ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

திரு. வி. கல்யாண சுந்தரனாரின் மேடைத்தமிழ் ஆளுமையும் மொழித்திறனும்

முனைவர் இரா. ஜெகதீசன் 13 Oct 2020 Read Full PDF

முனைவர் இரா. ஜெகதீசன்,

தலைவர் மற்றும் பேராசிரியர்,

தமிழ்த்துறை,

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

வேலூர் - 632115

 

ரா.சே. பாலாஜி,

முனைவர் பட்ட ஆய்வாளர் (ப/நே),

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

வேலூர் - 632115

 

 

ஆய்வுச் சுருக்கம்

     தமிழ் மேடைப் பேச்சு உலகின் முன்னோடி என்று போற்றப்படுபவர் திரு.வி.க. அவர்கள். மேடையில் தென்றலாகவும், தனது கருத்துகளின் வழி தீயாகவும் சுட்டவர். எழுதுவதைப் போல பேசவும், பேசுவதைப் போல எழுதுவதும் முயற்சி செய்து, அதில் வெற்றியும் கண்டவர். ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழிலும் உரையாற்ற முடியும் என்பதை நிருபித்து தனக்குப் பிறகான ஒரு பெரும் மேடைப்பேச்சு வழித்தோன்றல் உருவாக காரணமாய் அமைந்த அவரது ஆளுமைத் திறனையும் கருத்துக்களை விளக்க கையாண்ட மொழிநடையையும் விளக்குகிறது இவ்வாய்வு கட்டுரை.

திறவு சொற்கள்

பிரச்சாரம், பெர்சனாலிட்டி,ஆளுமைத்திறன்,குருமார் ,ஜீவாதாரம் ,மேடைப்பேச்சு ,திரு.வி.க.

முன்னுரை

     மேடைத் தமிழ் வகைமைக்கு சிறப்பையும் பெருமையையும் பெற்றுத்தந்த முன்னோடிகளுள் திரு.வி.க.வும் ஒருவர், சமஸ்கிருதம் கலந்த தமிழும் தனித்தமிழும் மேடைகளிலே பேசப்பட்டு வந்த காலத்தில் இனிய எளிய தமிழைப் படித்தவர்க்கு மட்டுமின்றி பாமர்க்கும் கொண்டு போய் சேர்த்தப் போற்றுதலுக்கு உரியவர் திரு.வி.க. அவர்கள். எழுதுவது போல் பேசுவது; பேசுவது போல் எழுதுவது; என்று தமது மேடைத் தமிழையும் இலக்கியத் தமிழையும் வடித்துக் கொண்டவர். மேடைத் தமிழின் முன்னோடி என்று கருதத்தக்க திரு.வி.க.வின் ஆளுமையையும், மொழித்திறனையும் கருதுகோளாகக் கொண்டு அவரது மேடைப் பேச்சுகளின் வழியே நுண்ணிதின் ஆய்ந்தறிந்து விளக்கமுறை திறனாய்வு அணுகுமுறையை பின்பற்றி உரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திரு.வி.க.வின் மேடைத்தமிழ்

     செம்மையான தூய தமிழ் நடையில் தம்முடையக் கருத்துகளைத் தெளிவாக விளங்கச் செய்தவர் திரு.வி.க. ஆவார். இவருடைய பேச்சு முறை படித்தவர்களை மட்டுமின்றி பாமர மக்களையும் கவர்ந்திழுத்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் அன்னைத் தமிழை மறந்து, ஆங்கிலத்தில் உரையாற்றுவதை பெருமை எனவும் சிறப்பெனவும் கருதியோர் மத்தியில் மேடைகள் தோறும் தமிழால் முழங்கி ‘தமிழ்த் தென்றல்’ என்ற போற்றப்பட்டவர் திரு.வி. கல்யாணசுந்தரனார்.

     தமிழகத்தின் பண்டை வளம், பண்பாட்டைக் கட்டிக் காக்கும் பழக்க வழக்கங்கள் முதலியவற்றை மக்களுக்கு நினைவூட்டி, உரிமை வேட்கையைத் தூண்டும் வகையில் இவரின் அரசியல் மேடைப் பேச்சுகளும், பெண்ணுரிமை, சாதீய எதிர்ப்பு, தொழிலாளர் நலன் சார்ந்து சமுதாய அக்கறைக் கொண்டதாக சமுதாய மேடைப் பேச்சுகளும், தமிழ் இலக்கியம், சமரச சமய சிந்தனை என்று இவரது இலக்கிய மேடைப் பேச்சுகளும் அமைந்தன. அரசியல், இலக்கியம், சமயம், பெண்ணுரிமை, தொழிலாளர் நலன், சாதிய எதிர்ப்பு என்று பல தளங்களிலும் தம்முடைய சீரிய கருத்துகளின் வழி, மேடைத் தமிழுக்கு அணிநலமும் பெருமையும் சேர்த்தவர் திரு.வி.க. ஆவார்.

திரு.வி.க.வின் மேடைத் தமிழ் குறித்து அறிஞர்களின் கருத்து

     பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்திலும், சுதந்திர இந்தியாவிலும் என இரு வேறு கால நிலைகளிலும் வாழ்ந்தவர் திரு.வி.க. திரு.வி.க. வாழ்ந்த சமூக சூழல் எத்தகையது என்பதை,

     ‘மண்மூடிப் போகவேண்டிய கண்மூடிப் பழக்க வழக்கங்கள் எவையெவை என அடையாளங் காணத் தொடங்கிய காலம்; காந்தியம், தேசியம் போன்ற நாடு தழுவிய கொள்கைகளின் ஊடே சுயமரியாதை இயக்கம், தமிழியக்கம் போன்ற மாநிலந் தழுவிய இயக்கங்களும், தம் இருப்பினை உணரத் தொடங்கிய காலம் இச்சூழ்நிலைகளின் தோற்றத்தோடு தோன்றியவர் தான் திரு.வி.க.’ என்று குறிப்பிடுகிறார் திருநாவுக்கரசு. (திரு.வி.க., மு.வ., ஓர் ஒப்பாய்வு, பக்.58-59)

     மக்கள்மீது கொண்ட அன்பும் அக்கறையுமே திரு.வி.க.வை மிகச் சிறந்த சிந்தனையாளராகவும் பேச்சாளராகவும் அடையாளங் காட்டியது. எல்லோரும் தம் பேச்சைப் புகழ வேண்டும் என்று எண்ணாமல், தன் சிந்தனைகள் மக்களுக்குப் போய் சேர வேண்டும் என்று எண்ணியதால்தான் அவரால் இத்தகைய புகழையும் பெருமைமையும் பெற முடிந்தது.

     ‘எழுத்து நடைக்கும் பேச்சு நடைக்கும் இடையில் இருக்கக் கூடிய வேற்றுமையைக் குறைத்தார். எழுதுவது போல் பேசுவதற்கும் பேசுவது போல் எழுதுவதற்கும் முயன்று வெற்றியடைந்தார். பழகு தமிழை, வேற்றுச் சொற்கள் மிகுதியாக விரவாமல், எளிமையுடனும் இனிமையுடனும் உணர்ச்சியுடனும் பயன்படுத்துவதில் முன்னோடியானார்’ என்று திருநாவுக்கரசு திரு.வி.க.வின் மேடைத் தமிழ் இயல்பினைச் சுட்டிக்காட்டுகிறார். (திரு.வி.க., மு.வ., ஓர் ஒப்பாய்வு, ப.59)

     நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கனார் திரு.வி.க.வின் மணி விழாவில் எழுதிய வாழ்த்துரை வாயிலாக திரு.வி.க.வின் பேச்சு முறையை அறிய முடிகிறது.

‘இடதுகை விரல்கள் இரண்டை நீட்டி,

கருத்துக் கேற்ப கையை ஆட்டி,

வலதுகைத் தலத்தில் அடித்து வைத்து,

சங்கீத மத்தியில் சாப்பு போல

அடித்துப் பேசி அழுத்தம் திருத்தமாய்ச்

சுளைசுளை யாகச் சொற்களைச் சொல்லிப்

பதம்பத மாகப் பதியும் படிக்கு

அணிஅணியாக அடுக்கிய கருத்தொடு,

இயக்கி விட்டதோர் எந்திரம் போலத்

தங்கு தடையெனல் எங்குமில் லாமல்

எத்தனை தூரம் எட்ட நின்றாலும்

கணீர்க ணீரெனக் காதிலே விழும்படிச்

செவிவழி இனிக்கும் செந்தேன் போலக்

கற்பனை மிகுந்த கவினுடைக் கவிதையாய்க்காதாற் காணும் கனவே போல!’

(தமிழ்த்தென்றல் அல்லது தலைமைப்பொழிவு, ப.4)

என்று வெ. ராமலிங்கனார் அழகாக எடுத்துரைத்துள்ளார். மேலும், அவர் திரு.வி.க. பேச்சில் எந்தெந்த நூற்கருத்துகள் வெளிவரும் என்பதை அகமகிழ்ந்து போற்றியுள்ளதையும் சான்றாகக் கூறலாம்.

தொல்காப் பியத்தின் சூத்திரம் தொடரச்

சங்க நூல்களின் சாறு வடித்துச்

சிலப்பதி கார ஒலிப்பும் சேர்த்துத்

திருக்குறள் ஞானப் பெருக்கம் திகழத்

திருமந்திரத்தின் பெருமை திரட்டிக்

கம்பன் பாட்டின் செம்பொருள் பெய்து

தேவா ரத்தின் திருவருள் கூட்டித்

திருவா சகத்தின் தேன் சுவை நிறைத்துத்

திருவாய் மொழியின் தெளிவையும் ஊட்டி

எம்மத மாயினும் சம்மதம் என்னும்

சமரச சுத்த சன்மார்க்கம் தழுவிப்

பண்டைய அறிவைப் புதுமையிற் பதித்துப்

பண்டிதர் எவரிடம் பார்த்தரியாத

அரசியல் சரித்திர அறிவுரைகள் பொருத்திக்

கள்ள மில்லாத உள்ளத் தெளிவுடன்

அன்பு ததும்பிட ஆர்வம் பொங்கக்

கற்றவர் மனத்தை முற்றியும் கவர்ந்து

பாமர மக்களைப் பரவசப் படுத்தி

‘காந்தீ யத்தின் கருத்துக்கள் எல்லாம்

தமிழன் இதயம் தழுவிய வாழ்வே’

என்பதைத் தெளிவாய் எடுத்துக் காட்டிய

அற்புதம் மிகுந்த சொற்பொழி வதனை

கேட்டேன் இன்பக் கிறுகிறுப் புற்றேன்’

(திரு.வி.க., தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு, ப.6)

என்று திரு.வி.க.வின் மேடைத் தமிழ் இயல்பினையும், உள்ளடக்கத்தையும் பாராட்டிக் கூறியுள்ளார்.

     திரு.வி.க.வின் சொல்வன்மையை தந்தை பெரியார், ‘திரு.வி.க.வின் பேச்சு மிகவும் சக்தி வாய்ந்தது. அந்தக் காலத்தில் அவர் பேசுகிறார் என்றால் தான் கூட்டம் வரும். நாடெங்கும் சுற்றிப் பிரச்சாரம் செய்தார். அந்தக் காலத்தில் தமிழில் பேசுவதற்கு ஆளே கிடையாது. திரு.வி.க. அவர்கள் தான் தமிழில் மிக அருமையாகப் பேசுவார்’ என்று பாராட்டுகிறார். (சுயம்பு. பெ., வாழ்வாங்கு வாழ்ந்த வள்ளல், ப.103)

     ‘சிலர் பேசும் போது மிகக் கொச்சையான நடையில் மனம் போன போக்கில் பேசுவர். எழுதும் போது பல்லுடையும் கடுநடையில் எழுதுவர். அதற்குக் காரணம், பேசும் போது அவர்கள் தமக்கு இயல்பான முறையில் நடத்தலும், எழுதும் போது வேண்டுமென்றே வேடம் பூண்டு நடித்தலே ஆகும். திரு.வி,க.வின் வாழ்க்கையில் நடிப்பு இல்லை; நடத்தை இருந்தது. ஆதலால் எழுதும் போது இருந்த பண்பாடு பேசும் போது வந்தது; பேசும் போது அமைந்த மிடுக்கு எழுதும் போது வந்தது’ என்று மு.வரதராசன் திரு.வி.க.வின் எழுத்து நடைக்கும், பேச்சு நடைக்கும் வேறுபாடு இல்லாத தன்மையைச் சுட்டிக் கூறுகிறார். (வரதராசன், மு., திரு.வி.க., ப.84)

     ‘வழக்கற்றுப் போன எத்தனையோ நல்ல தமிழ்ச் சொற்களெல்லாம் மீண்டும் உயிர் பெற்று உலவி மீண்டும் மக்கள் அனைவரும் அன்றாடம் பேசும் அழகு தமிழ்ச் சொற்களாக உலவி வருகின்றன என்றால் அந்த பெருமையைல்லாம் திரு.வி.க. அவர்களையேச் சாரும். திரு.வி.க. அவர்களின் மேடைப் பேச்சை விரும்பிக் கேட்க மக்கள் பெருந்தொலைவில் இருந்தெல்லாம் வந்தார்களென்றால் எல்லோருமே அரசியல் விஷயங்களை அறிவதற்காக வந்தவர்கள் அல்லர்; இவருடைய அழகு தமிழைச் செவிமடுக்கத்தான் என்று கூறலாம். அதோடு மட்டுமல்லாமல் இவர் பேசுவதற்கு ஆரம்பித்த காலத்திற்கு முன் இருந்த மேடைப் பேச்சு முறையை இனிய தமிழில் மாற்றி இவர் பெருமை கொண்டார் என்பதே உண்மை’ என்று எஸ்.டி. காசிராமன் திரு.வி.க.வின் மேடைத்தமிழ் இயல்பினை எடுத்துரைக்கிறார். (காசிராஐன், எஸ்.டி., திரு.வி.க., ஓர் இலக்கியம், ப.7).

     திரு.வி.க.வின் மேடைப்பேச்சு என்பது எளிமையும் இனிமையும் நிரம்பியது. பாமரர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமே அவரது மேடைத்தமிழை எளிமை ஆக்கியது. திரு.வி.க.வின் வருகைக்குப் பின்னரே மேடைப்பேச்சு புத்துயிர் பெற்றது. எழுதுவது போல பேசவும், பேசுவது போல எழுதவும் முடியுமென்ற நடை கைவரப் பெற்றவர் முதன்முதலில் திரு.வி.க. அவர்களே என்பதும் மக்கள் அனைவரும் விருப்பமுடன் மகிழ்ச்சியுடனும் கேட்டு மகிழ்ந்த மேடைப்பேச்சு திரு.வி.க.வினுடையது என்பதும் மேற்கண்ட அறிஞர்களின் கூற்றுவழி பெறப்படுகிறது.

மேடைத் தமிழ் ஆளுமை

     ஆளுமை என்பது ஆங்கிலத்தில் ‘Personality’ என்று குறிப்பிடப்படும். நல்ல தோற்றமும், செம்மாந்த பண்பு நலன்களும், தனித் திறன்களும் ஆளுமை என்ற வரையறைக்குள் இடம் பெறும். மேடைப் பேச்சாளர்களின் ஆளுமை என்ற வரையறைக்குள் இம்மூன்றையும் அடக்கிவிட முடியாது. காரணம், மேடைப் பேச்சிற்கு இம்மூன்றையும் கடந்த மொழியறிவு, உச்சரிப்பு பிழையின்மை, பன்னூல் பயிற்சி, நினைவாற்றல், மொழி நடை, ஆய்வுக் கூர்மை, நகைச்சுவை உணர்வு முதலானக் கூறுகளே மேடைப் பேச்சாளர்களின் ஆளுமைப் பண்பை நிர்ணயிக்கிறது.

     மேற்கண்ட இத்தனைக் கூறுகளையும் ஒருங்கே பெற்று மேடைத் தமிழின் வழி அரசியல், பெண்ணியம், மொழியுணர்வு, இலக்கியம், சமூக சீர்திருத்தம் என்ற அத்தனைத் தளங்களிலும் தமது ஆளுமையைச் செலுத்தி வெற்றி கண்டவர் திரு.வி.க. ஆவார்.

     ‘பேச்சு இயற்கையில் அமைந்தது எற்றுக்கு? வாழ்க்கையை அரிக்கவா? சமூகத்தை முறிக்கவா? நாட்டை எரிக்கவா? அன்று; அன்று; வாழ்க்கையையும் சமூகத்தையும் நாட்டையும் நல்வழியில் பண்படுத்தவே; பேச்சு என்பது இயற்கையில் அமைந்தது. பேச்சென்பது வெறுங் கூக்குரலன்று. அஃதொரு கலை. பேச்சை கலையாக்குவது அறிவுடைமை. அதனை வெறுமையாக்குவது ஆகாது. பேச்சிற்குள்ள பொறுப்பு பெரிது; மிகப் பெரிது; எண்ணத்திற்கும் செயலுக்கும் இடையில் சிங்க நோக்காக நிற்பது பேச்சு’ என்று மேடைப் பேச்சிற்குத் தாம் வகுத்த இலக்கணத்திற்கு திரு.வி.க.வே. சான்றாய்த் திகழ்கிறார். (தெய்வசிகாமணி ஆச்சாரியார், டி.எம்., மேடைத் தமிழ், பக்.vii-viii)

     பேச்சை கலையாக்குவது அறிவுடைமை மட்டும் அன்று. அதுதான் ஆளுமையும் கூட. அத்தகைய ஆளுமையை எத்தகையத் தளங்களில் எல்லாம் செலுத்தி அவை எத்தகைய நன்மையை விளைவித்துள்ளன என்பதில்தான் மேடைப் பேச்சின் வெற்றி அடங்கி உள்ளது.

     ‘இந்நாளில் நமது நாட்டில் நடைபெற்று வருஞ் சடங்குகளில் சில குருட்டு நம்பிக்கைகள் நுழைந்திருக்கின்றன. அவற்றுள் மூன்றைச் சிறப்பாகக் குறிக்கின்றேன். சடங்குகளைச் சமயத்துடன் தொடர்புபடுத்துவது. மற்றொன்று பிறப்பில் குறிக்கொண்டு நல்வினை தீவினைகட்குப் பண்டாரத்தையோ, தேவனையோ, பார்ப்பானையோ, பிறனையோ அழைப்பது, இன்னொன்று ஒரு மொழியிலேயே மந்திரஞ் சொல்ல வேண்டுமைன்பது’ என்று சமூக சீர்திருத்தங்களில் தமது ஆளுமையை மேடைத்தமிழ் வழி பிரதிபலித்துள்ளார் திரு.வி.க. (சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, ப.39).

     ‘சீர்திருத்தக் கருத்துகளைத் தடையின்றி எடுத்துச் சொல்வதற்குரிய சமூக ஒப்புதலை, அவரைப் பற்றிய எண்ணமும் அவருடைய பேச்சாற்றலும் அவருக்குப் பெற்றுத் தந்திருக்கின்றன. மேடைகளில் அவரால் எக்கருத்தையும் சொல்ல முடிந்திருக்கிறது’ என்ற மு. வரதரானாரின் கூற்று திரு.வி.க.வின் ஆளுமைப் பண்பைப் போற்றி புகழ்வதாக உள்ளது. (திரு.வி.க., ப.20)

     தமிழை யாராலும், எதனாலும் எச்சூழலிலும் அழிக்கவோ, இல்லாமல் செய்யவோ இயலாது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையும், உறுதியும் தளராத தாய்மொழிப் பற்றும் உடையவர் திரு.வி.க. என்பதை,

     ‘பழந்தமிழ் நாட்டைக் கடல் கொண்டது. அதனாலும் தமிழ் அழியவில்லை. எத்தனையோ புதுமக்கள் தமிழ்நாட்டில் குடி புகுந்தார்கள். அதனாலும் தமிழ் அழியவில்லை. தமிழைத் தொலைக்கவும் சிலர் முயன்றனர். அவர்தம் முயற்சியாலும் தமிழ் அழியவில்லை. தமிழ்மொழிக்குப் பின்னர் எத்துணையோ மொழிகள் தோன்றி இறந்தன. ஆனால், தமிழ் மொழியோ சாவா மூவா மருந்தாக உலகில் நிலவுகிறது. இம்மொழியினூடே எத்துணையோ மொழிகள் கலந்தன; கலக்கின்றன. அவைகளின் கலப்பினால் தமிழ் அழிந்ததோ? இல்லை. தமிழின் தொன்மையும் தன்மையும் என்னே! என்னே!’ என்ற அவரது உரைவீச்சு புலப்படுத்துகிறது. (திரு.வி.க.வின் சொற்பொழிவுகள், பக்.17-18)

     விடுதலை வேள்வியில் திரு.வி.க.வின் மேடைப் பேச்சு குறிக்கத்தக்கப் பங்களிப்பை நல்கியது. நாட்டு விடுதலையோடு, சமூக, பொருளாதார விடுதலையும் தேவையாய் உள்ளது என்பதை நன்குணர்ந்த திரு.வி.க.,

     ‘விடுதலை பலவகை. அவைகளுள் சிறந்தது அரசியல் விடுதலை. அரசியல் விடுதலையிலும் பல கூறுகள் உண்டு. அவைகளுள் தலையாயது பொருளாதார விடுதலை. அரசியல் - பொருளாதார விடுதலை உண்டானால் மற்றச் சமூகங்களில் சமுதாய மாற்ற விடுதலைகள் தாமே நிகழும் . முதலில் வேண்டற் பாலது அரசியல் பொருளாதார விடுதலையே. மற்ற விடுதலைக்குரிய முயற்சிகள் மட்டும் உடன் உடன் நடந்துகொண்டு வரலாம்’ என்று தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறார். (இந்தியாவும் விடுதலையும், ப.805)

     திரு.வி.க.வின் மேடைத் தமிழ் ஆளுமையை தொழிலாளர் இயக்க மேடைகளிலும் காணமுடிகிறது. தொழிலாளர் இயக்கத்தைக் கட்டிக் காத்து வளர்த்தெடுத்து அவ்வியக்கத்தின் தந்தை என்று போற்றப்பெற்றவர் திரு.வி.க. தொழிலாளர் இயக்கங்களின் நோக்கத்தைச் சிதைக்கும் வண்ணம் அரசியல் கட்சியினரும் பிறரும் தொழிலாளர்களைத் திசை திருப்ப முயற்சிப்பதை,

     ‘தொழிலாளர் இயக்கத்தில் மிதவாதிகளும், தேசியவாதிகளும், நடுவாதிகளும், பிறவாதிகளும் தலைப்பட்டு உழைக்கலாம். இவ்வாதிகள் அரசியல் மேடைகளில் காட்டிலுள்ள புலி, கரடி, சிங்கம், பசு முதலிய விலங்குகளைப் போல நடந்து கொள்வார்களாக; தொழிலாளர் மேடையில் அச்சகோதரர்கள் சர்க்கஸ் கூட்டத்திலுள்ள புலி, கரடி, சிங்கம் முதலிய விலங்குகளைப் போல நடந்து கொள்வார்களாக’ (மோகன், இரா., திரு.வி.க. அல்லது வாழ்க்கை விளக்கம், பக்.123-124) என்று அரசியல் சார்புடையோர் அரசியல் மேடைகளிலும், தொழிலாளர் மேடைகளிலும் நடந்து கொள்ளும் தன்மையினைச் சுட்டிக் கூறுகிறார்.

     மேற்கண்ட கருத்துக்களை ஆய்ந்தறிவதன் வழி திரு.வி.க. தம்முடைய ஆளுமையை எவ்வாறு பல்வேறு தளங்களிலும் உயிர்ப்புடன் இயங்கச் செய்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.

திரு.வி.க.வின் மொழித்திறன்

     மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவும் கருவி. பேச்சாளர் ஒருவர் தாம் கூறக் கருதிய பொருளை அவர் அறிந்த மொழியில் உணர்த்தும் விதமே அவரது மொழித் திறன் எனப்படுகிறது. இதனை மொழி நடை என்றும் கூறலாம்.

     எண்ணத்தையும் உணர்ச்சியையும் உரிய முறையில் பிறர் மணங்கொள எடுத்துரைக்கும் போது மொழித்திறன் நன்கு வெளிப்படுவதோடு, மொழியும் நிறைவு பெறுகிறது. பேச்சாளரின் உள்ளத்தில் இருப்பதை உயிரோட்டத்துடன் வெளிப்படுத்த மொழி நடை துணை நிற்கிறது. பேச்சின் இரு கூறுகளாக விளங்குபவை பேச்சாளனின் கருத்தும் அதனை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சொற்களும் ஆகும். எனவே, பேச்சாளரின் வெற்றி அவரது கருத்திலும், கருத்தை வெளிப்படுத்தும் முறையிலேயே அமைந்துள்ளது. கருத்தை வெளிப்படுத்த ஒவ்வொருவரும் ஒவ்வாரு முறையைக் கையாண்டுள்ளனர். திரு.வி.க. தம்முடைய கருத்துக்களை வெளிப்படுத்த,

v   உவமை நடை

v   உருவக நடை

v   நகைச்சுவை நடை

v   எளிய நடை

v   முடித்தல் நடை

முதலான நடை வகைகளின் வழி தாம் கூற விழைந்த கருத்துகளை எடுத்துக் கூறியுள்ளார்.

உவமை நடை

     பேச்சாளர் தாம் கூறவந்த கருத்தோடு கேட்போர் உள்ளத்தைக் கவரும் வகையில் வேறு ஒரு பொருளை அல்லது நிகழ்வை உவமையாகக் கூறல் உவமை நடை எனப்படும். அணிகள் பலவற்றிற்கும் உவமையே தாய் எனக் கருதப்படுகிறது.

பெயர், வினை, இடை, உரி என்ற நான்கே

வகைபெற வந்த உவமைத் தோற்றம்

(தொல்.பொருள்.உவமை. நூ.எ.4)

என்ற தொல்காப்பிய நூற்பா உவமைத் தோன்றும் இடங்களைச் சுட்டுகிறது.

     கடவுளின் இருப்பைச் சுட்டுமிடத்து,

     ‘ஆண்டவன் ஓரிடத்தில் கோயிற்கொண்டு மற்றோரிடத்துக் கோயில் கொள்ளாதவனல்லன்; அவன் நீக்கமற யாண்டும் நிறைந்து நிற்பவன் அவன் ஓரிடத்தை விரும்பிக் கொள்வோனும் அல்லன். அவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். அவன் கோயில் கொள்ளல் கொள்ளாமை அவனைப் பொறுத்தனவல்ல. அக்கொள்ளல் கொள்ளாமை உயிர்களின் நிலையைப் பொறுத்து நிற்பனவென்க’ (திரு.வி.க. நினைப்பவர் மனம், பக்.72-73) என்ற உவமை வழி மனிதர்களின் தூய்மை நிறைந்த உள்ளமே அவனது இருப்பிற்கானத் திருக்கோயில் என்பதை உணர்த்தியுள்ளார்.

     தாய்மையின் மேன்மை எத்தகையது என்பதையும், தாய்மைக்குப் பெருமை சேர்க்கும் பண்பு நலன்கள் எவை என்பதையும்,

     ‘ஒரு தாயால்தான் (பொறுமை) எல்லா நிலையில் இருந்தும் தன் குழந்தையைக் காப்பாற்ற முடியும். உலகில் எதையும் தாயால் தான் சாதிக்க முடியும். ஒரு குழந்தையை நல்லவனாகவோ அல்லது சமுதாயத்தில் சிறந்தவனாகவோ உருவாக்குவது தாயின் கடமையாகும். ஒரு ஆண்பிள்ளையோ அல்லது பெண் பிள்ளையோ எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கவும், எல்லா வகையான உறவுகளிலும் ஒன்று சேர்க்கவும், தாய்மையால்தான் முடியும், வாழ்விற்குரிய தொண்டு, தியாகம், அன்பு முதலியன நிலவுவதற்கு நிலைக்களன் தாய்மையன்றிப் பிறிதென்னை? அத்தாய்மையை அளிப்பது பிள்ளைப்பேறு’ (திரு.வி.க., பெண்ணின் பெருமை , ப.242) என்று தாய்மையின் தொண்டு நிலையையும், அப்பண்பின் வழியே குடும்பமானது நிலைபேறு மற்றும் உருவாக்கம் பெறுவதையும் மேற்கண்ட உவமை வழிச் சுட்டிக் காட்டுகிறார்.

உருவக நடை

     உவமையைப் போன்றே உருவக நடையும் பேச்சாற்றலுக்குப் பெரிதும் துணை செய்கின்றது. ஆழ்ந்த இலக்கியப் புலமையும், பரந்துபட்ட இலக்கிய அறிவும் உடையவர்களுக்கே இந்நடை வாய்க்கும். உணர்வைத் தட்டியெழுப்பும் நடை வகைகளுள் சிறந்தது உருவக நடை ஆகும்.

     ‘உலகம் சில காலம் குருமார் அடிவருடி நின்றது; சில காலம் மன்னர் வான்வழி நடைபெற்றது. இப்பொழுது வாணிபருக்கு இரையாகி வருகிறது. இனித் தொழிலாளர் வயப்பட்டு நலம் பெறப் போகிறது. தொழிலாளர் இயக்கம் உலகத்தைச் சூழ்ந்து முற்றுமைச் செய்திருக்கிறது! இனி அவ்வியக்கம், கொடுமை அடக்குமுறை என்னும் அரண்களை வேறுபடுத்திச் சமத்துவம் என்னும் கோட்பாட்டைப் பற்றிச் சுதந்திரம் என்னும் அரியாசனமேறிச் சகோதரத்துவம் என்னும் கொடியைப் பறக்க விடும்’ (இரா .மோகன், திரு.வி.க. அல்லது வாழ்க்கை விளக்கம், ப.24.) என்று தொழிலாளர் இயக்கம் வருங்காலத்தில் எவற்றை வீழ்த்தி வெற்றிகொடி நாட்டப் போகிறது என்பதை மேற்கண்ட உருவகத்தின் வழி விளக்குகிறார்.

நகைக்சுவை நடை

     மனித இனத்தின் கண் தோன்றி வெளிப்படும் மெய்பாடுகளுள் முதன்மையானது நகையே ஆகும்.

‘நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப’

(தொல்.மெய்., நூ.எ.3)

என்று தொல்காப்பியர் எண்வகை மெய்ப்பாடுகளும் நகை என்னும் உணர்வையே முதலாவதாகக் குறித்துள்ளார். மேலும்,

‘எள்ளல் இளமை பேதைமை மடன் என்று

உள்ளப்பட்ட நகை நான்கு என்ப

(தொல்.மெய்., நூ.எ.4)

என்று நகை என்றும் மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்களையும் சுட்டுகிறார்.

     இயல்பாகவே நகைச்சுவை உணர்வுடன் பேசுவதை முதிர்ந்த பேச்சாளர்களிடம் காண முடியும். அவர்தம் பேச்சில் நகைச்சுவை அளவோடு கலந்து இழையோடுவதை உணர முடியும்.

     ‘மேடைப் பேச்சில் நகைச்சுவை அளவோடு இருந்தால் ரசிக்கும். அளவில் எல்லை மீறினால் முகம் சுளிக்க வைப்பதோடு வெட்கித் தலை குனிய வைக்கும்’ (லியோ இராமலிங்கம், பேச்சுக்கலையில் தேர்ச்சிப் பெற வேண்டுமா? ப.5) என்ற வலம்புரி ஜானின் கூற்றும்,

     ‘நகைச்சுவை உப்பு மாதிரி அமைந்திருக்க வேண்டும். உப்பு உணவுக்கு அவசியம் தேவை. அது கூடினாலும் குறைந்தாலும் சுவையாக இருக்காது. அதுமாதிரி பேச்சில் நகைச்சுவை வேண்டும். அது அளவோடு அமைய வேண்டும். கருத்து மூக்கு போல நகைச்சுவை மூக்குத்தி போல! பேச்சில் கருத்தும் நகைச்சுவையும் கலந்திருக்க வேண்டும்!’ (பேச்சக் கலையில் தேர்ச்சி பெற வேண்டுமா? ப.53) என்ற கூற்றும் நகைச்சுவை எந்த அளவிற்குப் பேச்சில் இடம் பெறவேண்டும் என்பதை உணர்த்தி நிற்கிறது.

     திரு.வி.க. அவர்கள் தம்முடைய பேச்சிலும் எழுத்திலும் கேட்போரைப் பிணிக்கும் வண்ணம், எப்பொருள் பற்றிப் பேசினாலும், எத்தகைய நடையைக் கையாண்டாளும் அதனுள் நகைச்சுவையை இழையோடச் செய்யும் ஆளுமை நிறைந்த மொழிநடை கைவரப் பெற்றவர் என்பதை,

     ‘இப்பொழுது உங்கள் முன்னிலையில் பேச எடுத்துக்கொண்ட பொருள் இமயமலை என்பது, இமயம் மிகப்பெரியது. மிகப் பெரியதற்கு மிகப்பெரிய பேச்ச வேண்டும். யானோ சிறியன்;; தற்போது உடல் நலமுங்குன்றப் பெற்றிருப்பவன். இமயத்தை எங்ஙனம் சுமக்க வல்லேன்? குறிக்கப் பெற்றுள்ள காலம் வரையில் அதைச் சுமக்க முயல்கிறேன். ஒரு வேளை சிறிது காலங்கடக்க நேரின், தலைவரின் கருணைத் துணையும் உங்கள் பொறுமைத் துணையும் வேண்டும்.’ (திரு.வி.க., இமயமலை அல்லது தியானம், ப.5) என்ற பேச்சின் வழி அறியலாம்.

எளிய நடை

     படித்தவர், பாமரர் என்ற வேறுபாடு இன்றி அனைவர்க்கும் விளங்குமாறு பேசும் நடையே எளிய நடை ஆகும். எளிய நடை என்பது கொச்சை மொழி நடையாக இன்றி இனிய மொழி நடையாக அமைதல் வேண்டும்.

     திரு.வி.க. தனது மேடைப் பேச்சுகளில் மிக நீண்ட தொடராக அன்று சிறு சிறு வாக்கியங்களாகவே அமைத்துப் பேசுவார். எளிய சொற்கள், ஓசைநயம், ஆழ்ந்த பொருளமைதி, நயம், நல்ல சந்தம் அமையுமாறு பேசுவதே அவரது எளிய நடைக்கு இலக்கணமாகும்.

திரு.வி.க.வின் எளிய நடைக்குச் சான்றாக,

     ‘முறையான கல்விக்கூடம், பட்டம் பெற்ற ஆசிரியர்கள், பயிற்றுவிக்க பல்வகைக் கருவிகள் இவற்றைக் கொண்டு இன்றையக் கல்வி முறை செயல்படுகிறது. இம்முறையினால் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை பெருகிறதேயொழிய உண்மையான அறிவு வளர்ச்சியைக் காண முடிவதில்லை.’ (இருளில் ஒளி, ப.11)

     ‘வாழ்வே எற்றுக்கு? தொழில் புரிதல் எற்றுக்கு? சமய ஞானப் பேற்றிற்கன்றோ? தனக்கென வாழாது பிறர்கென வாழ்தல் வேண்டுமென்றும் எண்ணத்தை விதைப்பது சமய ஞானமாகும்.’ (சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, ப.71)

     ‘ஒன்று பெரியதா? கோடி பெரியதா? அளவில் கோடி பெரியதாயிருக்கலாம். ஆனால் தன்மையில் ஒன்று பெரியது. ஒன்று இல்லையேல் கோடி ஏது? கோடி, ஒன்று சேர்ந்த தொகையே கோடி. கோடிக்கு முதன்மை ஒன்றே. அவ்வொன்று எது? இரண்டு அரை சேர்ந்தது. நான்கு கால் சேர்ந்தது; இப்படி ஒன்றை அடுக்கிக் கொண்டே போகலாம். போகப்போக என்ன முடிவு ஏற்படும்?’ (பரம்பொருள் அல்லது வாழ்க்கைத் துணைநலம், ப.23) என்ற எளிய நடையின் வழி பரம்பொருளின் உண்மை நிலை சூன்யமே என்பதை விளக்கிக் காட்டுகிறார் திரு.வி.க.

     ‘மனித மனத்தைச் சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி அமைதி நிலைக்குக் கொண்டு செல்வதே கோயில் வழிபாட்டின் நோக்கம்.’ (சைவத்திறவு, ப.35)  

‘பெருந்தீனி, ஒழுக்கத்தைக் கெடுப்பதோடு உடல் வளத்தையும் சிதைத்து முடியில் மரணத்தையும் விரைந்து கூட்டும். மலைக்கிழங்கை உண்டும், காட்டுப் பழங்களைத் தின்றும், வயல் தானியங்களைப் புசித்தும், காற்றைப் பருகியும் வாழ்வோரை விரைவில் முதுமை அணுகாது.’ (தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு, ப.155)

     ‘நோன்பு உள்ளுறுப்புகளில் சேர்ந்துள்ள பழைய அழுக்குகளைத் தள்ளி, அவ்வழுக்குகளால் குவிந்த நச்சுப் பொதிகளை நீறுபடுத்தி, வெம்மையைத் தணித்து, இயற்கை வழி குருதியையோட்டி, நரம்புக் குலைவை ஒழுங்குபடுத்தி, உரமூட்டி, உறுதி நிலைக்கத்தக்க உள்ளம் பெறும் உடலை நல்கும். நல்லுடல் வழி மனோ உறுதியையும், உறுதிவழி அழகென்னும் முருகையும் பெறலாம்.’ (மேலது, ப.291)

     ‘ஞாயிறு ஒளி நல்லுடலுக்கு உரமூட்டும். உள்ளக்கிளர்ச்சி ஏற்படுத்தும். ஞாயிற்றொளியில் மூழ்குதற்குரிய காலை நேரம் எட்டு மணியன்று; ஒன்பது மணியன்று; ஞாயிறு செவ்விய கோலத்தோடு காட்சியளிக்கும் போது அது உமிழும் ஒளியிடை சிறிது நேரம் நிற்பது பித்தத்தை உண்டு பண்ணாது. வைகறைத் துயிலெழுந்து காலைக் கடன்களை முடித்துச் செஞ்ஞாயிற்றின் ஒளியில் முழ்குவது சிறப்பு. அவ்வேளையில் ஞாயிறு மிகத் தூய உயிர்ப்பை வழங்குகிறது. அவ்வுயிர்ப்பு வாழ்விற்கு இன்றியமையாத ஜீவாதாரம்.’ (மேலது, ப.178)

     ‘உறக்கம் கல்லுடலுக்கு அறிகுறி. அதன் குலைவு நோயுடலுக்கு அறிகுறி. பகலில் விழிப்பும் இரவில் உறக்கமும் வாழ்க்கைக்குத் தேவை. தூக்கம் மனத்துக்கும் மற்ற கருவி கரணங்கட்டும் ஓய்வு தந்து அவற்றிற்கும் அவை வாயிலாக உடலுக்கும் உரமூட்டும் தன்மை வாய்ந்தது.’ (இருளில் ஒளி, ப.27) என்ற எளிய நடையின் வழி உடலை ஓம்புவதற்கான வழிமுறைகளை மிக எளிமையாக விளக்கிக் காட்டுகிறார் திரு.வி.க.

முடிந்தல் நடை

     மேடைப் பேச்சுகளில் எடுத்தல், தொடுத்தல் என்னும் உத்திகளைப் போன்றே முடித்தல் நடையும் இன்றியமையாது. பேச்சாளரின் கருத்துக்கு கேட்போர் இணங்குவதும் மாறுபடுவதும் அவரது பேச்சின் முடிவுரையைப் பொருத்தே அமைகிறது. முடிவுரை இடத்தைப் பொருத்தும், கேட்போரைப் பொறுத்தும் அமையக் கூடியது.

     ‘பேச்சை முடிப்பதில் ஒரு குறிக்கோள் இருக்கிறது. அது பேச்சை முடிவுக்கு கொண்டு வருவதுடன் சிறிது நேரத்திற்குள் பேசிய பேச்சின் முழுப்பொருளையும் கேட்போருடைய விழுமிய கவனத்துக்குக் கொண்டு வந்து பேச்சில் சிதறிக் கிடக்கும் கருத்துக்களை ஒருமுகப்படுத்தி உள்ளத்தில் பசுமரத்து ஆணி போலப் பதிய வைக்கிறது. ஒரு நாளும் பேச்சை விரைவாக அழகற்று முடியுமாறு திடீரென்று நிறுத்தி விடுதல் கூடாது. எடுத்துக்கொண்ட பேச்சை முடித்துக் காட்டுக. இதுவே நான் சொல்லக் கூடியது. பேச்சை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து முடிந்து விடுக. கேட்பவர்களும் பேச்சு முடிவடைந்தது என்று உணரட்டும்.’ (மேற்கோள் நூல்: இளைஞர்களே வாருங்கள், பக்.35-36) என்ற ஜார்ஜ் ரௌலண்டு காலின்ஸ் என்பவரின் கூற்று முடித்தல் உத்திக்கு வரையறைக் கூறுவதாக அமைந்துள்ளது.

     திரு.வி.க. தம்முடைய உரைகளின் முடிவில் வந்தேமாதரம் என்று கூறி முடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

     ‘...இச்சிற்றுரைகளோடு ஈண்டு போந்துள்ள தலைவர், பிரதிநிதிகள், மற்ற நண்பர்கள் முதலியோரை அன்புடன் வரவேற்கின்றேன் வந்தே மாதரம்.’ (தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு, ப.30) என்று கூறி முடிப்பது அவரது முறைகளில் ஒன்றாகும். மேலும்,

     ‘சகோதரிகளே! சகோதரர்களே! உங்கள் அரிய காலத்தை வீணே கழிக்க எனக்கு விருப்பமில்லை. சுயராஜ்ய வேட்கை கிராமங்களில் இருந்தே எழுதல் வேண்டும். சுயராஜ்ய விதைக்கு கிராமங்களே சிறந்த நிலம். நிலத்தைப் பண்படுத்த முயலுங்கள். காந்தியடிகளை மறவாதேயுங்கள். கதரை மறவாதேயுங்கள். நாடார்களை மறவாதேயுங்கள். வணக்கம்! வணக்கம்! வந்தேமாதரம்!’ (மேலது, ப.319) என்று வேண்டுகோளுடன் முடிப்பதையும் ஒரு உத்தியாகக் கையாண்டுள்ளார்.

     ‘பெண்ணுக்கு உரிமை நல்கிய என்னருமைத் தமிழ் நாடே! இதுபோழ்து யாண்டுளாய் யாண்டுளாய் என்று அலமருகின்றேன். அவ்வுரிமை நாட்டை மீண்டுங் காண எவர் முயல வேண்டும்? தமிழகத்தில் பிறந்த நாமல்லவோ முயலல் வேண்டும்? என்னுடன் பிறந்த அருமைத் தமிழ் மக்களே! அந்நாட்டைக் காண வீறு கொண்டு எழுங்கள்! எழுங்கள்! வந்தே மாதரம்!’ (மேலது, ப.219) என்ற முடித்தலானது உணர்ச்சிமிக்க முடிவுரைவுக்குச் சான்றாய்க் திகழ்கிறது. இவ்வாறு மேடைதோறும் தம் சொற்பொழிவின் இறுதியில் வேண்டுகோளுடனும், உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் முறையிலும், குறிக்கோளை வலியுறுத்தியும், அன்றையச் சொற்பொழிவின் சுருக்கத்தைத் தொகுத்துகூறும் வகையிலும் பல்வேறு முடித்தல் உத்திகளைக் கையாண்டு தமது ஆளுமைத் திறனை பொலிவுறச் செய்துள்ளார்.

முடிவுரை

v   ஆங்கில மேடைப்பேச்சிற்கு நிகராக தமிழில் மேடைப்பேச்சினை வளர்த்தெடுத்தப் பெருமைக்குரியவர் திரு.வி.க. ஆவார். எனவே, அவரை ‘மேடைத் தமிழின் தந்தை’ என்று அழைத்தனர்.

v   மேடைத்தமிழில் எழுதுவதைப் போல் பேசுவதும், பேசுவதைப் போல் எழுதுவது என புதியதொரு நடையைத் தோற்றுவித்தவர் திரு.வி.க. பேச்சுத்துறையில் அவர் ஆற்றிய தொண்டு அளப்பரியது.

v   அரசியல், சமயம், தொழிலாளர் நலன், இளைஞர்கள், பெண்ணியம், இலக்கியம் என்ற பல துறைகளிலும் தாம் ஆழ்ந்து கற்ற அறிவின் பயனை மேடைப் பேச்சின் வழியே பல்லோரும் பயன்பெறந் தந்தவர் திரு.வி.க. ஆவர்.

v   திரு.வி.க.வின் ஆளுமையை அறிய அவர் முனைப்புக் காட்டிய பல்வேறு துறைகளும் சான்று பகர்கின்றன.

v   திரு.வி.க. தாம் கூற விழையும் கருத்துக்களை உவமை நடை, உருவக நடை, நகைச்சுவை நடை, எளிய நடை, முடித்தல் நடை என்ற பல்வேறு உத்தி வகைகளைக் கையாண்டு தமது மொழி நடையைச் சிறக்கச் செய்ததுடன் தமது ஆளுமையையும் மொழித்திறனும் வெளிப்படும் வகையில் திறம்படக் கையாண்டுள்ளார்.

துணை நின்ற நூல்கள்

1.    திருநாவுக்கரசு, சு. திரு.வி.க., மு.வ. ஓர் ஒப்பாய்வு, அகிலா வெளியீடு, சென்னை. (ப.ஆ.இ).

2.   கலியாண சுந்தரனார், திரு.வி. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு, இரு தொகுதிகள், அரசி புக் டிப்போ, சென்னை. நான்காம் பதிப்பு, 1964.

3.   கலியாண சுந்தரனார், திரு.வி. தமிழ்த்தென்றல் அல்லது தலைமைப்பொழிவு, புனித நிலையம், சென்னை. முதற்பதிப்பு, 1974.

4.    வரதராசன், மு. திரு.வி.க., நாயக வெளியீடு, சென்னை, மூன்றாம் பதிப்பு 1968.

5.   காசிராஜன், எஸ்.டி.,    திரு.வி.க. ஓர் இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், இரண்டாம் பதிப்பு, 1986.

6.   தெய்வசிகாமணி ஆச்சாரியார், டி.எம்., மேடைத் தமிழ், பாரி நிலையம், சென்னை, முதற்பதிப்பு, 2011

7.    கலியாண சுந்தரனார், திரு.வி., சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, பு+ம்புகார் பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்பு 1985.

8.   கலியாண சுந்தரனார், திரு.விக., இந்தியாவும் விடுதலையும், சாது அச்சுக்கூடம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 1952

9.   மோகன், இரா., திரு.வி.க. அல்லது வாழ்க்கை விளக்கம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு 1989.

10.   இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம், கழக வெளியீடு, சென்னை, மறுபதிப்பு, 1982.

11.   கலியாண சந்தரனார், திரு.வி., நினைப்பவர் மனம், சாது அச்சுக்கூடம், சென்னை. நான்காம் பதிப்பு 1950.

12.   லியோ இராமலிங்கம், பேச்சுக் கலையில் தேர்ச்சி பெற வேண்டுமா? செழியன் பதிப்பகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு, 2000.

13.   வீரமணி, கி., இளைஞர்களே வாருங்கள், திராவிடர் கழக வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு, 1916.

சுருக்கக் குறியீட்டு விளக்கம்

உ.ஆ.     -    உரையாசிரியர்

திரு.வி.க.   -    திரு. வி. கலியாண சுந்தரனார்

நூ.எ.      -    நூற்பா எண்

ப.        -    பக்கம்

பக்.       -    பக்கங்கள்

ப.ஆ.இ.         -    பதிப்பு ஆண்டு இல்லை

மேலது.    -    மேற்குறித்த நூல்