ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அகத்தியர் ஞானம் முப்பதில், குரு தத்துவம்: அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் விளக்கநூல் வழியான ஓர் ஆய்வு

வி.விமலாதித்தன் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளுக்கான பட்ட மேற்படிப்பு நிறுவகம், பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை 23 Jan 2020 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்:

சித்தர்நெறி நுணுக்கங்களை விளக்குவதும்  முதன்மைச் சித்தரான அகத்தியரின் பெயரிலமைந்ததுமான ‘அகத்தியர் ஞானம் முப்பது| இலக்கியத்தில், குரு தத்துவம் குறித்த கருத்துகளை வெளிக்கொணர்வது ஆய்வின் நோக்கமாகும். யோக நெறி நின்று ஞானம் பெற விளையும் மாணவன், செல்ல வேண்டிய பாதையையும் அதன் சிக்கல் நிலைகளையும், சிக்கல்களைக் கடந்து முன்னேறிச் செல்வதற்கு வேண்டிய யோக நுணுக்கங்களையும், அவ்வாறு யோக நெறியில் முன்னேறுகையில் கிட்டும் இடைநிலை அடைவுகளையும் அவற்றின் தன்மைகளையும், இறுதி இலக்கான முழுமையான ஞான நிலையையும் குறித்து சுருக்கமாகக் கூறும் பணியை அகத்தியர் ஞானம் முப்பது புரிகின்றது. பரிபாசைச் சொற்கள் நிறைந்த இந்த இலக்கியத்தினை, அதன் யோகப் பாரம்பரிய விளக்கநூலான ‘அகத்தியர் யோகஞானத் திறவுகோல்| ஊடாக, இந்தக் கற்கை ஆராய்கின்றது.  குருவின் தன்மை, மாணவனுக்கு குருவிடமிருந்து கிடைப்பவை, குருவின் திருவடிச் சிறப்பும் குருவழிபாட்டின் அவசியமும்,  மாணவன் குருவிடம் கற்க வேண்டிய முறை ஆகியவற்றை, விபரண ஆய்வு முறையூடாக இந்த ஆய்வு வெளிப்படுத்தும்.

 

 

திறவுச்சொற்கள்:

 

சித்தரிலக்கியம், அகத்தியர், குரு, அகத்தியர் ஞானம் முப்பது, அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்

 

ஆய்வு அறிமுகம்:

உடலை வளர்த்து அதன் மூலம் உயிர் வளர்த்து இறுதி நிலையான ஞானப்பேற்றை எய்துவதே சித்தர்களின் வழியாகும். உயிரை வளர்ப்பது அல்லது ஆன்மப் பரிணாமத்தைத் துரிதப்படுத்துவதற்காக பல சித்தர்களும் தத்தமக்கே உரிய தனித்துவ வழிமுறைகளைக் கொண்டிருந்தனர். மதத்தையும் ஆன்மிகத்தினையும் வேறு வேறாகக் கண்ட சித்தர்கள் ஆன்மீக உயர்வுக்கு முக்கியத்துவம் தராத, வெற்று மதச்சடங்குகளைப் புறந்தள்ளினர். மதவெறியும் வெற்றுச் சடங்கு சம்பிரதாயப் பற்றும் விட்டு, ஞானப் பெரு நிலைக்கான தாகம் கொண்டவர்களையே தமது மாணாக்கராக அங்கீகரித்தனர். அத்தகைய யோக மாணவர்களுக்கு மட்டும் புரியும் வகையில், உடம்பை வளர்க்கும் உபாயத்தையும் உயிர் வளர்க்கும் உபாயத்தையும் பரிபாசைச் சொற்களடங்கிய பாடல்களுடாக அறிவித்தனர்.

 

அத்தகைய சித்தர் குழாத்தில் முதன்மையானவராக கூறப்படும் அகத்தியரின் பெயரிலமைந்த “அகத்தியர் ஞானம் முப்பது" என்ற சித்தர் இலக்கியம், ஒரு யோக மாணவன் செல்ல வேண்டிய பாதையையும் அதன் சிக்கல் நிலைகளையும், சிக்கல்களைக் கடந்து முன்னேறிச் செல்வதற்கு வேண்டிய யோக நுணுக்கங்களையும், அவ்வாறு யோக நெறியில் முன்னேறுகையில் கிட்டும் இடைநிலை அடைவுகளையும் அவற்றின் தன்மைகளையும், இறுதி இலக்கான முழுமையான ஞான நிலையையும் குறித்து சுருக்கமாகக் கூறுகின்றது. இந்த இலக்கியத்தில் விடயச்செறிவுடைய முப்பது பாடல்களும் நூற்பயன் கூறும் ஒரு பாடலுமாக முப்பத்தொரு பாடல்கள் காணப்படுகின்றன.

 

அகத்தியர் ஞானம் முப்பது நூலுக்கு, குருபாரம்பரிய நெறி நின்று ஸ்ரீ ஸக்தி சுமனனால் ஆக்கப்பெற்ற விளக்கநூலான “அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்" யோக விளக்கங்களை வழங்குவதுடன் பரிபாசைச் சொற்களின் கட்டையும் அவிழ்க்கின்றது. யோக மாணவன் ஒருவன் அறிய வேண்டிய வித்தைகள், யோகத்தில் அடைய வேண்டியநிலை, பிராணாயாமம், பிராண வலிமையின் பயன், வாமபூசை இரகசியம், மனமும் அதன் திரிபுகளும், வாசிப் பிராணாயாமம், சிவயோகியின் அமிர்தம், விந்து கட்டும் முறை உள்ளிட்ட பல விடயங்கள் இந்த விளக்கநூலில் விபரிக்கப் படுகின்றன. அகத்தியர் ஞானம் முப்பது இலக்கியத்தின் மீதான இந்த ஆய்வுக்கு இந்த விளக்கநூல் துணைகொள்ளப்படுகின்றது.

 

யோகப்பாதையின் பல்வேறு அம்சங்களையும் கூறியுள்ள அகத்தியர் ஞானம் முப்பதில், குரு தத்துவம் குறித்த அம்சத்தை மட்டும் இந்த ஆய்வு, நுணுக்கி நோக்குகின்றது. மாணவனுக்கு யோகநெறியை விளக்கும் இந்த இலக்கியம், குருவின் உயர்ந்த நிலை, குருவைப் பணிந்து கற்க வேண்டிய முறை, குருவால் அருளப்படும் நன்மைகள், யோகப்பாதையின் சிக்கல் நிலைகளில் குருவருள் தரும் காப்பு, குருவின் பாதங்களின் மகிமை, குரு வழிபட்டின் அவசியம் என பல்வேறு விடயங்களைக் கூறுகின்றது. இதன் பிரகாரம் “அகத்தியர் ஞானம் முப்பது நூலில், குருதத்துவம் குறித்து கூறப்படுவன யாவை?" என்ற ஆய்வு வினாவை எழுப்புவதன் மூலம், இந்தக் கற்கை, அதற்கான விடையை விளக்கநூலைத் துணைகொண்டு வெளிக்கொணர முனைகின்றது.

 

குருவின் இயல்பு

அகத்தியர் ஞானம் முப்பது, குருவை “மெய்ஞானக் குருபரன்"  என்று போற்றுகின்றது. உடலைப்பேணி உயிரினை வளர்த்து சித்த நிலை அடைந்து, ஒளிநிலையில் அழிவற்று பிரபஞ்சத்தின் உயர் சக்தி நிலைகளில் இருந்து வரும் சித்தர் பெருமக்களே மெஞ்ஞானக் குருக்கள் என அகத்தியர் யோகஞானத் திறவுகோல் கூறுகின்றது. “வித்தை தந்த சத்குரு" என்று மற்றொரு வகை குருநிலையை அகத்தியர் ஞானம் முப்பது முன்வைக்கின்றது. மெஞ்ஞானக் குருவின் வழியில், மனித உடலில் இருந்து யோக வித்தையைப் பயிற்றுவிக்கக் கூடியவரே அந்த சத்குரு என விளக்கநூல் விளக்குகின்றது.

 

எந்த நாளும் பொய் ஆகாத, உண்மை உபதேசத்தை அளிப்பவர் குரு எனவும் யோக சாதனையின் நுணுக்கங்களை அவர் பயிற்றுவிப்பார் எனவும் கூறப்படுகின்றது. சூட்சுமமான மறைபொருளை தெளிவிப்பவராக குரு இருக்கின்றார். அவருடைய பாதங்கள் தாமரை போன்று மலர்ச்சியுடன் இருப்பன. மகா காரண சரீரம் என்ற அதி உயர் இறை நிலையில் மெஞ்ஞான குரு இருப்பதுடன் அந்த நிலையை அடைவதற்கு மாணாக்கருக்கு வழி காட்டுபவராகவும் உள்ளார். பிரபஞ்சத்தில் இறை நிலையாய் வியாபித்திருக்கும் குரு, சீடனுக்குள்ளும் அவனது உயிராய் உள்ளதாக, கூறப்படுகின்றது.  அதேவேளை, யோக மாணவன் தனது இறை சாதனையின் போது, உச்சந்தலையில் உணர்வை நிறுத்தி தியானிக்கையில் அதனூடாக ஞானப் பொருளை அளிப்பவராகவும் குரு சித்தரிக்கப்படுகின்றார்.

 

முரண்நிலைப்பட்டவையெனக் கருதப்படும் வேதாந்தம், சித்தாந்தம் ஆகிய தத்துவங்கள் நுண்பொருள் நிலையில், வேறு வேறானவை அல்ல என்பதே குருவின் விளக்கம் என்பதை, “வேதாந்த சித்தாந்த மிரண்டுமென்ன, மேன்மையுள்ள பெரியோர்க்கு மெல்லாமொன்றே"  என்ற வரிகள் சுட்டுகின்றன. அதேவேளை, கற்கும் சீடனை வேதாந்தம், சித்தாந்தம் ஆகிய இரண்டு தத்துவங்களையும் நன்கு கற்றுத் தெளியும்படி பணிக்கக் கூடியவராக குரு இருக்கின்றார். 

 

ஒருவனின் உடலில் மனம் உதிக்கும் இடம் மற்றும் அது ஒடுங்கக்கூடிய இடம் ஆகியவற்றை சுட்டிக்காண்பிக்கக் கூடிய திறன் படைத்தவராகவும் குரு இருக்கின்றார். அதன் மூலம் தியான சாதனையில் எங்கு உணர்வைச் செலுத்தினால் மனத்தை ஒடுக்கலாம் என்ற வழியை மாணவனுக்கு குரு காண்பிக்கின்றார். உயர்நிலை யோக சாதனைகளில் மாணவன் சிக்கல்களை எதிர்கொள்ளும் போது, தனது திருவடியை எண்ணித் தியானிக்கும் நிலையில், அவனுக்கு பாதுகாப்பு அளித்து, தனது அளவற்ற கருணையால் அந்தச் சிக்கல்நிலைகளை தீர்த்துவிடக் கூடிய வல்லமையை குரு கொண்டுள்ளாரென, அகத்தியர் ஞானம் முப்பது கூறுகின்றது. மூச்சினைப் பயன்படுத்தி மேனிலை அடையும் வகை அறிந்த சித்த புருடராக குரு இருப்பதுடன், உச்சந்தலைக்கு மேலே உருவாகுவதாக கூறப்படும் அமிர்த கற்பத்தை உண்டு சிவயோகியானவராகவும் அவர் குறிப்பிடப்படுகின்றார். அத்தகைய குருவே, யோகநெறி நிற்கும் மாணவனுக்கான நல்ல ஆசானாகவும் இருப்பாரென சுட்டிக்காட்டப்படுகின்றது.

 

“சாகாத காலை நன்றாய் காண வேணும் - தணல்

வேகாத தலையறிந்து கூட வேணும்

போகாத புனலறிந்து உண்ணவேணும்

பொருளறிந்த சற்குருவை போற்றவேணும்"

 

என்ற வரிகள் ஊடாக, சாகாக் கால், வேகாத் தலை, போகாப் புனல் என்று கூறப்படுவன மூன்றும் சித்தர் சம்பிரதாயப் பரிபாசைச் சொற்களாகும். ‘கால்| என்றழைக்கப்படும் மூச்சை வாசியாக்கி அதன் மூலம் அமிர்த நிலையை அடையும் போது, அது சாகாக்கால் என அழைக்கப் படுகின்றது. விளக்கநூலான அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் இதனை |அமிர்த சுவாசம்| எனவும் குறிப்பிடுகின்றது. வேகாத் தலை என்பது அதி நுண்மையானதும் மகா காரண சரீரம் எனப்படுவதுமான அழியாப் பெரு நிலை ஆகும். இந்த இரு பெரும் நிலைகளையும் தருவது போகாப்புனல் என்றழைக்கப்படும் அமிர்தம் எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்த அமிர்தத்தை உண்டு, மகாகாரண சரீரம் அடைந்த ஆன்மா, மீண்டும் பிறவி வட்டத்திற்குள் போய்ச் சிக்கிக் கொள்ளாது. அதனால் தான் இந்த அமிர்தம், போகாப்புனல் என்று அழைக்கப்பட்டது. சித்தர்களின் இத்தகைய, சாகாக் கால், வேகாத் தலை, போகாப் புனல் என்ற யோக சூட்சுமங்களை, தன்னை வணங்கிக் கேட்பவனுக்கு கற்பித்து அவனைப் பயிற்றுவிக்கும் ஆற்றல் உடையவராக குரு சித்தரிக்கப்படுகின்றார்.

 

அதைப் போலவே, யோகத்தின் உயர்நிலைகளை அடைவதற்கான மூலமான விட்டெழுத்து, தொட்டெழுத்து, விடாதெழுத்து ஆகிய மூன்றையும் தன்னைப் பணிந்து கேட்பவனுக்கு கற்பிப்பவராகவும் அவர் இருக்கின்றார். மூச்சினை வெளிவிட்டு உச்சரிக்க வேண்டிய எழுத்தான |அ|கரம் விட்டெழுத்து எனப்படும். காற்று வாயினைத் தொடும் போது ஒலிக்கும் எழுத்தான ‘உ|கரம் தொட்டெழுத்து ஆகும். காற்றினை வெளிவிடாது உள்ளே ஒலிக்கும் எழுத்தான ம் எனும் ~ம|கரம் விடாத எழுத்து ஆகும். ஆக, “ஓம்" என்ற மூல மந்திரத்தின் கூறுகளான அகர, உகர, மகரங்களே, விட்டெழுத்து, தொட்டெழுத்து, விடாதெழுத்து ஆகிய மூன்றுமென விளக்கநூல் விளக்கம் கூறுகின்றது. இவற்றையும் மாணவனுக்கு பயிற்றுவிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பது குருவினுடைய இயல்பாக காட்டப்படுகின்றது.

 

முருகனுக்கு ஆறுமுகம் உள்ளதெனக் கூறப்படுவதன் சூட்சுமப் பொருளாக, அந்த ஆறு முகங்களும் மனித உடலில் உள்ள மூலாதாரம், சுவாதிட்டானம் உள்ளிட்ட ஆறு ஆதாரங்களே என்பதையும், அந்த ஆறு ஆதாரங்களின் சக்திகளையும் நிறைநிலைக்கு கொண்டுவரும் சூட்சுமத்தையும் பயிற்றுவிக்கக் கூடியவரே குரு என, குருவின் இயல்பு சுட்டிக்காட்டப்படுகின்றது. 

 

யோக மாணவனுக்கு குருவிடமிருந்து கிடைப்பவை

யோகநெறி நின்று ஞானப்பெரு நிலை அடையவிரும்பும் மாணவனுக்கு குருவிடமிருந்து கிடைக்கக்கூடியன, விபரிக்கப்படுகின்றன. ஞானப்பெரும் பேற்றை அடைவதற்கான வித்தை, வித்தையைத் தொடங்குவதற்கான உபதேசம், ‘ஓரெழுத்து வழி| என்று சொல்லப்படும் முதற்கட்டப் பயிற்சியான ஓம் எனும் மந்திர சாதனை ஆகியன குருவிடமிருந்து மாணவனுக்கு கிடைக்கப்பெறும். கருவாகிய உயிரை உடலில் நிறுத்துவதன் மூலம் இறவா நிலை அடைவதற்கான வழி, அதற்கான குரு மருந்து எனப்படும் இரகசிய உத்தி, சித்திகள் மற்றும் முக்திக்கான வழி ஆகியனவும் குருவிடமிருந்து கிடைக்கக் கூடியன.

 

பரி, வாசி, வாலை ஆகிய மூன்றும் மூச்சு சார் யோகப் பயிற்சிகளுக்கான பரிபாசைச் சொற்களாகும். யோக மாணவன் தனது யோகப்பயிற்சிகளால் மூச்சினை எவ்வாறு சீராக்கி “பரி" நிலைக்கு கொண்டு செல்வது என்பதையும், அதனை பின்னை எப்படி வாசியாக்குவது என்பதையும், வாசியான மூச்சினை உயர் நிலையான வாலை ஆக்கும் முறையையும் குரு பயிற்றுவிப்பாரென, சுட்டிக்காட்டப்படுகின்றது. மேலும், எட்டு - இரண்டு சூட்சுமம் எனப்படும் அகர, உகர சூட்சுமத்தையும் யோக மாணவன் குருவிடமிருந்து பெறலாம். இதன் மூலம் சிவத் தன்மை அடைவதற்கான வழியும் காண்பிக்கப்படும். வேதாந்தம், சித்தாந்தம் ஆகிய சாத்திரங்களை உரிய முறையில் கற்பதற்கு வழிகாட்டும் குரு நுண் பொருள் நிலையில் இரண்டிற்கும் பேதமில்லை என்பதையும் சீடனுக்கு உணர்த்துவிப்பார். பிராணாயாமம் செய்வதற்கான, சீடனின் உடலுக்கு உரியதும் பொருத்தமானதுமான வழியைக் காண்பிப்பார். யோகப்பாதையில் சிக்கல் நிலை தோன்றுங்கால், குருவைச் சரண்புகும் சீடருக்கு அவருடைய பாதுகாப்பும் கருணையும் கிட்டுமெனக் கூறப்படுகின்றது. ஆசானாக இருந்து, சித்தர்களின் மூல குருவான முருகப்பெருமானின் மூல மந்திரத்தை, குருவே அளிப்பார். மேலும் யோக சூட்சுமங்களான, விட்டெழுத்து, தொட்டெழுத்து, விடாதெழுத்து ஆகியவற்றின் சூட்சுமங்கள், ஆறு ஆதாரங்களைச் சித்தி செய்யும் வழி ஆகியனவும் குருவாற் கிட்டும் நல்லறிவாகுமென அகத்தியர் யோகஞானத் திறவுகோல் கூறுகின்றது.

 

குருவின் திருவடிச் சிறப்பும் வழிபாட்டின் அவசியமும்

குருவின் திருவடிகளே அறிவுத் தெளிவிற்கான ஆதாரமென அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் விளக்கம் கூறுகின்றது.

“கார்த்தாக் காலோரெழுத்து வழியும் சொல்வார்

கருச்சொல்வார் குருச்சொல்வார் களங்கமற்ற

பார்த்தாக்காற் சித்திமுத்தி யிரண்டுஞ் சொல்வார்

பரி வாசி வாலை மூன்றெழுத்துஞ் சொல்வார்

சேர்த்தாக்கா லெட்டோடே யிரண்டும் சொல்வார்

சிவஞ் சொல்வார் நாலுக்குமிடமும் சொல்வார்

பூத்தாக் காலாயிரத் தெட்டிதழின் வாசி

பூங்கமலத் திருவடியை பூசை செய்யே"

 

என்ற இரண்டாம் பாடல், குருவின் திருவடியைப் பூசிப்பதால் கிட்டும் ஞான வழிகளைச் சுட்டிக்காட்டுகின்றது. யோகத்தில் சித்தி அடைவதற்கான பாதையைத் தெரிந்து கொள்வதற்கும், அதன் வழி செல்வதற்கும் குருவின் தாமரை போன்ற பாதங்களை தலை உச்சியில் உணர்வைச் செலுத்தி தியானிக்க வேண்டுமென, அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் குறிப்பிடுகின்றது.

 

"பார்க்கையிலே பவளவொளி பச்சை நீலம்

பருவான பொன்பசுமை வெண்மையைந்தும்

சேர்க்கையிலே சூரிய னுதயம்போல

செகசோதி பூரத்தின் காந்திதானும்

ஆர்க்கையிலே கொடுத்தபொருள்

வாங்குமாப் போல ஐந்துருவுமொன்றான வடிவே தோணுங்

கார்ப்பதுதான் திருவடியே சரணமென்று

காத்தவர்க்குத் தீங்கில்லை கருணை தானே"

 

எனும், 11 ஆவது பாடலூடாக, மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய உடகின் ஆதார சக்கரங்களைச் சித்தி செய்யும் போது, யோக மாணவனுக்கு தென்படும் நிறங்கள் கூறப்படுகின்றன. ஏழாவது ஆதார சக்கரமான சகஸ்ராரத்தில்  இந்த நிறங்களைச் சேர்க்கும் போது, ஜெகஜோதியான பூரணப் பேரொளி தோன்றும் எனக் கூறப்பட்டுள்ளது. விளக்கநூலான அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் இந்த நிலையில் மாணவனை எச்சரிக்கின்றது. உடலின் ஆதார சக்கரங்களில் உறை நிலையில் இருக்கும் சக்திகளை யோக சாதனையால் பிரித்து வெளிப்படுத்தலானது, உடலின் சாதாரண இயங்கு நிலைக்கு மாறானது என, விளக்கநூல் கூறுகின்றது. இதன் காரணமாக மாணவனின் மனம் மற்றும் உடல் ஆகியன, துன்பத்தை எதிர்கொள்ள நேரிடலாம். இந்தப் பயிற்சியைச் செய்யும் போது, உடல் மனம் ஆகியவற்றில் அளவுக்கு மீறிய சக்தி நிறைவதன் காரணமாக, சித்தத்தில் ஏற்கனவே பதிந்துள்ள கெட்ட ஃ துன்பம் தரக்கூடிய பதிவுகளும் வலுப்பெற்று வெளிப்படக்கூடிய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது. இப்படியான நெருக்கடி நிலைகளில், குருவின் திருவடியொன்றே பாதுகாப்பை நல்கக்கூடியதெனக் கூறும் அகத்தியர் யோக ஞானத் திறவுகோல், அந்தத் துன்ப நிலையில் ஏழாவது ஆதார சக்கரமெனக் கூறப்படும் சகஸ்ராரத்தில் குருவின் திருவடியை நினைந்து மாணவன் தியானிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றது. இதன் மூலம் குருவின் திருவடியால் வெளிப்படும் கருணை காரணமாக குறித்த நெருக்கடி தீர்ந்து மாணவனுக்கு பாதுகாப்பும் கிட்டுமெனக் கூறப்படுகின்றது. கற்க வேண்டிய சாஸ்திரங்கள் குறித்த வழிகாட்டல், பாதுகாப்பான பிராணாயாமம் செய்வதற்கான உரிய அறிவுறுத்தல் ஆகியனவும் குருவை வழிபடுவதனால் கிடைக்குமெனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

 

குருவிடம் மாணவன் கற்க வேண்டிய முறை

மெஞ்ஞான குரு ஒருவரைச் சரணடைந்து அவரது அருளால், மனித உடலில் உள்ள சத்குரு ஒருவரிடம் வித்தையைப் பெறும் யோக மாணவன், அந்த வித்தையை பன்னிரெண்டு ஆண்டுகள் பயிற்சி செய்ய வேண்டும் என்பதை அகத்தியர் ஞானம் முப்பது நூல் வலியுறுத்துகின்றது. மேலும், குரு சொல்லும் யோக இரகசியங்களைக் கவனமாகக் கற்பதுடன், அவருடைய திருவடிகளை உச்சந்தலையில் எண்ணி உணர்வை அங்கு செலுத்தி தியானிக்க வேண்டுமெனவும் கூறப்படுகின்றது. இவ்வாறு செய்தால் குருவருளால் படிப்படியாக அறிவு அளிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

குருவின் அறிவுரையை ஏற்று வேதாந்தம், சித்தாந்தம் இரண்டையுமே ஐயம் திரிபற ஆழ்ந்து கற்க வேண்டும். உலகில் முரண் நிலை கொண்டவையாகக் கூறப்படும் இந்த இரு தத்துவ நிலைகளும், நுண்பொருள் நிலையில் ஒன்றே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மனம் உதிக்கும் இடம் மற்றும் ஒடுங்கும் இடம் ஆகியவற்றை சத்குரு சுட்டிக்காட்டியபடி கண்டு பயிற்சிக்க வேண்டும். குருவின் வழிகாட்டலின்படி, யோக மாணவன் தனது உடலுக்கு பொருத்தமான வழியில் பிராணாயாமத்தை பாதுகாப்பாக செய்ய வேண்டும். உயர்நிலை யோக சாதனைகளால், உடல், மனத்திற்கு துன்பம் நேர்கையில் குருவின் திருவடியில் சரணடைந்து அவருடைய காப்பையும் கருணையையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

 

மூச்சினைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சித்த நிலை அடைவதற்கும், அமிர்த கற்பத்தைப் பெற்று உண்டு சிவயோகி ஆவதற்கும் முயற்சிக்க வேண்டும். அகத்தியர் ஞானம் முப்பதில் பல நுணுக்கங்கள் மிகச் சுருக்கமாகவே கூறப்பட்டுள்ள அதேவேளை, வேறு நூல்களில் குறித்த பகுதிகள் விரிவாக இருக்கும் விபரமும் தரப்பட்டுள்ளது. அகத்தியர் பூரண சூத்திரம், கொங்கணவர் கடைக்காண்டம் ஐந்நூறு ஆகியன அவற்றுக்கு எடுத்துக்காட்டுகளாகும். நல்ல யோக மாணவன், அந்த நூல்களையும் தேடிக் கற்க வேண்டுமென, விளக்கநூல் குறிப்பிடுகின்றது.

 

 

முடிவுரை

 

ஞானப்பெருநிலைக்கான சித்தர் யோகநெறி நுணுக்கங்களைச் சுருக்கமாக விளக்கும் ‘அகத்தியர் ஞானம் முப்பது| இலக்கியம், குரு தத்துவத்திற்கு முதன்மை அளிக்கின்றது. குருவைப் பணிந்து கற்றல், குருவின் திருவடி வணக்கம் ஆகியவற்றினூடாகவே நிறைநிலைக்கான ஞானம் சித்திக்கும் என்பதை வலியுறுத்துகின்றது. அந்த இலக்கியத்தில், குருவின் தன்மை, மாணவனுக்கு குருவிடமிருந்து கிடைப்பவை, குருவின் திருவடிச் சிறப்பும் குருவழிபாட்டின் அவசியமும்,  மாணவன் குருவிடம் கற்க வேண்டிய முறை ஆகியவற்றைத் தெளிவாக வெளிக்காட்டும் பணியை, அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் புரிந்துள்ளது.

 

உசாத்துணை

1. ஸ்ரீ ஸக்தி சுமனன், அகத்தியர் யோக ஞானத் திறவுகோல், பிரணவ் சுவஸ்த ஸ்தானம், சென்னை, 2016.

2. முனைவர் பழ.சம்பத்து, சித்தர்களின் சித்தாந்தம், இளம்பிறை பதிப்பகம், திண்டிவனம், 2007.