ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சொல் இலக்கண மரபுகளும் கற்றலின் தேவையும்

முனைவர் சி.யசோதா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை உயராய்வு மையம், அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி 08 Dec 2020 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

     எழுத்து மொழி(சொல்)முதற் காரணமானது என எழுத்தை விளக்கும்போதே சொல்லின் தேவையைக் கூறித்தான் விளக்க வேண்டியுள்ளது. அந்த அளவு ஒரு மொழியில் ‘சொல்’ என்னும் பொருட்புலப்பாட்டு உறுப்பு பேரிடம் பெறுகின்றது. தமிழ் என்னும் ஒட்டுமொழியில் சொல்லானது பகுதி, விகுதி என்றவாறு உறுப்புகளை ஒட்டுவதாலேயே உருவாகின்றது. அவ்வகையில் தமிழ்மொழியின் சொல்லாக்கம் என்பது நுணுக்கமானது. அச்சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என நான்கு வகைகளாகப் பகுத்து இலக்கணநூல்கள் வரையறுக்கின்றன.

     சொல்லை இலக்கணப் பொருளாக மட்டும் கொண்டு ஆராயாமல், மனிதஇனத்தின் குறியீடாகவும், காலம், வரலாறு, பண்பாடு போன்ற சமூகவியலின் குறியீடாகவும் கொண்டு ஆராய வேண்டியதும் ஆவணப்படுத்த வேண்டியதும் அவசியமாகின்றது. மேலும் இலக்கண, பொருட்பிழையற்ற சொற்களின் மூலமும் அவற்றின் இலக்கணம் மூலமும்தான் நமது தொன்மை இலக்கியங்களைச் சரியான புரிதலோடு அணுக முடியும். இந்நோக்கங்களை முன்வைத்தே “சொல் இலக்கண மரபுகளும் கற்றலின் தேவையும்” என்னும் இவ்வாய்வுக் கட்டுரை எழுதப்படுகின்றது.

திறவுச்சொற்கள்

     தமிழ் ,எழுத்து , பெயர்ச்சொல் , உரிச்சொல், கற்றல் ,மொழி,

 

     இலக்கணம் என்பது ‘புதுப்பண்பு’ எனப் பொருள்படும். மொழியைக் கட்டமைப்பதற்காக உருவான விதிகளை, பண்புகளை இலக்கணம் என்ற சொல்லால் சான்றோர் வரையறுத்தனர். தனிமொழி இலக்கணம் முதன்முதலாகப் பாபிலோனியாவில் தோன்றியதென்பர். இலக்கண நூல் முதன்முதலில் உருவானது கிரேக்க மொழியில். அந்நூல் வெறும் 15 பக்கம் கொண்டதென்பர். ‘கீழ்நிலையிலுள்ள பேச்சுவழக்கு முதல் மேல்நிலைக் கவிதை வரை இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர் என்பார்’ பெக்கர். தொல்காப்பியத்தை Universal Grammar  என்பார் நார்த்ராஃபிரை.

     தொல்காப்பியம் உட்படத் தமிழின் மரபிலக்கண நூல்கள் எவையும் மொழி அறிமுக இலக்கணங்கள் அல்ல. மொழி தெரிந்த ஒருவன் படைப்பு நோக்கில் ஒன்றை எழுத முற்படும்போது அவனுக்கு நெறிமுறைகளைக் கற்பிப்பனவே அவை. அதாவது, தமிழ் இலக்கண நூல்கள் படிப்பாளியை உருவாக்குவன அல்ல. படைப்பாளியை நெறிப்படுத்துவன. படிப்பாளிக்கானவையல்ல்  படைப்பாளிக்கானவை. படைப்பாளியின் அகக்கருவி பொருள்(வுhநஅந) என்றால் அப்பொருளைப் படைப்பாக்க, வாசகன் மத்தியில் அப்பொருளை ஒரு வடிவத்தில் உலவவிடப் பயன்படும் புறக்கருவி சொல் ஆகும். சொல் இலக்கண மரபுகளையும் தேவைகளையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சொல்

     இவ்வுலகில் மொழி தோன்றியபோது சொல்லாகத்தான் தோன்றியிருக்கக்கூடும். தனித்த ஒலிகளாகவே மனிதன் எழுப்பித் தன் கருத்தைப் புலப்படுத்தியபோதும் அவ்வொலி ஒன்றுமேகூட ஒரு பொருளைத் தந்திருக்கும். எனவே ஓர் ஒலி(எழுத்து)கூடப் பொருளைப் புலப்படுத்தும் சொல்லாகவே தோன்றியிருக்கும். ‘ஆதியில் வார்த்தை இருந்தது; வார்த்தை தேவனோடு இருந்தது; வார்த்தையே தேவன் ஆனது’1 என்ற புதிய விவிலியத்தின் தொடக்கவரிகள்  இங்கு நினைக்கத்தக்கன. நன்னூலும், “எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம்”2 எனச் சுட்டும்.

எழுத்ததிகாரத்தின் தேவை

     சொல்லாக்க உறுப்பாகவே எழுத்து பயன்படுகிறது. “சொல்லாவது எழுத்தோடு ஒருபுடையான் ஒப்புடைத்தாய்ப் பொருள் குறித்து வருவது”3 என்பார் சேனாவரையர். அதாவது எழுத்துகள் ஓர் ஒழுங்கில் இணைந்து அல்லது தனித்து நின்று பொருள் தருவதால் சொல்லாகிறது என்கிறார் சேனாவரையர். இளம்பூரணரும் இக்கருத்தைச் சுட்டுகிறார்.4 மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து”5 என நன்னூலும் இதனை மெய்ப்பிக்கின்றது. எனவே தமிழ் இலக்கண மரபில் சொல்லை ஆக்குவதற்கான உறுப்பாகவே எழுத்து பயன்படுகிறது. அது கருதியே எழுத்தின் இயல்பைச் சுட்டும்போதும், அது சொல்லில் குறிலாக, நெடிலாக, வினா எழுத்தாக என எவ்வாறு பயன்படுகிறதோ அதுவே எழுத்தின் இயல்பு எனச் சுட்டுவர். செய்யுளின் முதல் இரு உறுப்புகளாக எழுத்தையும் மாத்திரையையும் சுட்டும் தொல்காப்பியர்,

                   “மாத்திரை வகையும் எழுத்தியல் வகையும்

                   மேற்கிளந் தனவே என்மனார் புலவர்”6

 

என்ற நூற்பாவின்வழி எழுத்ததிகாரத்தைப் பார்க்கச் சொல்வது அதனால்தான். ‘என்மனார் புலவர்’ என்பதிலிருந்து தொல்காப்பிய முன்னூலாரும் அதே கருத்தினர் என்பது பெறப்படுகின்றது. எனவே சொல்லாக்கக் கருவியாகவே எழுத்து பயன்படுகிறது. சொல் இன்றி எழுத்துக்கெனத் தனித்த தேவைகள் தமிழ்மொழியில் இல்லை எனலாம்.

சொல்லிலக்கணத் தேவை

     படைப்புருவாக்கக் கருவியாகவும் பொருட்புலப்பாட்டுக் கருவியாகவும் அமைவது சொல். ஒரு மொழியின் நிலைத்தன்மையை, அம்மொழி பேசும் மனிதனின் வாழ்வியல் தன்மையை, காலத்தொன்மையை, பண்பாட்டு, நிலவியற் தன்மைகளை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மனிதக் குழுவின் இருப்பை வெளிக்காட்டுவது அம்மொழியின் சொற்கருவூலமே ஆகும். எனவேதான் ஒவ்வொரு மொழியிலும் ‘சொல்லகராதிகள்’ பேரிடம் பெறுகின்றன. எல்லாக் காலகட்டங்களிலும் அகராதிச் சேகரப்பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டே வருவதும் சொற்கருவூலத்தைக் காக்கும் விதமாகத்தான்.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே

     தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் பெயரியலின் முதற் சூத்திரம் ‘சொல்’ என்பதன் இலக்கணத்தை நமக்கு வரையறுக்கின்றது. அதாவது, பொருள் தரும் வகையில் கூடும் எழுத்துக்கூட்டமோ அல்லது ஓர் எழுத்தோ சொல்லாகின்றது. அவ்வகையில் வெறும் எழுத்துக்கூட்டம் சொல்லாவதில்லை. பொருள் தருவதால் மட்டுமே சொல்லாகின்றது என்பது தொல்காப்பியர் கூற்று. மேலும்,

              “பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்

              சொல்லினாகும் என்மனார் புலவர்”7

 

எனச் சொல்லின் பொருட்தன்மையைத் தொல்காப்பியர் விளக்குவார். இதனையே நன்னூல்,

              “இருதிணை ஐம்பாற் பொருளையும் தன்னையும்

              மூவகை இடத்தும் வழக்கொடு செய்யுளின்

              வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே”8

 

என விளக்குகிறது. ‘சொல்லுக சொல்லிற் பயனுடைய’9 என்ற வள்ளுவக் கூற்றும் இதனையே மெய்ப்பிக்கின்றது எனலாம்.

     சான்றாக, தொல்காப்பியர் மெய்யைக் குறிக்க மெய், ஒற்று, புள்ளி என்ற மூன்று சொற்களைக் கையாள்கிறார்.

  • மெய் - தனி ஒலிப்பு அற்றது. ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’10. அதாவது ‘அகம்’ என்ற சொல்லில் ‘க’வில் உள்ள ‘க்’ என்பது தனித்த ஒலிப்பற்றதால் அது மெய்.
  • புள்ளி, ஒற்று - தனி ஒலிப்பு உடையது. ‘ம்’ என்பது தனித்து ஒலிப்பதால் அது ஒற்று, புள்ளி என வழங்கப்படுகின்றது. எனவேதான் அவர் புள்ளிமயக்கம் எனச் சுட்டுவார்.
  • அதேபோல், சொல், கிளவி என்ற இரு சொற்களைத் தொல்காப்பியர் பயன்படுத்துகிறார். அதாவது,
  • சொல் - முழுமையான தனித்த பொருளுடையது. பெயர்ச்சொல், வினைச்சொல் போன்றவை.
  • கிளவி - தனித்த பொருள் அற்றது. பொருள் எஞ்சி நிற்பது. பெயரெஞ்சுகிளவி, வினையெஞ்சுகிளவி, இடைச்சொற்கிளவி, உரிச்சொற்கிளவி போன்றவை.

     எனவே தொல்காப்பியர் எல்லாச் சொல்லையும் பொருள் குறித்தே பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகும். மேலும் “பொருட்குப் பொருள் தெரியின் அதுவரம்பின்றே”11 என்பதும் அவர் கூற்றாகும்.  சிதைவாக்கம், கட்டுடைப்புத் திறனாய்வுகளின் முன்னோடியான தெரிதாவும் ‘The Meaning of the Word is Endless defined’ எனத் தொல்காப்பியச் சொற்கோட்பாட்டை வழி மொழிகிறார். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மொழியியல் அறிஞரான பெர்டினண்ட் சசூரும் இக்கருத்தைச் சுட்டுவார்.

     அதனால்தான் சொல்லாக்கம் பற்றிப் பேசும் தொல்காப்பியக் கிளவியாக்கத்தின் 62 நூற்பாக்களில் முதற் பத்து நூற்பாக்கள் மட்டுமே சொல்லாக்கம் பற்றிப் பேசுவன. மீதமுள்ள 52 நூற்பாக்கள் ‘வழுக்காத்தலை’, அதாவது சொல்லாக்கத்தில் இலக்கண, பொருண்மை சார்ந்த குற்றங்கள் ஏற்படாமல் சொல் உருவாக்குதலைப் பற்றிப் பேசுகின்றன. எனில் சொல் உருவாக்கக் கற்பதைவிடக் குற்றமில்லாமல் சொல் உருவாக்கக் கற்பதே இலக்கணிகளின் குறிக்கோள் எனலாம்.

தொல்காப்பியமும் நன்னூலும்

 

வ.

எண்

தொல்காப்பியம்

நன்னூல்

1.

காலம் -

  1. கி.மு.5320 (கா.வெள்ளைவாரணர் கருத்து)
  2. கி.பி.5ம் நூற்றாண்டு (வையாபுரிப் பிள்ளை கருத்து)
  3. கி.மு.2, கி.பி.2ம் நூற்றாண்டு என இரு மாறுபட்ட கருத்துகள் கூறுவார் பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி.

காலம் -

  1. கி.பி.12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து கி.பி.13ம் நூற்றாண்டின் முற்பகுதிக்குள்.
  2. தொல்காப்பியம், நன்னூல் இரு நூற்களின் கால இடைவெளி 1800 ஆண்டுகள்.

2.

முதற்பதிப்பு - 1847ல் நச்சினார்க்கினியர் உரையுடன்.தொல்காப்பியம் பரவலாகப் பயிலத் தொடங்கியது கி.பி.1920க்குப் பின்.

  1. தொல்காப்பியம் தமிழ்ச் சமுதாயத்தின் அடையாளம் என்பார் கால்டுவெல்

முதற்பதிப்பு - 1835ல் விசாகப் பெருமாள் ஐயர் பதிப்பு.

  1. நன்னூலின் வாசிப்பு வெளி விரிந்தது.
  2. அதே காலகட்டத்தில் உருவான நேமிநாதம் என்ற ஈரிலக்கண நூல் பெறாத வாசிப்புவெளியை நன்னூல் பெற்றது.

3.

மூன்று அதிகாரப் பகுப்பு -

1. எழுத்து, 2. சொல், 3. பொருள்

இரண்டு அதிகாரப் பகுப்பு -

1. எழுத்து, 2. சொல்

4.

மொத்தச் சூத்திரங்கள் - 1595 என்பார் இளம்பூரணர். 1610 என்பது பிற உரையாசிரியர்கள் கருத்து.

மொத்தச் சூத்திரங்கள் - 461 என்பார் மயிலைநாதர். 462 என்பார் சங்கரநமச்சிவாயர்.

5.

சொல்லதிகார நூற்பாக்கள் - 463 என்பார் சேனாவரையர்

205 நூற்பாக்கள் சொல்லதிகாரத்தில் உண்டு.

6.

--

தொல்காப்பியக் காலத்திற்குப்பின் சமஸ்கிருதக் கலப்பு தமிழில் வந்துவிட்ட பிறகு உருவான நன்னூலில் (மொழிக்கலப்பை அடையாளங் காட்டுவதற்காகவோ, அதனை ஏற்றுக் கொள்வதற்காகவோ) ‘வடமொழியாக்கம்’ பேசப்படுவது சுட்டத்தக்கது.

 

    

சொல்லதிகாரம்

     தொல்காப்பியம் சொல்லதிகாரத்தை ஒன்பது இயல்களாகவும், நன்னூல் ஐந்து இயல்களாகவும் பகுத்துச் சொல்லிலக்கணம் பேசுகின்றன.

     தொல்காப்பியத்தின் கிளவியாக்கம்        - நன்னூலின் எழுத்ததிகாரத்தில்                                          பதவியல், சொல்லதிகாரத்தில்                                          பொதுவியல்

     வேற்றுமையியல், வே.மயங்கியல், விளிமரபு  - பெயரியல்

     பெயரியல்                          - பெயரியல்

     வினையியல்                         - வினையியல்

     இடையியல்                         - இடையியல்

     உரியியல்                           - உரியியல்

     எச்சவியல்                          - பொதுவியல்

எனத் தொல்காப்பியச் செய்திகள் நன்னூலில் இடம்பெறுவதை இரு நூல்களின் இயல்கள் கொண்டு பொருத்திக்காட்டலாம்.

சொல் வகைகள்

     சொற்களைத் தொல்காப்பியமும் நன்னூலும் மூன்று வகைகளாகச் சுட்டுகின்றன. ஆனால் தொல்காப்பியம் திணை அடிப்படையில் உயர்திணைச்சொல், அஃறிணைச்சொல், விரவுத்திணைச்சொல் எனப் பகுக்க, நன்னூல் பொருண்மை அடிப்படையில்  ஒருமொழி(மொழி), தொடர்மொழி(தமிழ்மொழி), பொதுமொழி(தாமரை) எனப் பகுக்கிறது. அதாவது சொல், சொற்றொடர் எனச் சொல்லை இரண்டு அடிப்படைகளில் வகுத்துக்கொண்டு விளக்க முயல்கிறது நன்னூல். தொல்காப்பியத்தின் விளிமரபு, எச்சவியல் ஆகிய இயல்கள் சொற்றொடர்(தொகை, தொகாநிலை) இலக்கணம் பேசுவனவாகவும் பெயரியல், வினையியல், இடையியல், உரியியல் ஆகிய இயல்கள் சொல் இலக்கணம் பேசுவனவாகவும் அமைகின்றன. அவ்வடிப்படையில் தொல்காப்பியம், நன்னூல் இரண்டும் சொல்லின் வகைகளைப் பகுப்பதில் வேறுபட்டிருப்பினும் விளக்கும் கருத்துகளால் பெரிதும் ஒற்றுமையுடனே அமைகின்றன.

பெயர்ச்சொல்

     உலகிலுள்ள பொருட்களை அடையாளப்படுத்த நாம் இடுவது ‘பெயர்’ ஆகும். ஆதாம் தான் பொருட்களுக்குப் பெயரிட்டார் எனப் பைபிளும், எகிப்துக்கடவுள் ‘தோத்’ பெயரிட்டதாக எகிப்திய மரபும் சுட்டுகின்றன. தொல்காப்பியர் பெயரை விளக்கக் கொடுத்த முக்கியத்துவத்தை வினைக்கு வழங்கவில்லை எனவே கூறலாம். பெயரை விளக்க வேற்றுமையியல், வேற்றுமைமயங்கியல், விளிமரபு, பெயரியல் என நான்கு இயல்களை வகுத்த அவர், வினையை விளக்க ‘வினையியல்’ என்ற ஓரியலை மட்டுமே வகுத்துள்ளார்.

     பெயர்ச்சொல் என்பது வெறும் பொருள் விளக்கக் குறியீடு மட்டுமன்று. அது மனிதன் சார்ந்து வாழும் சமூகத்தின், குழுவின் பண்பாடு சார்ந்த, வர்க்கம் சார்ந்த குறியீடாகவும் இருப்பதை நமக்கு இலக்கியங்கள் குறிக்கின்றன. உணவு மற்றும் பிற பொருட்கள் சமுதாயத்தில் ஏற்படுத்தும் பாதிப்பைப் பொருள்சார் பண்பாடு(Material Culture) என இனவரைவியல் ஆய்வு சுட்டுவதுபோல, சொல்சார் பண்பாடும்(Verbal Culture) ஆராயப்படவேண்டிய முக்கியமான சமூகவியல் துறை ஆகும்.

     பெயரைத் தொல்காப்பியம் உயர்திணை, அஃறிணை, விரவுப்பெயர் என மூன்றாக வகைப்படுத்திச் சுட்ட, நன்னூல் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற ஆறு வகைப்பாட்டினுள் பெயர்களைப் பகுத்து வைக்கின்றது. இவற்றுள் இடுகுறி, காரணம், திணை, பால், எண், இடம், வேற்றுமை உருபேற்பது, வேற்றுமை உருபேலாதது, ஆகுபெயர் எனப் பலவகைப் பெயர்களும் அடங்குகின்றன.

வினைச்சொல்

     பெயர் சுட்டி அடையாளப்படுத்தும் பொருளானது செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் ஆகின்றது. வினைச்சொற்கள் கால அடிப்படையில் உருவாகின்றன. வினையடிகளே காலத்தைச் சுட்டி நிற்பதாலும், பெயர் இடைநிலைகள் காலம் காட்டும் இயல்பற்றவை ஆதலாலும் வினைச்சொல்லை அமைப்பு அடிப்படையில் விளக்கும் தொல்காப்பியம் கால இடைநிலைகளைச் சுட்டுவதில்லை. பொருள் அடிப்படையில் விளக்கும் பின்வந்த இலக்கணநூல்களே கால இடைநிலைகளைச் சுட்டுகின்றன. மேலும் ஒரு வாக்கியம் தரும் பொருளை, வினைச்சொற்கள் தனித்து நின்று தரும் இயல்பின. சான்றாக, ‘வா’ என்ற ஒற்றை வினைச்சொல் மட்டுமே ‘நீ வா’ என்ற ஒரு தொடர் தரும் பொருளை முழுமையாக உணர்த்தி நிற்பதை அறியலாம்.

     வினைச்சொற்கள்  ‘வினையடிகளை’ அடிப்படையாகக் கொண்டு முற்றாக, எச்சமாக என வளர்கின்றன. இவ்வினையடிகளை வேர்ச்சொல் என்பர். வடமொழியில் ‘தாது’ என்பர். தொல்காப்பியம் இவ்வினையடிகளை வினையியலில் பேசவில்லை. எச்சவியலில் வினைத்தொகை குறித்த சூத்திரவிளக்கத்தில் சேனாவரையர் பேசுவார்.12 நச்சினார்க்கினியர் இதனைத் தொழில்முதனிலை எனச் சுட்டுவார். (செய்குளம்-செய், குடிநீர்-குடி). வினையடிகள் குறித்து ‘வீரசோழியம்’தான் முதன்முதலில் சுட்டுகிறது. அதனைச் சார்ந்தே நன்னூல் “நட வா சீ”13 என வினையடிகளைப் பட்டியலிடுகிறது.

     மொழியியலார் 3000 வினையடிகள் உண்டெனச் சுட்டுவர். குறிப்பாக ‘கிரவுல்’ என்ற மொழியியலார்  வினையடிகளை வன்மை, மென்மை, இடைமை வினையடிகள் என வகைப்படுத்தி விளக்குவார். சென்னைப்; பல்கலைக்கழகத் தமிழப் பேரகராதி 13 வினையடிகளை வினைப்பகுதி என்ற பெயரில் விளக்குகிறது. “செய், ஆள், கொல், அறி, ஆக்கு, நடு, உண், தின், கேள், கல், தீர், நட, தா - சா - காண் முதலியன திரிந்தும் பிறவாறும் வேறுபடும் வினைகள்”14 என்னும் இவற்றை வாய்பாடுகளாகக் கொண்டுதான் இன்றும் வினைச்சொற்களை நாம் அறிகிறோம்.

     மேலும் இவ்வினைச் சொற்களைக் காலம்காட்டும் இயல்பு கொண்டு தெரிநிலை, குறிப்பு என்றும் பொருண்மை கொண்டு தன், பிறவினைகள் என்றும், செய், செயப்பாட்டுவினைகள் என்றும் வகைப்படுத்துவர். வினையடியைக் கொண்டு,

          ‘வாழ்’ வினையடி - வாழ்ந்தான் -படர்க்கை முற்று

                        வாழ்ந்தேன் -தன்மை முற்று

                        வாழ்ந்தாய் -முன்னிலை முற்று

                        வாழ்ந்து -வினையெச்சம்

                        வாழ்ந்த -பெயரைச்சம்

                        வாழ்க -வியங்கோள் வினைமுற்று

                        வாழ்ந்தவன் -வினையாலணையும் பெயர்

                        வாழ்தல் -தொழிற்பெயர்

 

என வினைச்சொல்லின் பல வடிவங்களை உருவாக்கலாம்.

இடைச்சொல்

     பெயரோடும் வினையோடும் இணைந்து வந்து பொருள்தரும், தனக்கெனத் தனிப்பொருளற்ற சொல் இடைச்சொல்லாகும். இதனை,

                   “இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்

                   நடைபெற் றியலும் தமக்கியல் பிலவே”15

 

எனத் தொல்காப்பியம் விளக்கும். “மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடைவருதலின் இடைச்சொல்லாயிற்று”16 எனச் சேனாவரையர் சுட்டுவர்.

     புணர்ச்சிக்கு உதவும் சாரியைகள், வினைஉருபுகள்(இடைநிலை, விகுதி, சந்தி), வேற்றுமைஉருபுகள், அசைநிலைகள், உவமஉருபுகள், இசைநிறைகள், தத்தம் குறிப்பில் பொருள் தருவன போன்றவை இடைச்சொற்களாக வரும். இவ்விடைச்சொற்கள் சார்ந்து வரும் பெயரையும் வினையையும் கொண்டு கீழ்க்காணும் பொருள்களில் வரும் என நன்னூல் சுட்டுகிறது,

                   “தெரிநிலை தேற்றம் ஐயம்முற்று எண்சிறப்பு

                   எதிர்மறை எச்சம்வினா விழைவு ஒழியிசை

                   பிரிப்புக் கழிவுஆக்கம் இன்னன இடைப்பொருள்”17

 

     வந்தான் என்பதில் ந், த், ஆன் என்பன இடைச்சொற்களாகும். மதி போல் முகம் என்பதில் ‘போல்’ என்பது இடைச்சொல் ஆகும். எனவே பெயர், வினை தவிர அவற்றோடு இணைந்தும் தனித்தும் வரும் அனைத்தும் இடைச்சொல் ஆகும். இவ்விடைச்சொல் பெயர், வினைச்சொற்களின் பின் வந்து பொருள் உணர்த்தும் என்பது பெறப்படுகின்றது. ‘அப்புறம், சும்மா’ போன்ற சொற்கள் வருமிடத்திற்குத் தகுந்தபடி குறிப்பில் பொருள்; உணர்த்தும், தமக்கெனத் தனிப் பொருளற்ற தற்கால இடைச்சொற்கள் என்றே குறிக்கலாம்.

 

உரிச்சொல்

 

     பெயர், வினைச் சொற்களின் முன் வந்து அவற்றின் பண்பினைச் சுட்டுவது உரிச்சொல் ஆகும். இடைச்சொல் பெயர், வினைக்குப் பின் வந்து தனிப்பொருளற்று நிற்கும்; உரிச்சொல்லோ பெயர், வினைக்கு முன் வந்து தனிப்பொருள் தந்து நிற்கும். இசை, குறிப்பு, பண்பு எனும் பொருள்களில் வரும் எனச் சேனாவரையரும், நச்சினார்க்கினியரும்18 குறிப்பிடுவர். மேலும் இவ்வுரிச்சொல், “பெரும்பாலும் செய்யுளுக்கு உரியவாக வரும்”19 என்பார் சேனாவரையர். நன்னூலும், “செய்யுட்கு உரியன உரிச்சொல்”20 எனக் குறிப்பிடுகின்றது. இது தனக்கெனத் தனிப் பொருள் கொண்டது. ஆதலால் பொருட்கு உரிமைப்படுத்தப்பட்ட சொல் என்பார் தொல்காப்பிய உரைவளம் எழுதிய ஆ.சிவலிங்கனார். தொல்காப்பியர் உரிச்சொல்லை,

                   “உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை

                   இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப்

                   பெயரினும் வினையினும் மெய்தடுமாறி

                   ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும்

                   பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும்

                   பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தித்

                   தத்த மரபின் சென்றுநிலை மருங்கின்

                   எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்”21

 

என விளக்குவார்.

     உரிச்சொல் பொருள் தரும் இயல்பைக் கொண்டு ஒருபொருள் தரும் பல உரிச்சொல், பலபொருள் தரும் ஒரு உரிச்சொல், ஒருபொருள் தரும் ஒரு உரிச்சொல் என மூவகைப்படுத்துவார் தொல்காப்பியர். ஒருபொருள் தரும் ஒரு உரிச்சொல்லை நன்னூல் சுட்டுவதில்லை. உரிச்சொல்லை விளக்குவதில் நன்னூலைவிடத் தொல்காப்பியமே அதிகக் கவனம் செலுத்துகின்றது எனலாம். தொல்காப்பிய உரிச்சொல் தொகுதியைச் சிறந்த சொற்கருவூலம் எனக் குறிப்பது பொருந்தும். சான்றாக,

                   “வம்பு நிலையின்மை”22

                   “புலம்பே தனிமை”23

                   “விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்”24

போன்ற உரிச்சொற்களும் அவற்றின் பொருளும் அகராதிச் சேகரம் போல உரியியலின் நூற்பாக்களில் விரிந்து கொண்டே செல்கின்றன.

முடிவுகள்

  • மொழியைக் கட்டமைக்கவும் மொழியில் உருவாகும் இலக்கியப் படைப்புகளைக் கட்டமைக்கவும் கூடிய பண்புகளை, விதிகளை ‘இலக்கணம்’ என்ற சொல் குறிக்கின்றது.
  • உலகில் மொழி தோன்றியபோது (பொருள்தரும்)சொல்லாகவே தோன்றியிருக்க முடியும்.
  • எழுத்து என்பது சொல்லாக்க உறுப்பு ஆகும்.
  • படைப்புருவாக்கக் கருவியாகவும் பொருட் புலப்பாட்டுக் கருவியாகவும் அமைவது சொல்.
  • மொழியின் நிலைத்தன்மையை, மொழிபேசும் மனிதனின் வாழ்வியல் தன்மையை, காலத் தொன்மையை, பண்பாட்டு, நிலவியற் தன்மைகளை, மனிதக் குழுவின் இருப்பை வெளிக்காட்டுவது ஒரு மொழியின் சொற்கருவூலமே எனலாம்.
  • எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. எனவேதான் தொல்காப்பியத்தைப் ‘பொருண்மையியல்(Semantic-கருத்தாடல்) நூல்’ என்று பாலசுப்பிரமணியன் குறிப்பிடுவார்.
  • சொல்(Morph), சொற்றொடர்(Syntax) என்ற இருநிலைகளில் இலக்கணிகள் சொல்லிலக்கணம் பேசுவர்.
  • பெயர் என்பது பொருளடையாளக் குறியீடாக மட்டுமின்றி, மனித சமூகத்தின் பண்பாடு, வர்க்கம், இனம் சார் குறியீடாகவும் அமைவது. சமூகவியலில்  சொல்சார் பண்பாடு(Verbal Culture) என்பதும் கவனம் செலுத்தப்பட வேண்டிய புதுத்துறையாக வளர வாய்ப்புண்டு.
  • வினைச்சொல்லில் ‘வினையடிகள்’ பெறுமிடமும் அதன் பல்வேறு வடிவாக்கமும் நுணுக்கமானவை.
  • உரிச்சொல்லுக்குத் தொல்காப்பியமே பேரிடம் தருகின்றது. தொல்காப்பிய உரிச்சொல் தொருதி சிறந்த சொற்கருவூலம் எனலாம். அகராதிக் கட்டமைப்பிற்கு முன்னோடியாக இவ்வுரிச்சொல் தொகுதி அமைந்திருக்கக் கூடும் என எண்ணலாம்.
  • தமிழ் மரபிலக்கண நூல்கள் அறிமுக அளவில் படிப்பாளியை உருவாக்குவன அல்ல் மொழி கற்றுப் பின் படைப்பாளியாக முயலும் ஒருவனை நெறிப்படுத்துவன. அவ்வகையில் இலக்கணநூல்கள் படிப்பவர்களுக்கானவை அல்ல் படைப்பவர்களுக்கானவை.
  • எழுத்து வடிவங்கள் காலந்தோறும் மாறிக்கொண்டே வருவன. ஆனால் சொற்கள் தொன்மையானவையாக இருப்பினும், புதியன உருவாயினும் அச்சொல்லும் அவை தரும் பொருளும் எக்காலத்திலும் நிலைத்தன்மை உடையன. சொற்களை அவை தரும் பயன்பாட்டுப் பொருளுடன் பாதுகாக்கத் தவறினால் மொழியின் சொற்கருவூலம் பலமிழக்கும். அதன் செம்மைத்தன்மை மாறும். தொன்மை இலக்கியங்களை, அவற்றிலுள்ள பழஞ்சொற்களைப் புரிதலில் இடர்பட நேரும். மெல்லத் தொன்மை வாழ்வியலும் இலக்கியக் கருவூலமும் புரிதலற்றுக் காணாமல் போகும்.
  • எனவே, சொல்லின் மரபிலக்கணமும், மாற்றமும் காலந்தோறும் கற்றுக் கொண்டே இருப்பது அவசியமாகின்றது.

அடிக்குறிப்புகள்

1. பரிசுத்த வேதாகமம், பக்.1-3

2. சங்கரநமச்சிவாயர்(உ.ஆ.), நன்னூல்(எழுத்ததிகாரம் - பதவியல்), நூ.எ.128

3. சேனாவரையர்(உ.ஆ.), தொல்காப்பியம்- சொல்;லதிகாரம்(கிளவியாக்கம்), ப.1

4. மேலது.

5. சங்கரநமச்சிவாயர்(உ.ஆ.), நன்னூல்(எழுத்ததிகாரம் - எழுத்தியல்), நூ.எ.58

6. இளம்பூரணர்(உ.ஆ.), தொல்காப்பியம்- பொருளதிகாரம்(செய்யுளியல்), நூ.எ.311

7. சேனாவரையர்(உ.ஆ.), தொல்காப்பியம்- சொல்;லதிகாரம்(பெயரியல்), நூ.எ.156

8. சங்கரநமச்சிவாயர்(உ.ஆ.), நன்னூல்(சொல்லதிகாரம் - பெயரியல்), நூ.எ.259

9. திருக்குறள், கு.எ.200

10. இளம்பூரணர்(உ.ஆ.), தொல்காப்பியம்- எழுத்ததிகாரம்(மொழிமரபு), நூ.எ.46

11. சேனாவரையர்(உ.ஆ.), தொல்காப்பியம்- சொல்;லதிகாரம்(உரியியல்), நூ.எ.391

12. சேனாவரையர்(உ.ஆ.), தொல்காப்பியம்- சொல்;லதிகாரம்(எச்சவியல்), ப.234

13. சங்கரநமச்சிவாயர்(உ.ஆ.), நன்னூல்(எழுத்ததிகாரம் - பதவியல்), நூ.எ.137

14. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, முக்காலங்களிலும் வினைகள் வேறுபட்டு வழங்கும் முறையைக் காட்டும் வாய்ப்பாடு - Tamil Lexicon - tamilvu.org

15. சேனாவரையர்(உ.ஆ.), தொல்காப்பியம்- சொல்;லதிகாரம்(இடையியல்), நூ.எ.249

16. மேலது, ப.177

17. சங்கரநமச்சிவாயர்(உ.ஆ.), நன்னூல்(சொல்லதிகாரம் - இடையியல்), நூ.எ.421

18. சேனாவரையர்(உ.ஆ.), தொல்காப்பியம்- சொல்;லதிகாரம்(உரியியல்), ப.200

19. மேலது.

20. சங்கரநமச்சிவாயர்(உ.ஆ.), நன்னூல்(சொல்லதிகாரம் - உரியியல்), நூ.எ.442

21. சேனாவரையர்(உ.ஆ.), தொல்காப்பியம்- சொல்;லதிகாரம்(உரியியல்), நூ.எ.297

22. மேலது, நூஎ.327

23. மேலது, நூஎ.331

24. மேலது, நூஎ.353.

கருவிநூற் பட்டியல்

1.இளம்பூரணர்(உ.ஆ.), தொல்காப்பியம், எழுத்ததிகாரம், கழக வெளியீடு, ஒன்பதாம்                    பதிப்பு ஆகஸ்டு 1996.

2.இளம்பூரணர்(உ.ஆ.), தொல்காப்பியம், பொருளதிகாரம் - தொகுதி 3, கழக     வெளியீடு, முப்பதாம் பதிப்பு 2017.

3.சங்கரநமச்சிவாயர்(உ.ஆ.), நன்னூல், டாக்டர் உ.ஆவ.சாமிநாதையர் நூல்நிலையம்,      சென்னை, ஐந்தாம் பதிப்பு 1991.

4.சேனாவரையர்(உ.ஆ.), தொல்காப்பியம், சொல்லதிகாரம், கழக வெளியீடு, பதினான்காம் பதிப்பு செப்டம்பர் 1997.

5.பரிசுத்த வேதாகமம், இந்திய வேதாகமச் சங்கம், பெங்களுர்.

6. www.tamilvu.org. - Tamil Lexicon.