ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கையர் சித்தரிப்பு

முனைவர் கி. அய்யப்பன் கெளரவ விரிவுரையளர், தமிழ்த் துறை, உ. நா. அரசினர் கல்லூரி, 31 Oct 2019 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

திரையுலகில் 1977-இல் வெளிவந்த  பாலபிஷேகம் முதல் 2017-இல் வெளிவந்த சிவப்பு எனக்குப் தமிழ்த் பிடிக்கும் எனும் திரைப்படம் வரை வெளிவந்துள்ள திருநங்கை தொடர்பான திரைப்படங்கள் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன. பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்கள் திருநங்கையரை வசனக் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள், பாடல் காட்சிகள் முதலியவற்றில் கேவலமாகவும், நகைச்சுவைக்காகவும் மட்டுமே காட்சிப்படுத்தப் பட்டுளதைக் விரிவாக ஆராய்கிறது. 1995- இல் வெளிவந்த பம்பாய் திரைப்படம் திருநங்கையரை நல்லவிதமாகக் காண்பித்த முதல் படமாகும். மேலும் சித்திரம் பேசுதடி, காஞ்சனா-2 ஆகிய ஒரு சில படங்களில் திருநங்கையரை நல்ல முறையில் காண்பித்திருக்கிறார்கள். இவ்வாறு இக்கட்டுரையில் தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கையரின்  காட்சிப் பதிவுகளை ஆராய்கிறது. அவ்வாய்வின் மூலம் பெரும்பாலும் இத் திரைப்பட காட்சிகள் அவர்களை இழிவுபடுத்தும் விதமாகவே இருக்கிறது என்பதை எடுத்துக் கூறுகிறது. மேலும், இக்கட்டுரையில் திருநங்கையரை இழிவுப்படுத்தும் போக்கை  தமிழ்த்திரையுலகம் கைவிடவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

திறவுச் சொற்கள்

திருநங்கை, பம்பாய், சித்திரம் பேசுதடி,  கருவறைப் பூக்கள்         

முன்னுரை

        உலகில் முதன் முதலாக கி.பி 1890-ஆம் ஆண்டில் தாமஸ் ஆல்வா எடிசனும், வில்லியம் பிரிசு கிரினும் சினிமாக் காமிரா உருவாகக் காரணமாக அமைந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து கி.பி 1885-ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டைச்சார்ந்த லூமியர் சகோதரர்கள் திரைப்படக்கருவியைக் கண்டறிந்தார்கள். அவர்கள் தயாரித்த 'தொடர்வண்டி நிலையத்திற்குத் தொடர்வண்டி வருகை' என்ற படம்தான் உலகின் முதல் படம். இதனைத் தொடர்ந்து 1903-ஆம் ஆண்டில் வெளியான 'ஒரு பெரிய தொடர்வண்டி கொள்ளை' என்பதுதான் சற்று நீளமான திரைப்படம். 1919-ஆம் ஆண்டில் இராபர்ட் பிள ஹர்த்தி என்ற ஜெர்மனி நாட்டைச் சார்ந்தவர் செய்திக் குறும்படங்களைத் தயாரித்தார். இன்று ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. சைபால் சட்டர்ஜி(டி.வி வேல்டு இதழின் ஆசிரியர்) ‘ஒவ்வொரு வாரமும் 30 மொழிகளில் 110 மில்லியன் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன’ எனக் கூறுகின்றார். இந்தியாவில் முதல்படம் 1896-ஆம் ஆண்டில் மும்பை வாட்கன் உணவுவிடுதியில் லூமியர் சகோதரர்கள் தயாரித்த ஆறு குறும்படங்கள் திரையிடப்பட்டன. இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட முதல் படம் 'ராஜா ஹரிச்சந்திரா'. இது தாதா சாகிப் பால்கே என்பவரால் தயாரிக்கப்பட்டது. தமிழில் முதல் படம்‘காளிதாஸ்'. இப்படம் 1931-ஆம் ஆண்டில் வெளிவந்தது.

திரைப்படம் உலகமக்கள் ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக அறிந்துகொள்ளவும், மனிதனைச் சர்வ தேசியமாக்கவும் உதவி செய்கின்றன. ஒரு பொது நலனிற்காக மக்கள் ஒரு குறிப்பிட்ட தேசியத்திற்குள், இனத்திற்குள் வாழ்கிறார்கள். திரைப்படம் அவர்களை ஒருவருக்கொருவர் சமமாகத் தெரியும்படி செய்கிறது. அதன் மூலம் பல்வேறு தேசிய, இன வேறுபாடுகளைக் களையவும் செய்கிறது. இதன் அடிப்படையில் திரைப்படம் என்பது சர்வதேச அளவிலான, எல்லோருக்குமான ஒரு மனிதத் தன்மையை உருவாக்குவதில் முன்னோடியாக இருக்கிறது எனலாம்.

இத்தகைய சிறப்பு மிக்கத் திரையுலகில் தமிழ்த் திரைப்பட உலகம் திருநங்கையரை மோசமானவர்களாகவும் நகைப்புக் குரியவர்களாகவும் தான் பெரும்பாலும் சித்தரித்து இருக்கின்றன. ஆரம்பக் காலத்தில் திருநங்கையர் சமூகம் கேலிக்குரிய சமூகமாகப் பார்க்கப்படத் தமிழ்த் திரைப்படங்களும் காரணமாய் அமைந்தன எனலாம்.  

தமிழில் வெளிவந்த பல திரைப்படங்கள் திருநங்கைகளைப் பெரும்பாலும் கேலிக்கான காட்சியாக மட்டுமே சித்தரித்து வருகின்றன. நகைச்சுவை என்கிற போர்வையில் அவமானப் பேச்சுகள், இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள், பாலியல் ரீதியான காட்சி அமைப்புகள் என்று திருநங்கைகளைத் திரைப்படங்கள் காட்சிப்படுத்தி வருகின்றன. பம்பாய், தெனாவட்டு, சித்திரம் பேசுதடி, நான் கடவுள் போன்ற சில திரைப்படங்களில் திருநங்கையர்களைக் கண்ணியமாகக் காண்பிக்கிறார்கள். 1977-இல் வெளிவந்த பாலபிஷேகம் முதல் 2017- ஆம் ஆண்டு வெளிவந்த சிவப்பு எனக்குப் பிடிக்கும் திரைப்படம் வரை இவ்வாய்வுக் கட்டுரையில் ஆராயப்படுகிறது.

திருநங்கையரை நல்ல முறையில் காட்சிப்படுத்தும் தமிழ்த் திரைப்படங்கள்

சில தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் மட்டுமே திருநங்கைகளை மிக அரிதாகவே திரைப்படங்களில் கண்ணியமான முறையில் காண்பிக்கின்றனர். அதில் பம்பாய், சித்திரம் பேசுதடி, நான் கடவுள், காஞ்சனா, தெனாவட்டு, வானம், சிவப்பு எனக்குப் பிடிக்கும், 18 வயது முதலிய படங்களைக்கூறலாம்.

1995-இல் வெளிவந்துள்ள பம்பாய் திரைப்படத்தில் மதக்கலவரத்தில் உள்ளவர்களைத் தடுத்துநிறுத்தி உயிரின் மதிப்பையும் உறவின் பெருமையையும் ஒரு திருநங்கை மூலம் காட்டும் கருத்தைப் பதிவு செய்தவர் திரு.மணிரத்தினம் அவர்கள். கதைப்படி, கலவரச் சூழலில் பிரிந்துவிடும் இரட்டைச் சகோதரர்களில் ஒருவன் நிர்க்கதியாகத் திகைத்து நிற்கும் வேளையில் எதிர் பாராத திருப்பமாக வந்து அச்சிறுவனைப் பாதுகாப்பவர் தெருவோரத்தில் வசிக்கும் ஒரு திருநங்கையாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் காட்சியிலும் உயிரின் மதிப்புக் குறித்து கலவரக்காரர்களிடம் வீர ஆவேசத்துடன் ஒரு வசனம் பேசி முடிப்பார் அத்திருநங்கை. நிச்சயமாக மனித உயிரின் மதிப்பு குறித்தும், அதனால் ஏற்படும் உறவுகளின் இழப்பு குறித்தும் திருநங்கையொருவர் விளக்குவது மற்ற யாரையும் விடப் பொருத்தமாகவே இருக்கும். தனக்குள்ள பாலின அடையாளச் சிக்கல் ஒன்றின் காரணமாக மட்டுமே குடும்பம் உள்ளிட்ட எல்லாத் தளங்களிலும் விலக்கப்பட்டவர்களுக்குத்தான் உயிர், உறவின் மதிப்பும் வலியும் தெரியும். அதனைத் தக்க இடத்தில் பம்பாய் படம் வெளிப்படுத்தியுள்ளது.

2006-இல் வெளிவந்த சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் ஒரு சிறு காட்சியில் நற்குணமுள்ள திருநங்கையாக ஒருவர் காட்டப்பட்டிருக்கிறார். அதே படத்தில் பிரபலமான “வாலமீனுக்கும், விலாங்கு மீனுக்கும்” எனும் பாடலில் ஆபாசமில்லாத வகையில் திருநங்கைகளைக் காட்டுகின்றனர். கதாநாயகனைத் தேடி நாயகி வருகிறாள். அங்கே துணி தேய்ப்பவரிடம் சிறிய சண்டையிட்டபடி நிற்கும் திருநங்கையிடம் கதாநாயகன் எந்த வழியாகச் சென்றான் என்று அவள் கேட்கிறாள். கதைப்படி நாயகன் சென்ற இடம் ஒரு விபச்சார விடுதி என்பதாலும், அங்கே ஒரு குடும்பப் பெண் செல்வது சரியாகாது என்பதாலும் தனக்குத் தெரியாதென்று திருநங்கை கூறிவிடுகிறாள்.

2008-இல் வெளிவந்த தெனாவட்டு படத்தில் இயக்குனர் திரு. கதிர் அவர்கள் தங்களை நம்பி வரும் காதல் ஜோடிகளை அரவணைத்து உதவி செய்து உயிரை விடும் திருநங்கையின் தியாகத்தை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் ரேவதி எனும் திருநங்கை நடித்துள்ளார். இப்படத்தின் தொடக்கத்தில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர்க் கோயிலைக் காட்டுகின்றனர். இறுதியில் வில்லனிடம் இருந்து கதாநாயகனைக் காப்பாற்றுபவர்களாகப் படம் பதிவு செய்கிறது. வானம் திரைப்படத்தில் திருநங்கை அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளப் பெருந்துன்பத்தை அனுபவிக்கிற கொடுமையை எடுத்துக்கூறி இதயங்களைக் கனக்க வைக்கிறார் இயக்குனர் கிரிஷ்.

2009-இல் வெளிவந்த நான் கடவுள் படத்தில் இயக்குனர் பாலா அவர்கள் பி. கீர்த்தனா என்ற திருநங்கையை ஒரு நல்ல கதாப்பாத்திரத்தில் நடிக்கவைத்துப் பெருமைப் படுத்தியிருக்கிறார்.

2011-இல் வெளிவந்த காஞ்சனா படத்தில் ராகவ லாரன்ஸ் அவர்கள் திருநங்கையின் வலிமையையும் பெருமையையும் உணர்த்தியிருக்கிறார். காஞ்சனா திரைப்படம் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அது திருநங்கைகளின் மன உணர்வுகளை எடுத்துக்காட்டுவதோடு அவர்கள் கல்வி கற்று முன்னேற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்தியம்புகின்றது. இப்படத்தில் ஒரு திருநங்கை மற்றொரு திருநங்கையைத் தத்தெடுத்து வளர்ப்பதும், அவளை மருத்துவராக்கி, அவளுக்கென்று ஒரு மருத்துவமனை கட்டிக் கொடுப்பதும் அவளின் கனவாக உள்ளது. இறுதியில் அத்திருநங்கை மருத்துவராக ஆவதைக் காண்பித்தல் சிறப்புக்குரிய ஒன்றாகக் கூறலாம்.

2017-இல் வெளிவந்த சிவப்பு எனக்குப் பிடிக்கும் எனும் திரைப்படம் திருநங்கையரின் உணர்வுகளையும் சமூகத்தில் அவர்களின் நிலையையும் விளக்குகிறது. இப்படத்தின் இயக்குனர் யுரேகா பாராட்டப்படவேண்டியவர். 18 வயது திரைப்படத்தில் வரும் ‘ஆணும் இல்ல பெண்ணும் இல்ல ஆனா நாங்க நடுவுல’ எனும் பாடல் திருநங்கையரின் சமூக நிலையைச் சிறப்பாகப் பதிவு செய்கிறது.

இவ்வாறு தமிழ்த் திரைப்படங்களில் 1995-இல் வெளிவந்த பம்பாய் திரைப்படம் முதன்முதலாக திருநங்கையரை நல்ல முறையில் காட்சிப்படுத்தியிருக்கிறது எனலாம். மேலே சொன்னது போன்று சில படங்களில்தான் திருநங்கையரை நல்ல முறையில் காண்பிக்கப்பட்டிருக்கின்றனர்.

திருநங்கைகளை மையமாகக் கொண்ட படங்கள்

தமிழ்த் திரைப்பட உலகில் படம் முழுவதும் திருநங்கையரை மையமாகக் கொண்டப் படங்களும் வெளிவந்துள்ளன. நவரசா, கருவறைப் பூக்கள், நர்த்தகி முதலிய படங்கள் திருநங்கையரைப் மையமாகக் கொண்ட படங்கள்.

 2005- இல் வெளிவந்த நவரஸா திரைப்படத்தைத் திருநங்கைகளின் உலகத்தை நமக்கு அறிமுகம் செய்த முகவரியாகப் பார்க்கலாம். இப்படத்தில் நவரஸா என்ற பெரும்பாலான திருநங்கைகளின் வாழ்க்கை முறையையும், அரவான், கூத்தாண்டவர்க் கோயிலின் வழக்கங்களையும், அப்போது அங்கே நிகழும் சடங்குமுறைகளையும் மிக அழகாக பதிவு செய்துள்ளனர்.

2011-இல் வெளிவந்துள்ள ‘கருவறைப்பூக்கள்’ என்னும் திரைப்படம் வீட்டை விட்டு வெளியேறும் திருநங்கையின் வாழ்க்கையையும், சமூகத்தால் ஏற்படும் கொடுமைகளை எதிர்த்து அவள் போராடுவதையும் காட்சிப்படுத்துகிறது. இப்படத்தில் லிவிங் ஸ்மைல் வித்யா, பிரியா பாபு என்ற திருநங்கைகளே முக்கியக் கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குநர் லூர்து சேவியர்.

2011-இல் வெளிவந்துள்ள படம் நர்த்தகி. இத்திரைப்படத்தின் கதை திருநங்கையை மையமாகக் கொண்டது. இது பெரும்பாலானவர்கள் போல ஒரு குடும்பத்தில் வளரும் சிறுவனைப் பற்றிய கதை. அவன் தன்னுள் இருக்கும் அவளை உணரத்தொடங்கி, அவளை அடைவதற்கு எவ்வளவு சிரமங்களை மேற்கொள்கிறான், அவனின் சிறுவயதுக் காதல், அவனின் மாமன் மகள் அவன் மேல் வைத்திருக்கும் காதல், பின்பு தனக்கான வாழ்வுச் சூழலைப் பெற்ற பின்பு ஏற்பட்ட காதல்.. இவ்வாறாகக் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர். மேலும், ‘கிரிக்கெட் ஸ்கேண்டல்’ திரைப்படம் முதன்முறையாகத் திருநங்கையால் உருவாக்கப் பெற்றுள்ளது.

தமிழ்த் திரைத்துறையில் திருநங்கையரும் தமக்கான உரிமையையும், தங்களின் வாழ்வியல் அவளங்களையும், வலி, வேதனைகளையும் திரையில் வெலிப்படுத்துவதற்கு ஆய த்தமாகி வருவதை இத்திரைப்படங்கள் நமக்கு கட்டியம் கூறுகின்றன.

திருநங்கையரைக் கேவலமாகச் சித்தரிக்கும் திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்பட உலகில் பெரும்பாலும் திருநங்கையரை கேவலமாகவே சித்தரிப்பு செய்துள்ளனர். அவைகளில் பாலாபிஷேகம்(1977), வருஷம்16(1989),  சேவகன்(1992),  அபிராமி(1992), எங்க தம்பி(1993), கட்டபொம்மன்(1993), பரம்பரை(1996), ஞானப்பழம்(1996), துள்ளாத மனமும் துள்ளும்(1999), அப்பு(2000), சுதந்திரம்(2000), ஸ்டார்(2001), சில்லுன்னு ஒரு காதல்(2006), வேட்டையாடு விளையாடு(2006), மணிகண்டா(2007), பருத்தி வீரன்(2007), ஐ(2015) போன்றவற்றில் திருநங்கைகளைக் கேவலமான முறையில் சித்தரித்துள்ளனர்.  மேலும் நேசம், அமராவதி, போக்கிரி, சிவகாசி, திருடா திருடி, காலமெல்லாம் காத்திருப்பேன், கில்லி, உள்ளம் கொள்ளை போகுதே, ஈரமான ரோஜாவே, வரலாறு, லீலை, முரட்டுக்காளை முதலிய படங்களில் ஒரு நகைச்சுவைக் காட்சியிலோ இல்லை பாடல்களிலோ திருநங்கைகளை அவமதிக்கும் காட்சிகளைக் காணமுடிகிறது. இவை போன்று இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத, நினைவில் வராத படங்கள் கணக்கில்லாமல் உள்ளன.

1977-இல் வெளிவந்த பாலாபிஷேகம் என்ற திரைப்படத்தில் அன்றைய பிரபலத் திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு. சுருளிராஜன் அவர்கள், திருநங்கையாகக் கதாப்பாத்திரம் ஏற்றிருந்தார். மேலும், அதில் திருநங்கையரை கேலி செய்யும் எண்ணான ஒன்பது என்ற சொல்லை, அவர் அடிக்கடிப் பயன்படுத்தியிருக்கிறார். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1989-இல் வெளிவந்த வருஷம் 16 என்ற திரைப்படத்தில் குஸ்புவுக்கு டேன்ஸ் மாஸ்டராக இருந்து கற்றுக் கொடுக்கும் சமயத்தில் அங்கே வரும் கார்த்திக் டேன்ஸ் மாஸ்டரைப் பற்றி கூறும்போது பசங்களா பாத்து...இது ஒரு மாதிரி என்று கூறிச் செல்கிறார்.

1992-இல் வெளிவந்த சேவகன் படத்தில் செந்தில் திருநங்கை போன்ற ஒருவரை ரமாமணி நவமணி டைப் என்றும், வெண்ணிற ஆடைமூர்த்தி அயிட்டத்த நாங்க டீல் பண்ணிக்கிறம் என்றும் கூறி கேலிப்பொருளாக்குவதைக் காணமுடிகிறது. 1992-இல் வெளிவந்த அபிராமி திரைப்படத்தில் பஸ் கண்டக்டராக இருக்கும் குமரிமுத்து பஸ்ஸில் ஏறுபவர்களை ஒதுங்கி நில்லுங்கப்பா… ஆம்பளங்க அந்தப் பக்கம், பொம்பளங்க இந்தப் பக்கம் என்று கூறும்போது மச்சான் நாங்க எந்தப் பக்கம் என்று இரண்டு திருநங்கைகள் கேட்பதாகவும் அதற்குக் குமரிமுத்து ஆளுக்கு ஒரு பக்கம் நில்லுங்கடீ…அங்க நில்லுங்கடா… என்று சொல்வதாகவும், இப்படித் திருநங்கைகள் அவமதிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

1993-இல் வெளிவந்த எங்க தம்பி திரைப்படத்தில் தியாகு விபச்சாரியைத் தேடிச்செல்லும் காட்சியில் அங்கே விபச்சாரியாகத் திருநங்கை காட்சிப்படுத்தப்படுகிறாள். குரலு ஒன்னுதான் கரகரன்னு இருக்கு என்று கூறும் தியாகு. அவர் திருநங்கை என்று தெரிந்ததும் மிரண்டு ஓடுவதாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். 1993-இல் வெளிவந்த கட்டபொம்மன் என்ற படத்தில் கவுண்டமணி பெண்களை வேலைக்கு ஆள் எடுப்பதாக ஒரு நகைச்சுவைக் காட்சி வரும். இதில் வழக்கமான நகைச்சுவை போலன்றி ஒரு நுட்பமான செய்தியையும் பதிவு செய்திருப்பார்கள். காட்சிப்படி இரண்டு திருநங்கைகள் பணித் தேர்வுக்காகக் காத்திருப்பார்கள். அவர்களைக் கண்ட கவுண்டமணி “யே. போ…. யே.. போ…..” என்று தொரத்துவார். அதற்கு அவர்கள் “ஏன் நாங்க வேலை செய்யமாட்டமா?” என்று கேட்க, பதிலாக கவுண்டமணி “ங்கூம், அப்பிடியே நீங்க வேலை செஞ்சுட்டாலும்…” என்று துரத்துவார். அதாவது, திருநங்கையர் பொதுத் தளங்களில் பணி புரிவதற்குத் தகுதியற்றவர்கள் என்பதை இக்காட்சி பதிவு செய்கிறது. திருநங்கைகளை மட்டமான மதிப்பீட்டுடன் வெளியேற்றுவதை இத்திரைப்படம் காட்சிப்படுத்தியிருப்பதை காணமுடிகிறது.

1996-இல் வெளிவந்த பரம்பரை படத்தில் ஆற்றில் திருநங்கையொருவர் குளிக்கும் போது அங்கேவரும் கவுண்டமணியைப் பார்த்து ஏய் ரொம்ப அழகா இருக்க வா என்று அவரைத் திருநங்கை கூப்பிடுவதாகக் காட்சிப்படுத்திருக்கிறார்கள். அப்போது அவரை கவுண்டமணி எடுடா கைய எடுடி கைய, எடுடான்னு சொல்றதா, எடுன்னு சொல்றதா என்று கூறுவார். பாக்யராஜ் நடிப்பில் 1996-இல் வெளிவந்துள்ள ஞானப்பழம் திரைப்படத்தில் மருத்துவமனைக்கு பாக்ய்ராஜை பார்க்க வரும் செந்தில், கவுண்டமணியை வெளியே அனுப்ப வேண்டும் என்பதற்காக திருநங்கையை பயன்படுத்துவதாக காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த ஹாஸ்பெட்டல்ல எதுக்காக உங்க ரெண்டு பேரையும் வச்சிருக்காங்க எனும் பாக்யராஜிக்கு எங்களுக்கு யாரையாவது புடிச்சிடிச்சுன்னா கற்பழிச்சிடிடுவம்…இதுவரைக்க்கும் ஒன்பது பேரை கற்பழிச்சி இருக்கம் என்று திருநங்கையரைப் பற்றி மிக மோசமானவர்களாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

1999-இல் வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தில், வையாபுரி முதலில் பெண்தன்மையுள்ள ஆணாக விஜயின் நண்பர் வட்டத்தில வலம்வருபவர், இடையில் காணாமல் போகும் கல்யாணசுந்தரம் என்ற அவர் கல்யாணி என்ற கல்லூரி மாணவியாக வருவார். திருநங்கைகளுக்குச் சட்டரீதியாகப் பாலின அடையாளச் சிக்கல் இருக்கும். இந்தியச் சூழலில் எளிதாகப் பெண்ணாக மாறிவிட்டதாகவும், கல்லூரி செல்வதாகவும் அவரைக் காட்சிப்படுத்தியிருப்பது எதார்த்தமாக இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.

வசந்த் இயக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜின் சிறப்பான நடிப்பில் 2000-இல் வெளிவந்த திரைப்படம் அப்பு. இதில் பிரகாஷ்ராஜ் மகாராணி என்ற திருநங்கை வேடத்தில் நடித்திருப்பார். கதைப்படி மகாராணி என்னும் திருநங்கை பெண்களை அடக்கி வைத்து விபச்சாரம் செய்யும் ஒரு காட்சி. இதுவரை சிறிய சிறிய காட்சிகளாகத் திருநங்கைகளைக் கேலிப் பொருளாக மட்டுமே முன்வைத்த தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக முழு நீளக் குற்றவாளிகளாக அவர்களை இத்திரைப்படம் சித்திரிக்கிறது எனலாம். 2000-இல் வெளிவந்த சுதந்திரம் படத்தில் விவேக் பந்தயம் வைக்கும் அம்பெயரப் பாத்தியா 18ல பாதி என்கிறார். 2001-இல் வெளிவந்த ஸ்டார் திரைப்படத்தில் நடுராத்திரியில் வரும் ஜோதிகா எதிரே வரும் திருநங்கையைப் பார்த்து இம்புட்டு நகபோட்டுக்கிட்டு அழகா வரும் என்னப் பாத்தா ஒன்னும் தோனலயா என்று கேட்க ஜோதிகாவிடம் வந்துட்டா ராத்திரியில மினுக்கிக்கிட்டு எனக்கு யாரு கிடைப்பான் என்று திருநங்கை பதில் கூறுவது போலக் காட்சி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

 2006-இல் வெளிவந்த “சில்லுனு ஒரு காதல்” திரைப்படத்தில் மும்பைக்குச் செல்லுமிடத்தில் அங்கு பிரபலமாகவுள்ள விபச்சார விடுதிக்கு நண்பர் ஒருவருடன் ஆர்வத்துடன் செல்கிறார் அப்பாவி வடிவேல். அங்கோ, திருநங்கை இருக்கக் கண்ட அவர் தப்பித்து ஓட முயல்வார். அப்போது அவர் கூறும் வசனம் “டே இங்கப் பூரா அவிங்களாத்தான் இருக்காய்ங்க” என்பதாக இருக்கும். இவ்வாறு தப்பித்து ஓட முயலும் வடிவேலுவை அங்கிருக்கும் மற்ற திருநங்கைகள் வளைத்துப் பிடித்து விடுவார்கள். தொடர்ந்து வடிவேலு “யெப்பா தெரியாம வந்துட்டேன் மன்னிச்சு விட்டுடுங்கப்பா” என்பார். மற்றபடங்களிலாவது திருநங்கையரை அது, இது என்று அஃறிணையிலாவது குறிக்கப்படும் நிலையில் இப்படத்தில் அவிங்க, இவிங்க என்று ஆண்பாலில் குறிக்கப்படுகின்றனர். இவ்வாறு மாட்டிக் கொண்ட வடிவேலுவை அங்குள்ள திருநங்கையர் பணம் தருமாறு மிரட்டுகின்றனர். மட்டுமன்றி, பணம் இல்லை என்று கதறும் வடிவேலுவை “அப்படியில்லைனா, எங்கள மாதிரி நீயும் ஆப்ரேசன் பண்ணி எங்களை மாதிரி சம்பாதிச்சுக் குடுத்துட்டு அப்புறம் போ”…என்று கூறித் துரத்துகின்றனர். ஆக, வேலையின்றி வெட்டியாகத் திரியும் ஒருவராக, திருமணமும் ஆன ஒருவராக, ஒரு அப்பாவியாக மும்பை வந்ததும் விபச்சார விடுதிக்குப் போகும் நபர்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் கொள்ளைக் கூட்டமாக இப்படித் திருநங்கைகளைச் சித்தரிக்கின்றனர். மேலும், திருநங்கைகள் சிறுவர்களைக் கடத்திச் சென்று ஆபரேசன் செய்து அவர்களையும் திருநங்கையாக மாற்றிவிடுவதாக அபத்தச் செய்திகள் நிலவுகிற நிலையில், இவ்வாறு சித்தரிப்பது திருநங்கையரைச் சமூக விரோதிகளாகப் பார்வையாளர்கள் நினைக்கச் செய்துவிடும்.

கெளதம் இயக்கத்தில் 2006-இல் வெளிவந்த வேட்டையாடு விளையாடு எனும் திரைபடம். இதில் வித்தியாசமான குற்றக் காட்சி ஒன்றினைப் பாலியல் வெறி பிடித்த திருநங்கையின் மூலம் அவர் காட்சிப்படுத்துகிறார். படத்தில் வரும் ஒரு காட்சி.
கதைப்படி அந்தப் போலிஸ் ஸ்டேசனுக்கு ஒரு திருநங்கை வாரந்தோறும் தன் காமஇச்சையைத் தீர்த்துக் கொள்ள வருவார். இதில் அந்த ஸ்டேசன் இன்ஸ்பெக்டருக்கும் பங்குண்டு. அதன்படி அந்த வாரமும் வருகிறார். அவரைக் கண்டதும் அதிகாரிக்கு ஒரு விபரீதமான யோசனை வருகிறது. லாக்கப்பில் இருக்கும் இரண்டு கல்லூரி இளைஞர்களையும் வித்தியாசமான முறையில் தண்டிப்பதற்காக அவரை அவர்களது அறைக்குள் அடைக்கிறார். அந்தக் திருநங்கைக்கோ அவ்விரு இளைஞர்களும் லட்டாக அமைகின்றனர். இளைஞர்கள் இருவரும் திருநங்கையைக் கண்டு அலறுகின்றனர், அவரோ அய் இந்தப் பக்கம் சிகப்பு, இந்தப் பக்கம் கருப்பு” என்று முத்தாய்ப்பாய்க் காட்சியை இளைஞர்களின் அலறலோடு முடிப்பார். வேறொரு காட்சியில் இது குறித்துக் கொலைவெறியோடு பேசும் பாதிக்கப்பட்ட கைதிகளில் ஒருவர் ~கோத்தா… அந்த அலியமொத கொல்லனும்னு நெனைச்சுன்…. என்பதாக ஒரு வசனம்.

2007-இல் வெளிவந்த மணிகண்டா எனும் படம் வடிவேலுவைத் திருநங்கையொருவர் போன் மூலம் பெண்போல நடித்து ஏமாற்றுவதாகத் காட்சிப்படுத்துகிறது. மும்தாஜ் எனும் பெயருடைய திருநங்கை வடிவேலுவிடம் ”எங்க அண்ணா ஆஸ்பத்திரியில இருக்கான் என்று சொல்ல அதற்கு வடிவேல் யேங் என்று கேட்க ஒம்பதாவது படிக்கும் ஒம்பது பசங்களுக்கு டியூசன் எடுத்துக்கிட்டு இருந்தான். அப்போது ஒம்பதாவது மாடியில இருந்து கீழே விழுந்து ஒம்பது இடத்துல காயம் ஒம்பதாம் நெம்பர் வார்டுல சேர்த்திருக்கம், ஆபரேசன் பன்ரத்துக்கு ஒம்பதாயிரம் ரூபாய் கேட்கறாரு டாக்டரு என்பதைக் கேட்டு என்ன எல்லாம் ஒம்பதாவே இருக்கு என்று கேட்கும் வடிவேலுவிற்கு அது எங்க பேமிலி நியூமராலஜி நெம்பரு என்று கூறுவதைக் காணமுடிகிறது.

இயக்குநர் ஷங்கரின் 2015-இல் வெளிவந்த ஐ படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமான காட்சிகளைக் காணமுடிகிறது. ஐ திரைப்படத்தில் திருநங்கையை அறிமுகப்படுத்திய முதல் காட்சியே கிண்டலுடன் ஆரம்பிக்கிறது. “ஊரோரம் புளியமரம்” என்ற பாடலுடன் கதாநாயகனும் அவன் நண்பனும் சேர்ந்து கிண்டல் செய்துள்ளனர். திருநங்கைக் கதாப்பாத்திரம் ஏதோ உடல் பசிக்கு மிகவும் அலைவது போல விரசமாகப் பெண்களே முகம் சுளிக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருநங்கை காதலை வெளிப்படுத்தி அதை மிகவும் அருவருக்கத்தக்க விசயம் போலக் கதாநாயகன் வெளிபடுத்துவதும்” என்ன எழவுடா, என்ன கருமாந்திரம்… ஏன் எச்சை பண்ற” என்று இது போன்ற வசனங்களுடன் அடுத்தடுத்துக் காட்சிகள் அமைவதும் திருநங்கையரின் காதல் உணர்வை காயப்படுத்தியுள்ளன. திருநங்கை அட்மிட் ஆன வார்டு எண் 9 என்று காண்பிக்கின்றனர்.

திருநங்கையரைத் திரைப்பாடல்களில் கேலிப் பொருளாக்குதல்

தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கையர் வசனக் காட்சிகள், காமடிக் காட்சிகள் மட்டுமல்லாது, பாடல் காட்சிகளிலும் கேளிப்பொருளாக்கி பார்த்துள்ளனர். உதாரணமாக 1980-இல் வெளிவந்த  டி. ராஜேந்தரின் ஒரு தலை ராகம் படத்தில் ‘கூடையில கருவாடு கூந்தலில பூக்காடு’ எனும் பாடலில் திருநங்கையர் கேலிபடுத்தப்படுகின்றனர். 1992-இல் வெளிவந்த சின்னப் பசங்க நாங்க திரைப்படத்தில் ‘கோவனத்த இறுக்கிக் கட்டு மச்சான் கூடநின்னுப் பாட்டு படிப்போம்’ எனும் பாடலில் கேலிபடுத்துகின்றனர். 1997-இல் வெளிவந்த காலமெல்லாம் காத்திருப்பேன் திரைப்படத்தில் ‘அஞ்சாம் நெம்பர் பஸ்ஸுல ஏறி தந்தானக்குயிலே’ எனும் பாடலில் கேலி செய்வதைக் காணமுடிகிறது. 2003-இல் வெளிவந்த திருடா திருடி படத்தில் ‘வண்டார் குழலி வண்டார்குழலி செவ்வாய்ப் பேட்டை டோய்’ எனும் பாடலில் திருநங்கையரைக் கேலிப்பொருளாக்குகின்றனர். 2005-இல் வெளிவந்த திருப்பாச்சி திரைப்படத்தில் ‘அப்பன் பன்ன தப்புல’ எனும் பாடலில் திருநங்கையரை பத்துக்குள்ள ஒன்ன வெட்டு….எட்டுக் கூட ஒன்னுக் கூட்டு…என்று கேலிப்படுத்துகின்றனர்.

மருத்துவத்துறையில் நடக்கும் திரைமறைவுப் பொருளாதார-அரசியலை முதன்முறையாகப் பேசிய ஈ பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன். 2006- இல் வெளிவந்த இப்படத்தில் ‘தீப்பொறி பறக்கும்’ எனும் பாடலில் திருநங்கையரை ஓரமாக ஆடிவிட்டுப் போகும்படிக் காட்டியுள்ளார். 2007- இல் வெளிவந்த அமீரின் பருத்திவீரன் திரைப்படத்தில் ‘ஊரோரம் புளிய மரம்’ எனும் பாடலில் கேலிப்படுத்தப்படுகின்றனர். 

இவைபோன்ற இன்னும் சில திரைப்பட பாடல்களில் திருநங்கையரை கேளிப்பொருளாகவும், அருவருக்கத்தக்கவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

தமிழ்த் திரைப்பட சித்தரிப்பில் திருநங்கையர் பற்றி ஒட்டுமொத்தமாக நோக்கும்போது 1977-இல் வெளிவந்த பாலபிஷேகம் தொடங்கி 2017-இல் வெளிவந்த சிவப்பு எனக்குப் பிடிக்கும் படம் வரை திருநங்கையரைப் பற்றி சித்தரிக்கும் படங்களில் பெரும்பாலான படங்கள் அவர்களை நல்ல முறையில் காண்பிக்கவில்லை என்பதை மேற்கண்ட திரைப்படங்கள் மூலம் தெள்ளத் தெளிவாகக் காணமுடிகிறது.  பாடல்களில் திருநங்கையர் காட்சிப்படுத்தும் இடங்கள் அனைத்திலும் வேடிக்கைப் பொருளாகவும், நகைச்சுவைக்காகவுமே இவர்களை காட்சிப்படுத்தியுள்ளனர் என்பதை தெரிந்துகொள்ளமுடிகிறது. மேலும், திரைப்படங்களில் திருநங்கையரைக்  காட்சிப்படுத்தும் பாடல்கள் அனைத்தும் அவர்களை நகைச்சுவைக்காவும், பொழுது போக்குக்காகவும் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர் என்பதை தெரிந்துகொள்ளமுடிகிறது.

குடும்பத்தாலும், ஒட்டு மொத்தச் சமூகத்தாலும் பொது வாழ்க்கையிலிருந்து புறக்கணிக்கப்பட்டுச் சகமனித அங்கீகாரமின்றிப் பொதுத் தளத்தில் வாழ வழியுமின்றிச் சோத்துக்கு வழியில்லாமல் கடைக்கோடியில் நின்று பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் திருநங்கைகள். அப்படிப்பட்டவர்களின் பிரச்சனை, அவர்களின் தேவை என்ன என்பது குறித்த எந்தவொரு அக்கறையுமின்றி, கேலிக்காக மட்டுமா பயன்படுத்தி வருகிறது தமிழ் சினிமா. இதைக் கண்டு வளரும் தலைமுறையும் இத்தகைய சிந்தையோடே வளர்ந்து திருநங்கைகள் மீதான தனது வன்முறையையும் நிலைநாட்டுகிறது.

இனிவரும் காலங்களில் தமிழ்த் திரைப்படங்களில் மாற்றம் வரவேண்டும். தமிழ்த் திரையுலகமே! தங்களின் வியாபாரத்திற்கு திருநங்கைகளை பலிகடா ஆக்காதீர்.  அவர்களும் நம்முடன் வாழும் மனிதர் என்பதை புரிந்து நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.