ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சிற்றிதழ்களில் மாய எதார்த்தவாதக் கவிதைகள்

முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் 13 Oct 2020 Read Full PDF

முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன்

தமிழ்ப் பேராசிரியர்,

அறிவியல் மற்றும் மனிதவளத்துறை,

வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி,

ஆவடி

 

ஆய்வுச் சுருக்கம்:

தமிழ்மொழியின் நிகழ்கால இலக்கிய வளர்ச்சியினை இனம் காட்டும் கட்டுரையாக இக்கட்டுரை அமைகின்றது.. அதில் மாய எதார்த்தவாதக்கோட்பாடு கவிதைகள் எவ்விதம் எடுத்தாளப்படுகிறது என்பதை விளக்குவதாகவும் அமைகிறது. மாய எதார்த்தவாதம் என்ற கோட்பாட்டின் விளக்கம், அவ்வாறான கவிதைகள் அதன் விளக்கம் ஆகியவை விளக்கப்படுகின்றன. சிறுவட்டத்திற்குள் மூழ்கிவிடும் சிற்றிதழ்கள் குறித்தான செய்திகள், அவ்விதழ் படைப்புகள்  வரலாற்றில் பதிவு செய்யப்படுவதாகவும் இக்கட்டுரை அமைகின்றது.

திறவுச்சொற்கள்:

மாய யதார்த்தவாதம், புத்திலக்கியம், சிற்றிதழ்கள், மிகு புனைவு, உள் மன வெளிப்பாடு, மாயப்பின்புலம், மாந்திரீக யதார்த்தம், மாற்றுக்கற்பனை, இஸங்கள், நவீன படைப்புகள்,

புத்திலக்கியங்கள் வளரும் பாங்கைக் கொண்டு அம்மொழியின் வளர்ச்சியைக் கணகிட முடியும். பிறமொழித் தாக்கமும், படைப்புத்திற புதுமை முயற்ச்சியும் சிந்தனைத்தளத்தில் ஒருவித மாற்றத்தைத் தருகின்றன. படைப்பு முயற்ச்சியின் பாதைகள் புதுமைகள் ஒவ்வொரு படைப்புருவாக்கத்தின் பொழுதும் நிகழ்கின்றன. இவ்வகையில், சிற்றிதழ் படைப்பாளர்கள் அதிகளவில் தமது படைப்பு வெளிப்பாட்டின் பொழுது சிற்சில மாற்ற்றங்களைத் தமது படைப்பில் கொண்டு வர முயல்கின்றனர். சிற்றிதழ் படைப்புகள் நவீன இலக்கியங்களின் விளை நிலங்களாக இக்காலகட்டத்தில் அமைந்திருக்கின்றன. மேலை நாட்டு இலக்கிய வகைப்பாடுகள் இலக்கியக் கோட்பாடுகளைத் தமிழில் இவ்வகைச் சிற்றிதழ்கள் தமது வாசகர்க்ளுக்கு அளிப்பதில் பெருமிதம் கொள்கின்றன. இச்சிற்றிதழ்களில் மாய எதார்த்தவாதக் கவிதைகள் காணப்படுமாற்றை இக்கட்டுரையில் காணலாம்.

மாய எதார்த்தவாதம்:

“Magical Realism என்னும் மாய எதார்த்தவாதத்துக்கு ஒரு பிரதியில் இடம் உண்டு. அது ஒரு சிக்கலான விஷயத்தை அந்தச்சிக்கல் அவிழாமலேயே நாம் பற்றிக் கொள்ள  உதவுகிறது”.1 என்பார் சத்யானந்தன். மாயஎதார்த்தவாதம் குறித்து ஜெயமோகன் கூறும்போது,” மற்ற மிகு புனைவுகள்  மாயஉலகை யதார்த்த வாழ்வுடன் தொடர்பற்ற ஒரு புனைவுவெளியில் நிகழ்த்தும்- மாயஎதார்த்தம் அதை அன்றாட வாழ்வின் தளத்தில் நிகழ்த்திக் காட்டும்” 2 என்பார்.

எதார்த்தவாத ஓட்டத்தின் ஓரிடத்தில் அறிவுலகக் காட்சிகளுக்கு மிகுபுனைவு நிகழ்வை மாயஎதார்த்தவாதம் நிகழ்த்துகிறது. வாசகனின் மனதில் எதிர்பார்க்காத ஒரு கற்பனையை இது தருகிறது.

  மனம் அறிவு வயப்படுத்துதலுக்கு ஆளாகும்பொழுது, தனக்குள் உள்ள அனுபவம், கற்றகல்வி, நெறிப்பாடுகள், முன்புள்ள இலக்கியப்பாதைகள், கட்டமைப்பு, இலக்கியப் பொருட்பாடுகள் ஆகியவை வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் சென்ற வழியிலேயே செல்ல அறிவுக்குக் கட்டளை பிறப்பிக்கின்றன. மனதைத் திறந்து விடப் பட்டு அதன் எல்லையைப் பரந்த வெளியில் கற்பனைச் சிறகடிக்க வரும்பொழுது,  அது மாய எல்லைகளைத் தொடுகிறது. ஒன்று பிறிதொன்றினை உருவகப்படுத்தி, ஒன்று வேறொன்றின் சாயலில், ஒன்று இயல்பில் இயற்கைக்கு அப்பாற்பட்டு மாய உருக்கொள்வது அதைப் படைப்பாக மாற்றுவது புது இலக்கிய முயற்சியாகிறது. இது உண்மையிலிருந்து அதாவது நமது அறிவு எல்லையிலிருந்து வேறு எல்லையை உடையதாகின்றது. இக்கற்பனையை கூண்டோடு கொண்டுவந்து எதார்த்த உலகின் நிகழ்வில் ஒன்றிணைப்பது படைப்பின் தன்மையை சிறந்ததாக மாற்றுகிறது. இது அறிவுக்கும், அறிவற்ற கற்பனைக்கும் இடையே உள்ள நெருக்கத்தை இது அதிகமாக்குகிறது. பகலும் இரவும் சந்திக்கும் அந்தி வேளை போன்று இரண்டற்றது.

 படைப்பாளன், வாசகன் ஆகிய இருவரையும் இணைக்கும் ஒன்று படைப்பாகிறது. படைப்பு வாசகனை வாசகன் வழி இழுத்துச் செல்லும் நிலை பொதுமையானது.  வாசகன் வழி செல்லாமல் படைப்பாளன் வழியில் வாசகனை அது இழுத்துச் செல்லும் நிலையும் உண்டு. ஆனால் இதில் முதல் நிலையே அதிகம் உணரப்படும்.  இதுவே தன்னிறைவுடையதாகிறது.

 மாயஎதார்த்தவாதப் படைப்புகள், வாசகனை வாசகன் வழியே இழுத்து அழைத்துச் செல்கின்றன. படைப்பாளனுக்குப் படைப்பில் எவ்வித தொடர்பும் இல்லை. ” பல்துறை சூழலில் எழும் ஒரு படைப்பு அல்லது நூலின் பொருள், அச்சூழலில் பிற கூறுகளால் தீர்மானிக்கப்படுகிறது. இத்தகைய பண்பாட்டு கூறுகள் ஒன்றையொன்று அவாவி நிற்கின்றன (DIALOGISM) அதாவது படைப்பு சூழலின் முழுமையை எந்த ஒருகூறும் முறையாகப் பிரதிபலிப்பதில்லை” 3 என்பார் ஜோசப்

சிற்றிதழ்களில் மாய எதார்த்தவாதம்:

சிற்றிதழ்களில் வனம், தொடரும், நந்தவனம், தேசிய வலிமை, சுந்தரசுகன், கல்வெட்டு பேசுகிறது, கூடாரம், வன்மி போன்ற இதழ்களில் மாய எதார்த்தவாதக் கவிதைகள் அதிகம் வெளியிடப்படுகின்றன. ‘ஊன்மலர்’ எனும் பழனிவேளின் கவிதை வனம் சிற்றிதழில் மிகச்சிறந்த மாய எதார்த்தவாதக் கவிதையாக வெளிவந்துள்ளது. அக்கவிதையானது,

”காட்டின் காலெடுத்துச் செல்லும் போதே

சொல்லரித்த உடலைப் பிறந்த மேனியாக்கும் குறும்புதர்கள்

மிக அபூர்வமாக வெறிக்கின்றன நீர்பாடி மிதக்கிறதா

வளர்கிறதா ஆம் இந்த உணர்ச்சி மிக்க புகைப்படக்கலைஞன்

தாள முடியாத நிருவாணத்தை உதற சரளைக்கற்களின் மீது தாவி

ஓடுகிறான் கல்லூரிப் பேராசிரியன் எதைக் கற்றுக்

கொடுக்க கடிகாரத்தை சுழற்றி வீசுகிறான் அந்த தடியன் ஓயாது.

....

முதன்முதலாக ஆண்

முதன்முதலாக ஆணை அறிந்து கொள்வது

விரைக்காத குறியின் மீது கரணை காட்டுவது மட்டுமே

மட்டுமே மிச்சமிருக்கிறது எவ்வெவ்ற்றின் கண்கள் இவைகள்

அவர்கள் வெவ்வேறு இடங்களில்

ஓடையிடை விழுந்து கிடக்க போதை கலைய

அவர்கள் மீது ஒரே வகை பட்டாம்பூச்சி

ஒரே விதமாக அமர்ந்து எழுப்புகின்றன

மூடாத ஊன் மலர்” 4

என்பதாகும். இக்கவிதையில் இறந்தவர் ஒருவர், புகைப்படக் கலைஞர் ஒருவர், பேராசிரியர் ஒருவர் ஆக மூவர் குறித்தான பதிவுகள்  கவிதையாக்கம் பெற்றுள்ளன. இறந்தார் உடலை குறும்புதர்கள் வெறிப்பதும், நீர்பாசிகள் மிதப்பதும் செய்கின்றன. காட்டின் சரியான அழகை புகைப்படம் எடுக்க முடியாமல் தடுமாறும் கலைஞன், பேராசிரியரின் பேதமைத் தனம் விளக்கப்பட்டதும் அதன் வெளிப்பாடும் அதன் பின்னதான ஆண் ஆணோடு சேர்ந்து போதையில் உடலின்பம் பெற முயற்சிப்பதும் அதன் வெளிப்பாடுகளும் எதார்த்தத்திலிருந்து திடீரென்று நிறைய விலகி மிகுபுனைவை நோக்கிச் செல்கிறது கவிதை. அரூப  நிகழ்வுகள் விசாரனை இயல்பு மீறியவையாக உள்ளன.

 

 

வழக்கத்திற்கு மாறானவை:

” இலக்கியத்தின் சில பிரத்தியேகமான உத்திகளையும் மொழிக் கூறுகளையும், புரிந்து கொள்ளவும் உதவுகிறது. அடிமனதின் பிரதிபலிப்பைச் சொற்கள்  பிரதிபலிக்கும் என்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. இது முக்கியமாக சாதாரணமாக வெளிப்படும் சொற்களையும் தொடர்களையும் விடவும் இவை உணர்வுப் பூர்வமாகக் கட்டுப்படுத்தப் படுகின்றன. வழக்கத்திற்கு மாறாக வருவனவும், தம்மை அறியாமல் கட்டுப்படுத்தப் படாமல் நாம் தடுமாறியும் நழுவியும் வரிவனவும் உளரலாக விழிவனவும், பேசுபவனின் அல்லது எழுதுபவனின் உள்மனத்தை அதிகமாகப் புலப்படுத்தக் கூடியவை” 5 என்ற கருத்தின்படி உள்மன வெளிப்பாடான அதிபுனைவுக் கவிதையான மாயஎதார்த்தவாதக் கவிதையாக,

”இரவு

வெளவாலாக மாறி

தலைக்கீழாக உச்சி மரத்தில் தொங்கினேன்

மலை குகைகள் மகிழ்வு ஸ்தலம்

இரைதேடி நெடுந்தொலைவு சிற்கடிக்க

கூகை குரல் விழியமைக்க

பகற் குருடு கண் திறக்க

பழுக்கும் கனி யழைக்க

வலைகள்

விரித்து

காத்திருக்கும் மனிதன்

கழுத்தை யுறிஞ்சி கடிக்க

பற்களிடையே பரிதவித்த

உயிர்

அதிகாலை

சூரியக் கதிர்கள் விரிய

நீலம் பூத்து நிறம் மாறித் தடுமாற

ஒற்றைக்கண் காகம்

கரைந்தழைக்கும் விருந்து. 6

இக்கவிதைக் காணமுடிகிறது. கனவு விரித்த காட்சியாக இதைக் கவிஞர் காட்சிப்படுத்துகிறார் மனிதர்கள் மேலிருக்கும் கோபம் தான் வெளவாலாகி மனித கழுத்தைக் கடித்து இரத்தம் உறிஞ்சும் கோரக்காட்சி வழியாகத் தீர்கிறது. இயல்பு நிகழ்வின் மேல் புனைந்த மாயப்பின்புலத்தை இக்கவிதை விளக்குகிறது. “யாதார்த்தம் குழப்பமானது. அதை நேரடியாகப் பிரதிபலிக்க முடியாது என்ற சிந்தனை அடிப்படையில் தோன்றியது. மாந்திரீக யாதார்த்தவாதம் யாதார்த்த உண்மைகளை நேரடியாகக் கூறாமல் பூடகமாக, புதிராகக் கூறுவது என்பது இது.” 7 எனும் கருத்து மேற்காணும் கவிதை வெளிப்பாட்டின் கோட்பாடாக அமைந்திருக்கிறது எனலாம்.

மாய எதார்த்தவாதம் படைப்பின் தளத்தை அபரிதமான வேறொரு தளத்திற்கு வாசகனை அழைத்துச்செல்கிறது. “அதீதத்தின் கவித்துவம் என்பதே வகை மாதிரியாக மேஜிக்கல் ரியலிசப்பிரதிகளில் விரிவான அளவில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அதீத கற்பனையை நம்பமுடியாத அளவுக்கு உச்சபட்சமாகப் பயன்படுத்துவதும் இதில் உள்ளதாகும். மேஜிக்கல் ரியலிசம் வாழ்வை ஒரு நோக்காக மகிழ்ச்சியை மட்டுமல்லாது துன்பத்தையும் காண்பிக்கிறது. இதன் விளைவாக வாசகன் இதுவரை காணாத உலகைப் பார்ப்பதன் வாயிலாக ஏதோ ஒன்றை இழந்த மன நிலையை அடைகிறான். உண்மையை உருமாற்றி கலைநயமிக்க கற்பனைகளுடன் புத்திசாலித்தனமாக, ஆனால் இதுவரை அறியாத விதத்தில் சொல்வது முக்கியமாகும். மேஜிக்கல் ரியலிச விவரணைகளின் கலவையான எதார்த்தங்களை விவரித்து புராதான தொன்மங்களை நினைவூட்டுகிறது”  8  என்பர் மேலைநாட்டு அறிஞர் டேவிட். .மாற்றுக்கற்பனையும் உண்மையி லிருந்தும் வேறுபடும் ஒரு மிரட்சியை வாசகனுக்கு இக்கவிதைகள் ஏற்படுத்தின்றன.

 

 

“ எத்திசையிலிருந்தும்

காற்றைப் போல் வந்து விடுவாயென

துவங்கிய

பிரிவின் நிமித்தமானதொரு கவிதை

விரிவினாலேயே.

வார்த்தை சொடுக்கி

வலு தொய்ந்து

இங்கேயே முடிகிறது

காணாப்போதுகளின் வெறுமையை

எது கொண்டு நிரப்ப” 9

 

எனும் ஆதவன் தீட்சண்யாவின் கவிதை வெளியில் நிரம்பலாகும் உணர்வுத் தேடலைப் பதிவு செய்துள்ளார். இவ்வுலகத்தைப் புது கண்களால் பார்க்கும் விதத்தைச் சொல்லும் மேஜிக்கல் ரியலிசம், சர்வநிச்சயமாக ரியலிசத்தில் இருந்து வேறுபட்டது என்பதை யாவரும் அறிவர். உலகம் பொருள்களால் மாத்திரமல்லாது அர்த்தங்களாலும் சூழப்பட்டிருக்கிறது. “ ஒவ்வொரு பொருளும் புறவயமான அர்த்தங்களையும் ஆழமான அர்த்தங்களில் புதிரும், மாயமும் கலந்திருக்கிறது. ஒவ்வொன்றையும் சொல்வதற்கு ஒரு முறையல்ல பல முறைகள் இருக்கிறது. மேஜிக்கல் ரியலிசம் என்ற இந்த முறை பழைய பார்வைகளையும் உண்மைகள் பற்றிய அகவயமான மற்றும் புறவயமான அத்தனை சாத்திரங்களையும் சொல்லித்தருகிறது” 10

”கோபங்களைத் தாங்கித் தாங்கி

அரண்மனை விரித்து

ஏரி கருகி

புழு வைத்த பிணமென

உள் நுழைந்து தீராப் பசியோடு

அரவெனத் தின்று துப்பினாய்

 உன்னுலகை

இடுகாடும் எருமையும் வயல்வெளியாகிக்

குண்டுக் கட்டாய்

பறவையை ஜீரணித்தாய்

 இலை தளை காயாகிப் பூமி மேலிருந்து

 மேகத்தை உறிஞ்சி

 கால்வலிப் பெரிதாய்” 11

 

இனிய உதயம் எனும் இதழில் பாரதிசந்திரனின் ’சாகும் வரம் தந்தாய்’ எனும் கவிதை வெவ்வேறு தொடர்பற்ற காட்சிகளை மாற்றி மாற்றி ஒருவகையில் மையப்புள்ளி அற்ற வெளியை இனம் காட்டுகிறது. எல்லாவும் அடைந்த அல்லது அடையாத ஒன்றாய் இருவேறு வெளிப்பாட்டிற்கும் பொருள் அறிந்து கொள்ளும் விதமாகவும் இக்கவிதை அமைந்துள்ளது. எதார்த்தமான நிலையில் எதிரில் நிற்கும் ஒருவரை நோக்கித் திட்டும் வசவுச்சொல்லாட்சியைப் போல் அமைந்து அதனை ஒரு மாயக்காட்சியை விவரிப்பது போலமைத்திருப்பது சிறப்பாகும்.

சிற்றிதழ்களில், நவீனப் போக்குகளை முன்னெடுக்கும் சிற்றிதழ்கள் நவீன இலக்கிய இஸங்களைக் கொண்டு எழுதப்பெறும் படைப்புகளை வெளியிடுகின்றன. இதனால் நவீனப் படைப்புகள்  புதிய புதிய நிலைகளில் பெருகுகின்றன. இதனால் வாசகர்தளம் வாசிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளுகிறது மற்றும் உலகத்தரத்திற்குத் தமிழை மேம்படுத்துகின்றன.

அடிக்குறிப்புகள்:

1. www.yarl.com, Date: 28.11.19

2. www.jeyamohan.in, Date: 30.11.19

3. JOSEPH NATOLI, “Tracing Literary Theory” P-XI

  பார்வை: www.Thoguppukal.wordpress.com/ category/ 

4. பழனிவேள், ‘வனம்’- ஜனவரி-பிப்ரவரி-2005, ப-15.

5. டாக்டர் தி.சு. நடராஜன்,’இலக்கிய இஸங்கள்’, ப-23.

6. சிபிச்செல்வன்,’கனவு’ செப்டம்பர்-98, ப-6.

7. www.philosophicaldebate.net. பார்வை நாள்: 29.11.19

8. DAVID K DANOW, “The Spirit of Carnival Magical Realism and Grotesque”, P- 65.

  பார்வை: www.Thoguppukal.wordpress.com/ category/ 

9. ஆதவன் தீட்சண்யா, ‘தொடரும்’-ஜீன் -99, ப-7

10 www.Thoguppukal.wordpress.com/ category/  நவீனம் /

11. பாரதிசந்திரன், ”இனிய உதயம்”,மே-2013, ப-28,

 

ஆய்வுக்கு உதவிய நூல்கள்/ இணையதளங்கள் /சிற்றிதழ்கள்/:

1. "வனம்"- சிற்றிதழ் .ஆசிரியர் -ஜி முருகன் .வாணியம்பாடி.
2. "கனவு"- சிற்றிதழ் .ஆசிரியர்- கவிஞர் சுப்ரபாரதிமணியன் சென்னை
3. "தொடரும் "-சிற்றிதழ் .ஆசிரியர்- கிருங்கை சேதுபதி கிருங்காக் கோட்டை.
4. "இனிய உதயம்"- இதழ் .நக்கீரன்  பப்ளிகேஷன்ஸ் .சென்னை

நூல்:
"இலக்கிய இசங்கள்" .இ எஸ் டி (தொகுப்பு ஆசிரியர் ).
அகரம் 1. நிர்மலா நகர். தஞ்சாவூர். (இரண்டாம் பதிப்பு. டிசம்பர் -2006 )

இணையதளங்கள்:
1.www yarl.com
2. www jeyamohan.in
3. Www thoguppukal.wordpress.com