ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

 மொழிப்பயன்பாட்டில் திறன்மேம்பாடு

முனைவர் வெ. விஜயலட்சுமி, எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி., நெட்., பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி, பீளமேடு, கோவை - 641 014 31 Oct 2019 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்
மொழிக்கு முதற் காரணமாக அமைவது ஒலி ஆகும். ஒருவரின் எண்ணங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்துவது மொழி. அம்மொழி ஒலிகளால் ஆனது. மொழியைப் பிழையில்லாமல் பேசவும், எழுதவும் ஒலி துணை செய்கின்றது. ஒலிகளைக் கொண்டே சொற்களும், சொற்களைக் கொண்டே தொடர்களும் அமைகின்றன. தமிழில் ஒலி பிறப்பதற்கும், எழுத்துக்களுக்கும் மாறுபாடு இல்லை. ஓர் எழுத்துக்குரிய ஒலி அது இடம்பெறும் சொல்லிலும் மாறுபடாது ஒலிக்கிறது. த, மி, ழ் என்ற எழுத்துக்குரிய ஒலியை உச்சரிக்கும் போதும் தமிழ் என்றே ஒலிப்பதைக் காணமுடிகின்றது. 
தமிழ் மொழியில் எழுதுவதும், பேசுவதும் (ஒலிப்பும்) மாறுபாடின்றி அமைவதால் இதனை ஒலிப்பியல் மொழி என்று கூறுவர். தமிழ் மொழியில் உள்ள தனிப்பட்ட ஒலி இயல்புகளை வரையறை செய்து விளக்குவதும், தமிழைத் தெளிவாக உச்சரிப்பதில் உள்ள இடையூறுகளையும் கண்டறிந்து வெளிப்படுத்துவதும், தமிழ் மொழியின் ஒலிப்பு முறையில் ஏற்படும் மாறுபாட்டினால் பொருள் மாறுபடுதலை வெளிப்படுத்துவதும் இவ்வாய்வின் நோக்கமாகும்.

திறவுச் சொற்கள்
தமிழ் எழுத்துகள், பிறப்பியல், மொழியின் தோற்றம், மொழி வளர்ச்சி,மொழி உணர்வு

முன்னுரை
மொழியைப் பலரும் பல்வேறு வகையில் கையாளுகின்றனர். மொழி அமைப்பில் காணப்படும் ஒழுங்கின் மூலமே அதனைப் பேசவும், கேட்டுப் புரிந்து கொள்ளவும் முடிகின்றது. மொழி தனிமனிதனின் ஆற்றல் மேம்பாடு என்றாலும், அதனைப் பயன்படுத்தும்போது கேட்போர் புரிந்து கொள்ளும் வகையில் அமைதல் வேண்டும். அவ்வாறு இல்லையெனில் மொழி தோன்றியதன் பயன் இல்லாமல் போய்விடும். சமூக உறவுகளுக்குப் பெரிதும் துணை புரிவது மொழியாகும்.

தமிழ் எழுத்துகள்
மொழியில் ஒலியைக் குறிக்கும் குறியீடுதான் எழுத்து எனப்படுகின்றது. மனக் கருத்துக்களை பிறர் அறிந்து கொள்ளுமாறு வரி வடிவில் வெளிப்படுத்துவது எழுத்து. மொழியின் இலக்கணத்தையும், இலக்கியத்தையும் பாதுகாக்கும் பெட்டகமாக வரிவடிவமாகிய எழுத்து செயல்படுகின்றது. காலத்தால் அழியக்கூடிய பண்பாடு நாகரீகம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் வரிவடிவமே ஆகும்.
தமிழ் மொழியில் மொழி முதல் எழுத்துக்கள், மொழி இறுதி எழுத்துக்கள் என்பன குறித்தும், இன்னின்ன எழுத்துக்கள் இணைந்து நிற்காதன என்றும் தொல்காப்பியர் விதி வகுத்துள்ளார். மேலும், தமிழ் மொழியில் உள்ள சொற்களைப் பெரிய முயற்சி ஏதும் இன்றியே ஒலிக்க முடியும். வல்லொலிகள் பெரும்பாலும் உகரத்துடன் கூடியே மொழிக்கு இறுதியில் நிற்கின்றன. எடுத்;துக்காட்டாக, பாக் - பாக்கு, பத் - பத்து, காற் - காற்று என்று ஒற்று இரட்டித்து, இரண்டாவது ஒற்றெழுத்தில் உகரம் ஏறி நின்று ஒலிப்பது தமிழ் மொழியின் சிறப்பு. பிற மொழிகளில் உள்ளதைப்போல் இங்லாண்ட், க்ரிஸ்ட் என அமைவதில்லை. 

எழுத்துக்களின் பிறப்பு
    தமிழ்மொழியின் ஒலிப்பு முறைகளைப் பற்றி, தொல்காப்பியர் தமது தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில், எழுத்துக்கள் பிறக்கும் முறை பற்றி பிறப்பியலில் மிக நுட்பமாக விளக்குகின்றார். அதில் உயிர் மற்றும் மெய்யெழுத்துக்களின் பிறப்பிடங்கள் பற்றியும், அவற்றை எவ்வகை முயற்சியால் உச்சரிக்க வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார். 
        “உந்தி முதலா முந்துவழித் தோன்றி
        தலையினும் மிடற்றினும் நெஞசினும் நிலைஇப்
        பல்லும் இதழும் நாவும் மூக்கும் 
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி 
எல்லா எழுத்தும் சொல்லும் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறுவே றியலத்  
திறப்படத் தெரியும் காட்சியான”     (தொல்., எழுத்து., பிறப்., நூ - 83)
கொப்பூழ் அடியில் தோன்றும் காற்றானது மேல்நோக்கிச் சென்று, தலை, மிடறு, நெஞ்சு ஆகிய இடங்களின் வழியாக, பற்கள், இதழ்கள், நாக்கு, மூக்கு, அண்ணம் முதலிய எட்டு வகைப்பட்ட நிலைக்களன்களை உடையனவாய், அவ்வவ்வுறுப்புகளோடு பொருந்தி, ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு உசச்சரிப்பு முறையுடன் தோன்றும் என்கிறார்.
    கல்வி கற்றுக்கொடுப்பதில் மொழியே முதலிடம் பெறுகின்றது. ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்கிறார் ஒளவையார். இதன் மூலம் எழுத்தாகிய மொழியின் சிறப்பினை அறியமுடிகின்றது. ஒருமொழி ஒலிவடிவம், வரிவடிவம் என்ற இரு வடிவங்களுள் அமைகின்றது. பொருள் தரும் தொடர்களை அமைப்பதும், மொழிப்பாடமும் குழந்தைகளின் மொழித்திறனை வளர்ப்பதை மையமாகக் கொண்டு விளங்குகிறது. 
இம்முறையில் மாணவர்களுக்கு வகுப்பில் எழுத்துக்களை உச்சரிக்கும் முறையை முறையாக எடுத்துக் கூறும்போது சொற்கள் பிழையின்றி வெளிப்படும். பிழையான உச்சரிப்பு முறையால் எழுதும்போதும், பேசும்போதும் பொருள் மாறுபடும் நிலை உருவாகின்றது. 

தமிழ் எழுத்துகளில் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் குறில்(5) நெடில்(7) என்றும், மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் வல்லினம்(6) மெல்லினம்(6) இடையினம்(6) என்றும் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் உயிரெழுத்துக்கள் குறில் எழுத்துகள் ஒரு மாத்திரை அளவுடன் குறுகியும், நெடில் எழுத்துகள் இரண்டு மாத்திரை அளவில் நீண்டும் ஒலிக்கின்றன. அதேபோன்று மெய்யெழுத்துகளும், வல்லின எழுத்துகள் மிகுந்த அழுத்தத்துடனும், மெல்லின எழுத்துகள் அழுத்தம் குறைந்தும், இடையின எழுத்துகள் மிதமான அழுத்தத்துடனும் ஒலிக்கப்படுகின்றன. இவற்றுள் வல்லின எழுத்துகள் சொல்லின் முதலில் வரும் போது இயல்பான அழுத்தத்துடனும், சொல்லின் இடையில் தனித்துத் தோன்றும் போது சற்று அழுத்தம் குறைந்தும் ஒலிக்கப்படுகின்றன.
இயல்பான அழுத்தம்    : பாட்டு, இனிப்பு, நெகிழ்ச்சி, 
குறைந்த அழுத்தம்     : செழிப்பு, இயல்பு என்று ஒலிக்கப்படுகின்றன. 
தமிழில் காணப்படும் சொற்களை அவற்றின் பொருள் புலப்படுமாறு வேறுபடுத்தி அறிவதற்கு உதவுவது ஒலியன்கள். ஒலி உறுப்புகளான, காற்று அறைகள் - நெஞ்சு, தொண்டை, வாய், மூக்கு. ஒலி எழுப்பிகள் - பல், இதழ், நாக்கு, அண்ணம், குரல்வளை (இவற்றுள் பல் அண்ணம் இவை அசையா உறுப்புகள், இதழ், நாக்கு, குரல்வளை போன்றவை அசையும் உறுப்புகளாகும்). காற்று வாய்வழி வரும்போது மூக்கறை அடைபட்டு வரும் ஒலி அலைகள் வாய் ஒலிகள் என்றும், வாய் அடைக்கப்பட்டு மூக்கின் வழி வரும் ஒலி அலைகள் மூக்கொலிகள் என்றும் வழங்கப்படுகின்றன. 
தொல்காப்பியப் பிறப்பியல்
    எழுத்துக்களின் பிறப்பினைப் பற்றி தொல்காப்பியர் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். அவ்வகையில் பன்னிரண்டு உயிர்களும் தொண்டையை இடமாகக் கொண்டு பிறக்கும் என்பதைச் சுட்டுகிறார். அ, ஆ - இரண்டும் வாயைத்திறக்கும் (அங்காத்தல்) என்ற முயற்சியால் உருவாகும் என்றும்,  இ, ஈ. எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் அண்பல்லும் (பல்லின் இரு புறமும்), அடிநா விளிம்பும், உறப் (தடவ) பிறக்கும் என்றும், உ, ஊ, ஒ. ஓ, ஒள என்ற ஐந்து எழுத்துக்களும் இதழ் குவிந்து ஒலிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மெய்யெழுத்துகளின் பிறப்பினைக் குறிப்பிடும்போது, க, ங என்ற இரு எழுத்துக்கள் முதல் நா (தொண்டையின் அருகில் உள்ள நாவின்), முதல் அண்ணம் இவற்றில் ஒற்றப் பிறக்கும் என்றும், இடை நா, இடை அண்ணம் இவை இரண்டும் தடவ ச, ஞ பிறக்கும் என்றும், நுனிநாவும், அண்ணமும் உற ட, ண ஆகிய இரண்டும் பிறக்கும் என்றும், அண்ணத்தைச் சார்ந்த பல்லின் அடிப்பகுதி முழுதும் நுனிநா பரந்து உறும்படி சேர த, ந ஆகியன பிறக்கும் என்றும்,  நாவின் நுனி மேல்நோக்கி அண்ணத்தை ஒட்ட ற, ன இரண்டும் பிறக்கும் என்றும், நாவின் நுனி மேல்நோக்கி அண்ணத்தைத் தடவ ர, ழ இரண்டு மெய்களும் பிறக்கும் என்றும்,  அண்பல்லின் அடியில் நாவின் நுனி ஒற்ற லகரமும், வருட ளகரமும் பிறக்கும் என்றும், மேல், கீழ் இதழ்கள் இணைந்து ப, ம ஆகிய எழுத்துக்கள் வெளிப்படும் என்றும், மேற்பல்லும், கீழ் உதடும் கூடும்போது வகரம் பிறக்கும் என்றும், உந்தியிலிருந்து வெளிவரும் காற்று மிடற்றில் (தொண்டை) தடைபட்டு வெளிப்படும்போது பிறக்கும் ஒலி யகரம் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிறப்பியல் வழி தமிழ்மொழியைக் கற்றுத்தேர்ந்து, சரியான ஒலிப்பு முறையோடு பேசும்போது மொழியின் வளம் பெருகும்; கேட்போருக்கு இனிமையும் தரும்; நம் தாய்மொழி- யாம் தமிழ்மொழி மட்டுமே பன்னெடுங்காலமாய் வளர்ந்து வரும் சிறப்புடையது.  

மொழியின் தோற்றம்
    உலகை நம் அறிவால் அறிவது கடினம், இயற்கை உலகத்தை மனக்கண்முன் நிறுத்த படைப்புகளை நாடினான். அதன் மூலம் உலகை விரிவடையச் செய்தான். வெறும் அசைவுகளால் பேசிக்கொண்டிருந்த மனிதன் தன் அறிவால் ஒலிக்குறிப்புகளை ஏற்படுத்தி, ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயரிட்டு ஒலிக்கும் முயற்சியாலும், மரபுகளாலும் இடம், காலம் ஆகியவற்றின் உதவியாலும் நிகழ்வுகளைப் பதிவு செய்தான். மேலும் எழுதப்படும் மொழி பேசும் மொழியை விட நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்பதை அறிந்தே வரிவடிவங்களை உருவாக்கினான்.
திணை, பால், எண், இடம், காலம் இவற்றைக் குற்றமின்றி வாக்கியத்தில் பயன் படுத்தி மொழியை ஆற்றல் மிக்கதாக உருவாக்கி வளம்பெறச்செயல்வேண்டும். குழந்தை பேசும் மொழியில் சில வழுக்கள் (குற்றம்) தோன்றினாலும் அதைக்குற்றமாய் கருதாமல் சரியான பொருள் கொள்ளலாம். 
    மொழியின் தோற்றம் பற்றி அறிவதற்கு குழந்தைகளின் மொழி ஆராய்ச்சி பெரிதும் பயன்படும் என்றனர். எனினும் மொழி தோன்றிய நிலை வேறு; குழந்தை மொழியை கற்கும் நிலை என்பது வேறு; பல்வேறு அமைப்புகளுடன் நிறைந்து பண்பட்ட மொழியையே ஒரு குழந்தை கற்றுக் கொள்கின்றது. மனிதன் தன் வாழ்நாளில் பெறுதற்கு அரிதாய்ப் பெற்ற பெருஞ்சிறப்பு மொழிபேசக் கற்றுக் கொண்டதேயாகும். ஒலியின்பமும் (சொல்லும் சொற்களால் அமைவது), கருத்தியல் இன்பமும் (சொற்களின் பொருளால் அமைவது) ஒரு மொழிக்கு இனிமை சேர்க்கின்றன. 

மொழி வளர்ச்சி
    ஒரு மொழியின் வளர்ச்சி நிலை அதன் ஒலிப்பு முறை கொண்டே அமைகின்றது. சரியான உச்சரிப்பு இல்லையானால் மொழி தன் நிலைப்பாட்டை இழக்கின்றது. அவ்வகையில் சமஸ்கிருதம் எனப்படும் வடமொழியானது, தென்னிந்தியாவிலுள்ள ஆரியர்கள் மற்றும் பிராமணர்களின் பழங்குடியினக் கலப்பினால், புதிய மக்களினமும், புதிய மொழிகளும் தோன்றின. அவையே தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பின்னாளில் பெயர் பெற்றதாகக் கூறப்படுகின்றது. 

ஆங்கிலேயர் இந்தியர் ஆங்கிலோ இந்தியர்  - பேசும் மொழி ஆங்கிலம்
ஆரியர், பிராமணர் ூ கேரளர்  நாயர், நம்பூதிரி     - பேசும் மொழி மலையாளம்
பழங்குடி வகுப்பினர் தாயார் வழி மரபினையும், பிராமணர்கள் தந்தை வழி மரபினையும் பின்பற்றி வரும் நிலையில், தந்தையின் பெயரை முதல் எழுத்தாகக் கொண்டு எழுதும் முறை தமிழர்களிடம் மட்டுமே காணப்படுகின்றது. பிற மொழியினர் ஊர் பெயரையே முதல் எழுத்தாகக் கொண்டு எழுதுவர். 
இந்தியாவின் தென்பகுதியில் தொல்லிலக்கியங்களாக இருப்பவை பழந்தமிழ் இலக்கியங்களே! தென்னிந்தியாவில் தமிழ்மொழியும், பழந்தமிழ் இலக்கியமும் தோன்றி பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னரே இன்று வழக்கிலுள்ள பிற மொழிகள் தோன்றின. இத்தகு சிறப்பு மிக்க மொழியினை, அதன் வளர்ச்சியினைக் குறிப்பிடும்போது, வாய்மொழி இலக்கியம், எழுத்து வடிவம், எழுத்து இலக்கியம் என்றும் தமிழ் மொழியைக் கூறும்போது, இலக்கியம், இலக்கணம் என்ற சொற்களைக் கையாண்டிருப்பதால் மொழியின் வளர்ச்சி நிலை மறைமுகமாக வெளிப்பட்டிருப்பதை அறியமுடிகின்றது. 
ஒலிப்பு முறையும், எழுத்து மொழியும் ஒருங்கே அமைந்தால் மட்டுமே அது சிறந்த மொழியாகக் கருதப்படும். எழுத்து மொழிப்பயன்பாடு மொழிக்கு மொழி மாறுபடும். இரு வேறுபட்ட பரிமாணங்கள் மொழியைப் பற்றிய பயன்பாட்டில் காணப்படுகின்றன. ஒன்று - அமைப்பு (அதாவது மொழியை வருணிப்பது), மற்றொன்று - பயன்பாடு (கருத்துப் பரிமாற்றத்தில் மொழியின் சமூகப்பயன்கள் வெளிப்படுத்துவது). மொழி அமைப்பு வளர்ச்சியை இலக்கண வளர்ச்சி என்றும், மொழிப் பயன்பாட்டு வளர்ச்சியை இலக்கிய வளர்ச்சி என்றும் குறிப்பிடலாம்.

மொழி உணர்வு
மொழி உணர்வு என்பது மொழிபற்றிய அவரவர் மனப்பாங்கைப் பற்றியதாக அமைகிறது. இது இரு வகைப்படும். ஒன்று மன வழிப்பட்டது, மற்றொன்று நடத்தை வழிப்பட்டது எனக் கொண்டு, அறிவு, உணர்ச்சி, செயல் ஆகியவற்றின் தூண்டுதலால் ஏற்படும் எதிர்விளைவை மனவழிப்பட்டதாகவும், சமூகச் சூழலை எதிர்கொள்ளும் மனிதர்கள், அல்லது அவர்கள் நடத்தையில் ஏற்படும் எதிர் விளைவுகளைக் கொண்டு நடத்தை வழிப்பட்டதாகவும் விளக்குவர். 
மொழி உணர்வு மனவழிப்பட்டதாக இருந்தாலும், அரசியல் - பொருளாதார - பண்பாட்டுத் தாக்கத்திற்கு உட்பட்டது. சமுதாய உளவியலைச் சார்ந்தது. மொழி வளர்ச்சியில் மொழி உணர்வுக்கும் பங்கு உண்டு.

முடிவுரை
மொழி என்பது மக்களால் படைக்கப்பட்டதாயினும், அதைக் காக்கும் கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தக் கூடிய அரிய கருவியாகும். பலர் சேர்ந்து இணைந்து வாழும் சமுதாயம் ஒரே இனமாய் வாழ்வதற்கு துணை செய்வது மொழி. காலம் மாறிமாறிச் சென்று கொண்டிருக்க அதை வடித்துச் சித்திரமாக்குவது எழுத்து. மொழியின் இயக்கம், மற்றும் நிலைபேறு இரண்டும் வியக்கத்தக்க வகையில் அமைய மொழிப்பயன்பாடு பெரிதும் துணைநிற்கிறது. இலக்கிய, இலக்கணங்கள் தோன்றி மொழியைச் செம்மொழி ஆக்குகின்றன. பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மொழித்திறன் மேம்படுகின்றது. அம்மொழியைப் பிழையின்றிப் பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டு நம் தாய்மொழியாகிய தமிழை வளர்க்க மொழியின் பயன்பாட்டினை மேம்படுத்தவேண்டும்.

துணைநின்ற நூல்கள்
டாக்டர் மு. வரதராசனார் -  மொழி வரலாறு
டாக்டர் மு. வரதராசனார் -  மொழி நூல்
புலவர் ஆ. பழநியப்பன்  -  பழந்தமிழ் இலக்கியம் ஓர் ஆய்வு
டாக்டர் செ.வை.சண்முகம் - மொழி வளர்ச்சியும் மொழி உணர்வும்
நச்சினார்க்கினியர் உரை -  தொல்காப்பியம் (உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்)