ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

 உழவுமாடுகள் சிறுகதைத் தொகுப்பில் பெண்களின் பிரச்சனைகள்

முனைவர் த.அமுதா, கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, வேலூர் - 2 31 Oct 2019 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்
    பெண்களுக்குப் பொருளாதாரச்சுதந்திரம் இருந்தால் அவர்கள் யாரையும் எப்பொழுதும் சார்ந்து வாழவேண்டிய அவசியமில்லை என்ற சிந்தனை ஏற்பட்ட பிறகு, ‘வீட்டிற்குள்ளே பெண்ணைப்  பூட்டி வைப்போம்’ என்ற விந்தை மனிதர்கள் தலைகவிழ்ந்து, பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்த பின் அவர்கள் வீட்டுவேலைகள் அலுவலகப் பணிகள் என இரட்டைச் சுமைகளைச் சுமக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அலுவலகம், இல்லம் என இரு இடங்களிலும் பணி செய்து வாழும் பெண்களின் அவலநிலையைச் சிறுகதைத் தெகுப்பில்  சித்தரிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திறவுச் சொற்கள்
உழவு மாடுகள், பெண்களின் சிக்கல்கள், பெண் கொடுமை, பாலியல் சிக்கல், சிறுகதைத் தொகுப்பு

பால் வன்முறை 
    பெண்களுக்கு இழைக்கப்படும் சமுதாயக் கொடுமைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குவது பால் வன்முறையாகும். பாலியல் ஒடுக்கமுறையின் மிகக் கொடூரமான ஒரு முகம் பால் வன்முறையாகும். பெண்ணைப் பாலில் வன்முறையினாலேயே ஆணாதிக்கம் அடிமை கொண்டுள்ளது.1 என அரங்க மல்லிகா குறிப்பிடுவர்.
    குடும்பம், பொருளாதாரம், அரசியல் மற்றும் பாலுறவு போன்றவற்றில் ஆண்கள் தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பப் பெண்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். தந்தை வழிச் சமுதாயம் வன்முறையாலேயே காக்கப்பட்டுள்ளது. ஆண்கள் தங்களுடைய சக்தியையும், மேலாண்மையையும் நிலை நிறுத்திக் கொள்ள பெண்களை வன்முறைக்கு ஆளாக்குகிறார்கள். எனவே, அடக்கு முறையின் ஒரு வடிவம் கற்கழிப்பு அல்லது பாலியல் வன்முறை ஆகும்.2 என பிரேமா குறிப்பிடுவர்.  வன்முறை என்று சொல்கிறபோது அதனை அடிதடி, கொலை, துப்பாக்கிச் சூடு போன்றவற்றுடன் மட்டுடே தொடர்புபடுத்துகிறோம். உண்மையில் இது வன்முறையின் ஒரு முகம் மட்டும்தான். வன்முறைக்குப் பல தளங்களும் பல செறிவு நிலைகளும் உள்ளன என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் அது புலப்படும். கூடவே சகிப்புத் தன்மை இல்லாமை, சிந்தித்துப் கோபம், பொறுமையின்மைபோன்ற நிலைகளும் வன்முறைக் குணங்களுடன் நேரடியாக உருவானவையே ஆகும்.3
    சிறைச்சாலைகள், காவல் நிலையம், இராணுவம், அரசு என்பன எல்லாம் நிறுவன மயப்படுத்தப்பட்டுள்ள வன்முறைகள் என்பதை நாம் விளக்கிக் கொள்ள வேண்டும். அதிகாரம் என்பது இத்தகைய நிறுவன மயப்பத்தப்பட்டுள்ள வன்முறைகளுடாகவே தன்னை வெளிப்படுத்துகிறது. ஆள்கிறது. இந்த அதிகாரம் கீழ்ப்படிவையும், ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் கோருகிறது4 என சேரன் விளக்கமளிக்கிறார்.
    பெண்ணின் உடல், மனது, கண்ணியத்தோடு வாழ்வதற்கான மனித உரிமைகள் ஆகியவற்றின் மீது தொடுக்கப்படும் வன்முறைத் தாக்குதலே வன்புணர்ச்சி. ஆக்கிரப்பு, உணர்வு, வன்முறை மிரட்டல் போன்ற உணர்வுகளின் வெளிப்பாடான இச்செயல் ஒரு பெண்ணைச் சிறுமைப்படுத்திப் புழவாய் நெளியச் செய்கிறது5 என மைதிலி சிவராமன் குறிப்பிடுகிறார். பெண்களின்  பிரச்சனைகளை மிக துல்லியமாக உழவு மாடு சிறுகதைத் தொகுப்பில் கீழ்காணுமாறு விளக்குகிறார் “அன்பு” சாவித்ரி, “உன் கோலம் இப்படி. ஆனதில் என் மனம் படும்பாடு சொல்லி மாளாது.6 மேலும், பெண்கள் வன்முறைக்கு ஆள்வதை ஷீபா அவர்கள் விளக்குகிறார் “என்னடி மரியாத குறையுது, ஏதோ போனா போகட்டுமன்னு உன்னையும் வச்சுக்கலாமன்னு பாத்தா ஒரேடியா பேசுற. இதப்பாரு எனனை விட்டு நீ போயிட்டா நஷ்டம் எனக்கில்ல உனக்குத்தான் தெரிஞ்சுக்கோ”7
பாலியல் சிக்கல்
    “குழந்தை உற்பத்திக்கும், குழந்தை வளர்ப்பிற்கும் நிலைத்த இடம் நல்கி, தேவையான அளவிற்குச் சரியான முறையில் பாலியல் உறவால் வரையறை செய்யப்பட்ட ஒரு குழுவே குடும்பம்”8 எனக் குடும்பம் என்பதற்கும் சமூகவியலாளர்கள் விளக்கம் அளிக்கிள்றனர்.
    “பாலியல் உயர்வு வாழ்வின் அடிமட்டத்தில் படிந்துள்ளது. பாலியலை எப்படிப் புரிந்து கொள்வது என்பதை நாம் தெரிந்து கொள்ளாதவரை, நாம் ஒரு போதும் வாழ்க்கையை மதித்துப் போற்றக் கற்றுக் கொள்ளப் போவதில்லை: என்கிறார் பாலியல் துறை அறிஞர் ஹேவ்க் எல்லீஸ்.9
    பருவம் வரப்பெற்ற ஆணுக்கும், பெண்ணுக்கும் மனதில் பாலியல் உறவைப் பற்றிய சிந்தனை இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், முறையான பாலியல் அறிவு இல்லாத காரணத்தாலும், பாலியல் உணர்வு சரியான முறையில் செறிப்படுத்தப்படாததாலும் பலருடைய இல்வாழ்க்கை சிதைந்து போகிறது10 என்று ஜெயகாந்தன் கூறுவதுபோல் இச்சிறுகதையில் பூமா வாழ்வு சிதைந்து போவதை ஆசிரியர் இயல்பாகவே வெளிக்காட்டி “புற்றிலிருந்து தலையை மட்டும் நீட்டி நீட்டிப் பார்க்கும் பாம்பை ஒரு இருளன் எவ்வளவு நுணுக்கமாக எப்படி இரண்டு விரலால் கழுத்தைப் பிடித்து வெளியே இழுத்து அதன் உயிரை பறிப்பானோ அதேப்போல் பூமாவின் வாழ்க்கையும் சின்னாபின்னமாக்கப்படுகிறது. இதை “:நானென்ன குமரியா, இப்படி வெறி பிடித்து அலையுறானுகனே! பாவிக!”11 என்று சொல்வதின் மூலம் பெண்கள் பாலியல் பிரச்சினைகளுக்கு ஆள்வதை குறிப்பிடுகிறார் ஆசிரியர்

வறுமை
    வன்முறைக்கு முதலிடம் வகிப்பது வறுமையே. வறுமையின் காரணமாக எத்தனைப் பெண்கள் வீட்டைவிட்டு ஒடி வருகின்றனர். இடம் விட்டு இடம் பெயர்ந்தால் அவர்களுக்கு எவ்விதக் கொடுமைகள் நேர்கின்றன என்பதை இச்சிறுகதைத் தொகுப்புச் சுட்டுகிறது. “அடுத்த வேளைக் கஞ்சிக்கு நாலு தெரு சுத்தவேண்டும்”12 என்று  ஆசிரியர் வறுமையை சுட்கிறார். எத்தனை தலைமுறைகள் கழிந்தாலும், கிராமப்புறங்களில் ஆணாதிக்கமும், பெண்களை ஆண்கள் பல்வேறு வகை சுயநலன்களுக்காகப் பயன்படுத்துவதும் ஓயாது”13 இதே கருத்தை உழவுமாடுகள் சிறுகதைத் தொகுப்பில் ஷீபா விளக்குகிறார். “நமக்குப் புருஷன் துரோகம் பண்ண மாட்டான் என்கிற அசாத்திய நம்பிக்கை”14 எனடனும் கருத்து வன்முறைக்கு ஏதுவாக அமைகிறது.
    உழவு மாடுகள் சிறுகதைத் தொகுப்பில் பாடுபொருளாகப் பெண்கள் படும் வேதனை, துன்பம், ஆண்கள் கொடுமைக்காரர்கள் என்பதாக உள்ளன. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகளின் அடிக்கருத்து வருமாறு

காதிதக் கப்பல்
    வேலைக்குச் செல்லும் பெண் பதவி உயர்வுத் தேர்விற்காக மகனின் ஆசைகளைப் புறக்கணித்துப் படிக்கிறாள். பதவி உயர்வை விட மகனின் இன்பம் முக்கியம் என்று முடிகிறது கதை. கணவர் இருக்கிறாரா? இல்லையா? என்பது காட்டப்பட்வில்லை.

கற்பூரச் செத்தைகள்
    மலைவாழ் மக்களின் நிலையைப் பின்னணியாகக் கொண்டது. மனைவியைச் சந்தேகப்படுகிறான் கணவன். அவன் இறந்த பிறகு உண்மையை உணர்கிறான்.

தணல் துண்டாய்ச் சில தருணங்கள்
    கணவனின் கொடுமை தங்காமல், வேறு பெண்ணுடன் தொடர்பு என்று விவாகரத்து பெற்றுக் குழந்தையுடன் பிரிந்து செல்கிறாள். கணவன் வேறு பெண்ணுடன் செல்கிறான்.

என்று தணியும் எங்கள் தாகம்
    பீடி சுற்றும் தொழிலர்களின் குடும்பத்தின் வறுமைநிலை. வன்முறைப் போராட்டத்தில் பெண்களைச் சீரழிக்கும் அவலம். “நானென்ன குமரியா, இப்படி வெறிபிடித்து அலையறானுகளே பாவிக!” என்பது வன்முறையின் கொடுமையை வெளிப்படுத்துகிறது.

பெண்மனம்
    கணவன் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளான் என்பதைத் தெரிந்து கொண்டதும் தாய் வீட்டிற்குச் சென்றுவிடுகிறாள் தலைவி. கீரை விற்கும் பொன்னம்மாவின் கணவனும் தவறு செய்கிறான், பிரிகிறாள் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வதாக் கூறுகிறாள். பொன்னம்மாள் படிக்க நடுத்தரவ வர்க்கம். நீதிமன்றம் சென்று விவாகரத்துப்பெற முயல்கிறாள். கீழ்தட்டில் வாழ்பவள் மன்னிப்பதாகக் கூறுகிறாள். இருவேறு நிலையை இக்கதை காட்டுகிறது.

அடக்குமுறை
    கணவனின் கண்டிப்பை மீறி வீதியில் வலிப்பு நோயால் துடிக்கும் ஒருவருக்கு உதவி செய்கிறாள். கணவனுக்குக் கட்டுப்பட வேண்டியதற்குத்தான் கட்டுப்படுவேன் மற்றவர்களுக்கு உதவி செய்வது என் உரிமை என்கிறாள்.

இன்றைய கண்ணகி
    கணவன் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளான் என்பதால் பிரிந்து செல்கிறாள் மனைவி. பின்னர் திருத்தி, திரும்பி வரும் கணவனை ஏற்க மறுக்கிறாள். கோவலனை ஏற்றுக் கொண்டாள் கண்ணகி அன்று. கணவனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள் மனைவி இன்று.

சின்னச் சின்ன இழை
    தாய், மகள் புகுந்த வீட்டில் பட்ட பாட்டையும் வேதனையையும் வெளிப்படுத்துகிறது. இக்கதையில் பட்டுப்புடவை முதன்மை இடம் பெறுகிறது. கதைமாந்தர் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தென்றல் நகர் வீடு
    இலங்கைப் போரின் காரணமாக அகதியாகத் திருச்சி வந்த ஓர் ஈழந்தமிழரின் குடும்பத்தில் மாமியார் மருமகளை மட்டமாக நடத்துகிறாள்.

தவறுகள் திருத்தப்பலாம்
    விதவைத் தாய் சூழ்நிலையால் ஒருவருடன் பழக நேருகிறது. பின்னர் திருந்தி வாழ்கிறாள். தவறு செய்த பெண் அதிலேயே அடங்கி விடமால் திருந்தி வாழவேண்டும் என்பதே கதை.

ஒரு தேடலின் முடிவில்
    ஒரு தாய் தன் மகனுக்கு நேர்ந்த விபத்தியால் மனம் வருந்துகிறாள். தோழியைச் சந்தித்து ஆறுதல் பெற முயல்கிறாள். தோழி கணவன் இறந்த வேதனையில் இருக்கிறாள். துன்பம் இன்பம் இரண்டையும் இறைவனிடம் விட்டுவிட்டு நாம் வாழ்வோம் என்பதுதான் கதை.

படிப்பே படிக்கட்டுகளாகி
    தொடர்ந்து படிக்கவேண்டும் என்பதற்காக வயதுக்கு வந்து விட்டதை. தன் தாயிடம் சொல்லாமல் மறைக்கும் அவலம் வெளிப்படுகிறது.

மெல்லச்சாகும்
    ஆங்கில மோகம் கொண்டு அலையும் பெற்றோர்களால் பிள்ளைகள் படும்பாட்டை விவரிக்கிறது.

சின்னூ
    இளவயதில் விதவையானவுடன் மறுமணம் செய்துகொள்ள மறுக்கிறாள். வயது முதிர்ந்த நிலையில் மறுமணம் செய்து கொள்கிறாள். கடிதத்தின் வாயிலாக இக்கதை எழுதப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

வடிந்தால் தீபாவளி
    கேரளாவிலிருந்து கோவையில் குடியேறிய குடும்பம் தீபாவளி கொண்டாடுவதில்லை. வடமாநிலத்தில் வாழும் அத்தை, இடத்திற்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியதும் ஏற்றுக் கொள்கிறாள் என்பதாக் காட்டுகிறது.

    இவ்வாறு இச்சிறுகதைத் தொகுப்பில் பெண்களின் அவலங்களை வெளிப்படுத்தியுள்ளன. அதில் தவறு செய்யும் கணவனுடைய மனைவி வாழ முடியாமல் பிரிவு என்பதாகப் பெரும்பான்மையான கதைகள் காட்டுகிறது.
    ஒரு பெண், மகளாகத் தந்தையைச் சார்ந்தும் பின் மனைவியாகத் தன் கணவனைச் சார்ந்தும், பின் தாயாகத் தன் மகனைச் சார்ந்தும் வாழ வேண்டியவள் என்பது பழைய கருத்து, ஒரு பெண்ணுக்கு தந்தை, தமையன், கணவன், மகன், கொழுந்தன், மாமனார் ஆகியோர்களினால் பிரச்சினை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முடிவுரை
    இச்சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கதைகள் ஆண்கள் கொடியவர்கள், பெண்களுக்கு எதிரானவர்கள் என்பதை விளக்க முயல்கிறது. இது வருங்காலத்தில் பெண்களிடையே ஆண்களுக்கு எதிரான கருத்தை உருவாக்கும் என்பதைப் பெண்ணியம் பேசும் சிந்திக்க வேண்டும் என்பது எமது கருத்து.

அடிக்குறிப்புகள்
1. பிரம்மராஜன் ஆர், சிவக்குமார், ஒளவை மண்ணில் பெண் எழுத்தாளர்கள், ப.92
2. பிரேமா, இரா., பெண்ணியம்,ப.83
3. சேரன், உயிர்கொள்ளும் வார்த்தைகள்,ப. 208
4. மேலது,ப.209
5. மைதிலி சிவராமன், பெண்ணுரிமை சில பார்வைகள், ப.16
6. தொகுப்பு ஞானி, உழவு மாடுகள், ப.122
7. மேலது, ப.59
8. சிவக்கண்ணு, மு.வ. வின் நாவல்களின் சமுதாயச் சிக்கல்கள்,ப.69
9. மேலது,ப.69
10. மேலது,ப.69
11. தொகுப்பு ஞானி, உழவு மாடுகள், ப.50
12. மேலது,ப.55
13. பூமணி. ஆனந்தவிகடன், கருவேல்பூக்கள் விமர்சனம்
14. தொகுப்பு ஞானி, உழவு மாடுகள், ப.53