ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

நவீன பெண் கவிஞர்களின் கவிதைகளில் உடல் மொழி

சுஜானா பானு.அ 13 Oct 2020 Read Full PDF

கட்டுரையாளர்                              ஆய்வு நெறியாளர்

சுஜானா பானு.,                           முனைவர்..சிவமணி,  

முனைவர் பட்ட ஆய்வாளர்,                   இணை பேராசிரியர்,  

அரசுக்கல்லூரி, சித்தூர், பாலக்காடு      அரசுக்கல்லூரி, சித்தூர், பாலக்காடு

ஆய்வுச்சுருக்கம்:

     பின் காலனீய மனோபாவமுள்ள இந்தியப்பரப்பில் பின் நவீனத்துவம் என்ற நிலை சிற்சில இணக்கங்களோடும் பிணக்கங்களோடும் உள்வாங்கப்பட்டது. பெண்ணிய கவிதைகள் பெரும்பாலும் தங்களின் சுதந்திரத்தையே பாடுபொருளாகக் கொண்டு இயங்குகின்றன. தமிழ்ச்சூழலில் பெண்ணியம் என்பது ஒற்றைக்குரலாக, ஒருபுடைத்தன்மையுடையதாக இல்லை. அது பன்மைத்தன்மையையும், பல்வேறு முரண்களைக் கொண்டதாகவும் உள்ளது. இப்பின்னணியில் நவீன பெண் கவிஞர்களின் கவிதைகளில் உடல் மொழியை மையமாகக் கொண்டு எழுந்த அனுபவங்களும், எதிர் பார்ப்புகளும், ஆணாதிக்க மனோபாவத்தை எதிர்க்கும் குரல்களையும் ஆய்வது இன்றைய நிலையில் அவசியமான ஒன்றாகும்.

     பின் காலனீய மனோபாவமுள்ள இந்தியப்பரப்பில் பின் நவீனத்துவம் என்ற நிலை சிற்சில இணக்கங்களோடும் பிணக்கங்களோடும் உள்வாங்கப்பட்டது. பெண்ணிய கவிதைகள் பெரும்பாலும் தங்களின் சுதந்திரத்தையே பாடுபொருளாகக் கொண்டு இயங்குகின்றன. தமிழ்ச்சூழலில் பெண்ணியம் என்பது ஒற்றைக்குரலாக, ஒருபுடைத்தன்மையுடையதாக இல்லை. அது பன்மைத்தன்மையையும், பல்வேறு முரண்களைக் கொண்டதாகவும் உள்ளது. இப்பின்னணியில் நவீன பெண் கவிஞர்களின் கவிதைகளில் உடல் மொழியை மையமாகக் கொண்டு எழுந்த அனுபவங்களும், எதிர் பார்ப்புகளும், ஆணாதிக்க மனோபாவத்தை எதிர்க்கும் குரல்களையும் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திறவுச்சொற்கள்:

     குறுங்கதையாடல், காமத்தின் சோழிகள், கவனமாய் நெய்த ரகசிய உறுப்புகள், வெது வெதுப்பான புணர்கதுப்புகள், ஆளுகைப்பிரதேசம், உருதிரட்சி, மாதவிலக்கு, காட்டுத்தீ மரம், மிட்டாய்க் கடிகாரம், நுகர்வுப்பண்பாடு, அல்குல், லாவகம்,  அதீத உண்மை.

முன்னுரை:

     ஆண் கட்டமைத்த இந்த சமூகத்தில் பெண் அகவயமாகவும், புறவயமாகவும் பாதிப்படைகின்றாள். பெண்ணின் உடலும், உள்ளமும் ஆணின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகவே இருக்கின்றன. பெண் அவ்வதிகாரத்திற்கு ஏற்ப பக்குவப்படுத்தப்படுகின்றாள். பெண்ணின் உடலை ஆண் எவ்வாறு தன் அதிகாரத்திற்குட்படுத்தப்பட்டு செயல்படச்செய்தான்? பெண் உடலின் தன்மை யாது? பெண் படைப்புகளில் பெண் உடல் எவ்வாறு மொழியப்படுகிறது. என்பது போன்ற கேள்விகள் நவீன பெண் கவிஞர்களான மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சல்மா, வெண்ணிலா, சுகிர்தராணி போன்ற கவிஞர்களின் கவிதைகளில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பது குறித்து இந்த கட்டுரை பேசுகிறது.

மரபை மீறிய பெண்ணெழுத்து :

     ஆரம்பகால பெண்கவிஞர்கள் பெண்களுடைய உணர்வுகளை ஆணாதிக்க சிந்தனை சார்ந்தபின் புலத்தோடு வெளிப்படுத்தினர். தங்களுடைய உடலையோ,உள்ளத்தையோ பற்றி பேசத் தயங்கினர். ஆனால் இடைக்காலத்தில், குறிப்பாக ஆண்டாள், காரைக்காலம்மையார் போன்ற பெண்படைப்பாளிகள் கடவுளை நோக்கி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். மேலும், பாரதியார், பாரதிதாசன் போன்ற புதுக்கவிஞர்கள் பெண்ணை முன்னிலைப்படுத்தி கவிதைகள் எழுதத் துவங்கினாலும், 90 களின் இறுதியில்தான் மரபார்ந்த எழுத்துக்களைத் தாண்டி புதிய அணுகுமுறையில் பெண்ணெழுத்துக்கள் வெளிவரத்துவங்கின.

பூனையைப் போல் அலையும் வெளிச்சம் என்னும் தொகுப்பின் மூலம் தமிழில் சிறந்த கவிஞராக அடையாளம் தெரிந்தவர் கவிஞர் குட்டி ரேவதி. இவர் சில்வியா பிளாத் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். இவரது  கவிதைத் தொகுதியின் பெயர் ‘முலைகள்’ என்பதாகும். சங்க காலக் கவிதைகளில் அல்குல் என்ற சொல்லை மிக லாவகமாக பயன் படுத்தியுள்ளனர். ஆனால் தற்போதைய காலகட்ட கவிதையான இவருடைய ’முலைகள்’ கவிதை குறித்து பல விவாதங்களும் எழுந்துள்ளன.

”பாலினங்களுக்கு  இடையே நடைபெறும் ஆண் பெண் உறவு சார்ந்த போராட்டத்தின் நிகழிடமாக சமுதாய உட்பரிமாற்றங்கள் விளங்குகின்றன. பெண்களுக்கெதிரான சமுதாயப் பொதுக்கட்டுப் பாடாகவும் கொள்ளப்படுகிறது. இந்த சமுதாய உட்பரிமாற்றம் குட்டி ரேவதி போன்றோரின் கவிதைகளில் உடைபடுகின்றன. மரபுகளால் புனையப்பட்ட பெண் உடல் அனுபவங்கள் உடல் மொழிக்கவிதையாகின்றன. ஒவ்வொரு பெண்ணின் அனுபவமும் தான் பெண்ணியமாகிறது எனும் குட்டி ரேவதியின் முலைகள் கவிதையை ஆணும் பெண்ணும் சமம் என்று பேசுவோர் கூட வாசிக்கத் தயங்குகின்றனர்” (1)

என்று குறிப்பிடுவது இங்கு கருதத்தக்கது.

     ”புறக்கணிக்கப்பட்ட  பெண்ணுடல் சார்ந்த தேவைகளிலிருந்து எழுபவை சுகிர்தராணியின் கவிதைகள். இவரது கவிதைகள் அதன் மொழிக்காகவோ அழகியலுக்காகவோ அல்லாமல் அதன் உள்ளோடும் பெண்ணிய அரசியலுக்காகவே பெரிதும் அறியப்படுபவை” (2)

     சுகிர்தராணியின் கவிதை புத்தகங்களில்  கைப்பற்றி என் கனவுகள்,இரவு மிருகம், அவளை மொழிபெயர்த்தல், தீண்டப்படாத முத்தம், காமத்தீ ஆகிய புத்தகங்கள் மிகவும் முக்கியமானவை. இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் பெண் உடல் பற்றியும் தலித் விடுதலை பற்றியும் அமைந்துள்ளன. சுகிர்தராணியின் கவிதைகள் ஒரு சில மக்களுக்கு மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தும். ஒரு சில மக்களுக்கு மிகுந்த எரிச்சலையும் வரவழைக்கும். தமிழ் சமூகத்தில் பெண் என்றால் பால் நிலையில் இரண்டாம் தரமாகவும் தலித் என்றால் தீண்டாமை கற்பித்தும் ஒதுக்கப்படும் சூழலில் இவர் தனது கவிதைகள் மூலம் வீரியமான மொழியில்  அழுத்தமான மனப்பதிவுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

      இவருடைய ஆரம்ப கால கவிதைகளில் ஒரு இளம் பெண்ணின் காதல் மனவோட்டமாக விரிவதை காணலாம். அடுத்த கட்ட பயணம் என்பது கருத்தியல் ரீதியாகவும்,வெளிப்பாட்டு ரீதியாகவும் ஒரு சராசரி பெண்ணின் புனைவியல் மனோபாவத்தை தாண்டி, அதாவது ஒரு சராசரி பெண்ணுக்குரிய ஆசை, பாசம், கோபம் இவைகளை பேசாமல் அந்த உணர்வுகளுக்கு மாற்றாக தீவிரமான ஒரு பெண்ணை முன்னிறுத்துகிறார். உடலை முன் வைத்து ஆண் மேலாதிக்க குரலை எதிர்ப்பது இவரின் கவிதைகளில் மிக நுட்பமாக வெளிப்பட்டுள்ளன. இதனால் பெண் இது போல கவிதை எழுதுவது சரியா? பெண் தன்னுடைய உடலையும் அக உணர்வையும் வெளிப்படையாக கவிதையாக்குவது முறையா என பலர் பதட்டமடைந்ததையும் அடைவதையும் கூட காணமுடிகிறது. 

          ”பருவங்கள் வாய்ந்த என்னுடல்

          காளானைப்போலக் கனிந்து குவிகிறது

          அதன் முன்னும் பின்னும்

          கவனமாய் நெய்த ரகசிய உறுப்புகள்

          மயிர்கால்கள் சிலிர்த்த தோல் முழுவதும்

காம நெய்யின் உருகிய வாசனை

மலர்ந்த இடையை சுற்றி

வெதுவெதுப்பான புணர்கதுப்புகளும்

கவிழ்த்துப் போட்ட ஆயுத எழுத்தாய்

காமத்தின் சோழிகளும்

உடலினுள் பொதிந்து மிதக்கின்றன

இப்போது பகையின் வடிவம் கொண்டு

ஒப்பனை ஏதுமற்ற தெருக்கலைஞனைப்போல

கச்சையின் முன்புற வார் அவிழ்க்கிறாய்

பாலூட்டியவைகளை ருசித்தவாறே

அவற்றின் பெயர் சொல்லவும் வெட்கிக்கிறாய்

இனியென் ஆளுகைப் பிரதேசத்தில்

தாகையை உயர்த்திப்பிடுக்கும்

இளகாத ஸ்தனங்களை

விதையினடியிலிருந்து உரக்கப்பாடு

முலைகள் விருட்சங்களாகி வெகுகாலமாயிற்று” (3)

     கருத்து ரீதியில் பெண்ணுடலை வெறும் யோனியும், முலைகளுமாகக் குறுக்குவதும் நடைமுறையில் துய்க்கப்பட்ட உடல்களைத் தூக்கியெறிந்து விட்டுப்போவதுமான ஆண்மைய நுகர்வுப் பண்பாட்டிற்கு எதிராகப் பெண்ணின் காம வேட்கையை முன்னிறுத்தி பெண்விடுதலையை பேசுகின்ற இது மாதிரிப்பட்ட கவிதைகள் தமிழுக்கு முற்றிலும் புதியவை. 

 பெண்ணும் இயற்கையும், இயற்கையும் பெண்ணும்:

அ.வெண்ணிலாவின் கவிதைகள் திணை சார்ந்து அதிகம் பேசப்படுகின்றன. அவர் கவிதைகளில் கடல் இருக்கிறது. மரம், பறவைகள், பூக்கள் என எல்லாம் நம்மை அருகில் சென்று இரசிக்க வைக்கின்றன. இயல்பாகவே நாம் எல்லோருக்கும் இயற்கையின் மீது ஈடுபாடு உண்டு. இயற்கையோடு இணைந்து வாழ்ந்திருந்த நம் மூதாதையரின் மரபணுவாகக் கூட அது இருக்கலாம். கண்ணுக்குள்/ சிறகசைத்தபடி/ ஒருபறவை/ இரவின் மெளனத்தை/ பறவையின் முதல் குரல்/ கலைக்கிறது அந்தியில் கூடு திரும்பும் பறவைகள்/ சிறகசைக்காமல்/ பொழுதைத் தன் முதுகில்/ சுமந்த படி செல்கின்றன.

என எண்ணற்ற பறவைகள் வெண்ணிலாவின் கவிதைகளில் சிறகசைத்து பறப்பதை பார்க்க முடிகிறது.

          ”அவரவர் வாழ்வு அவரவர் கவிதையாகிறது. அவரவர் உள்ளத்தீயாகக் கிளர்ந்தெழும் கவிதை அவரவர்க்கு வழிகாட்டும். கவிதையும் சுயமும் மாறுபடாத நேர்கோட்டில் வாழ்க்கை பயணப்பட துவங்குமானால் மிகப் பெரிய கவிதை இயக்கமாகக் கவிதை உருமாற வாய்ப்புள்ளது” (4)

என அ. வெண்ணிலா கவிதை பற்றிக் கூறுகின்றார்.

இயற்கையும் பெண்ணும் உயிரியக்கத்தால் ஒன்றுபடுகின்றன என்கிறார் கவிஞர்,

          ”உலர்ந்த பூக்களையெல்லாம்

          உன் கண்ணில் படவென்றே

          தன் இசை விரலால் பொறுக்கும் பெண்ணே

          ……………………இதோ அகன்ற உடலின் அளவுக்கு

          வேரைப்பிடுங்கி புயலொடு வருகிறேன்

          என் கனவின் அழிப்பில்

          உன் உரு திரட்சி அருகித் தெரிகிறது. (5)

என்று நீரை பெண்ணின் உருவாகக் காண்கிறார் .

           நட்சத்திரங்களின் நடுவே,வெறும் பொழுது கற்பாவை, இறுதிப்பூ, மிட்டாய்க் கடிகாரம் போன்ற கவிதை புத்தகங்கள், மரப்பாச்சி, , தொலைகடல் போன்ற சிறுகதை நூல்கள் அஞ்சாங்கல் காலம் என்ற நாவல் ஆகிய முக்கிய படைப்புக்கள் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் உமாமகேஷ்வரி. உமா மகேஷ்வரியின் கவிதைகள் குடும்பம், மதம்,அம்மா,அப்பா,குழந்தைகள், கணவன், இப்படி தன்னை புரிந்து கொண்டு வீட்டின் எல்லையை, இருப்பை மீறுவது போன்ற எழுத்தை இவர் கவிதைகளில் காணலாம்.

ஒரு பெண் தாய்மை என்ற மதிப்பையும் மனைவி என்ற பாரத்தையும் சுமந்து தான் ஆக வேண்டும். இதற்குள் இருந்து கொண்டு தான் கற்பனை சிறகுகளை பறக்க விட வேண்டும். அதிலிருந்து விடுதலைக்கான கற்பனைகளையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கையின் வலிகள்,சின்ன சின்ன சந்தோச நிமிடங்கள், மருக்கப்பட்ட குடும்ப வெளிகள், அழுகை புலம்பல்கள் இவை அனைத்தையும், கொஞ்சம் இவைகளை தாண்டியும் உமா மகேஷ்வரியின் கவிதைகள்   பேசத்தலைப்படுகின்றன. ’எனது நதி’ என்ற கவிதை வரிகளில் பின்வருமாறு கூறியுள்ளார்,

                   ”சிறு வயதில் பார்த்த போது

அம்மாவின் புடவையென

அலையோடிருந்தது

செல்லமாய் வளைவுகளில்

 சேர்த்தணைக்கும்

                   வருடும் மெல்ல

                   பள்ளங்களில் கால் பட்டால்

பதறிப் பாய்ந்து மிரட்டும்

பருவ காலத்தில்

ஓரம் தைத்த தாவணிகளாய்

உருவம் மாறிக்கிடந்தது

துள்ளல் போர்த்தி துவண்டு அடங்கி

சன்னமாய் மின்னும் ஜரிகை வரிகளோடு

வேறு திசையில் எறிந்து

மாறுதலாக்கியது திருமணம்

திரும்பி வந்து தேடினால்

பிரிந்த நூலிழைகளாய்த்

திரிந்திருந்தது அதுவும்

அறுந்த அடி நீரோட்டத்தோடு” (6)

இந்த கவிதை புற உலக சித்திரங்களின் வழியாக புற உலகத்தில் நிகழும் மாற்றங்களின் வழியாக தனது அகப்பண்புகளை தொடர்பு படுத்தி கலையுருவம் கொண்டு திகழ்கின்ற ஒரு கவிதையாகும். நதியோடு இணைந்து தன்னுடைய வாழ்வின் பல பகுதிகளை இந்த கவிதையில் இவர் கூறியுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள முடியும். நதியின் அலை சிறுவயதில் அம்மாவின் புடவையாக இருந்ததாம். அவளது பருவ காலத்தில் ஒரம் தைத்த தாவணியாய் உருவம் மாறி கிடந்ததாம். திருமணத்திற்கு பிறகு அவள் திரும்பி வந்து தேடிக் கொண்ட போது பிரிந்த நூலிழையாய் திரிந்து கிடந்ததாம் நதி. தனது வாழ்வின் அற்புதமான தருணங்களையும் அதே நேரத்தில் அதை தாண்டிய தருணங்களையும் மிக தத்ரூபமாக இந்த கவிதை பேசிச் செல்வதை நாம் கவனத்தில் கொள்ளலாம். அது போல “மாதவிலக்கு” என்ற பெண்மீது சுமத்தப்படுகின்ற அடிமை அடையாளத்தையும் தீட்டு என்ற பெயரில் நடத்தப்படுகின்ற ஆணாதிக்க வன்முறையையும் பல கவிதைகள் அதாவது பல பெண் கவிஞர்களின் கவிதைகள் குத்தி பிளந்து காட்டுகின்றன. உமா மகேஷ்வரியும் இதற்கு விதிவிலக்கல்ல. இவருடைய பூத்தல் என்ற தலைப்பில் அமைந்த கவிதை இப்படி இன்னொரு தளத்தில் பேசுவதை நாம் கவனிக்க முடிகிறது.

                   ”சிறுமியில் ஆரம்பித்த போது

                   அதற்குள்ளேயா  என

 அம்மாவின் பதற்றம்

அடுத்தடுத்த மாதங்களில்

இன்னும் வரவில்லையா?

ஆணியறைந்து மாட்டப்பட்ட

நாட்காட்டி என்முகத்தில்

மாமியாரின் ஆதங்கமோ

‘இன்னும் வருதா’ என

தனியாய்ப் போனால் பிடிக்கும் முன்

தலை குனியாதிருந்தால் அடையும் தேள்கள்

என்று நீளும் கதகளில்

குத்திக் கோர்த்தெடுக்கப்பட்ட என் தினங்கள்

காட்டுத் தீ மரமோ

பருவங்களைக் கவனியாது

பூத்துத் தள்ளுகிறது அதன் போக்கில்

நான் நடமுடியாது

என் இஷ்டப்படி பூக்கும்

எந்த நாற்றையும் என்னுள்

மஞ்சளில் ஆரம்பித்து

ஆரஞ்சில் ஆழ்ந்து

குருதிச் சிவப்பிற்கே திரும்புகிறது

உபயோகித்த சானிடரி நாப்கின்களைக்

கொளுத்திய தீ”(7)

இந்த கவிதை சிறுமியின் பூப்படைந்த வாழ்வில் தொடங்கி பூப்படைதலின் படி நிலைகளை ஒவ்வொருவரின் பார்வையிலும் மிக நுட்பமாக பேசுகின்றது.

முடிவுரை:

      நவீன பெண் கவிஞர்கள் இன்றைய படைப்புலகில் பெண்கள், பெண்களுக்கான பிரச்சனைகளை முன் வைக்கின்றனர். குறிப்பாக உடல் சார்ந்த பிரச்சனைகளை தங்கள் அனுபவத்தின் ஊடாக கூறுகின்றனர். வீட்டிலும், வெளியிலும் பெண்கள் எதிர்கொள்ளும் உடல், மனம் சார்ந்த பிரச்சனைகளையும் பெண் உடலின் அனுபவங்களையும் எடுத்துக்கூறுவது உடல் மொழியாகும்.உடல் சார்ந்த சிக்கல்களுக்கு ஊடாக  உள்ளம் சார்ந்த சிக்கல்களையும் நவீன பெண் படைப்பாளிகள் பதிவு செய்துள்ளதை இந்த கட்டுரை மூலமாக அறிய முடியும்.

அடிக்குறிப்பு  நூற்கள்:

1. ப. தமிழரசி, முகு நூல்,41                              

2. கரிகாலன் ” நவீன தமிழ்க் கவிதைகளின்     போக்குகள்”  மருதா 2005 பக் 45

3. இரவுமிருகம், சுகிர்தராணி பக்-41                         

4. காட்டு   இலைகளின் மறைவில்,    ஆதியில்சொற்கள்    இருந்தன பக் 80

5. மேலது பக் 172

6. நட்சத்திரங்களின்  நடுவே, உமா மகேஸ்வரி,பக் 48                        

7.இறுதிப்பூ, உமா மகேஸ்வரி பக் 38                                                                      

துணை நூற்பட்டியல்:

1. அ.வெண்ணிலா, காட்டு இலைகளின் மறைவில், ஆதியில் சொற்கள்                                         இருந்தன பக் 80

2.   மேலது பக் 172

3.   உமா மகேஸ்வரி,  இறுதிப்பூ பக் 38

4.   உமா மகேஸ்வரி,   நட்சத்திரங்களின் நடுவே பக் 48

5.   கரிகாலன்,  நவீன தமிழ்க்கவிதைகளின் போக்குகள்-மருதா 2005 பக் 45

6.   சுகிர்தராணி,  இரவுமிருகம் பக் 41

7.   ப.தமிழரசி, முகு நூல் 41