ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைகளும் அதன் வளர்ச்சி நிலையும்

அ. வேளாங்கன்னி அமிர்தா 16 Oct 2020 Read Full PDF

அ. வேளாங்கன்னி அமிர்தா

முனைவர் பட்ட ஆய்வாளர்

முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வு துறை

செல்லம்மாள் மகளிர் கல்லூரி

பச்சையப்பன் அறக்கட்டளை நிறுவனம்

கிண்டி, சென்னை-32.

செல் : 88387 16469

velankanniamirtha@gmail.com

நெறியாளர்:

முனைவர் ப.விமலா அண்ணாதுரை,

உதவிப்பேராசிரியர் (ம) தலைவர்,

தமிழ் முதுகலை மற்றும் உயராய்வுத் துறை,

செல்லாம்மாள் மகளிர் கல்லூரி,

பச்சையப்பன் அறக்கட்டளை,

கிண்டி, சென்னை-32.

 

ஆசிரியர் பற்றி:

சென்னையில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர். தற்போது அதே கல்லூரியில் ‘தொல்காப்பியத்தில் இலக்கியத் தாக்கம்’ என்ற தலைப்பில் தனது முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். எட்டுக்கும் அதிகமான பன்னாட்டு கருத்தரங்குகளில் கலந்துள்ளார். ஐந்திற்கும் அதிகமான கருத்தரங்குகளுக்கு ஆய்வு கட்டுரைகள் வழங்கியுள்ளார்.

ஆய்வுச் சுருக்கம்

            ஒரு மொழியின் வளமை அதன் இலக்கிய இலக்கணங்களிலிருந்தே வெளிப்படுகிறது. அந்த வகையில் நம் மொழியின் வளமையும் நமது இலக்கண இலக்கிய நூல்களிலிருந்தே அறியப்படுகிறது. எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் போல இலக்கியங்களிலிருந்தே இலக்கணங்கள் உருவாகிறது. நமக்கு கிடைத்த முதல் நூலும் தொன்மை நூலுமான தொல்காப்பியமே இதற்கு எடுத்துக்காட்டாய் அமைகிறது. வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்ததாகக் கூறப்படுகிற தொல்காப்பியம் இலக்கியங்களுக்கே இலக்கணம் வகுத்துள்ளது என்பதை உறுதிப்படுத்த முற்படுகிறது இக்கட்டுரை. அதன் தொடர்ச்சியாக அதில் கூறப்பட்டுள்ள இலக்கியங்கள், அவை வளர்ந்து வந்த நிலை, இன்றைய காலத்தில் அவற்றின் வளர்ச்சி நிலை போன்றவற்றை இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம்.

திறவுச்சொற்கள்:

தொல்காப்பியம், பாட்டு, உரை, நூல், வாய்மொழி (மந்திரம்), பிசி, அங்கதம் (கூற்றிடை வைத்த குறிப்பு), முதுசொல், சிற்றிலக்கியம் போன்றவை இக்கட்டுரையின் திறவுச் சொற்களாக அமைகின்றன.

முன்னுரை :

கள்ளையுந் தீயையுஞ் சேர்த்து - நல்ல

காற்றையும் வானவெளியையுஞ் சேர்த்துத்

தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல

தீஞ்சுவைக் காவியஞ் செய்து கொடுத்தார்”1

என்ற பாரதி வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் பல இலக்கண இலக்கியங்களைக் கொடுத்துச் சென்றனர் நம் சான்றோர் பெருமக்கள். ஒரு மொழிக்கு அடிப்படையாக இருப்பது அதன் எழுத்தும் சொல்லும் ஆகும். எனவே தான் தொல்காப்பியர் அவற்றிற்கு இலக்கணம் வகுக்கும் விதமாக எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்பதைப் படைத்தார். அதனையடுத்து பொருளதிகாரத்தைப் படைக்கிறார். பொருளதிகாரம் வாழ்வியலுக்கு இலக்கணம் வகுக்கிறது என்பது நம்மிடையே ஊறிப்பபோன பழம்பெரும் கர்ணப் பரம்பரை கதையாகும். ஆனால் உண்மையில் பொருளதிகாரம் என்பது எழுத்தும் சொல்லும் கூடி பொருளாக உருவாகக் கூடிய இலக்கியங்களிற்கே இலக்கணம் வகுக்கிறது.

ஒவ்வொரு மனிதனின் வாழ்வியலையும் எடுத்துக்காட்டுவது தான் இலக்கியம். அத்தகைய இலக்கியங்களிலிருந்து உருவாவது தான் இலக்கணம். எனவே இலக்கணங்களில் வாழ்வியல் பதிவுகள் இருக்கலாம். அத்தகைய பதிவுகளைக் கொண்டு வாழ்வியலுக்கு இலக்கணம் வகுக்கிறது என்பது நமது பிழையாகும். வாழ்வியலைப் பிரதிபலிக்கும் இலக்கியங்களின் அடிப்படையே தொல்காப்பியப் பொருளதிகாரம் எடுத்துக்காட்டுகிறது.

 

 

இலக்கியத்தோற்றத்திற்கு இலக்கணங்களின் இன்றியமையாமை:

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை நம்மையேச் சாரும். அத்தகைய  சங்கம் பற்றிய குறிப்பு கிடைக்கக்கூடிய முதல் நூல் இறையனாரால் இயற்றப்பட்ட இறையனார் களவியல்என்னும் நூலாகும். இந்நூலின் முதல் நூற்பா உரையின் ஒரு பகுதியை உற்றுநோக்குவதன் மூலம் இலக்கியங்கள் உருவாவதற்கு இலக்கணங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது

பெய்த பின்னர் அரசன் இனி நாடு நாடாயிற்றாகலின்

நூல் வல்லாரைக் கொணர்க என்று எல்லாப் பக்கமும்

ஆட்போக்க எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும்

யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து

பொருளதிகாரம் வல்லாரை எங்கும் தலைப்பட்டிலேம்

என்று வந்தார் வர அரசனும் புடைபடக் கவன்று

என்னை எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்ந்து

பொருளதிகாரத்தின் பொருட்டன்றே பொருளதிகாரம்

பெற்றமேயெனின் இவை பெற்றும் பெற்றிலேம் எனச்

சொல்லா நிற்ப மதுரை ஆலவாயில் அழல் நிறக் கடவுள்

சிந்திப்பான் என்னை பாவம் அரசர்க்கு கவற்சி

பெரிதாயிற்று அதுதானும் ஞானத்திடையதாதலாம்

யாம் அதனைத் தீர்க்கற் பாலம் என்று இவ்வறுபது

சூத்திரத்தையும் செய்து மூன்று செப்பிதழகத்து எழுதிப்

பீடத்தின் கீழ் இட்டான்” 2

இந்தப் பகுதியின் வாயிலாக எழுத்தும், சொல்லும், யாப்பும் அறிந்து கொள்வது பொருளதிகாரத்திற்காகவே இவை முற்றிலும் அறிந்த பின் தான் இலக்கியங்களை செம்மையானதாக படைக்க முடியும் என்பது தெளிவாகிறது. மேலும் பொருளதிகாரத்திலிருந்து யாப்பு என்ற செய்யுள் தனியே பிரிந்து வந்த நிலையில் யாப்பருங்கலம்என்ற அமிர்தசாகரால் இயற்றப்பட்ட நூல் நமக்கு தற்போது முதன்மையாகிறது. ஆனால் கி.பி. 5ஆம் நூற்றாண்டிலே சங்க யாப்புஎன்ற நூலானது இருந்துள்ளது. மேலும் மேற்கூறிய பகுதியில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிற இறையனார் களவியல்என்ற நூலிலும் எழுத்து, சொல், யாப்பு என்ற மூன்றைக் குறிப்பிடுவதால் யாப்பு பொருளதிகாரத்திலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னரே பிரிந்து வளர்ந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. இறையனார் இந்நூலின் தொடக்கத்திலே இந்நூல் உருவாகுவதற்கான காரணத்தை வெளிப்படுத்துகிறார். எழுத்து, சொல், யாப்பு என்ற மூன்றின் பயனாக விளங்கக்கூடிய இலக்கியத்திற்கு இலக்கணம் இல்லையே என்ற பாண்டிய மன்னனின் மனக்குறையைப் போக்குவதற்காகவே இறையனார்களவியல்என்ற அகத்திணை மரபை இயற்றியுள்ளார் என்பதை அறிய முடிகிறது. இதன் வாயிலாக இலக்கியங்களின் உருவாக்கத்திற்கு இலக்கணங்கள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பதை அறியலாம்.

தொல்காப்பியமும் செய்யுளியலும் :

மூன்று அதிகாரங்களாகவும், இருபத்தேழு இயல்களாகவும் பகுக்கப் பட்டுள்ளது தொல்காப்பியம். அதில் ஒரு அதிகாரமான பொருளதிகாரம் ஒன்பது இயல்களைக் கொண்டு விளங்குகிறது. இதில் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல் போன்ற இயல்களில் இலக்கியங்களில் இடம்பெறும் தலைவன் தலைவிக்குரிய இயல்புகளையும், பண்புநலன்களையும் விளக்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களைச் சுற்றியுள்ள சுற்றத்தாரான பாங்கன், தோழி, செவிலித்தாய், நற்றாய், பரத்தையர் போன்றோரின் இயல்புகளையும், பண்புநலன்களையும் வெளிப்படுத்துகிறார். இவ்வாறாக மேற்கூறிய இயல்களில் விடுபட்டச் செய்திகளை அடுத்த இயலான பொருளியல்என்ற இயலில் தெளிவுபடுத்துகிறார். அதனையடுத்து இலக்கியத்திற்கு இன்றியமையாததாக இருக்கக்கூடிய உவமை மற்றும் சுவைகளை அடுத்தடுத்த இயலாக உவமையியல், மெய்ப்பாட்டியல் என்ற இயலில் எடுத்துக்காட்டுகிறார். இவை அனைத்தும் இணைந்து உருவாகக்கூடிய இலக்கியங்களான செய்யுள்களின் இயல்பை விளக்கும் பொருட்டு செய்யுளியல்என்ற இயலைப் படைக்கிறார். இறுதியாக உயிர்களின் மரபு சார்ந்த செய்திகளை மரபியல் என்ற இயலாக எடுத்துக் காட்டுகிறார்.

செய்யுள்களின் இயல்பைக் கூறும் செய்யுளியலின் முதல் நூற்பாவில் அதற்கு இன்றியமையாதவையாக விளங்கக்கூடிய அதன் உறுப்புகளைப் பற்றி தொல்காப்பியர் கூறுகிறார்.

மாத்திரை யெழுத்தியல் அசைவகை எனாஅ

யாத்த சீரே அடியாப் பெனாஅ

மரபே தூக்கே தொடைவகை எனாஅ

நோக்கே பாவே அளவியல் எனாஅ

திணையே கைகோள் பொருள்வகை எனாஅ

கேட்போர் களனே காலவகை எனாஅ

பயனே மெய்ப்பா டெச்சவகை எனாஅ

முன்னம் பொருளே துறைவகை எனாஅ

மாட்டே வண்ணமோ டியாப்பியல் வகையின்

ஆறுதலை யிட்ட அந்நா லைந்தும்

அம்மை அழகு தொன்மை தோலே

விருந்தே இயைபே புலனே அழைபெனாஅப்

பொருந்தக் கூறிய எட்டொடுந் தொகைஇ

நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென

வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே” 3

என்ற நூற்பாவின் வாயிலாகத் தொல்காப்பியர் செய்யுளின் உறுப்புகள் முப்பத்தி நான்கு என வகைப்படுத்துகிறார். மாத்திரை முதலாக வண்ணம் வரை உள்ள செய்யுள் உறுப்புகளை விளக்கிய பின்னர் ஆறுவகை யாப்பு எனத் தொகுத்தவற்றை ஒன்றன் பின் ஒன்றாக விளக்குகிறார்.

பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே

அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும்

வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

நாற்பே ரெல்லை அகத்தவர் வழங்கும்

யாப்பின் வழிய தென்மனார் புலவர்” 4

என்ற நூற்பாவில் பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் போன்ற ஏழு வகையான யாப்பு சேரன், சோழன், பாண்டியன் என்ற மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தில் இருந்துள்ளதை அறிய முடிகிறது. இதன்மூலம் அந்த காலக்கட்டத்தில் உள்ள இலக்கிய வகைகளை உணரலாம்.

தொல்காப்பியமும் பாட்டும்:

யாப்பு வகைகளில் முதலாவதாகக் கூறப்படுகிற பாட்டுஎன்பது இன்றைய காலகட்டத்தின் கவிதையாகும். மேலும் செய்யுள் எனப்படுவது பொதுவான ஆக்கங்கள் ஆகும். அத்தகைய ஆக்கங்களில் பாட்டுஎன்பதும் ஒன்றாகும்.

அடியின் சிறப்பே பாட்டெனப் படும்’5

என்ற நூற்பாவில் பாட்டு என்பது அடியினைக் கொண்டு அமைக்கப்படும் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா போன்றவையாகும். ஆனால் யாப்பு வகையில் ஒன்றாகவுள்ள பாட்டு என்பது மாத்திரை முதலான செய்யுள் உறுப்புகளால் அமையப் பெற்ற இலக்கியங்களைக் குறிக்கிறது. இத்தகைய பாட்டு தொல்காப்பியத்தை அடுத்ததாக தமிழ் இலக்கிய வரலாற்றில் அமையப்பெற்ற சங்க இலக்கியத்தில்,

“செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த

செங்கோல் அம்பின் செங்கோட் டியானை

கழல்தொடிச் சேஎய் குன்றங்

குருதிப் பூவின் குலைக்காந் தட்டே” 6

என்றும், அற இலக்கியத்தில்

பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்

கழிநல் குரவே தலை” 7

என்றும் பக்தி இலக்கியத்தில்,

வான னைமதி சூடிய மைந்தனைத்

தேன னைத்திரு வண்ணாமலையனை

ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த

ஆன னையடி யேன்மறந் துய்வனோ” 8

என்றும் காப்பியங்களில்,

ஒருங்கு தொக்கன்ன உடைப்பெரும் பண்டம்

கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்

குலத்திற் குன்றாக கொழுங்குடிச் செல்வர்

அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்

உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய”9

என்றும் சிற்றிலக்கியத்தில்

வேளாண்மை என்னும் விளைவுக்கு நின் வார்த்தை

கேளாதவர் ஆர்காண் கிள்ளையே” 10

என்றும் அமைகிறது. இதன் வாயிலாக பாட்டு என்ற இலக்கிய வகை அதற்குரிய மரபிலிருந்து மாறாமல் ஒவ்வொரு இலக்கிய காலகட்டத்திலும் அதற்கேற்றவாறு அமைந்து வருவதைக் காணமுடிகிறது. சிற்றிலக்கிய காலகட்டத்தை அடுத்து வருகிற இக்கால இலக்கியங்களில் மரபில் மாற்றம் ஏற்படுகிறது. பாட்டு என்பது கவிதையாக மாறியுள்ளதே அம்மாற்றமாகும்.

சுவை புதிது, பொருள் புதிது வளம் புதிது

சொற் புதிது சோதிமிக்க

நவகவிதை” 11

என்று புதுக்கவிதையின் தந்தையான பாரதியார் புதுக்கவிதைக்கு விளக்கம் தருகிறார். மரபும் கருத்தும் இணைந்து பல நூற்றாண்டாக வலம் வந்த பாட்டு கி.பி.இருபதாம் நூற்றாண்டிலிருந்து மரபுகளை மீறி கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து புதுக்கவிதையாக மாற்றமடைந்துள்ளது. தொல்காப்பியம் காலமான கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற பாட்டு என்ற யாப்பின் பரிணாம வளர்ச்சியாகவே புதுக்கவிதை நோக்கப்படுகிறது.

தொல்காப்பியமும் உரையும்:

தற்கால இலக்கியங்களின் அடிப்படை உரையாகும். கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, உரைநடை போன்ற தற்கால இலக்கியங்களுக்கு உயிர் கொடுப்பது உரையே ஆகும். இத்தகை உரை குறித்த சான்று தொல்காப்பியத்திலே ஒரு செய்யுள் வகையாகக் குறிக்கப்பட்டுள்ளது. உரை குறித்த விளக்கம் பற்றி தொல்காப்பியர்,

பாட்டிடை வைத்த குறிப்பினானும்

பாவின் றெழுந்த கிளவி யானும்

பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யானும்

பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் என்று

உரைவகை நடையே நான்கென மொழிப” 12

என்று கூறுகிறார். அதாவது பாட்டிற்கு இடையே வைத்த குறிப்பு என்றும், பாக்களை விட்டொழிந்து தோன்றிய சொல்வகை என்றும், பொருளியல்பு இல்லாத பொய்மொழி என்றும், பொருளை பொருந்திய நகைமொழி என்றும் உரை தோன்றும் இடங்களைத் தொல்காப்பியர் விளக்குகிறார்.

ஊர்க்கால் நிவந்த பொதும்பொருள்

என்னும் குறிஞ்சிக்கலியுள்

இவளைச் சொல்லாடிக் காண்பேன் தகைத்து” 13

என்பது உரைக்குறிப்பு. இவ்வாறாக, உரைக்கு சான்று தருகிறார் இளம்பூரணர்.

இவ்வாறாக தோற்றம் பெறுகிற உரையானது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிற சிலப்பதிகாரத்தில் நன்கு வளர்ச்சிப் பெறுகிறது. எனவே தான் சிலப்பதிகாரத்திற்கு உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்என்ற பெயரும் ஏற்பட்டுள்ளது. மேலும் இத்தகைய உரையானது பின்வரும் காலங்களில் அதன் வளர்ச்சி தடைபட்டு தற்கால இலக்கிய காலக்கட்டத்திலே மீண்டும் வளர்ச்சி பெறுகிறது. அத்தகைய வளர்ச்சியையே சிறுகதை, புதினம், கட்டுரை, உரைநடை போன்றவை எனலாம்.

தொல்காப்பியமும் நூலும் :

நூல் என்பது தற்காலத்தில் இரு பொருள் உணர்த்தும் ஒரு சொல்லாகவே கருதப்படுகிறது. இரு பொருள்களில் முதலாவது பருத்தியால் நெய்யப்படும் நூலாகும். மற்றொன்று கல்வி கற்கக்கூடிய புத்தகம் என்ற பொதுச்சொல் ஆகும். ஆனால் தொல்காப்பியத்தில் நூல் என்பது இலக்கணத்தை உணர்த்தும் நூல்களையே குறித்துள்ளது. மேலும் இலக்கிய வகையான பாட்டிற்கும் உரைக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் இலக்கணமான நூலிற்கு,

அவற்றுள்

நூலெனப்படுவது நுவலுங் காலை

முதலும் முடிவும் மாறுகோ ளின்றித்

தொகையானும் வகையினும் பொருண்மை காட்டி

உள்நின் றகன்ற வுரையொடு புணர்ந்து

நுண்ணிதின் விளக்கல் மதுவதன் பண்பே” 14

என்று விளக்கம் அளிக்கிறார். அதாவது நூலென்று சொல்லப்படுவது பொருளோடு முடிக்கும் பொருண்மை மாறுபடாமல் சொல்லக்கூடிய பொருளை தொகையாகவும் வகையாகவும் பகுத்து நுண்பொருள் விளக்குவது ஆகும். இதன் உட்படலமாக நான்கை தொல்காப்பியர் கூறுகிறார்.

ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும்

இனமொழி கிளந்த ஓத்தி னானும்

பொதுமொழி கிளந்த படலத் தானும்

மூன்றுறுப் படக்கிய பிண்டத்தானும் என்று

ஆங்கனை மரபின் இயலும் என்ப” 15

என நூலின் உட்பிரிவுகள் குறித்து தொல்காப்பியர் விளக்குகிறார். நூலின் அமைப்பு முறை காரணமாக நூலை சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் என்ற நான்கு முறைகளில் வகைப்படுத்தலாம். சூத்திரத்திற்கான விளக்கம் குறித்து தொல்காப்பியர்,

அவற்றுள்

சூத்திரம் தானே

ஆடி நிழலின் அறியத் தோன்றி

நாடுதல் இன்றி பொருள் நனி விளங்க

யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே” 16

என்கிறார். கண்ணாடியில் தெரிகிற நிழல் போல் படித்தவுடன் பொருள் புரிந்து கொள்கிற ஒவ்வொரு நூற்பாவும் சூத்திரமாகும்.

வேற்றுமை தாமே ஏழென மொழிப

விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே” 17

என்ற போது வேற்றுமை குறித்த வகைகள் படிப்போருக்கு நன்கு புலனாகும். இத்தகையவை சூத்திரம் எனப்படுகிறது. இதைப்போலவே ஓத்து என்பதற்கு ஓரினமாக பெரும்பொருளை ஓரிடத்தே சேர வைத்தல் என்று விளக்கம் தருகிறார் இளம்பூரணர். மேலும் படலம் எனப்படுவது ஓரினமாகிய நெறியின்றிப் பல நெறியான் வருவன பொருளானே பொதுமொழியாற் தொடர்புபடுதல் என்பதாகும். அதாவது படலம் பற்றி தொல்காப்பியர்,

ஒரு நெறி இன்றி விரவிய பொருளால்

பொதுமொழி தொடரின் அது படலம் ஆகும்” 18

என்கிறார். படலத்திற்கு அதிகாரமென்ற பெயரும் உண்டு. இதை உள்நோக்கி ஆராயும்போது தொல்காப்பியத்திலுள்ள எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்கள் படலத்திற்கும் ஒவ்வொரு அதிகாரத்திலுள்ள ஒன்பது இயல்கள் ஓத்திற்கும் எடுத்துக்காட்டாய் அமைவதை அறியலாம். இதைப்போலவே தொல்காப்பியர் பிண்டம் பற்றி,

மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயின்

தோன்றுமொழிப் புலவர்அது பிண்டம் என்ப” 19

எனக் குறிப்பிடுகிறார். இதற்கு இளம்பூரணர்மூன்றுறுப்பினையும் அடக்கின நன்மைத்தாயின் அதனை பிண்டமென்று சொல்லுவர்என்று விளக்கம் தருகிறார். சூத்திரத்தாற் பிண்டமாயிற்று இறையனார் களவியல். ஓத்தினாற் பிண்டமாயிற்று பன்னிரு படலம். அதிகாரத்தினாற் பிண்டமாயிற்று தொல்காப்பியம். இதன் வாயிலாக பிண்டம் பற்றி நன்கு விளங்கும். இவ்வாறாக, தொல்காப்பியர் இலக்கண நூல்களுக்கு இலக்கணம் வகுத்து அதே முறையில் தன் நூலை அமைத்திருப்பது பெருமைக்குரியதே.

இவ்வாறாக இலக்கண நூலிற்கு தொல்காப்பியர் இலக்கணம் வகுத்தபடி பின்வரு காலங்களில் இலக்கணம் பல வளர்ச்சிப் படிகளைக் கண்டது. ஐந்திலக்கணத்தை (எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி) கூறக்கூடிய தொலகாப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், மாணவர் தமிழ் இலக்கணம், பஞ்ச லட்சணம் (உரைநடை இலக்கணம்) போன்ற நூல்களும், மூன்று இலக்கணம் (எழுத்து, சொல், சொற்றொடர்) நவிலக் கூடிய தொன்னூல், இனிய தமிழ், இலக்கணம் போன்ற நூல்களும், இரண்டிற்கு இலக்கணம் வகுக்கக்கூடிய நேமிநாதம். நன்னூல் போன்ற நூலக்ளும், ஒற்றைப்பொருள் பற்றி பேசக்கூடிய பிரயோக விவேகம் (சொல்) இலக்கணக் கொத்து (சொல்) இதே வரிசையில் அகம் பற்றி மட்டும் பேசக்கூடிய இறையனார் களவியல், நம்பியகப் பொருள், தமிழ்நெறி விளக்கம், களவியற் காரிகை, மாறனகப் பொருள், திருக்கோவைக் கிளவிக் கொத்து, திருக்கோவை கொளு போன்ற நூல்களும், புறம் பற்றி பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பா மாலை போன்ற நூல்களும் யாப்பு பற்றி அவிநயம், யாப்பருங்கலம், காக்கைப்பாடினியம். சிறுகாக்கைப் பாடினியம், சங்க யாப்பு, நற்றத்தம், பல்காயம், யாப்பு நூல் போன்ற நூல்களும் அணி பற்றி தண்டிலயங்காரம், மாறனலங்காரம். உவமான சங்கிரகம், சந்திரலோகம், குவலையானந்தம் (தொகுதி-1), குவலையானந்தம் (தொகுதி-2) போன்ற நூல்களும் சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் வகுக்கும் பாட்டியல் நூல்களான இந்திரகாளியம், பன்னிரு பாட்டியல், வெண்பாப்பாட்டியல், நவநீதப்பாட்டியல், வரையறுத்தப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல்பிரபந்த தீபிகை, பிரபந்த தீபம் போன்ற நூல்களும், அறுவகை இலக்கணம் (எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பாட்டியல்) போன்ற நூலும் காலந்தோறும் தோன்றி வளர்ந்துள்ளது.

தொல்காப்பியம் உணர்த்தும் வாய்மொழி இலக்கியங்கள்:

இலக்கியங்களை வரிவடிவ இலக்கியங்கள், வாய்மொழி இலக்கியங்கள் எனப் பிரிக்கலாம். அந்த வகையில் தொல்காப்பியர் கூறிய ஏழு வகை இலக்கியங்களில் முன்னர் கூறிய பாட்டும் உரையும், நூலும் வரிவடிவ இலக்கியங்களாகும். பின்னர் கூறப்பட்ட வாய்மொழி (மறைமொழி), பிசி (விடுகதை), அங்கதம், முதுசொல் (பழமொழி) ஆகிய நான்கும் வாய்மொழி இலக்கியங்களாகும். அத்தகைய வாய்மொழி இலக்கிய வகைகளை வரிவடிவ இலக்கியத்திற்கு முந்தைய இலக்கிய வகைகள் என்று ஆண்ரியோல்ஸ் என்ற வகைத் திறனாய்வாளர் குறிப்பிடுகிறார். வாய்மொழி இலக்கியத்தில் முதன்மையாக உள்ள வாய்மொழி என்பதை மறைமொழி கிளந்த மந்திரம்என்று தொல்காப்பியர் கூறுகிறார்.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்

மறைமொழி தானே மந்திரம் என்ப” 20

என்று வாய்மொழியாகிய மந்திரத்திற்கு விளக்கம் தருகிறார் தொல்காப்பியர். அதாவது நிறைவான ஆற்றலுடைய மாந்தர் மறைமுகமாக தன் கருத்தை வெளிப்படுத்துவது மந்திரம் எனப்படுகிறது. மறைமொழியை கூறிய தொல்காப்பியர் அடுத்ததாக அங்கதம் என்ற செய்யுள் வகையைக் குறிப்பிடுகிறார். இதனை தொல்காப்பியர்கூற்றிடை வைத்த குறிப்புஎன்கிறார்.

அங்கதம் தானே அரில்தபத் தெரியிற்

செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே” 21

என்று அங்கதம் என்ற இலக்கியத்தை இரு பிரிவுகளாகப் பிரிக்கிறார் தொல்காப்பியர்.

செம்பொரு ளாயின் வசையெனப் படுமே” 22

என்றும்

மொழிகரந்து மொழியின்அது பழிகரப் பாகும்” 23

என்றும் அங்கதத்தின் தன்மையானது விளக்கப்படுகிறது. அங்கதம் என்பது கூற்றிடை வைத்த குறிப்புப் பொருள் என்றும், அத்தகைய குறிப்புப் பொருள் வசை என்ற பழிப்புச் சொற்களாகவும் மற்றும் மறைபொருளாகவும் இருக்கும் என்று விளக்கப்படுகிறது. இதனையடுத்து தொல்காப்பியர் முதுமொழி என்ற இலக்கிய வகையைக் குறிப்பிடுகிறார். முதுமொழி குறித்து தொல்காப்பியர்,

நுண்மையுஞ் சுருக்கமும் ஒளியு முடைமையும்

மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

ஏது நுதலிய முதுமொழி யென்ப” 24

என்கிறார். அதாவது நுண்மை விளங்கவம், சுருக்கம் விளங்கவும், ஒளியுடைமை விளங்கவும் மென்மை விளங்கவும் கருதிய பொருளை இத்தகைய வகையில் விளக்குதல் முதுமொழியாகும். இதைப்போலவே பிசி குறித்து தொல்காப்பியர்,

ஒப்பொடு புணர்ந்த உவமத் தானுந்

தோன்றுவது கிளந்த துணிவி னானும்

என்றிரு வகைத்தே பிசிநிலை வகையே” 25

என்கிறார். ஒப்போடு புணர்ந்த உவமை நிலையே பிசி எனப்படும் இலக்கியமாகும். இதன் அடிவரையை குறிப்பிடும் போது தொல்காப்பியர் பண்ணத்தியைப் பற்றி குறிப்பிட்டு,

அதுவே தானும் பிசியொடு மானும்” 26

என்கிறார். பிசியானது இரண்டடியால் வரும் என உணரப்படுகிறது. இத்தகைய பிசி இலக்கியமே தற்காலத்தில் விடுகதையாக நோக்கப்படுகிறது.

சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன? (காய்ந்த சிவப்பு மிளகாய்) போன்ற விடுகதைகளும், ‘அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்’, ‘அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா’, ‘அசைந்து தின்கிறது யானை அசையாமல் தின்கிறது வீடுபோன்ற பழமொழிகளும் இன்றைய நாட்டடுப்புற இலக்கியங்களாக உள்ளன. பல நூற்றாண்டுகளாக வாய்மொழி இலக்கியம் என்ற அடிப்படையில் அமைந்த மறைமொழி, முதுமொழி, பிசி, அங்கதம் போன்ற இலக்கிய வகைகள் இன்றைய காலத்தில் நாட்டுப்புற இலக்கியங்களில் ஒரு பகுதியாக சிறிது சிறிதாக வரிவடிவ வளர்ச்சியைப் பெற்று வருகிறது.

தொல்காப்பியம் கூறும் சிற்றிலக்கியங்கள் :

தமிழில் நெடும் பாடல்களாய் அமைந்த பிரபந்த வகைகளே சிற்றிலக்கியங்கள் எனப்படும். இவை தொண்ணூற்றாறு வகை எனப்படும் என்பது பழம் பெரும் கதையாகவே உள்ளது. சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் வகுக்கும் பாட்டியல் நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எண்ணிக்கையைக் கூறுகின்றன. சிற்றிலக்கியங்களில் உள்ள பெரும்பான்மையான இலக்கிய வகைகளின் வித்து தொல்காப்பியர் காலத்திலே காணப்படுகிறது. தொல்காப்பியத்திலுள்ள ஒரு சிறு பகுதிகளே பிற்காலத்தில் ஒரு இலக்கியங்களாக வளர்ந்தள்ளன. சிற்றிலக்கியங்களில் ஒன்றான ஆற்றுபடை இலக்கியத்தின் முதன்மை நூலான திருமுருகாற்றுப்படை பிற்காலத்தில் தோன்றிய போதிலும் அதன் பெருமை கருதி சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான வித்து தொல்காப்பியத்தில் காணப்படுகிறது.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்

சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்” 27

என்று ஆற்றுப்படை குறித்து தொல்காப்பியர் கூறுகிறார். இதைப் போலவே தூது, உலா, பிள்ளைத்தமிழ், தும்பை மாலை, துயிலெடை நிலை, தானை மாலை, மங்கல வள்ளை, முதுகாஞ்சி, புறநிலை, புறநிலை வாழ்த்து போன்ற பல இலக்கியங்கள் சார்ந்த வித்தானது தொல்காப்பியத்தில் காணப்படுகிறது.

நிறைவுரை :

பிற்காலத்தார் பலர் தொல்காப்பியர் சுட்டிய இலக்கிய வகைகளின் பெயரையும் பொருளையும் எடுத்துக் கொண்டார்களே தவிர அவ்வகைமைகளின் பண்பு நலன்களாக அவர் சுட்டியவற்றைப் பின்பற்ற பெரிதும் தவறிவிட்டனர். இதனால் தமிழ் இலக்கிய வகைமை வளர்ச்சியில் ஏற்ற இறக்கங்களை மிகுதியாகக் காண்கிறோம்28 என்ற தமிழண்ணலின் கருத்தை அடியொற்றியே இக்கட்டுரையானது அமைகிறது. இதற்குக் காரணம் தொல்காப்பியத்தை வாழ்வியல் இலக்கணம் என்று ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அமைப்பதே. தொல்காப்பிய பொருளதிகாரம் இலக்கியங்களின் இயல்புகளை எடுத்தோதுகிறது என்ற பரந்தநோக்கு அனைவரிடமும் ஏற்பட வேண்டும். எனவே தான் இக்கட்டுரையின் வாயிலாக தொல்காப்பியர் ஏழுவகையாக இலக்கியங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தமையின் காரணமாக அக்காலத்தில் உலவி வந்த இலக்கியங்களும் தொல்காப்பியத்தின் சிறுபகுதியிலிருந்து வளர்ந்த இலக்கியங்களும் அதன் வளர்ச்சி நிலையும் அறியப்படுகிறது. இதன்மூலம் தொல்காப்பிய பொருளதிகாரம் வாழ்வியல் இலக்கணம் என்று கூறுவதை விட இலக்கிய இயல்புகளை எடுத்தோதுகிறது என்பது பொருந்தும்.

அடிக்குறிப்புகள்:

1. பாரதியார் கவிதைகள், தமிழ்த்தாய், 3.

2. களவியல் என்ற இறையனார் அகப்பொருள், பக்6-7.

3. தொல்காப்பியம், செய்யுளியல், 1.

4. தொல்காப்பியம், செய்யுளியல், 75.

5. தொல்காப்பியம், செய்யுளியல், 34.

6. குறுந்தொகை, 1.

7. திருக்குறள், 657.

8. ஐந்தாம் திருமுறை, 33.

9. சிலப்பதிகாரம், மனையறம் படுத்த காதை, 5-10.

10. அழகர் கிள்ளைவிடு தூது, 3.

11.  வல்லிக்கண்ணன், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், ப6.

12. தொல்காப்பியம், செய்யுளியல், 166.

13. கலித்தொகை, 56.

14. தொல்காப்பியம், செய்யுளியல், 159.

15. தொல்காப்பியம், செய்யுளியல், 161.

16. தொல்காப்பியம், செய்யுளியல், 162.

17. தொல்காப்பியம், வேற்றுமையியல், 1.

18. தொல்காப்பியம், செய்யுளியல், 164.

19. தொல்காப்பியம், செய்யுளியல், 165.

20. தொல்காப்பியம், செய்யுளியல், 171.

21. தொல்காப்பியம், செய்யுளியல், 120.

22. தொல்காப்பியம், செய்யுளியல், 121.

23. தொல்காப்பியம், செய்யுளியல், 122.

24. தொல்காப்பியம், செய்யுளியல், 170.

25. தொல்காப்பியம், செய்யுளியல், 169.

26. தொல்காப்பியம், செய்யுளியல், 174.

27. தொல்காப்பியம்.,1037.

28. தமிழண்ணல்.தொல்காப்பிய இலக்கிய இயல், ப25.

துணைநூற்பட்டியல் :

1.   தொல்காப்பியம் பொருளதிகாரம். இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை.

2.   தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகள் - பதிப்பர்கள் முனைவர் செ.ஜீன் லாறன்ஸ், முனைவர் கு.பகவதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1998.

3.   தொல்காப்பியப் பாவியல் கோட்பாடுகள், பதிப்பாசிரியர் ந.கடிகாசலம், ச.சிவகாமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1999.

4.   இலக்கண வரலாறு, புலவர் இரா. இளங்குமரன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1988.

5.   புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும், வல்லிக்கண்ணன், பாரிநிலையம், சென்னை, 2008.

6.   தொல்காப்பிய இலக்கிய இயல், தமிழண்ணல், மெய்யப்பன் பதிப்பகம், 2008.