ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சிலப்பதிகாரத்தில் நம்பிக்கைகளும் முரண்பாடுகளும்

முனைவர் வி.கலாவதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறைத்தலைவர், இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி, இராஜபாளையம். 23 Jan 2020 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம் :

தமிழகத்தில் சமயம் சார்ந்த இலக்கியங்கள் எத்தனையோ காலத்தை வென்று விளங்குகின்றன. அதிலும் குறிப்பாக சிலப்பதிகாரம் போற்றப்படக்கூடிய வகையில் விளங்குகின்றது. தமிழின் பெருமைக்கு வளம் சேர்க்கும் ஒப்புயர்வற்ற பேரிலக்கிய விளங்கும் இந்நூலில் ஆய்வுலக வளர்ச்சியின் காரணமாக கேட்கப்படும் வினாக்கள் ஏராளம்.

அறிவியல் வளர்ச்சியும்,எழுத்துலக புரட்சியும் சிலம்பின் எதார்த்த போக்கிற்கு மாற்றான சில வினாக்களைத் தொடுக்கின்றது. அதன் விளைவாக எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கினை உடைய வாசகர்களும்,நம்பும்  தன்மை உடைய மக்களும் இருப்பது உண்மையாகி விடுகின்றது.

மேற்கண்டப் போக்கினை மாற்றும் விதமான கருத்தினை இக்கட்டுரை  ஆய்வுப்பொருளாகக் கொண்டு   சிலப்பதிகாரத்தில் நம்பிக்கைகளும் முரண்பாடுகளும் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.காலத்தால் ஆதரிக்கப்பட்ட எல்லா கருத்துக்களும் இலக்கியத்தின் பழமை கருதி மதிக்கப்படலாம.; போற்றப்படலாம் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

திறவுச் சொற்கள்;

சிலப்பதிகாரம்,நம்பிக்கைகள்,காப்பியம்,கோவலன்,கண்ணகி,மாதவி.

 

 

 

 

முகவுரை:

     தமிழ் காப்பியங்களில் ஒப்புயர்வற்ற பெரும் பெருமைக்குரிய காப்பியமாகப் போற்றப்படுவது சிலப்பதிகாரம் இதன் பெருமைகளைப் பற்றி பேசாத ஆன்றோர் பெருமக்கள் மிகக் குறைவு. ஒழுக்கத்தை உயர்ந்த பொருளாகக் கருத வேண்டும் என்பதை உலகோருக்கு எடுத்தியம்ப தோன்றியதோர் ஒப்பற்றக் காப்பியமாகத் திகழ்கின்றது. மேலும், எளிமையான வாழ்வியலை எதார்த்த நோக்கில் உண்மைகளைப் புலப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தோன்றிய இந்நூலில்  சமய சார்பற்ற காப்பியம் என்ற நோக்கில் பல விதமான கருத்தாக்கங்கள் ஆய்வுக்குரியனவாக கருதப்படுகின்றன. அவ்வகையில் சிலப்பதிகாரத்தில் நம்பிக்கைகளும் சடங்கு முறைகளும் என்னும் ஆய்வுக் கட்டுரையின் வழி பழந்தமிழ் மக்களின் நம்பிக்கைகள் சிலப்பதிகாரக் காலக்கட்டத்தில் எவ்விதம் நோக்கப்பட்டன என்பதை ஆராய முனைகின்றது.

 

நம்பிக்கை விளக்கம்

     மானுட வாழ்வியல் என்பதை முன்னேற்றம் அடைய முக்கிய பங்கினைப் பெற்றது நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்லாகும். அந்த சொல் நேர்மறையான குற்றமில்லாத சிந்தனைகளின் தொகுப்புக் கூடமாக விளங்கும் சிறந்ததொரு சொல்லாகும். நாகரிகம் வளர வளர சொற்களின் அடைமொழிகளால் சொற்கள் கூட பலமிழக்கும் தன்மை உடையதாக மாறும் போக்கினைக் காண முடிகின்றது. அந்த நோக்கில் நம்பிக்கை என்ற பதத்துடன் 'மூட" என்ற சொற்சேர்க்கை தோன்றும் போது எதிர்மறையான எண்ண ஊடாடல்கள் உருவாக்கப்படுகின்றன. நம்பிக்கை என்பது தமிழ் இலக்கியங்களை பொருத்தமட்டில் நாட்டுப்புற வழக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடிய சொல்லாகவே மாறிப் போனது என்பதை மறுக்க இல்லாது  தமிழ் இலக்கியங்களில் நம்பிக்கை என்பது கடவுளைச் சார்ந்த ஒன்றாகவும் சமயம் சார்ந்த ஒன்றாகவும் பார்க்கும் போக்கு அதிக அளவில் காணப்படுகின்றது. மேற்போக்கான சிந்தனை இலக்கியங்களை உருவாக்குவதில்லை. நிலைத்த சிந்தனைகள் மாறுபட்ட கருத்துக்கள் தான் காலந்தோறும் நிலையான இலக்கியங்கள் உருவாகக் காரணமாகத் திகழ்கின்றது.

     மேலும், 'குறிப்புகளிலிருந்து நாமே உய்த்துணர்ந்து கொள்ளும் முடிவாகக் கதை அமைதலின் அதனிடத்தில் எழும் நம் நம்பிக்கை பெரிதாகிறது. ஆகவே, ஆசிரியன் ஏதோ தன் உள்ளத்தில் தோன்றியதைக் கூறுகின்றான் என்ற உணர்ச்சி பிறப்பதில்லை. நாமே அவனுக்கும் வேறாகப் புறச் சான்றுகள் கொண்டு முடிந்த முடிவுகளாக ஒரு வரலாற்றினை அறிய வருகிறோமென்ற எண்ணம் வரும்படி செய்து வருகிறான் ஆசிரியன்" என்பார். தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.1

                        சிலப்பதிகாரத்தில் நம்பிக்கை இரு வேறுபட்ட சூழ்நிலைகளின் ஆராய்ச்சிக் களமாகக் கொண்டு அணுக வேண்டிய சூழ்நிலை நிலவுகின்றது. 1) நேர்மறை நம்பிக்கை.

2) எதிர்மறை நம்பிக்கை இவற்றில் இளங்கோவடிகளின் பங்களிப்பு இருதலைக் கொள்ளி என்ற நிலையில் இருப்பதை சிலம்பே சான்றாக அமைகின்றது. சிலப்பதிகாரத்தில் வினை வளைவு நம்பிக்கை.

     கோவலன் முந்தைய பிறப்பில் சங்கமன் என்னும் வணிகன் மனைவி கோவலனுக்கு கிட்ட சாபத்தால் கண்ணகி தன் கணவனை இழக்க நேர்ந்தது என்று மதுராபுரி தெய்வம் கண்ணகிக்கு உரைத்தது எனும் கூற்றைக் கண்ணகி நம்புகின்றாள் ஏற்கின்றாள்.

     'முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவனொடு சிங்கா வண்புகழ்ச் சிங்கபுரத்துச் சங்கமன் என்னும் வாணிகன் மனைவி இட்ட சாபம் கட்டியது"2

                                 

என்று சொல்லப்பட்ட வரிகளில் மேற்கண்ட கருத்தை ஆராய வேண்டியுள்ளது. கண்ணகி தன் கணவனோடு மதுரை நோக்கி வரும் வழியில் வனசாரண வயந்த மாலை வடிவுடன் கோவலனை அணுகுகின்றது. அவ்வாறு அணுகும் போது தனக்கு தெரிந்த மந்திரத்தைக் கூறி வந்தது வயந்த மாலையா? என்பதை கோவலன் அறிந்ததாகக் கூறப்படுகின்றது. 

     'வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் இவ்

     ஐஞ்சில் ஓதியை அறிகுவென் யான்" எனகாடு காண்காதை  பா - 214"

என்ற வரிகளில் வஞ்சம் பெயர்க்கும் மந்திரம் அறிந்த கோவலன்.

     மதுரை வந்ததும் பொற்கொல்லனின் மனதில் காணும் எண்ணத்தை அதே மந்திரத்தை பயன்படுத்தி ஏன் அறியவில்லை என்ற வினா ஏற்படுகின்றது. சமண சமயத்தைச் சார்ந்த கோவலன் இம்மந்திரத்தை கற்றறிந்த விதம் குறித்து சிலப்பதிகாரம் சுட்டிக்காட்டவில்லை என்ற கருத்து ஆய்விற்குரியது.

     (பாய்கலைப் பாவை மந்திரம் - கொற்றவைக்குரியது சமண சமயத்தைச் சார்ந்த கோவலன் அறிந்தது எவ்விதம் என்பது ஆய்விற்குரியது)

     மேலும் துன்ப மாலையில், குரவையாடிய மகளிரனைவரும் கூடியதால் அவர் முன்னிலையில் காய் கதிர்ச் செல்வனை, 'பாய்திரைவேலி படுபொருளை" துன்பமாலை அடி - 52  அவன் அறிவான். ஆதலால் தன் கணவன் கள்வனா என கண்ணகி உறுதிப்படுத்தர் கேட்கிறார்.

 

சாலினி உரைத்தது

     கொற்றவை ஏறிய பெண் சாலினி கண்ணகியின் குணநலன்களை எடுத்துரைக்கின்றது.

     'இவளோ, கொங்கச் செல்வி; குடமலை

      தென்தமிழப்பாவை செய்தவக் கொழுந்து

      ஒரு மாமணி ஆய், உலகிற்கு ஓங்கிய

      திருமாமணி"   

                        (வேட்டுவ வரி 47-50 வரிகள்)

என்றுரைக்கின்றது. இவ்வாறு சாலினி கூறியவற்றைக் கேட்ட கண்ணகி,

     'பேதுறவு மொழிந்தனன் மூதறிவு ஆட்டி" என்று

      அரும் பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி,

      விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப-"

                        (வேட்டுவ வரி - 51-59)

நாணத்தால் வெட்கி புன்முறுவல் பூத்தவளாய் கணவனுக்குப் பின் மறைந்து கொண்டாள் என்று கூறப்படும் கருத்தோடு 'கனத்திறம் உரைத்த காதையில்" கண்ணகியின் கூற்று முரண்பாடுடையதாகக் காணப்படுகின்றது. கண்ணகியின் தோழி தேவந்தி கண்ணகி கணவனைப் பிரிந்து துன்புற்றிருக்கின்றாளே என்று கருதி, பாசண்ட சாத்தான் கோவிலை அடைந்து அவள் தன் கணவனைப் பெற வேண்டும் என்று அணுகு, சிறுபூளைப்பூ, நெல் ஆகியவற்றைக் கலந்து தூவி வழிபட்டாள். மேலும்,  கண்ணகியை சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் பொய்கைகளில் நீராடி சாமவேளை தொழும் மகளிர் இப்பிறவியில் கணவனை கூடி இன்புறுவர் என்றும் அப்பொய்கையில் நீராடி வருவோம் என்றும் தேவந்தி அழைக்கின்றாள். ஆனால், கண்ணகி இச்செயல் தமக்கு பெருமையுடையதன்று என்று கூறி மறுத்துவிடுகின்றாள். கண்ணகியின் பெருமைகளை கொற்றவை ஏறிய சாலினி என்னும் மூதாட்டி கூறும் போது மகிழ்ந்தவள், கணவனுக்காக பொய்கையில் நீராடி வணங்க எண்ணாது 'மீடு அன்று" என்று கூறிய கருத்து ஏற்புடையதன்று. சிலப்பதிகாரம் சமயசார்பற்ற காப்பியமாகக் கருதினால், கண்ணகி  சமண சமயத்தைப் பின்பற்றும் பெண்ணாகக் கூறியது விவாத்திற்குரியது அவள் எல்லா சமயங்களுக்கும் முக்கியத்துவம் தரும் பெண்ணாக இளங்கோவடிகள் கூறி இருக்கலாம் என்பது ஆய்வு நோக்கில் கருதப்படக் கூடும்.

 

கனவுச் செய்தி

     சிலப்பதிகாரத்தில் கனாத்திறம் உரைத்த காதையில் கண்ணகி தான் கண்ட கனவை   தேவந்தியிடம் உரைப்பாள். அதேபோல கோவலன் தான் கண்ட கனவை தேவந்தியிடம் உரைப்பாள்.  அதேபோல, கோவலன் தான் கண்ட கனவினை மதுரைக்குச் செல்லும் வழியில் கவுந்தியடிகளிடம் உரைப்பாள். இவ்வேளையில் கண்ணகி தேவந்தியிடம் கூறிய கனவுச் செய்தியை ஏன் கோவலனிடம் கூறவில்லை என்னும் வினாவும் எழுகின்றது.

     மேலும் துன்பமாலையில் தன் கணவன் குற்றம் செய்பவன் அல்லன் என்ற உந்துதலோடு,

     'பாய் திரை வேலி படு பொருள் நீ

     காய்கதிர்ச் செல்வ! கள்வனோ

      என் கணவன்"                 (துன்பமாலை வரிகள் (50-51)

என்று வினா எழுப்புகின்றாள். தன் கணவன் கள்வன் என்று குற்றம் சாட்டப்பட்டதைக் கண்டு  கொதித்து எழுகின்றாள். அவ்வேளையில் எல்லார் முன்னிலையிலும் ஓர் அசரீரிப் பதில் கிடைத்தது. கோவலன் கள்வன் அல்லன் என்று இதனை இன்றைய தலைமுறை வாசகர்கள் ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கின்றது. தொழில் நுட்பக் கூறுகளின் வளர்ச்சி கூட இல்லாத காப்பியக்காலத்தில் அசிரிரீ கேட்டது என்பது உண்மையா? என்பது ஆய்விற்குரியது. இதனால் சிலப்பதிகாரத்தை இலக்கியக் கண்ணோட்டத்தோடு மட்டுமே  பார்க்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆய்வுப் பொருளாக்கி கதையை ஆய்வு செய்ய முனையும் போது ஏற்றுக் கொள்ள முடியாத தன்மைகள் அதிக அளவில் இருப்பினும் அவற்றை காலச் சூழல் கருதிவிட்டு விட வேண்டிய நிலையும் உள்ளது.

     'மதுரை எரியூட்டப் பட்டதைக்

     குறிப்பிடுகையில் கற்புடைய மங்கையர்கள்

     எக்கதியடைவார்களோ" எனத் திறனாய்வாளர்கள் கூறுதல் பொருந்துமா? என்று கேட்கும் போது? அக்கினி தேவனுக்கு கண்ணகி ஆணையிடுவதாகக் கூறுவது கதைக்குப் பொருந்தாது. புறப்பொருளில் போர் செய்ய விளைபவன் பகை நாட்டை எரியூட்டும் போது, பகைநாட்டில் இருக்கும் பெண்கள் பிணியுடையோர், முதியோர் குழந்தைகள் என அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவர். அதுபோல மதுரையை எரியூட்டும் போது கண்ணகி அக்கினி தேவனுக்கு ஆணையிட்டு,

     'பார்ப்பார் அறவோர்" பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி எனுமிவரைக் கைவிட்டு"

              (வஞ்சின மாலை  அடிகள் 53, 54) எனும் கூற்று எவ்வகையில் ஏற்புடைய ஒன்றாகக் கருத முடியும் கருத வாய்ப்பில்லை. எனினும் பலவித முரண்பட்டக் கருத்துக்கள் சிலம்பில் காணப்பட்டாலும், சமூகத்திற்கும், ஒழுக்கநெறிகளுக்கும் உட்பட்டதாகக் கருதும் போது மிகப் பெரியதொரு மாற்றத்தை உலகநெறிக்கு உட்படுத்தி பயணிக்கும் போக்கினை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேம்போக்கான கருத்துக்களால் இலக்கியத்தின் தன்மை குறைவுபடுமோ எனில், வளம் சேரும் என்பதே பொது முடிவாகக் கரும முடியும். மேற்கண்ட கருத்தினை அடியொற்றி தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரும்

     'மதுரை எரியுண்கிறது. எரிகின்ற மதுரையின் துன்பம் தோன்றாமல் இவள் தன் துன்பத்தில் வருந்தி வாடுகின்றாள். தன் துயரே இவளுக்குப் பெரிதாகத் தோன்றுகிறது. துயர் ஒன்றும் தோன்றாது அதன் வடிவேயாகி இவள் வாடுகின்றாள்" 3

             

என்னும் ஆய்வு நூலில் உலக இயல்பினையும், சுயநலப் போக்கினையும் சுட்டிக் காட்டுகின்றார். சமணர்களின்  கொள்கையும் சிலம்பின் கருத்துக்களும்

     'சமண சமயத்தின் கொள்கைகள் கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறனில் விழையாமை, மிகு பொருள் விரும்பாமை, மிகுபொருள் விரும்பாமை என்பனவாகும். இவை ஐந்தினோடு தேன் உண்ணாமை, கள் உண்ணாமை, புலால் உண்ணாமை ஆகிய மூன்றையும் சேர்த்து மூல குணங்கள் எட்டென்பர்"4

     இதுபோன்ற பண்புகள் உடைய சமணசமயத்தின் கொள்கைகளில் மேற்கண்ட அனைத்துமே கொண்டவனாகக் கோவலன் காணப்படுகின்றான். சிலம்பில் மற்றுமொரு முரண்பாடு, யாதெனில், கணவனைப் பிரிந்த கண்ணகி சமண சமய நெறிகளைப் பின்பற்றி தேவந்தியிடம் சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகியவற்றில் நீராடுவது சமணமசயம், சார்ந்தவருக்கு 'பீடன்று" என்று மறுத்துரைத்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. அதன்பிறகு மதுரைக்கு  கவுந்தியடிகளுடன் கண்ணகியும், கோவனும் சொல்லும்போது கவுந்தியடிகளின் அறிவுரையைக் கேட்ட கோவலன், அருகனைப் போற்ற மதுரைக்குச் செல்ல முனைந்ததிலிருந்து சமண சமயத்தின் மீது கோவலனுக்கு ஏற்பட்ட பற்றுதல் தெரிகிறது.

     'மற உரை நீத்த மாசறு கேள்வியர்

     அறவுரை கேட்டு ஆங்கு அறிவினை

     தென்தமிழ் தன்னாட்டு ஏத்தத் தீதுதீர் மதுரைக்கு

     ஒன்றிய உள்ளம் உடையேன், ஆகலின்

     போதுவல் யானும், போதுமின்"

                        (நாடு காண்காதை - 55)

என்னும் செய்தியிலிருந்து இரு வேறு முரண்பட்ட கருத்துக்கள் அறியமுடிகின்றது. கண்ணகி சமண சமயத்தைச் சேர்ந்தவளாக கூறிக் கொள்வதும், கோவலன் கவுந்தியடிகளைக் கண்ட பின்பு தான் அருகதேவனை வணங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாகவும் கூறியுள்ள இருவேறுபட்ட கருத்துக்கள் மூலம் சிலம்பில் முரண்பாடுகள் அதிகம் உள்ளன என்பதற்கு சான்றாதாரமாக அமைகின்றது.

     மேலும், சமய சார்பற்ற காப்பியம் தான் எனினும், ஒரே குடும்பத்திற்குள் எத்தனையோ முரண்பாடுகள் சமயத்தின் அடிப்படையிலே காண முடிகின்றது என்பதற்கு சான்றாக,

     'கோவலனின் தந்தை, மகன் மறைவிற்குப் பின் எல்லாச செல்வங்களையும், பௌத்த சங்கத்திற்குப் புண்ணியதானம் செய்து துறவியாக மாறினார் மாதவியும், அவள் மகள் மணிமேகலையும் பௌத்த சமயத்தைத் தழுவியதைச் சிலம்பு மொழகின்றது"

     'சிலம்பில் மக்கள் வாழ்வும் வழிபாடும்" - ப.131.

என்கிறார் அழகம்மை. மேலும் பௌத்த சமயம் சார்ந்த தந்தை சமணம் சார்ந்த மகன் என்ற போக்கு ஏற்புடையதல்ல.

 

தொகுப்புரை

     'சிலப்பதிகாரம் மானுட வாழ்வியலை எடுத்துரைக்கும் குடிமக்கள் காப்பியம் தான் என்னும். செவி வழி கதையாக கேட்கப்பட்ட காலம் தொட்டு கண்ணகியைப் பத்தினி பெண்ணாகவும், மாதவியைக் கணிகையாகவும் மட்டுமே கேட்டு இலக்கியவாதிகளால் கண்ணகிக்கு உயரிய இடமும், மாதவி விலக்கப்பட்டவளாகவும் காட்டப்பட்டுள்ளது. ஆய்வு நோக்கில் அணுகும் போக்கின் போது தான் சற்று மாறுபட்ட சிந்தனைகளும், அணுகுமுறைகளும் புதிது புதிதாகக் காணமுடிகின்றது.

     கோவலன் 'பாய் கலைப் பாவை" மந்திரம் அருந்திருப்பேயானால் அவன் சமணம் சார்ந்தவனாக இருப்பது எவ்விதம்? என்ற வினா எழுகின்றது.

     சங்கமன் மனைவி இட்ட சாபம் எவ்விதம் கோவலனுக்கு உரியதாகின்றது என்பதும் தொக்கி நிற்கின்றது. மதுரை எரியூட்டிய கண்ணகி தன் சுயநலத்திற்காக பொற்கொல்லனை மட்டும் கொல்லாது ஏன் மதுரை முழுவதும் எரியுண்ணச் செய்தாள் என்பன போன்றவை ஆய்வுக்குரியதாகக் கொள்ளலாம்.

துணைமை ஆதாரங்கள்:

1.    தொ.பா.மீ -        சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் - ப- 22)

2.   சிலம்பு பதிகம் - வரிகள் 46-50)

3. தொ.பா.மீ -      சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் ப.215)

  4. மு.துரைசவாமி, - தமிழாக்கத்தில் சமணம் ஒரு பார்வை,தொகுதி-2.                  ப.124).