ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

மூன்றாம் உலகக் கவிதைகளின் பேசுபொருள்

சி. ஒசாநிதி உதவி விரிவுரையாளர் மொழித்துறை கிழக்குப் பல்கலைக் கழகம் 23 Jan 2020 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

மூன்றாம் உலகம் என்ற தொடர் பிரெஞ்சுப் புரட்சியின் மூன்றாம் பிரிவினர் என்பதை முன்மாதிரியாகக் கொண்டு உருவாகியது. உலகம் முதலாளித்துவம், சோசலிசம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இதனுள் அடங்காத உலகம் மூன்றாம் உலகம் என அழைக்கப்பட்டது. இதில் கூட்டுச்சேரா நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளின் காலனித்துவ நாடுகளாக இருந்து புதிதாக விடுதலை பெற்ற நாடுகளும் அடங்கும். அந்தவகையில் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் அடங்குகிறது.

இந்நாட்டு மக்கள் தங்களது வாழ்வில் முகம்கொடுத்துள்ள சிக்கல்களை தமது கவிதைகளினூடாக வெளிப்படுத்தியுள்ளார்கள். இவர்களது கவிதைகளை மூல மொழியிலிருந்து வ.கீதா, எஸ். வி. ராஜதுரை ஆகியோர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்கள். அந்தவகையில் மூன்றாம் உலகக் கவிதைகளின் பேசுபொருள் என்னும் தலைப்பில் அமைந்துள்ள இவ் ஆய்வானது வ.கீதா, எஸ். வி. ராஜதுரை ஆகியோர் தமிழில் மொழிபெயர்த்துள்ள 'அவ்வவ்போது பறித்த அக்கரைப் பூக்கள்'(1993), மண்ணும் சொல்லும்'(2006) என்னும் இரண்டு கவிதைத் தொகுப்பைக் அடிப்படையாகக் கொண்டு இடம்பெறுகிறது.

இக்கவிதைகள் பகுப்பாய்வு நோக்கில் ஆராயப்படுகிறது. இதன் மூலம் மூன்றாம் உலகக் கவிதைகளின் பேசுபொருளான ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெண்களின் பிரச்சினைகள், மண்ணுரிமை, மொழியுரிமை, சமூக சமத்துவம் என்பவற்றை வெளிப்படுத்த முடியும்.

திறவுச் சொற்கள்:

     மூன்றாம் உலகம், அவ்வவ்போது பறித்த அக்கரைப் பூக்கள்

     மண்ணும் சொல்லும் 

1.1   ஆய்வுத் தலைப்பு

                     மூன்றாம் உலகக் கவிதைகளின் பேசுபொருள்

1.2   ஆய்வு வரையறை

இவ் ஆய்வானது 'அவ்வவ்போது பறித்த அக்கரைப் பூக்கள்'(1993), 'மண்ணும் சொல்லும்'(2006) என்னும் இரண்டு கவிதைத் தொகுப்பை அடிப்படையாககக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. 

1.3   ஆய்வு நோக்கம்

மூன்றாம் உலகக் கவிதைகளின் பேசுபொருளினூடாக மூன்றாம் உலக நாட்டு மக்களின் வாழ்வியற் கோலங்களை வெளிப்படுத்துதல்.

1.4    ஆய்வு முறையியல்

இவ்வாய்வானது 'அவ்வவ்போது பறித்த அக்கரைப் பூக்கள்'(1993), 'மண்ணும் சொல்லும்'(2006) என்னும் இரண்டு கவிதைத் தொகுப்பை அடிப்படையாககக் கொண்டு பகுப்பாய்வு நோக்கில் ஆராயப்படுகிறது.

மூன்றாம் உலகக் கவிதைகளின் பேசுபொருள்

மூன்றாம் உலக நாடுகள் அனைத்துமே ஏதேனுமாரு வகையில் ஏகாதிபத்திய மூலதனக் கொடுமையின் சுரண்டலுக்கும், அரசியல் பண்பாட்டு ஒடுக்குமுறைக்கும் உட்பட்டவை. பெயரளவிலான சுதந்திரம் இந்நாடுகளில் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் உலக மூலதனத்தின் முதலாளித்துவ பண்பாட்டின் ஆதிக்கத்தில் இருந்து அவை இன்னும் விடுபடவில்லை. நவகாலனித்துவ வடிவம் கொண்டுள்ள உலக முதலாளித்துவம் இந்நாடுகளின் பண்பாட்டிற்கு, தனித்தன்மைக்கு அச்சுறுத்தல்களாகவே இருந்தன. அந்தவகையில் மூன்றாம் உலகக் கவிதைகளில் மூன்றாம் உலக  நாட்டு மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெண்களின் பிரச்சினைகள், மண்ணுரிமை, மொழியுரிமை, சமூக சமத்துவம் என்பவற்றை பேசுபொருளாக வெளிப்படுத்த முடியும்.

அ. ஏகாதிபத்திய எதிர்ப்பு

மூன்றாம் உலக நாட்டு மக்களின் கவிதைகளில் கணிசமானவை எதிர்ப்புக் குரலாகவே அமைந்துள்ளது. இம்மக்கள் முதலாளித்துவ நாடுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு போர், பட்டினி, அரச ஒடுக்குமுறை என்னும் கொடுமைகளுக்கு உட்பட்டிருந்தார்கள். இதனால் ஏகாதிபத்தியத்தியத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தி உள்ளதைக் காணலாம். 

அந்தவகையில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தங்களது எதிர்ப்புணர்வை கவிதைகளில் எழுதுவதற்கு தாள் மற்றும் எழுதுகருவி இல்லாமல் சிறையின் சுவர், கழிவறைக்குப் பயன்படுத்தும் தாள்களைக் கொண்டு எழுதியுள்ளார்கள். பெயர் தெரியாத வங்காளக் கவிஞர் ஒருவர் தனது சிறையின் அருகில் இருந்த ப்ரொபிர் ராய் சௌத்ரி என்னும் மார்க்சியப் புரட்சியாளர் இறந்ததைக் கேட்டு சிறைச் சுவரில் கல்லைக் கொண்டு எழுதினார். இவருடைய 'உங்களால் முடியுமானால்' என்னும் கவிதை இறந்தவரைப் பார்த்து அழுது புலம்புவதை விட அவரை நினைத்து பெருமிதம் அடைவதோடு, அவரை நெஞ்சில நிலைநிறுத்தி போராட்ட உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. உதாரணமாக இக்கவிதையிலிருந்து சில வரிகள்.

              'உங்களால் முடியுமானால்

              உங்கள் இதயத்தில்

              அவனைப் புதையுங்கள்

              உங்கள் இதயப் பறவையின்

              இன்னொலி கேட்டு

              உறங்கும் உங்கள் ஆன்மா

              விழித்தெழுவதைக் காண்பீர்கள்' (2006, மண்ணும் சொல்லும்(தொகு))

புரட்சியாளன் ஒருவன் வாழும்போது நாம் இறந்து விடுவோம் என்று வாழ்வதைவிட இறந்து விட்டோம் என நினைத்து வாழ்ந்தால் போராட்டத்தின் இறுதியில் இறந்தாலும் அவ் இறப்பு வெற்றியின் அடையாளமாகக் கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு இறந்தாலும் ஒவ்வொரு உடலுறுப்பும் எதிரியியை எதிர்க்கும் ஆயுதங்களாக மாற்றமடையும் எனவும் சில கவிதைகள் அமைந்துள்ளன. அந்தவகையில் சூடானைச் சேர்ந்த மெகால் அல் கிசௌரியன் 'ஜான்' என்னும் கவிதை இறப்பு வெற்றியின் அடையாளம் என்பதை வெளிப்படுத்துவதாய் அமைகிறது. உதாரணமாக இக்கவிதையிலிருந்து சில வரிகள்.                           

 'ஒரு நாள் நீ இறந்து விடுவாய்

              என்ற நிச்சயத்தோடு இருப்பதை விட

              நீ இறந்து விட்டாய் என்று நம்புவது எவ்வவோ எளிதானது'

(மெகால் அல் கிசௌரியன், 1993, அவ்வவ்  போது பறித்த அக்கரைப் பூக்கள்(தொகு))

தேபோன்று வங்காளக் கவிஞர் குதிராம்போலின் 'பத்து மாதங்கள் பத்து நாட்கள்' என்னும் கவிதை போராட்டத்தில் தான் இறந்தாலும் மீண்டும் தமது உரிமைக்காக பிறப்பெடுப்பேன் என்னும் வகையில் அமைகிறது. உதாரணமாக இக்கவிதையிலிருந்து சில வரிகள்.

              'பத்து மாதங்கள் பத்து நாட்கள்

              நகரட்டும் நான் மீண்டும் பிறப்பேன் அம்மா,

              என் சிற்றன்னையின் வீட்டில்

              என்னை உன்னால் அடையாளம் கண்டு பிடிக்க

              முடியாவிட்டால் அம்மா, என் கழுத்தில் இருந்த தூக்குக்

கயிற்றின் அடையாளத்தைத் தேடு' (குதிராம்போஸ், 2006, மண்ணும்  

                                                                                                                     சொல்லும்(தொகு))

போராட்ட வீரர்களின் உடலுறுப்புக்கள் முதலாளித்துவ ஆட்சியாளர்களினால் வெட்டி அகற்றப்பட்டாலும் அவை அனைத்தும் எதிரியின் ஆயுதங்கள் என்றும் எதிர்ப்பை மிகவும் உருக்கமுடன் ஆந்திரக் கவிஞர் சிவசாகரரின் 'மக்களின் உயிர் மூச்சைக் கொண்டு' என்னும் கவிதைவெளிப்படுத்தியுள்ளது. உதாரணமாக இக்கவிதையிலிருந்து சில வரிகள்.

              'நீ வெட்டியெறிந்த விரல்கள்

              ஒடுக்கப்பட்டோரின் சகாப்பத்தை எழுதும்

              மக்களின் உயிர்மூச்சைக் கொண்டு

              வரலாறு உனது தற்காலிக வெற்றிகளுக்கு

              ந்தரசமாதி கட்டும்'(சிவசாகரர்.,2006, மண்ணும் சொல்லும்(தொகு))

மூன்றாம் உலக நாட்டு மக்களுக்கு உரித்தானது சமாதானம் ஒன்று மட்டுமே சமாதானத்தை ஏற்படுத்துவதாகக்கூறி உள்நுழையும் சில காலனித்துவ ஆட்சியாளர்களை காகம் எனக் குறிப்பிடுவதோடு தங்களுடைய சரணாலயத்திற்குள் அதாவது தங்களுடைய நாட்டிற்குள் உள்நுழைய முடியாது என்று விலங்குகளினூடாக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேபோன்று உள்நாட்டு ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளார்கள். உதாரணமாக ஈராக்கின் ரபில் ஜனாபி, ஈரானியக் கவிஞர் ஜன்னட்டி அட்டே ஆகிய இருவரும் தத்தம் அரசாட்சியின்கீழ் ஒடுக்கப்படும் உருது மக்களுக்காக பரிந்து பேசுவதைக் காணலாம். ரபில் ஜனாபி 'எனது கவிதைப் பயணங்களினூடாக' என்னும் கவிதையில் பின்வருமாறு கூறுகிறார்.

'எனது கவிதைப் பயணங்களினூடாக

              அரபு உலகம் முழுவதையும் நான்

              உரசிச் சென்றேன்

              சொல் ஒரு பூரண வல்லமை என்று

              சிம்மாசனத்தை விட்டுக் கீழே

இறங்காத ஒரு மகாராணிஎன்று'

(ரபில்ஜனாபி,2006,   மண்ணும்சொல்லும்(தொகு))

பராக்கிரமபாகுவின் கொடித்துவக்குவின் 'நம்மில் ஒருவன்' என்னும் கவிதை இலங்கையில் உள்ள இனப்பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாக அமைகிறது. மேலும் சில கவிஞர்கள் தங்களது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் ஆயுதமாக துப்பாக்கிகள், ஈட்டிகள் என்பதை விட கவிதைகளே ஆயுதம் எனக் கூறியுள்ளார்கள். அதாவது வரலாற்றை மாற்றியமைக்கக்கூடிய சக்தி கவிதைகளுக்கு உண்டு உலக வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட தம் இன மக்களின் வரலாற்று அவலங்களை தனது கவிதைகளில் பதிவு செய்துள்ளார் செர்கோ பெகாஸ். உதாரணமாக இக்கவிதையிலிருந்து சில வரிகள்.

'ஏதேனும் ஒரு மரம் அக்கொடுஞ் செயலைப்

              பார்த்துத் தானிருக்கும்

              தன் வேர்களில் அக்கொடியோரின் பெயர்களை

              எழுதி வைக்கத்தான் செய்யும்' (செர்கோ பெகாஸ், 2006,

                       மண்ணும்  சொல்லும்(தொகு))

கொடுமைகளாலும், வேதனை அடையும் மக்கள் கடவுளும் தங்களை கைவிட்டு விட்டார்களென நினைத்து அவநம்பிக்கை கொள்வதுண்டு. அதேபோன்று ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு உட்பட்டு அல்லலுற்ற மக்கள் கடவுளும் தங்களை கைவிட்டு விட்டதாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அர்ச்சனா வர்மானின் 'கடவுள்' என்னும் கவிதை அமையப்பெற்றுள்ளது. இவ்வாறு மூன்றாம் உலக நாட்டு மக்களின் எதிர்ப்புணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

ஆ.பெண்களின் பிரச்சினைகள்

பெண்களின் பிரச்சினைகளைப்பற்றிப் பேசாத நிலையில் தாங்களே அவர்களுடைய பிரச்சினைகளை முன்வைக்கின்றனர். உலகில் எத்தகைய வரலாற்று மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், அது இன்னும் ஆண்களின் உலகமாகவே உள்ளதை சுட்டிக்காட்டுவதாக பாகிஸ்தானிய பெண்கவிஞர் கிஷ்வத் நஜித்தின் 'ஒரு கவிதை' என்னும் கவிதை அமையப்பெற்றுள்ளது. ஆண்மகன் தான் குழந்தையாக இருக்கும்போது விளையாடப் பயன்படுத்தும் ஆடு குதிரையின் மாற்றுருவம்தான் அவள். பெரியவனானபின் பயன்படுத்திக் கொள்ளும் மனைவி என்கிறார். உதாரணமாக இக்கவிதையிலிருந்து சில வரிகள்.

'ஒரு ஆடுகுதிரையின் மீது

              ஒரு குழந்தை ஆடுகிறது

              அது மரக்குதிரை

              குதிரையை அடிப்பவன்

              தன்னைத் தானே மெச்சிக் கொள்கிறவன்

              மாறாமலேயே இருக்கிறான்

              எஜமானாக சவாரி செய்பவனாக

              கணவனாக' (கிஷ்வத் நஜித், 2006, மண்ணும்  சொல்லும்(தொகு))

பெண்களை அடிமை நிலையில் வைத்திருக்கும் மறைநூல்களையும், மரபுகளையும் ஆண்கள் துணைக்கு அழைப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார் மற்றுமொரு கவிஞர்  சயீதா கஸ்தர். இந்தியப் படைப்பிலக்கிய உலகிலும் அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ள தலித்தியப் பெண் கவிஞர்கள் பலர் உருவாகியுள்ளனர். அவர்கள் சாதிய, பண்பாட்டு ஒடுக்கு முறைக்கு எதிரான அம்பேத்காரருடைய போராட்ட மரபை முன்னெடுத்துச் சென்றுள்ளதுடன் ஆணாதிக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்துதிலும் துணிச்சல் மிகுந்தவர்களாகவும் உள்ளனர். மராத்தியப் பெண் கவிஞர் ஹீராபன்ஸேடா வரலாற்றில் புத்தருக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட அவரது மனைவி யசோதராவிற்கு வழங்கப்படவில்லை  ஏன்? என்று கேள்வியை எழுப்புகிறார். உதாரணமாக இக்கவிதையிலிருந்து சில வரிகள்.

'ஓ யசோதரா

              இந்த அநீதியைக் கண்டு நான் வெட்கப்படுகிறேன்

              ஒரு புத்த விகாரத்தில்கூட

              உன்னைக் காண முடியவில்லை' (ஹீராபன்ஸேடா, 1993, அவ்வவ்                                 போது பறித்த அக்கரைப் பூக்கள்(தொகு))

மேலும் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்மார்களின் பிரச்சினைகளை வியத்நாம் கவிஞர் செலான் வியென் 'ஒரு தாயாக இப்பது குறித்து' என்னும் கவிதையினூடாக ஒரு தாய் தன்னுடைய குழந்தைக்கு அன்பு, இசை, பறவைகளின் ஒலி என்பவற்றைக் கற்றுக் கொடுப்பதைவிட விமானங்களின் ஒலி, குண்டு வீச்சுகளுக்குபப் பின்பு செய்ய வேண்டியவை எவை என்பவற்றை வெளிப்படுத்துவதாய் அமைகிறது. இவ்வாறு பெண்களின் பிரச்சினைகள் இக்கவிதைகளினூடாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

இ. மண்ணுரிமை

மூன்றாம் உலக நாட்டு மக்கள் முதலாளித்துவ நாடுகளின் ஆட்சியினால் தங்களது நாட்டை அந்நியர்களிடமிருந்து விடுதலை பெறச் செய்ய வேண்டும் என்ற தாய் நாட்டுப்பற்றை, தாய் நாட்டின் மீதான ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அந்தவகையில் அரபு நாடுகளுக்கிடையில் பிளவு ஏற்பட்டு பிரிந்துள்ளதை நினைத்து அரபு நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென்று தனது தாய் நாட்டுப்பற்றை சிரியாவைச் சேர்ந்த நிஸார் கப்பானி வெளிப்படுத்தியுள்ளார். உதாரணமாக இக்கவிதையிலிருந்து சில வரிகள்.

             

' அவை பேசின ஒரே தாயகம் ஒரே மக்கள் பற்றி

              எனது தேசத்தின் நுழைவாயிலில் தூக்கியெறியப்பட்டேன்

உடைந்த கண்ணாடி போல'   1993, அவ்வவ்    போதுபறித்த   அக்கரைப் பூக்கள்(தொகு))

பாலஸ்தீனக் கவிஞரான மஹ்மூத் தார்விஷ் இஸ்ரேல் என்னும் காலனித்துவ அரசு உருவாக்கப்பட்டதன் காரணமாக பாலஸ்தீனத்தில் இருந்து தப்பிஓடி லெபனானுக்கும் பின்பு கலீலீக்கும்(பாலஸ்தீனம்) அதன்பின்பு அங்கு ஏற்பட்ட போரினால் லெபனானுக்கும் தப்பியோடினார். இவ்வாறு பல இடங்களுக்குச் சென்று வாழ்ந்துள்ளதால் தனது நாட்டில் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனது நாட்டில் வாழவேண்டுமென்ற இவருடைய ஏக்கத்தை 'அடையாள அட்டை' என்னும் கவிதை வெளிப்படுத்தியுள்ளது.  உதாரணமாக இக்கவிதையிலிருந்து சில வரிகள்.

              'யாருடைய நிலத்தின்மீதும் அத்துமீறி நடப்பவன் அல்ல

              ஆனால் நான் பசியால் துடிக்கும்போது எனது

              மண்ணை அபகரித்தவர்களின் சதையை விழுங்குபவன் நான்'

(மஹ்மூத் தார்விஷ், 1993, அவ்வவ்   போது   பறித்த அக்கரைப் பூக்கள்(தொகு))

போராட்டத்தில் ஈடுபட்டுடுள்ளதால் உயிர்; அச்சுறுத்தல் ஏற்பட்டு தனது தாய்நாட்டில்(பாராஹிவேயில்) வாழ முடியாது ஆஜன்ரீனாவில் வாழ்ந்த எல்வியோ ரொமரோ மீண்டும் தனது தாய் நாடு திரும்பும்போது அந்நாட்டு அரசாங்கத்தினால் தனக்கு பல தொல்லைகள் ஏற்பட்டு மீண்டும் ஆஜன்ரீனாவிற்கு செல்ல லேண்டிய நலை ஏற்பட்டது. இதனால் தனது தாய்நாட்டில் வாழ முடியாத தாய் நாட்டின் மீதான ஏக்கத்தை 'ஒரு நாட்டைத் தேடி' என்னும் கவிதையினூடாக வெளிப்படுத்தியுள்ளார். அதாவது தனது ஊரில் உள்ள பாலம் பற்றிய நினைவுகளை மீட்டிப் பார்க்கிறார். உதாரணமாக இக்கவிதையிலிருந்து சில வரிகள்.

              'அந்த இடத்திற்கு மீண்டும் வந்தேன்

              பாலத்தில் மாற்றம் இல்லை

              அதன் இளமைக் காலத்தில் அதனிடம்

              தண்ணீர் பாட்டிசைத்து      

அங்கு தான் உன் கரம் பற்றினேன்.' (எல்வியோ ரொமரோ, 2006,

மண்ணும்  சொல்லும்(தொகு))

ஈ. மொழியுரிமை

பன்னூறு ஆண்டுகளாக ஐரோப்பியர்களின் இன ஒடுக்குமுறைக்காளான ஆபிரிக்க மக்களுக்கு காலனித்துவம் விட்டுச் சென்றவை சுய வெறுப்பும், நம்பிக்கையின்மையும் தான். ஆபிரிக்காவில் எழுந்த விடுதலைப் போராட்டங்கள் இவற்றைப் போக்க முனைந்தன. இவ்போராட்டத்தின் தாக்கத்திற்கு உட்பட்ட அறிவு ஐPவிகளும், படைப்பாளிகளும், ஆபிரிக்க மக்களுக்குப் புதியதொரு அடையாளத்தை காலனித்துவமும், ஐரோப்பிய இனவாதமும் உருவாக்கியிருந்த எதிர்மறை அடையாளத்திற்குப் பதிலாக வழங்க முற்பட்டனர். புதிய ஆபிரிக்க மானிடத்திற்கான தேடல் பல வடிவங்களை மேற்கொண்டது.  புதிய அடையாளத்தைப் பிரகடனப்படுத்த புதியமொழி தேவையெனக் கருதிய சில கவிஞர்கள் தமது கவிதைகளில் இப்புதிய மொழியை வளர்த்தெடுக்கலாயினர். ஆபிரிக்க மக்களின் பாரம்பரிய பண்பாடுகளை கறுப்பினத்தவரின் தனித்தன்மையை தமது கவிதையில் வலியுறுத்தி ஓர் ஆபிரிக்க மொழியை உருவாக்க முனைந்தனர்.

தன்னைக் கறுப்பினத்தவராகப் படைத்ததற்கு நன்றி தெரிவிக்கின்றார். ஐஸ்வரிகோஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னாட்டாடீயின் 'கடவுளே உமக்கு நன்றி' எனும் கவிதையில் காணலாம். உதாரணமாக இக்கவிதையிலிருந்து சில வரிகள்.

              'கடவுளே உமக்கு நன்றி

              என்னை ஒரு கறுப்பனாகப் படைத்தற்காக

              வெள்ளை நிறம் விசேட நாட்களுக்குரியது

கறுப்பு நிறமோ ஒவ்வொரு நாளுக்கும்' (பெர்னாட்டாடீ,1993, அவ்வவ்     போது   பறித்த அக்கரைப் பூக்கள்(தொகு))

ஒரு புதிய மொழிக்கு உந்துதலாக அமையக்கூடிய கவிதைகளைப் படைக்க வந்த ஆபிரிக்கக் கவிஞர்கள் ஒரு முரண்பாட்டில் சிக்கியுள்ளதைக் காணலாம். காலனித்துவத்தால் சிதைக்கப்பட்ட ஆபிரிக்க வாழ்வு முறைகளையும் மறுக்கப்பட்ட விடுதலைகளையும் கவிதையில் மீட்டெடுக்க வந்த அவர்கள் காலனி ஆட்சியாளர்களின் மொழிகளிலேயே எழுத வேண்டி இருந்தது. காரணம் அவர்களுக்கு இந்த மொழிகளில் தான் கல்வி புகட்டப்பட்டது. இவர்கள் மத்தியில் நூற்றுக்கணக்கான மொழிகள் வழங்கி வந்த போதிலும் அவற்றிக்கு வரி வடிவம் இல்லை.

ஆபிரிக்காவில் காலனி ஆட்சியாளர்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த கிறிஸ்தவ மதம் புகுத்தப்பட்டபோது ஐரோப்பியர்கள் விவிலியத்தை இம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ஆபிரிக்க மொழிகளுக்கு வரிவடிவம் கொடுத்தனர். பின் விவிலியத்தை மொழியாக்கம் செய்தனர். அபிரிக்கர்கள் அம்மொழிகளில் எழுதத் தொடங்கியபோது ஒரு வகையில் அவர்கள் ஐரோப்பியர்கள் வகுத்த பாதையில்தான் நடந்தனர். இந்த முரண்பாட்டைக் கடந்து செல்வது எப்படி? சொல்லைச் செயலுடன் இணைத்தும் தங்கள்மீது திணிக்கப்பட்டவற்றிக்கு புதிய அர்த்தங்கள் வழங்கியும், புதிய அர்த்தங்களை மக்களிடம் கொண்டு சேர்த்துமே இந்த முரண்பாட்டை ஆக்கபூர்வமான வகையில் கடந்து செல்ல முயன்றுள்னர் ஆபிரிக்கக் கவிஞர்கள்.

பெர்னான்டெஸ் தெஒலிவெய்ரோ மரியோ அந்தோனியாவின் 'காதலும் எதிர்காலமும்' எனும் கவிதை நாங்கள் புதிய மொழியில் பேச முயல்வதோடு தங்களது மொழிப்பற்றையும் வெளிப்படுத்துகிறார். உதாரணமாக இக்கவிதையிலிருந்து சில வரிகள்.

              'உனக்குப் புரியாத இந்த மூப்பெய்திய மொழியை

              நான் அமைதிப்படுத்த வேண்டும்.

              வருங்காலத்தின் புதிய மொழியில்

              நான் பேச வேண்டும், மலர் சூடிய அந்த மொழியில்

பழங்காலத்தைப் பற்றிய இந்த ஏக்கத்தை...'(பெர்னான்டெஸ் தெஒலிவெய்ரோ மரியோ அந்தோனியாவின், 2006,மண்ணும் சொல்லும்(தொகு))

உ. சமூக சமத்துவம்

புதிய மொழிகள், புதிய அர்த்தங்கள் முடிவில் இவற்றிக்கு உயிர் கொடுப்பது வரலாற்று அம்சங்களாகின்றன. பழையவற்றை நம்மை ஒடுக்கியாளும் கருத்து நிலைகளைச் சாடுவது போராட்டத்தின் முதல் கட்டமாகும். போலி அடையாளங்களைச் சாடும் சொல் செயலுடன் இணைக்கப்பட்டாலொழிய கவிஞனுக்கு எஞ்சியிருப்பது அந்நியமாதலேயேயாகும். தலித் கவிஞரான நீரவ்பட்டேலின் நிலை இவ்வாறானதொரு நிலையாக அமைகிறது.

இவரது 'ஆர்யகுமாரன்' என்னும் கவிதை, பிறப்பினால் தனிப்பெருமை கொள்ளும் பார்ப்பனரை எள்ளி நகையாடுகிறது. தனது தூய்மையின் பொருட்டும் பிற சாதிகளை மறுத்து ஒதுக்கும் ஆர்யகுமாரனின் உடலும், மானுட உடல் தான், மூப்பும் பிணியும் மரணமும் பிடித்து ஆட்டும் வெறும் உடலும், தசையும், நரம்பும்தான் என்பதை அறுவைச் சிகிச்சைமூலம் காட்டுகிறார். உதாரணமாக இக்கவிதையிலிருந்து சில வரிகள்.

              'அவனது கொப்பூழிலிருந்து புனுகு எதையும்

              அவர்களால் பெற முடியவில்லை

              அவனது தோலை அங்குலம் அங்குலமாய்

உரித்தெடுத்த போதிலும்' (நீரவ்பட்டேல்,2006,மண்ணும் சொல்லும்(தொகு))

தனது தலித்தன்மயை அவர் நிலைநாட்ட வருகையில் தலித் அடையாளத்தை நோக்கிய அவரது தேடல் ஒரு கேள்விக்குறியாக விளங்குகிறது. காரணம் அவருக்கு ஏற்பட்டிருந்த அடையாளக் குழப்பத்தை நீக்க வல்லது வரலாற்றுக்கணத்தில் உறுதி செய்யப்பட்ட தலித் மக்களின் பூரண விடுதலையே வரலாற்றுக் களத்தில் உறுதி செய்யப்பட்ட இதுவரை சாதிக்கப்படாத ஒரு விடயமாக இது இருப்பதால் கவிஞர் 'என்ன செய்வது' என்று தெரியாது திகைத்து நிற்கிறார். ஆண்டாண்டு காலமாக உயர் சாதியினரின் இழி சொற்களையும், வசை மாதிரிகளையும் கேட்டு வந்த தலித்துக்களின் நியாயமான கோபாவேசமே அவரது கவிதையில் வசைச் சொற்களாக வெளிப்படுகிறது. இதனை 'குழப்பம்' என்னும் கவிதையில் காணலாம். உதாரணமாக இக்கவிதையிலிருந்து சில வரிகள்.

'என்னை நீங்கள் சக்கிலியன் என்றழைக்கும்போது

              என் மனம் புண்படுகிறது

உங்கள் வயிற்றிலில் உதைக்க விரும்புகிறேன்'

(நீரவ்பட்டேல்,2006,மண்ணும் சொல்லும்(தொகு))

ஜோதி லஞ்செவர் தலித் மக்களின் பிரச்சினையை வெளிப்படுத்தும் வகையில் 'பெயரற்றவர்கள்' எனும் கவிதையை ஆக்கியளித்துள்ளார். இக்கவிதைத் தலைப்பே சமூகத்தில் எந்தவொரு அடையாளமும் அற்றவர்கள் தலித்துக்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதையும் அவர்களது துன்பத்திற்கு எதுவித செவிசாய்க்காமல் அவர்களை கவனத்திற்கு உட்படுத்தாத நிலையைக் காணலாம்.

தலித்துக்கள் தங்களது உரிமைக்கான போராடியுள்ளனர். இவை வரலாறு முக்கியத்துவம் வாய்ந்தது. அண்ணல் அம்பேத்கர் தலமையின்கீழ் நாசில் நகரத்தில் உள்ள கலாராம் கோயிலில் தலித்துக்கள் நுழைவதற்காக நடாத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டமாக அவரது தலமையில் மஹட் நகரில் பொதுக்குளத்தில் நீர் எடுக்கும் உரிமைக்காக நடாத்தப்பட்ட போராட்டத்தையும் குறிக்கின்றது. இப்போராட்டங்கள் அம்பேத்காரின் தலமையில்; கீழிருந்த குறியீடுகளாகும். உதாரணமாக இக்கவிதையிலிருந்து சில வரிகள்.

'கலாராமும் சாவ்தார் குளமும்

              துன்பத்தின் வரலாறு

              நம் இதயங்கள் ஒவ்வொன்றிலும் செதுக்கப்பட்டுள்ளது.'

              (ஜோதி லாஞ்செவர் ,2006,மண்ணும் சொல்லும்(தொகு))

ஆந்திரக் கவிஞர் வரவரராவ் வர்க்கப் போராட்டத்தோடு சாதியாதிக்கத்திற்கு எதிராக போராட்டத்தை நடாத்த வேண்டியதன் அவசியத்தை தன் கவிதை வழியாக வலியுறுத்துகிறார். இவரது 'பாக்கியசாலிகள்' என்னும் கவிதை தலித்மக்களின் துன்பங்களை அவர்கள் அன்றாடம் உணவுக்காக அல்லலுறுகின்ற தன்மைகளை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்துகிறார். உதாரணமாக இக்கவிதையிலிருந்து சில வரிகள்.

                'பெருக்குபவர்கள் நாங்கள்

               துப்பரவு செய்கிறவர்கள் நாங்கள்

              எங்கள் வியர்வை தான் தண்ணீர்

              எங்கள் ரத்தம்தான 'பினாயில்'' (வரவரராவ்,2006,மண்ணும் சொல்லும்(தொகு))

 

முடிவுரை

இவ்வாறு மூன்றாம் உலக நாட்டு மக்களின் கவிதைகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெண்களின் பிரச்சினைகள், மண்ணுரிமை, மொழியுரிமை, சமூக சமத்துவம் என்பன பேசுபொருளாகக் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் மூன்றாம் உலக நாட்டு மக்கள் காலனித்துவ ஆட்சியார்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருப்பிடம் இழந்து, உயிர் அச்சுறுத்தல்களினால் தப்பிஓடி, சிறையில் அடைக்கப்பட்டு, தங்களுக்கொன மொழியில்லாமல், பெண்கள் ஆண்களால் அடிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துள்ளததைக் காணலாம். இந்நிலை மாற வேண்டும்.;   மூன்றாம் உலக நாட்டு மக்களுக்கு உரிமைகள்  கிடைக்கப் பெறவேண்டுமென்பது என்னுடைய கருத்தாக அமைகிறது.

 

 

உசாத்துணை நூல்கள்

1.    கீதா, வ.,  ராஜதுரை, எஸ், வி., 1993, அவ்வவ்போது பறித்த   அக்கரைப் பூக்கள்(தொகு) , அடையாளம் பிறிண்டஸ், சென்னை.

2.   கீதா, வ.,  ராஜதுரை, எஸ், வி., 2006, மண்ணும் சொல்லும்(தொகு), அடையாளம் பிறிண்டஸ், சென்னை.

 

இணையத்தளம்

  1. செல்வபுவியரசன், 2015, மூன்றாம் உலக நாடுகளின் தோற்றம் வீழ்ச்சி, www. word prees.com, 12. 10. 2015