ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அடிச்சுவடுகள்

முனைவர் ப.விமலா அண்ணாதுரை. உதவிப்பேராசிரியர் (ம) தலைவர், தமிழ் முதுகலை மற்றும் உயராய்வுத் துறை செல்லம்மாள் மகளிர் கல்லூரி. பச்சையப்பன் அறக்கட்டளை. கிண்டி.சென்னை - 32 23 Jan 2020 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்;

இலக்கியங்களை ஆழமாக உள்வாங்குகின்ற போது .நமக்குள் அது மிகப்பெரிய தாக்கத்தையும் ஆளுமையையும் உருவாக்கும்.அத்தகைய தாக்கம் இலக்கியம் படைக்கின்ற போது வெளிப்படும்.சேக்கிழாரை கம்பர் முழுமையாக உள்வாங்கியதன் விளைவு அவரது அடிச்சுவட்டில் பயணித்து பல பாடல்களை இயற்றியுள்ளார் என்பதன் ஆய்வே இக்கட்டுரை.

திறவுச்சொற்கள்;

கம்பர், சேக்கிழார், இராமாயணம் ,இராமாவதாரம்,பெரிய புராணம், திருத்தொண்டர் புராணம்

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் இராமாயணத்திற்குக் காலத்தால் முந்தியது சேக்கிழார் பெருமான் அருளிச் செய்த பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் . சேக்கிழார் பெருமான் இப்புராணத்திற்கு இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதே . ஆனால் “ தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே ' என்ற ஔவையாரின் வாக்குப்படி , தொண்டர்களின் பெருமைகளைக் கூறும் நூலாகிய இப்புராணம் பெரிய புராணம் என்ற               பெயராலேயே அழைக்கப்பட்டு வழங்கி வருகின்றது .

ஐம்பெருங் காப்பியங்களில் காப்பியப் பண்புகள் நிரம்பியிருந்த சீவக சிந்தாமணி என்னும் சமணக் காப்பியம் மேலோங்கியிருந்த ஒரு காலத்தில் எழுந்ததே - பெரிய புராணம் ஆகும் . அநபாயன் என்ற பெயர் கொண்ட - இரண்டாம் குலோத்துங்க சோழனது அரச அவையில் முதலமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் , அரசனின் சீவக சிந்தாமணி ஈடுபாட்டை மாற்றி , சைவத்தின் மேம்பாட்டை உலகறியச் செய்யப் பாடிய காவியமே பெரிய புராணம் .

பெரிய புராணத்தைச் சேக்கிழார் பெருமான் பாடுவதற்கு தில்லை நடராஜப் பெருமானே “ உலகெலாம் ' ' என்று அடியெடுத்துக் கொடுத்ததாக இதன் சிறப்பைப் புலவர்கள் புகழ்கிறார்கள் ,

இந்நூலைப் பாடி முடித்ததும் , ஒரு சித்திரை மாதத்துத் திருவாதிரை நாள் தொடங்கி , அடுத்த அதே சித்திரைத் திருவாதிரை நாள் வரை . சேக்கிழார் பெருமான் இதனைப் பாடிப் பொருள் விரித்துரைக்க , அதனைப் பல நாட்டுச் சிற்றரசர்கள் , மந்திரிகள் , பொதுமக்களோடு சோழநாட்டு மன்னனான அநபாய சோழனும் ' கேட்டு மகிழ்ந்தான் என்றும் இந்நூலின் அரங்கேற்றம் பற்றிக் கூறுகிறார்கள் .

பெரியபுராணத்தை இரு செவிகளாரப் பருகி இன்புற்று அதன் சிறப்பிலே மயங்கிய அநபாய சோழன் , தனது பட்டத்து யானையின் அம்பாரியில் சேக்கிழார் பெருமானையும் , பெரிய புராண ஏடுகளையும் ஏற்றி , தான் அருகிருந்து , சேக்கிழார் பெருமானின் வியர்வை போக்கக் கவரி ( விசிறி ) வீசியபடி தனது வீதிகளில் உலாவந்தான் என்ற செய்தி பெரிய புராணத்தின் சிறப்புக்கு கட்டியங் கூறுவதாக அமைந்துள்ளது .

சேக்கிழார் பெருமானின் பின் இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகனான இராசராசன் காலத்தில் , வாழ்ந்தவராக கம்பரை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள் .

கம்பர் தமது நூலுக்கு இட்டபெயர் இராமாவதாரம் என்பதே . இதனைக் கம்பரின் பாடல் மூலம் அறியலாம் .

‘நடையில் நின்றுயர் நாயகன் தோற்றத்தின்

இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்

தொடை நிரம்பிய தோமறு மாக்கதை

சடையன் வெண்ணெய் நல்லூர்வயிற் தந்ததே’ .

 

கம்பர் இராமாவதாரம் என்று தனது காவியத்துக்குப் பெயரிட்ட போதிலும் அக்காவியம் கம்பராமாயணம் என்றே நிலைத்துவிட்டது . திருத்தொண்டர் புராணம் பெரியபுராணமாகியதும் , இராமாவதாரம் கம்பராமாயணமாகியதும் கூட இவற்றிடையே உள்ள ஒரு ஒற்றுமையேயாகும் .

சேக்கிழாரின் பெரிய புராணம் பல தொண்டர்களின் பெருமைகளைச் சொல்லும் நூலாகியதால் , ஒரு கதாநாயகன் , கதாநாயகியை முதன்மைப்படுத்தி நிற்கும் காவியமாக அது அமையவில்லை .

ஆனால் கம்பரோ தமது இராமாயணத்தை முடிந்த வரை காவிய இலக்கண அமைவுக்குள் பாடவே முயன்றிருக்கிறார் , அதற்குரிய வாய்ப்பும் இராமாயணக் கதையிலே நிரம்ப இருந்தது . சீவக சிந்தாமணியைத் திருத்தக்க தேவர் பாடிய பின்பே இராமாயணத்தைக் கம்பர் பாடியதால் , இராமாயணத்திலும் சீவக சிந்தாமணியின் தாக்கத்தைக் காணக் கூடியதாக இருக்கிறது .

     காவிய இலக்கண முறைமைக்குள் தனது இராமாயணத்தைப் பாடவிரும்பிய கம்பர் , வால்மீகியின் முதல் நூலில் இல்லாத சிலவற்றையும் சேர்த்துப் பாடி மெருகூட்டியது , இரு நூல்களையும் கற்போரின் உள்ளத்தில் தெற்றெனப் புலப்படும் .

சேக்கிழார் பெருமானின் பாடல்கள் கம்பரின் - இராமாயணத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை இங்கு நோக்குவோம் , விரிவஞ்சி சில ஒற்றுமைகளே ஒப்பிடப்படுகின்றன , சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணத்தில் முதலாவது பாடலாக வாழ்த்துப் பாடலை இப்படிப் பாடுகிறார் ,

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

     நிலவுலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் ‘.

 

உலகு எலாம் இறைவனை அறிந்து ஓதுதல் எளிதான காரியமாக இருக்கலாம் . ஆனால் உணர்ந்து ஓதுதல் என்றும் அரிய செயலே , அதனையே சேக்கிழார் பெருமான் ' ' உணர்ந்து ஓதுதற்கு அரியவன் ” என்று பாடினார் .இப்பாடல் நேரடியாகவே சிவபெருமானை நினைத்துப் பாடியதாக அமைந்துள்ளது . ஏனெனில் நிலவும் , கங்கையும் சடையில் நிலவுவதும் , அம்பலத்தே திருக்கூத்திடுவதும் சிவபெருமானுக்கே உரியவை என்பது கண்கூடு .

 கம்பரோ தனது காவியத்தின் தற்சிறப்புப் பாயிரத்தில் கடவுள் வணக்கமாகப் பாடும்போது ,

உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்

 நிலை பெறுத்தலும் , நீக்கலும் , நீங்கலா

அலகிலா விளையாட் டுடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே’ .

 

என்று பாடுகிறார் , உலகம் யாவற்றையும் படைத்து , காத்து , அழித்து , இதனையே நீங்காத விளையாட்டாகச் செய்பவரே எமது தலைவர் . அவருக்கே நாங்கள் சரண் என்பது இதன் பொருள் . இங்கே தமது கடவுளை இன்னார் எனக் கம்பர் சுட்டிக் காட்டாததைக் கண்டு கொள்ளலாம் .

     சேக்கிழாரின் அடியொற்றி " உலகம் யாவையும் ' ' என்றே கம்பரும் தொடங்குவதைக் காண்கிறோம் . ' ' உலகம் யாவையும் ' ' என்பதும் ' ' உலகெலாம் ' ' என்பதும் ஒன்றே . சேக்கிழாரின் “ அலகில் சோதியன் ' ' என்ற சொல்லும் கம்பரின் “ அலகிலா விளையாட்டு ” ” என்ற சொல்லும் ஒப்பு நோக்கத்தக்கது .கம்பர் எப்படி முத்தொழிலையும் செய்யும் முழுமுதற் கடவுளே தமது தலைவர் என்று கூறினாரோ , அதனைச் சற்று மாற்றி , அவரின் பின் வந்த வில்லிபுத்தூராழ்வார் தமது பாரதத்தில் தற்சிறப்புப் பாயிரத்தில் பாடியிருக்கிறார் ,

‘ஆக்குமாறு அயனாம் . முதலாக்கிய உலகங்

காக்குமாறு செங் கருணையங் கடலாம் .

வீக்குமாறு அரனாம் . அவை வீந்தநாள் மீளப்

         பூக்குமா முதலெவன் அவன்பொன்னடி போற்றி ‘.

 

படைத்தலை பிரம்மாவும் , காத்தலை மகாவிஷ்ணுவும் , அழித்தலை உருத்திரனும் செய்கின்றனர் . அப்படி அழித்த பின் மீள இந்த உலகை எவர் படைக்கின்றாரோ அவரே முதல்வர் , அவர் பொன்னடியே போற்றி என்பது இதன் பொருள் ,

     இது , சேக்கிழார் கம்பரில் ஏற்படுத்திய தாக்கம் வில்லிபுத்தூராழ்வாரில் கம்பரால் ஏற்படுத்தப்பட்டுள்ளதைக் காட்டுகிறது . கம்பரும் , வில்லிபுத்தூராழ்வாரும் தமது கடவுளை யாரென்று கூறாததை இங்கே காணலாம் . சேக்கிழார் அவையடக்கமாகப் பாடிய பாடல்களிலும் கம்பர் அவையடக்கமாகப் பாடிய பாடல்களிலும் உள்ள ஒற்றுமை பெரிதும் வியக்கத்தக்கது .

அளவிலாத பெருமைய ராகிய

அளவிலா அடியார்புகழ் கூறு கேன்

அளவுகூட உரைப்பரி தாயினும்

அளவில்ஆசை துரப்ப அறைகுவன் ‘.

 

 இது சேக்கிழாரின் பாடல் . பெரிய புராணத்தைப் பாடுவதற்கு தனக்கு ஆசைதான் காரணம் என்று சேக்கிழார் கூறுவதுபோலவே , கம்பரும் தான் இராமாயணம் பாடுவதற்கு ஆசை தான் காரணம் என்று கூறுகிறார் .

‘ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசை பற்றி அறையலுற்றேன் மற்றிக்

காசில் கொற்றத்து இராமன் கதையரோ’ .

 

 சேக்கிழார் ' ' அளவில் ஆசை துரப்ப அறைகுவன் ” என்று பாடுவதும் , கம்பர் ' ' ஆசைபற்றி அறையலுற்றேன் ” என்று பாடுவதும் கவனிக்கத்தக்கது . இவ் இருவரையும் அடியொற்றியே வில்லிபுத்தூராழ் வாரும் , தாமும் ஆசையிலேயே பாரதம் பாடியதாகக் கூறுகிறார் .

‘முன்னு மாமறை முனிவருந் தேவரும் பிறவும்

பன்னு மாமொழிப் பாரதப் பெருமையும் பாரேன்

மன்னு மாதவன் சரிதமும் இடையிடை வழங்கும்

என்னும் ஆசையால் யானுமீ தியம்புதற் கிசைந்தேன்’ .

 

இந்த மூவரில் வில்லிபுத்தூராழ்வாரின் ஆசை சற்று வித்தியாசமானது , ' ' மாதவன் சரிதமும் இடையிடை வழங்கும் என்னும் ஆசையால் ' ' பாரதம் பாடுகிறார் அவர் ,

கம்பரின் ' ' ஓசைபெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென ' ' என்ற அவை அடக்க உவமானம் , அதே கருத்தில் சேக்கிழார் சுவாமிகளால் பாடப்பட்டிருப்பதை இங்கே பார்ப்போம் .

தெரிவரும் பெருமைத் திருத் தொண்டர்தம்

பொருவருஞ் சீர்புகலல் உற்றேன் , முற்றப்

பெருகு தெண்கடல் ஊற்றுண் பெருநசை

ஒருசுணங்கனை ஒக்கும் தகைமை யேன் .

 

இதுவும் அவையடக்கமாகப் பாடப்பட்ட பாடலே . ' ' நடுக்கடலில் சென்றாலும் நாய்க்கு நக்குத் தண்ணிதான் ' ' என்பது பழமொழி , அதேபோல பெருகுகின்ற கடலை ஒரு நாய் குடித்து முடிக்க எண்ணியதைப் போல , ஒப்புவமை இல்லாத பெருஞ் சீர்பெற்ற தொண்டர்தம் பெருமையை நான் பாடத் தொடங்கிய செய்கை இருக்கிறது என்பது இதன் பொருள் .

கம்பரின் பாடலை இப்போது நோக்குவோம் , “ பூனைக்குப் பாலென்றால் கொள்ளை ஆசை தான் , அதற்காகப் பாற்கடலை அடைந்த பூனை முற்று முழுதாக அதைக் குடித்து விடுவேன் என்று முயன்றால் எப்படி இருக்கும் .அதே போன்ற செய்கையே நான் இராமரின் பெரு மைகளைக் கூறும் இந்த இராமாயணத்தைப் பாடியது ” என்று கூறுகிறார் கம்பர் .

இருவரது அவையடக்கப் பாடலும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளதை மேலே பார்த்தோம் . இருவரும் தாம் பாடப்போகும் நாட்டிலுள்ள நதியின் சிறப்பைக் கூறும் போதும் ஒரே மாதிரியாகவே பாடுகிறார்கள் . அதாவது சேக்கிழாரின் கருத்தில் நின்று கொண்டு தனது கற்பனையோடு கம்பர் மேலே செல்வதைக் காணலாம் . |

 பெரிய புராணத்தில் திருநாட்டுச் சிறப்புக் கூறுமிடத்தில் , காவிரி நதி பற்றி சேக்கிழார் கூறுவது இப்படி அமை கிறது

‘சையமால் வரைபயில் தலைமை சான்றது

         செய்யபூ மகட்குநற் செவிலி போன்றது

வையகம் பல்லுயிர் வளர்த்து நாள்தொறும்

 உய்ய வே சுரந்தளித் தட்டும் நீரது ‘.

 

காவிரி நதி , பூமி என்கின்ற மகளுக்கு நல்ல வளர்ப்புத் தாய் போன்றது என்பதையே ' ' பூமகட்கு நற்செவிலி . போன்றது ' ' என்று பாடுகிறார் .இந்தக் கருத்தை இன்னும் மெருகேற்றி அழகாக , சற்று ஆழமாகப் பாடுகிறார் கவிச் சக்கரவர்த்தி கம்பர் ,

‘இரவி தன்குலத் தெண்ணில்பல் வேந்தர்தம்

 புரவு நல்லொழுக் கின்படி பூண்ட்து

 சரயு என்பது தாய்முலை அன்னதிவ்

வுரவு நீர்நிலத் தோங்கும் உயிர்க்கெலாம்’ .

 

சரயு என்கின்ற நதி நிலத்தில் உள்ள உயிர்கட்கெல்லாம் தாய்முலைபோல் அவ்வளவு அத்தியாவசியமும் , பயன்பாடும் கொண்டது என்று கூறுகின்றார் கம்பர் . " . செய்ய பூமகட்கு நற் செவிலி போன்றது ” என்ற சேக்கிழாரின் கற்பனை இன்னும் மெருகோடு " சரயு என்பது தாகமுலை அன்னது இவ்வுரவு நீர்நிலத் தோங்கும் உயிர்க் கெலாம் ” என்று கம்பரால் கவிதா சாமர்த்தியத்தோடு கையாளப்படுவது நயக்கத்தக்கதும் வியக்கத்தக்கதுமான வேலையே .

சேக்கிழார் எப்படி சொற்களை வைத்துக் கவிதையை அழகு செய்கின்றாரோ அதே உத்தியும் கம்பரால் கையாளப்பட்டுள்ளது . திருநாட்டுச் சிறப்புக் கூறும் சேக்கிழார் பெருமான் இப்படிப் பாடுகிறார் ,

‘ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்

சோலை வாய்வண் டிரைத்தெழும் சும்மையும்

ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்

வேலை ஓசையின் மிக்கு விரவுமால்’ .

 

இப்பாடலில் ஓலம் , சும்மை , ஓதை , ஓசை என்ற நான்கு ஒரே கருத்துள்ள சொற்கள் அழகாக அமைந்திருப்பதைக் காணலாம் . இதேபோன்று இன்னும் கூடுதலான ஒத்த கருத்துள்ள சொற்களை வைத்து கம்பர் நாட்டுப் படலத்தில் இப்படிப்பாடுகிறார் , கம்பரும் ஓசை என்ற சொல்லுக்கே பல சொற்களைப் பயன்படுத்துவதும் கவனிக்கத்தக்கது .

‘ஆறுபாய் அரவம் மள்ளர் ஆலைபாய் அமலை ஆலைச் .

 சாறுபாய் ஒதை வேலைச் சங்கின்வாய் பொங்கும் ஓசை

         ஏறுபாய் தம்ரம் நீரில் எருமைபாய் துழனி இன்ன

மாறுமா றாகித் தம்மின் மயங்குமாம் மருத வேலி’ .

 

இங்கு அரவம் , அமலை , ஓதை , ஓசை , தமரம் , துழனி . என்ற ஆறு சொற்களும் ஒரே கருத்துள்ள சொற்களே . இப்படி ஒரே கருத்துள்ள பல சொற்களை வைத்து கவிதை யாத்தது போலவே , ஒரே சொல்லில் பல கருத் துக்களை வைத்தும் சேக்கிழார் பாடியிருக்கிறார் , அதை அப்படியே கம்பர் பின்பற்றியிருப்பதையும் இங்கு காண்போம் .

பரவையார் பற்றி சேக்கிழார் பெரிய புராணத்தில் பாடிய பாடல் இது .

‘பேர்பரவை பெண்மையினில் பெரும்பரவை விரும்பல்குல்

ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை

 சீர்பரவை ஆயினாள் திருவுருவின் மென்சாயல்

 ஏர்பரவை இடைப்பட்ட என்னாசை எழுபரவை

 

பரவை என்ற சொல் ஏழுதடவை வருகின்றது , ஒவ் வொரு பரவையும் வெவ்வேறு பொருளைத் தருகின்றது . ஏழாவது பரவை என்ற சொல் எழுபரவை என வந்து ஏழாவது பரவை என்பதையும் பொங்குகின்ற கடல் என்ற பொருளையும் கொடுக்கும் சிறப்பு வியந்து ரசிக்கத்தக்கது .

     இதன் பொருளைச் சிறிது நோக்குவோம் , முதலாவது பரவை , பரவையாரின் பெயரைக் குறிக்கிறது . இது பேர் பரவை என வருகிறது , அதாவது பெயர் பரவை என்பதே இது , அடுத்து வருவது பெரும் பரவை . இது பெரு - உம்பர் - அவை எனப் பிரிபடும் . அதாவது பெரிய தேவர்கள் சபை என்பது இதன் பொருள் . அடுத்த - பரவை பரவு - ஐ எனப் பிரிகிறது . அதாவது வழிபடுகின்ற தெய்வம் . அடுத்தது அரும்பரவை , இது அரும்பர் - அவை எனப் பிரிகிறது . முல்லை அரும்புகளின் கூட்டம் என்பது இதன் பொருள் . . அடுத்தது சீர் பரவை என்பது பரவைக் கூத்தாடுகின்ற இலக்குமி தேவியைக் குறிக்கிறது , அடுத்த பரவை என்பது பரவுதல் அதாவது பரந்து செல்லல் எனப் பொருள்படுகிறது . இறுதியாக வரும் பரவை கடலைக் குறிக்கிறது ,

இதே போன்று சுந்தர காண்டத்தில் கம்பரும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் . இலங்கைக் காவல் தெய்வத்தைப் பற்றிய பாடல் இது .

‘அஞ்சுவணத்தின் ஆடை உடுத்தாள் அரவெல்லாம்

அஞ்சுவணத்தின் வேக மிகுத்தாள் அருளில்லாள்

அஞ்சுவணத்தின் உத்தரி யத்தாள் அலையாரும்

அஞ்சுவணத்தின் முத்தொளிர் ஆரத் தணிகொண்டாள்’ .

 

இங்கே - அஞ்சுவணம் என்பது நான்கு தடவைகள் , நான்கு பொருள்களில் வருவது நோக்கக் கூடியது . அஞ்சு வர்ணம் , அஞ்சும் உவணம் ( கருடன் . ) அம்சுவர்ணம் ( பொன் ) அம் - சுவள் - நத்தின் , என்ற வகையாக இந்த அஞ்சுவணம் பொருள்படுகின்றது .

இத்தகைய சொற்களை வைத்துக் கவிநயம் காட்டுதல் மட்டுமின்றி இன்னோர் உத்தியையும் கம்பர் , - சேக்கிழார் பெருமானிடமிருந்தே கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது .

     பெரிய புராணத்தில் - திருநகரச் சிறப்பில் மனுநீதி கண்ட சோழனைப் பற்றிய சரிதையில் ஒரு கட்டம் . பசுக் கன்றைத் தனது மகன் தேரூர்ந்து கொன்றான் , என்ற செய்தி கேட்ட மனுநீதி கண்ட சோழனின் நிலையைச் சேக்கிழார் பெருமான் இப்படிப் பாடுகிறார் .

‘மன்னுயிர் புரந்து வையம் பொதுக்கடிந் தறத்தில் நீடும்

         என்லொறி நன்றால் என்னும் என்செய்தால் தீரும் என்னும்

தன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு சோரும்

அந்நிலை அரசன் உற்ற துயரம்ஓர் அளவிற் நன்றால் ‘.

 

தனது ஆட்சியில் , தான் உயிருடன் இருக்கும்போதே ஒரு அநீதி நடந்துவிட்டது , என்பதை மனுநீதி கண்ட சோழனால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை உயிர்போய் வெறும் உடல் என்ற நிலையிலேயே அவன் காணப்படுகிறான் . இதனை நன்கு விளக்கவே பாடலில் என்னும் , சோரும் என்ற அஃறிணைச் சொற்கள் உயர்திணையாகிய அரசனுக்கு பயன்படுத்தப்பட்டன .

இதே இடங்களில் “ என்னெறி நன்றால் என்பான் , என் செய்தால் தீரும் என்பான் . தன்னிளங் கன்றுகாணாத் தாய்முகம் கண்டு சோர்வான் ' ' என்று பாடக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் , மனுநீதிகண்ட சோழனின் உச்சமான கவலையை இந்த உத்தியினால் வெளிக்கொணர்கிறார் சேக் கிழார் சுவாமிகள் ,

     அதாவது தான் உயிரோடு இருந்திருந்தால் இத்தகைய அநீதி இழைக்கப்பட்டிராது . ஆனால் அநீதி இழைக்கப்பட்டுவிட்டதால் தான் உயிரோடு இல்லை . வெறும் நடைப்பிணமாகவே இருக்கிறேன் என்பதைக் காட்டவே இந்த உத்தி பெரிதும் பயன்பட்டது .

இதே உத்தியை கம்பர் பல இடங்களிலும் பயன்படுத்துகிறார் . நாகபாசப் படலத்தில் மூர்ச்சையுற்றுக் கிடக்கும் இலக்குவனை , இறந்துவிட்டான் என நினைத்த இராமனின் தன்மையை கம்பர் பாடும்போது ,

‘வீரரை எல்லாம் பார்க்கும் வில்லினைப் பார்க்கும் வீரப்

பாரவெஞ் சிலையைப் பார்க்கும் பகழியைப் பார்க்கும் பாரில்

யாரிது பட்டாரென்போ லெளிவந்த வண்ணம் என்னும்

     நேரிது பெரிதென்றோது மளவையி னிமிர நின்றான்’ .

 

 இங்கும் பார்க்கும் , என்னும் என வரும் சொற்கள் சேக்கிழார் பன்படுத்தியதைப் போலவே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம் . இதேபோன்ற உத்தியை இவர்களைப் பின்பற்றி கந்த புராணத்திலே கச்சியப்பர் பயன்படுத்தி இருப்பதும் இங்கே கண்டு வியக்கத்தக்கது .

‘வில்லினைப் பார்க்கும் செங்கேழ் வேலினைப் பார்க்கும் . ஏனை

மல்லலம் படையைப் பார்க்கும் வாளியைப் பார்க்கும் , வீரச்

சொல்லினைப் பார்க்கும் வந்து சூழ்தரு பழியைப் பார்க்கும்

கல்லென எயிற்றின் பந்தி கறித்திடும் கவலும் அன்றே’ .

தனது ஏழு தம்பியர்களை அக்கினி முகாசுரன் மாயத் தால் கொன்றதைக் கண்டு வீரவாகு தேவர் புலம்புவதாக கந்தபுராணத்தில் இப்பாடல் வருகின்றது .

இப்படியாக சேக்கிழார் பெருமானின் காப்பிய உத்திகள் பல கம்பரால் எடுத்தாளப்பட்டு , பின்னால் பலரது கவிதைகளிலும் புகுந்துள்ளன .

கம்பருக்குப் பின்வந்த புலவர்கள் பலரிலும் கம்பரின் ஆளுமை புகுந்தது போலவே கம்பரில் சேக்கிழாரின் கவிதைத் தாக்கம் ஒருவகையில் ஆதிக்கஞ் செலுத்தியிருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லாத உண்மையாகும் ,

பார்வை நூல்கள்;

 

  1. கம்பன் கலை பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்
  2. கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-10 ஆசிரியர்: கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்
  3. திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும்-உரையும் -2.ஆசிரியர்: புலவர் பி.ரா .நடராசன்.
  4. பெரிய புராண விளக்கம் பகுதி – 5 . ஆசிரியர்:கி.வா.ஜகன்னாதன்