ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

செந்தமிழ் இதழில் சங்க இலக்கிய ஆய்வுகள்:1926 -1950.

பி.ஜானகி 13 Oct 2020 Read Full PDF

கட்டுரையாளர்: பி.ஜானகி      நெறியாளர்: முனைவர் அ.சதீஷ்

முனைவர்பட்ட ஆய்வாளர் (முழுநேரம்)     இணைப்பேராசிரியர்

தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல் புலம்  தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்         உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தரமணி, சென்னை – 600113.        தரமணி, சென்னை – 600113.

 

ஆய்வுச் சுருக்கம்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழுக்கென்று தொடங்கப்பட்ட முதல் ஆய்விதழ் செந்தமிழ் ஆகும். இவ்விதழே மற்ற இதழ்களுக்கு முன்னோடியாகவும் விளங்கியுள்ளது. கருத்துக்கு மறுப்பு வரைதல் என்பது நூல்களில் வழி செயல்பட்ட தன்மையிலிருந்து மாறி, இதழ்களின் வழி மறுப்புத் தெரிவித்தல் என்ற முறையியலை இவ்விதழின் வழி வந்த கட்டுரைகள் கட்டமைத்துள்ளன. குறிப்பாகத் தமிழ்ச் சமூக வரலாற்றில் 1920-க்கு பிறகு சங்க இலக்கியம் குறித்தான ஆய்வுகள் பாடவியல் சார்ந்தும், பொருண்மை சார்ந்தும், வரலாறு சார்ந்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இச்சூழலில், செந்தமிழ் இதழில் 1926 முதல் 1950 வரையுள்ள காலகட்டத்தில் சங்க இலக்கியம் குறித்தான ஆய்வுகளும் விவாதங்களும் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து ஆய்வு முறைகளை இனங்கண்டு விளக்கியுள்ளது.

திறவுச் சொற்கள்

செந்தமிழ் இதழ், சங்க இலக்கிய உரையாடல்கள் ,சமூகச் சூழல் , உரை ஆய்வுகள் , உரை முயற்சிகள் , வரலாற்று ஆய்வுகள் 

    ஐரோப்பியர்களின் வருகையால் பதினாறாம் நூற்றாண்டில் அச்சு ஊடகம் தோற்றம் பெற்றது என்றாலும் 1835-ல் சுதேசிகளும் அச்சு இயந்திரத்தை நிறுவலாம் என்றச் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்புதான் அச்சு நிறுவனங்கள் பலவும் தோற்றுவிக்கப்பட்டன. இதன் ஊடாகவே தமிழகத்தில் முதன்மையான மாற்றம் ஏற்படத் தொடங்கியது. இதனால், அரசு சார்ந்து மட்டுமே இருந்த அச்சு ஊடகமானது தனிநபர் சார்ந்த நிறுவனமாகவும் செயல்படத் தொடங்கியது. இதனால் இதழ்கள் பலவும் தோற்றம் பெற்றன. பண்டைய இலக்கண இலக்கியங்கள் யாவும் அச்சில் பதிப்பிக்கப்பட்டன. இவற்றின் வழி பிரித்தானியர்களின் கல்வி முறையை பின்பற்றி மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இச்சங்கத்து இதழாக செந்தமிழ் இதழ் 1902-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவே, தமிழுக்கென்று தொடங்கப்பட்ட முதல் ஆய்விதழாகும். இவ்விதழே இருபதாம் நூற்றாண்டின் தமிழியல் ஆய்வைத் தொடங்கி வைத்தது. இவ்விதழ் தமிழ், ஆங்கிலம், வடமொழி என மும்மொழி புலமைப் பெற்ற புலமையாளர்களைக் கொண்டுச் செயல்பட்டுள்ளது. தமிழியல் ஆய்வில் ஈடுபட்டிருந்த அறிஞர்கள் தாங்கள் கண்டறிந்த புதியக் கருத்துக்களை வெளியிடும் களமாக விளங்கியது. அவ்வகையில் இதழின் செயல்பாடு எத்தகையதாய் இருந்ததெனில், பதிப்பாகாத நூல்களை இதழ்வழி பதிப்பித்தல், பதிப்பான நூல்களுக்கான ஏட்டுப்பிரதியைக் கொண்டு ஆராய்ந்து விடுபட்ட பாடல்கள், பிரதிபேதம் ஆகியவற்றை வெளிப்படுத்துதல், பதிப்பான நூல்களின் உரைத்தன்மையை ஆராய்தல், பதிப்பான பதிப்பாகாத உரையாசிரியர்களின் உரையை கண்டாராய்ந்து வெளிப்படுத்துதல் என்ற தன்மையில் செயல்பட்டுள்ளன. இலக்கியம், இலக்கணம், கல்வெட்டு, சாசனம், புராணம், சரித்திரம், இதிகாசம் எனப் பல்வேறு துறைச் சார்ந்த அறிவுப் பின்புலத்தோடு கூடிய ஆய்வு அணுகுமுறைகளை உண்டு பண்ணியது. கருத்துக்கு மறுப்பு வரைதல் என்பது நூல்களில் வழி செயல்பட்ட தன்மையிலிருந்து மாறி, இதழ்களின் வழி மறுப்புத் தெரிவித்தல் என்ற முறையியலை இவ்விதழின் வழி வந்த கட்டுரைகள் கட்டமைத்துள்ளன. இச்சிறப்புப் பொருந்திய செந்தமிழ் இதழில் 1926 முதல் 1950 வரையுள்ள காலகட்டத்தில் சங்க இலக்கியம் குறித்தான ஆய்வுகளும் விவாதங்களும் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து ஆய்வு முறைகளை இனங்கண்டு விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

செந்தமிழ் இதழின் நோக்கம்:

     முதல் இதழ் சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 1902-ம் ஆண்டு டிசம்பர் 7ஆம் நாள் வெளிவந்துள்ளது. இவ்விதழின் நோக்கங்களாவன,

      “இதுகாறும் அச்சிடப்படாத செந்தமிழ் நூல்களும், தமிழ் நாட்டுப் புராதனச் சரிதங்களும், சாஸனங்களும், வடமொழியினும் ஆங்கிலத்தினும் தமிழிற்கு வேண்டுவனவாகக் கருதப்படும் நூன் மொழி பெயர்ப்புகளும், தமிழின் அருமை பெருமை அடங்கிய விஷயங்களும், தமிழாராய்ச்சியினைப் பற்றியனவும் தமிழ் வளர்ச்சிக்கு வேண்டுவன பிறவும் இதன் வாயிலாக வெளிவரும்” (1902, டிசம்பர்)

எனப் பத்திராசிரியரான ரா.ராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார். இதழின் ஆசிரியராக ரா.ராகவையங்கார் 1902 முதல் 1904 வரை செயல்பட்டுள்ளார். இவர் ஆசிரியராக இருந்த காலத்தில் மிகவும் நுட்பமான ஆய்வுகளும், அரிய உரைகளும், பதிப்புக்களும் வெளிவந்துள்ளன. இவைகள் இதழின் நோக்கத்திலிருந்து வழுவாமல் வெளிவந்துள்ளதை வெளிபடுத்துகிறது. இவரை அடுத்து 1904 முதல் 1910 வரை மு.இராகவையங்கார் பத்திராசிரியராக இருந்துள்ளார். இவர் ஆசிரியராக இருந்தபோது இரங்கற்பாக்கள், கால் நடைக்குரிய உணவு பயிர்கள் போன்ற செய்திகளும் வெளிவந்துள்ளன. இவைகள் இதழின் நோக்கத்திலிருந்து விலகி செயல்பட்டுள்ளதை வெளிபடுத்துகிறது. இவரை அடுத்து நாராயணையங்கார் 1910 முதல் 1946 வரை ஆசிரியராகச் செயல்பட்டுள்ளார். இவர் 36 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தபோது ஆய்வு இதழ் என்றத் தன்மையிலிருந்து மாறி பன்முகக் கருத்துக்களை வெளியிடும் இதழாகச் செயல்பட்டுள்ளன. அது யாதெனில், கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டுவிழா பற்றிய விவரம், கைத்தொழில், வேளாண்மை, பசுவின் பெருமை, பரிட்ச்சைகளின் தேர்ச்சி விவரம், சப்பாத்துக் கள்ளியின் உபயோகம், மதுரைத் தமிழ்ச் சங்க நிர்வாகசபைத் தீர்மானங்கள், வரவு செலவு கணக்கு, குழந்தைகளின் படிப்பு முறை முதலியன வெளிவந்துள்ளன. இவரை அடுத்து கி.இராமாநுஜயங்கார் 1947 முதல் 1951 வரை ஆசிரியராக இருந்த காலத்து செந்தமிழ் இதழ் நோக்கங்களின் ஒன்றான மொழிபெயர்ப்பு சார்ந்த கட்டுரைகள் எதுவும் வெளிவரவில்லை. இவ்வாறாக தன்நோக்கத்திலிருந்து சிறிது சிறிதாக விலகி ஆய்வு இதழ் என்பதிலிருந்து மாறி பன்முக இதழாக செந்தமிழ் இதழ் செயல்பட்டுள்ளன.

சங்க இலக்கிய ஆய்வுகள்:

  1. தமிழறிஞர்கள் தங்களுக்குக் கிடைத்த சுவடியை ஒப்பிட்டு ஆய்வு செய்துச் செந்தமிழ் பிரசுரமாகப் பிரசுரித்தப் புத்தக முன்னுரை இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
  2. விழாக்களில் நிகழ்த்தப்பட்ட உரைகளும் வாசிக்கப்பெற்ற கட்டுரைகளும் செந்தமிழ் இதழில் வெளிவந்துள்ளன.
  3. அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிப்பரப்புபெற்ற சில கட்டுரைகளும் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
  4. சங்க இலக்கிய நூல்களில் சிலக் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் உரை எழுதுகின்ற முயற்சி முன்னெடுக்கப்பட்டு வெளிவந்துள்ளன.
  5. தொகுப்பு மரபு, கால நிர்ணயம், ஒப்பீடு, ஊர், புலவர், அரசர்,  சங்க இலக்கியத்தில் உள்ள ஏதேனும் ஒரு நூல் அல்லது பாடல் பற்றியத்  திறனாய்வு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

 1926 முதல் 1950 வரை உள்ள காலகட்டத்தில் வெளியான செந்தமிழ் இதழ்களில் மொத்தம் 36 கட்டுரைகள் சங்க இலக்கியம் தொடர்பானவையாக உள்ளன. இக்கட்டுரைகளை அறிய பின்வருமாறு எளிமைக்கருதி தொகுத்துக் காணலாம். அதில் உரைத் தொடர்பாக 6 கட்டுரைகளும்; அரசர் (வரலாறு) தொடர்பாக 12 கட்டுரைகளும்; புலவர் தொடர்பாக 2 கட்டுரைகளும்; ஊர் தொடர்பாக 1 கட்டுரைகளும்; ஒப்பிடு தொடர்பாக 3 கட்டுரைகளும்; தொகுப்பு தொடர்பாக 1 கட்டுரைகளும்; காலம் தொடர்பாக 2 கட்டுரைகளும்; திறனாய்வு தொடர்பாக 9 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

சமூகச் சூழல்: செந்தமிழ் இதழும் சங்க இலக்கிய உரையாடலும்:

    தமிழ்ச்சூழலில் சங்க இலக்கிய பதிப்பின் ஊடாக அதன் வாசிப்பும் செந்தமிழ் இதழின் வழி செயல்பட்ட ஆய்வுப்போக்கும் மிக முக்கியமான நிகழ்வாகும். இவற்றின் வழி உருபெற்ற அறிவுசார் உரையாடல்கள் சங்க இலக்கிய வாசிப்பை விரிவாக்கின. இவ்வாசிப்பு முறையே தமிழர் வரலாற்றினை எழுதுவதற்கு அடிப்படை காரணமாக அமைந்தன. அதுவன்றி தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு எழுதியல் குறித்த ஒரு ஆழமான புரிதலை உண்டாக்கியது. அதன்பொருட்டு தமிழ் இலக்கியங்களின் காலத்தை அரச பரம்பரைகளின் துணைக்கொண்டும், புலவர்களின் துணைகொண்டும் வரலாற்றை விளக்கும் முக்கியமான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதனை,

“1930-கள் மிக முக்கியமான ஒரு காலகட்டமாகும். ஒருபுறம் தென்னிந்தியாவை இந்திய வரலாற்றுப் பெருவட்டத்தினுள் இணைப்பனவாக அமைந்த அதே வேளையில் மறுபுறத்தில் பிரதேசத்தின் வரலாற்றைக் காலகட்ட அடிப்படையிலும் அரச பரம்பரைகளின் அடிப்படையிலும் தெளிவுபடுத்துவனவாக அமைந்தன (2007:106)

என்கிற சிவத்தம்பி அவர்களின் கருத்துக்கு ஆதாரமாக செந்தமிழ் இதழில் 1926 முதல் 1950 வரையுள்ள காலகட்டத்தில் சங்க இலக்கிய அரசர் தொடர்பாக 12 கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மேலும், சங்க இலக்கியத்தின் ஏதேனும் ஒரு நூலைப் பற்றிய அறிமுகங்களும், சிறப்புக்களும், புலவர்கள் பற்றியும், பாடல்களில் இடம்பெறும் கருத்துக்களைப் பிற்கால இலக்கியங்களோடு ஒப்பிட்டும், ஊர்பெயர், காலம், தொகுப்பு பற்றியும், உரைத் தொடர்பான ஆய்வுகளும், விவாதங்களும் செந்தமிழ் இதழில் இடம்பெற்றுள்ளன. இவ்விதழின் வழி தமிழர் வரலாறு எழுதியலுக்கான தரவாக எப்படியெல்லாம் முன்னெடுத்துள்ளனர் என்பது அறிஞர்களின் அறிவுசார் கருத்தாடல்கள் அன்றையச் சமூகம்சார் வரலாற்றோடு இணைத்து பார்க்கபட வேண்டியதாகிறது.

உரைத் தொடர்பான ஆய்வுகள்

    சங்க இலக்கியம் உரைக்குறித்தான தொடர்ச்சியான தேடலும், நச்சினார்க்கினியர் உரைப்பற்றியும், ஏதேனும் ஒரு பகுதிக்கு மட்டும் உரையெழுதுகின்ற முயற்சியும் செந்தமிழ் இதழில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கிய உரைகள் தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டதற்கு காரணமாக இருந்தது, சங்க இலக்கிய உரைத்தொடர்பான வாசிப்பும், கல்வி முறையும், சமூகச் சூழலுமேயாகும். பண்டிதர்களுக்கு மட்டுமே புரியும்  வகையில் இருந்த சங்க இலக்கிய உரையமைப்பானது கடினமாக இருந்ததால் அவற்றை எளிமைப்படுத்தப்பட வேண்டிய சூழல் உருவானது. ஏனெனில், மேலைநாட்டு கல்வியின் ஊடாகவே நவின இலக்கிய சிந்தனை வளர்ச்சி பெற்றது. இதன் ஊடாகவே சங்க இலக்கிய உரைகளுக்கு உரை விளக்கமும், உரை முயற்சிகளும், உரையாய்வுகளும் முன்னெடுக்கப்பட்டன. அவ்வகையில்,

எஸ்.வையாபுரிப்பிள்ளையின் ‘திருமுருகாற்றுப்படை’ என்பதும், கு.குமாரசாமியின் ‘திருமுருகாற்றுப்படையும் நச்சினார்க்கினியர் உரையும்’ என்பதும், சி.கணேசையரின் ‘மதுரைக்காஞ்சியுட் கூறிய யாமப்பிரிவு’ மற்றும் ‘ஒரு செய்யுட்பொருளாராய்ச்சி’ என்பதும், R.வீரராகவனின் ‘பதிற்றுப்பத்து’ என்பதும், p.s.சுப்பிரமணிய சாஸ்திரியின் ‘புறநானூற்றுக் குறிப்பு’  போன்றக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

எஸ்.வையாபுரிப்பிள்ளை ‘திருமுருகாற்றுப்படை – உரையாசிரியர் உரையை 1943-ல் செந்தமிழ் பிரசுரம் வழியாக பதிப்பித்துள்ளார். இவ்வரிய உரைப்பிரதி திருநெல்வேலியில் ஒரு நண்பரது வீட்டிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்ததாகவும் இவ்வேட்டுப் பிரதியில் ‘உரையாசிரியர் உரை’ என எழுதப் பெற்றுள்ளது என்றும், இப்பிரதி 994ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 30-ஆம் தேதி எழுதப்பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் விரிவான ஆராய்ச்சி முன்னுரையும் பிற்சேர்க்கையாக கொடுக்கப்பட்ட பாடபேதம், பிழைத்திருத்தம், விடுபாடல்கள் ஆகியன 1943 ஆண்டு கார்த்திகை மாத இதழில் ‘திருமுருகாற்றுப்படை’ என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது. இவ்வுரையின் தன்மை பற்றி வையாபுரிப்பிள்ளை தன் ஆராய்ச்சி முன்னுரையில், பிறவுரைகளில் இருந்து இவ்வுரை சிறப்புறுகிறது என்பதை தக்க சான்றாதாரத்தைக் கொண்டு நிறுவியுள்ளார். அவை,

“இவ்வுரையால் இதுவரை விளக்கம் பெறாத அரிய தொடருக்கு இப்போது இவ்வுரையாசிரியரால் விளக்கம் பெறுகிறது. திருமுருகாற்றுப்படையில் வரும் ‘தலைத்தந்து’ (216) என்றத் தொடருக்கு இவர் உரையால் சிறப்புறுகிறது. இத்தொடருக்கு ‘முதற்கைகொடுத்து’ என நச்சினார்க்கினியர் எழுதினர். புறநானூறு 24ஆம் செய்யுளில் தலைக்கைத்  ‘தரூஉந்து’ என்பதற்கு அதன் பழையவுரைக்காரர் ’முதற்கைகொடுக்கும்’ என்றெழுதினர். 73ஆம் கலியுள் ‘துணங்கையுட்டலைக்கொள்ள’ என்பதற்குத் துணங்கைக் கூத்திடத்தே......தலைக்கைக் கொடுத்தல் அல்லது முதற்கைகொடுத்தல் என்பதன் பொருள் இதுகாறும் விளங்கியபாடில்லை. ஆனால், இவ்வுரைக்காரர் (மகளிர்கள்) களவறிந்து அவர்கட்கு இருப்பிடங்கொடுத்து” என்று எழுதுகிறார்(xxv).

இவ்விளக்கத்தின் வழி இவ்வுரை மற்ற உரைகளில் இருந்து சிறப்புறுகிறது.

இச்சிறப்பு பொருந்திய இவ்வாராய்ச்சி முன்னுரை இதற்குப் பின்பு வெளிவந்த திருப்பனந்தாள் காசிமடத்தின் வெளியீடான திருமுருகாற்றுப்படை உரைக்கொத்திலும் (1992), சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட வையாபுரிப்பிள்ளையின் சிற்றிலக்கிய திரட்டு என்ற நூலிலும் (2001) இம்முன்னுரை இல்லாமல் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

கு.குமாரசாமியின் ‘திருமுருகாற்றுப்படையும் நச்சினார்க்கினியர் உரையும்’ என்றக் கட்டுரை நக்கீரனாரால் பாடப்பட்ட முருகாற்றுப்படைக்குரிய பொருளை விளக்கியும், இதற்கு உரை எழுதியுள்ள நச்சினார்க்கினியர் உரையை எளிமைப்படுத்தி விளக்குவதாகவும் அமைந்துள்ளது. சான்றாக,

“செருப்புகன் றெடுத்த சேனுயர் நெடுங்கொடி

வரிப்புனை பந்தொடு பாவை தூங்க” (67- 68)

என்ற அடிகளுக்கு நச்சினார்க்கினியர் “போரை வென்று விரும்பிக் கட்டினக் கொடிக்கருகே நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும் பாவையும் அறுப்பாரின்மையின் தூங்கியேவிடும்படி” என்பது உரை.

 இதற்கு கட்டுரையாசிரியர் குறிப்பிடுவது யாதெனில் ‘கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்தகுடி’யிலுதித்து வீரத்தில் மிகுந்து விளங்கிய நம் தமிழ்நாட்டரசர்கள் போரை வென்று விரும்பிக் கட்டினக் கொடிக்கருகே பந்தையும் பாவையையும் கட்டித் தொங்கவிடுதல் வழக்கென்றும், அதுகண்டு பொறாது பிறவரசர் அப்பந்தையும் பாவையையும் அறுப்பின் அவர்களோடு போர் தொடங்கி வெற்றி பெறுவார்களென்றும், ஒருவராலும் அறுக்கப்பெறாதிருப்பின் போர்தொடங்காது தமக்கு நிகராவார் ஒருவருமில்லையென எண்ணிச் செம்மாந்து தனியரசு செலுத்துவார்களெனவுந் தெரிகிறது’ (தொ – 28; ப – 8; பக். 357 – 364).

எனக் குறிப்பிடுவது மேற்சொன்னக் கருத்துக்கு விளக்கம் தருவதாகவும், உரையின் இடைஇடையே தமிழ் மொழியின் தொன்மையை எடுத்துரைப்பனவாக இவ்வுரை அமைந்துள்ளது. இக்கட்டுரையானது மதுரைத் தமிழ்ச் சங்க ஞானாபிவிருத்தி ஸபையின் இருபத்தாறாம் வருடக் கொண்டாட்டத்தில் வாசிக்கப்பட்டுள்ளது. பின்பு 1928 ஆண்டு ஜீலை மாத இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

      1930 P.S. சுப்பிரமணிய சாஸ்திரித் தன்னுடைய ஆழ்ந்தகன்ற சமஸ்கிருத கல்வியும், தொல்காப்பிய பயிற்சியின் துணைக்கொண்டும் எழுதியுள்ள ‘புறநானூற்றுக் குறிப்பு’ என்றக் கட்டுரை, புறநானூற்றில் உள்ள 2 முதல் 16 வரையுள்ள செய்யுளில் அமைந்துள்ள சொற்கள் மற்றும் பாடலுக்கான பழையயுரையில் உள்ள சொற்கள் இலக்கண நூலான தொல்காப்பியர் கூறியுள்ள இலக்கண விதிகளோடு எவ்வாறு பொருந்தி வந்துள்ளது என்பதை ஆராய்ந்து ஒப்பிட்டும், வடசொல் வகைகளாக குறிப்பிடும் தற்சமம், தற்பவம் போன்ற சொற்களை ஆராய்ந்து குறிப்பிடும் வகையில் தொடர்கட்டுரையாக அமைந்துள்ளது.

 சி.கணேசையரின் ‘மதுரைக்காஞ்சியுட் கூறிய யாமப்பிரிவு’ மற்றும் ‘ஒரு செய்யுட்பொருளாராய்ச்சி’ என்ற இரண்டுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவை, மதுரைக்காஞ்சி மற்றும் சிறுபாணாற்றுப்படைக்கு அமைந்துள்ள நச்சினார்க்கினியர் உரையில் குறிப்பிட்ட சிலப் பகுதிகளுக்கு மட்டும் அவர் கொண்ட உரை பொருந்தவில்லை என்று அவ்வுரையை மறுத்து நேர் பொருள் கொள்ளும் தன்மையில் அமைந்துள்ளன. அவற்றுள் மதுரைக்காஞ்சி என்றக் கட்டுரை மதுரைக்காஞ்சியில் யாமப் பிரிவு பற்றி குறிப்பிடுகின்ற 620 முதல் 686 வரை உள்ள அடிகளுக்கு யாமப் பிரிவு நான்கு எனக் கொண்டு நச்சினார்க்கினியர் உரையெழுதியுள்ளார். இவ்வாறு யாமப்பிரிவை நான்கு எனக் கொள்வது வடமொழி வழக்கு. தமிழ்ப்பிரிவில் மூன்று வகையாக பிரிப்பர். இவ்வடமொழி வழக்கை மனத்துள் வைத்து அடிகளைச் சிதைத்து யாமப்பிரிவை நான்காகக் கொண்டு நச்சினார்க்கினியர் உரையெழுதியுள்ளார். இவ்வுரையை மறுத்து சொற்கிடக்கை முறையில் யாமப்பிரிவு கூறிய அடிகளை நோக்கும்பொழுது மூன்று யாமமே இடம்பெற்றுள்ளன என்பதை நிறுவியுள்ளார்.

‘ஒரு செய்யுள் பொருளாராய்ச்சி’ என்றக் கட்டுரைச் சிறுபாணாற்றுப்படையில் உள்ள 20, 251 அடிகளுக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை பொருந்துமாறு இல்லை. அவ்வாறு கோடல் சிறப்பின்று என அவர் உரையை மறுப்பதாக அமைந்துள்ளது.

 “சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென

மால்வரை ஒழுகிய வாழை” (20 - 21)

என்ற அடிக்கு நச்சினார்க்கினியர் ‘குறங்குடன் செறிந்த குறங்கின், மால்வரை ஒழுகிய வாழை சேர்ந்து’ எனச் சீர்களை மாற்றி உரை கொண்டுள்ளார். அவை, பெருமையையுடைய மலையிலே ஒழுங்குபட வளர்ந்த வாழையெனத் திரண்டு, ஒரு குறங்குடனே ஒரு குறங்கு நெருங்கியிருக்கின்ற குறங்கினையும் (தொடையினையும்) எனப் பொருள் கொள்கிறார் (2017:180).

 இங்கு உவமையாகக் கூறிய சொல்லைப் பொருளாக்கியும், பொருளாகக் கூறிய சொல்லை உவமமாக்கியும் கூறியுள்ளார். ஆனால், உடன் செறிந்த என்பதே ஒன்றோடு ஒன்று செறிந்தமையை உணர்த்துமாகலின் குறங்கு என்பதை மாற்றிக் கூட்ட வேண்டியது இன்றாம் என்று மறுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து,

 “வாழைப், பூஎனப் பொலிந்த ஒதி ஒதி

நளிச்சினை வேங்கை நாள்மலர் நச்சி

களிச்சுரும்பு அரற்றும் சுணங்கின்” (22 – 23)

என்பதில் உள்ள ஒதி என்றச் சொல்லை அரற்றும் என்பதோடு கூட்டி வண்டுகள் அரற்றும் சுணங்கு என நச்சினார்க்கினியர் பொருள் கொண்டுள்ளார்.

ஆனால், இக்கட்டுரையாசிரியர் ஒதி என்பதற்கு கூந்தலெனக் கொண்டு, கூந்தலில் அணிந்த வேங்கைப்பூபோலும் இதுவும் என்று, அவ்வேங்கை மலரில் வீழும் வண்டுகள் மயங்கி நச்சு அரற்றும் பசலை தேமல் எனப் பொருள் கோடல் சிறப்பாகும் என்கிறார்.

R. வீரராகவனின் ‘பதிற்றுப்பத்து’ என்றக் கட்டுரை பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தில் உள்ள முதற்பாட்டிற்கு மட்டும் மாணவர்களுக்கு புரியும் வகையில் உரையெழுதியுள்ளார். இவ்வுரையானது நச்சினார்க்கினியர் உரையை போல அடிகளை மாற்றி கொண்டுகூட்டி பொருள் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. சில இடங்களில் அரிய சொற்களுக்கு பொருள் தருதல் என்ற தன்மையில் குறிப்புரை உள்ளது. மேலும், சொற்பொருள் தருதல், சொற்தொடருக்கு விளக்கம் தருதல், இலக்கண குறிப்பு தருதல், பொருள் முடிபு, சொல் முடிபு தருதல் போன்றச் சிறப்புக்களைக் கொண்டு இவ்வுரை அமைந்துள்ளது.

இவ்வாறு உரைத் தொடர்பான ஆறுக் கட்டுரைகளில் நச்சினார்க்கினியர் உரையை முன்வைத்து நான்கு கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இதற்கு காரணம் நச்சினார்க்கினியர் அடிகளை மாற்றி செய்யுள் ஆசிரியரின் கருத்தைச் சிதைத்துவிட்டார் என்று இவ்வாய்வாளர்கள் கருதியமையாகும். அதோடு வடமொழி மரபினை பின்பற்றி தமிழ் மரபுக்கு மாறான உரைமரபினைப் கையாண்டதுதான் காரணம் என்று நச்சினார்க்கினியர் மீது விவாதத்தினை முன்வைத்தனர். இவ்வாறாக அன்றையச் சமூகச் சூழலில் நிகழ்ந்த ஊடாட்டங்களே இக்கட்டுரைகள் தோன்றுவதற்கு முக்கிய காரணியாக விளங்கின.

 வரலாறுத் தொடர்பான ஆய்வுகள்

அரசர்கள், குடிகள், காலம், இடம், சிறப்பு பற்றிய வரலாறுத் தொடர்பானக் கட்டுரைகள் செந்தமிழில் வந்திருக்கின்றன. 1905-ல் மு.இராகவையங்காரால் தொடங்கப்பட்ட ‘நன்னன்’ குறித்த விவாதம் பெரும் புலமைக் கருத்தாடலாக நடந்திருக்கிறது. தொகுதி நான்கு பகுதி ஐந்தில் இலக்கிய சான்றுகள் கொண்டு நன்னன் என்ற பெயரில் இருவர் இருந்ததாக குறிப்பிடுகிறார். அது, மலைபடுகடாம் நன்னனும், தொகை நூலில் குறிப்பிடுகின்ற நன்னனும் ஆவர். தொகை நூலில் குறிப்பிடுகின்ற நன்னன் வேண்மானின்(மகன்) தந்தை என்ற கருத்தை முன்வைத்துள்ளார். அதில், எட்டுத்தொகையில் குறிப்பிடுகின்ற தந்தை நன்னன் கொடுங்கோலன், கல்வி அருமை வெறுத்தவன், புலவர் இகழ்ச்சிக்கு உரியவன் சேரர்களுக்கு எதிரியாவன் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு சான்றாக தன்னுடைய பாரம்பரிய கல்வியின் ஊடாக அப்போதைக்கு சங்க இலக்கியத்தில் பதிப்பாகாத அகநானூறு, குறுந்தொகை போன்ற நூல்களிலிருந்தும் மேற்கோள் எடுத்துரைத்துள்ளார். இத்தன்மையிலிருந்து இக்கட்டுரையை ஆராயும்பொழுது நன்னன் பற்றிய வரலாற்றில் இவரின் முன்முயற்சியாக விளங்கிற்று.

இவ்வாய்வு கருத்தை மறுத்து 1925-ல் a.m.சடகோபராமாநுஜாசார்யரின் ‘கொண்கானத்து நன்னன்’ என்றக் கட்டுரை அமைந்துள்ளது. அதில் எட்டுத்தொகையில் குறிப்பிடுகின்ற நன்னன் ஒருவர் அல்ல இருவர் எனக் குறிப்பிடுகிறார். இக்கருத்தாக்கத்திற்கு காரணமாக இருந்தது அகம்.356ம் செய்யுளில் ‘நன்னன் ஆஅய் பிரம்பன்ன, நன்னன் பறம்பு’ என்பதேயாகும். இதில் பிரம்பு என்பது நன்னன் ஆய்குரியது என்றும், அச்செய்யுளில் சிலவரிகளுக்கு மேல் நன்னன் பறம்பு என்று வேறுபட வந்திருப்பதைக் கொண்டு நன்னன் ஆய் என்பவனும், நன்னனும் ஒருவரல்லர் இருவர் என்றக் கருத்தை முன்வைத்துள்ளார்.

அவற்றைப் போன்று பண்டைச்  ‘சேரர் தாயமுறை’ என்ற ஆய்வுக் கட்டுரையும் அமைந்துள்ளது. அது, பண்டையச் சேரரிடம் இருந்தது மருமக்கள் தாயம் (தாய்வழி தாயத்தார்) எனவும், அதற்கு மறுப்பாக மக்கள் தாயம் (தந்தை வழித் தோன்றல்) முறையே இருந்தது எனவும் இரண்டு விவாதங்கள் நடைப்பெற்றுள்ளன. முன்னதற்கு ச.சோமசுந்தரபாரதி, L.கிருஷ்ணசாமியும், பின்னதற்கு மு.இராகவையங்கார், வைத்திய நாத தேசிகன் முதலானோரும் தத்தம் அறிவுசார் கருத்தாடலை முன்வைத்துள்ளனர். இப்படியான கருத்தாக்கத்திற்குக் காரணமாக அமைந்தது பதிற்றுப்பத்தின் பதிகத்தொடர்களே ஆகும். இதில் மு.இராகவையங்கார் இலக்கியம், சாசனம், கர்ணபரம்பரைச் செய்திகளோடு ஒப்பு நோக்கி மக்கள் தாயமே பண்டைய சேரரின் வழக்கு என்பதை எடுத்துரைத்துள்ளார். இதில் மருமக்கள் தாயம் என்பது பிற்கால வழக்கு என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.

 தம் கருத்துக்கு வலுச்சேர்க்க சங்க இலக்கியங்களைச் சான்றாகக் காட்டும்போது பிற்கால இலக்கியத் தரவினை முதன்மைப்படுத்துகின்ற முறையே மிக்குள்ளது. 1942-ல் வெளியான s.s.பாரதியின் ‘பட்டினப்பாலைத் தலைவன் யார்’ எனும் கட்டுரையில் பழமொழி நானூற்றுள் உள்ள குறிப்பைக் கொண்டு, பட்டினப்பாலையின் தலைவன் திருமாவளவன் எனவும் இவன் கரிகாலனின் மகனாவான் என்றக் கருத்தை முன்வைத்துள்ளார். இவ்வாறு கரிகாலன், திருமாவளவன் ஆகிய இருவரும் வேறானவர்கள் என்றக் கருத்தை நிலைநாட்ட கையாண்டுள்ளச் சான்றுகள் பொதுமானதாகவும் பொருந்துவனவாகவும் இல்லை. மேலும், சு.குமாரஸ்சுவாமி, t.c.ஸ்ரீநிவாஸையங்கார், சதாசிவபண்டாரத்தார் போன்றோர் சங்க இலக்கிய அரசர் வரலாறுத் தொடர்பானக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றனர்.

முடிவுரை:

    சங்க இலக்கிய பதிப்பு அச்சு ஊடகத்தின் வழி பரலாக்கப்பட்டதின் விளைவாக தமிழ்ச் சமூகத்தில் அதனை எதிர்கொண்ட அறிஞர்களின் அறிவுசார் கருத்தாடலைச் செந்தமிழ் இதழ் வழி அறியமுடிகிறது. குறிப்பாக ஒவ்வொரு அறிஞரும் தத்தம் கருத்தே முடிவானவை என்ற நிலைக்கு உட்படுத்தப்படாமல் அதனை விவாதிக்கும் அறிவுசார் தளமாக இவ்விதழ் அமைந்துள்ளது. குறிப்பாகத் தமிழ்ச் சமூக வரலாற்றில் 1920-க்கு பிறகு சங்க இலக்கியம் குறித்தான ஆய்வுகள் பாடவியல் சார்ந்தும், பொருண்மை சார்ந்தும், வரலாறு சார்ந்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்பொருட்டு செந்தமிழ் இதழில் சங்க இலக்கிய உரைகள் சார்ந்தும், ஒப்பீடு, தொகுப்பு, ஊர், பொருண்மைச் சார்ந்த ஆய்வுகளும், அரசர்கள் மற்றும் புலவர்களை வரையறுத்தல் அவர்களின் வரலாற்றை இனங்காணுதல் போன்ற ஆய்வுப்போக்கும், தமிழர் வரலாற்றை ஆய்வு கட்டுரைகளின் வழி கட்டமைப்பதில் செந்தமிழ் இதழ் ஆற்றிய பங்களிப்பையும் அறிய முடிகின்றது. மேலும், இவ்விதழில் தோன்றிய ஆய்வுகளே பிற்கால ஆய்வுகளுக்கு முன்னோடியாக விளங்கியது. இவ்விதழில் வந்த கட்டுரைகள் சங்க இலக்கியத்தில் சிக்கலாக உள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஆழ்ந்த ஆய்வு பின்புலத்தோடு வெளிவந்துள்ளன. ஆனால், மற்ற இதழ்களில் சங்க இலக்கியம் சார்ந்த ஆய்வுகள் மேலோட்டமாக கருத்துக்களைத் தொகுத்து தருவனவாக அமைந்துள்ளன.

பார்வை நூல்கள்

1. கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழில் இலக்கிய வரலாறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 2010.

2. செந்தமிழ் இதழ் 1926 முதல் 1950 வரை, மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடு.

3. ப.ஆ.பெயர் இல்லை, திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து, திருப்பனந்தாள் காசிமடம் – 1992.

4. இ.சுந்தரமூர்த்தி, வையாபுரிப்பிள்ளையின் சிற்றிலக்கிய திரட்டு, சென்னைப் பல்கலைக்கழகம் – 2001.

5. உ.வே.சாமிநாதையர், பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் – 2017.

 

 

 

 

 

செந்தமிழ் இதழில் 1926 முதல் 1950 வரை சங்க இலக்கியம் தொடர்பாக

வெளியான கட்டுரைகளின் விவாம்

வ.ண்

தொகுதி

பகுதி

            ஆண்டு

         கட்டுரை

                ஆசிரியர்

   பக்கம்

1

24

11

அஷய – புரட்டாசி (1926)

கொண்கானத்து நன்னன்

A.M.சடகோபராமாநுஜ

சாரியன்

449 - 466

2

25

5

அஷய – பங்குனி (1927)

கொண்கான நன்னனுடைய ஊர்களும் மலைகளும்

A.M.சடகோபராமாநுஜ

 சாரியன்

 169 -175

3

27

4

விபவ – மாசி (1929)

சேரர் தாயமுறை

ச.சோமசுந்தரபாரதி

113 -149

4

27

10

சுக்கில – ஆவணி (1929)

சேரவேந்தர் தாயவழக்கு

மு.இராகவையங்கார்

329 - 358

5

27

11

சுக்கில – புரட்டாசி (1929)

சேரவேந்தர் தாயவழக்கு

மு.இராகவையங்கார்

361 - 387

6

27

11

சுக்கில – புரட்டாசி (1929)

ஒருசெய்யுள் பொருளாராய்ச்சி

சி.கணேசையர்

389 - 390

7

28

4

சுக்கில – மாசி (1930)

புறநானூற்றின் பழமை

P.S.சுப்பிரமணிய சாஸ்திரி

 146 -148

8

28

7

பிரமோதூத – வைகாசி (1930)

சேரர் தாயமுறை

L.கிருஷ்ணசாமி

277 - 320

9

28

8

பிரமோதூத – ஆனி (1930)

திருமுருகாற்றுப்படையும் நச்சினார்க்கினியர் உரையும்

கு.குமாரசாமி

357 - 364

10

28

9

பிரமோதூத – ஆடி (1930)

புறநானூற்றுக் குறிப்பு

P.S.சுப்பிரமணிய சாஸ்திரி

377 - 380

11

28

12

பிரமோதூத – ஐப்பசி (1930)

சேரர் தாயமுறை

வைத்தியநாதசாமி தேசிகன்

518 - 519

12

29

1

பிரமோதூத – கார்த்திகை

              (1930)

புறநானூற்றுக்குறிப்பு

P.S.சுப்பிரமணிய சாஸ்திரி

 25 - 30

13

29

3

பிரமோதூத  – தை (1931)

புறநானூற்றுக்குறிப்பு

 P.S.சுப்பிரமணிய சாஸ்திரி

107 - 115

14

29

9

பிரசோற்பத்தி -  ஆடி (1931)

சங்க நூல்களும்  கம்பரும்

ரா.திம்மப்பஐயர்

297 - 306

15

29

9

பிரசோற்பத்தி - ஆடி (1931)

புறநானூற்றுக் குறிப்பு

P.S.சுப்பிரமணிய சாஸ்திரி

307 - 314

16

29

11

பிரசோற்பத்தி – புரட்டாசி (1931)

புறநானூற்றுக் குறிப்பு

P.S.சுப்பிரமணிய சாஸ்திரி

402 - 406

17

29

11

பிரசோற்பத்தி –  புரட்டாசி (1931)

மதுரைக்காஞ்சியுட் கூறிய யாமப்பிரிவு

சி.கணேசையர்

375 - 380

18

31

2

ஸ்ரீமுக -  மார்கழி (1934)

உலோச்சனார்

உ.சா.வேங்கடராமன்

 25 - 38

19

31

8

பவ – ஆனி (1934)

பதிற்றுப்பத்து

R.வீரராகவன்

185 - 192

20

31

12

பவ – ஐப்பசி (1934)

வெள்ளிவீதியார்

 ஊ.சா.வேங்கடராமன்

273 - 282

21

32

2

பவ - மார்கழி (1935)

ஒல்லையூர்

சோமசுந்தர தேசிகன்

 51 - 53

22

32

4

பவ – மாசி (1935)

புறநானூற்று கடவுள் வாழ்த்தின் கருத்தமைதி

ஜெ.நாராயணசுந்தர்

ஐயங்கார்                                   

103 - 112

23

32

9

யுவ – ஆடி (1935)

பாண்டியர் வரலாறு

T.V.சதாசிவபண்டாரத்தார்

241 - 252

24

32

10

யுவ - ஆவணி (1935)

பாண்டியர் வரலாறு

T.V.சதாசிவபண்டாரத்தார்

277 - 292

25

32

11

யுவ – புரட்டாசி (1935)

பாண்டியர் வரலாறு

T.V.சதாசிவபண்டாரத்தார்

  37 - 324

26

32

12

யுவ - ஐப்பசி (1935)

பாண்டியர் வரலாறு

T.V.சதாசிவபண்டாரத்தார்

339 - 351

27

33

1

யுவ – கார்த்திகை (1936)

பாண்டியர் வரலாறு

T.V.சதாசிவபண்டாரத்தார்

 17 - 24

28

33

2

யுவ - மார்கழி (1936)

பாண்டியர் வரலாறு

T.V.சதாசிவபண்டாரத்தார்

  39 - 48

29

3

4

யுவ – மாசி (1936)

பாண்டியர் வரலாறு

T.V.சதாசிவபண்டாரத்தார்

107 - 109

30

33

5

யுவ - பங்குனி (1936)

பாண்டியர் வரலாறு

T.V.சதாசிவபண்டாரத்தார்

133 - 139

31

33

7

தாது - வைகாசி (1936)

பாண்டியர் வரலாறு

T.V.சதாசிவபண்டாரத்தார்

189 - 192

32

33

8

தாது – ஆனி (1936)

பாண்டியர் வரலாறு

T.V.சதாசிவபண்டாரத்தார்

209 - 212

33

33

12

தாது – ஐப்பசி (1936)

பாண்டியர் வரலாறு

T.V.சதாசிவபண்டாரத்தார்

          339.                                 

34

35

12

வெகுதானிய -  ஐப்பசி

(1938)

புறநானூற்றுச் செய்யுள் சிறப்பு

ஜெ.நாராயணசுந்தர்

ஐயங்கார்

441 - 448

35

38

2

விக்கிரம – மார்கழி (1941)

அகநானூற்றில் ஒரு செய்யுள்

G.சுப்பிரமணியம்

89 – 98

36

39

1

விசு – கார்த்திகை (1941)

சிலம்புகழீஇ அயர்தல்

S.S.பாரதி

41 – 56

37

39

3

விசு – தை (1942)

பட்டினப்பாலைத் தலைவன் யார்

S.S.பாரதி

153 - 166

38

39

11,12

சித்திரபானு - புரட்டாசி,

ஐப்பசி (1942)

அகநானூறு

           எஸ்.வையாபுரிப்பிள்ளை

547 - 552

39

40

1

சித்திரபானு - கார்த்திகை

(1942)

திருமுருகாற்றுப்படை முன்னுரை

எஸ்.வையாபுரிப்பிள்ளை

i – viii

40

40

2

சித்திரபானு – மார்கழி (1943)

திருமுருகாற்றுப்படை முன்னுரை

எஸ்.வையாபுரிப்பிள்ளை

 Ix – xvi

41

40

3

சித்திரபானு – தை (1943)

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

மு.இராகவையங்கார்

 65 - 72

42

40

3

சித்திரபானு – தை (143)

திருமுருகாற்றுப்படை முன்னுரை

எஸ்.வையாபுரிப்பிள்ளை

Xvii – xxiv

43

40

4

சித்திரபானு – மாசி (1943)

திருமுருகாற்றுப்படை  சொற்றொடரகராதி

எஸ்.வையாபுரிப்பிள்ளை

  xxv.

44

40

5

சித்திரபானு – பங்குனி (1943)

திருமுருகாற்றுப்படை சொற்றொடரகராதி

எஸ்.வையாபுரிப்பிள்ளை

53 – 62

45

40

6

சுபாநு – சித்திரை (1943)

மதுரைக்காஞ்சி

மு.இராகவையங்கார்

157 -164

46

40

6

சுபாநு – சித்திரை (1943)

நக்கீரரும் கருத்துரிமைப் புலமையறமும்

எஸ்.எஸ்.பாரதி

169 - 173

47

41

6,-8

தாரண - சித்திரை to ஆனி வரை (1944)

பத்துப்பாட்டும் அவற்றின் காலமுறையும்

எஸ்.வையாபுரிப்பிள்ளை

201 - 208

48

41

6-8

தாரண - சித்திரை  – ஆனி (1944)

பட்டினப்பாலைப் பற்றி ஒர் சாசனச் செய்யுள்

எஸ்.வையாபுரிப்பிள்ளை

214 - 216

49

45

9,10

சருவதாரி - ஆடி,

ஆவணி (1948)

இராமவதாரமும் கலித்தொகையும்

சி.கணேசையர்

113 - 119

50

46

4,5

விரோதி - மாசி,

பங்குனி (1950)

அதிகமான் நெடுமான் அஞ்சி வரலாற்றுள் சில ஐயங்கள்

சு.குமாரஸ்வாமி ஆச்சாரியார்

97 - 100

51

46

10-12

விக்ருதி - ஆவணி – ஐப்பசி (1950)

திருமுருகாற்றுப்படை

வை.சுந்தரேசவாண்டையார்

201 - 206

52

47

4,5

விக்ருதி - மாசி, பங்குனி (1950)

தமிழ்நாட்டு மூவேந்தர்

T.C.ஸ்ரீநிவாஸையங்கார்

57 - 66