ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தொல்காப்பிய எச்சவியலும் நன்னூல் பொதுவியலும்

முனைவர் ஜெ.கவிதா உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி கோவை. 23 Jan 2020 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

     தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியியலில் கருத்துக்கள் விரவிக் கிடக்கின்றன. அதை உளவியல் கண்ணோத்துடன் ஆய்வு செய்து வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

திறவுச் சொற்கள்:

தொல்காப்பியம்,மெய்ப்பாட்டியல்,பொருள்கோள்,எச்சவியல்

முன்னுரை

          "தொல்காப்பியரின் பொருள்கோளும்

          பவணந்தியாரின் பொருள்கோளும் - ஒப்பீடு"

 

அமிழ்தினும் இனியது என ஆன்றோரால் போற்றப்பட்டு என்றும் சீர் இளமை குன்றாது விளங்கும் நமது தாய் மொழியில் உள்ள இலக்கண நூல்களில்  மிகப் பழமையானது தொல்காப்பியம்.  மொழியின் தொன்மையும் இலக்கியத்தின் சிறப்பையும் நன்கு அறிந்து கொள்ள உற்ற துணையாகவும் எந்த இலக்கணங்களிலும் இல்லாத இயல்வளமும், எழிலும், பயனும், பெருமையும், அருமையும் அமைந்த ஓர் இலக்கணம் தொல்காப்பியமாகும்.  இத்தொல்காப்பியத்தை அடியொற்றி எழுந்த சிறந்த நூல்களுள் ஒன்றானது நன்னூலாகும்.

     "முன்னோர் நூலின் வழியே  நன்னூல் பெயரின் வகுத்தனன்" என சிறப்பாயிரத்தில் கூறப்படுவதன் மூலம் தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய இயல் நூல்களுள் ஏனையவற்றைவிட சிறந்த நூல் நன்னூலாகும்.  தொல்காப்பியத்தையும் அதன் உரையையும் ஒட்டியே பவணந்தியார் நன்னூலை இயற்றினார் என்பதில் ஐயமில்லை.  தொல்காப்பியரின் பொருள்கோளும் பவணந்தியாரின் பொருள்கோளும் ஒத்துவரும் இடங்களைப் பற்றியே இக்கட்டுரையில் காண்போம்.

எச்சவியல் மற்றும் பொதுவியலிலுள்ள பொருள்கோள்கள்

     தொல்காப்பியத்தில் எட்டு இயல்சளில் சொல்லப்பட்ட செய்திகளைத் தொகுத்தும் விடுபட்ட செய்திகளைச் சேர்த்தும் அவற்றுக்கு இலக்கணம் சொல்வது எச்சவியல்.  எச்சவியல் இலக்கணத்தைப் பின்வருமாறு தொல்காப்பியம் வரையறை செய்கிறது.

          "எச்சம் எனப்படுப இருவகை என்ப

          சொல் லொடும், பொருளொடும் முடிவுகொள் இயற்கை

          புல்லிய கிளவி எச்சம் ஆகும்"  (தொல்., பொருள்., 198)

 

நன்னூல் பொதுவியலாவது முன்சொன்ன பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் பின் இடைச் சொல்லுக்கு உரிச்சொல்லுக்கும் பொதுவான இலக்கணங்களைச் சொல்லும் இயல் பொதுவியல் என நன்னூல் கூறுகின்றது.  தொல்காப்பியர் பொருள்கோளை மொழிபுணர் இயல்பு என்ற குறியீட்டுடன் சொல்லதிகார எச்சவியலிலும், நன்னூலார் சொல்லதிகாரப் பொதுவியலிலும் கூறுகின்றனர்.  இவ்விரண்டையும்  ஒப்பீடு முறையில் உரை நோக்கிப் பார்க்கலாம்.

பொருள்கோள் வகைகள்

     தொல்காப்பியர் பொருள்கோளின் வகைகளை நான்கென்றுகாட்ட இரட்டிப்பாக்கி எட்டென்று சுட்டுகிறார் பவணந்தியார்.

          "நிரனிறை சுண்ணம் அடிமற் மொழிமாற்

          றவை நான்கென்ப மொழி புணியல்பே"  (தொ., 400)

 

          "நிரனிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று ஆகிய

          நான்கும் செயுளகத்து மொழி புணரியல்பாகிய

          பொருள்கோள் எனத் தொல்காப்பியம் கூறுகின்றது"1

 

          "யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை  விற்பூண்

          தாப்பிசை யனைமறி யாப்புக் கொண்டு கூட்

          டடிமறு மாற்றெனப் பொருள் கோள் எட்டே" (நன்.. 410)

 

தொல்காப்பியர் குறித்த பொருள்கோள் சுண்ணம் ஒழிய ஏனைய நிரனிறை, அடிமறி, மொழிமாற்றுடன் மாற்றுநீர் வீற்பூட்டு, தாப்பிசை, அளைமறி யாப்பு, கொண்டு கூட்டு எனப் பொருள்கோள் எட்டென்பர் பவணந்திமுனிவர்.2

நிரனிறை

     முடிக்கப்படும் சொற்களும் முடிக்கும் சொற்களும் (சொல்லும் பொருளும்) வேறு வேறு நிரலே நிற்க அவற்றை இயைத்துப் பொருள்கோடலே நிரனிறைப் பொருள்கோள் ஆகும்.  இதனை வடநூலார் யதாஸ்ங்க்யம் அல்லது கிரமம் என்பதோர் அணியாகக் கொள்வர்.3

     ஆராயத்தோன்றி முடிக்கடும் சொல்லும் முழக்கம் சொல்லும் வேறுவேறு நிரனிறையாகும்.  மேலும் வினை நிரனிறை, பெயர் நிரனிறை, பொது நிரனிறை, எதிர் நிரனிறை, என நான்கு வகையாக நிரனறைப் பொருள்கோளைக் கூறியுள்ளார்.  நன்னூலார் பெயரும் வினையுமாகிய சொற்களையும்  அவை கொள்ளும் பெயரும் வினையுமாகிய சொற்களையும் அவைகொள்ளும் பெயரும் வினையுமாகிய பயனிலைகளையும் வேறு வேறு வரிசையாக நிறுத்திக் கூறிய முறையேனும் அதற்கு எதிராயேனும் இதற்கு இது பயனிலை என்பது புலனாகக் கூறும் நெறிப்பட்ட நிரல்நிறைப் பொருள்கோள் என்பர்.

பிற நிரனிறைகள்

     அடிஇணை, பொழிப்பு, ஓருஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று நிரனிறைகள் என்றும், எழுத்து நிரனிறை பூட்டுவில் நிரனிறை என்றும் பிறவானும் பிற்காலத்தார் காட்டிய நிரனிறை விகற்பமெல்லாம் மேற்காட்டிய பகுப்புள்ளேயே அடங்கும்.4

எண்ணம்

     அளவடியார் அமைந்த ஈரடிக்கண் உளவாகிய உண்சீரைத்துணித்துப் பொருள் இயைபு மாறறிந்து அதன்வழிக் கூட்டி இயற்றுதல் சுண்ணப் பொருள் கோளாம் என்றார் தொல்காப்பியர் (406) இப்பொருள்கோள் அருகியல்லது வாராமையின் இதனை மொழிமாற்றினுள் அடக்கினார் பவணந்தியார்.5

அடிமறி

     ஏனைய பொருள்கோள் அமைந்த செய்யுள்களில் சொற்களும் மட்டுமே முன்னும் பின்னும் மாற, இவ்வடிமறிப் பொருள்கோள் அமைந்த செய்யுள்களிலோ அடிகளே மாறுகின்றன.  இது ஏனைப் பொருள்கோளிடை இதற்குள்ள வேற்றுமையாகும்.

     அடிமறிச் செய்யுள் (407) சீர் நின்றாங்கு நிற்ப அடிகள் தத்தம் நிலையிற்றிரிந்து ஒன்றன் நிலைக்களத்து ஒன்று சென்று நிற்கும் அடிகள் முதலும் இடையும் கடையும் அறிந்து பொருள்கொள்ளப்படுதலின் அடிமறியென்னும் பெயரைப் பெற்றது.  இப்பொருள்கோள் பெருபான்மையும் நாலடிச் செய்யுட்கண் வாராது என்பர் சேனாவரையர்.6

          "மாறாக் காதலர் மலைமறந்தனரே

          யாறாக் கட்பணி வரலானவே

          வேறா மென்றோன் வளைநெகிழும்மே

          கூறாய தோழியான் வாழு மாறே"

 

என வரும் பொருள் ஆராயுங்கால், அடிமறிச் செய்யுட்கண் ஈற்றடியது இறுதிச்சீர் ஈற்றயச் சீர்வயின் சென்று திரிந்து நிற்றலும் நீங்கார். மேற்சூத்திரத்தில் சீர்நிலை திரியாது தடுமாறும் என்றார்.  ஈண்டு ஒரோவழிச் சீர்நிலை திரிதலும் உண்டு எனவும், இப்புறனடை தொல்காப்பிய நூற்பாவுக்கு (408) உரையாசிரியர்களிடையே மூன்று கருத்துக்கள் நிலவுகின்றன.

•    "ஈற்றடியின் இறுதிச் சீர் அடுத்ததுச் சீராய் வருதல்" (இளம்பூரணர்)

•    ஈற்றடியின் இறுதிச்சீர் எழுத்தடியிற் சென்று

     திரிதல் - சேனாவரையர் மற்றும் தெய்வச்சிலையார்

•    பொருள் முடிவினையுடைய அடியின் முடிக்கின்ற சீர் முதற்சீரின் பொருளைப் பெற்று அவ்வடியில் முன்னின்ற சீரோடு பொருந்துதல் - நச்சினார்க்கினியர்.7

•    நன்னூல் (418) பொருளுக்கு ஏற்குமிடத்தே கொண்டு வந்து கூட்டுதற்குப் பொருந்தும் அடியினையுடையனவும் யாதானும் ஓரடியினை எழுத்து, முதல், இடை ஈறுகளில் யாதானும் ஓரிடத்துக் கூட்டியுரைத்தாலும் தம் பொருளும் ஓசையும் மாறாத அடியினையுடையனவும்  அடிமறிமாற்றுப் பொருள்கோளாம்.

மொழிமாற்று

     தொல்காப்பியம் (409) கூறும் மொழிமாற்றினது இயல்பாவது பொருளெதிர் இயையுமாறு நின்று சொல்லை இடம்மாற்றி முன்னும் பின்னும் பொருள் கொள்ளுமிடம் அறிந்து  பொருத்துதலாகும்.  மொழிமாற்றுச் சூத்திரத்திற்கு இளம்பூரணர் கூறிய உரையினையும் எடுத்துக்காட்டினையும் சேனாவரையர் கூறிய  உரையினையும் பவணந்தி முனிவர் மொழிமாற்றினை ஓரடிக் கண்ணே வருவதும் ஒன்றுக்கு மேற்பட்ட பலவடிக் கண்ணே வருவதும் எனவும்இருவகையாகக் கொண்டார்.  கருதிய பொருளுக்குப் பொருந்திய மொழிகளை ஓரடியுள்ள மாற்றிச் சொல்வது  மொழிமாற்றமாகும். நன்னூல் (412).

யாற்று நீர்

     புனலயாற்றுப்பொருள்கோள், யாற்றுப் புனற்பொருள்கோள், யாற்று வரவுப் பொருள்கோள், புனல்யாற்று வரவுப் பொருள்கோள், யாற்றொழுக்குப் பொருள்கோள் எனவும் இலக்கணப் புலவர்களால் இது வழங்கப்பெறும்.

     ஏனையடிகளை நோக்காது அடிதோறும் பொருள் அமைத்து ஒழுகுவது யாற்றுநீர்ப் பொருள்கோள்கள் என உரையாசிரியர்களால் கூறப்படுகின்றன.

     ஒவ்வோரடியிலும் பொருள் முற்றுப்பெற்று வருதல் பாடல் முழுவதும் ஒரே பொருள் அமைந்து இயல்மின் நடத்தல் என நேடிநாத உரை, யாப்பருங்கல விருத்தியுரை, யாப்பருங்கலக்காரிகையுரை, இலக்கண விளக்கவுரை, தொன்னூல் விளக்கம் ஆகியவைகளும் இக்கருத்தினவே வலியுறுத்துகின்றன.

          “யாற்றுப்புனலே அடிதொறும் பொருளை

          ஏற்றடி நோக்கா விளம்பலின் ஆகும்”8

 

என்று தெளிவாகவே சுட்டியது தொன்னூல் விளக்கம்.  இதனையே,

          “அடிதொறும் பொருளற்ற மீளாது

          சேறலின் புனல் யாற்றுப்பொருள்

          கோளாயிற்று”9

 

என்றார் குணசாகரும் தமது யாப்பருங்கல விருத்தியுரையில்.

பூட்டுவில்

     தொல்காப்பியமும் அமுதசாகரமும் தவிர பொருள் கோளைப் பேசும் எல்லா இலக்கண நூல்களாலும் குறிக்கப்படும் இப்பொருள்கோள் விற்பூட்டு, பூட்டுவில், கடைமொழி மாற்று என்றும் வழங்கப்பெறும் வில்லின் இருதலையும் இறுதி மொழியும் பொருளின் பொருந்துவது பூட்டுவில் பொருள்கோளாம்.

          “எழுவா யிறுதி நிலைமொழி தம்முட்

          பொருள் நோக்குடையது பூட்டு வில்லாகும்” (நன்னூல் 414)

 

பாவின் முதலினும் ஈற்றினும் நின்ற மொழிகள் தம்மில் பொருள் நோக்கி நிற்பது பூட்டுவில் பொருள்கோள்.

தாப்பிசை

     பொருள்கோளைப் பேசும் இலக்கண நூல்களும் தொல்காப்பியமும் அமுதசாகரமும் தவிர அனைத்துமே இத்தாப்பிசையைக் குறிக்கின்றன.  தாப்பிசை என்பதற்கு ஊசல் போல் இடை நின்று இருமருங்கும் சொல்லும் சொல் என்பது பொருள்.  ஆகுபெயரால் ஊசலைக் குறிக்கும் தாம்பு என்னும் சொல் வலித்தல் விகாரம் பெற்றுத் தாம்பு என்றானது.

          “இடைநிலை மொழியே யேனையீரிடத்தும்

           நடந்த பொருளை நன்னுதல் தாப்பிசை” (நன். 415)

 

செய்யுளின் இடையில் நின்ற சொல் முதலினும் ஈற்றினும் சென்று பொருள் கொள்வது தாப்பிசைப் பொருள்கோள்.

அளைமறி பாப்பு

          “செய்யு ளிறுதி மொழியிடை முதலினும்

           எய்திய பொருள்கோள் அளைமறி யாப்பே” (நன்., 416)

 

செய்யுளின் இறுதியில் நின்று சொல் இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்வது அளைமறியாப்பு பொருள்கோளாம் என்பது இதன் பொருள்.  புற்றினுள் தலை முதலாக உட் சென்று, உடன் மறந்து உடலோடும் வாலோடும் ஒட்டி மேல்வரும் பாம்பு போல, ஈற்று நின்ற மொழி இடையிலும் முதலிலும் சென்று இயைந்து பொருள் தருதலால் இப்பொருள்கோள் அளவுமறி பாப்பும் பொருள்கோள் எனப்பட்டது (அளை-புற்றுமறிதல்-மடிதல் அல்லது மடங்குதல்) அளைமறிபாப்பு என்பது அளைமறிபாப்பு என்று வலியுறுத்தி நின்றது.

          “வளர்பொருள் கொளமின் மொழிமுன்னிடை சேறல்”10

என்றது சுவாமிநாதம்.

          “இறுதிச் சொல் முதலும் இடையும் சென்று

           மறித்த பொருள் கோடல்”11

 

என்பது யாப்பருங்கல விருத்தியுரை. 

     நோமிநாத உரையாசிரியர் முதலிலுள்ள சொல்லை இடையிலும் இறுதியிலும் கூட்டிப் பொருள் முடிப்பது என்று கொண்டார்.  திரிபின்றி இயற்பிற் பொருள் தருவதாகக் கூறி, அளைமறிபாப்பை யாற்றொழுக்குடன்  ஒன்றாகச் சேர்த்துக் கூறினார் தெய்வச்சிலையார்.

 

கொண்டு கூட்டு

          “யாப்படி பலவினும்கேர்பபுடை மொழிகளை

          ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே” (நன்., 417)

 

செய்யுளின் அடிகள் பலவற்றினும் சேர்க்கப்பட்டுக் கிடக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்பக் கொண்டு வந்து இயைத்தல் கொண்டுகூட்டு என்றும் பொருள்கோள்.

          “கொண்டுகூட்டு சுண்ணமொழி

          மாற்றுள் அடங்கும்”14

 

என்கிறார் தெய்வச்சிலையார்.

     தொல்காப்பியனாரால் கூறப்படாத இப்பொருள்கோள் யாற்றொழுக்கும் அளைமறிபாப்பும் பொருள்கோளும் திரிபின்றிப் பொருள்படுதலின் இயல்பாம் என்றும் கொண்டுகூட்டு சுண்ணமொழி மாற்றுள் அடங்கும் என்றும், பூட்டுவிற் பொருள்கோள் மொழிமாற்றுள் அடங்கும் என்றும், தாப்பிசைப் பொருள் கோட்கண் முன்னொரு சொல் வருவிக்க வேண்டுதலின் இது பிரிநிலை வினையே என்னும் சூத்திரர்கள் அடங்கும் என்று விளக்கம் கூறுவர் தெய்வச்சிலையார்.15

முடிவுரை

          “இழைப்பின் இலக்கணம் இயைந்தாகும்”  (தொல்;, சொல்., 543)

          “இலக்கண மருங்கின் சொல்லாற்றல்ல” (தொல்., சொல்., 27)

          “இழைத்த இலக்கணம் இழைத்தன போல” (தொல்., செய்., 544)

          “புறத்திணை இலக்கணம் திறம்படக் கிளப்பின் (தொல்., புற., 1)

என இலக்கணம் உலக வாழ்க்கையும், செய்யுள் வழக்கையும் தழுவி மொழியை திருத்தமாய்ப் பேசவும் எழுதவும் கற்பிக்கிற நூல் இலக்கியங்களைக் காட்டிலும்  இலக்கணத்திற்கான ஆய்வுகள், கட்டுரைகள் குறைவாக உள்ளதாலும் இலக்கணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இலக்கண வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இலக்கணத்தை மீண்டும் மறுவுருவாக்கம் செய்வதற்கு வாய்ப்பாகவும் தொல்காப்பியர் எச்சவியலில் கூறப்பட்ட பொருள்கோளும் பவணந்தியாரின் பொதுவியலில் கூறப்பட்டுள்ள பொருள்கோளும் இருவரின் இக்கருத்துக்கள் ஒத்துவித்து ஒப்புமிக்கப்படுகின்றன.

சான்றெண் விளக்கம்

1.    ச. அரங்கராசன் (தொல்.,), பொருள்கோள், பக். 30-31.

2.   க.வெள்ளைவாரணார், நன்னூல், சொல்., ப. 384.

3.   ச. அரங்கராசன் (தொல்.,), பொருள்கோள், ப. 50.

4.   மேலது., ப. 51.

5.   க.வெள்ளைவாரணார், நன்னூல், சொல்., ப. 387.

6.   சேனாவரையர், சொல்., ப. 228.

7.    ச. அரங்கராசன் (தொல்.,), பொருள்கோள், ப. 66.

8.   உ.வே.சாமிநாதையர், நன்னூல், மூலமும் மயிலைநாதர் உரையும், ப. 280.

9.   மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை, யாப்பருங்கலம் விருத்தியுரை, ப. 303.

10.   சுவாமிநாதன், நூ. 69.

11.   மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை, யாப்பருங்கலம் விருத்தியுரை, ப. 304.

12.   தெய்வச்சிலையார், தொல்காப்பியம், சொல்லதிகாரம், பக். 222-226.