ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் சங்க அகப்பொருள் துறையான உடன்போக்கு

முனைவர் பி.ஸ்ரீதேவி 13 Oct 2020 Read Full PDF

முனைவர் பி.ஸ்ரீதேவி

தமிழ்த்துறைத் தலைவர் (சுயநிதி)

ஸ்ரீ.எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி(தன்னாட்சி)

                    சாத்தூர்

Abstract

In this world, as each language has a special feature, Tamil language also stands with its unique quality. It is a great reward for Tamil and Tamil people that this language has been chosen as the right language to express devotion. The Tamil language and religion are the inseparable two parallel railway lines. The religious branches such as Saivam and Vainavam make a remarkable change in the life of the people. Thirumangaiyalwar’s Periya Thirumozhi and Siriya Thirumozhi reflect the eternal love of the heroine for God. The Sangam Age theme of love is prevalent in these poems. The lament of the ladylove for her lover and the union of the two are the major themes. As the love of the ladylove is on the God, it reaches a great level of bliss. The part “Kalvan Kol” deals with the mourning of the mother for her daughter’s eloping with her lover.

 

Key words:

 Devotion, Sangam , Subjective theme, Eloping.

                                                                                      

முன்னுரை                    

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார் தன்னைத் தாயாகப் பாவித்து தன் மகளை அழைத்துக்கொண்டு போனதாகத் திருமாலை, தலைவியை கவர்ந்து சென்ற தலைவன் என்ற நிலையில் சாடுவதாய் அமைந்த பாடல்கள் தான் இதில் அமைந்துள்ள பத்து பாடல்களும். ‘இறை’ என்னும் மறைபொருளை, அகப்பாடல் மரபில் தெரிகின்ற பொருளாக்கினர்1 என்பர் முனைவர்.இரா.கமலக்கண்ணன்.  ஆழ்வார் பாசுரங்களில் அகப்பொருள் துறைகளைச் சார்ந்த பாசுரங்களை “தோழி பாசுரம்”, “தாய்ப் பாசுரம்” என்று வகைப் படுத்தியுள்ளனர்.  அந்நிலையில் ;கள்வன் கொல்’ என்ற இப்பகுதியில் அமைந்துள்ள பாசுரங்கள் பத்தும் ‘தாய்ப் பாசுரம’; என்று சொல்லத்தக்கவை.

 

அகப்பொருள் துறையான உடன்போக்கு:-

     சங்ககாலப் பாடல்களில் உள்ள அகச்சுவை, பக்திப் பாடல்களாக ஆழ்வார் பாசுரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நம்மாழ்வாரின் திருவிருத்தத்தில் 98 பாசுரங்களும் திருவாய்மொழியில் 297 பாசுரங்களும் ஆக 395 அனத்துறையில் உள்ளன. பெரியதிருமொழியில 230, திருநெடுந்தாண்டகத்தில் 20, திருமடல் 2, ஆக திருமங்கையாழ்வார் பாசுரங்களில் 252 இம்முறையில் அமைந்துள்ளன2. மனத்துள் ஒத்த தலைவனும் தலைவியும் காதல் கொண்டு பிறர்க்குச் சொல்லாமல் ஊரை விட்டுச் சென்றுவிடுவது உடன்போக்கு ஆகும்.  களவுக் காதலர் கற்பு வாழ்வினை மேற்கொள்ள ஊரை விட்டுச் செல்வது உடன்போக்கு.

மகளை நினைத்துப் புலம்பும் தாய்:

     தலைவியின் பிரிவைத் தாங்காமல் மகளை நினைத்துப் புலம்புகிறாள் தாய்.  உடன்போக்கில் சென்ற மகள் விட்டுச் சென்ற அவள் விளையாடிய பொருள்களைப் பார்த்துக் கண்கலங்கியளவாய் புலம்புகிறாள்.

                  “சென்றனள் மன்ற என்மகளே

பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே” (ஐங் : 37)

இதே போல்

              “முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும், பேசுகின்ற

 சிற்றில் மென்பூவையும் விட்டு அகன்ற செழுங்கோதை தன்னைப்

       பெற்றிலேன் முற்று இழையைப் பிறப்பிலி பின்னே நடந்து” (நா.தி.பி. 1217)

            சிறு முறத்தையும் பச்சைக் கிளியையும், பந்தையும் ஊஞ்சலையும் சிறிய கூட்டிலிருந்து பேசுகிற நாகணவாய்ப் பறவையும் விட்டு வெளியேறிய அழகிய பூமாலை போன்றவளைப் பிரிந்து விட்டதை எண்ணித் தாய் புலம்புகின்ற நிலை புலப்படுகிறது. இதனைத் ‘தாய் பாசுரம்’ வகையைச் சார்ந்தது என்பர்.

     இதே போல், பெரியாழ்வாரும் தன் ஒரே மகளாகிய ஆண்டாளைச் செங்கண்மால் தான் கொண்டு போனான் என்ற நிலையை நினைத்து உருகிக் கூறும் பாசுரமும் “தாய்ப் பாசுரம்” வகையைச் சேர்ந்தது

                  “ஒருமகள் தன்னை உடையேன்;;

                  உலகம் நிறைந்த புகழால்

                 திருமகள் போல்வ ளர்த்தேன்

                 செங்கண்மால் தான்கொண்டு போனான்” (பெரியாழ்வார்  திருமொழிபாடல்:4)

    என தலைவனுடன் சென்ற தலைவியின் நிலையைக் குறித்துத் தாய் பலபடி எண்ணி வருந்தும் நிலையினையே இப்பகுதி காட்டி நிற்கிறது.

தாயின் ஆற்றாமையும் பாசமும் வெளிப்படல்:-

     தன் மீது இரக்கமில்லாமல், தன்னை வளர்த்த தாய்க்கு உதவியாயிருக்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல், உடன்போக்கு சென்ற தன் மகளை நினைத்து ஏங்கும் தாயின் ஆற்றாமை வெளிப்படுகிறது.  தாய்,தந்தை என்ற இரக்ககுணம் இல்லாமல் பிரிந்து சென்று விட்டாள் என்று தாய் புலம்பும் நிலையையே இப்பாடல் வழி அறியமுடிகிறது.  தன்மகளைத் திட்டினாலும், அவள் அடுத்து வாழப்போகும் வாழ்க்கையைக் கண்டு இன்புற முடியாத நிலையை யெண்ணியே தாயின் புலம்பல்கள் யாவும் வெளிப்படுகிறது.  இவையனைத்தும் உள் நிறைந்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடென்றே கூறலாம்.

           “என்துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றலள்

     தன் துணை ஆய் என்தன் தனிமைக்கும் இரங்கிற்றலள்” (நா.தி.பி. 1213)

    “அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றலள்

    பின்னை தன் காதலன் தன் பெருந் தோள் நலம் பேணினனால்” (நா.தி.பி.1214)

தலைவி செல்லும் வழித் தட இன்னல் கண்டு அஞ்சும் செவிலி:-

     தலைவி தலைவனுடன் உடன் போக்கு செல்லும் வழியில் அவளுக்கு ஏற்படும் இன்னல்களை மனதில் கொண்டு செவிலித்தாய் இரங்குவதே சங்க இலக்கியப் பாடல்களில் குறுந்தொகையிலும், அகநானூற்றிலும் பாடல்கள் பல காணக் கிடைக்கிளன்றன.

     “தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின்,

      உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந்தலை,

     உருத்து  எழுகுரல குடிஞைச் சேவல்

      புல் சாய் விடரகம் புலம்ப, வரைய

      கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்,

      சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து

      ஊமுறு விளைநெற்று உதிர காழியர்,

      கவ்வைப் பரப்பின் வௌ; உவர்ப்பு ஒழிய,

      களரி பரந்த கல் நெடு மருங்கின்,

      விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர்

      மைபடு திண் தோள் மலிர வாட்டி,

      பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய

      திருந்து வாள் வயவர் அருந்தலை துமித்த

      படுபுலாக் கமழும் ஞாட்டில், துடி இகுந்து,

      அருங்கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்,

      வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்”

                                      (அகம் : 89)

     உடன்போக்கு சென்ற தலைவியும் வழியின் கொடுமையைச் சொல்லி செவிலி வருந்துவதாய் அமைந்த பாடல்கள் ஏதும் பெரிய திருமொழியின் - கள்வன் சொல் பகுதியில் காட்டப்படவில்லை.  மாறாக, தலைவி திருமாலுடன் மிகுந்த அழகிய பொலிவினை உடைய திருவாலி செல்வார்கள் என்றே பாடல்கள் யாவும் அமைந்துள்ளது.

     ஆயின், இரண்டு இடங்களில் அவளது நடை சுட்டபட்டுள்ளது.  அன்னப்பேடையின் நடையினை உடையவள் என்றும், ஒரு இடத்தில் பஞ்சு போன்ற மென்னையான அடியினை உடையவள் என்ற செய்தியினையே பதிவு செய்துள்ளாள் அவளது தாய்.

     “தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்

      வாவி அம் தண் பனை சூழ்வயல் ஆலி புகுவர்கொலோ?” (நா.தி.பி.1216)

          “பஞ்சிய மெல் அடி எம் பனைத் தோளி பரக்கழிந்து

      வஞ்சிஅம் தண்பணை சூழ்வயல் ஆலி புகுவர் கொலோ” (நா.தி.பி.1215)

 

       சங்க இலக்கியத்தில் தாய் தலைவனோடு உடன் போக்கு செல்லும் தலைவியின் பாதம் வருந்துமளவுஇ கடுமையான பாதையினை உடைய பாலை நிலைத்தினை எண்ணி வருந்துவதாய் அமைந்துள்ளது. ஆயின், திருமங்கையாழ்வார் தம் பெண்ணை அழைத்துச் சென்ற தலைவன், குளிர்ந்த நீர் நிலைகள் சூழ்ந்த வயல்களை உடைய திருவாலியிலே சென்று சேர்ந்திருப்பார்கள் என்று மனத்திற்குள் இன்பப்படும் நிலையே தெரிகிறது.

தலைவன் திருமாலென்று தெரிந்தும் அஞ்சும் தாயின் நிலை:-

      தன் மகளை அழைத்துச் சென்றவன் திருமால் தான் என்று தெரிந்த பின்னும் தாயார் வருத்தப்படுவது இப்பாடல்களில் தெரிகிறது.  சங்கப்பாடல்களில் தலைவன் யாரென்று தெரிந்த பின்னும் செவிலித் தாய் வருந்தும் நிலை காணப்பட்டது.  தலைவனின் வருகையையும், இவர்களின் சந்திப்பையும் அறிந்த பின்னரே காவல் கடுமையாக்கப்பட்டு தலைவி வெளியில் செல்வது மறுக்கப்பட்ட நிலையில் தலைவன் உடன்போக்கு அழைத்துச் செல்கிறான்.  ஆயின், அப்படியொரு இற்செரிப்பு எதுவும் இல்லாமல், தலைவன் யாரென்று தெரியாமல் அது திருமால் தான் என்று ஊகித்த பின்னும், தனது மகள் திருமாலை விரும்பினால் என்றறிந்த பின்னும் அவன் குணம் என்ன? பிறப்பென்ன? என்று வினவும் பெண்களுக்கு அவன் குமரனாயும் சங்கை ஊதுபவனாயும் பாண்டவர்க்குத் தூது சென்றவனாயும் உள்ளவன், அவனது ஊரை அறியேன்.  திருமால் தனக்குத் துணையாகப் பெற்று அவனோடு சென்றாள் என்கிறாள் தாய்.

     ஊரார் தலைவனைக் குறித்து விசாரிப்பது போன்ற அமைப்பு சங்கப்பாடல்களின் அமைப்புனின்று வேறுபட்டே உள்ளது.

     “ஏது அவன் தொல் பிறப்பு? இளையவன் வளை ஊதி, மன்னர்

      தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள்! சொலீர்;: அறியேன்

      மாதவன் தன் துணையா நடந்தாள், தடம் சூழ் புறவில்

      போது வண்டு ஆடு செம்மல் புனல் ஆவி புகுவர் கொலோ?”

                                      (நா.தி.பி.1211)

என்ற பாடலடிகள் வாயிலாக அறியமுடிகிறது.

பெண்களைக் கவர்பவன் தலைவன் எனல்:-

     முன்பெல்லாம் பெண்களைக் (கவரும்) திருடும் தீய செயல்களைச் செய்யும் இடையனாய் இருந்தான்.  அப்படிப்பட்டவன் தற்சமயம் தன் வீட்டில் வந்து தன் மகளையே கவர்ந்து சென்றுவிட்டான்.  தன் மகளின் சிவந்த ஆதொண்டைப்பழம் போன்ற இதழ்களை பருகி விட்டான்.  அப்படிபட்டவனைத் தன் மகள் விரும்பி கிளி போன்ற மழலைச் சொற்களைப் பேசிக்கொண்டு அவன் பின்னால் நடந்து சென்றதையெண்ணித் தாய் வருந்தும் நிலையே வெளிப்படுகிறது.

   “பண்டு இவன் ஆயன், நங்காய்! படிறன்:புகுந்து, என் மகள்-தன்

  தொண்டை அம் செங்கனி வாய் நுகர்ந்தானை உவந்து, அவன் பின்

  கெண்டை ஒண் கண் மிளிரக், கிளி போல் மிழற்றி நடந்து

  வண்டு அமர் கானல் மல்கும் வயல் ஆலி புகுவர் கொலோ?”  (நா.தி.பி.1209)

என்ற வரிகள் வாயிலாக உணர முடிகிறது.

தலைவனின் செயல்களைக் கண்டு அஞ்சும் தாயின் நிலை:-

     அரக்கர் குல மங்கையான சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தவன்.  அத்தகைய கடுங்கோபம் உடையவன். ஒரு பெண்ணின் மூக்கை அறுத்த அந்த வாலிபனின் கடுங்கோபத்தைக் கண்டு நான் அஞ்சுகிறேன் என்று தன் அயல் வீட்டுப் பெண்ணிடம் புலம்பும் தாயின் நிலையை

“அஞ்சுவன் வெம் சொல் நங்காய்! அரக்கர் குலப்பாவை தன்னை

 வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறல் கேட்கில் மெய்யே

 பஞ்சிய மெல் அடி எம் பணைத் தோளி பரக்கழிந்து”

                                  (நா.தி.பி.1210)

இவ்வரிகள் புலப்படுத்துகின்றன.  தனது மகள் பெரும் பழிக்கு இடமாகி அத்தலைவனுடன் சென்றுவிட்டாளே எனப்புலம்புகிறாள் தாய்.

தன் மகளின் அழகை வியக்கும் தாய்:-

     அழகே உருவாய் இருக்கும் தன் மகளின் பிரிவைத் தாள ஒண்ணாது அவளின் அழகை வியந்து கூறுகிறாள் தாய்.

  “மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள்” (நா.தி.பி.1215)

 “காவி அம் கண்ணி எண்ணில், கடிமா மலர்ப்பாவை ஒப்பாள்

 பாவியேன் பெற்றமையால், பனைத்தோளி பரக்கழிந்து

 தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்”  (நா.தி.பி.1216)

     மின்னல் கொடியையும், வஞ்சிக் கொடியையும் தோற்கடித்து விளங்கும் நுட்பமான இடையை உடையவள் என்றும், நீலோற்பல மலர்போல அழகிய கண்களை உடையவளும், திருமகளுக்கு ஒப்பான அழகுடையவள் மூங்கில் போன்ற தோள்களை உடையவள் என்றும் தன் மகளின் அழகினை வியந்து கூறுகிறாள் தாய்.  பெற்றவளின் நிலையில் இருந்து வருந்தும் திருமங்கையாழ்வார் உள்ளம் முழுவதும் திருமாலுக்குத் தன் மகளை மணம் முடித்துக் கொடுக்கும் எண்ணமே மேலோங்கி நிற்பதை உணர முடிகிறது.

     ஆயின், பெரியாழ்வாருக்குக் கிடைத்த பெரும் பெயரை அடைய வெண்ணியோ அல்லது பெரியாழ்வார் அடைந்த அதே தாய்மை நிலையினைத் தானும் உணர வெண்ணி, அப்பத்து பாடல்கள் வழி அவ் உணர்வினை அடையப் பெற்றாரா என்பதும் தெரியவில்லை.  ஆயின், மகளை அழைத்துச் சென்றவன் நல்ல துணைவனான திருமாலோடு சென்று விட்டால் என்ற பெருமிதமும் வெளிப்படும் வண்ணமுமே பாடியுள்ளார்.

     “அரங்கத்து உறையும்

     இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ? (நா.தி.பி.1213)

திருவாலியின் பெருமை விளங்கக் கூறல்:-

     சங்கப்பாடல்களில் உடன்போக்கு சென்ற தலைவி பாலை நிலம் வழியாக செல்லும் போது உண்டாகும் வெம்மைக் கொடுமையையும், பாதையில் நேரும் துன்பத்தினையும் எண்ணி வருந்தும் தாயின் துயரமுமே முழுவதுமாய் அவளை வருத்தியது. ஆயின், திருமங்கையாழ்வரின் ஏழாம் திருமொழியாகிய “கள்வன் சொல்” பகுதியில,; தாயின் துன்பம் மகள் தன்னை விட்டுச் சென்றதும் தலைவனாகிய திருமால் சொல்லாமால் கவர்ந்து சென்றது மட்டுமே, அவர்கள் இருவரும் சென்று சேர்ந்த இடமோ புண்ணியதலமாக, சோலைகள் நிறைந்த இடமாக, இன்பமான பாதையில் அனைத்து இயற்கை வளங்கள் நிறைந்த திருவாலியிலே சென்று சேர்ந்தார்கள் என்று உள்ளம் உவப்படையும் நிலையினையே காணமுடிகின்றது.

       “அள்ளல் அப் பூங்கழனி அணி ஆலி புகு கொலோ!” (நா.தி.பி.1216)

சேற்று நிலங்களிலே பூக்கள் நிறைந்த கழனி களாலே அலங்கரிக்கப்பட்ட திருவாலியிலே சென்று சேர்வர்களோ என்று பரவசம் அடையும் தாய்.

    “வண்டு அமர் காணல் மல்கும் வயல் ஆலி புகுவர் கொலோ!” (நா.தி.பி.1217)

வண்டுகள் படிந்த கடற்கரை சோலை சூழ்ந்த வயல்களை உடைய திருவாலியிலே சென்று சேர்வார்களோ என்று உள்ளம் நிறையும் தாய்.

    “வஞ்சி அய் தண் பணைசூழ் வயல் ஆலி புகுவர் கொலோ!” (நா.தி.பி.1218)

   குளிர்ந்த நீர் நிலைகள் சூழ்ந்த வயல்களை உடைய திருவாலியிலே சென்று சேர்ந்திருப்பார்களோ எனப் பெருமிதம் கொள்ளும் தாய்.  திருவாலியினையே  கூறும் போதெல்லாம் “தண்பணை சூழ் வயல் ஆலி”, “செம்புனல் ஆலி”, “எழில் ஆலி” என்றெல்லாம் கூறிப் பரவசம் அடையும் நிலையினை இப்பாடல்களின் வாயிலாக அறிய முடிகின்றது.

       ஆயின், உடன்போக்கில் சென்ற தலைவியை (தன்மகளை) நினைத்து நற்றாய் மற்றும் செவிலியின் புலம்பலும் இருவரும் ஒருவரையொருவர் ஆற்றியிருத்தலும், பிரிந்த தன் மகள் தன்னை நினைத்திருப்பாளா என்ற தாயின் ஏங்குதலும் அவள் செல்லும் பாதையின் வெம்மைத் தவிர்க்க மழை வேண்டி நிற்கும் செவிலித்தாயின் நிலையினை சங்க அகப் பாடல் துறைகள் பதிவு செய்துள்ளது. “கள்வன் கொல”; பாடல்களிலும் ‘உடன்போக்கின’; சாயலே இருந்தாலும் முழுமையாக முற்றிலுமாக ஒன்றிவிடவில்லை.  தாயின் பிரிவுத் துயர் இருந்தாலும் மகள் சென்ற இடம் குறித்த பெருமிதமே பாடல்களில் தெரிய வருகிறது.  திருமாலை கள்வன் என்று திட்டினாலும், அவனைத் தன் மகள் அடைந்ததை யெண்ணி உள்ளுூற மகிழும் தாயின் உணர்வுகளே பாடலடிகள் முழுவதுமாகக் கிடைக்கிறது.

குறிப்புகள்

1.    முனைவர் இரா. வ. கமலக்கண்ணன், வைணவமும் முத்தமிழும் ப-97.

2.   மேலது,ப-96.

துணை நின்ற நூல்கள்

1. முனைவர் எஸ். ஜெகத்ரட்சகன், நாயலாயிர திவ்யப் பிரபந்தம், முதற்பதிப்பு 2012,   

  வீமன் பதிப்பகம், சென்னை.

2. முனைவர் இரா. வ. கமலக்கண்ணன், வைணவமும் முத்தமிழும், வான்மதி பதிப்பகம்,

  முதற்பதிப்பு 2010, அந்தணர் தெரு, கருப்பூர், கோனேரிராஜபுரம் அஞ்சல்,

  தஞ்சாவூர் - 613 101.

3. ம.பெ. சீனிவாசன், திருமங்கையாழ்வார் மடல்கள், முதற்பதிப்பு அக்டோபர் 1987, அகரம் வெளியீடு, சென்னை.

4. அழகர் நம்பி, வைணவம் ஒரு வாழ்க்கை நெறி, முதற்பதிப்பு ஜீலை 2010, திருமகள்

  நிலையம், தியாகராயர் நகர், சென்னை -17.

5. மாணிக்கனார்,அ. (உரை.ஆ)- அகநானூறு,வர்த்தமானன் பதிப்பகம், 1999, சென்னை.

6. மாணிக்கனார்,அ. (உரை.ஆ)- ஐங்குறுநூறு,வர்த்தமானன் பதிப்பகம், 1999, சென்னை.