ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

‘கற்றாழை’ புதினத்தில் திணைக்கோட்பாடு

இ.ரெஜிலாமேரி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வு மையம், நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி, மார்த்தாண்டம் 08 Dec 2020 Read Full PDF

நெறியாளர் :

முனைவர் ஜா.ஜினிலா எம்.ஏ, எம்ஃபில், பி.எட், பி.எச்.டி

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி,

மார்த்தாண்டம் - 629165.

 

நான் திணைக்கோட்பாட்டின் அடிப்படையில் தற்கால தமிழ்ப்புதினங்கள் என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வுச் செய்து வருகிறேன். நான் இதுவரை 12 தேசியக் கருத்தரங்கிற்கும், 5 பன்னாட்டுக் கருத்தரங்கிற்கும் கட்டுரைகள் வழங்கியுள்ளேன். மேலும் சான்லாக்ஸ், செம்மொழித்தமிழ் காலாண்டு இதழ், சிற்றேடு, ஐவனம் போன்ற இதழ்களிலும் கட்டுரைகள் எழுதியுள்ளேன். மேலும் துபாய், மலேசியா போன்ற வெளிநாட்டுக் கருத்தரங்கிற்கும் கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

       தொல்காப்பியர் உலக வாழ்வியல் நெறிகளாக அகத்தையும் புறத்தையும் குறிப்பிட்டுள்ளார். அகவாழ்க்கை களவையும் கற்பையும் குறிப்பிடுகின்றது. ஐந்நிலங்களின் அடிப்படையில் திணைக்கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். இந்தக் கோட்பாட்டை அப்படியே புதின ஆசிரியர்கள் பயன்படுத்தியிருந்தாலும் திணைமயக்கமும் அதிகமாகக் காணப்படுகின்றன. இதனடிப்படையில் சு.தமிழ்ச்செல்வி எழுதியுள்ள கற்றாழை புதினத்தை ஆய்விற்கு உட்படுத்தியுள்ளேன். அதன்மூலம் கண்டறிந்த உண்மைகளை அடிக்குறிப்புகளுடன் உறுதிப்படுத்தும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது.

முன்னுரை

திணை-விளக்கம்

தொல்காப்பியரின் திணைக்கோட்பாடு

திணைப்பாகுபாடு

திணைக்கண்டறிதல்

செய்யுளுறுப்புகள்

மெய்ப்பாடு

தொகுப்புரை கற்றாழைபுதினத்தில் திணைக்கோட்பாடு

முன்னுரை:

                தமிழ் மண்சார்ந்த திணைக்கோட்பாட்டைத் தமிழிலக்கிய கோட்பாடாக  முதன்மைப்படுத்தலாம். திணைக்கோட்பாட்டை முதன்மைப்படுத்த மீட்டெடுத்தல், கண்டறிதல், புத்தாக்கம் என்னும் மூன்று வகைகளை மேற்கொள்ளலாம். தமிழ் மொழியில் பொருள் இலக்கணம் அமைந்திருப்பதால் அது தனக்குரிய தனிச்சிறப்பினைப் பெற்றுள்ளது. இந்தப் பொருள் இலக்கணம் அகம், புறம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. அகம் என்பது மனதின் உள் உணர்வுகளை உளவியல் நோக்குடனும் வீரம், கொடை முதலிய புற வாழ்க்கையை புறமும் விளக்குகிறது. தனிமனிதனின்  சூழல் புனைவு சார்ந்து அமைகின்ற திணைக்கோட்பாடு  முதல் கரு உரிப்பொருட்கள் சார்ந்து  நிலம்;  காலம், சமூக பின்புலம் போன்றவற்றின் மையப்பொருள் எவ்வாறு ‘கற்றாழை’ புதினத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதும் மருதத்திணையோடு இப்புதினம் ஒன்றும் விதத்தையும்   தெளிவுறுத்தும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

திணைவிளக்கம் :

                திணை என்பது முதற்பொருளான நிலத்தையும் மக்களின் நடவடிக்கைகளையம் குறிக்கும். “திணை என்ற சொல் வீடு, நிலம், திண்ணை, இடம், குடி, குலம், ஒழுக்கம், பாடல், சூழலமைதி, ஐந்திணை ஆகிய பொருட்களில் வரும்”1 சங்க இலக்கியத்தில் திணை என்னும் சொல் குடி என்னும் பொருளில் அதிக அளவில் ஆளப்பட்டுள்ளது. திணையை நச்சினார்க்கினியர் ஒழுக்கம் என்று கூறுவார். திணை என்பதனை சூழல் புனைவு என்னும் பொருளிலும் குறிப்பிடலாம். திணை என்பது குடும்பம், குடியிருப்பு ஆகிய பொருள் மூலம் மிகவும் முக்கியத்துவம் பெற்றவையாக விளங்குகிறது.               

தொல்காப்பியரின் திணைக்கோட்பாடு :

       தொல்காப்பியர் மக்களின்  வாழ்க்கையை  அக வாழ்க்கை, புற வாழ்க்கை என இரண்டாக பிரிக்கிறார். திணை என்பதற்கு ஒழுக்கம், நிலம் என்று பொருள் கொள்கிறார். நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து வகையாக பிரிக்கிறார். திணை என்பதற்கு ஒழுக்கம் என பொருள் கொண்டு அதனை அக ஒழுக்கம் ஏழு என்றும் புற ஒழுக்கம் ஏழென்றும் தொல்காப்பியர் உறுதிப்படுத்துகிறார். ஆண் அக ஒழுக்கமும் புற ஒழுக்கமும் உடையவன். பெண் அகத்தே இருந்து இன்பத்தைக் கொடுப்பவளாதலால் அக ஒழுக்கத்திற்கு  உரியவளாக கருதப்பட்டாள். “முந்நீர் வழக்கம் மகடூவோ டில்லை.”  ஏன வரையறுக்கப்பட்டமை பெண்களுக்கு அக ஒழுக்கத்தில் உள்ள பங்கை உறுதிப்படுத்துகிறது.

 

 

திணை இலக்கியம் :

                நிலப்பகுதிகளில் நிலைத்துத் தங்கி வாழ விரும்பிய மனிதன் இயற்கைச்சூழல்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்வை அமைத்துக் கொண்டான். அவர்கள் வாழ்ந்த நிலத்தின் தன்மை மற்றும் பயன்படுத்திய கருவிகளின் தன்மைக்கேற்ப வாழ்க்கை முறைகளும் மாறுகின்றன. ஐந்து நிலங்களின் வரலாற்று முறையிலான நிலவியல் வளர்ச்சி திணை இலக்கியம் தோன்ற வழிவகுத்தன. “திணை  இலக்கியம் என்பது நிலமும் பொழுதும் இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு மனித வாழ்வினைப் புனைவதாகும்”2 என்று ஸ்ரீகுமார் குறிப்பிடுகிறார்.                                                                                                                                                                                                                                                                            

திணைப்பாகுபாடு :

                சங்க இலக்கியங்களைப் பொறுத்தவரையில் திணைப்பாகுபாடு தனித்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. சங்ககாலத்தில் தனிநிலைச் செய்யுளாக விளங்கிய பாட்டும் தொகையும் அவை கூறுகின்ற அகம் புறம் பற்றிய செய்திகளைத் திணையை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. இத்திணைப் பொருளை ஏழு திணையாகப் பகுத்து ஏழுதிணைப் பாகுபாடாக உருவாக்கப்படுகிறது.

                                 “கைக்களை முதலா பெருந்திணை இறுவாய்

                                முற்படகிளந்த எழுதிணை என்ப”3

என அகத்திணை வகைகள் ஏழாக கூறப்பட்டுள்ளது.

   முதற்பொருளான நிலத்தினையும் பொழுதினையும்;  திணைக்குரிய அடிப்படைக்காரணியாக முன் வைக்கிறார் தொல்காப்பியர்.

                                 “மாயோன் மேய காடுறை உலகமும்

                                  சேயோன் மேய மைவரை உலகமும்

                                 வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

                                 வருணன் மேய பெருமணல் உலகமும்

                                 முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

                                 சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” 4

என நிலத்தினைக் குறிப்பிடுகிறார்.

                                 “புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

                                  ஊடல் அவற்றன் நிமித்தம் என்றிவை

                                 தேருங்காலைத் திணைக்குரிப் பொருளே”5

எனும் நூற்பாவில் உரிப்பொருள் என்பது இயற்கை வெளியினைக் கட்டமைத்துக் காட்டாமல் பண்பாட்டுவெளியினைக் கட்டமைப்பதனை அறியமுடிகிறது.

திணைக்கண்டறிதல் :

                திணைக்கோட்பாடு “ஐயப்பப்பணிக்கரின் நெறிமுறைகளில் திணையிணக்கம், திணை மயக்கம், திணை பிணக்கம் என்ற நிலைகளில் பகுத்து ஆராயப்படுகிறது.”6 ஒன்றுக்கு அதிகமான திணைகள் ஒரு படைப்பில் இணங்கி சேர்ந்திருந்தால் திணை இணக்கம் திணைமயக்கம் என்று அழைக்கிறோம். இணங்காதிருந்தால் திணைப்பிணக்கம் என்று கொள்ளலாம் என்று ஐயப்பப்பணிக்கர் குறிப்பிடுகிறார்.

முதற்பொருள் :

                நிலமும் பொழுதும் முதற்பொருளாகும்.

                                  “முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின்

                                 இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே”7

 முதற்பொருள் எனப்படுவது நிலமும் பொழுதும் ஆகிய இரண்டின் இயற்கை என்று உலகின் இயல்பு உணர்ந்தோர் கூறுவர் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

நிலம் :

                 'கற்றாழை' புதினத்தில் விவசாய நிலங்களுடன் வீடு, வாசல், வயல் என்று வசதியாக  வாழ்வதும் நாற்று நடும் தொழிலையும் சலனமின்றி செய்யம் பெண்களையும்  பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதால் மருத நிலத்தைச் சார்ந்ததாக அமைந்துள்ளதை அறியமுடிகிறது.

பொழுது :

                ஒரு ஆண்டின் பகுப்பினை பெரும்பொழுது எனலாம். ஒருநாளின் பகுப்பு சிறுபொழுதாகும். இவற்றின் அடிப்படையில் 

                 பெரும்பொழுதாகிய கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகிய அனைத்தும் இப்புதினத்தில்  அமைந்துள்ளது என்பதை

                “ இவையெதுவும் கண்ணுக்குத் தெரியாவண்ணம் இன்னும் விலகாமல் விடியற்காலை இருட்டு. மார்கழி பனி மழையைப்போல கொட்டிக் கொண்டிருந்தது. (ப.10) என்றும் வைகாசி மாதக்காற்றில் விளக்கு நிற்காமல் படபடத்து அணைந்தது.”( ப.47) என்றும் “ கண்களைக் குருடாக்கி விடும் சூரியனின் ஒளிக்கதிர்கள் செங்குத்தாய் விழும் அந்த உச்சி வேளைப்பொழுதில் வெயிலின் உக்கிரத்தை முழுமையாய் வாங்கிக் கொண்டிருந்தது அவள் தோப்பு”(ப.408) என்ற வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி கார், கூதிர், பனி, வெயில் என்ற பெரும்பொழுதுகளையும் வைகறை அதாவது விடியற்காலை என்ற சிறுபொழுதும் குறிப்பிடப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

 

 

கருப்பொருள் :

       கருப்பொருள் நிலத்தின் அடிப்படையாகும். கருப்பொருளின்றி நிலம் இல்லை. மனிதனின் வாழ்வாதாரம் கருப்பொருள் ஆகும். ஒரு திணைக்குரிய கருப்பொருள் பிற திணைகளில் மயங்கி வரலாம் என்பது தொல்காப்பிய விதி. புதினங்களில் கருப்பொருள் அடிப்படையில் மட்டும் திணைக்கண்டறியின் அனைத்துப் புதினங்களிலும் திணைமயக்கம் ஏற்படும். எனவே திணை கண்டறிய கருப்பொருள் அமைப்பை அடிப்படையாகக் கொள்ளல் இயலாது.

                தெய்வம்             -               பிள்ளையார்

                உணவு                 –              கம்மங்கஞ்சி, கருப்புக்கட்டி, பனங்காய், நெற்சோறு, மீன்

                விலங்கு              –              நாய், பூனை, ஆடு, பசு

                மரம்                      -               பனை, புளி, பூவரசு

                பறவை                –              சில்வண்டு, நீர்க்கோழிகள், ஆந்தை

                 ஊர்                       -               கப்புனாக்குளம், வாடியக்காடு, திருப்பூர்

                நீர்                           -               குளம், ஓடை

                பூ                            -               மல்லிகை, அல்லி, தாமரை

       தொழில்              -               நாற்று நடுதல், நெல் அவித்தல், விறகு வெட்டுதல்       

இவை ‘கற்றாழை’புதினத்தில் கருப்பொருள்களாக அமைந்துள்ளன.

உரிப்பொருள் :

                மருதம் நிலத்திற்கு ஊடலும் ஊடல் நிமித்தமும் உரிப்பொருளாக  அமைகிறது. இங்கு நிமித்தம் என்பது ஊடல்; நிகழ்வதற்கு ஏதுவாக அவற்றை சார்ந்து  நிகழும் நிகழ்ச்சிகளாகும். ஊடலை உரிப்பொருளாகக் கொள்ளும் மருத நிலத்தில் உற்பத்தி, சேமிப்பு, குவிப்பு ஆகியவற்றிற்கு மிகுந்த வாய்ப்புண்டு. வளம் மிகுதியாக இருப்பதால் ஓய்வுநேரம் மிகுதி. எனவே பரத்தமை அதனால் நேரும் ஊடல் உரிப்பொருளாகிறது.

                ‘கற்றாழை’ புதினத்தில் செல்வராசு அம்புஜம் என்ற பெண்ணுடன் களவு வாழ்க்கை நடத்துகிறான். பின் பெற்றோர் இவனுக்கு மணிமேகலையை திருமணம் செய்து வைக்கின்றனர். ஆண்டுகள் கழிந்தபின் இந்திரா என்ற பெண்ணுடன் சென்று விடுகிறான். இதனால் கோபமடைந்த மணிமேகலைக்கும் செல்வராசுவுக்கும் ஊடல் ஏற்படுகிறது. இதுபோன்றே கார்த்தியும் திலகாவும் காதல் திருமணம் செய்கின்றனர். திலகா கருவுற்றவுடன் ‘கனியா’ என்ற பெண்ணை நினைத்து இவளை விலக்கி விடுகிறான். இதனால் இவர்களுக்குள்ளும் ஊடல் ஏற்படுவதை சு.தமிழ்ச்செல்வி குறிப்பிட்டுள்ளார்

 

செய்யுளுறுப்புகள்:

செய்யுளியலில் செய்யுளுறுப்புகள் முப்பத்துநான்கு என்று கூறுகிறது தொல்காப்பியம். அவற்றுள்

                                “திணையே கைக்கோள் கூற்றவகை எனாஅ

                கேட்போர் களனே காலவகை எனாஅ

                பயனே மெய்ப்பாடு எச்சவகை எனாஅ

                முன்னம் பொருளே துறைவகை எனாஅ”8

எனவரும் நான்கு அடிகளும் அகப்பொருள், புறப்பொருள் ஆகிய இரண்டுக்கும் பொதுவான பாடல் சான்ற புலனெறி வழக்கம் பற்றியன ஆகும்.

திணை:

                 ‘கற்றாழை’புதினம் மருதத்திணையைக் குறிப்பதாக அமைந்துள்ளது. பொதுவாக மக்கள் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.

கைக்கோள் :

    கைக்கோள் களவு, கற்பு முதலிய ஒழுக்கங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

களவு:

                களவு ஒழுக்கம் என்பது பெற்றோர், உற்றார், உறவினர் ஆகியோர்க்குத் தெரியாமல் ஒரு ஆணும் பெண்ணும் மறைவிலே ஒழுகுதல் ஆகும். “களவு நெறியாவது வாழ்நாள்காறும் ஓருயிர் தன் காதல் சொல்லுதற்குரிய  மறுபாலுயிரைத் தானே தேர்ந்துகொள்ளும் இயற்கைநெறி”என்று வ.சுப. மாணிக்கனார் குறிப்பிடுகிறார். தலைவன் தலைவியை பெற்றோர் கொடுப்பக் கொள்ளாது அவர் அறியா வகையில் மறைந்த உள்ளத்தோடு கூடுதலின் களவெனப்பட்டது. மேலும் இது மறையோர்  நூல்களில் கூறப்படும் பிரம்மம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் இவற்றுள் காந்தருவதத்தோடு ஒத்ததாய் கற்பில் சென்று நிறைவுபெறுவதும் ஆகும்.

                அம்புஜமும் செல்வராசுவும் திருமணத்திற்கு முன்பே சந்தித்துக்கொண்டதை குறிப்பிட்டிருப்பதன் வாயிலாக இது மறையோர் கூறிய ‘காந்தருவம்’ என்ற மணமுறையைச் சார்ந்ததாக உள்ளது .

                கார்த்தியின் சிக்கனம் மற்றும் பொறுப்பு இவற்றைப் பார்த்து அவன் மீது காதல் கொண்டாள் என்பதிலிருந்து இது அசுரம் என்ற மணமுறையைச் சார்ந்ததாக உள்ளதை அறிய முடிகிறது. ஆனால் அதன் பிறகு திருமணம் செய்து கற்பு வாழ்க்கைக்குள் நுழைகின்றனர்.

                 களவுக்காலத்தில் தலைமக்கள் முதற்கூட்டத்திற்கு முன்பே நுகர்ச்சிப்பெறவேண்டும் என்ற எண்ணத்தோடே மீண்டும் சந்திப்பதில்லை. அன்பின் பெருக்கால் எதிர்ப்படுகின்றனர். தனிமையில் சந்திப்பது மெய்யுறுப்புணர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

  அலர் :

                அடிக்கடி தலைவனும் தலைவியும் சந்திப்பதால் அலர் ஏற்படும். இப்படி அலர் ஏற்பட்டு இறுதியில் திருமணத்தில் முடியும் வாய்ப்பு உள்ளது. மணிமேகலையின் மகள் கலா குமார் என்பவனுக்கு பொங்கல் வாழ்த்து அட்டைதான் அனுப்பினாள். அதுவே ஊரால் பெரிதாகப் பேசப்பட்டதன் பிற்பாடு காதலாக மாறுகிறது. இதனால் திருமணமும் செய்து வைக்கின்றனர். இத்தகைய சூழல்களும் சமுதாயத்தில் ஏற்படுவது உண்டு.

தூது:

                தமிழ்க்காதல் இலக்கியங்களில் தூது இன்றியமையாதது. அது உயர்திணையாகவோ அஃறிணையாகவோ இருக்கலாம். இப்புதினத்தில் தூதாக உயர்திணை அமைகின்றது. மணிமேகலை உதயகுமாரை காதலித்தநேரத்தில் அவர்கள் இருவரிடமும் தங்கை வளர்மதி தூது செல்லக் கூடியவளாக இருக்கிறாள். “சின்னக்கா அந்தத்தான் என்ன சொன்னவொ தெரியுமா? ஓனக்கு அந்த அத்தான புடிச்சிருந்திச்சின்னாக்க ஒன்னையும் அவ்வொகொட கோயம்புத்தூர்க்கு வந்துட சொன்னாவோ. நீ அத்தாங்கொட பெயிடுறியாக்கா?”(ப.101) என்ற வரிகளிலிருந்து அறியமுடிகிறது. மேலும் “ ஓம் மவதான் கும்பகோணத்துலேருந்து அந்த குமாருக்கு கடுதாசி போட்டுச்சாமுலா?”(276) என்ற வரியில் கடுதாசி என்ற லட்டரும் தூதிற்குப் பயன்பட்டதை அறியமுடிகியது

உடன்போக்கு:

                உடன்போக்கு என்பது தலைவனுடன் தலைவி உடன்சென்று பெற்றோர் அறியாமல் திருமணம் செய்து கொள்ளுதலே ஆகும். உடன்போக்கு மேற்கொள்பவர்களை சமூகம் இழிவாகவே நோக்குகிறது. இதனை காலப்போக்கில் சில குடும்பங்கள் ஏற்றுக்கொள்கின்றன. சென்சிலாவும் கார்த்தியும் காதலித்து திருமணம் செய்கின்றனர். இதனை அறிந்த பெற்றோர் “நாங்கல்லாம் இருக்கும்போது எங்களுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணி தலையில நீனே மண்ணள்ளிக் கொட்டிக்கிட்டாயே”(ப.352) என்று அவளது அம்மா கண்ணீர் வடிக்கிறாள். இவர்களது காதலைப் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

 

மடல்:

                மடல் என்பது அகத்திணையில் களவிற்குரிய துறைகளில் ஒன்று. பெண்ணொருத்தியை விரும்பிய ஒருவன் அவளை அடைய கையில் அப்பெண்ணின் உருவப்படம் வரைந்த துணியொன்றைப் பிடித்துக்கொண்டு பனங்கருக்கால் செய்த ஒப்பனைச் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஏறி தெரு வழியே சான்றோர் பலரறிய வருதலை மடலேறுதல் அல்லது மடல் என்பர்.

காதலித்தவர்களே திருமணம்செய்கின்றனர். இதனால் மடலேறுதலுக்கு இடமிருக்கவில்லை;

ஊடல்:

       ஊடல் மருதத்திணையில் மிக முக்கிய பங்குவகிக்கின்றன. பெரும்பான்மையும் தலைமகனின் தவறான ஒழுக்கத்தால் தலைமகள் உள்ளத்தில் நிகழும் மனவேறுபாடாக அமைகிறது. செல்வராசுவின் பரத்தமை ஒழுக்கம் காரணத்தால் மணிமேகலை அவனிடம் ஊடல் கொள்கிறாள். கலாவை ஒழுக்கம் கெட்டவள் என்று நினைத்து குமார் சந்தேகப்படுவதால் ஊடல் ஏற்பட்டு இறுதியில் பிரிந்து விடுகின்றனர். சென்சிலாவுக்கும் கார்த்திக்கும் தவறான கண்ணோட்டத்தால் ஊடல் ஏற்படுகிறது. கெசதாம்பாள் தன் கணவனை விட்டுவிட்டு மணியாருமகனிடம் கூட தொடர்பு வைக்கிறாள். இதற்கு காரணம் அவள் “புருஷன் நாலு நாளு வூட்டுப் பக்கமே வராம கூனச்சியே கதின்னு கெடந்தான்…..யாம் புருஷன் வரமாட்டாங்குற நெனப்புல மணியாரு மவன் வூட்டுக்குள்ளயே வந்துட்டான்”( ப.148) என்று காரணம் கூறுகிறாள் கெசதாம்பாள். இதனைக் கண்ட அவள் கணவன் அவளை நீக்கி விடுகிறான். இங்கு ஊடலுக்கு இருவரும் காரணமாவதை அறியமுடிகிறது. இப்படி ‘கற்றாழை’ புதினம் முழுவதும் ஊடல் நிமித்தமே அதிகளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கற்பு:

                களவுநெறியில் வாழ்ந்து காதல் கொண்ட காதலனும் காதலியும் பெற்றோர் கொடுக்க மணந்து வாழும் மண வாழ்க்கை கற்பென வழங்கப்படுகிறது. உடன்போக்கு வழியேயும் கற்பு வாழ்க்கை துவங்கும்.

                                “கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

               கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

               கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”9

என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. பாக்கியம் அவள் குடிகாரக் கணவன் சண்முகம் மகள்கள் பூரணம் மணிமேகலை வளர்மதி என்ற மூன்று மகள்களுடன் வாழ்கிறாள். எவ்வளவு துன்பத்திலும் குடும்ப வாழ்வில் சிறிதும் தளரவில்லை.

 

 

கூற்று:

                அகமாந்தர்க்குரிய கூற்று நிகழிடங்களாக களவியலையும் கற்பியலையும் குறிப்பிடுகிறது. திணைப்பாடல்களில் கூற்றுமுறை என்பது ஒரு கோட்பாடாகவே கருதத்தக்கது. இது நாடக கூற்று அமைப்புடையதாக அமைகிறது. ஒருவர் ஒரு கூற்றைக் கேட்க அதற்கு தம் கூற்றை வெளிப்படுத்துவதாக அமையும். இந்த கூற்றுக்களே அல்லாமல் ஒருவருடைய சைகைகள், பார்வைகள், மெய்ப்பாடுகள் இவற்றாலும் கருத்தினை பரிமாறிக் கொள்ளலாம்.

                  ‘கற்றாழை’ புதினத்தில் தலைவன், தலைவி, பரத்தை, கண்டோர், அறிவர், செவிலி, தோழி  என்று அனைவரும் கூற்று நிகழ்த்துவர். மணிமேகலை சிறுவயது முதல் கடைசி வரை தன் வாழ்க்கைக்காகப் போராடுகிறாள். தன் கணவன் தன்னை விட்டுப் பிரிந்துச் சென்ற பின்னும் அவனை அவள் வெறுக்கவில்லை. அவன் திரும்பி வந்தபோது “யாங் இந்த குளுருல திரும்பியும் இஞ்சயே படுக்குறிய. எளும்பி உள்ள வாங்க. உள்ள வந்து படுங்க”(ப.266) என்கிறாள்.

தலைவன் கூற்று – “நீ மல்லிப்பட்டணத்துக்கு வா. இந்துரா மாசமாருக்கு” (ப.268)

பரத்தை கூற்று – “ நீங்க எங்கயும் போக வேண்டாம். புள்ளய அழச்சிட்டு உள்ள வாங்க. எல்லாரும் ஒண்ணாவே இருப்பம்”(ப.288)இப்படி எல்லா கூற்றுகளும் ஒருங்கே அமைந்துள்ளதை காணமுடிகிறது.

 கேட்போர் :

                தலைவன் தலைவி ஆகிய இருவரும் கூறக்கேட்போர் பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர், பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி என்ற பதின்மர் ஆவர். இப்பதின்மரும் இடமும் காலமும் அறிந்து கூறும்போது தலைவனும் தலைவியும் கேட்போராக அமைவர். பார்ப்பார், அறிவர் ஆகிய இருவர்கூற்றையும் எல்லோரும் கேட்கப் பெறுவர்.

       இந்த உயர்திணைப் பொருட்கள் கேட்போராக அமைவது தவிர “ஞாயிறு, திங்கள், அறிவு, நாண், கடல், கானல், விலங்கு, மரம், பொழுது, புள், நெஞ்சு போன்றவை சொல்லுந போலவும் கேட்குந போலவும் சொல்லியமையப் பெறும்”10 எனக்கூறி கேட்டற் பொருண்மைக்கு மரபு வழு அமைக்கிறார் தொல்காப்பியர்.

                ‘கற்றாழை’ புதினத்தில் மணிமேகலையின் கூற்றை கேட்போராக தாய், தந்தை, தங்கை மற்றும் தொழில் செய்யும் இடத்தில் உள்ள பெண்கள் அமைந்துள்ளனர்.

பிரிவு:

                தொல்காப்பியர் தலைவனுக்குரிய பிரிவுகளாக ஓதற் பிரிவு, பகைவயிற் பிரிவு, தூதிற் பிரிவு, பொருள்வயிற் பிரிவு, பரத்தையற் பிரிவு ஆகிய ஐந்தை சுட்டுகிறார்.

                மணிமேகலையின் கணவன் செல்வராசு, அம்புஜம், இந்திரா  மற்றும் பல பெண்களுடன் தொடர்பு வைக்கிறான். இறுதியில் இந்திராவுடன் சென்று விடுகிறான். இதனால் மணிமேகலை அவனை விட்டுப் பிரிகிறான். இங்கு பரத்தையற் பிரிவு காணப்படுகிறது. மீதமுள்ள ஓதல், பகை, தூது, பொருள் வயிற் பிரிவு என்று எதுவும் இல்லை.

 

 

 

காலம் :

       இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூவகை காலங்களையும் காட்டுவதாக இப்புதினம் நகர்கிறது. ‘கற்றாழை’ புதினத்தில் மணிமேகலைக்கு மூன்று காலங்களிலும் துயரமே மிஞ்சுகிறது. இதே நிலமைதான் மகள் கலாவுக்கும் ஏற்படுகிறது. ‘கற்றாழை’யைப் போன்று துயரக்காலத்திலும் தன் வாழ்க்கைக்குப் போராடுவதை ஆசிரியர் தெளிவுறுத்துகிறார்.

களன் :

                களன் என்பது நிகழ்வுகள் நடைபெறும் இடத்தைக் குறிக்கும். இப்புதினத்தில் மணிமேகலைக்கும் சண்முகத்துக்கும் திருமணம் நடக்கவும் அதன்மூலம் அவளது வாழ்க்கை பாழாகிப் போகவும் முக்கிய இடமாக இருந்தது சாராயக்கடை. ஏனெனில் அங்குதான் இருவரின் தகப்பன்மார்களும் “இந்த சாராயத்துமேல சத்தியமா?”(ப.205)என்று சத்தியம் செய்து வாழ்க்கைத் தொலைத்து விட்டதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

                மணிமேகலை, கலா, சிவகாமி, கனியா, திலகா, சென்சிலா என்று ஆதரவற்ற பெண்களுக்கு வேலை செய்து பிழைக்க தகுந்த இடமாக ‘திருப்பூர் பனியன் கம்பெனி’ அமைந்துள்ளதைக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளும் வெவ்வேறு இடங்களைக் களனாகக் கொண்டுள்ளதை அறியலாம்.

 மெய்ப்பாடு:

                                “நகையே அழுகை இளிவரல் மருட்கை

               அச்சம் பெருமிதம் வெகுளி உவகைஎன்று

               அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப”என்று தொல்காப்பியம் கூறுகிறது.

அழுகை :

                அழுகை என்னும் மெய்ப்பாடு ஒருவர் இறந்து விட்டாலும் வெளிப்படும் என்பதற்கு “தாண்டிக்கிழவர்                 இறந்து விடுகிறார். அப்போது இவர் மனைவி “யாம் மனம்போன அய்யாவே என்ன உட்டுத்தான் போனியளே….”(ப.222) என்று சொல்லி அழுகிறாள். மணிமேகலையின் மகள் கலா காதலிக்கிறாள் என்று அறிந்ததும் மனம் பதைக்கிறாள். தன் தங்கை வளர்மதியிடம் சொல்லி அழுகிறாள். இப்படி ‘கற்றாழை’ புதினம் முழுவதிலும் மணிமேகலையின் வாழ்க்கைப்போராட்டத்தைக் குறிப்பிடுவதால் அழுகைத் தோன்ற ஏதுவாகிறது.

அச்சம்:

                 மணிமேகலைத் தன் மகளின் வாழ்க்கையை நினைத்து அச்சமடைகிறாள். வாடிக்காட்டில் தான் வாழ்க்கைப்பட்டு தன் வாழ்க்கைச் சீரழிந்ததுபோல தன் மகள் வாழ்வும் அமையக்கூடாது என்று அச்சமடைகிறாள்.

பெருமிதம் :

                 மணிமேகலையைப்பார்த்து தங்கை வளர்மதி பெருமிதம் அடைகிறாள். “கத்தாழயும் நீனும் ஒரே மாதிரிதாங்க்கா.”(ப.409) என்பதில் எவ்வளவு துன்பம் வந்தாலும் கற்றாழையைப்போல உயிரைப் புடிச்சிட்டு நிற்கிறியே அக்கா என்று அவள் பெருமிதம் அடைவதை காணலாம்.

வியப்பு:

                மணிமேகலையை குடிகாரக்கணவனுக்குக் கட்டிக்கொடுத்த குற்றவுணர்ச்சியில் இருந்தார் அவளது அப்பா. கணவன் வீட்டுக்குப் போகவேண்டாமென்று தடுக்கிறார். ஆனால் மணிமேகலையோ “ என்னய வூட்டவுட்டுக் கரையேத்தணுமுண்ணு நெனச்சிய கரையேத்திப்புட்டிய அதுக்குமேல யாங் கவலைப்படுறிய. இனிமே செத்தாலும் நான் அங்ககெடந்துதான் சாவுவன் இஞ்ச வரமாட்டன்.”(ப.125)என்று சொன்னதைப் பார்த்த செல்வராசுவின் அக்காவிற்கு வியப்பாக இருந்தது.

                மணிமேகலையின் கணவனும் நண்பர்களும் சேர்ந்து குருவி பிடித்து இறச்சியாக்கினர். இதனைப்பார்த்த மணிமேகலை கணவனைத் திட்டுகிறாள். “அடக்கடவுளே….. இவ்வளவு பெரிய உசுர போட்டுத் துள்ளத் துடிக்க தோவய பிக்கிறியளே கொஞ்சங்கொட ஈவு எறக்கமில்லியா நெஞ்சில?”(ப.231) என்று கேட்டது அவளுக்கே வியப்பாக இருந்தது.

வெகுளி:

       இந்திராவுக்குப் பணிவிடைச் செய்ய செல்வராசு மணிமேகலையை அழைக்கிறான். அவள் முடியாது என்றதால் அவன் கோபமடைகிறான். அவள் அமைதியாக வெளியே சென்றாள் . “தன் கோபத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே அடிபட்ட மிருகம்போல உறுமிக்கொண்டு கிடந்தான்” (ப.270) என்ற வரிகளில் வெகுளித் தன்மை வெளிப்படுகிறது.

                சிவகாமியின் கணவன் திருமணத்திற்கு முன்பே குடும்பக்கட்டுப்பாடுச் செய்ததை யாரிடமும் சொல்லாமல் சிவகாமியைக் கல்யாணம் பண்ணினான். குழந்தைப் பிறக்காததால் சிவகாமி மருந்து எடுத்தாள். பிறகுதான்  அவன் உண்மையைச் சொன்னான். “ கல்யாணத்துக்கு முன்னாடியே செஞ்சிக்கிட்டவன் யாண்டா என்னய பக்கத்துல ஒக்கார வச்சி தாலியக் கட்டுன?(ப.330 )என்று ஆவேசம் வந்தவளைப்போல கத்தினாள்.

 

 உவகை:

       திருப்பூரில் சிவகாமியின் வீட்டில் திலகா, சென்சிலா, மணிமேகலை, கனியா போன்றோர் தங்கியிருந்தனர். திலகா விரதம் முடிக்க விருந்து பண்ணியிருந்தாள். பிள்ளைகள் சாப்பாட்டை வாரி களைந்தனர். “இதுதான் கொட்டியெறைக்க புள்ள வேணுமுன்னு சொல்றது போலருக்கு என்றாள் கனியா. இதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள் சென்சிலா.  சென்சிலா சிரிப்பதைப் பார்த்து மற்றவர்களுக்கும் சிரிப்பு வந்து விட்டது”(ப.237) இவ்வரிகளில் உவகை வெளிப்படுவதை அறியலாம்.    

தொகுப்புரை:

       திணை என்பது நிலத்தையும் மக்களின் நடவடிக்கைகளையும் குறிக்கும். தொல்காப்பியர் திணை என்பதற்கு ஒழுக்கம் நிலம் என்று பொருள் கொள்கிறார். ‘கற்றாழை’புதினத்தில்  மருத நில மக்களின் வாழ்க்கை நிலையை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது. அவர்களின் அக வாழ்க்கை முறையிலும் களவும் கற்பும் இடம்பெறுகின்றன. மேலும் ஊடல், பிரிவு  மற்றும் கூற்றுமுறையும்  அமைந்து திணைக்கோட்பாட்டின் இலக்கண வரைமுறையோடு இப்புதினம் அமைந்துள்ளதையும் அறியமுடிகிறது. மக்கள் வெளிப்படுத்தும் மெயப்பாடுகளில் அச்சமும் அழுகையும் அதிகமாக இடம்பெறுகின்றன. பெண்கள் தாங்கள்  அனுபவிக்கும் துன்ப வாழ்விலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான  வாழ்வாகிய எதிர்காலத்தை எதிர்நோக்கும் விதமாக இப்புதினம் அமைகிறது. இப்புதினத்தில் ஐயப்பப்பணிக்கரின் கருத்துப்படி திணைமயக்கம் அமைந்துள்ளதும் அறியமுடிகிறது. பரத்தை வாழ்வின் காரணமாக குடும்பத்தில் ஊடல் அதிகமாகின்றது. இதன் காரணமாக பெண்களின் வாழ்க்கை சீரழிந்தப்போதிலும் கற்றாழைப்போன்று வறட்சியிலும் உயிர்ப்பிடித்து வாழ்கின்றனர். உரிமைக்காகப் போராடுகின்றனர். தன்னிச்சையாக சொந்தக் காலில் நிற்க பழகுகின்றனர். மொத்தத்தில் பார்க்கும்போது திணைமயக்கம் இருந்தபோதிலும் மருதத்திணையைச் சார்ந்ததாக இப்புதினம் அமைவதை அறியமுடிகிறது.

சான்றெண் விளக்கம் :

1.ஸ்ரீகுமார். எஸ்.தமிழில் திணைக்கோட்பாடு  ப. 1

2.மேலது  ப. 3

3.தொல்.பொருள்  நூ. 18

4. தாசன்.மு. தொல்காப்பியக்களஞ்சியம். பொருள்.  நூ. 5

5.மேலது  நூ. 16

6.பிரீத்தா ஆய்வேடு.

7.தொல்  நூ 4

8.மேலது  நூ 30

9.மேலது  நூ. 1080

10.வசந்தாள் த. தமிழிலக்கிய அகப்பொருள் மரபுகள் ஒரு வரலாற்றுப்பார்வை  ப. 17

 

பயன்பட்ட நூற்கள் :

  1. சு.தமிழ்ச்செல்வி            -      கற்றாழை

                                  16(142) ஜானி ஜான் கான் சாலை

                                  இராயப்பேட்டை சென்னை-14

                                  ஜனவரி 2014

 

  1. கார்த்திகேசு சிவத்தம்பி      -      பண்டைத்தமிழ்ச் சமூகம்

வரலாற்றுப்புரிதலை நோக்கி

                                  நியூ செஞ்சுரி இண்டஸ்ரியல் எஸ்டேட்

                                  அம்பத்தூர் சென்னை – 600 098

                                  ஜூன் 2010

 

  1. புலவர் மு.தாசன்            -      தொல்காப்பியக் களஞ்சியம் பொருளதிகாரம்

அபிலா பதிப்பகம்

நாஞ்சில் ஆப்செட் பிரிண்டர்ஸ்

67/1 கோர்ட் ரோடு நாகர்கோவில்

மார்ச் 2011

 

  1. முனைவர் பாக்யமேரி       -      வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

நியூ செஞ்சுரி இண்டஸ்ரியல் எஸ்டேட்

                                  அம்பத்தூர் சென்னை – 600 098

                                 

  1. பெ. மாதையன்             -      அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக்கவிதை

மரபும்

பாவை அச்சகம்

சென்னை-2009

 

  1. டாக்டர். கு. மோகனராசு     -      தொல்காப்பியமும் திருக்குறளும் ஓர்

ஒப்பாய்வு

திருக்குறள் ஆய்வு மையம்

சென்னைப் பல்கலைக்கழகம் - 1986

  1. த.வசந்தாள்                 -      தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள்

ஒரு வரலாற்றுப் பார்வை

சென்னைப் பல்கலைக்கழகம் - 1990

 

  1. டாக்டர். எஸ். ஸ்ரீகுமார்      -      தமிழில் திணைக்கோட்பாடு

பாவை அச்சகம் (பி) லிட்

16(142) ஜானி ஜான் கான் சாலை

                                  இராயப்பேட்டை சென்னை

                                  ஏப்ரல் 2012