ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அகநானூற்றில் கடுவன் மள்ளனார் பாடலில் புராணச் செய்தியும் அலர்வாய் பெண்டீரும்

திருமதி.மா. அமுதா 13 Oct 2020 Read Full PDF

திருமதி.மா. அமுதா

உதவிப்பேராசிரியர், தமிழ்த் துறை,

டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.

அடையாளம்பட்டு வளாகம் II, மதுரவாயல்.

சென்னை – 600095.

 

ஆய்வுச் சுருக்கம்

     அகநானூற்றிலுள்ள நானூறு பாக்களுள் ஒவ்வொரு பத்தாம் பாவும் நெய்தல் பாவாகும். ஆகவே அகநானூற்றில் நாற்பது நெய்தல் பாடல்கள் உண்டு.  நாற்பது நெய்தல் செய்யுள்களுள் ஒன்று தோழி பாணனுக்குக் கூறும் கூற்றாகவுள்ளது. ஏனைய பாடல்கள் பெரும்பாலும் தோழியும் தலைவியும் தலைவனும் ஆகிய மூவருள் ஒருவருக்கு இன்னொருவர் கூறுவனவாக உள்ளன. இச்செய்யுள்களை நுண்ணிதின் உணர்ந்து படிப்போருக்கு இவற்றைப் பாடிய புலவர்களுடைய பெரும் புலமை தெள்ளிதிற் புலனாகும். மதுரை தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார் தம் கூத்தாடும் தொழிலால் நாடு முழுவதும் சுற்றி வந்தார். அவர் நாட்டில் ஆங்காங்கே நடைபெற்ற நிகழ்ச்சிகளை நேரில் கண்டும் பிறர் கூறக் கேட்டும் அறிந்தார். தாமறிந்த அவற்றைத் தாம் பாடிய பாக்களில் வைத்து உலகத்தார் உணரும்படிச் செய்தார். சங்க காலத்தில் புலவர்கள் பலர் விளையாட்டைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை அவர்களின் பெயர்கள் மூலமாகவே அறிந்து கொள்ள முடிகிறது. கடுவன் மள்ளனார் பாடல்களில் தலைவன் தலைவி எனும் இருவரின் உணர்வையும் எடுத்துரைக்கும் நுட்பம். இயற்கை பொருள்களை அவற்றின் தன்மைகள் நன்கு புலப்படும் வகையில் வரைந்து காட்டும் சித்திரம். உள்ளுறை உவமைகளால் தெள்ளிதில் அமைத்துச் செல்லும் திறம், சொல்லை அடுக்கிப் பாடும் அருமை ஆகியன உரைத்தற்கரியதாகும். சங்கால புலவர்களை “சொல் கேட்டார்க்குப் பொருள்/கண்கூடாதல்” எனச் சுட்டுவர். இக்கூற்று கடுவன் மள்ளனாருக்குப் பொருத்தமான  கூற்று.

திறவுச்சொற்கள்:

கடுவன் மள்ளனார், இராமாயணம், அலர், அம்பல், கள்ளூர், அலர்வாய் பெண்கள்.

மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவன் மள்ளனார்

    இவர் மதுரையிலிருந்த புலவர்களுள் ஒருவரேயாவர். சங்கப்பாடல் களில் நான்கு பாடல்கள் பாடி புகழடைந்தவர். அகநானூறு 70, 256, 354, குறுந்தொகை 82. ஆரியக்கூத்து தமிழ்க்கூத்து என்ற இருவகையான கூத்துக்களுள் இவர் தமிழ்க்கூத்தில் வல்லவராக விளங்கியவர். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் கூத்துக்களின் வகைகளை விரித்துக்கூறும்போது ஆரியக்கூத்து, தமிழ்க்கூத்து என்ற வகைகளையும் குறித்துச் சென்றுள்ளார். ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டும் என்றொரு பழமொழியும் நிலவுகிறது. கோயில்களில் நடைபெறும் திருவிழாக் காலங்களில் தமிழ்க் கூத்தாடுவதற்கு என நிலங்களைக் காணியாகக் கொடுக்கும் வழக்கம் சோழர் பேரரசின் காலத்தில் நிலவியிருந்தது எனக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இதனால் தமிழ்நாட்டில் ஆரியக்கூத்தும், தமிழ்க்கூத்தும் நீண்ட நாட்களாகவே நடைபெற்று வந்தன என்று அறிகிறோம். மேலும் கடுவன் மள்ளனார் மள்ளர் குடும்பத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்று டாக்டர் அ. பிச்சை என்பவர் தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மள்ளர் என்பதன் பொருள்:

மள்ளர் என்றால் திண்மை உடைய போர்வீரர்கள் என்று பிங்கல நிகண்டு கூறுகின்றன. இவற்றை,

செருமலை வீரரும்

திண்ணியோரும்

மருதநில மக்களும்

மள்ளர்

என்ப என்ற அடிகளில் காணலாம்.

பெரிய புராணம் எழுதிய சேக்கிழார் பெருமான் மள்ளர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருதநிலத்தை மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார். அப்பாடல்,

கைவினை மள்ளர் வானங்

கரக்க வாக்கிய நெற்

குன்றால்

மொய் வரை யுலகம்

போலும் மளர்நீர் மருத

வைப்பு”1

மள்ளர் எனப்படுவோர் தென்னிந்தியாவில் தென்தமிழர்கள் வாழுகின்ற ஒரு பட்டியல் சமூகத்தினர் ஆவர். இவர்கள் கர்நாடகா, கேரளா மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.

கம்பருக்கு முந்தைய இராமாயணம் :

கவிச்சக்கரவர்த்தியின் கவிவன்மை இராமகாதை வழியே உலகறியப் பெற்றது. 12-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இந்நூல் வடமொழித் தழுவலாக அமைந்தாலும் தமிழுக்கே உரித்த தனித்த இயல்புகள் பலவற்றைத் தன்னிடத்தே கொண்டுள்ளது. உதாரணமாக கம்பன் கையாண்ட உவமைகளைக் கூறலாம். காப்பியங்களை அணிகலன்களாய் அணிந்த தமிழன்னைக்கு கம்பர் சூட்டிய மற்றுமொரு அணியாகவே கம்பராமாயணம் கருதப்படுகிறது.

கம்பனுக்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே தமிழில் இராமகாதை வழங்கி வந்துள்ளது. அது செய்யுள் வடிவிலும் படைக்கப்பட்டிருக்கின்றது. நச்சினார்க்கினியார் தனது உரையில் மேற்கோள் காட்டும் பல இராமாயணப் பாடல்கள் கம்பர் இராமாயணத்தில் காணப்படவில்லை. மேலும் எட்டுத்தொகை நூல்களான புறநானூறு, அகநானூறு ஆகியவை தலா ஒரு பாடல்கள் வீதம் இராமாயணத்தின் சிறு நிகழ்வுகளை உவமையாகக் கொண்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டால் கம்பருக்கு முன்பே வேறு புலவர் இராமாயணம் படைத்திருப்பதை அறியலாம்.

அகநானூற்றில் இராமாயணம் உவமையாகக் கூறப்பட்ட நிகழ்வு :

தலைவனும் தலைவியும் காதல் கொள்கின்றனர். தலைவனை நினைத்துக் கொண்டிருக்கும் தலைவியைப் பற்றி ஊரார் பலரும் அலர் கூறியிருப்பார்கள்.  இவற்றையெல்லாம் எண்ணி எண்ணித் தலைவி மயங்கியிருப்பாள். அவள் பக்கத்தில் உள்ள தோழி அவளுக்குத் தேறுதல் சொல்லி ஆற்றியிருக்கச் செய்திருப்பாள். அதே வேளையில் தலைமகனும் அவளை வெளிப்படையாக மணந்து கொள்ள வரைவு மலிந்தான். இதை அறிந்த தோழி ஓடித் தலைவியிடம் தலைவன் வரைவு மலிந்தான் என்று கூறுகிறாள். அதுமட்டுமல்லாது வம்பு பேசிய ஊர்ப்பெண்டிரும் வாயடங்கினர் என்று கூறினாள். அப்போது அவள் எடுத்துக்காட்டிய உவமை நம்மை இராமாயணத்துக்கு அழைத்துச் செல்கின்றது. இராமன் இலங்கையின் மேல் படையெடுத்த காலத்தில் வெற்றி வேலினையுடைய பாண்டியரது மிகுந்த பழமை வாய்ந்த திருவணைக் கரையின் அருகில் இருந்து தன் சேனைகளோடு போர் பற்றி ஆலமரத்தின் கீழ் ஆராய்ந்தானாம். அப்போது அம்மரத்தில் இருந்த பறவைகள் கூச்சலிட்டனவாம். அதனால் கீழே இராமனது ஆய்வு தடைபட்டதாம். எனவே, இராமன் அப்பறவைக் கூட்டத்தைக் கையமர்த்தி ஒலி அடங்கச் செய்தானாம். அவையும் ஒலி அடங்கின. அந்த அடக்கத்தைப் போன்று தலைவியைப் பழித்த ஊரில் ஒலி அடங்கிற்று என்பதாம் உவமை.

இதைக் கம்பர் கூட காட்டவில்லை போலும் ! சங்க காலத்தில் வாழ்ந்த மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் அழகுபட எடுத்துக்காட்டுகிறார். இதோ அவரின் புராணச் செய்தியை,

வென்வேற் கவுரியர் தொல்முது கோடி

முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை

வெல்போர் இராமன் அருமறைக் கவித்த

பல்வீழ் ஆலம் போல

ஒலியவித் தன்றிவ் வழுங்கல் ஊரே”2

என்ற அடிகளில் காணலாம். இப்பாடலில் கவுரியர் என்பது பாண்டியர்களைக் குறிப்பிடுகின்றது. அகநானூற்றைப் போன்று கலித்தொகையிலும் தொன்மச் செய்திகள் காணப்படுகின்றன. இமயமலையை வில்லாக்கி வளைத்தவன் சிவபெருமான். அவன் கங்கை, ஆறு பாயும் ஈரச்சடையை உடையவன். அவன் தன் மனைவி உமையாளோடு சேர்ந்து இமயமலை மேல் அமர்ந்திருந்தார். அரக்கர் தலைவன் இராவணன் தொடி அணிந்திருந்த தன் கைகளால் இமயமலையை எடுக்க முயன்றான்.

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்

உமையமர்ந்து உயர்மலை இருந்தன னாக

ஐயிரு தலையின் அரக்கர் கோமான்

தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுந்து அம்மலை

எடுக்கல் செல்லாது உழப்பவன் போல” 3

என்ற கலித்தொகை பாடலின் வாயிலாக இராமாயணக் கதையைக் கபிலர் விளக்குகிறார். கபிலரின் இப்பாடல் வரிகள் கடுவன் மள்ளனாரின் வரிகளுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாய் அமைந்துள்ளது.

அலர் - அம்பல் விளக்கம்

அம்பலும் அலரும் களவுஎன்பது இறையனார் களவியலின் கூற்று. அம்பல் என்றால் தலைவனும் தலைவியும் கொண்ட களவுக்காதலை பலரும் அறிந்து பழித்துக் கூறல் என்றும், அலர் என்பது சிலர் மட்டுமே அறிந்து புறங்கூறுதல் என்றும் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. வருணனை நோக்கிச் சூளுரைக்கும் வழக்கம் பரதவரிடையே உண்டு. பரத்தியர் தாமறிந்த அலரை அயலாருக்குப் பரப்புவதுண்டு. இதனால் இவர்கள் அலர்வாய்ப் பெண்டிர்’, ‘வெவ்வாய்ப் பெண்டிர்என்று கூறப்படுகின்றனர். இதனை மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார்; வரிகளில் காணலாம். இதோ அவ்வரிகள்,

கொழுங்கண் அயிலை பகுக்குந் துறைவன்

நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே

அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்

பலருமாங் கறிந்தனர் மன்னே” 4

அம்பல், அலர் தோன்றத் தலைவனே காரணம்:

அம்பலும் அலரும் தலைவன் தலைவியின் களவு ஒழுக்கத்தைப் பிறர்க்குப் புலப்படுத்தும் வாயில்களாக அமைவன என்பதை கண்டோம். இவை தோன்றுவதற்குக் காரணமானவன் தலைவனே ஆவான்.

அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின்

அங்குஅதன் முதல்வன் கிழவன் ஆகும்5

என்பது தொல்காப்பியமாகும். இவ்வாறு அம்பலும் அலரும் வெளிப்படுதல் தலைவிக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இதனால் தலைவி இற்செறிக்கப்பட்டு விடுவாள். இதன் விளைவாகத் தலைவனைக் காணாமல் அவள் மேனி பசலையுறும். பிரிவுத்துன்பம் அவளிடம் நலிவை ஏற்படுத்தும். இதனை,

விழவுநாறு விளங்கினர் விரிந்துடன் கமழும்

அழுங்கல் ஊரோ அறனின்று அதனால்

அறனில் அன்னை அருங்கடிப் படுப்பப்

பசலை ஆகி விளிவது கொல்லோ

துறைமலி சேர்ப்பனொடு அமைந்தநம் தொடர்பே

என்று நற்றிணை பாடலில் உலோச்சனார் கருத்தை இவ்விடத்தில் ஒப்புநோக்கலாம்.

இப்பாடலில் அலர் எழுந்தமை, இற்செறிக்கப்பட்டமை, தலைவியின் நலனைக் கருத்தில் கொண்டமை ஆகிய மூன்று செய்திகள் மொழியப்பட்டுள்ளன. இது அலரச்சம் ஆகும். அலரால் விளைந்த பயன் கெடுதியாகவே முடிந்தது. இதற்கு முதல்வனாக விளங்குபவன் தலைவன் என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு ஏற்ப இப்பாடலில் துறைமலி சேர்ப்பனொடு அமைந்தநம் தொடர்பே என்ற அடி அமைந்துள்ளது.

அம்பல் அலரால் விளையும் பயன்கள்

அம்பல் தலைவிக்கு அச்சத்தை ஏற்படுத்தியமை போல துணிவையும் தருகின்றது. மனத்துணிவு பெறுவதற்கு அம்பல் ஓர் உந்துதலாகவும் உள்ளது. தலைவன் பிரிந்தான். அதனால் அவள் வருந்தவில்லையாம். ஆயினும் அவளையும் அறியாமல் அவளிடதது வேறுபாடுகள் தோன்றின. அவ்வேறுபாட்டினைக் கண்ட ஊரார் பழிமொழியத் தொடங்கினர். ‘அப்பழிச்சொல் பரவுதலால் என் காமம் தலைப்படும் என்று ஊரார் எண்ணுகின்றனர். மாறாக அது வலிவு பெறுமே அன்றி எனக்கு வரும் துன்பம் ஒன்றுமில்லைஎன்று தலைவி கூறுவது அம்பலால் எழுந்த தலைவியின் உள்ளத்து உறுதியை, துணிவை நன்கு வெளிப்படுத்தும். இதுவே அம்பல் அலரால் விளைந்த நன்மை. தலைவியின் நெஞ்சத் துணிவை,

மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பதற்கு

இரங்கேன் தோழிஇங் கென்கொ லென்று

பிறர்பிறர் அறியக் கூறல்

அமைந்தாங் கமைக அம்பல் அஃதெவனே”7

என்ற குறுந்தொகை அடிகளில் காணலாம்.

அலரால் தலைவி தலைவன் மேல் அன்பு கொண்ட காதல் அழியும் என்று நினைத்து அலர் தூற்றுகின்றனர். மாறாக, அவளுக்கு தலைவன் அன்பு ஆழமாகிறது. இந்நிகழ்வு நெய்யால் நெருப்பை அழிக்க முயல்வதைப் போலாகும். இதனை வள்ளுவர் அலர் அறிவுறுத்தல் என்ற அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்

காமம் நுதுப்பேம் எனல்”8

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அலர் தூற்றல் என்பது நிகழ்ந்துள்ளது. எனவே தெய்வப் புலவர் வள்ளுவரே அலருக்கென தனி அதிகாரமே படைத்துள்ளார்.

நற்றிணையில் அலர்வாய் பெண்டிர் :

ஊர் வம்பு பேசுதலில் பெண்களை மிஞ்சுவது கடினம்தான். அலர் என்பதுதான் பின்னாளில் ஊர் வம்பு என்றாயிற்று. ஆனால் அற்றிலிருந்து இன்றுவரை  பெண்கள் கிசுகிசு பேசுதலை நிறுத்தவில்லை என்ற ஒன்றே மாறாமலிருக்கிறது.

எட்டுத்தொகை நூலான நற்றிணையிலும் அலர்வாய்ப் பெண்டிர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அலர்வாய்ப் பெண்டிர் குறித்து தோழி தலைவியிடம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றாள்.

நம்மூர்த் தெருவிலுள்ள மாதர்களுள் ஓரிடத்தில் சிலரும் வேறொரிடத்தில் பலரும் ஆங்காங்குத் தெருக்களிலே கூடி நின்று கடைக்காண்ணிலே கூட்டி நோக்கி, வியப்புடையார் போலத் தம்தம் மூக்கின் நுனியிலே சுட்டுவிரலை வைத்துப் பழிச்சொற் கூறித் தூற்றுகின்றனர். அப்பழிமொழி மிக்க துன்பத்தைக் கொடுக்க வல்லது. இத்துன்பத்தைப் போக்க பூமணம் வீசுகின்ற நல்ல நிறம் பொருந்திய பிடரி மயிரையுடைய விரைந்து செல்லும் குதிரை பூண்ட நெடிய தேரைச் செலுத்தி நள்ளிருளில் வருகின்ற கொண்கனொடு நீ செல்ல வேண்டும் என்று தலைவியிடம் தோழி கூறுகின்றாள். அவ்வாறு நீ சென்றால் இவ்வூரார் உன்னை ஒன்றும் கூற முடியாது. மாறாக அலரை மட்டுமே தூற்றிக்கொண்டு ஒழிந்து போகும் என்ற தோழியின் மொழியினை,

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி

மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்து

மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற

சிறுகோல் வலந்தனள் அன்னை அழைப்ப

அலந்தனென் வாழி தோழி! கானல்

புதுமலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல்

கடுமான் பரிய கதழ்பரிகடைஇ

நடுநாள் வரூஉம் இயல் தேர்க்

கொண்கனொடு

செலவு அயர்ந்திசினால் யானே

அலர்சுமந்து ஒழிக இவ்அழுங்கல் ஊரே” 9

என்ற நற்றிணை வரிகளில் காணலாம்.

கள்ளுர் மக்கள் மன்றத் தீர்ப்பு:

பொய்த்தவனின் கதி

மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார் தன் பாடல்களில் புராணக் கருத்துகள் அலர் தூற்றல் போன்ற செய்திகளொடு மட்டுமல்லாமல் தவறு செய்தவர்களை சங்க காலத்தில் எவ்வாறு தண்டித்தார்கள் என்பதனையும் கூறியுள்ளார். சங்கப் பாக்களில் நான்கு பாடல்கள் மட்டுமே எழுதியிருந்தாலும் நாடு போற்றும் வகையில் அவருடைய பாடல்களில் கருத்துகள் பொதிந்துள்ளன. கள்ளுர் மக்கள் மன்றத்தில் பொய்க்கூறியவனின் கதியை,

திருநுதற் குறுமகள் அணிநலம் வவ்விய

அறனி லாளன் அறியேன் என்ற

திறன்இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்

முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி

நீறுதலைப் பெய்த ஞான்றை

வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே”10

என்னும் கடுவன் மள்ளனார் பாடலின் வழியாக அறியலாம். அழகான பெண்ணொருத்தியின் நல்லுடலை ஒருவன் அவளது விருப்பம் இல்லாமல் நுகர்ந்துவிட்டான். கள்ளுர் மக்கள் மன்றத்தில் அப்பெண் முறையிட்டாள். மக்கள் மன்றம் கேட்டபோது அவளை எனக்குத் தெரியாது என்று அந்த அறனியலாளன் பொய்க் கூறினான். சூள் உரைத்து சத்தியமும் செய்தான். மன்றம் சாட்சிகளை வினவி உண்மையைத் தெரிந்து கொண்டது. மன்றம் அவனது சுற்றத்தாரைக் கேட்டது. சுற்றத்தார் சிலர் அவன் குற்றவாளி என ஒப்புக்கொண்டனர். சிலர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒப்புக்கொள்ளாத சுற்றத்தாரையும் குற்றவாளி என மன்றம் தீர்மானித்து அவர்களையும், அவனையும் மன்றத்தின் நடுவில் நிறுத்தி அவர்கள் தலையில் சுண்ணாம்புக் கற்களை வைத்துத் தண்ணீர் ஊற்றி நீறாக்கியது. சுண்ணாம்புக்கல் வேகும்போது உச்சந்தலையும் வெந்து புண்ணாகும். இது சங்க காலத் தீர்ப்புகளில் ஒன்றாகும் என்கிறார் மள்ளனார். இவ்வகையான தீர்ப்புகளை இன்றும் கடைபிடித்தால் தவறுகள் குறைவதற்கு வாய்ப்பு ஏற்படலாம்.

அகநானூற்றில் சிறப்பு

அகப்பொருளைப் பாடுபொருளாகக் கொண்ட நானூறு அகவற்பாக்களில் தொகுதி இந்நூல் ஆகும். அகத்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை நெடுந்தொகைஎன்றும் கூறுவர். அகநானூற்றின் புலமை நுட்பத்தைப் போற்ற வந்த பேராசிரியர் மு.வரதராசனார் காதலைப் பற்றிப் பாடிய பழந்தமிழ்ப் பாட்டுகளில் பெண்களின் உடல் வருணனை மிகுதியாக இல்லை. காமச் சேர்க்கையைப் பற்றிய குறிப்புகளும் மிகுதியாக இல்லை. காதலன் உள்ளத்து உணர்வு பற்றிய பாட்டுகளே மிகுதியாக உள்ளன”11 என்று கூறுவார். கடுவன் மள்ளனார் பாடலில் கூறப்;பட்டுள்ள இராமாயணக் கருத்துகள் வால்மீகி இராமாயணத்திலோ கம்பரின் இராமாயணத்திலோ குறிப்பிடப்படவில்லை. காலஓட்டத்தில் சில அழிந்துவிட்டன. பல மாறிவிட்டன. அன்றிலிருந்து இன்று வரை அடுத்தவர்கள் பற்றிய செய்திகளை கிசுகிசுவென பேசுவதில் பெண்கள் மாறவேயில்லை.

அடிக்குறிப்புகள்

1.  பெரியபுராணம், சேக்கிழார், திருநாட்டுச்சிறப்பு, பாடல் எண் 25.

2.  சங்க இலக்கியங்கள், ந.சொக்கலிங்கம், பக்க எண் 151.

3.  கலித்தொகை, கபிலர் பாடல், 38.

4.  சங்க இலக்கியங்கள், ந.சொக்கலிங்கம், ப.எண். 151.

5.  தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், ப.எ.117.

6.  சங்க இலக்கியங்கள், ந.சொக்கலிங்கம், ப.எ. 192.

7.  மேலது, ப.எ. 192.

8.  திருக்குறள், அதிகாரம் 115, குறள், 1148.

9.  சங்க இலக்கியங்கள், ந.சொக்கலிங்கம், ப.எ.193.

10. அகநானூறு, மணிமிடைபவளம், ப.எ. 286.

11.  தமிழ் இலக்கிய வரலாறு, மு. வரதராசனார், ப.எ. 34.

துணைநூற்பட்டியல்

1.  அகநானூற்றுச் சொற்பொழிவுகள், கழக வெளியீடு, சென்னை, நான்காம்பதிப்பு, 1969.

2.  சங்க இலக்கியம், எட்டுத்தொகை, டாக்டர் இரா.தண்டாயுதம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1978.

3.  அகநானூறு, நா.மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு, ரா.வேங்கடாசலம்பிள்ளை பதவுரை விளக்கவுரை, கழக வெளியீடு, சென்னை, மூன்றாம் பதிப்பு, 1965.

4.   குறுந்தொகை, உ.வே.சாமிநாதையர் உரை, தியாகராச விலாச வெளியீடு, சென்னை, நான்காம் பதிப்பு, 1962.