ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பழமொழி காட்டும் வாழ்வியல் நெறிகள்

முனைவர் கு.சக்திவேல் 13 Oct 2020 Read Full PDF

முனைவர் கு.சக்திவேல்,

உதவிப் பேராசிரியர்,

ஜெயலட்சுமி நாராயணசாமி கல்வியியல் கல்லூரி,

சென்னை-600113.

 

 

ஆய்வுச்சுருக்கம்

     பழமொழி என்பதற்கு அதற்குச் சரியான விளக்கம் இலக்கண வகையால் தரப்படவில்லை என்பர் அறிஞர். தொல்காப்பியத்தில் ‘முதுமொழி’ என்ற பெயரால் இது சுட்டப்பட்டுள்ளது. பழமொழி என்பது நுட்பம், சுருக்கம், கூரிய அறிவு, ஒழுங்கு, எளிமை, குறித்த பொருளை அழுத்தமாகச் சுட்டும். இறுக்கம் என்பவை அவற்றின் தன்மைகள் என்பது தொல்காப்பியர் கருத்து. வாழ்வை ஊன்றிக் கவனித்து உணர்ந்த உண்மைகளின் துணுக்குகள் எனப் பழமொழிக்கு விளக்கம் அளிக்கிறது ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி. சொல் ஒருவனின் தன்மையை உணர்த்தும் என்பர். அதாவது அவன் வாழும் நாட்டின் பகுதி, அவன் சார்ந்துள்ள  சமுதாயம், குடும்பப் பின்னணி, செய்யும் தொழில் ஆகியவற்றைக் கவனித்து அறியலாம். ஒருவன் குலத்திற்குரிய கல்வியை வருந்திக் கற்க வேண்டியதில்லை என்பதை, ‘குலவிச்சை கல்லாமல் பாகம்படும்’ என்பதனால் அறியலாம். ஏட்டறிவு மட்டும் போதாது, உலகியலறிவும் ஒருவனுக்குத் தேவை என்பதை, ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது, பள்ளிப் படிப்பு புள்ளிக்கு உதவாது’ என்பதால் அறியலாம். பல்வேறு வகையான வாழ்வியல் கருத்துக்களை நாட்டுப்புறத்தில் வழங்கும் பழமொழிகளும், பழமொழி நானூறும் வகுத்துரைத்துள்ளன. எனவே பழமொழிகள் கற்றவர்க்கும், கல்லாதவர்க்கும் பெரும் கருவூலமாக அமைந்து வாழ்வியல் நெறிகளை உணர்த்துகின்றன என்பதை நாம் உணரலாம்.பழமொழிகள் சமுதாயத்தை எவ்வாறு பிரதிப்பலிக்கின்றன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திறவுச் சொற்கள் : முதுமொழி, பழமொழி, சமுதயம்,    மரபுத்தொடர், இல்வாழ்க்கை, அறம்

முன்னுரை

     அனுபவம் வாய்ந்த பெரியவர்களால் ஒவ்வொரு அனுபவத்தின் வாயிலாகவும் அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் சொல் வழக்குகள் பழமொழிகள் என்று பெயர் பெற்றன. பழமொழிகளால், தமிழ் மக்களின் சமூக வாழ்க்கை, அரசியல் நீதிகள், கல்வி, வணிகம் போன்றவற்றை அறிய முடிகின்றது. சங்க காலம் முதல் இடைக்காலம் வரையுள்ள தமிழக நிலையை இந்த பழமொழிகளின் மூலமாக உணரலாம்.

பழமொழிகள்

     பழமொழி என்பதற்கு அதற்குச் சரியான விளக்கம் இலக்கண வகையால் தரப்படவில்லை என்பர் அறிஞர். தொல்காப்பியத்தில் ‘முதுமொழி’ என்ற பெயரால் இது சுட்டப்பட்டுள்ளது. பழமொழி என்பது நுட்பம், சுருக்கம், கூரிய அறிவு, ஒழுங்கு, எளிமை, குறித்த பொருளை அழுத்தமாகச் சுட்டும். இறுக்கம் என்பவை அவற்றின் தன்மைகள் என்பது தொல்காப்பியர் கருத்து. வாழ்வை ஊன்றிக் கவனித்து உணர்ந்த உண்மைகளின்; துணுக்குகள் எனப் பழமொழிக்கு விளக்கம் அளிக்கிறது ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி. சொல் ஒருவனின் தன்மையை உணர்த்தும் என்பர். அதாவது அவன் வாழும் நாட்டின் பகுதி, அவன் சார்ந்துள்ள  சமுதாயம், குடும்பப் பின்னணி, செய்யும் தொழில் ஆகியவற்றைக் கவனித்து அறியலாம். நாட்டில் வழங்கும் பழமொழியிலிருந்து வட்டாரத்தின் பழமை, நாகரிகம், பண்பாடு வாழ்க்கைநெறி ஆகியவற்றை அறிய இயலும்.

சமுதாய நிலைகள்

     அடிமை வழக்கம் பண்டைய நாட்களில் பாரதம், கிரேக்கம், அரேபியா, சீனம் ஆகிய நாடுகளில் மக்களை அடிமைப்படுத்தும் வழக்கம் இருந்தது. தமிழகத்தில் அடிமைச்சமுதாயம் என்று தனியாக இல்லையேனும், மக்கள் அடிமை நிலைக்குத் தாழ்த்தப்பட்டு வாழ்ந்துவந்தனர். சாதி, வறுமை, போர்த்தொழில் ஆகியவை அடிமை நிலைக்குக் காரணமாக அமைகின்றன.

     நாலடியார் என்னும் நூலில் தோணி ஓட்டுபவன் தாழ்ந்தவன் என்னும் கருத்தில் குறிக்கப்பட்டுள்ளான். அடிமைகள் காலில் விலங்கிடப்பட்டுப் பகைவரிடம் விற்கப்பட்டனர். வயல்களில் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர் என்பதை,

இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்

கரும்பார் கழனியுள் சேர்வர் சுரும்பார்க்கும்

காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்

கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.1

                         (நாலடியார் - தீவினை அச்சம் - பா.எண்:122)

என்னும் நாலடிச் செய்யுள் அடிகளால் உணரலாம்.

சாதிபற்றிய உயர்வு தாழ்வு

     பழங்காலந்தொட்டே சாதி உயர்வு, தாழ்வு பேசப்பட்டு வந்துள்ளது. மக்கள் அவரவர் சாதிக்கேற்றபடி குணங்களைப் பெற்றிருப்பர் என்பதை, “யாரும் குருகுல வண்ணத்தர் ஆகுப” எனவும் “மறைப்பினும் ஆகாதே தஞ்சாதி மிக்குவிடும்” என்ற பழமொழித் தொடர்களால் அறியலாம். கொல்லர், தாழ்ந்த சாதியினர், குடையன், நாவிதன் போன்ற சொற்கள் அந்நூலில் இடம்பெற்றுள்ளன.  அந்தணர்கள் உயர்குலமாக மதிக்கப்பட்டு வந்துள்ளனர்.

அந்தணரின் மிக்க பிறப்பு இல்லை; என் செயினும்,

தாயின் சிறந்த தமர் இல்லை; யாதும்

வளமையோடு ஒக்கும் வனப்பு இல்லை; எண்ணின்,

இளமையோடு ஒப்பதூஉம் இல். ”2

                   (நான்மணிக்கடிகை - பாடல் எண்: 32)

     அந்தணரில் நல்ல பிறப்பில்லை, என்ற நான்மணிக்கடிகை என்னும் பாடலடி பாடலடி இதனைப் புலப்படுத்தும் சாதியடிப்படையில் எழுந்த பழமொழிகள் பல இன்றும் நாட்டு மக்களிடையே வழங்குகின்றன.

இல்வாழ்க்கை

     ஒருவருடைய குடும்ப வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பழமொழிகளில் காணலாம். ‘இல்லாள்’ என்பது குடும்பத் தலைவியைக் குறிக்கும் பெயர். இதனால் பெண்மைக்கு முதலிடம் தந்து பண்டைய மக்கள் வாழ்ந்தமை புலனாகும். ‘நாணின்று ஆகாது பெண்மை’ எனக் கூறுகின்ற பழமொழித் தொடர் பெண்ணுக்கு அடக்கமும் நாணமும் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. ‘பெண்கள் சிரித்தால் போச்சு’ ‘புகையிலை விரித்தால் போச்சு’ என்ற பழமொழியிலும் இக்கருத்தைக் காணலாம். பெண்கள் கணவன் மனக்குறிப்பை  அறிந்து நடக்கவேண்டும் என்பதற்குப் பல பழமொழிகள் காணப்படுகின்றன. “நல்ல மாட்டுக்கு ஒரு அடி, நல்ல பெண்ணுக்கு ஒரு சொல்” எனவும், “குதிரை இருப்பறியும் கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்” எனவும், “நாணமில்லாப்பெண்டிர்க்கு நாலு திக்கும் வாசல்” என்னும் பழமொழிகள் பெண்மை நலத்தை உணர்த்துவன.

விதியில் நம்பிக்கை

     கடவுள், சமய நம்பிக்கைகளை அடுத்து விதிபற்றிய நம்பிக்கையும் மக்கள் மனத்தில் நிரம்பியுள்ளது.

          ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

         சூழினுந் தான்முந் துறும்3    (ஊழ்-குறள்: 380)

என்னும் திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விதிபற்றிய நம்பிக்கை மக்களிடத்தில் இருந்ததைப் புலப்படுத்துகிறது. மக்கள் துன்பத்தில் இடர்ப்படும்போது விதியினால் நேர்ந்தது என நம்புகின்றனர்.

     பிரமன் படைக்கின்ற பொழுதே ஒவ்வொருவர் தலையிலும் கருவிலே எழுதிவிடுவதாகக் கருதியதால் இதனைத் தலைவி என்னும் பெயரால் குறிப்பிட்டனர். “எழுதிய விதி அழுதால் தீருமா” என்னும் தொடர் இதனைப் புலப்படுத்தும். தாங்கமுடியாத துன்பம் நேருமிடத்து தன் ஆற்றலுக்கு மேற்பட்ட ஒன்றினால் நிகழ்வதாகக் கருதினால், நிகழ்வின் உள்ளடக்கத்திலிருந்து உணர்வின் பாதிப்பு மட்டும் தனித்து நிற்றலே உணர்வு ஒழுக்கம் என்பர் உளவியலர்.

     பழமொழி நானூற்றுப்பாடல் இவ்விதிபற்றி,

          முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று

         தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்

         இழுகினா னாகாப்ப தில்லையே முன்னம்

         எழுதினான் ஓலை பழுது4

              (பழமொழி நானூறு - முயற்சி - பாடல் எண்: 160)

எனப் பாடப்பட்டுள்ளதால் அறியலாம்.

புலையும் கொலையும்

     புலால் உண்ணுதல், கொலை செய்தல் என்பவை தீது என்பதைக் கூறும் பழமொழிகள் பல காணப்படுகின்றன. “புலையும் கொலையும் தவிர்” எனவும், “கொன்றால் பாவம் தின்றால் தீரும்” எனவும் கூறப்பட்டிருப்பதால் அறியலாம்.

     சங்க காலத்தில் புலால் உணவு விலக்கப்படவில்லை. கரிகாலனின் பாணர்களுக்கு விருந்தூட்டும் பொழுது ஆட்டின் கறியோடு மதுவையும் கொடுத்து உபசரித்தான் என்று பொருநராற்றுப்படை கூறுகிறது.

     பிற்காலத்தில் சமயக் கோட்பாடுகளும் விரத நெறிகளும் பரவிய காலத்தில் புலால் உணவு  நீக்கப்பட்டது. ‘ஆட்டுக்கறியும் சோறும் போட்டாலும் நாட்டுப்புறத்தான் உறவு கூடாது’ என்னும் பழமொழியில் கறி உணவு சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. ‘புலால் உண்பது தீரு’ எனப் பழமொழி ஆசிரியர் முன்றுறையறையனார் அறிவுறுத்துகின்றார்.

     புலால் உண்பதும் கொலை செய்வதும் கொடிது என்பதைப் பழமொழி பலவிடங்களில் எடுத்துக்காட்டுகிறது. வேள்வியில் உயிர்ப்பலி கொடுப்பதும் தவறு என்று வற்புறுத்தப்பட்டுள்ள அந்தப் பாடல்...

          செறலிற் கொலை புரிந்து சேணுவப்பா ராகி

        அறிவின் அருள் புரிந்து செல்லார் - பிறிதின்

         உயிர் செகுந் தூன்றுய்த் தொழுகுதல் ஓம்பார்

         தயிர் சிதைத்து மற்றொன்றடல்5

              (பழமொழி - வேள்வியிலும் கொலை தீது – பா.எண்:343)

வேளாண்மை

     வேளாண்மை வாழ்க்கை முதன்மையானதாகக் கருதப்பட்டது. எனவே வேளான் தொழில் பற்றிய பழமொழிகள் சமுதாயத்தில் மிகுதியாக இருந்துள்ளன. “ஆடிப்பட்டம் தேடி விதை” எனவும் “உழைக்கும் காலத்தில் ஊர் சுற்றிவிட்டு அறுவடைக் காலத்தில் அரிவாளை எடுத்து வந்தால் என்ன இருக்கும்” எனவும் “அறுக்கப்படாதவன் மடியில் ஐம்பத்திரண்டு அரிவாள்” எனவும், “பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்” எனவும் வழங்கிய பழமொழிகள் உழவு பற்றிய பழமொழிகளாக அமைந்துள்ளமையைக் காணலாம்.

     ஒருவன் தன் மனக் கருத்தை வெளியில் காட்டாமல் எவ்வளவு தான் மறைத்தாலும் அவன் முகக் குறிப்பினால் அவன் உள்ளத்தை அறியவியலும். எடுத்துக்காட்டாக ஒரு பழமொழிக் கருத்தினைக் காட்டலாம்.

     “ஆற்றின் முன்னே வருகின்ற ஈரத்தினால் பின்னே வருகின்ற வெள்ளத்தினை அறியலாம்” என்று கூறியுள்ளார். அதனை

          வெள்ளம் வருங்காலை ஈரம்பட்டஃதே போல்

         கள்ள முடையாரைக் கண்டே அறியலாம்

         ஒள்ளமா கண்ணாய் ஒளிப்பினும் உள்ளம்

         படர்ந்தே கூறும் முகம்

              (அகக் கருத்தை முகம் அறிவித்தல் - பா.எண்:144)

எனப் பழமொழி நானூறு கூறுகின்றது. மாடுகளுக்கு இடப்படும் உணவு அளவு மிகுதியாக இருப்பினும் அது இழப்பாகாது என்பதை -

          உற்றான் உறாஅன் எனல் வேண்டா ஒண் பொருளைக்

         கற்றானை நோக்கியே கை விடுக்க - கற்றான்

         கிழவனுரை கேட்கும் கேளா னெனினும்

         இழவன்று எருதுண்ட உப்பு

              (கற்றவனுக்குத் தந்த பொருள் - பா.எண்:172)

என்னும் பழமொழி உணர்த்துகின்றது. எந்த ஒன்றையும் சிறிதெனக் கருதலாகாது என்னும் கருத்தை விளக்க ‘முது பதி அங்காடி மேயும்’ பழங்கன்று ஏறாதலும் உண்டு என்னும் பழமொழியால் அறியலாம்.

பழமொழிகளில் வாணிகம்

     கேட்போர் உள்ளத்தில் நறுக்குத் தெரித்தாற்போல சுருங்கிய சொற்களில் பொருள் பதியச் செய்வது பழமொழிகளின் தனித்தன்மை. வாழ்க்கைக்குத் தேவையான பொருளின் சிறப்புப் பற்றிப் பல பழமொழிகள் காணப்படுகின்றன. ‘பணம் பத்தும் செய்யும்’ ‘ஈட்டி எட்டிய மட்டும் பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும்’ ‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’ ‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்’ ‘பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர், பணக்காரன் பின்னும் பத்துப்பேர்’ என்பன அவற்றுள் சில,

     வாணிகத்திற்கு நாணயம் இன்றியமையாதது. ‘உன் வாக்கும் சரி பீத்தல் நாக்கும் சரி’ என்பதால் அக்கருத்து உணர்த்தப்படுகிறது. எந்தவொரு வாணிகம் செய்தாலும் ஊதியம் வருமாறு செய்யவேண்டும்,  என்பதை ‘சுண்டக்காய் கால்பணம் சுமைக்கூலி ஐந்து பணம்’  எனவும், ‘முதலில்லார்க்கு ஊதியமில்லை’ எனவும், ‘நாய் விற்றக் காசு குறைக்காது, எருவிற்ற காசு நாராது’ என்பன போன்ற பழமொழிகளால் அறியலாம்.

வாழ்வியல் நெறிகள்:

     பழமொழி வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டுகின்றன. ‘பேராசை பெரு நட்டம்’ ‘ஆசைக்கு அளவில்லை’  என்னும் பழமொழிகள் அதிகமான ஆசை கொள்ளக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. ‘துணை போனாலும் பிணைப் போகாதே’ ‘அறிந்த பார்ப்பான் சிநேகிதக்காரன் ஆறு காசுக்கு மூணு தோசை’ என்பன தீயவர்களோடு சேரக்கூடாது என்பனவற்றை வலியுறுத்துகின்றன. இவை தீயவரைக் காண்பதுவும் தீதே’ என்னும் ஒளவையார் வாக்கை அடியொற்றியவை. தீயவர் கூட்டத்தில் நல்லவர் என்றும் தோன்ற முடியாது. ‘குரங்கினத்தில் அழகான முகம் உள்ளதைக் காணமுடியாது போல’ தீயவர் கூட்டத்தில் சேர்ந்து வாழத் தொடங்குவது.

          நாணார் பரியார் நயனில் செய்தொழுகும்

         பேணா அறிவிலா மாக்களைப் பேணி

         ஒழுக்கி அவரோடுடனுறை செய்தல்

         புழுப்பெய்து புண்பொதியு மாறு

              (தீயவருடன் வாழ்தல் தீமை - பா.எண்:113)

‘புழுவை உள்ளே வைத்து புள்ளை மறப்பதற்கு ஒப்பாகும்’. என்னும் கருத்தமைந்த பழமொழி நானூற்றுப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.

     நட்பைத் தேடுங்கால் நல்லவரா தீயவரா என ஆராய்ந்து நட்புக் கொள்ளவேண்டும்.

              குணமும் குடிமையும் குற்றமும் குன்றா

             இன்னும் அறிந்தியாக்க நட்பு6

                   (நட்பு ஆராய்தல் - குறள்: 793)

ஒருவர் செய்யும் பிழையை மற்றவர் பொறுத்துக் கொள்ளவேண்டும். அதுவே நட்பு எனப் பழமொழி நானூறும் கூறுகின்றது.

     சான்றோர் வறிய நிலையிலும் தம்நிலை தவறாச் செல்வம் அழிந்த காலத்திலும் சான்றோர் இழிச் செயல்களைச் செய்யமாட்டார். பிறர் காணாத இடத்தும் தீய செயல்களைச் செய்யமாட்டார்.

     சான்றோர் செய்யும் குற்றம் குன்றில் இட்ட விளக்காகப் புலப்படும். மக்களுக்கு ஒழுக்கம் இன்றியமையாதது. ஒழுக்கத்தில் தவறுவோர். இழிந்த பிறப்பினர் என்பது வள்ளுவர் காட்டும் உண்மை.

              ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

             இழிந்த பிறப்பாய் விடும்

                   (ஒழுக்கமுடைமை - குறள்:133)

வாழ்வில் நெறி தவறாமல் இருக்க விரும்புவோர் ஒழுக்கமுடையவராக இருப்பர் என்பது பழமொழி காட்டும் உண்மையாகும்.

‘அடக்கம் நிறை குடம்’ என்பதால் அறிந்து அடங்குதல் வேண்டும் என்னும் கருத்தைப் புலப்படுத்தலைக் காணலாம். ‘நிறைகுடம் தளும்பாது, குறை குடம் கூத்தாடும்’ என்னும் பழமொழியும் இக்கருத்தை வலியுறுத்தும்.

     அறம் என்பது ஓரளவு உணரமுடியுமே தவிர, இது தான் அறம் என்று வகுத்துக் கூறவியலாது என்பர் அரிஸ்டாட்டில். அறம் என்பது தெய்வீகமான மறைபொருள் என்பது பிளோட்டோவின் கருத்து. அறம் பற்றிக் கூறுங்கால், ‘மனு’ முதலிய நூல்களில் விதித்தலும், செய்தலும் விலக்கியன ஒழுகுதலும் என்பர் பரிமேலழகர். அறம் பற்றிய கருத்துக்கள் பழமொழிகளில் காணப்படுகின்றன.

     கல்வி பற்றிய கருத்துக்கள் பழமொழி நானூற்றில் பல படியாக இடம் பெற்றுள்ளன. கல்வியை இளமையிலேயே பெறவேண்டும். கல்வி தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும் கற்கும் பொழுதே இனிமை தரும், என்னும் கருத்துக்களை ‘கல்வியே கரும்பு’ எனவும் ‘வேம்பு விரும்பக் கரும்பு’ ‘இளமையில் கல்வி, சிலையில் எழுத்து’ ‘பாடை ஏறினும் ஏடது கைவிடேல்’ என்னும் பழமொழிகள் உணர்த்தக் காணலாம்.

     கற்க வேண்டியவற்றை கற்பவர்கள் அறிவுடையவர்கள். கற்ற புலவர்கள் நாற்றிசையிலும் செல்லாத நாடில்லை. அந்நாடுகளும் வேற்று நாடாவதில்லை. அங்குச் செல்லக் கட்டிச் சோறும் தேவையில்லை என்னும் கருத்தமைந்த பாடல் வருமாறு:

          ஆற்றவும் கற்றார் அறிவுடையார்;; அஃதுடையார்

         நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு

         வேற்றுநா டாகர் கமவேயாம் ஆயினால்

         ஆற்றுணா வேண்டுவ தில்

                   (கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு - பா.எண்:4)

படித்தவன் செய்யும் தவறுகளைப் ‘படித்தவன் பாட்டைக் கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்’ என்னும் பழமொழி புலப்படுகின்றது.

     ஒருவன் குலத்திற்குரிய கல்வியை வருந்திக் கற்க வேண்டியதில்லை என்பதை, ‘குலவிச்சை கல்லாமல் பாகம்படும்’ என்பதனால் அறியலாம். ஏட்டறிவு மட்டும் போதாது, உலகியலறிவும் ஒருவனுக்குத் தேவை என்பதை, ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது, பள்ளிப் படிப்பு புள்ளிக்கு உதவாது’ என்பதால் அறியலாம்.

     இவ்வாறு பல்வேறு வகையான வாழ்வியல் கருத்துக்களை நாட்டுப்புறத்தில் வழங்கும் பழமொழிகளும், பழமொழி நானூறும் வகுத்துரைத்துள்ளன. எனவே பழமொழிகள் கற்றவர்க்கும், கல்லாதவர்க்கும் பெரும் கருவூலமாக அமைந்து வாழ்வியல் நெறிகளை உணர்த்துகின்றன என்பதை நாம் உணரலாம்.

 

 

 

 

பார்வை நூல்கள்

  1.  நூலடியார் உரை வளம், மூலமும் மூன்று  பழைய  உரைகளும் அடங்கியது, முதல் பாகம் 1-200 பாடல்கள், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், இரண்டாம் பதிப்பு 1990.
  2.   இளவழகனார் (எ) டி.எஸ்.பாலசுந்தரம்பிள்ளை (உரை), பதிணெண்கீழ்க்கணக்கு நூல்கள் :  நான்மணிக்கடிகை, திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், முதற் பதிப்பு 1904, திருவரங்கனார் அச்சகம், சென்னை -600018, 1980
  3.  புலவர் ச.சீனிவாசன், வாசன் திருக்குறள், சாந்தா பப்ளிஷர்ஸ்,  ஐந்தாம் பதிப்பு-2006, சென்னை-14.
  4.  மு.இராசமாணிக்கம் பிள்ளை உரை, பதிணென்கீழ்க்கணக்கு முன்றுறையரையனார் இயற்றிய  பழமொழி.
  5.  பதிப்பகக்குழு, பழமொழி நானூறு மூலமும்  உரையும், சாரதா பதிப்பகம், 2006.
  6. http://www.tamilsurangam.in/literatures/pathinen_keezhkanakku/naaladiyar/naaladiyar13.html
  7. https://www.chennailibrary.com/ pathinenkeelkanakku/naanmanikadikai.html