ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கவிஞனின் விழைவும் கற்பனையும்

பொ.கலாவதி 13 Oct 2020 Read Full PDF

கட்டுரை ஆசிரியர்              நெறியாளர்

பொ.கலாவதி                   முனைவர்.க.சேக்மீரான்

முனைவர் பட்ட ஆய்வாளர்        இணைப் பேராசிரியர்

மாநிலக் கல்லூரி                 மாநிலக் கல்லூரி (தமிழ்த்துறை)               (தமிழ்த்துறை)

சென்னை - 600 005.             சென்னை - 600 005.

 

ஆய்வுச்சுருக்கம்

இலக்கியம் என்பது மக்களுடைய விழுமிய கருத்துக்களைச் செவ்விய சொற்களால் படைப்பதாகும். தமிழ் இலக்கியம் காலப்பழமையானது. சிறப்புடையது, மக்கள் வாழ்வியல் நெறிகளின் பிழிவுகளாக இலக்கியங்கள் திகழ்கின்றன. சங்க இலக்கியங்கள் வாழ்க்கையின் அடித்தளமாகும். அவ்விலக்கியங்கள் பல்வேறு நிகழ்வுகளைக் கற்பனையுடன் காட்டுகின்றன. அவற்றில் மனம் விரும்பியவாறு அமையும் கற்பனைகளை இவ்வாய்வு கட்டுரை ஆராய முற்படுகிறது.

திறவுச் சொற்கள்

கற்பனை,   சங்க இலக்கியம் , எட்டுத்தொகை குறுந்தொகை, நற்றிணை,

கலித்தொகை, அகநானூறு.

முன்னுரை 

ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்கின்ற மக்களின் சமுதாயச்சூழல், அரசியல் போக்கு, இயற்கை வளம், மக்களின் மனநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்தந்தக் காலகட்டத்தில் வாழ்கின்ற படைப்பாளிகள் இலக்கியங்களைப் படைக்கின்றனர். இலக்கியங்கள் பயிலுந்தோறும் புதுப்புதுச் சுவைகளையும், கருத்துகளையும் தருதல் நலம் என அறிவோம். அதுமட்டுமின்றி நால்வகை இலக்கியக் கூறுகளும் தேவை என திறனாய்வாளர்கள் கூறுவதுண்டு. இதனை,

“இலக்கியம் என்பது உயர்ந்த நோக்கத்தை உடையது. கவிஞனின் மன ஆழத்திலிருந்து எழுவது கவிதை. அடுத்த தலைமுறைக்கு வித்துக்களைப்போல உதவுவதுதான் கவிதை. இலக்கியமோ, தனிப்பாடலோ எதுவாயினும் அதில் அறிவு, உணர்ச்சி, கற்பனை, யாப்பு (வடிவம்) என நால்வகை கூறுகள் இடைந்திருக்கும்”1 என பிரபாகரன் காட்டுவார். இதிலிருந்து ஒரு சிறந்த இலக்கியத்திற்கு இந்நால்வகைக் கூறுகளே அடிப்படை என்பதை அறிய முடிகிறது. ஆவற்றில் உணர்ச்சி, கற்பனையின் பங்கு அளவிடற்பாலது எனக் கொள்ளலாம்.

கற்பனை

     சிறந்த இலக்கியங்களாக எந்நாளும் போற்றப்படும் நம் சங்க இலக்கியங்களில் மேற்சொன்ன அடிப்படைக்கூறுகள் சிறந்த முறையில் அமைந்துள்ளன. இவ்விலக்கியங்கள் நம் வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்ட அழகிய கலை வடிவங்களாக விளங்குவதற்கு அவர்களுடைய கற்பனைத் திறனே அடித்தளமாகும். கற்பனை இன்றேல் இலக்கியத்துக்கும், வரலாற்றுக்கும் வேறுபாடிராது. மனித மனமே கற்பனைக்களனாக அமைகின்றது. கற்பனையில் இல்லாதவற்றை, நடக்க முடியாதவற்றை இருப்பதாகவும் நடப்பதாகவும் காணலாம்;.

     மனித மனம் நினைக்கத் தெரிந்துக் கொண்டபோதே கற்பனையும், உதித்திருக்க வேண்டும். கற்பனை என்பது மனதிலே உண்டாகும் படைப்புக்கு வித்தாகும். கலைஞன் தன் மனதில் உருவாகும் எண்ணங்களுக்குக் கொடுக்கும் உருவமே கற்பனையாகும். இதனையே,

     “புலன்கள் நேரடியாக ஒரு பொருளை அனுபவியாத காலத்திலும் அந்தப் பொருளை நினைவிற்குக் கொண்டு வரும் ஒருவகைச் சக்தி”2 என அ.ச.ஞானசம்பந்தன் கூறும் கருத்து சிந்திக்கத்தக்கதாகும். இதன்மூலம் கற்பனை ஐம்புலன்களோடு தொடர்புடையது என்பதை அறியலாம்.

கற்பனையை ஆங்கிலத்தில் Imagination என அழைப்பார்கள். கற்பனை குறித்து தமிழ்மொழி அகராதி.

     “இல்லாததை யுள்ளதாயுண்டு பண்ணல், துடிப்பு, கட்டளை, கல்வி, கற்பிப்பு, சாதுரியம், நிருணம், பாவடை, புனைந்துரை விரிப்பு”3 என்கிறது.

     சங்க இலக்கியங்களில் கற்பனை பற்றிய பல செய்திகள் காணப்பட்டாலும், கற்பனை என்ற சொல் இடம் பெறவில்லை. இக்கருத்தையே,

     “கற்பனை யென்னும் சொல் சங்கப்பாடல்களுள் காணப்படவில்லை. ‘புனைவு’ என்ற சொல் பெரும்பான்மையும் இப்பொருளில் வழங்கப்பட்டுள்ளது”4 என மணவாளன் குறிப்பிடுகிறார்.

     இதிலிருந்து ‘புனை’ எனும் வேர்ச்சொல்லடியாகப் பிறந்த “புனைவு’, ‘புனைதல்’ என்னும் சொற்களே கற்பனை என்ற சொல் உணர்த்தும் பொருளில் சங்க இலக்கியங்களில் பெருவழக்கினவாக விளங்கின என்று அறியப்படுகின்றது.

கவிஞனின் விழைவும் கற்பனையும்

     கவிஞர்கள் பல்வேறு வகையான கற்பனைகளைப் படைக்கின்றனர். நடக்கும் நிகழ்வை உள்ளவாறு கூறுதல், மற்றொன்று உள்ளவாறு விளக்காது, அவற்றில் சிலவற்றைக் கூட்டியும், குறைத்தும், மாற்றியும், திரித்தும் மனம் விரும்பியவாறு படைப்பர். உள்ளவாறே வாழ்க்கையைக் கற்பனை செய்வது இயலாத செயலன்று. ஆயின் மனம் விரும்புமாறு கற்பனை செய்வதே மனக்கிளர்ச்சி தரும். இத்தகைய கற்பனையே புலவனிடத்து அகத்தெழுச்சியினை ஏற்படுத்துகிறது எனலாம். இக்கற்பனைத் திறனை,

     “பொருள்களை உள்ளவாறு கண்டு அந்த அழகில் அமைவதில்லை. கலைஞரின் மனம் பொருள்களை மேலும் அழகுபடுத்தி இன்னும் சிறந்த உலகத்தைப் படைக்க முயல்கிறது” என்ற கருத்து ஒப்புநோக்கத்தக்கது. இதிலிருந்து புதியன படைக்கும் ஆற்றலுக்கு இம்முயற்சியே அடிப்படை என உணரலாம்.

     நல்ல கவிதையின் தோற்றத்திற்கு ஒருபொருளை உள்ளவாறே புனைந்து கூறும் திறன் மட்டுமின்றி, உள்ளம் விரும்புமாறு புனைந்துரைக்கும் கற்பனைத் திறனும் இன்றியமையாததாகும் என்பது தெளிவாகின்றது.

     அகநானூற்றில் மயிலின் ஆடற்காட்சி ஒன்று இத்தகைய கற்பனைக்குச் சான்றாக விளங்குகிறது.

     மலைச்சாரலில் ஆடுகின்ற மயில் காண்பவர் மருளக் களிநடம் புரிகின்ற விறலி ஒருத்தியைப் புலவரின் மனக்கண் முன் நிறுத்துகின்றது. விறலி ஆடுகின்ற பொழுது, குழலும், முழவும், யாழும் அரங்கத்தில் இனிய இசையை எழுப்பி அவள் ஆட்டத்திற்கு ஓர் ஒத்திசைவை உண்டாக்குதலை அறிந்தவர் கவிஞர். முயிலின் ஆட்டத்திற்கும் மலைச்சாரலில் ஓர் இசைப் பின்னணியைப் படைத்துத் தருகின்றார்.

          “ஆடு அமைக் குயின்ற அவர்துளை மருங்கின்

          கோடை அவ்வளி சூழலிசை ஆக

          பாடு இன் அருவிப் பனிநீர் இன்இசை

          கோடு அமை முழவின் துதை குரல் ஆக

          கணக் கலை இகுக்கும் கடுங்குரற் தூம்பொடு

          மலைப்பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக

          இன்பல் இமிழ் இசைகேட்டு, கலி சிறந்து

          முந்தி நல் அவை மருள்வன நோக்க

          கழைவளர் அடுக்கத்து, இயலி ஆடுமயில்

          நனவுப்புகு விறலியின் தோன்றம் நாடன்”5

இப்பாடலில் மூங்கிலின் துளையில் மேல்காற்றுப் புகுதலால் குழலிசை எழுகின்றது. மலையருவி முழவாக ஒலிக்கின்றது. மான்களின் குரல் தூம்பின் இசையாகத் திகழ்கின்றது. வண்டின் ஒலி யாழின் இசையாக விளங்குகின்றது. இவற்றின் இனிய இசையினைக் கேட்டு மகிழ்ச்சி மிகுந்து மயிலாடுகின்றது. மந்திகள் அவ்வாடலை மருண்டு பார்க்கின்றன.

     இம்மயிலின் ஆட்டத்தின் போதுகூட மலையில் பல்வேறு ஒலிகள் இருந்திருக்கும். ஆனால் கபிலர் அவ்வொலிகள் எல்லாவற்றையும் தம்பாடலில் படைத்துக் காட்டவில்லை. அவற்றிலிருந்து மூங்கிலின் துளையொலி, அருவியின் ஆர்ப்பொலி, மானின் குரலொலி, வண்டின் இன்னொலி ஆகியவற்றை மட்டும் பிரித்து, மயிலின் ஆட்டத்திற்குப் பின்னணியாகத் தொகுத்துத் தந்திருக்கும் பாங்கு கவிஞனின் திறத்திற்குச் சான்றாகும். இதில் கவிஞர் உள்ளவாறு கற்பனையை அமைக்காது, தம் மனம் விரும்பியவாறு அமைத்துள்ளதை அறிய முடிகின்றது.

     மனம் விரும்பியவாறு கற்பனை படைக்கும் சிறப்பை மு.வ., “இயற்கையைப் பாடுகின்ற கவிஞன் தான் கண்ட இயற்கை காட்சிகளை உள்ளவாறே பாடுவதில்லை. இயற்கையின் உண்மைத் தோற்றங்கள் நம் கண் முன்னர்க் காட்சியளித்தலின் அவற்றை அவ்வாறே கவிதையிலும் காண்பதற்கு நாம் விரும்புவதில்லை என்றும், கற்பனைத் திறத்தால் கூட்டியும், குறைத்தும் காட்டப்படுகின்ற இயற்கையின் மறுபடைப்பினையே நாம் விரும்புகின்றோம்.”6 என்கிறார்.

     காந்தள் பூ மலரும் காட்சியினை குறுந்;தொகை பாடலொன்றில்,

          “காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது

          வண்டு வாய் திறக்கும் பொழுதிற் பண்டும்

          தாமறி செம்மைச் சான்றோhக் கண்ட

          கடனறி மாக்கள்போல இடன் விட்டு

          இதழ்களை யவிழ்ந்த ஏகல் வெற்பின்”7

என்ற பாடலில் ஆசிரியர் தம் உள்ளம் விரும்புமாறு கற்பனை செய்கின்றார். குhந்தள் மலரும் வரை காத்திருக்கப் பெறாது வண்டுகள் மலரும் வரை காத்திருக்கப் பொறாது வண்டுகள் மூடிய கொழுமுகைகளைத் தாமாகத் திறப்பதாக அவர் கற்பனை செய்துள்ளார். மொட்டு மலர வண்டுகள் தேனை உண்பது தான் இயற்கை நிகழ்ச்சியாகும். அந்த இயற்கை நிகழ்வை உள்ளாவறே பாடுவதில் புலவரின் உள்ளம் நிறைவினை அடையவில்லை. எனவே வண்டுகள் தாமாக முகைகளின் வாயினைத் திறப்பதாகப் புலவர் கற்பனை செய்திருக்கின்றார்.

     அதுமட்டுமின்றி, சான்றோர்களைக் கண்டபோது போற்றுகின்ற கடனறி மாக்கள் போல, இதழ்பிணியவிழ்ந்து காந்தள் வண்டுகளை ஏற்றுத் தேனைத் தருவதாக அவர் பாடியுள்ளது வியப்புக்குரியது.

     இக்கற்பனையில் இரண்டு கருத்துக்களைக் காணலாம். தானே மலரும் பருவத்திற்கு முன் வண்டு மலரைத் திறக்கும் எனக் கூறியுள்ள பகுதி, களவு வெளிப்பட்டு அலராதலுக்கு முன் வரைந்துக் கொள்ளும் எண்ணமுடையான் தலைவன் என்பதை குறிப்பால் உணர்த்துகின்றது. சான்றோரைப் போற்றல் கடமை எனும் வாழ்வறத்தினையும் இக்கற்பனை உணர்த்துகின்றது. எனவே உள்ளவாறே ஒன்றினைப் பாடாது, மனம் விரும்பியவாறு பாடுகின்ற திறன் நல்ல இலக்கியம் தோன்றுவதற்கு பெருந்துடை புரியுமென்பதை இப்பாடலால் காணலாம்.

     அன்பு மிகுதியால் கையற்றுத் துன்புறும் தலைவி தானொற்றைக் கூறவும், பிறர் கூறுவதைக் கேட்கவும் இயலாத கடல், ஞாயிறு, திங்கள், விலங்கு, தென்றல், புள், மனம், பொழுது ஆகியவற்றையும் அவை போல்வன பிறவற்றையும் பேசும் திறமுள்ளன போலவும், கேட்கும் திறன் பெற்றன போலவும் கற்பனை செய்யப்படுவதுண்டு.

     தலைவனது பிரிவால் வருந்துகிறாள் தலைவி, அன்பு மிகுதியால் ஊர் துஞ்சும் யாமத்தும் அவள் உறக்கமின்றித் தவிக்கின்றாள். கடலின் ஓசையைக் கேட்டு தன்னைப் போலவே கடலும் துயிலாது கலங்கி அரற்றுவதாக கருதுகின்றாள். இதனை,

          “யார் அணங்குற்றனை – கடலே

          ………………………………..

          வெள்வீத் தாழை திரை அலை

          நள்ளென கங்குதலும் கேட்டும், நின் குரலே”8

என்பதில் கடலே நள்ளென் கங்குலும் நின்குரல் கேட்கின்றது. நீ யாரால் வருத்தமடைந்தாய்? என்று கடலை வினவுகின்றாள். கடல் அவளிடம் பேசப் போகின்றதா? இல்லை. தனக்கு உள்ளதுபோலவே கடலுக்கும் வருத்தம் உண்டு என்றும், அது தன்னிடம் பேசும் என்றும் தலைவியால் கற்பனைச் செய்யப்பட்டுள்ளது. இப்பாடலில் தலைவியின் துயர்நிலை புலவரின் மனம் விரும்பியவாறு அமையும் கற்பனைத் திறனால் சிறப்பாக வெளிப்படுகின்றது.

     புலவர்களின் கற்பனைத் திறத்தை காதல் போன்ற நுண்மையான உணர்வுகளைப் பாடும்போது உணர முடிகின்றது. உள்ளவாறு கற்பனையை அமைப்பதைவிட விரும்பியவாறு அமைப்பதிலேயே கவிஞனுக்கு ஆர்வம் மிகுதி.

     ஒரு நாவல் மரத்தின் அருவே புலவர் பலவற்றையும் காண்கிறார். கருமையான நாவல் பழங்கள் கீழே உதிர்தல், கருநிற வண்டுகள் அங்கும் இங்கும் பறந்துச் செல்லுதல், நிலத்திலுள்ள நண்டுகள் ஓடிச்சென்று நாவற்பழங்களைத் தின்னுதல், நாரைகள் நண்டுகளைப் பற்றித் தின்னுதல் முதலான பலவற்றைக் காண்கிறார். ஆனால் இவற்றில் சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து உள்ளம் விரும்புகின்ற ஒரு கற்பனை கவிதை புனைகிறார். ஒரு வண்டு நாவற்பழத்தை தன் இனமான கருவண்டு என்று கருதி அருகே சென்று சேர்கிறது. அப்போது அதை வண்டு என்று உணராமல் நாவல் பழம் என்று கருதி, நண்டு பற்றுகிறது. அதன் கூரிய நகங்களுக்கிடையே சிக்குண்டு வருந்தும் வண்டின் ஒலி கேட்டு நாரை ஒன்று திரும்பிப் பார்த்து, அந்த நண்டைப் பற்றச் செல்கிறது. நாரையின் வருகையை உணர்ந்த நண்டு வண்டைவிட்டு ஓடிவிடுகிறது. வண்டு தப்பிப் பிழைக்கிறது.

          “புன்கால் நாவல் பொதிப்புற இடுங்கனி

          கிளைசெத்து மொய்த்த தும்பி பழந்செத்துப்

          பல்கால் அவலன் கொண்ட கோட்டு அசாந்து

          கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்

          இரைதேர் நாரை எய்தி விடுக்கும்”9

     நாவல் மரத்தருகே கண்ட எல்லாப் பொருள்களையும் கவிஞர் கூறியிருப்பாரானால் கற்பனை இல்லாது சிறந்திருக்காது. தம் உள்ளம் விழைந்த காட்சிக்கு வேண்டாதவற்றை விட்டு வேண்டிய சிலவற்றைத் தருவித்துக்கூட்டி ஓர் அழகிய கற்பனையை அமைக்கின்றார்.

     ஏறு தழுவுதலில் ஆயர்கள் தங்கள் வலிமையைக் காட்டுவது இயல்பு. அப்போது தலைவனின் தோற்றத்தை சிவன், திருமால், எமன் என விரும்பியவாறு பாடுதலைக் (கலி.103) காணலாம். களிதில் தலைவனின் தோற்றம் வீரனுக்குரியதாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் தலைவியின் கண்களுக்கு பலவாறாக தோன்றதல் மனம் விரும்பியவாறு அமைந்த கற்பனையாகும்.

     இவ்வாறு தலைவியையோ, தலைவனையோ, அவனின் ஊரையோ பெருமைப்படுத்தும் முகமாக பல கற்பனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கற்பனைகள் மனம் விரும்பியவாறு சொல்லப்பட்டவையாகும்.

தலைவன் பொருளீட்டுவதற்கு செல்கின்ற பாலை வழி கொடுமையாக இருக்கும் என்பது யாவரும் அறிந்ததே. ங்கப்புலவர்கள் பலரும் அவ்வழியின் கொடுமையை விரும்பியவாறு படைத்துக் காட்டியுள்ளனர்.

     “வெயில் வீற்றிருந்த வெம்பு அலை

     அருஞ் சரம்”10

என்பதிலும்,

         

“இனம் கொண்டு ஒளிக்கும்

          அஞ்சுவரு கவலை”11

என்பதிலும் அச்சம் தரும் வழியிலும் கற்பனை கையாளப்பட்டுள்ளது. பாலை நிலம் என்றாலே வெப்பம், விலங்குகள், கள்வர்கள் என சூழ்ந்ததுதான். ஆனால் புலவர்கள் அதனை மனம் விரும்பியவாறு கற்பனைச் செய்துள்ளனர். மேலும் இரவுக்குறியில் தலைவன் வருகையில், தலைவி வழிக்குறித்து அஞ்சுவதிலும் நாடு, நகர் வருணனையிலும், அக வாழ்விலும் மனம் விரும்பியவாறு கற்பனைகள் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன.

     மருதக்கலியில் வயல் சூழ்ந்த மருதநிலம் பற்றி கூறுகையில்,

          “மணி நிற மலர்ப்பொய்கை, மகிழ்ந்து

              ஆடும் அன்னம் தன்

          அணிமிகு சேவலை அகல் அடை

              மறைத்தென

          கதுமென காணாது, கலங்கி

              அம்மடப்பெடை

          மதிநிழல் நீருள் கண்டு, அது என்

              உவந்துஓடி,

          துன்னத் தன் எதிர் வரூஉம் துடை

              கண்டு, மிக நாணி

          பல் மலரிடை புகூஉம், பழனம் சேர் ஊர”12

     இதில் மணிநிறம் கொண்ட நீரினையும், மலர்களையும் உடைய பொய்கையிலே சேவலொடு விளையாடும் அன்னப்பெடை தனது சேவலன்னத்தை தாமரை இலை மறைத்ததாக, அதனைக் காணாது கலங்கியது. அப்பெடை மதியின் நிழலை நீருள்கண்டு அதனை சேவல் எனக்கருதி உவந்து ஓடியது. அப்போதே தன்னைச் சேருவதற்கு எதிரே வருகின்ற சேவலைக் கண்டு, நாணி, மலர் செறிந்த இடத்திலே ஒளிந்தது. இப்பொய்கையிலே பல காட்சிகளைக் கவிகள் கண்டிருக்கலாம். அதனால் சிலவற்றை மட்டுமே மனம் விரும்பியவாறு கற்பனையாக அமைத்துப் பாடியிருக்கலாம் என்பது தெளிவு.

 

தொகுப்புரை

  • ஆகவே உள்ளவாறு அமையும் கற்பனைக்குப் பொருள்களை ஒழுங்குப்படுத்தலும், அழகுற அமைத்தலும் தேவை. உள்ளம் விழையுமாறு அமையும் கற்பனைக்கோ சிலவற்றைக் கூட்டலும், கழித்தலும் தேவையாகின்றன என அறிய முடிகின்றது.
  • உள்ளவாறு அமையும் கற்பனைக்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் மனம் விரும்பியவாறு அமையும்போது சில நெறிமுறைகள் தளர்த்தப்படுகின்றது என்பதும் மேற்கண்டவற்றால் தெளிவாகின்றது.
  • ஒரு வரன்முறைக்குள் உட்பட்டே புலவர்கள் கற்பனைச் செய்துள்ளனர். இயல்பு மீறிய கற்பனையாகவோ, வரம்பு மீறியதாகவோ இல்லாது, விரும்பியவாறு நாமும் விரும்புமாறு போற்றப்படுகின்றன அளவு கற்பனைகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.
  • விரும்பியவாறு அமையும் கற்பனைகள் என்பதால் எள்ளவும் உண்மையிராது என்று எண்ணக்கூடாது. ஓர் உண்மை நிகழ்வில் இயல்பான நிலையில் சில மாற்றங்களைச் செய்தே விருமபியவாறு கற்பனைகளை சிறப்பாக அமைத்துள்ளனர் என்பதை இதன்வழி அறியலாம்.

அடிக்குறிப்புகள்

1.    வே.பிரபாகரன், செம்மொழித் தமிழோவியம் ப.213

2.   அ.ச.ஞான சம்பந்தன், இலக்கியக்கலை ப.158

3.   நா.கதிரை வேற்பிள்ளை, தமிழ்மொழி அகராதி ப.416

4.   அ.அ.மணவாளன்ஈ இலக்கிய ஒப்பாய்வு ப.53

5.   அகம்.82

6.   மு.வரதராசன் இலக்கியத்திறன் ப.120

7.    குறு.265

8.   குறு.163

9.   நற்.35

10.   நற்.84

11.   அகம்.115

12.   கலி.70

துணைநூற்பட்டியல்

1.    வே.பிரபாகரன், செம்மொழித் தமிழோவியம், திருவள்ளுவர் நூலகம் 

கோட்டூர்புரம், சென்;னை -85. முதற்பதிப்பு 2004

2.   அ.ச.ஞான சம்பந்தன், இலக்கியக்கலை திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை -18. முதற்பதிப்பு 1999

3.   நா.கதிரை வேற்பிள்ளை, தமிழ்மொழி அகராதி, ஏசியன் கல்வியியல் சேவைமையம், புதுடெல்லி. 10ம் பதிப்பு – 1991

4.   அ.அ.மணவாளன், இலக்கிய ஒப்பாய்வு, சங்க இலக்கியம் நியூ செஞ்சுரி

புக் ஹவுஸ்(பி)லிட்., சென்னை – 98.

5.   மு.வரதராசன், இலக்கியத்திறன் பாரிநிலையம் பிராட்வே, சென்னை -108

மறுபதிப்பு – 2001

6.   கு.வெ.பாலசுப்பிரமணியன் (பதி) அகநானூறு, நியூ செஞ்சுரி

புக் ஹவுஸ்(பி)லிட்., சென்னை – 98. 4ம் பதிப்பு 2011

7.    கு.வெ.பாலசுப்பிரமணியன் (பதி) குறுந்தொகை, நியூ செஞ்சுரி

புக் ஹவுஸ்(பி)லிட்., சென்னை – 98. 4ம் பதிப்பு 2011

8.   கு.வெ.பாலசுப்பிரமணியன் (பதி) நற்றிணை, நியூ செஞ்சுரி

புக் ஹவுஸ்(பி)லிட்., சென்னை – 98. 4ம் பதிப்பு 2011

9.   கு.வெ.பாலசுப்பிரமணியன் (பதி) கலித்தொகை, நியூ செஞ்சுரி

புக் ஹவுஸ்(பி)லிட்., சென்னை – 98. 4ம் பதிப்பு 2011