்டுப்பாடும் அவசியத் தேவையாம். நல்வினை நல்மொழிகள் நற்செயல்களே ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். “விதையொன்று போட சுரையொன்று முளையாதன்றோ? “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்னும் பரந்தரவுணர்வும் அரவணைத்துச் செல்லும் பாங்கும் “தீதும் நன்றும் பிறர்தரவாரா” என்னும் உணர்வுமே’ பண்பட்ட நல்ல சமுதாயத்தை உருவாக்கும் நிலைகளாகும்.4

    2.1.2.1. அறவுணர்வு செயல்பட்டுடன் மனிதர் திகழ வேண்டும். தருமர் முதலாய பாண்டவர்கள் சான்றாம்.

    2.1.2.2. ‘டில்லிக்கு ராசாவானாலும் பாட்டிக்குப் பேரனே’ என்றாற்போல் வாழ்க்கையில் எவ்வளவு தான் உயர்ந்தாலும் பெற்றோர் மற்றும் பெரியோர்களை மதித்தல் வேண்டும். பரீட்சித்து மணவிழாவில் தருமர் குந்தியையும் (272 - 277),  குந்தி காந்தாரியையும் (278 - 286) திருமணத்தை முன்னின்று நடத்த அழைத்தல்; உறவுகளை மதித்தல் ஏற்றல், பொறுத்தல் அன்புடன் அரவணைக்கும் பாங்காம். மாறாகப் பெரியாரை பிழைத்தல் துன்ப துயராம். பரீட்சித்து (173 - 187) ஜனமேஜயன் (1835 - 1840) பெற்ற சாபங்களே பெரியாரைப் போற்றலே நற்சமுதாய இயல்பென்று உணர்த்தக் காணலாம்.

    2.1.2.3. தான் வந்த வழியை தன் அடிப்படையைத் தனக்கு உதவியாய் இருந்தவர்களை என்றும் மறவாது அன்புடன் மரியாதையுடன் செயல்பட வேண்டும் என்பதற்கு கண்ணன்பால் பாண்டவர்கள் கொண்ட உணர்வு நிலை சான்றாம். கண்ணன் அந்திம நிலையில் பீமார்ச்சுனர்களை மட்டும் அழைத்துவரக்கூற தருமரும் ‘....சோதனைகாண் தம்பியரே எப்படியோ சித்தம் எம் பெருமாள் தன்னினைவு அப்படியே அல்லது அன்று முதலின்றளவும் சொற்படியே நாமும் தொண்டு பண்ணியேதிரிவோம் (721 - 727) என்று ஏற்கிறார்.

    2.1.2.4. குடும்பமே சமுதாய வாழ்விற்கு அடிப்படையென்றாற்போல் சகோதரவுணர்வில் பாண்டவர்கள் முன்னிற்கின்றனர். கண்ணன் வீமார்ச்சுனர்களை மட்டும் வரக் கட்டளையிட அவர்களோ அண்ணனிடம் அனுமதி பெற்றே செல்கின்றனர். வாழ்நாள் முழுமையும் தமக்குத்துயர் செய்த துரியோதனன் முதலாயோர் நரகில் 

        'பொல்லாத நூற்றுவரைப் புழுக்க ளிரித்துடம்பை
        இல்லாத கொட்டாலை யிருசெவிகள் மூக்கதிலும்
        ஊடுருவி யேதுளைத்து உலவித் திரிவதுவும்
        வாடுமுடல் கிடந்து மயங்கித் தவிப்பதும்" (3312 - 3315)

    துன்புறுவதைக் காணும் தருமர் யாவும் மறந்து, தம் புண்ணியத்தில் பாதி தந்து மீட்க காண்கிறோம். (3328 - 3333).

    2.1.2.5. உறவுகள் நம் பேச்சைக் கேட்பார்; தட்டார் என கண்மூடித்தனமாய் இராமல் அவர்களிடம் ஒவ்வொரு சூழலிலும் கருத்துவினவி நடத்தல் நற்சமுதாய வழியாம். இதை கண்ணன் தருமரிடம் (வனம் புகல்) பரக்கக் காண்கின்றோம்.

    2.1.2.6. அன்பு புரிதல் இணைவு இருப்பினும் தகுந்த இடைவெளியுடன் பழகலே ஆரோக்கிய உறவிற்கு அடிப்படையாம். மற்றவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் விருப்பிற்கேற்ப செயல்பட இடைவெளி தரல் நல்லுறவுக்கு சான்றாகும். “அகலாது அணுகாது தீக்காய்வார்போல்” (திருக்குறள் : 691) என்னும் வள்ளுவர் வாக்கு இங்கு நினையத்தக்கது. கண்ணனைக் காணத் துவாரகை செல்கையில் தனித்தனி தேர்களில் குறிப்பிட்ட இடைவெளியில் அருகருகே தம்பியர் வரல் சான்றாம். 

    'நாற்றிசையும் தம்பியர்கள் நால்வருமே நன்றாக
    ஏறியதேர் மீதில் இருபுறம் சூழ்ந்துவர (392-393)
    தருமர் செல்லக் காணலாம்.

    2.1.2.7. சிக்கல்கள் எவ்வளவு பெரிதாயினும் தீர்வென ஒன்று இருந்து தான் ஆக வேண்டும். நாம் அதை உணரவில்லை; நமக்கது தெரியவில்லை என்று வேண்டுமானால் கூறலாம். இதனைப் பரீட்சித்துக்குச் சாபமளித்த முனி பின்னாளில் 

        மெய்யோ வென்சாபம் வினையாய் முடிந்ததுவோ
        அய்யோ அரசழிக்க ஆமோ புவிமீதில்
        நம்மா லரசனுக்கு நாசம் வந்த தாகையினால்
        சும்மா விடலாமோ தோஷம் நமக்கு வரும்"  (1693 - 1696)    

    என மன்னனைக் காக்க மந்திரமுடன் வர கார்க்கோடகனும் நாகமணியை முனிக்களித்துத் திருப்பியனுப்புகின்ற நிகழ்வு சான்றாம் (1675 - 1727).

    2.1.8 நற்செயலோ, தீச்செயலோ அதற்குரிய பலனை அளித்தே தீரும். வைகுந்தம் செலவிரும்பிசென்ற திரௌபதி முதலியோர் காட்டிலேயே உயிர் விட்டதற்காய காரணங்களாய்த் தருமர் கூறுவதன்வழி இதனை உணரலாம் (2377 - 2386: 2887 - 2893: 2974 - 2974: 3075 - 3077): பாரதப்போர் முடிக்கவென வந்தவள் பாஞ்சாலி வந்த வேலை முடிவுற்றதும் பாவச் சரீரமதைப் பார்மீதி லேகிடத்தி சென்றாள் (2384): சாத்திரம் மொழிந்தது என பாரதப் போருக்குக் களப்பலியாய் அரவானை அடையாளம் காட்டியதால் 'பழிதொடரு மென்று பார்மீதி லேகிடத்தி" (2892) சகதேவன் சென்று விட்டான்; கல்வி தனக்கு மட்டும் வளம் சேர்ப்பதன்று: அதனைப் பிறருக்குக் கற்பித்து அதனை வளரச் செய்தல் வேண்டும். அங்ஙனமன்றித் தான் கற்ற வித்தையை யாருக்கும் கற்பியாது விட்டமையான். 'அவ்வுலகில் நகுலன் அறிந்தவித்தை கூறாமல் (2975) கானில் மறைந்தான்; விசயனோ பரம் பொருளைத் தோரோட்டியாக்கியதால் வனத்தில் மறைந்தான் (3075 - 3077) என காரணங்கள் மொழியக் காணலாம்.  பிறர் ஒருவருக்காவது தான் கற்ற வித்தையைக் கற்பியாதவர் பிரம்மராட்சதராவார் என விக்கிரமாதித்தன் கதை கூறுவதும் நினையத்தக்கது. 

    2.1.2.9. நம் வினையின் பயன்களை மாற்றவியலாது. பதவி செல்வம் குடிபிறப்பு தெய்வவுறவுகள் உட்பட யாவும் துணை வராது என்பது வில்லாதி வீரன் அர்ச்சுனன் கண்ணன் பேரன் பரீட்சித்து சாபம் (182 -189); கண்ணன் மக்கள் யாதவர் பெற்ற சாபங்கள்  (536 - 545) அதன் பலனை அவர்க்களித்தமையால் உணரலாம்.

    2.1.2.10. தீராவினைகட்குப் பழங்கதை கேட்டலைப் பயனாகக் கூறல். இது தற்கால சூழலில் கேலியாய்த் தோன்றினும் நினையத்தக்கதாம். மனச்சுமை குறைத்தல் தாங்க¸ கடக்க வலிமை தரல் நன்னம்பிக்கை ஊட்டல் என உளவியல் பாங்கிலாய வழியெனக் கொள்ளலாம். ஜனமேயஜயனின் சித்தபிரமை நீங்கு வழியாகப் பாண்டவர் வைகுந்தம் சென்ற கதையைக் கேட்க வியாசர் கூறல் (1928 - 1957) - ‘பாரும்புதுமையிது பலிக்கும் சலிப்பறவே’ (1942).

    2.1.2.11. நிலையாமையே நிலையான ஒன்று. சமுதாயம் இதை முழுமையாக உணரின் நற்சிந்தனைகள் நற்செயல்கள் என அறவழியிலேயே செல்லும். எனவே இதனை ஆங்காங்கு பரவலாக மொழியக் காணலாம். ‘பொய் வாழ்வை மெய்யென நினைத்தீர் செல்வம் நாடு நகர் உறவுகள்இ படைகள் பொருளுடையனவோ எனும் வினாக்களும் (936 - 946) அவை மேகநிழல் போன்றதே எனும் உவமைகளும்; “இறப்பது மெய்யாகும் இருப்பது பொய்யாகும்” (1319) என்னும் சொற்களும் இதனையே உணர்த்துகின்றன.

    2.1.2.12. இறையாயினும் மண்ணுலகில் பிறப்பென (அவதாரம்) எடுத்தால் மறைவைத் தடுக்க இயலாது. கண்ணன் பலராமன் நிலைகள் இதை உணர்த்தும்.

    உலகியல் நிலையாமையும் தன் செயல்களே தன் வாழ்க்கை நிகழ்வுகளுக்குக் காரணம்: அறமே உய்தி எனும் உணர்வுகளுமே நற்சமுதாயத்தை உருவாக்குவனவாம்.

2.1.3. பரவாழ்விற்காய இக வாழ்வியல் முறைகள்:

    பூவுலகில் மகிழ்வுடன் வாழும் மனிதன் இவ்வுலகின் இயற்கையை - ‘இது நிலையில்லாதது; பிறப்பாயின் இறப்பென ஒன்று உண்டு என்பதை உணர்ந்த பின் தன் இன்பம் என்றும் நிலையாய் இருத்தல் வேண்டுமென அதற்கான முயல்வுகளில் ஈடுபட ஆரம்பிக்கின்றான். இறையே உயிர்கள் தன்னைப் போல் என்றும் அன்புடன் நிறைவுடன் இருந்தலையடைய விரும்பியே உலகை பிறவிகளைப் படைத்ததாகக் கூறினும் நோக்கம் மட்டுமன்று தேர்ந்து செல்ல வேண்டிய வழியும் நல்லதாக இருக்க வேண்டுமென்றோ? பொருள் ஆதிக்கவுணர்வு பேராசை போல்வ அவனை மந்திர மாயங்கள்¸ காயகல்பங்கள்  மருந்துகள் என தேடச் செய்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் விட எளியவழி அறவழியில் கொள்ளும் நம்பிக்கையும் செயல்பாடுகளுமே என்பதே ஐவர் அம்மானை உணர்த்தும் இக பர வாழ்விற்கான நல்வழியாம்; முறையாம். “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்இ கேடும் நினைக்கப்படும்” என வள்ளுவர் கூறினாலும்5 அறம் ஆடையென அமையாது உணர்வாய் வாழ்வாய்க் கலந்தாலே நல் வாழ்க்கையாம் என்பதே தருமர் வாழ்வியல் உணர்த்துகின்றதாம்.


    மகனாய், சகோதரனாய், கணவனாய், மன்னனாய் மட்டுமன்றித் தனிமனிதன் என வாழ்வின்  ஒவ்வொரு நிலைகளிலும் அறத்தைக் கடைப்பிடித்தவர் தருமர்.

        2.1.3.1. வைகுந்தம் நோக்கிச் செல்வழியில் தன்னுடன் வந்த திரௌபதி தம்பியர் என ஒவ்வொருவராய் வீழ்ந்த போதும்இ தன்னைச் சரணடைந்த புழு நெளியும் நாயையும் தருமர் ஏற்றார். வழியில் ஆறுவர தன்னை அக்கரையில் விட்டுவிடக் கூறிய நாயினை அருவருப்பின்றி கைகளால் எடுத்தவர் தண்ணீர் ஏற ஏற புயத்தில் சிரசில் என சுமக்க முகமெல்லாம் புழு வழிய, சுணங்கனும் (நாய்) சும்மாஇராது தான் செய்த பாவங்களை அடுக்குகின்றது. 'பசுவைக்கொன்று உண்டேன். மறையோர் விரதம் அழித்தேன். மங்கையரை கற்பழித்தேன்: தந்தை, தாய், தமயன், மாமன் என் மூத்த சகோதரர் போன்றவர்களை எனக்குப் பணிவிடை செய்யவைத்தேன். பொய்வழக்கிட்டேன்: பாவங்கள் பல செய்தேன் என்று கூறியதுடன் 'புண்ணியவான் மேனியெல்லாம் புழு சொரிய வுன்றலைமேல், வைத்துச் சுமக்க வழிந்தொழுக வேசலமும், சற்றுமனங் கோணாமல் தான் சுமந்து போனதினால், உமக்குச் சுகிர்தமுண்டு ஒப்புடனே சொர்க்கமுண்டு எமக்கு நரகமுண்டு (3230 - 3234) 

    ஆற்றைக் கடக்கையில் நாயும் விடாது தன் பாவங்களின் பயனே இது என அடுக்குவதுடன், தனக்கு நரகே கிட்டும் எனவே ஆற்றில்விட்டுச் செல்ல கூறியும் அன்புடன் கரையில் இறக்கியவர், உடம்பின் வெப்பத்தால் உனக்குத் துன்பேதும் ஏற்பட்டதோ என அன்பில் தலைநிற்கின்றார். (3180 - 3246).

    2.1.3.2. சொர்க்க வரவேற்பில் சொர்க்கம் கண்டவர் அவர்கள் செய்த நற்செயல்கள் வினவல்வழி கடைபிடிக்கத்தக்கன மொழிவது போல் (3274 - 3292); ‘பாழ்நரகின் இயல்பை காட்சியைக் கண்டவர் அங்குள்ள துயர் கொடுமை காண்பதுடன் அவர்கள் செய்த தீவினை மொழிநிலையாய் கேட்பார்க்குப் பயவுணர்வுடன் அறவழியில் செல்வதற்காய அவசியத்தை உணர்த்துவதாகவும் உள்ளதாம் (3295 - 3305;  3312 - 3315).

    2.1.3.3. அறவாழ்வென்பது நன்மையோடு இயைந்த செயல்களுடனாய வாழ்வு மட்டுமன்று; பிறர் தமக்கு செய்த அழி செயல்களையும் பொறுத்து அவர்க்கு நலம் செய்தலேயாம். ஏழாம் நரகில் துரியன் முதலியோர் துன்புற பாண்டவர்க்குத் தான் செய்த கொடுமைகளை நினைவூட்டி வருந்த தருமரோ ‘இன்னா செய்தாருக்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு’6 என்னும் வள்ளுவர் வாக்கிற்கேற்ப பேரன்பின் தலைநிற்பாராய் அவன் கதிபெற தன் புண்ணியத்தில் பாதியைத் தருகின்றார். (3328 - 3339).

    2.1.3.4. நன்மை செய்தால் நன்மையடைவார்; அல்லன செய்தால் இறுதியில் துயரே அடைவார் என்பதற்குத் துரியன் நரகில் துயருரலும் நலம்செய் தருமர் ‘ராஜரிஷி’ யென கொண்டாடப்படலும் சான்றாம் (3340 - 3348);  மூலமும் (வியாசபாரதம்) இதனையே மொழியும். 'தன்னுடைய புகழ் தேஜஸ் மற்றும் நன்னடத்தை என்னும் செல்வத்தால் மூவுலகங்களையும் மூடித்தன் பௌதீக சரீரத்தால் சொர்க்கலோகத்திற்கு வந்த சௌபாக்கியம், பாண்டு நந்தனாகிய யுதிஷ்டிரரைத் தவிர வேறு எந்த மன்னனுக்கும் கிடைக்கவில்லை. அவ்வாறு நாங்கள் ஒருபோதும் கண்டதும் இல்லை" என்னும் நாரதர் கூற்றாலும் உணரலாம்.7 

    2.1.3.2.5. அவரவர் வினைப்பயன் அவரவர் வாழ்வை தீர்மானிக்கின்றது. ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’ என்பது பட்டினத்தார் வார்த்தை; கடை வழிக்கு மட்டுல்ல, வினைப்பயனுக்கும் இதுபொருந்தும் (காண்க : 2.1.2.8). திரௌபதி முதல் வீமன் வரை உடலுடன் வைகுந்தம் செல்ல முயன்றும் வழியிலேயே உடல் அழிய, தருமர் கூறும் காரணங்களும் இதனையே உணர்த்துகின்றதாம்.

3. ஐவர் அம்மானையில் சமுதாயம் :

    கண் கூடாகக் காணும் மண்ணுலகில் மட்டுமல்ல இவ்வுடம்பினின்று உயிர் சென்ற பிறகும் நல்லவண்ணமே வாழ மனிதன் விரும்புகின்றான். நாம் வாழ்வது கரும பூமியாதலின் செயல்களே நம் இகபர வாழ்வைத் தீர்மானிக்கின்றன. இதை உணர்ந்து வாழ்வாங்கு வாழும் வழிகளைச் செயல்படுத்த வேண்டும் என்பதே ‘ஐவர் அம்மானை’ காட்டும் சமுதாயமாகும். நமக்கு நடக்கும் நிகழ்வுகள் நமக்கு நன்மையே தரவேண்டும் என்னும் உணர்வுகளின் வெளிப்பாடுகளே சடங்குகள்; அறவுணர்வு செயல்பாட்டினராய் விளங்க வேண்டும்; பெரியோரை மதித்தல் வேண்டும்; அவர்க்குத் துயர்செய்தல் பழியைத் துன்பையே தரும்; உயிர்களிடையே ஆரோக்கியமான அன்பில் பிணைந்த இடைவெளி அவசியம். பிரச்சனையென்றால் தீர்வும் உண்டு; தீர்க்க முடியா சூழலில் ஏற்றல் உணர்வு பெற வேண்டும்; பழம் புண்ணிய கதை கேட்பதும்; நலம் செய்யும். வினைப் பயன்களை மாற்ற வியலாது. நிலையாமையே உண்மை. இறையாயினும் மண்ணில் பிறந்தால் மறைவும் உண்டாம். அறவாழ்வென்பது உயிருள்ளவரை கடைபிடிக்க வேண்டிய ஒரு தொடர் பழக்கமாம். தீச்செயல்கள் தீமையை தரும்; திருத்தின் விடிவு உண்டாம். நற்செயல்கள் நலம்தரும் அதுவே இகபர நல்வாழ்வின் துணையாம். 

முடிவுரை :

    இன்ப வாழ்வு வாழ விரும்பும் உயிர்கள் அற வாழ்வினை கைக்கொள்ள வேண்டும்; என்றும் மாறாத உறுதி செயல்பாட்டுடன் செயல்படின் இகபர இன்ப வாழ்வமையும். இடையில் ஏற்படும் நிகழ்வுகளைச் சோதனைகளாகக் கருதித் தடுமாறாது நம் உறுதியை சோதிக்கும் நிலைகளே எனவுணர்ந்து செயல்படின் பரம் மட்டுமல்ல இகமும் சிறப்பாய் அமையும்; நற்சமுதாயமும் மலரும் என்பதே ‘ஐவர் அம்மானை’ காட்டும் சமுதாயமாம்.

துணை நின்ற நூல்கள் :

    1. சு. சக்திவேல் நாட்டுப்புறவியல் ஆய்வு ப.81.
    2. சு. சக்திவேல் மேற்படி ப.83.
    3. சு. சக்திவேல் மேற்படி ப.190.
    4. கணியன் பூங்குன்றனா; புறநானூறு 192
    5. திருவள்ளுவர் திருக்குறள் 169
    6. திருவள்ளுவர் மேற்படி 987
    7. நந்தலாலா (தொ.ஆ.) ஸ்ரீ மகாபாரதம்10 பக்.8080 - 8081