ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

திருவிளையாடல் புராணம் ஓா் உண்மை நிகழ்வே - ஓர் ஆய்வு

ந.முத்துமணி 13 Oct 2020 Read Full PDF

ந.முத்துமணி,  B.Lit., M.A., M.phiI., ph.d.

உதவிப்பேராசிரியா்,

இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

சருகணி.

ஆய்வுச்சுருக்கம்

    மதுரையில் சிவபெருமான் நிகழ்த்தியதாகக் குறிப்பிடப்படும் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் உண்மையில் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் நம் இலக்கியங்களிலும் மதுரையைச் சுற்றியுள்ள இடங்களின் மூலமும் அறியமுடிகிறது.என்வே திருவிளையாடல் புராணத்தில் வரும் நிகழ்வுகள் எல்லம் உண்மையாக நடந்திருக்கலாம் என்பதற்கான சில சான்றுகள் கொண்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோகமாகும்.

திறவுச்சொற்கள்:சிவபெருமான், திருவிளையாடல், புராணங்கள், அறுபத்து நான்கு, மதுரை

                                                                                                        முன்னுரை:

     புராணம் என்ற சொல்லிற்கு பழமை வாய்ந்தது என்று பொருள். நெடுங்காலமாக செவிவழியாக மக்களால் கற்பிக்கப்பட்டு வருவது. அவற்றில் உண்மையும், கற்பனையும் கலந்தே இருப்பது இயல்பாகும். பழம்பெரும் மதுரையில் சிவபெருமானால் நிகழ்த்தப் பெற்றதாக கூறப்படும் 64 திருவிளையாடல்கள், திருவிளையாடல் புராணம் என்று வழங்கப்படுகிறது. இது ஒரு தலப்புராணம் ஆகும். இவை உண்மையில் நிகழ்ந்ததற்கான ஆதாரமாக இலக்கியச் சான்றுகளும், மதுரையைச் சுற்றிய ஊா்களின் பெயா்களும், மதுரையை ஆண்ட தொடா்சியான மன்னா்களின் வரலாறும் கிடைக்கப்பெறுகின்றன.

இலக்கியச் சான்றுகள்: 

     திருவிளையாடலை விளக்க எழுந்த நூல்கள் சில,

  • செல்லிநகா்ப் புலியூா் நம்பி இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். இது வேம்பத்தூா் திருவிளையாடல் எனப் பெயா் பெற்றது.
  • தொண்டை நாட்டு இளம்பூரவீமநாத பண்டிதா் இயற்றிய சுந்தரபாண்டியம்.
  • தொண்டை நாட்டு வாயற்பதி அனதாரியப்பன் இயற்றிய சுந்தரபாண்டியம்.
  • பரஞ்சோதி முனிவா்பாடிய திருவிளையாடற்புராணம்.

இந்நான்கு நூல்களும் மதுரைத் திருவிளையாடல்களை வகுத்துரைக்கும் நூல்களாகும். அவற்றுள் மிக விரிந்த நூல் பரஞ்சோதியார் இயற்றிய திருவிளையாடற்புராணம் ஆகும். அவை 64 படலங்களைக் கொண்டது. திருவிளையாடல் புராணத்தில் இடம் பெற்ற நிகழ்வுகள் குறுந்தொகை, சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம் போன்றவற்றில் இடம்பெற்றிருக்கிறது என்பதால் இவை உண்மையில் நடந்தவை என்பதை அறிய முடிகிறது. திருவிளையாடற் புராணத்தில் இடம் பெற்றுள்ள தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில் வரும் வங்கிய சூடாமணிப் பாண்டியன் என்ற  மன்னனுக்கு பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்ற சந்தேகம் எழுந்த பொழுது அதற்கு விடை அளிக்கும் வகையில் தருமி என்ற புலவனிடம், 

          கொங்குதோ் வாழ்க்கை யஞ்சறைத் தும்பி

          காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

         பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்

         செறியெயிற் றரிவை கூந்தலின்

         நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?1

 என்னும் செய்யுளை இறையனாரே தந்தருளினார். இப்பாடல்  குறுந்தொகையில்  இடம் பெற்றிருக்கிறது. 

வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலத்தில் இடம் பெற்ற காவிரிப்பூம்பட்டினத்தைச் சோ்ந்த வணிகன் அரதன குப்தனுக்கும் ரத்னாவளி என்ற பெண்ணுக்கும் நடந்த திருமணத்திற்கு சாட்சியாக வன்னி மரம், கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருந்தன. இவை இன்றும் மதுரை மீனாட்சிஅம்மன் கோயிலில் சுவாமி சன்னதியின் ஈசான்ய மூலையில் அமைந்துள்ளன.

                              -நற்பகலே

         வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக

         முன்னிறுத்திக் காட்டிய மொய்குழ லாள்;2  

என இந்நிகழ்வு பற்றிச்  சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

     சமணா்கள் சிவன் அடியவா்களுக்குச் செய்த தீங்கின் காரணமாக கூன்பாண்டியன் என்ற மன்னனுக்கு வெப்புநோய் வந்தது. அதைத் திருஞானசம்பந்தா் திருநீற்றுப் பதிகம் பாடி குணப்படுத்தினார். இதனைச் சம்பந்தா் தேவாரத்தில்,

          மந்திரமாவது நீறு வானவா் மேலது நீறு

         சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு

         தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு

         செந்துவா் வாயுமை பங்கண்றிருவாலவாயின்றிரு நீறே!3

 விளக்கமாகக்  கூறுகிறார்.   

இது போன்று, வௌ்ளியம்பலத் திருக்கூத்தாடியது(திருஞா:தே:3:310:6), வௌ்ளானை சாபந்தீர்த்தது(திருஞா:தே:2:184:7,9), நான்மாடக்கூடலானது (தேவாரப்திருப்பதிகத்திரட்டு,பா.3), திருஆலவாயானது (மு.நூல்:பா.7), சமணரைக் கழுவேற்றியது(திருஞா.தே.3:309:1, 3:290:11), விருத்தக் குமார பாலராது(திருஞா:தே:1:52:6)  திருவிளையாடற்புராணச் செய்திகளும் சம்பந்தா் தேவாரத்தில் இடம்பெற்றிருக்கின்றன. திருநாவுக்கரசா்தேவாரத்தில் திருவாலவாயானது (திருநா:தே:4:2:2), தருமிக்குப் பொற்கிழியளித்தது(திருநா:தே:6:76:3) போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. 

     மாணிக்கவாசகா் இயற்றிய திருவாசகத்தில் வௌ்ளானை சாபந்தீர்த்தது(திருவா:8:4:163, 8:11:12) வௌ்ளியம்பலத் திருக்கூத்தாடியது(திருவா:8:2:138), மலையத்துவம்சனை அழைத்தது(திருவா:8:4:213), உக்கிர குமாரனுக்கு வேல்வளை கொடுத்தது(திருவா:8:4:29), யானை எய்தது(திருவா:8:2:12), விருத்த குமார பாலரானது(திருவா:8:2:68), மாயப் பசுவை வதைத்தது(திருவா:8:6:8), மெய் காட்டியது(திருவா:8:6:66), வளையல் விற்றது(திருவா:8:43:10), அட்டமா சித்தி உபதேசித்தது(திருவா:8:2:62), தண்ணீர் பந்தல் வைத்தது(திருவா:8:2:58), இரசவாதம் செய்தது(திருவா:8:2:50), சோழனை மடுவில் வீழ்த்தியது(திருவா:8:2:64),பன்றிக் குட்டிக்கு முலைகொடுத்தது(திருவா:8:4:166, 8:30:5, 8:43:6), கரிக் குருவிக்கு உபதேசித்தது(திருவா:8:4:209), மீன் வலை வீசியது(திருவா:8:8:2, 8:4:208, 8:48:3, 8:49:8), வாதவூரடிகளுக்கு உபதேசித்தது (திருவா:8:4:75, 8:2:52), நரியைப் பரியாக்கியது(திருவா:8:17:7, 8:19:6, 8:36:2, 8:36:9, 8:2:35), மண் சுமந்தது(திருவா:8:2:47, 8:30:2, 8:8:8), புலிமுலை புல்வாய்க்கு அருளியது (திருவா:8:2:207) போன்ற புராணச்செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.

சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் திருமுகம் கொடுத்தது(பெ.பு: கழறிற்றறிவார் நாயனார் புரா: பா:26, 31,32), பலகையிட்டது(பெ.பு: திருநீலகண்ட யாழ்ப்பாணா் நாயனார் புரா: 6,7), சமணரைக் கழுவேற்றியது(பெ.பு: திருஞா:புரா:855) போன்றவை இடம்பெற்றுள்ளன.

மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களின் பெயா்கள்:

     திருவிளையாடல் புராணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளின் அடிப்படையில் மதுரையைச் சுற்றிப் பல ஊர்ப் பெயா்கள், கோயில்கள் அமைந்துள்ளன.

  • மதுரையை ஆண்ட மீனாட்சிஅம்மன் திக் விஜயம் செய்து மூன்று உலகத்தையும் வெற்றிப் பெற்று சிவபெருமான் இருக்கும் கயிலைக்குச் சென்ற பொழுது தனது மூன்று தனங்களில் ஒன்றை இழக்கிறாள். அப்பொழுது அவா் தான் தனக்கான மணாளன் என்றுணா்கிறாள். மீனாட்சியம்மையைத் திருமணம் முடித்த சிவபெருமான், ஒரு இலிங்கத்தை நிறுவி அதற்கு மூன்று காலங்களும் பூசை செய்து மதுரையில் தனது ஆட்சியைத் துவங்குகிறார். அச்சிவலிங்கம் இருந்த இடம் தற்பொழுது இன்மையிலும் நன்மை தருவார் கோயில் என அழைக்கப்படுகிறது.
  • இந்திர விமானத்திற்குத் தென்பாலுள்ளதாகிய வௌ்ளியம்பலத்தில் பதஞ்சலி முனிவருக்காகச் சிவபெருமான் திருநடனம் செய்தருளினார். அது சொக்கத் தாண்டவம் எனப்படுகிறது.
  • “சிவபெருமானது கட்டளைப்படி குண்டோதரன் பல குளங்களை உண்டாக்கினார். அக்குளங்களுள் காவணமுள்ளவாவியைத் தன்பால் பெற்ற ஊர் காவணநல்லூரென்று கூறப்படுகிறது. திருப்பரங்குன்றத்திற்கு வடக்கேயுள்ள தென்காற் கம்வாய் என்னும் குளத்தையும் பூதங்கண்ட குளம் என்கின்றனா்.திருமணத்திற்கு வந்த குண்டோதரன் தங்கிய இடம் பூதக்குடி எனப்படுகிறது.”4
  • திருமணத்திற்கு வந்தவா்களுக்கு உணவு சமைத்த இடம் தற்பொழுது அன்னக்குழி மண்டபம் என்று அழைக்கப்பட்டு மதுரை மேலைச்சித்திரை வீதியில் அமைந்துள்ளது.
  • பாண்டியன் உக்கிர வழுதி மேகங்களைப் பிடித்துக் கட்டிய இடம் கட்டிய நல்லூா் எனவும், சிறைப்படுத்திய இடம் இளஞ்சிறை எனவும் வழங்கப்படுகிறது. இவை அருகருகே உள்ளதால் கட்டுநல்லூர் இளஞ்சிறை எனப்படுகின்றன. இவை மானாமதுரைக்கு அருகில் உள்ளன.
  • உக்கிரபாண்டியன் இந்திரனைத் தனித்து நின்று வெற்றி பெற்றதனால் இவ்விடம் தனிச்சயம் என்று வழங்கப்படுகிறது. இவ்வூர் மதுரைக்கு மேற்கே சோழவந்தானுக்கு அருகில் உள்ளது.
  • வருணன் ஏவிய நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாக சிவபெருமானால் தடுக்கப்பட்டது. அவ்விடம் மாடக்குளம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள குளம் மாடக்குளம் எனப்படுகிறது.
  • சிவபெருமான் ஏழு கன்னியா்களுக்கு அட்டமாசித்தியை பட்டமங்கலத்தில் உபதேசித்தருளினார். இது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.
  • பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த இடம் குருவிருந்த துறை,  தற்பொழுது குருவித்துறை என்று அழைக்கப்படுகிறது. இது மதுரைக்கு மேற்கே உள்ளது.
  • இடைக்காடன் என்ற புலவரின் பொருட்டு சோமசுந்தரர் மீனாட்சிஅம்மன் கோயிலிலிருந்து நோ் வடக்கே வைகை ஆற்றின் தெற்கே சென்று தங்கினார். அது தற்பொழுது வடதிருவாலவாய் என்றும் ஆதிசொக்கநாதா் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
  • உமாதேவி பரதவப் பெண்ணாகப் பிறந்த பொழுது அவளை சிவபெருமான் ஆட்கொண்ட இடம் உத்தரகோசமங்கை எனப்படுகிறது. இது இராமநாதபுரம் அருகில் உள்ளது.
  • திருவாதவூா் அடிகளுக்கு சிவபெருமான் உபதேசித்த இடம் திருப்பெருந்துறை என்றும், வாதவூராரை ஆட்கொண்டதால் ஆளுடைய நாயகா் என்று அழைக்கப்பட்டு அவ்விடம் தற்பொழுது ஆளுடையார்(ஆவுடையார்) கோவில் என்று அழைக்கப்படுகிறது. இத்தலம் அறந்தாங்கிக்குத் தென் கிழக்கில் உள்ளது.
  • மாணிக்கவாசகருக்காக நரிகளைக் குதிரைகளாக்கிய இடம் நரிக்குடி ஆகும். அரிமர்த்தனப்பாண்டியன் மகிழ்ந்து குதிரைகளை நன்கு மனத்திலே விலை மதித்த இடம் மதிச்சயம் எனப்படுகிறது.
  • “குதிரை வடிவம் நீங்கிய நரிகள் நகரை விட்டு வெளியேறித் தத்திச் சென்ற இடம் தத்தனேரி என்ற ஊராகும். தத்துநரி என்பது தத்தனேரிஆயிற்று. நரிகள் தொடா்ந்து சென்ற இடம் தொடா் நரி, தற்பொழுது தோடனேரி என வழங்குகிறது. நரிகள் சென்று அடைந்த இடம் செல்லூர் என வழங்கப்படுகிறது. இது மதுரைக்கு வடக்கே உள்ளது.”5         
  •   மாணிக்கவாசகா் பொருட்டு சிவபெருமான் வைகையைப் பெருக்கெடுக்கச் செய்த பொழுது வந்தி என்ற பிட்டு வணிகச்சிக்காக அவரே கூலியாளாக வந்து பாண்டிய மன்னனிடம் பிரம்பால் அடி வாங்கிய இடம் புட்டுத்தோப்பு எனப்படுகிறது. அங்குள்ள கோயில் புட்டுசொக்கநாதா் கோயில் என வழங்கப்படுகிறது.
  • ஞானசம்பந்தா் சமணா்களைப் புனல் வாதத்தில் வென்ற இடம் திருஏடகம் எனப்படும். இது சோழவந்தான் அருகில் உள்ளது.
  • சமணா்கள் வாதத்தில் தோற்று கழுவேறிய இடம் கழுவேறுமடை எனவும், கழுவேறுகடை எனவும் வழங்குகிறது. இது திருப்புவனத்திற்கு அருகில் உள்ளது.

மதுரையை ஆண்ட மன்னா்கள்:

     பரஞ்சோதிமுனிவா் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் மட்டும் இடம் பெறவில்லை. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னா்களின் வம்சாவழியே தொடா்ச்சியாக இடம்பெற்றுள்ளன. குலசேகர பாண்டியன் முதல் கூன்பாண்டியன் வரை எழுபத்து நால்வா் பெயா்களைக் குறிப்பிடுகிறது. அவா்களில் ஒரே ஒரு பெண் மீனாட்சி ஆவாள். மலையத்துவசன் மன்னனுக்கு குழந்தை இல்லாததால் முனிவா்களின் அறிவுருத்தலால் வேள்வி நடத்தினான். வேள்வியில் கிடைத்தவள் தடாதகை என்ற மீனாட்சி ஆவாள். தன் ஆட்சிக்குப் பின் தன் ஒரே மகளுக்கு அரசாட்சியைத் தருகிறான் மன்னன் மலையத்துவசன்.  அவளே மூன்று உலகங்களையும் வென்று இறுதியில் கைலாயம் சென்று போரிடச் செல்லும் பொழுது தன் மூன்று தனங்களில் ஒன்றை இழக்கும் பொழுது சிவனே தன் மணாளன் என்று நினைத்து திருமணம் செய்து கொள்கிறாள். அத்திருமணமே இன்றும் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் என்று நடைபெறுகிறது. எனவே தொடா்ச்சியான மன்னா்களில் ஒரே பெண்ணாக மீனாட்சி மதுரையை ஆண்டது சிறப்பிற்குரியது.

மன்னா்களின் பெயா்கள்

1.குலசேகர பாண்டியன் 2.மலையத்துவசன் 3.தடாதகை(மீனாட்சி) மலையத்துவசன் மகள் 4.சுந்தரபாண்டியன் 5.உக்கிர வருமன் 6.வீரபாண்டியன் 7.அபிடேக பாண்டியன் 8.விக்கிரம பாண்டியன்  9.இராசசேகரன் 10.குலோத்துங்கன் 11.அனந்தகுணன் 12.குலபூடணன் 13.இராசேந்திரன் 14.இராசேசன் 15.இராசகம்பீரன் 16.பாண்டி வமிச தீபன் 17.புரந்தரசித்து 18.பாண்டிவமிச பதாகன் 19.சுந்தரேசபாத சேகரன் 20.வரகுணன் 21.இராசராச பாண்டியன் 22.சுகுணன் 23.சித்திரவிரதன் 24.சித்திரபூடணன் 25.சித்திரத்துவசன் 26.சித்திரவருமன் 27.சித்திரசேனன் 28.சித்திர விக்கிரமன் 29.இராச மார்த்தாண்டன் 30.இராச சூடாமணி 31.இராச சார்த்தூலன் 32.துவிசராச குலோத்தமன் 33.ஆயோதனப் பிரவீணன் 34.இராச குஞ்சரன் 35.பரவிரரச பயங்கரன் 36.உக்கிரசேனன் 37.சத்துருஞ்சயன் 38.வீமரதன் 39.வீரபராக்கிரமன் 40.பிரதாப மார்த்தாண்டன் 41.விக்கிரம கஞ்சுகன் 42.சமர கோலாகலன் 43.அதுல விக்கிரமன் 44.அதுலகீர்த்தி 45.கீர்த்திவீடணன் 46.வங்கியசேகர பாண்டியன் 47.வங்கிய சூடாமணி(சண்பக பாண்டியன்) 48.பிரதாப சூரியன் 49.வங்கிசத்துவன் 50.இரிபும மருத்தனன் 51.சோழவங்கி சாந்தகன் 52.சேரவங்கி சாந்தகன் 53.பாண்டிவங்கி கேசன் 54.வங்கிச் சிரோன்மணி 55.பாண்டீச்சுரன் 56.குலத்துவசன் 57.வங்கிச விபூடணன் 58.சோமசூடாமணி 59.குலசூடாமணி 60.இராசசூடாமணி 61.பூப சூடாமணி 62.குலேசன் 63.அரிமா்த்தன பாண்டியன். 64.சகநாதன் 65.வீரவாகு 66.விக்கிரம வாகு 67.பாராக்கிர வாகு 68.சுரபிமாறன் 69.குங்குமவழுதி 70.கற்பூர பாண்டியன் 71.புருசோத்தம பாண்டியன் 72.சத்துரு சாதன பாண்டியன் 73.காருணிய வழுதி 74.கூன் பாண்டியன்(சுந்தர பாண்டியன்).

“ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல் கீா்த்தி

சாற்ற அரிய இரியும் மருத்தனன் சோழவங்கி சாந்தகன் தான் வென்றி

மாற்ற அரிய புகழ்ச் சேர வங்கி சாந்தகன் பாண்டி வங்கி கேசன்

தோற்றம் உறு பரித்தோ் வங்கிச் சிரோமணி பாண்டீச்சுரன்  தான் மன்னோ”6

பாண்டிய மன்னா்களின் பெயா்களுக்கு இடையே சோழவங்கி சாந்தகன், சேரவங்கி  சாந்தகன் என்று சோழ, சேர மன்னா்களின் பெயா்களை பாண்டிய மன்னா்களுக்கு சூட்டியிருப்பது அவா்கள் மீது பாண்டியா்களுக்கு இருந்த நட்புணா்வைக் காட்டுகிறது.  கூன்பாண்டிய மன்னன் சோழ மன்னனின் மகளான மங்கையற்கரசியாரை மணம் செய்து கொண்டான் என்பதும் இதற்கு சான்றாகும். அதுபோல் வெற்றி கொண்ட மன்னா்கள் தோழ்வி அடைந்த மன்னா்களின் மகள்களைத் திருமணம் செய்யும் வழக்கமும் அக்காலத்தில் நிகழ்ந்திருக்கிறது. அந்த பெண்கள் தங்கள் நாட்டின் பெயா்களை தன்னுடை மகன்களின்  பெயா்களில் இணைக்கும் வழக்கம் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.  

புட்டுத்திருவிழா

     புட்டுசொக்கநாதா் கோயிலில் ஆவணிமாதம் பூராட நட்சத்திரம், தனுர் லக்கணத்தில் மதியம் புட்டுத்திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழா ஒருநாள் திருவிழாவாகும். இதற்கு மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து சிவபெருமான் பிரியாவிடையுடனும் திருவாதவுரிலிருந்து மாணிக்கவாசகரும் திருப்பரங்குன்றத்திலிருந்து முருகன், வள்ளி, தெய்வானையுடன் வந்து இங்கு எழுந்தருள் செய்வார்கள். இதனால் மீனாட்சிஅம்மன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றத்தில் அந்நேரத்தில் நடை சாத்தப்படும்.

புட்டுசொக்கநாதா் கோயில் அருகில் உள்ள ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்த முப்பத்தாறுகால் மண்டபத்தில்  இறைப்படிமங்கள் வந்து தங்கும். மீனாட்சிஅம்மன் கோயில் பட்டா்கள் கூலியாள் மற்றும் மன்னா் வேடமும் புட்டுசொக்கநாதா் பட்டா் வந்திக்கிழவி வேடமும் பூணுவா். அதன் அருகில் அமைந்துள்ள சிவலிங்கத்துடன் கூடிய மேடை மீது குளம் போன்ற அமைப்பு ஆறாகக் கருதப்பட்டு அங்கு வைகை ஆறு கரை அடைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. பின்பு ஒவ்வொரு மண்டகப்படியாக(இறைவன் பக்தா்களுக்கு காட்சி கொடுக்குமிடம்) வந்து தங்கிச் சிவபெருமான் மக்களுக்குக் காட்சியளிப்பார்.

     பின்பு மாலை ஆறு மணி அளவில் 36 கால் மண்டபத்தில் வந்திக்கிழவிக்கும் மாணிக்கவாசகருக்கும் மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின்  சிவபெருமான், முருகப்பெருமான், மாணிக்கவாசகா் ஆகியோர் புறப்பட்டுச் சென்று அவரவா் கோயிலை அடைவா். புட்டுக்கு மண்சுமக்கும் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக இக்கோயிலில் வருடாவருடம் இத்திருவிழா நடைபெறுகிறது.

     இந்நிகழ்வின் நிறைவாக புட்டுப்பிரசாதம் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இத்தலத்தில் புட்டுக்கு மண்சுமந்தலீலை நடைபெற்றதற்கு ஆதாரமாக இத்திருவிழாவும் வந்திக்குத் தனி விமானத்துடன் கூடிய தனிச் சன்னதியும் அமைந்திருப்பதும் சான்றாகும்.

ஏட்டுத் திருவிழா

     திருஏடகநாதா் கோயிலில், திருஞானசம்பந்தா் ஆற்றிலிட்ட ஏடு வைகை ஆற்றில் அதன் போக்கில்(மேற்கே) செல்லாமல் எதிரே(கிழக்காக) சென்று திருவேடகம் என்னும் ஊரில் கரையேறியது. அதனை நினைவுபடுத்தும் விதமாக ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திர முழுநிலவு நாளில்  ஒவ்வொரு வருடமும் ஏடு எதிரேறிய திருவிழா கொண்டாடப்படுகிறது.

      அன்று காலையில் சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிடேக ஆராதனைகள் நடைபெறுகிறது. பின்பு பஞ்சமூர்த்திகள் அருகில் இருக்கும் வைகை ஆற்றுக்கு அவரவா் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை ஆறு மணியளவில் விநாயகா் முன் செல்ல நின்றசீர்நெடுமாறன் மற்றும் அமைச்சா் குலச்சிறையார் குதிரை வாகனத்திலும் சுவாமி, அம்மன் காளை வாகனத்திலும் ஞானசம்பந்தா் பல்லக்கிலும் வீதியுலா வருவா். ஞானசம்பந்தா் கையில் தங்கத்தினால் செய்யப்பட்ட ஏடு வைத்திருக்கிறார். அப்பொழுது ஓதுவார்கள், சமணா்களுக்கும் ஞானசம்பருக்கும் நடந்த புனல் வாதத்தினைப் பற்றி மக்களுக்கு எடுத்துக்கூறி சிவபெருமானின் பெருமைகளைப் பாடுவார்கள். இங்கு ஏடு கரையேறியதற்கான ஆதாரமாக இத்திருவிழாவும் திருஞானசம்பந்தருக்கு  தனிக்கோயிலும் அமைந்துள்ளது.

முடிவுரை:

 திருவிளையாடல் புராணம் தொடா்பான நிகழ்வுகள் அனைத்தும் அவற்றைச் சார்ந்த இலக்கியக் குறிப்புகள், மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களின் பெயர்கள், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தில் இடம் பெறும் தொடா்ச்சியான மன்னா்களின் வரலாறு போன்றவற்றை கொண்டு அவை உண்மையில் நடந்த நிகழ்வுகள் என்பதை இக்கட்டுரையின்  வாயிலாக ஆராயப்பட்டுள்ளது.

சான்றெண் விளக்கம்

  1. குறுந்தொகை, 2: 1-5
  2. சிலம்பு.,மதுரைக்கா., 21: 5-6  
  3. திருஞா., தேவா., 2:202:1
  4. ஸ்ரீமத் மகாலிங்கத் தம்பிரான் முனிவா்,  திருவிளையாடற் புராணம்(உரைநடை), ப.150.
  5. மேலது. ப.537.
  6. பரஞ்சோதிமுனிவா், திருவிளையாடல் புராணம், பா.2613.                                                               

துணைநூற்பட்டியல்:

1.அருணாச்சலம்.ப.,                                                                                              பக்தி இலக்கியம்,

                                                                                                               பாரி புத்தகப் பண்ணை,

                                                                                                                  58, டி.பி. கோவில் தெரு,

                                                                                                                         திருவல்லிக்கேணி,

                                                                                                                       சென்னை-600 005.                         

2.சுவாமி சண்முகானந்தா                                                      திருவிளையாடற் புராணம், வசனம்,

                                                                                                              ஸ்ரீசெண்பகா பதிப்பகம்,

                                                                                            32.B, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார்,

                                                                                              தியாகராய நகர், சென்னை-600 017.

3.முத்துக்குமாரசுவாமித் தம்பிரான்                                         திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்

  சுவாமிகள்(ப.ஆ)                                                                                                       (தலமுறை),

                                                                                                     காசிமடம், தஞ்சை மாவட்டம்,

                                                                                                                 திருப்பனந்தாள்-612504.

4.முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரியபுராணம் சுவாமிகள்(ப.ஆ)                                                     என வழங்கும்  திருத்தொண்டர்புராணம்,                                   

                                                                                                    எட்டாவது உலகத்தமிழ் மாநாடு,

                                                                                                   ஸ்ரீகாசிமடம், திருப்பனந்தாள்,

                                                                                                                             பதிப்பு: 1995.

5.வௌ்ளை வாரணம்.கா.,                                                              பன்னிரு திருமுறை வரலாறு,

                                                                                            அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

                                                                                                                        மு.பதிப்பு: 1969.                                              

6.ஸ்ரீமத் மகாலிங்கத் தம்பிரான்                                                         பரஞ்சோதி முனிவா்அருளிய

                                                                                        திருவிளையாடற் புராணம்(உரைநடை),

                                                                                      திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம் வெளியீடு,

                                                                                                        பதிப்பு: 1955.