ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அற நூல்களின் தோற்றப் பின்னணி    

முனைவர்.மா.லெமூரியா முதுநிலை முனைவர் பட்ட ஆய்வாளர் சைவ சித்தாந்தட் துறை சென்னைப் பல்கலைக் கழகம் சேப்பாக்கம் சென்னை    நெறியாளர்  முனைவர்.எஸ்.சரவணன் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்  சைவ சித்தாந்தட் துறை சென்னைப் பல்கலைக் கழகம் சேப்பாக்கம் சென்னை 31 Oct 2019 Read Full PDF

                                                                                                  
ஆய்வுச் சுருக்கம்
மொழி, மக்களின்  வாழ்க்கையிலிருந்து தோன்றுவது. மொழியின் வழி எழுதப்படும் இலக்கியங்கள், அவை எழுதப்படும் காலத்தைச் சார்ந்த மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கின்றன எனலாம். இவ்வாறு தமிழின் தொன்மை இலக்கியமாகக் கூறப்படும் அல்லது கருதப்படும் இலக்கியமான சங்க இலக்கியம் அக்காலத் தமிழ் மக்களின் வாழ்வியலை நமக்குக் காட்டுகின்றன.
சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் தமிழரின் காதல் வாழ்வையும் போரின் பெருமிதத்தையும் விவரித்துக் காட்டுகின்றன. இவற்றை அகம், புறம் என்று வகைப்படுத்தியுள்ளனர் அறிஞர் பெருமக்கள்.
    சங்க காலத்தில் மன்னர்களுக்கிடையே அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. சங்க கால இறுதியில் அரசுகள் வலிமை பெற்று வணிக வர்க்கம் முதன்மை பெற்றது. இக்கால கட்டத்திலேயே அற நூல்கள் பெருமளவில் எழுந்தன.
    சங்க இலக்கியத்தைத் தொடர்ந்து தோன்றிய இலக்கியங்களை சங்க மருவிய கால இலக்கியங்கள் என்றும் கூறப்படுகினறன. இச்சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பெரும்பாலும் நீதிபோதனைகளைக் கூறி அறத்தை வலியுறுத்துவனவாக அமைந்துள்ளன. எனவே, சங்கம் மருவிய காலத்தை அற நூல்கள் எழுந்த காலம் என்றும் கூறலாம். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலத்தில் தமிழ் சமூகத்தில் அற நூல்கள் முதன்மை பெற்றதன் காரணங்கள் எவை என ஆராய்வதும் அற நூல்கள் எழுந்ததன் சமூகத் தேவையை ஆய்வதுமாக இவ்ஆய்வு அமைகின்றது.

திறவுச் சொற்கள்
    அறக் கருத்துக்கள், வணிக வர்க்கம், வைதீக சமயம், அவைதீக சமயம், அற நூல்கள், வேட்டைச் சமூகம், முடியாட்சி, ஊழ், அரசுரிமை, முதன்மை, பொருளாதாரம், சமயம், சமணம், பௌத்தம், பண்பாடு, ஒழுக்கம்

முன்னுரை
    தமிழின் தொன்மை அல்லது முதன்மை இலக்கியம் என்று கூறப்படும் இலக்கியங்களான சங்க இலக்கியங்களிலேயே அறக்கருத்துக்கள் பரவலாகப் புலவர்களால் பாடப்பட்டுள்ளன. எனினும் சங்கம் மருவிய காலத்திலேயே அறகருத்துக்கள் நூல்களாக மிகுதியாக எழுந்துள்ளன. சங்கம் மருவிய காலத்தில்  தோன்றிய இலக்கியங்கள் பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வற நூல்கள் பதிணெட்டில் 11 நூல்கள் அற நூல்கள் ஆகும். கீழ் கணக்கு நூல்களுக்குப் பின்னர் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பிய நூல்களிலும் அறக்கருத்துக்கள் காணப்படுகின்றன. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலத்தில் அற நூல்கள் தோன்றியதன் பின்னணி குறித்து இக்கட்டுரை அறிய முற்படுகிறது.

குல மரபுகள் அழிந்து அரசு தோன்றுதல்
சங்க இலக்கியங்கள் தொன்மைத் தமிழகத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறியும் அறிய சான்றுகளாகத் திகழ்கின்றன. சங்க இலக்கியங்கள் என்று கூறப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் காட்டும் தமிழ்ச் சமூக வாழ்க்கையானது நீண்ட காலத்தை உள்ளடக்கியது ஆகும். இந்த நீண்ட காலமானது வேட்டைச் சமூக மரபிலிருந்து மூவேந்தரின் முடியாட்சிமுறை நிலைகொண்டது வரையிலான பல்வேறு படிநிலைகளைக் கொண்டதாக உள்ளது.
சிறுசிறு குலங்களாகவும் குடிகளாகவும் நூற்றுக்கணக்கான வேட்டையாடும் குழுக்களாக வாழ்ந்து வந்த தமிழ்ச் சமூகம், தங்களுக்கிடையே இடைவிடாத போரில் ஈடுபட்டிருந்தன. இவ்வாறு போரில் ஈடுபட்ட சிறு குலங்கள் படிப்படியாக மாற்றமடைந்து அரசுகளாகப் பரிணமித்தன. பண்டைய வேட்டைச் சமூகத்தில் இருந்து மூவேந்தரின் முடியாட்சி நிலைகொண்ட காலம் வரை உள்ள காலப்பகுதியின் தன்மையை, 
ஷஷசிறு சிறு குலங்களாகவும், குடிகளாகவும், குலங்களின் இணைப்புளாகவும் சிதறிக்கிடந்த தமிழகத்து மக்கள் ஓயாத போரில் ஈடுபட்டிருந்தனர். ஓயாத போர், படையெடுப்பு, ஊழ், அழிவு, அரசுரிமைச் சண்டை ஆகியவற்றின் அடிப்படையிலே சங்ககாலத் தமிழகத்திலே மெல்ல மெல்ல அரசுகள் தோன்றின...... புராதன வாழ்க்கையிலே முதலிற் தோன்றிய குலங்கள், அவற்றின் விரிவாக அமைந்த குடிகள், அத்தகைய குடிகள் சில சேர்ந்த இணைப்புக்  குலங்கள் ஆகியன முட்டி மோதிப் பொருதிய நிலையிலே, அளவு மாறுபாடு குணமாறுபாடாக உருமாறியதே  சங்ககால அரசியல் நிறுவனமாகும். அந்த உருமாற்றம் மகத்தான மாற்றமாகும். ஆனால் தவிர்க்கமுடியாத அந்த மாற்றம் துன்பத்தின் மத்தியிலேயே நடந்தேற வேண்டியிருந்தது||1
என்று சுருக்கமாக உரைக்கின்றார் கைலாசபதி அவர்கள்.
இவ்வாறு குலமரபுகள் அழிந்து முடியுடை வேந்தர்கள் அரசாட்சிக்கு மாறிய காலத்தின் பல்வேறு தோற்றங்கள் சங்க இலக்கியமான புறநானூற்றில் பெருமளவில் காணப்படுகின்றன.

வணிக வர்க்கத்தின் முன்னிலை
சங்க கால இறுதியில் தோன்றிய வேந்தர்களின் ஆட்சி காலத்தில் வணிக வர்க்கமே முன்னிலை வர்க்கமாக சிறப்புற்று விளங்கியுள்ளது என்பதைச் சங்க நூல்களான பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. இதனை, 
ஷஷபட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி முதலிய பாட்டுக்களில் வணிகரைப் பற்றிய குறிப்புகள் முதன்முறையாக நீண்ட அளவில் காணப்படுகின்றன. வீரயுகத்தின் இறுதிக்காலத்தில் தமிழ்நாடு பிற நாடுகளுடனும் வணிகஞ் செய்யத்  தொடங்கியது. யவனரின் காலங்கள் பொன்னைக் கொணர்ந்து மிளகை எடுத்துச் சென்றன. காவிரி பூம்பட்டினத்தை ஷஷமுட்டாச் சிறப்பின் பட்டினம்|| என்று பட்டினப்பாலை வர்ணிக்கும்||2
என்ற கைலாசபதி அவர்களின் விளக்கம் உறுதிப்படுத்துகின்றது.
ஷஷஇடையிறு வகையோர் அல்லது நாடிற்
படைவகை பெறாஅர் என்மனார் புலவர்||3

அரசுக்கு இணையாக படை வைத்துக்கொள்ளும் அளவிற்கு உரிமையையும் முதன்மையையும் வணிகர்கள் பெற்றிருந்தனர் என்பதை தொல்காப்பியம், பொருளதிகாரச் செய்யுள் வழி அறியமுடிகின்றது. பொருளாதாரத் துறையில் வணிகர் முன்னேற்றம் பெற்றதன் காரணமாக சமூகத்திலும் அவர்களுடைய ஆதிக்கம் பெருமளவில் காணப்படுகின்றது.  இக்கூற்றைச் சிலப்பதிகாரத்தை எடுத்துக்காட்டி உறுதி செய்கின்றார் பேராசிரியர் கைலாசபதி அவர்கள்.
பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான்' என்று மாசாத்துவனை வர்ணிக்கும் போதும், 
ஷஷமுரசியம்பின முருடதிர்ந்தன முறைமொழிந்தன பணிலம் வெண்குடை அரசெழுந்ததோர்படி யெழுந்தன|| என்று கோவலன் மணவினை அறிவித்தகாலை வெண்குடைகள் அரசன் உலா எழுந்தது போல எழுந்தன எனக் கூறும்போதும், இளங்கோ, மன்னர்க்கு சமமான இருநிதிக் கிழவரை உயர்த்திப் பாடுவதை நாம் கவனிக்கலாம். அதுமட்டுமன்றி, அரசர்க்குச் சமானமாகவன்றி அவர்க்கு மேலாகவும் வணிகரை உயர்த்தி விடுகின்றார் கவிஞர்||4
இவ்வாறு சங்ககாலத்தின் பிற்பகுதியிலும் சங்கம் மருவிய காலப்பகுதியிலும் வணிக வர்க்கத்தினர் முதன்மை பெற்றிருந்ததை அறியமுடிகின்றது.

சமண பௌத்த வணிக வர்த்தகத் தொடர்பு
சங்க கால இறுதியில் தோன்றிய நூலான மதுரைக் காஞ்சி சமணம், பௌத்தம் ஆகிய வைதீகமற்ற சமயக் கொள்கைகளும் வைதீக சமயக் கொள்கைகளும் அருகருகே இருந்து மக்களை கவரந்ததைக் காட்டுகின்றது.
காமர் கவினிய பேர் இளம் பெண்டிர் பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்                     சிறந்து புறங்காக்கும் கடவுட் பள்ளியும் ..........நிலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகி                உயர் நிலை உலகம் இவண் நின்று எய்தும்    ............... குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் .............சென்ற காலமும் வரூம் அமயமும்  இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து.............நாற்றி நல்கு வர கயம் கண்டன்ன வயங்குடை நகரத்து .........................உயர்ந்து ஓங்கி இறும்பூது சான்ற நறும் பூஞ் சேக்கையும்                     குன்று பல குழீஇப் பொலிவன தோன்ற........||5(மதுரைக் காஞ்சி, 461-488) 

ஆனால் இந்த மூன்று சமயங்களுக்குள் இருந்த போட்டியில் மக்களையும் ஆட்சியாளர்களையும் கவர்ந்த சமயங்களாக சமணமும் பௌத்தமுமே திகழ்ந்துள்ளன. இச்சமணம், மக்களையும் ஆட்சியாளர்களையும் கவர்ந்ததற்கான காரணமாக, 
ஷஷமீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற உயிர்க்கொலை செய்யும் தொழில்களைத் தவிர ஏனைய தொழில்களை எல்லாம் இந்தச் சமயம் சிறப்பித்துப் போற்றி வந்தது. (மிகச் சிறந்த தொழிலாகிய பயிர்த்தொழிலை பிராமண மதம் எனப்படும் வைதீக மதம் இழிவான தொழில் என்று தாழ்வுபடுத்தியது போலல்லாமல்) சமண சமயம் பயிர்த் தொழிலை மிகச் சிறந்த தொழில் என்று போற்றியது. புயிர்த் தொழில் செய்யும் வேளாளரும், வாணிபம் செய்யும் வணிகரும் ஏனைய தொழிலாளரும் இந்த மதத்தை மேற்கொண்டிருந்தனர்....... இவர்கள் சமணசமயத்தைச் சேர்ந்திருந்தபடியால் ஏனைய மக்களும் இச்சமயத்தை தழுவுவராயினர். சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களில் பலர் சமண சமயத்தைச் சார்ந்திருந்தனர். இவர்களால் சமண சமயத்திற்கு ஆதரவும் செல்வாக்கும் ஏற்பட்டன. இந்த சமயத்தின் செல்வாக்கைக் கண்டு, சமண சமயத்தவரல்லாத அரசரும் கூட சமணப் பள்ளிகளுக்கும் மடங்களுக்கும் நில புலன்களையும் பொன்னையும  பொருளையும் ஷஷபள்ளிச் சந்தமாகக்|| கொடுத்து உதவினார்கள். இத்தகைய காரணங்களினாலே, சமண சமயம் தமிழ்நாட்டிலே வேரூன்றித் தழைத்துச் செழித்துப் பரவியது||.6
என்று மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் எடுத்துரைக்கிறார்.
    மேலும், மேதினிமேல் சமண்கையார் சாக்கியர்தம் பொய் மிகுத்தே ஆதி அரு மறைவழக்கம் அருகி, அரன் அடியார்பால் பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழியக் கண்டு ஏதமில் சீர்ச் சிவபாத விருதயர்தாம் இடருழந்தார்|| என்று திருஞானசம்பந்தரின் தந்தையார் சமண சமயமும் பௌத்த சமயமும் தமிழ்நாட்டடில் செழித்தருந்ததைக் கண்டு வருந்தியதாகப் பெரியபுராணம் கூறுகின்றது||7.
என்று சம்பந்தரின் தந்தையாரான சிவபாதவிருதையார் சமண, பௌத்த சமயத்தின் செல்வாக்கால் வருந்திய செய்தியைப் பெரியபுராணப் பாடலைச் சுட்டிக்காட்டி, அக்காலத்தில் சமணத்தோடு பௌத்தமும் ஆட்சியாளர்களைக் கவர்ந்த சமயமாக விளங்கிற்று என்பதையும் வைதீக சமயம் பின்னடைந்திருந்தது என்பதையும் சுட்டி சமணம் மற்றும் பௌத்தம் பெற்றிருந்த சிறப்பைக் கூறுகின்றார் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள்.
    பௌத்தத்தையும் சமணத்தையும் வணிக வர்க்கத்தினர் ஆதரித்ததையும் அவர்கள் தம்முடைய செல்வாக்கினால் நீதிபரிபாலனத்தில் தலையிடும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தனர் என்பதையும், 
ஷஷசமணத்தையும் பௌத்தத்தையும் சிறப்பாக ஆதரித்தவர் அக்காலத் தமிழக வணிக வர்க்கத்தினர் …. சமண, பௌத்தப் பள்ளிகள் பெரும் நிலவுடமை நிறுவனங்களாகி செல்வாக்குப் பெற்றிருந்ததைப் பல்லவ அரசன் மகேந்திரவர்மன் எழுதிய அங்கத நாடக நூலாகிய ஷஷமத்தவிலாச பிரசனம்|| என்னும் நூல் மூலம் அறியலாம். தமது செல்வாக்கினால் அவர்கள் (சமண, பௌத்த நீதிபரிபாலனத்தில் கூடத் தலையிட்டனர் எனத் தெரிகிறது||8. 
என்று விளக்குகின்றார் கைலாசபதி அவர்கள், மேற்கண்ட விளக்கங்கள் வழி சமண பௌத்தர்களின் வணிக ஆதரவும் அவர்களுக்கு ஆட்சியாளர்களிடம் இருந்த செல்வாக்கும் தெரியவருகின்றது.

அற நூல்களின் தோற்றம்
    சங்ககால இறுதியில் குலமரபுகள் அழிந்து வலுவான அரசுகள் தோன்ற ஆரம்பித்திருந்தன. இந்த வலிமையான அரசுகளின் தோற்றம், மிகுந்த இரத்தக் களரிகளுக்கு இடையிலேயே நிகழ்ந்தது. சங்க இலக்கியப் புறத்திணைப் பாடல்கள் இதற்கு தகுந்த சான்றுகளை வழங்குகின்றன. வெட்சித்திணை, வஞ்சித்திணை, உழிஞைத் திணை, தும்பைத் திணை என்று தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கும் அளவிற்கு தமிழ்ச் சமூகத்தில் போர்கள் மலிந்திருந்தன. இதனூடாகவே வணிக வர்க்கமும் வளர்ந்து சமூகத்தில் முதன்மை பெற ஆரம்பித்தது. இக்காலத்தில் அயல்நாட்டு வணிகத்தின் காரணமாக வணிகர்களின் செல்வச் செழிப்பு மிகுந்திருந்தது.
    தமிழ்ச் சமூகத்தில் நீண்ட காலமாகப் பல்வேறு குலங்களுக்குள்ளும் அரசர்களுக்குள்ளும் நடந்த இடைவிடாத போர்கள் அக்கால மக்களுக்கு ஒருவித மனச்சோர்வையும் விரக்தியையும் அளித்திருந்தன. கொலை, கொள்ளை, கள் குடித்தல், பரத்தையர் ஒழுக்கம் போன்ற செயல்கள் சமூகத்தில்; மிகுந்திருந்தன. இக்காலக்கட்டத்தில் சமயப் பிரச்சாரம் செய்ய வந்த சமண, பௌத்த சமயங்கள் இப்போக்கை வன்மையாகக் கண்டித்தன. சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் அரசன் முதல் குடிமக்கள் வரை அனைவருக்கும் புதிய கருத்துக்களையும், நீதியையும் போதித்தன. அறம், ஒழுக்கம் போன்ற பண்புகளைப் பிரச்சாரம் செய்தன. அற நூல்கள் தொடர்ச்சியாக சமூகத்தின் அனைத்து விழுமியங்களையும் மேம்படுத்தும் வண்ணம் எழுதப்பட்ட திருக்குறள் அறநூல்களில் சிறப்பிடம் பெற்றது. சமூகம் சிக்கலுக்கு உள்ளாகி இருந்த காலத்தில், சமூகத்தில் அப்போது நிலவிய அனைத்து முரண்பாடுகளையும் உள்வாங்கி படைக்கப்பெற்ற திருக்குறள் இன்றுவரை நம் அனைவரின் அனுபவத்தையும் கவர்வதாக உள்ளது. இவ்வாறு எழுதப்பட்ட அற நூல்களின் கருத்துக்கள் பெருங்குழப்பத்தில் ஆழ்ந்திருந்த தமிழ்ச் சமூகத்திற்கு ஒருவித தெளிவைக் கொடுப்பது போல் அமைந்திருந்தன எனலாம். 
ஓயாத போர், கொள்ளை, மரணம், கட்டுப்பாடற்ற ஆண்-பெண் உறவு, மிதமிஞ்சிய மது, மாமிச ஊண் முதலியனவற்றின் இருப்பிடமான புராணத் தமிழகம், சமணம், பௌத்தம் ஆகியன கொண்டு வந்த சாந்தம் சமாதானம், ஒழுக்கம், பெண் வெறுப்பு, அரசு நெறி, கட்டுப்பாடு, புலால் மது வெறுப்பு, பொருளாசை வெறுப்பு முதலிய பண்புகளைத் தொடக்கத்தில் இலகுவாகவும் விருப்பத்துடனும் ஏற்றது.||9
    இவ்வாறு தமிழகத்திற்கு வந்து பரவிய சமண, பௌத்த சமயங்கள், அறக் கருத்துக்களின் வழி சமூகம், அரசியல், பண்பாடு என்று அனைத்து தளங்களிலும் தங்கள் செல்வாக்கை ஏற்படுத்தின. சமண பௌத்தக் கொள்கைகளுக்கு வணிக வர்க்கத்தினரின் ஆதரவும் மன்னர்களின் ஆதரவும் கிடைத்தன.
    இவ்வாறு ஒரு காலத்தின் சமூக, பண்பாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்தன அறநூல்கள்.

முடிவுரை
    சங்ககால இறுதியில் தமிழகத்தில் வலிமையான அரசுகள் தோன்றின. இதனூடாக வணிக வர்க்கமும் வளர்ந்து செழிப்பில் மிதந்தது. நிலையான அரசுகளும் வணிக வர்க்கம் முதன்மையும் பெற்ற இக்காலத்தில் சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் குழப்பங்களும் ஒருவித தேக்க நிலையும் நிலவின. 
    தமிழ்ச் சமூகத்தில் குழப்பமும் தேக்க நிலையும் நீடித்த இக்காலத்தில், வைதீக சமயங்களும் அவைதீக சமயங்களான சமணம், பௌத்தம் முதலியன தங்களது சமயக்கருத்துக்களைக் கூறி மக்களையும் அரசர்களையும் தங்கள்பால் ஈர்க்க முயற்சித்தன. இப்போட்டியில் அவைதீக சமயங்களான சமணமம் பௌத்தமும் வெற்றி பெற்றன.
    சமண, பௌத்தர்கள் போதித்த அன்பு, கருணை, கொல்லாமை, ஊண் உண்ணாமை, பிற பெண்வழிச் சேரல் மறுப்பு, கள்ளுண்ணாமை, அரச நீதி முதலான அறக்கருத்துக்களை சங்க காலச் சமூகம் பெருவிருப்பத்துடன் ஏற்றது. அற நூல்கள் அக்காலச் சமூகத்தின் சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்கள் அனைத்தையும் கருத்திற் கொண்டு படைக்கப்பட்டதால் பொது மக்கள், அரசர்கள் மற்றும் அக்கால முன்னணி வர்க்கமாகிய வணிகச் சமூகம் அனைவரின் வரவேற்பையும் பெற்றது. இவ்வாறாக, அற நூல்கள் தமிழ்ச் சமூகத்தினுடைய ஒரு குறிப்பிட்ட காலத்தின் சமூகத்தேவையை பூர்த்தி செய்தன.
அடிக்குறிப்புகள்

1.    க. கைலாசபதி, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், பக்.75-76., 
2.    மே.நூ., ப.111.,
3.    தொல்காப்பியர், தொல்காப்பியம்.பொருளதிகாரம்-மரபியல்
4.    க. கைலாசபதி, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், ப.80., 
5.    மாங்குடி மருதனார், மதுரைக் காஞ்சி, ப.22.,
6.    மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்.50-51.,
7.    மே.நூ.,ப.51.,
8.    க. கைலாசபதி, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்,பக்.17-18.,  
9.    மே.நூ.,16.,

பார்வை நூல்கள்

1.    க. கைலாசபதி, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், குமரன் பப்ளி~ர்ஸ், சென்னை.
2.    மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், திருநெல்வேலி.
3.    சங்க இலக்கியம்
4.    பதினெண்கீழ் கணக்கு நூல்கள