ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அகநானூறும் அகநானூற்று முழுமுதல் உரையும்

முனைவர் வாணி அறிவாளன், துணைப் பேராசிரியர், தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம். சென்னை 23 Jan 2020 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்:

            பதினெண்மேற்கணக்கு இலக்கியங்களுள், மற்றவற்றைவிட அகநானூற்றினைச் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கவும், அகநானூற்றுச் செய்யுள்களுக்கு உரை எழுதவும், அறிஞர்கள் மேற்கொண்ட ஆர்வமும், உழைப்பும், முயற்சியும் மிகக் கூடுதலாகவே அமைந்தன. ‘அகநானூறும் அகநானூற்று முழுமுதல் உரையும்’ என்ற தலைப்பிலான இக்கட்டுரையில், அந்தவகையில், அகநானூற்றின் தனிப்பெருஞ்சிறப்புகளையும், அந்நூலுக்கான பதிப்பு முயற்சிகளையும் கூறுவதோடு, அகநானூற்றின் முழுமுதல் உரையாக விளங்கும், ந.மு.வேங்கடசாமிநாட்டார், கரந்தைக் கவியரசு இரா.வேங்கடாசலம்பிள்ளை ஆகியோர்தம் உரையான சைவ சித்தாந்த  நூற்பதிப்புக் கழக உரையைப் பற்றிய மதிப்புரையையும் நல்குவதே இக்கட்டுரையின் நோக்கங்கள்.

திறவுச் சொற்கள்:

அகநானூற்றுச் சிறப்புகள் – அகநானூற்றுப் பதிப்பு முயற்சிகள் – அகநானூற்று முழுமுதல் உரை – முழுமுதல் உரையின் அமைப்பும் சிறப்புகளும்.

 

     உலகின் மூத்த மொழிகளுள், உயர்தனிச் செம்மொழியாகத் திகழும் தமிழுக்குப் பெருமை சேர்ப்பவை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப்பெறும் சங்க இலக்கியங்கள் ஆகும். பல்வேறு காலங்களில், வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழ்ந்த பல புலவர்கள் பாடிய செய்யுள்களைக் கடைச்சங்க காலத்தில் முயன்று, தேடித் தொகுத்தனர். அவ்வாறு அரசர்களால், புலவர்களைக் கொண்டு தொகுப்பிக்கப்பெற்ற இலக்கியங்களுள், தலைமக்களின் காதல் உள்ளங்களில் எழுந்த அக உணர்வுகளைச் செய்யுள்களாக வடித்த பாடல்களின் தொகுப்பு அக இலக்கியங்களாகவும், அரசியல் சார்ந்த புற நிகழ்வுகளைப் பாடியவை, புற இலக்கியங்களாகவும் அமைந்துள்ளன. அவற்றுள், அகம் என்ற பெயரையே கொண்டு, நானூறு செய்யுள்களின் தொகுப்பாக விளங்கும் அக இலக்கியம், அகநானூறு ஆகும். பதினெண்மேற்கணக்கு இலக்கியங்களுள், மற்றவற்றைவிட அகநானூற்றினைச் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கவும், அகநானூற்றுச் செய்யுள்களுக்கு உரை எழுதவும், அறிஞர்கள் மேற்கொண்ட ஆர்வமும், உழைப்பும், முயற்சியும் மிகக் கூடுதலாகவே அமைந்தன. அந்தவகையில், அகநானூற்றின் தனிப்பெருஞ்சிறப்புகளையும், அந்நூலுக்கான பதிப்பு முயற்சிகளையும் கூறுவதோடு, அகநானூற்றின் முழுமுதல் உரையாக விளங்கும், ந.மு.வேங்கடசாமிநாட்டார், கரந்தைக் கவியரசு இரா.வேங்கடாசலம்பிள்ளை ஆகியோர்தம் உரையான சைவ சித்தாந்த  நூற்பதிப்புக் கழக உரையைப் பற்றிய மதிப்புரையையும் நல்குவதே இக்கட்டுரையின் நோக்கங்கள்.

 

நூலமைப்பும் சிறப்பும்:

 

எட்டுத்தொகையின் அக இலக்கியங்களுள் 13 முதல் 31 வரையிலாகக் கூடுதல் அடிகளைக் கொண்ட தொகுப்பாக விளங்குவதால், இந்நூல் நெடுந்தொகை என்றும் அழைக்கப்பெறுகிறது. அகப்பொருளின் கூறுகளாகிய முதல், கரு, உரிப்பொருள் ஆகிய முக்கூறுகளும் அமையப்பெற்ற செய்யுள்களாலான அகநானூற்றினைத் தொகுப்பித்தவன், பாண்டியன் உக்கிரப்பெருவழுதி; தொகுத்தவர், மதுரை உப்பூரிக்குடிக் கிழார் மகனார் உருத்திரசன்மனார். இத்தொகை நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்தைப் பாடியுள்ளார்.

     அகநானூறு, மற்ற அக இலக்கியங்களைப் போலல்லாமல், திணைக்கட்டமைப்பில், தனக்கெனத் தனிச்சிறப்புகளைக் கொண்டு விளங்குகிறது. களிற்றியானை நிரை(1-120), மணிமிடைபவளம் (121-300), நித்திலக்கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள அகநானூற்றில், பாடல் வரிசை எண்களை அடிப்படையாகக் கொண்டு ஐந்திணைப் பாக்களும் செம்மையாக வரிசைமுறையில் தொகுக்கப்பெற்றுள்ளன. அதாவது, பாடல் வரிசை எண்களில் 1,3, 5, 7, 9 என்னும் எண்ணில் முடியும் 200 பாடல்கள் பாலைத்திணையினவாகவும், 2, 8 என்னும் எண்ணில் முடியும் 80 பாடல்கள் குறிஞ்சித்திணையினவாகவும், 4 என்னும் எண்ணில் முடியும் 40 பாடல்கள்  முல்லைத்திணையினவாகவும், 6 என்னும் எண்ணில் முடியும் 40 பாடல்கள் மருதத்திணையினவாகவும், 10 என்னும் அடுக்கு எண்ணில் முடியும் 40 பாடல்கள் நெய்தல்திணையினவாகவும் அமைக்கப்பெற்றுள்ளன. இதனை

       ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது

 நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை - அன்றியே

 ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு

 கூறா தவைகுறிஞ்சிக் கூற்று

எனப் பழம்பாட்டு ஒன்று எடுத்தியம்பியுள்ளது. அகநானூற்றின் நானூறு செய்யுள்களை, 145 புலவர்கள் பாடியுள்ளனர். அவர்களுள் 65 புலவர்கள், அகநானூற்றில் மட்டுமே பாடியவர்கள் ஆவர். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் என எந்தவிதப் பாகுபாடுமின்றிப் பலரும் பாடியுள்ளமை, அப்புலவர்தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.

     அகநானூற்றில்,   பழந்தமிழகம் பற்றியும், பழந்தமிழர் பற்றியுமான பல அரிய செய்திகள் பதிவாகியுள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன், சங்ககாலத் தமிழர்களின் திருமணங்கள் எப்படி நிகழ்ந்தன என்பதனைக் காட்சிப்படுத்தும் விதமாக இரண்டு பாடல்கள்(86,136), உள்ளன. நல்லாவூர் கிழார், விற்றூற்று மூதெயினனார் என்ற இரு புலவர்பெருமக்கள் பாடியுள்ள அவ்விரு பாடல்களிலும் காட்டப்பெற்றுள்ள பழந்தமிழ்த் திருமணத்தில் ஆரியச் சடங்குகள், ஐயர், தாலி முதலானவை இடம்பெறவில்லை; பொருள் புரியாத வடமொழி மந்திரங்களோ அல்லது எரி ஓம்பலோ இல்லை; இன்று தமிழர் மேற்கொண்டுவரும் தீவலம், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல் முதலான மூடப்பழக்கங்களும் இல்லை. நல்லநாள் பார்த்துச் சுற்றத்தார் சூழத் திருமணம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. வீட்டு முற்றத்தில் திருமணப் பந்தலிட்டு, வெண்மணல் பரப்பிப் பூச்சரங்களைத் தொங்கவிட்டு அழகுசெய்யும் நிகழ்வுகள் இன்றும் தமிழரிடையே பின்பற்றப்பெற்று வருகின்றன.

     பழந்தமிழ்த் தலைமக்கள், தம்மிடையேயான காதல் உணர்வுகளை குறிப்புடனும், நயமுடனும் வெளிப்படுத்திய பாங்கினைப் பல பாக்கள் காட்சிப்படுத்தியுள்ளன. அகநானூற்று முல்லைத் திணைப்பாடல் ஒன்றில்(34), தம் தலைவனின் வரவை எதிர்நோக்கியிருந்த திருமணமான நாணுடைத் தலைமகள், தன் மனவிருப்பத்தை, இல்லவர் அறியாதவாறு மெதுவாகக் கிளியுடன் பேசி வெளிப்படுத்திய கவித்துவமான காட்சி,

செந்தார்ப் பைங்கிளி முன்கை யேந்தி,

‘இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென’

இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென

மழலை இன்சொல் பயிற்றும்,

நாணுடை அரிவை மாணலம் பெறவே

எனப் பதிவிடப்பெற்றுள்ளது. மேலும் தலைமக்களுக்கிடையேயான அன்பினைப்

     ‘பிரிவின் றியைந்த துவரா நட்பி

னிருதலைப் புள்ளி னோருயி ரம்மே’(12)என்றும்,

யாக்கைக் குயிரியைந் தன்ன நட்பி னவ்வுயிர்

வாழ்த லன்ன காதல்

சாத லன்ன பிரிவரி யோளே(339)

என்றும் புலவர்கள் தெரிவித்துள்ள காதல்மொழிகள், பழந்தமிழ்த் தலைமக்களுக்கிடையே நிலவிய பேரன்பினை எடுத்துக்காட்டுகின்றன. அகப்பொருள் நூலானாலும், பழந்தமிழகத்தில் நிகழ்ந்த பல புறச்செய்திகளையும், வரலாற்றுச் செய்திகளையும் உரைத்துள்ளது. கரிகாற் பெருவளத்தான், தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், ஆட்டனத்தி-ஆதிமந்தி, தித்தன், மத்தி, நன்னன்,  ஆதன், எழினி, ஆட்டனத்தி, அன்னி மிஞிலி, பாணன், பழையன் என ஆட்சியாளர்கள் பலரைப்பற்றிய, எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தெரிவிக்கின்றது. அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு அஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களை யெல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த அரிய வரலாற்றுச் செய்தியும் கூறப்பெற்றுள்ளது(265). வரலாற்றுச் செய்திகள் மட்டுமின்றிப் வணிகச் செய்திகளும், பல புராணச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு பழந்தமிழர்தம் பழக்கவழக்கங்கள், இல்லறக் காட்சிகள், நிலவியற்செய்திகள், வரலாற்றுச் செய்திகள், வணிகச் செய்திகள் எனப் பல செய்திகள், அகநானூற்றுச் செய்யுள்களில் பதிவாகியுள்ளன.

 

 

அகநானூற்றுப் பதிப்பு முயற்சிகள்:

 

ஓலைச்சுவடிகளில் இருந்த சங்க இலக்கியங்களுள், கலித்தொகையானது முதன்முதலில் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களால்(1887) பதிப்பிக்கப்பெற்று அச்சேறியது. அதனைத் தொடர்ந்து பத்துப்பாட்டு- உ.வே.சாமிநாதையர்(1889), புறநானூறு-உ.வே.சாமிநாதையர்(1894), ஐங்குறுநூறு- உ.வே.சாமிநாதையர்(1903), பதிற்றுப்பத்து- உ.வே.சாமிநாதையர்(1904), நற்றிணை-பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர்(1915), பரிபாடல்- உ.வே.சாமிநாதையர்(1918), குறுந்தொகை-தி.சௌரிப்பெருமாள் அரங்கன்(1918) எனப் பதினெட்டு இலக்கியங்களுள், பதினேழும் பதிப்பிக்கப்பெற்று அச்சேறின. அகநானூற்றினை உ.வே.சாமிநாதையர் (1894 முதல்), சி.வை.தாமோதரம் பிள்ளை (1897 முதல்), ரா.இராகவையங்கார் (1903 முதல்), பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் (1908 முதல்) ஆகிய நால்வரும் பதிப்பிக்கப் பெரும் முயற்சிகள் எடுத்தும், அம்முயற்சிகளுள் எதுவும் முழுமையாக நிறைவடையவில்லை. இவர்களால் மேற்கொள்ளப்பெற்ற முழுமையடையாத அந்த அகநானூற்றுப் பதிப்புகளும் தமிழுலகத்திற்குக் கிடைக்காது போனமை வருந்துதற்குரியது.

     1918இல், முதன்முதலாகச் சென்னை-மயிலாப்பூரில் இயங்கிய கம்பர் விலாசப் பதிப்பகத்தின் நிறுவனரான திரு.இராஜகோபாலார்யன் என்பவரால், அகநானூற்றின் முதல் தொண்ணூறு பாட்டிற்கு அமைந்த பழைய உரையுடன், களிற்றியானைநிரை மட்டும் வெளிவந்தது. பின்னர் இப்பதிப்பாசிரியரின் உடல்நலக்குறைவினாலும், தொடர்முயற்சியாலும், அகநானூற்றுப் பதிப்பு, ஐந்து படிநிலைகளில் வளர்ச்சியுற்று, ஆறாவது படிநிலையில் ரா.இராகவையங்காரால் பரிசோதிக்கப்பெற்று, 1933 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆனால் இந்த பதிப்பில் முதல் தொண்ணூறு பாடல்களுக்குப் பழைய குறிப்புரையும், அதனையடுத்த எழுபது பாடல்களுக்குத்(91-160) திரு.வே. இராஜகோபாலார்யன் அவர்களின் உரையும் அமைந்துள்ளன. 161முதல் 400 வரையிலான பாடல்களுக்கு உரையின்றி, மூலம் மட்டுமே பதிப்பித்துத் தரப்பெற்றுள்ளன. ந.சி.கந்தையாபிள்ளை அவர்கள், அகநானூற்றின் மூன்று தொகுதிகளையும், மூன்ற படிநிலைகளில்(1938,1941,1941) வசனநடையாக வெளியிட்டுள்ளார். இவ்வாறு சங்க இலக்கியங்களுள் அகநானூற்றிற்கு மட்டும் தெளிவான உரையுடன் கூடிய முழுமையான பதிப்பு வெளிவராத நிலை நீடித்துவந்தது.

 

 

 

அகநானூற்றின் முழுமுதல் உரை:

 

 திரு.வெ.பெரி.பழ.மு.காசிவிசுவநாதன் செட்டியார் எனும் பெருந்தகை(1898-1986)., பாகனேரி தனவைசிய இளைஞர் தமிழ்ச்சங்கம் என்ற ஒரு அமைப்பை நிறுவி, அவ்வமைப்பின் வழியாக பழந்தமிழ் நூல்கள் பலவற்றைத் தமிழறிஞர்களைக் கொண்டு பதிப்பித்து வெளியிட்டுவந்தார். அகநானூற்றிற்குத் தெளிந்த உரையுடன்கூடிய முழுமுதற்பதிப்பு வெளிவராத குறையைக் களைய விரும்பி, 1943இல் ந.மு.வேங்கடசாமிநாட்டார், கரந்தைக் கவியரசு இரா.வேங்கடாசலம்பிள்ளை ஆகிய இருவரையும் கொண்டு நூல் முழுமைக்கும் உரை எழுதச்செய்தார். அவ்வாறு பதவுரை, விளக்கவுரையுடன் எழுதப்பெற்ற அகநானூற்றின் மூன்று தொகுதிகளையும், மூன்று காலகட்டங்களில்(1943, 1944, 1944) பதிப்பித்து வெளியிட்டார். அகநானூற்றின் இம்முழுமுதல் உரையானது மாற்றங்களின்றிப் பல பதிப்புகளைக் கண்டுள்ளமையும், இவ் உரையைத் தழுவியே, இன்றுவரை அகநானூற்று உரைகள் பல வெளிவந்து கொண்டுள்ளமையும், இவ்வுரையின் சிறப்பை உணர்த்துகின்றன.

     திரு.வெ.பெரி.பழ.மு.காசிவிசுவநாதன் செட்டியார், 1921இல் தொடங்கப்பெற்ற சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சிக்குழுவின் உறுப்பினராகவும், 1948 முதல் 1975 வரை ஆட்சிக்குழுத் தலைவராகவும், 40 ஆண்டுகளுக்கு மேலாக கழகத்தின் இயக்குநராகவும் இருந்து செயல்பட்டுள்ளார். எனவே தாம் முயன்று வெளிக்கொண்டு வந்த பழந்தமிழ் நூல்களைக் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வழியாகவே வெளியிட்டுள்ளார். அந்தவகையில் இவ்வுரையும் கழகவெளியீடாக வெளிவந்தன.

 

உரை அமைப்பும் சிறப்பும்:

 

 அகநானூறு முழுவதையும் தமிழறிஞர்களின் தெளிவான உரையுடன் வெளிக்கொண்டு வந்த திரு.வெ.பெரி.பழ.மு.காசிவிசுவநாதன் செட்டியார், முதற்பதிப்பில் மு.காசிவிசுவநாதன் என்று தம் பெயரிலான பதிப்புரையைத் ‘திருவள்ளுவர் யாண்டு ௧ ௯ ௭ ௬ ஐப்பசி, 25-10-1945’ என்ற நாட்குறிப்புடன் எழுதியுள்ளார். 1968 வரையிலான மறுபதிப்புகளில், இவர் பெயரிட்ட பதிப்புரையைக் காணமுடிகிறது. பின்னர் இவ்வுரை பெரும்மாற்றங்களின்றிப் பதிப்பகத்தாரின் உரையாக வெளிவந்துள்ளது. இந்நூலின் மூன்று தொகுதிகளும், 1943, 1944, 1944 என மூன்று படிநிலைகளில் உரையுடன் பதிப்பிக்கப்பெற்றன என்றாலும், கழக வெளியீடாக அக்டோபர்,1945இல்தான் களிற்றியானைநிரை மட்டும் முதலில் தனிநூலாக வெளிவந்துள்ளது. பின்னர் நவம்.1947, மார்ச் 1954, செப்.1957 எனத் தொடர்ந்து பல மறுபதிப்புகளைக் கண்டுள்ளது.

     பதிப்புரைக்குப் பின்னர் பாட்டு முதற்குறிப்பு அகரவரிசையானது நூலின் பக்க எண்களுடனும், அதனையடுத்து ஆசிரியர்(புலவர்) பெயர்  அகரவரிசையானது பாடல் எண்களுடனும் தரப்பெற்றுள்ளன. நூலுள் கடவுள் வாழ்த்தை அடுத்துச் செய்யுள்கள் உரையுடன் அமைந்துள்ளன. இவ்வுரை, முதலில் திணைப்பெயர், அடுத்துக் கூற்று விளக்கம், பின்னர்ச் செய்யுள், செய்யுளின் கீழ் இயற்றிய புலவர் பெயர், அதனை அடுத்துப் பதவுரை, முடிபு, விளக்கவுரை, மேற்கோள் என்ற வரிசைமுறையில் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. ஒவ்வொரு ஐந்தாவது அடிக்கு நேராகவும் அடியெண் தரப்பெற்றுள்ளது. திரு.காசிவிசுவநாதன் செட்டியார், தம் பதிப்புரையில்,                                                                                                     

செய்யுட்களைப் பதம் பிரித்து, முதலில் தெளிவாகத் தலைப்புக் கொடுத்துப் பின்பு பொருள் செல்லும் நெறிக்கு ஏற்ப முறைப்படுத்திப் பதவுரை கண்டு அதன்மேல் முடிபும்  விளக்கவுரையும் எழுதி உள்ளுறை புலப்படுத்தி, மேற்கோள் இடங்களை விளக்கி, உரிய அடிக்குறிப்புகளுடன் இவ்வுரை தெளிந்து செல்கின்றது.

என உரையின் தன்மைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

  • பதவுரை: செய்யுளடிகளுக்குத் தகுந்த பொருளைப் பதவுரையாகத் தந்திருக்கும் இவ்வுரையானது, அகநானூற்றுப் புலவர்களுக்கு நிகராக உரையாசிரியர்களும் புலவர்களாகவே மாறிக் காலத்திற்கேற்பக் கவிதை கூறினாற்போன்று, மிகுந்த நயமுடனும் தெளிவுடனும் விளங்குகிறது.
  • பழைய குறிப்புரை மற்றும் இராஜகோபாலார்யன் உரைகளில் வடசொற்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்பெற்றுள்ளன. ஆனால் இவ்வுரையில் தனித்தமிழ்ச் சொற்களே மிகக் கவனமாகக் பயன்படுத்தப்பெற்றுள்ளமை போற்றுதலுக்குரிய  குறிப்பிடத்தகுந்த செய்தி.

.கா. அகநா.302 ஆம் செய்யுள்

(சொ-ள்.) 1-8. காதல் அம் தோழி - அன்புடைய தோழியே!’ சிலம்பில் போகிய செம்முக வாழை - மலையில் நீண்ட வளர்ந்த செவ்வாழையின், அலங்கல் அம் தோடு - அசையும் அழகிய இலைகள், அசைவளி உறுதொறும் - அசையும் காற்று மோதுந்தோறும், பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும் - துயில்கொள்ளும் யானையின் பரிய உடம்பினைத் தடவும், நல்வரை நாடனெடு - நல்ல மலைநாட்டினையுடைய நம் தலைவனுடன், அருவி ஆடியும் - அருவி நீராடியும், படுசுனை பல் இதழ நீலம் குற்றும் - பொருந்திய சுனையிலுள்ள பல இதழகளையுடைய நீலப் பூக்களைப் பறித்தும், நறுவீ வேங்கை - நறிய பூக்களையுடைய வேங்கையின்கண், இனம் வண்டு ஆர்க்கும் - தொகுதியாய வண்டுகள் ஒலிக்கும், வெறி கமழ் சோலை - மணம் வீசும் சோலைக்கண், நயந்து விளையாடலும் - விரும்பி விளையாடலும், அரிய போலும் - அரியனவாகும் போலும்;

9-15. இரு கல் அடுக்கத்து - பெரிய கற்களையுடைய பக்க மலையில், என் ஐயர் உழுத - என் தமையன்மார் உழுதவிடத்தே, கரும்பு எனக் கவினிய பெர குரல் ஏனல் - கரும்புபோலத் திரண்டு அழகுற்ற பெரிய கதிரினையுடைய தினை, கிளிபட விளைந்தமை அறிந்தும் - கிளிகள் வந்து வீழ விளைந்ததை அறிந்து வைத்தும்; அறன் இல் யாய் - அறவுணர்ச்சியில்லாத தாய், செல்க என நம் அவண் விடுநள போலாள் - செல்வீராக என நம்மை அங்கப் போக்குவாள் போன்றிலாளாய், கைம் மிக - அழகு மக, சில் சுணங்கு அணிந்த - சிலவாய தேமலை அணிந்த, செறிந்த வீங்கு இள முலை - நெருங்கிப் பெருத்த இள முலைகளை, மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு - மென்மைத் தன்மையுடன் தழைச்சல் கூடிய கூந்தலொடு, பலகால் நோக்கும் - பன்முறையும் நோக்கா நிற்கும்.

  • முடிபு: சொற்றொடரை முடிக்கும் சொற்கள், செய்யுளில் விலகிக் கிடந்தாலும் நெருங்கிக் கிடந்தாலும் பொருள்பொருந்தும்படி ஏற்றுக்கோத்துச் சொல்முடிவுகொள்ளும்முறையே முடிபு எனப்பெறும். சுருங்க அமையப்பெறும் இம்முடிபுப் பகுதி, செய்யுளின் பொருளைச் சுருங்கத் தெளிவாகத் தெரிவிக்கும் வகையில் அமைந்து பயன்தருகிறது.

.கா. மேற்கூறப்பெற்ற(302) செய்யுளுக்கான முடிபு.

(முடிபு)காதல் அம் தோழி! அறன் இல் யாய், இளமுலை கதுக்பொடு கல்கால் நோக்கும்; ஆகலன் ஏனல் கிளிபட விளைந்தமை அறிந்தும் செல்கென நம் அவண் விடு நாள் போலாள்; (இனி, நாம்) நாடனொடு அருவி யாடியும் சுனைக்குற்றும் சோலை நயந்து விளையாடலும் அரிய போலும்.

  • விளக்கவுரை: விளக்கவுரை எனும் பகுதியில், நுட்பமான விளக்கங்களை நல்கியும், தொல்காப்பிய நூற்பாக்களை எடுத்துக்காட்டியும், இலக்கணக் குறிப்பு தந்தும், உள்ளுறைகளைப் புலப்படுத்தியும், மேற்கோள் இடங்களை விளக்கியும் செல்லும் முறை, உரையாசிரியர்களின் திறனாய்வுத் தன்மையை உணர்த்துகின்றன.

.கா. மேற்கூறப்பெற்ற(302) செய்யுளுக்கான விளக்கவுரை.

(வி-ரை.) ஆடியும் குற்றும் சோலை விளையாடல் என்க. ஈண்டு அருவியாடுதல் பொழில் விளையாட்டில் அடக்கப்பட்டது. விளையாடலாவது 1'யாறுங் குளனுங் காவும் ஆடிப் பதியிகந்து’ வருதல்; 2'செல்வம் புலனே புணர்வு விளையாட்டு’ என்னுஞ் சூத்திர உரை காண்க. உழுத ஏனல் பெருங்குரல் ஏனல் எனத் தனித்தனி இயையும். உழுத ஏனல் என்றது, 3'பகடு நடந்த கூழ’ என்புழிப்போலப் பெயரெச்சம் காரணப் பொரட்டாய் நின்றது. யாய் பல்கால் நோக்கும், நம் அவண் விடுநல் போலாள் என்பன இற்செறிப்பு நிகழுமாற்றைத் தலைவனுக்குத் தோழி அறிவித்தபடியாம்.

     திரு.நாவலர்,ந.மு.வேங்கடசாமிநாட்டார், கரந்தைக் கவியரசு இரா.வேங்கடாசலம்பிள்ளை ஆகிய இருவரும் உரையாசிரியர்களாக மட்டுமல்லாமல், புலவர்களாகவும், திறனாய்வாளர்களாகவும் நின்று எழுதியுள்ள இவ்வுரை, அகநானூற்று உரைகளுக்கெல்லாம் முன்னோடியாகவும், எடுத்துக்காட்டாகவும், பின்பற்றத்தக்கதாகவும் அமைந்துள்ளதோடு, எண்ணியெண்ணிப் போற்றத்தக்க வகையில் மிகச்சிறந்த ஆய்வு உரையாகவும் திகழ்கிறது.

 

துணைநின்ற நூல்கள்:

  1. அகநானூறு – களிற்றியானை நிரை(1957), திரு நாவலர், ந.மு. வேங்கடசாமி நாட்டார்,கரந்தைக் கவியரசு, ரா. வேங்கடாசலம் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற பதவுரை விளக்கவுரைகளுடன், பாகனேரி வெ பெரி பழ மு காசிவிசுவநாதன் செட்டியார்அவர்களால் வெளியிடப்பெற்றது, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, சென்னை.
  2. அகநானூறு - மணிமிடைப்பவளம் & நித்திலக்கோவை, திரு நாவலர், ந.மு. வேங்கடசாமி நாட்டார்,கரந்தைக் கவியரசு, ரா. வேங்கடாசலம் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற பதவுரை விளக்கவுரைகளுடன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, 2008.
  3. அகநானூறு மூலமும் பழைய உரையும், உ.வே.ரா.ராகவையங்கார் சுவாமிகள் பரிசோதித்துத் தந்தன, ராஜகோபாலார்யன் பதிப்பு, கம்பர் புத்தகாலயம், கம்பர் விலாசம், மயிலாப்பூர், 1935.
  4. அகநானூறு: பதிப்பு வரலாறு, முனைவர் மா.பரமசிவன், காவ்யா வெளியீடு, முதற்பதிப்பு, திசம்பர், 2010.
  5. அகநானூற்றுப் பதிப்புப் பின்புலம், முனைவர் மா.பரமசிவன், காவ்யா வெளியீடு, முதற்பதிப்பு, 2012.