ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

முகத்தலளவைக் கருவிகளில் மரக்கால்

முனைவர் சே. கரும்பாயிரம் இளநிலை ஆராய்ச்சி அலுவலர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை – 600 113 23 Jan 2020 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

     மரக்கால் என்பது பண்டைத் தமிழர் பயன்படுத்திய முகத்தலளவைக் கருவியாகும். அம்முகத்தலளவைக் கருவி அம்பணம், குறுணி, வள்ளம் முதலான வேறு பெயர்களையும் சுட்டுகிறது. அவ்வாறான அளவைக் கருவிகளை இன்றளவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் மரக்காலின் தோற்றம், உருவ அமைப்பு, அளவை முறைகள், அளக்கும் முறைகள், பயன்பாடு ஆகியன குறித்து இக்கட்டுரை எடுத்து இயம்புகிறது.

திறவுச் சொற்கள்

    முகத்தலளவை, அளவுக் கருவி, மரக்கால், அம்பணம், குறுணி

அறிமுகம்

    மனித இனம் முதன்முதலில் கையை அளவுக் கருவியாகப் பயன்படுத்தினர். உதாரணமாகக் கைகளில் ஒரு பொருளை அள்ளுதல், பிடித்தல், தூக்குதல் ஆகியவற்றைக் கூறலாம். மக்கள் ஒரு கையில் அள்ளுதலை ஒரு சேரை என்று கூறுவார்கள். அடுத்து அவர்கள் பயன்படுத்தியது மண்ணால் செய்த கலம் முதலான அளவுக் கருவிகளாகும். பின்னர் அவர்கள் மரத்தாலான உழக்கு, மரக்கால் முதலான அளவுக் கருவிகளைப் பயன்படுத்தினர். இவ்வாறான அளவுக் கருவிகளை எண்ணல், நிறுத்தல், முகத்தல் என வகைப்படுத்தலாம். இவற்றுள் முகத்தலளவைக் கருவி என்பது நெல் முதலான தானியங்களை முகந்தெடுத்து அளக்கப் பயன்படுவதாகும். இதற்கு நெல்லிலக்கம் என்னும் வேறொரு பெயரும் உண்டு. நெல்லை மிகுதியும் கொண்டு இம்முகத்தலளவை அளக்கப் பெறுவதால் இப்பெயர் பெறுகிறது. ஆழாக்கு, உழக்கு, நாழி, உரி, மரக்கால், பறை என முகந்து அளக்கக்கூடிய கருவிகள் பல உள்ளன. அவற்றுள் மரக்கால் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மரக்கால்

     மரக்கால் என்னும் சொல்லுக்கு முகத்தலளவைக் கருவி (சீவகசிந்தாமணி,2486:4), அளவைக்கால் (திவாகரம்,7:183), அம்பணம் (ஐங்குறுநூறு,43:1), குறுணி (கண்ணுடையம்மன் பள்,10:3),  தூம்பு (சூடாமணி,7:54), குளகம் (சூடாமணி,7:54), கச்சம் (சூடாமணி,7:54), வள்ளம் (திருச்செங்கோட்டுப் பள்ளு,839:2), கடன் (தமிழ்ப் பேரகராதி,664), தொள்ளை (தமிழ்ப் பேரகராதி,2103), ஒருமரக்கால் விதைப்பாடு (திருநெல்வேலி வழக்கு), உப்பளம் (பிங்கலம்,4:145), ஆண்டு மழையின் அளவு (தமிழ்ப் பேரகராதி,3082), ஆயிலியம் (சூடாமணி,11:189), சோதி (சூடாமணி,10:903), மாயவன் ஆடல் (சூடாமணி,10:903), மரத்தாற் செய்த பாதம் (தமிழ்ப் பேரகராதி,3082), பதினெண் கூத்துகளுள் ஒன்று (கல்லாடம்,41:18) முதலான பல பொருள்களை இலக்கியங்கள், நிகண்டுகள், அகராதிகள் ஆகியன குறிப்பிட்டுள்ளன.

இவற்றில் மரக்காலானது முகந்து அளக்கப் பயன்படும் கருவிகளுள் ஒன்றென உணர்த்துகிறது. அம்பணம், குறுணி, தூம்பு, குளகம், கச்சம், வள்ளம், கடன், தொள்ளை ஆகியன அவற்றின் வேறு பெயர்களாகும்.

ஒரு மரக்கால் விதைப்பாடு என்பது ஒரு மரக்கால் நெல்மணி விதை விதைப்பதற்குரிய நிலத்தைக் குறிப்பதாகும். உப்பளம் முதலான பிற பொருள்கள் மரக்காலின் அளவு சார்ந்து குறிப்பிடவில்லை என்பதை அறியமுடிகிறது.

மரக்காலின் சொற்பொருள்

     மரக்கால் என்னும் சொல்லை மரம் + கால் என்று பிரிக்கலாம். மரம் என்பது மரத்தினையும் கால் என்பது அளவையும் குறிக்கும். கால் என்னும் சொல் நான்கில் ஒரு பாக அளவைக் குறிப்பதாகும். அச்சொல் மரக்காலைக் குறிக்கும் எனச் சூடாமணி நிகண்டு (11:225) கூறியுள்ளது. பல்லவ, சோழர் ஆட்சி காலங்களில் கால் என்னும் சொல் வழக்கில் இருந்துள்ளது. சான்றாகப் பொற்கால் (கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி,387), சூலக்கால் (தமிழ்ப் பேரகராதி,1569) ஆகியவற்றைக் கூறலாம். பொற்கால் என்பது பொன்னால் செய்யப்பட்ட மரக்காலையும் சூலக்கால் என்பது சூலம் பொறிக்கப்பட்ட மரக்காலையும் குறிக்கும்.  எனவே கால் என்னும் அளவுக் கருவி மரத்தினால் செய்யப்பட்டதால் மரக்கால் எனக் காரணப் பெயர் பெற்றது எனலாம். முன்னோர்கள் மரத்தில் அளவுக் கருவிகளைச் செய்தனர் என்பதை, வெதிருழக்கு நாழியாற் சேதிகைக் குத்தி (கலித்தொகை,96:27) என்னும் பாடலடியில் மூங்கில் மரத்தாலான உழக்கு, நாழி என்று கூறுவதன்மூலம் அறியலாம். இங்கு உழக்கு, நாழி ஆகியன மூங்கிலால் செய்த அளவுக் கருவிகள் எனப் பொருள்படும். நீண்ட காலமாக மரத்தால் செய்த மரக்கால் இன்று இரும்பு, பித்தளை ஆகிய உலோகங்களால் செய்யப்படுகிறது. அதற்கு மக்கள் இரும்பு மரக்கால், பித்தளை மரக்கால் ஆகிய பெயர்களைச் சொல்லி அழைக்கின்றனர். இன்றைய காலத்தில் இரும்பு, பித்தளை ஆகிய உலோகங்களால் மரக்கால் செய்தாலும் அவற்றினை இரும்புக் கால், பித்தளைக் கால் என்று கூறாமல் நீண்ட காலமாக மரத்தால் செய்த மரபினால் இரும்பு மரக்கால், பித்தளை மரக்கால் என்று கூறுவதன்மூலம் மரபினை நோக்கமுடிகிறது.

அம்பணம்

    பழந்தமிழர் ‘அம்பணம்’ என்னும் சொல்லை மரக்காலுக்குப் பயன்படுத்தியுள்ளனர். இச்சொல்லை அம்பு + அணம் எனப் பிரிக்கலாம். அம்பு என்பது வட்டத்தையும் அணம் என்பது ஈற்றையும் குறிக்கும். வட்டம் என்பது வளைவாக இருப்பதாகும். எனவே வளைவாக உடைய பொருள்களை அம்பணம் குறிக்கும் என உணரலாம். சான்றாக அம்பணம் எனக் குறித்த சொல்லுக்கு மரக்காலுடன் துலாக்கோல் (தமிழ்ப் பேரகராதி,95), ஆமை (சூடாமணி,11:182), தோணி (சூடாமணி,11:182), யாழ்வகை (தமிழ்ப் பேரகராதி,95) ஆகிய வேறு பெயர்கள் வழங்குகின்றது. அவற்றில் மரக்காலின் அடிப்பகுதி, துலாக்கோலில் அளக்கப் பயன்படும் தட்டு, ஆமை உடம்பின் மேற்பகுதி, தோணியின் அடிப்பகுதி, வளைந்து இருக்கக்கூடிய யாழ் ஆகிய அனைத்திலும் வட்ட வடிவத்தைக் காணமுடியும். மேற்கூறியவற்றிலிருந்து அம்பு என்னும் சொல்லடியாகப் பிறந்த அம்பணம் என்னும் சொல் வட்ட வடிவமுடைய பொருள்களைக் கூறிக் காரணப் பெயராக அமைவதைக் காணலாம்.

     ‘அம்பணம்’ என்னும் சொல் மரக்கால் அளவையை உணர்த்தும் சொல்லாகப் பழந்தமிழ் இலக்கியங்களான ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் ஆகியன கூறியுள்ளன. ஐங்குறுநூற்றில்அம்பணத் தன்ன ஆமை (43:1) என்கிறது பாடலடி. இங்கு அம்பணத்தின் வடிவம் ஆமைக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஆமையின் மேல் பகுதி வளைந்து இருக்கும். அதுபோல அம்பணமும் வளைவாக உடையது எனப் புலப்படுகிறது. ஆமையைத் திருப்பிப் போட்டால் அம்பணத்தின் வடிவத்தைப் போல் இருப்பதைக் காணமுடியும்.

பதிற்றுப்பத்தில் ‘அம்பணம்’ என்னும் சொல் இரண்டு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சேரமன்னன் அம்பணத்தால் கணக்கிட முடியாத அளவிற்கு நெல்லினை அளந்து கொடுப்பான் என்பதனை அறிந்தோர் சொல்வார்கள் என்று பின்வரும் பாடலடிகள் குறிப்பிடுகின்றன.

… … … நெல்லின்,

அம்பண வளவை விரிந்துறை போக்கிய

ஆர்பத நல்கு மென்ப                (பதிற்றுப்பத்து, 66:7-9)

இங்கு அம்பணமானது நெல்லளக்கப் பயன்பட்டதை அறியமுடிகிறது.

பதிற்றுப்பத்தின் மற்றொரு பாடலடிகளில் உழவர்கள் நெற்களத்தில் அறுவடை செய்த நெல்லை அம்பாரமாகக் குவித்து வைத்திருந்ததும் குவித்து வைக்கப்பட்ட நெல்லை அளப்பதற்காக அதில் குவியலாகப் பல அம்பணத்தைச் சொருகியிருந்ததும் என்று கூறியுள்ளன.

பரூஉப்பக டுதிர்ந்த மென்செந் நெல்லின்

அம்பண வளவை யுறைகுவித் தாங்கு      (பதிற்றுப்பத்து, 71:4,5)

என்பதன்மூலம் அறியலாம். இங்கு நெல் அளப்பதற்கு அம்பணம் என்னும் முகத்தலளவைக் கருவிகள் பல பயன்படுத்தப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

     ஐம்பெரும் காப்பிங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தில் அம்பணம் குறித்து ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது. அதாவது தரகர் என்பவர் துலாக்கோல், பறை, அம்பணம் ஆகிய அளவுக் கருவிகளை வைத்திருந்தார் என்பதாகும். 

      நிறைகோல் துலாத்தர் பறைக்கட் பராரையர்

அம்பண அளவையர் எங்கணும் திரிதர        (சிலப்பதிகாரம்,14:209,210)

என்கின்றன பாடலடிகள்.

     அகராதிகளான தமிழ்ப் பேரகராதி (95), யாழ்ப்பாணப் பேரகராதி (39) ஆகியவற்றிலும் ‘அம்பணம்’ என்னும் சொல் மரக்காலைக் குறித்துள்ளதைக் காணமுடிகிறது.

     பதிற்றுப்பத்துக்கு உரையெழுதிய ஔவை.சு.துரைசாமிப்பிள்ளை அம்பணம் என்னும் அளவுக் கருவிப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

மூங்கிலாற் செய்யப்பட்டு வாய் கிழிந்து விரியாவண்ணம் செம்பினால் வாயின் புறத்தே பட்டையிடப்பட்டிருக்கும். இஃது இக்காலத்தும் வடார்க்காடு சில்லாவிலுள்ள சவ்வாது மலையடிவாரத்தே வாழ்வாரிடத்தே வழக்கிலுள்ளது. (பதிற்றுப்பத்து,66:8, ஔவை.சு.துரைசாமிப்பிள்ளை உரை) இதன்மூலம் அம்பணம் என்னும் சொல் மரக்கால் குறித்த மரபின் தொடர்ச்சியாக இன்றளவும் இருந்துவருவதை நோக்கமுடிகிறது. 

குறுணி

    ‘குறுணி’ என்னும் சொல் மரக்கால் குறித்துப் பல்லவ, சோழர் ஆட்சி காலங்களில் வழக்கில் இருந்துள்ளது. கல்வெட்டுகள் இச்சொல்லிற்கு ‘ங’கர வடிவத்தைத் தந்துள்ளன. ஒரு மரக்கால் நெல் விதைக்கக்கூடிய நிலம் குறுணிப்பாடு என்று தமிழ்ப் பேரகராதி (1054) கூறுகிறது.  மக்கள் மூன்று மரக்கால் தானிய அளவை மூன்று மரக்கால் தானியம் என்று கூறாமல் முக்குறுணி என்று அழைக்கின்றனர். அத்தகைய குறுணி என்னும் சொல் முகத்தலளவைக் குறித்து இன்றளவும் மக்கள் வழக்கில் இருந்து வருவதைக் காணமுடிகிறது.

குளகம்

    குளகம் என்பது மரக்காலைக் குறிக்கும் வேறு சொல்லாகும். இது ஆழாக்கு என்னும் முகத்தலளவையும் குறிக்கும் எனத் தமிழ்ப் பேரகராதியில் (1032) குறிப்பிடப்பட்டுள்ளது. ஆழாக்கு என்பது நாழி என்னும் கருவியில் எட்டில் ஒரு பகுதியாகும். அத்தகைய குளகம் என்னும் அளவை நாயக்கர் ஆட்சியில் தருமபுரி மாவட்ட வழக்கில் இருந்துள்ளதைக் கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி (473) குறிப்பிட்டுள்ளது. மேலும் அவ்வகராதி அது தானியம் அளக்கும் அளவைகளில் பெரியது எனவும் அதாவது கலம் என்னும் அளவை போன்றது எனவும் கூறுவதன்மூலம் அறியலாம்.

தூம்பு

    தூம்பு என்னும் சொல் மரக்கால் என்னும் முகத்தலளவை மட்டும் குறிக்காமல் மூங்கில் மரத்தையும் குறிக்கிறது. எனவே மூங்கிலைக் கொண்டு இக்கருவி செய்யப் பெற்றதனால் இப்பெயர் பெற்றிருக்கலாம். அத்தகைய தூம்பு என்னும் அளவுக் கருவி பல்லவர் கால வழக்கில் இருந்துள்ளது.  இதனைப், பெரிய மரக்கால், பூண் கட்டியது. (பல்லவர் ஆட்சியில் தொண்டை மண்டலத்தில் நெல் அளவிற்குரியதாக அமைக்கப்பட்ட மரக்கால்) என்று கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி (273) என்று கூறுவதன்மூலம் அறியமுடிகிறது.

கச்சம்

    பிங்கலம் (10:232), சூடாமணி (11:31), திவாகரம் (7:183) ஆகிய நிகண்டுகள் கச்சம் என்னும் சொல்லுக்கு மரக்கால் என்னும் பொருளைத் தருகின்றன. இது ஒருவகைப் பேரளவு என்று  சீவகசிந்தாமணி (2219:2) கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு இது எண்ணல் அளவைக் குறிக்கிறது. அத்தகைய அளவைக் குறிக்கும் கச்சம் என்னும் சொல்லானது ஆமை என்னும் உயிரினத்தையும் குறிக்கும். ஆதலால் ஆமையின் உருவ வடிவத்தைப் போன்று இக்கருவி இருத்தலால் இப்பெயர் பெற்றிருக்கலாம்.

வள்ளம்

    வள்ளம் என்னும் சொல் மரக்காலின் வேறு பெயராக இன்றளவும் கொங்கு நாட்டு வழக்கில் இருந்து வருகிறது. இச்சொல் மரக்கால் மட்டுமல்லாது கிண்ணம் (சீவகசிந்தாமணி,3130:3) என்னும் பொருளையும் குறிக்கிறது. கிண்ணமானது வளைந்திருப்பதுபோல இவ்வளவையும் வளைந்திருப்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம்.

மரக்காலின் தோற்றம்

    பல்லவர் காலத்தில் வேளாண்மையை மையமாகக் கொண்டு பக்தி இலக்கியம் தோன்றியது. அவர்கள் ஆட்சி காலத்திற்கு முன்புவரை தமிழகத்தில் பரந்துபட்ட அளவில் வேளாண்மை செய்யவில்லை. திணை சார்ந்த வேளாண்மை முறையே இருந்து வந்தது. அப்பொழுது மக்கள் திணை சார்ந்த அளவுக் கருவிகளையே பயன்படுத்தினர். ஆனால் பல்லவர் காலத்திற்குப் பின் அவர்கள் பயன்படுத்திய அளவுக் கருவிகளில் சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாகப் பல்லவர் காலத்திற்கு முன்புவரை மரக்கால் என்றொரு கருவி அம்பணம் என்னும் பெயரில் வழங்கப்பட்டது. அத்தகைய மரக்கால் பல்லவர் காலத்தில் பயன்பாட்டில் இருந்ததைக் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் சான்று பகர்கின்றன. அவர்கள் ஆட்சிக் காலத்தில் தோன்றிய சமணக் காப்பியமான சீவகசிந்தாமணி பின்வருமாறு மரக்காலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. 

 உழுந்துபய றுப்பரிசி யப்பமருங் கலங்கள்

கொழுந்துபடக் கூப்பிநனி யாயிர மரக்கால்

செழுந்துபடச் செந்நெனிறைத்து         (சீவகசிந்தாமணி.2486:1-3)

என்னும் பாடலடிகள் உழுந்து முதலாகக் கூறப்பட்ட தானியப் பொருள்களைக் கலன்களில் நிறைத்தும் ஆயிரம் மரக்கால்களில் செந்நெல்லைக் குவித்தும் வைத்திருந்ததைக் கூறுகின்றன.

     அதோடுமல்லாது பல்லவர் ஆட்சிக் காலத்தில் தோன்றிய சைவ, வைணவ சமயங்களின் முதன்மைக் கடவுள்களான சிவபெருமானோடும் திருமாலோடும் மரக்கால் தொடர்புபடுத்திப் புராணங்கள் புனையப்பட்டுள்ளன. அதாவது ஒரு சிவபக்தர் தம் உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் மதிய உணவு உண்ணும் நேரத்தில் சிவனை வழிபட வேண்டும் என உறவினரிடம் கூறியுள்ளார். அவ்வுறவினர் இந்த ஊரில் சிவபெருமான் இல்லை என்பதை உணர்ந்து தற்காலிமாகக் மரக்காலைச் சிவலிங்கமாக நட்டுள்ளார். அந்தச் சிவபக்தர் மரக்காலைச் சிவனாக வழிப்பட்டார். சிவபக்தர் சென்றவுடன் அம்மரக்காலை அவ்வுறவினர் எடுக்க முயன்றுள்ளார். அதை எடுக்கமுடியவில்லை. ஆதலால் கடப்பாரையால் அந்த மரக்காலைக் குத்தியபோது இரத்தம் வழிந்துள்ளது. சிறிது நேரத்தில் அந்த மரக்காலைக் கொண்ட சிவன் பூமியில் மறைந்து பின்னர்ச் சுயம்பு வடிவமாகத் தோன்றியது. அச்சிவன் பூமியிலிருந்து தோன்றியதால் பூமீஸ்வரர் என்றழைத்து இன்றளவும் மக்கள் அதைப் போற்றி வழிபடுகின்றனர். அந்த ஊர்தான் இன்று மரக்காணம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் புராணக் கதையிலிருந்து சிவபெருமான் மரக்காலின் வடிவமாக இருக்கிறார் என்பதை உணரமுடிகிறது.

     திருமால் ஒரு முறை குபேரனிடம் கடன் வாங்கி உள்ளார். அவர் அந்தக் கடனைக் குபேரனுக்குத் திருப்பிச் செலுத்துவதற்காக மரக்காலால் பொருளை அளந்து கொடுத்துள்ளார். மரக்காலால் அளந்து அளந்து கொடுத்து அவர் சோர்வு அடைந்துவிட்டார். பின்னர் அவர் சோர்வினால் மரக்காலைத் தலையில் வைத்து உறங்கிவிட்டார். மேலும்,

     உலகத்துக்கெல்லாம் படியளந்தவர் பெருமாள் ஆவார். அவர் ஒருமுறை படியளந்த சோர்வினால் தலைக்கு அணையாக மரக்காலை வைத்து உறங்கிவிட்டார். இந்தக் காட்சியைத் திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் காணலாம். மக்கள் அவரைப் படியளந்த பெருமாள் என்றே அழைக்கின்றனர். மேற்கூறிய இருபுராணக் கதைகளிலிருந்து திருமால் தானியம் அளக்க மரக்காலைப் பயன்படுத்தினார் என்பதை அறியமுடிகிறது.

     பல்லவர் ஆட்சிக்குப்பின் பிற்காலச் சோழர் ஆட்சியில் மரக்கால் அரசின் செல்வாக்கைப் பெற்று மதிப்பிற்குரிய அளவுக் கருவிகளுள் ஒன்றாக ஆனது. அவர்கள் ஆட்சிக் காலத்தில் ஆடவல்லான், வீதிவிடங்கன், திருச்சிற்றம்பலமுடையான், திருவண்ணாமலை, காளத்தியுடையான், தக்சிணமேருவிடங்கன் ஆகிய தெய்வப் பெயர்களைக் கொண்ட மரக்கால்கள் வழக்கில் இருந்தன. ஆடவல்லான் என்பது தஞ்சைப் பெரிய கோயில் நடராசப் பெருமானின் பெயர்களுள் ஒன்றாகும். இப்பெயரால் வழங்கிய மரக்கால் அக்கோயிலில் இருந்துள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு கோயிலிலும் இருந்த மரக்கால் அந்தக் கோயிலின் தெய்வப் பெயரால் அழைக்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

     தெய்வப் பெயர்களில் மரக்கால் இருந்ததுபோல அவர்கள் ஆட்சிக் காலத்தில் இராசகேசரி, அருண்மொழித்தேவன் முதலான அரசர்களின் பெயர் கொண்ட மரக்காலும் அருமொழி நங்கை என்னும் அரசியின் பெயர் கொண்ட மரக்காலும் இருந்துள்ளன. இதில் இராசகேசரி என்பது சோழ மன்னர்களின் பட்டங்களுள் ஒன்றாகும். குறிப்பாக இராசகேசரி என்பது இராசராசனுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயரால் வழங்கும் மரக்காலைக் குறிக்கிறது. அருண்மொழித்தேவன் என்பது அவனுடைய இயற்பெயரைக் கொண்ட மரக்காலாகும். அருமொழி நங்கை என்பது வீரராசேந்திர சோழனின் மனைவி பெயரால் வழங்கும் மரக்காலாகும்.

     தெய்வம், அரசர் மட்டுமல்லாது கடமைக்கால், நாட்டுக்கால், பஞ்சவாரக்கால் ஆகிய மரக்கால்கள் சோழர் ஆட்சியில் இருந்துள்ளன. கடமைக்கால் என்பது அரசினால் மக்களிடம் வரியாகத் தானியங்களை அளந்து பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட மரக்காலாகும். நாட்டுக்கால் என்பது நாடு என்னும் பிரிவுடைய பகுதியிலுள்ள மக்களிடம் தானியங்களை வரியாக அளந்து பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட மரக்காலாகும். பஞ்சவாரக்கால் என்பது பஞ்சவாரமாக மக்களிடம் தானியங்களை அளந்து பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட மரக்காலாகும். பஞ்சவாரம் என்பது கிராம மக்களிடம் வரி வசூல் செய்யும் கூட்டத்தாராகும்.

     சோழர் ஆட்சிக்குப்பின் பாண்டிய, நாயக்கர் ஆட்சிக் காலங்களில் மரக்கால் அதன் மரபான பயன்பாட்டில் இருந்துள்ளது. அவர்கள் ஆட்சிக் காலங்களில் ஒவ்வொரு பண்ணைக்கென்று கூலி அளப்பதற்காகத் தனி மரக்காலைப் பயன்படுத்தியுள்ளனர். அதனைப் பண்ணை மரக்கால் என்று திருவாரூர்ப் பள்ளு (65:2) குறிப்பிடுவதன்மூலம் அறியலாம். பண்ணை என்பது பல ஏக்கர் நிலம் ஒருவருக்கு உடைமையாக இருத்தலைக் குறிக்கும். மேலும்,

புவிக்குள் ளேநழ தாண்ட வர்பெயர்

பூண்ட மரக்காலால்

சவுக்கிய மிகுந்த பொன்னம் பலத்

தயாலு கணக்குக் கேற்கவே

யுவப்பா யளந்து களஞ்சியந் தோறு

முகந்து கட்டினரே         (எட்டையபுரப்பள்ளு,171)

என்னும் பாடலடிகள் ஆண்டவர் பெயர் பூண்ட மரக்காலால் நெல் அளந்தனர் என்று கூறியுள்ளன. அவ்வாறான மரக்கால் காலந்தோறும் இருந்து வந்துள்ளதை இன்றளவும் மக்கள் பயன்பாட்டில் இருந்துவருவதைக் கொண்டு அறியமுடிகிறது.

மரக்காலின் உருவ அமைப்பு

    முன்னோர்கள் தொடக்கக் காலத்தில் மூங்கில் மரத்தில் அளவுக் கருவிகள் செய்தனர் என்பதை முன்னரே கண்டோம். நாளடைவில் அக்கருவிகளைச் செய்ய தேக்கு முதலான மரத்தினைப் பயன்படுத்தினர். அந்த வகையில் முகத்தலளவைக் கருவியான மரக்கால் செய்வதற்கு மரத்தின் அடிப்பகுதியைத் தேர்வு செய்தனர். பொதுவாக மரம் என்னும் சொல் மரத்தின் அடிப்பகுதியையும் குறிப்பதாகும். அவ்வடிப் பகுதி உருண்டு திரண்டு முற்றிய கணு இல்லாமல் பார்த்து எடுத்துக் கொண்டனர். அத்தகைய அடி மரத்தின் பகுதியைக் குடைந்து மரக்காலை உருவாக்கினர். அவ்வாறு உருவாக்கிய மரக்காலின் உருவ அமைப்பு நீண்ட மரபைக் கொண்டுள்ளது.

கல்லாடம் என்னும் இலக்கியம் ஒரு கண் பறையின் உருவ அமைப்பிற்கு உவமையாக மரக்காலைக் குறிப்பிட்டுள்ளது. 

      மரக்கா லன்ன வொருவாய்க் கோதை       (கல்லாடம்,8:27)

என்கிறது பாடலடி. இதன்மூலம் ஒரு கண் பறையின் வாய்ப்பகுதி அகன்றும் அடிப்பகுதி வளைந்தும் காணப்படும்.  அதாவது தற்காலத்தில் மரக்காலின் அடிப்பகுதி சற்று அகன்று வளைந்தும் வாய்ப்பகுதி பெரிய வட்ட வடிவத்திலும் காணப்படும். வாய் என்பது தானியம் முகந்து அளக்கக்கூடிய பகுதியைக் குறிப்பதாகும். அந்த வாய்ப்பகுதியைச் சுற்றித் தானியம் அளக்கும்போது விரியாமல் இருப்பதற்காக இரும்புப் பட்டை பொருத்தப்பட்டிருக்கும். எனவே கல்லாடம் மரக்காலை உவமையாக ஒரு கண் பறையின் உருவ அமைப்பிற்குக் கூறியதும் தற்கால மரக்கால் உருவ அமைப்பும் ஒன்றாக உள்ளதை அறியமுடிகிறது.

     மக்கள் மரக்காலின் உருவங்களைக் கொண்டு சட்டி மரக்கால், வால் மரக்கால் என்று கூறுகின்றனர். சட்டி மரக்கால் என்பது மேற்கூறியவையாகும். இது பார்ப்பதற்குச் சட்டியைப் போலவே இருப்பதால் இப்பெயர் பெறுகிறது. வால் மரக்கால் இது போலல்லாமல் நீட்டு வாக்கில் கீழ்ப்பகுதி வளைந்தில்லாமல் வட்டமாகவும் வாய்ப்பகுதி குறுகிய வட்டத்துடனும் காணப்படும். இவ்விரு மரக்காலும் ஒரே அளவைக் கொண்டதாகும்.

மரக்காலின் அளவை முறைகள்

    அரசர்கள் ஆட்சி காலங்களில் அஞ்ஞாலிக்கால், அறுநாழிக்கால், எண்ணாழிக்கால்  என மரக்கால் அளவை முறையில் வேறுபாடு இருந்துள்ளன. அவை முறையே ஐந்து படி, ஆறு படி, எட்டுப் படி ஆகிய அளவுகளைக் கொண்டதாகும். அறுங்கால் மரக்கால், எண்கால் மரக்கால் என வேறுபாடு கொண்ட மரக்கால்கள் தற்காலத்திலும் திருநெல்வேலி வட்டார வழக்கில் உள்ளதைக் காணமுடிகிறது.

     சின்ன மரக்கால், பெரிய மரக்கால் என மரக்கால் வகையுண்டு. அவை முறையே இரண்டு படி, நான்கு படி என அளவுகளை உடையதாகும். சின்ன மரக்காலைப் பட்டை மரக்கால் என்றும் பெரிய மரக்காலை முத்திரை மரக்கால் என்றும் கூறுவர்.

    மரக்காலின் அளவு முறையில் வேறுபாடு இருந்தபோதிலும் அதனுடைய அளவுப் பற்றிப் பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம்.

4 படி என்பது ஒரு மரக்காலாகும். இது ஒரு சோழ நாட்டு வழக்கு. 8 படி கொண்டது ஒரு மரக்கால் என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு. நாழி (சீவகசிந்தாமணி,487:1), இடங்கழி (தமிழ்ப் பேரகராதி,277) முதாலான வேறு பெயர்களும் படி என்னும் முகத்தலளவைக்கு உண்டு.

     பதக்கு என்பது 2 மரக்கலாகும். இம்முகத்தலளவைப் பற்றி நாலடியார் (386) கூறியுள்ளது. இதன் வேறு பெயர்களாக இருங்கரம் (தமிழ்ப் பேரகராதி,327), கடம் (தமிழ்ப் பேரகராதி, 658) என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

முக்குறுணி என்பது 3 மரக்காலாகும். இந்த அளவு முறையைச் சோழ, பாண்டிய மண்டலங்களில் காணமுடியும்.

தூணி என்பது 4 மரக்காலாகும்.  இம்முகத்தலளவைக் குறித்து நாலடியார் (386) சுட்டியுள்ளது. காடி என்னும் முகத்தலளவை தூணியின் அளவைக் கொண்டது எனச் சோழர்கள் (814) என்னும் நூல் கூறியுள்ளது.   

பறை என்பது 6 மரக்காலாகும். இது ஒரு சோழ நாட்டு வழக்கு. 5 மரக்கால் கொண்டது ஒரு பறை என்னும் மற்றொரு வழக்கும் உண்டு. இது முகத்தலளவை மட்டுமல்லாது அளவுக் கருவியாகாகவும் உள்ளது. தற்பொழுது உள்ள நெல்லளக்கும் கருவிகளிலேயே மிகப் பெரியதாகும். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட மக்கள் இம்முகத்தலளவைக் கருவியை அதிகளவு நெல்லளக்கப் பயன்படுத்துகின்றனர்.

     கோணி (தமிழ்ப் பேரகராதி,1182), மூடம் (தமிழ்ப் பேரகராதி,3319) ஆகிய முகத்தலளவைகள் 8 மரக்காலைக் குறிக்கின்றன.

12 மரக்கால் என்பது 1 கலமாகும். கலமானது ஒரு மேனி என்னும் அளவை குறிக்கும். அத்தகைய கலம் என்னும் சொல்லைக் ‘கள’  என்ற வடிவத்தில் கல்வெட்டுகள் குறிப்பிட்டுள்ளன.

கோட்டை என்பது 21 மரக்காலாகும். இது ஒரு நாஞ்சில் நாட்டு வழக்கு. கால் கோட்டை, அரைக் கோட்டை, முக்கால் கோட்டை போன்ற அளவுமுறை அந்நாட்டு வழக்கில் இன்றளவும் இருந்துவருகிறது.

மூட்டை என்பது 24 மரக்கால் என்னும் வழக்குச் சோழ நாட்டில் உள்ளதாகும்.

சலகை என்பது 2 கலம் என்று வின்ஸ்லோ அகராதி (417) கூறியுள்ளது. அதாவது 2 கலம் என்பது 24 மரக்காலாகும். அதுவே கொங்கு நாட்டில் 30 மரக்கால் கொண்டது ஒரு சலகை என்னும் வழக்கு உள்ளது.

கண்டி என்பது 4 கலம் என்று தமிழ்ப் பேரகராதி (689) கூறியுள்ளது. 4 கலம் என்பது 48 மரக்காலைக் குறிப்பதாகும்.

60 மரக்கால் என்பது 1 உறை என்று தமிழ்ப் பேரகராதி (486) குறிப்பிட்டுள்ளது.

400 மரக்கால் கொண்டது 1 கரிசை (தமிழ்ப் பேரகாரதி,747) அல்லது 1 கரசை (தமிழ்ப் பேரகராதி,740) என்று கூறப்பட்டுள்ளது.

மேற்குறித்த அளவுமுறை வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும் என்பதால் தெரிந்த வட்டாரத்தின் வழக்கு மட்டுமே இங்குக் கூறப்பட்டுள்ளது. இந்த அளவுமுறை மேலும் ஆய்விற்குரியதாகும்.

மரக்காலில் அளக்கும் முறைகள்

தானியம் அளப்பதில் இருமுறையைக் கையாளுகின்றனர். குறிப்பாக இவற்றினை நெல் அளக்கும் முறையில் காணமுடியும். ஒருமுறையானது மரக்காலின் மட்டத்திற்கு நெல் அளப்பதாகும். அதனை ஒப்பளவு எனக் கூறுகிறது நாஞ்சில் நாட்டு வழக்கு. அதில் நெல் மரக்கால் மட்டத்திற்கு இருக்கும். மக்கள் அதனை நிறை மரக்கால் என்று கூறுவர். மற்றொன்று மரக்காலின் மேல் வரை இரு கையால் கூப்பி நெல்லை அளப்பதாகும். இதனைக் தாங்கியளத்தல் (திருவேட்டைநல்லூர் அய்யனார் பள்ளு,171:4) கட்டியளத்தல் (முக்கூடற்பள்ளு,139:4) கோலியளத்தல் (திருவாரூர்ப் பள்ளு,65:2) என இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. மரக்காலால் தொடர்ந்து அளக்கும்போது குறிப்பிட்ட எண் வந்தவுடன் ஒரு குறியீடு சொல்லித் தனியாகத் தானியத்தை எடுத்து வைப்பர். அதற்கு உறை (முக்கூடற்பள்ளு,151:2) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மரக்காலின் பயன்பாடு

    அரசர்கள் ஆட்சி செய்த காலங்களில் மக்கள் நிலத்திற்குரிய வரியைத் தானியமாகக் கொடுத்தனர். அவர்கள் தானியத்தை கொடுப்பதற்குப் பெரிதும் மரக்காலையே பயன்படுத்தினர். தானியங்களைப் பெற்ற அரசர்கள் அவரிடம் பணிபுரிந்தோருக்குத் கூலியாகக் கொடுத்தனர்.

மக்கள் அரசுக்குச் செலுத்தியதுபோக எஞ்சிய தானியத்தைக் கைவினைஞர்களுக்கும் கூலித் தொழிலாளர்களுக்கும் கொடுத்தனர். இதனால் அன்றைய காலத்தில் சமூகத்தில் எல்லா நிலைகளிலும் மரக்கால் பயன்பாடு முக்கியத்துவம் பெற்று இருந்தது. அவ்வாறான மரக்கால் இன்றளவும் தானியம் கொடுக்க, பெற என்னும் இருநிலைகளிலும் இருந்து வருவதைக் காணமுடிகிறது.

சடங்கு, நம்பிக்கைகளில் மரக்கால்

     மரக்கால் தொடர்பான சடங்கு, நம்பிக்கை சார்ந்த பண்பாடு மக்கள் வழக்கில் இருந்து வருகிறது. பொதுவாக வேளாண்மையில் மரக்கால் முக்கிய பங்கு வகிக்கிறது. தூற்றிக் குவித்த நெற்பொலியில் மரக்காலால் முதலில் நெல்லை முகந்து தெய்வத்திற்கு எடுத்து வைப்பர். அச்செயல் விளைந்த விளைச்சல் தெய்வத்தால் கிடைத்தது என்னும் நம்பிக்கை சார்ந்தாகும். அடுத்து வரிசையாக நெல்லளக்கும்போது ஒன்று என்று கூறாமல் இலாபம் என்று கூறி அடுத்து இரண்டு, மூன்று எனக் கூறுவர். அவ்வாறு சொல்லி அளந்தால் தானியம் பெருகும் என்ற நம்பிக்கையாகும். அறுவடையில் கடைசி நாளன்று ஏழாங் கடைசி என்றொரு சடங்கு செய்வர். அச்சடங்கானது நெற்குவியலில் மரக்காலை வைத்து அதில் விளக்கேற்றி வழிபாடு செய்வதாகும். மக்கள் அறுவடை நல்லவிதமாக முடிந்ததை உணர்த்தும் விதமாக இச்சடங்கினைச் செய்கின்றனர். நெல்லளந்த பின் ஓரிரு நெல்லை மரக்காலில் போடுகின்றனர். வெறும் மரக்காலாக வைக்கக்கூடாது என்ற காரணத்தினால் அவ்வாறு செய்கின்றனர். மரக்கால் குறித்து இது போன்ற பல பண்பாடுகள் மக்கள் வழக்கில் இருந்துவருவதைக் காணமுடிகிறது.

முடிவுகள்

    மரக்கால் என்னும் சொல்லிற்கு அம்பணம், தூம்பு முதலான பல சொற்கள் வழங்கப்படுவதை இலக்கியங்கள், நிகண்டுகள், அகராதிகள் ஆகியவை கொண்டு நிறுவப்பட்டுள்ளது.

     கால் என்னும் சொல்லிருந்து மரக்கால் தோன்றியதும் பின்னர் இரும்பு மரக்கால், பித்தளை மரக்கால் எனப் பெற்ற விதத்தையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

     மரக்கால் என்னும் கருவி தோன்றும் முன்னர் கைகள் அளவுக் கருவியாகப் பயன்பட்டதும் பின்னர் மண்ணாலான அளவுக் கருவிகளைப் பயன்படுத்தியதையும் பற்றி விளக்கப்பட்டது.

     பக்தி இலக்கிய காலத்தில் மரக்கால் தோன்றியதும் அம்மரக்கால் தெய்வங்களோடு தொடர்புபடுத்தபட்டதும் பின்னர் சோழர் காலத்தில் மதிப்பிற்குரிய கருவியாக மாறியதும் அது இன்றளவும் இருந்து வருவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

     ஒரு கண் பறைக்கு உவமையாக மரக்காலைக் கூறியதும் அது இன்றளவும் அதன் உருவ அமைப்பிலேயே இருந்துவருவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

     மரக்கால் மூலம் தானியம் அளக்கும் முறையும் அதன் அளவு முறையும் குறித்து விரித்துரைக்கப்பட்டது.

     மக்கள் சடங்கு, நம்பிக்கை சார்ந்த பண்பாடுகளோடு மரக்காலைத் தொடர்புபடுத்தியுள்ளதை அறியமுடிகிறது.

துணைநின்ற நூல்கள்

  1. ஐங்குறுநூறு, (உரை.) பொ. வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு, சென்னை, 1961.
  2. எட்டையபுரப் பள்ளு (பதி.) த. பூமிநாகநாதன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2000.
  3. கண்ணுடையம்மன் பள், (பதி.) நாட்டரசன் கோட்டை நகரத்தார், ஸ்ரீ ராஜேஸ்வரி பிரஸ், சிவகங்கை, 1938.
  4. கல்லாடம் மூலம் உரையும், (பதி.) கோ. இளவழகன், தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003.
  5. கலித்தொகை நச்சினார்க்கினியருரையுடன், (பதி.) வெ.பெரி.பழ.மு. காசிவிசுவநாதன், கழக வெளியீடு, சென்னை, 1943.
  6. சிலப்பதிகாரம், (உரை.) பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு, சென்னை, 1979.
  7. சீவகசிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியருரையும், (பதி.) வே. சாமிநாதையர், கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1969.
  8. செங்கோட்டுப் பள்ளு, (பதி.) கவிஞர் ந. கந்தசாமி, பழகு தமிழ்ப் பதிப்பகம், மல்லசமுத்திரம், 1967.
  9. திருவாரூர்ப் பள்ளு, (பதி.) சோமசுந்தர தேசிகர், B. N. Press, Madras.
  10. திருவேட்டைநல்லூர் அய்யனார் பள்ளு, (பதி.) ப. வெ. நாகராஜன், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், 1992.
  11. நாலடியார், (உரை.) D. தீனதயாளு நாயுடு, பி.நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1943.
  12. பதிற்றுப்பத்து மூலமும் உரையும், (உரை.) ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை, கழக வெளியீடு, சென்னை, 1949.
  13. முக்கூடற் பள்ளு, (பதி.) மு. அருணாசலம், தமிழ் நூலகம், சென்னை, 1949.
  14. சோழர்கள் (புத்தகம் - 2), தமிழாக்கம் கே.வி. ராமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை.
  15. சேந்தன் திவாகரம், பிங்கலம், சூடாமணி, சாந்தி சாதனா வெளியீடு, சென்னை, 2004.
  16. தமிழ்ப் பேரகராதி, பகுதி  I – VI, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, 1982.
  17. கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி, சி. கோவிந்தராசன், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1987.
  18. வின்சுலோவின் தமிழ் – ஆங்கில அகராதி, M. WINSLOW, Asian Educational Services, Chennai, 2004.
  19. யாழ்ப்பாண அகராதி, சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை, தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2005.