ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கலித்தொகையில் கற்புக்கால மெய்ப்பாடுகள் ஆய்வுச்சுருக்கம்

வ.மீனாட்சி உதவிப் பேராசிரியர், நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி கோவிலூர் காரைக்குடி 08 Dec 2020 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

அகவுணர்வுகளை ஆராய்ந்து அறியும் முன்னே அவர்களின் உடலில் தோன்றும் வெளிப்பாடுகளின் வாயிலாக எண்ணவொட்டத்தினை நமக்கு அறிவுறுத்துவது மெய்ப்பாடுகளாகும். உள்ளத்தே தோன்றும் எண்ணங்களை உடலின் அசைவு, அசைவற்ற தன்மை, உடற்குறிப்புகளாலும் மற்றவர்களைச் சிந்திக்கவும் ஆராயவும் இடம் தராமல் மெய்ப்பாட்டின் வாயிலாகத் தனது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.  தலைவனும் தலைவியும் நடத்தும் இல்லற வாழ்க்கையினைச் சங்கப் பாடல்கள் பல சுட்டுகின்றன. இல்லறத்தை நல்லறமாக நடத்தத் தலைப்படுபவள் தலைவி. அன்பும், அருளும் அவளிடம் பெருகின. நற்பண்புகள் மற்றும் நன்னெறிகளின் வழியில் சங்க காலத் தலைவி வாழ முற்பட்டாள். அன்பும் இனிமையும் நிறைந்த இன்சொற்களால் தலைவன் உள்ளத்தைப் பிணித்துக் கொள்கிறாள். அவனுடன் ஒன்றுபட்டு வாழத் தலைப்படுகிறாள். இத்தகு சிறப்புடைய கலித்தொகை பாடல்களை தொல்காப்பியரின் கற்புக்கால மெய்ப்பாடுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்க்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் அகவாழ்க்கையைக் களவு, கற்பு எனப் பிரித்தொழுகும் மரபு அகத்திணையின் அடிப்படைக் கூறாகும். களவு ஒழுக்கம் கற்பு வாழ்க்கையாக மலர வேண்டும் என்பது தமிழர்களின் அகத்திணை நெறியாகும். கற்பு என்பது தலைவியைக் கொடுத்தற்குரியோர் கொடுப்ப, வதுவை என்னும் முறையால் தலைவன் ஏற்றுக் கொள்வதாகும். இங்ஙனம் தலைமக்கள் இணைந்து வாழும் இல்லற வாழ்வியலில் வெளிப்படும் உணர்வு வெளிப்பாடு கற்புக்கால மெய்ப்பாடாகக் கொள்ளப்பெறுகிறது. கலித்தொகையில் காணலாகும் கற்புக்குரிய மெய்ப்பாடுகள் குறித்து விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

     உள்ளப் புணர்ச்சியால் உரிமை பு+ண்டு ஒழுகிய தலைவனும் தலைவியும் உலகத்தோர் போற்றும் கற்பு வாழ்வைத் தொடங்குவதற்கு உரிமை நல்கும் முறை தான் வதுவை (திருமணம்) என்னும் செயலாகும். தலைவனும் தலைவியும் நடத்தும் இல்லற வாழ்க்கையினைச் சங்கப் பாடல்கள் பல சுட்டுகின்றன. இல்லறத்தை நல்லறமாக நடத்தத் தலைப்படுபவள் தலைவி. அன்பும், அருளும் அவளிடம் பெருகின. நற்பண்புகள் மற்றும் நன்னெறிகளின் வழியில் சங்க காலத் தலைவி வாழ முற்பட்டாள். அன்பும் இனிமையும் நிறைந்த இன்சொற்களால் தலைவன் உள்ளத்தைப் பிணித்துக் கொள்கிறாள். அவனுடன் ஒன்றுபட்டு வாழத் தலைப்படுகிறாள். இத்தகு சிறப்புடைய திருமண வாழ்க்கையில் நிகழும் மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர்,

     தெய்வம் அஞ்சல், புரையறந் தெளிதல்,

    இல்லது காய்தல், உள்ளது உவத்தல்,

    புணர்ந்துழி யுண்மை, பொழுது மறுப்பாக்கம்,

    அருள்மிக உடைமை, அன்புதொக நிற்றல்,

    பிரிவாற்றாமை, மறைந்தவை உரைத்தல்,

    புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇச்

    சிறந்த பத்தும் செப்பிய பொருளே (தொல்.நூ.1218)

என்று குறிப்பிடுகின்றார்.

                        

தெய்வம் அஞ்சல்

     தெய்வம் அஞ்சல் என்பதற்கு “தெய்வத்தினை அஞ்சுதல்”1 என இளம்பு+ரணரும் “தலைமகற்குத் தொழுகுலமாகிய தெய்வமும் அவற்கு ஆசிரியராகத் தாபதரும் இன்னா ரென்பது அவனானுணர்த்தப் பட்டு உணர்ந்த தலைமகள் அத்தெய்வத்தினையஞ்சி ஒழுகுமொழுக்கம் அவள்கட்டோன்றும். அங்ஙனம் பிறந்த உள்ள நிகழ்ச்சியைத் தெய்வமஞ்சல் என்றானென்பது. மற்றுத் தனக்குத் தெய்வந்  தன் கணவனாதலான் அத்தெய்வத்தினைத் தலைமகளஞ்சுதல் எற்றுக்கெனின், அவனின் தான் வேறல்லளாக மந்திரவிதியிற் கூட்டின மையின் அவனான் அஞ்சப்படுந் தெய்வந் தனக்கும் அஞ்சப்படுமென்பது அல்லதூஉந் தலைவற்கு ஏதும் வருமெனவும் அஞ்சுவளென்பது”2 எனப் பேராசிரியரும் உரை வரைந்துள்ளனர்.

     தெய்வம் அஞ்சல் என்னும் மெய்ப்பாடானது கலித்தொகையில் ஆறு3 இடங்களில் காணப்பெறுகிறது. இறைவனைச் சாட்சியாகக் கொண்டு தலைவன் தலைவியிடம் உன்னைப் பிரியேன் எனச் சூளுரைப்பான். அச்சூளுரை பொய்த்தால் தலைவனைத் தெய்வம் வருத்தும் என அஞ்சி அவனுக்கு எந்தத் தீங்கும் நேராமல் இருக்கத் தலைவி தெய்வத்தை வழிபடுவாள். இம்மெய்ப்பாடு தலைவியிடம் நிகழுகின்றது. (கலித்.75:18-19)

     தலைவன் பிரிவால் ஆற்றாமையடைந்த தலைவி பாலைநில வழியில் வரும் தலைவனை ஞாயிற்றின் ஒளி வருத்தும் என்பதால் தன் தலைவனுக்காக ஞாயிற்றிடம் வேண்டுகிறாள். இச்செயல் தெய்வம் அஞ்சல் எனும் மெய்ப்பாட்டிற்கு ஒரு கூறாகப் பொருந்துகிறது. இதனை,

     புனையிழாய்! ஈங்கு நாம் புலம்புற, பொருள் வெஃகி,

    முனை என்னார் காதலர் முன்னிய ஆரிடை,

    சினை வாடச் சிறக்கும் நின் சினம் தணிந்தீக! என,

    கனை கதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ? (கலித்.16:9-12)

என்னும் பாடலடிகள் புலப்படுத்தும்.

     பரத்தையர் இல்லம் சென்று வந்த தலைவன் வீட்டினுள் வராதே எனத் தலைவி ஊடியிருப்பேனானால் அதுவும் அதிக நேரம் நிலைப்பதில்லை. என் ஊடலை எண்ணி வரும் அவன் அதனை நீக்கப் பொய்ச் சத்தியம் பல செய்வான். அதற்கு அஞ்சியே நான் ஊடலைக் கைவிட்டுவிடுவேன். தலைவன் தன் தவறை மறைக்க இறைவன் மீதோ அல்லது பிறவற்றின் மீதோ பொய்யாகச் சத்தியம் செய்கின்றான். ஆனால் இறைவன் மீது செய்யும் சத்தியம் பொய்யாக இருப்பின் தெய்வ சக்தியால் தலைவனுக்குத் துன்பம் நேரும் எனத் தலைவி அச்சம் கொள்கிறாள். இன்றும் தெய்வத்தின் மீது செய்யப்படும் சத்தியமானது பொய்யாக இருப்பின் தண்டிக்கப்படுவது உறுதி என மக்களால் நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

புரையறந்தெளிதல்

     புரையறந்தெளிதல் என்பதற்கு “தனக்கொத்த இல்லறம் இன்னதென்று தலைமகள் மனத்துப்படுதல்”4 என்பர் பேராசிரியர். தலைவி இல்லறத்திற்கு ஏற்ற நல்ல அறங்கள் இதுவென ஆராய்ந்து அதன்வழி நடத்தலே சிறப்பாகும். தொல்காப்பியம்,

    கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்,

    மெல்லியற் பொறையும், நிறையும் வல்லிதின்

    விருந்து புறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்,

    பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்        (தொல்.நூ.1098)

என்றுரைப்பது இதனை நன்கு விளக்கும். தலைவி தனக்குரிய இல்லற நெறிகள் எவையெனத் தெரிந்து அதன்படி நடத்தலே புரையறந்தெளிதல் என்னும் மெய்ப்பாடாகும். கலித்தொகையில் புரையறந்தெளிதல் என்னும் மெய்ப்பாடானது ஆறு5 இடங்களில் பயின்று வந்துள்ளது.

     இன்முகந் திரியாது விருந்தினரைப் போற்றிப் பேணும் பண்புடையவள் தலைவி. இல்லறக் கடமைகளுள் தலையாய பண்பாடு விருந்தோம்பல் ஆகும். தனது இல்லம் நாடி வரும் உறவினரையும் பிறரையும் வரவேற்று உணவு கொடுத்து உபசரித்தல் என்பது இல்லற நெறியாகப் போற்றப்படுகிறது.

     எல்லினை வருதி எவன் குறித்தனை? எனச்

    சொல்லாதிருப் பேனாயின், ஒல்லென

    விரி உளைக்கலிமான் தேரொடு வந்த

    விருந்து எதிர் கோடலின், மறப்பல்என்றும்         (கலித்.75:14-17)

என்னும் பாடலடிகளில் தலைவனின் பரத்தைமையால் ஊடல் கொண்ட தலைவியின் ஊடல் தீர்க்கும் வாயிலாக விருந்தினரைத் தலைவன் அழைத்து வந்தான். தலைவியும் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்கிறாள். மேலும்

    விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச்சூள் அஞ்சவும்,

    அரும்பெறல் புதல்வனை முயங்கக் காணவும்

    ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவி தாங்காது,

    அவ்அவ் இடத்தான் அவை அவை காண  (கலித்.75:27-30)

என்னும் பாடலடிகளில் தலைவி தான் ஊடல் கொள்ள இருந்தும் இயலாத நிலையைத் தோழியிடம் கூறுகின்றாள். இதில் தலைவியின் இல்லறப் பண்பு அவளின் செயலால் உயர்ந்து நிற்பதைக் காணமுடிகின்றன. விருந்தினர்களின் வருகையால் கை ஓயாது கடமையில் ஈடுபட்டுள்ள என்னை நீ நினைக்கவில்லை எனத் தலைவி புதல்வனிடம் கூறுமிடத்தை,

    விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய் (கலித்.81:11)

என்னும் பாடலடி புலப்படுத்தும். இதில் தலைவியிடம் புரையறந்தெளிதல் என்னும் மெய்ப்பாடு காணப்படுகிறது. நவீனயுகத்தில் புரையறந்தெளிதல் என்பது மிகச் சிலரால் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகின்றது.

 

இல்லது காய்தல்

     இல்லது காய்தல் என்பதற்கு “தலைமகன்கண் இல்லாத குறிப்பினை யவன்மாட்டு உளதாகக் கொண்டு காய்தல்”6 என இளம்பு+ரணரும் “களவின்கட் போலாது தலைமகற்கு இல்லாததனை உண்டாக்கிக் கொண்டு காய்தல்”7 எனப் பேராசிரியரும் உரை செய்துள்ளனர்.

     தலைவனின் புறத்தொழுக்கத்தை வெறுக்கும் தலைவி, அவன்பால் இல்லாத ஒன்றை இருப்பதாகக் கொண்டு கோபப்படுவதே இம்மெய்ப்பாடாகும். “அக்காலத்தில் ஆடவர் பல மகளிரைத் திருமணம் செய்யும் உரிமையைப் பெற்றிருந்தனர். சமுதாயமும் ஏற்றுக்கொண்டது. ஆனால் பெண்டிர்களுக்குத் திருமண வரம்பு இருந்தது. பெண்கள் ஒரு முறை மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனச் சமுதாயம் கூறியது. அதனால் தலைவியின் மனத்திற்கு ஆடவன் பல மணம் படைத்தவனாகவும் மனத்தை நிலை நிறுத்த இயலாதவனாகவும் தோன்றுகின்றான். இவ்வுளவியல் பாங்கு தலைவியிடம் இல்லது காய்தல் மெய்ப்பாடு தோன்ற அடிப்படையாகின்றது”8 என வ.சுப. மாணிக்கனார் கூறுகின்றார்.

     மருதனிளநாகனார் மருதக்கலியில் ஏழு9 பாடல்களில் இல்லது காய்தல் என்னும் மெய்ப்பாட்டை ஊடற்சுவை கலந்து படைத்துள்ளார். பொய் கூறும் தலைவனிடம் இல்லாததைக் கூறி ஊடல் கொள்கிறாள் தலைவி. அதனை மறுத்து நான் செய்யாததை கூறிச் சினம் கொள்ளாதே எனத் தலைவன் கூறுவதை,

     செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்கு எவன்

    ஐயத்தால்? என்னைக் கதியாதி         (கலித்.91:7-8)

என்னும் பாடலடிகள் விளக்கும். மேலும் வெளியே சென்று வந்த தலைவனைப் புறத்தொழுக்கம் கொண்டவனாகக் கருதி இல்லது கூறிச் சினம் கொள்கிறாள் தலைவி. தலைவன் கூறிய கடவுள், குதிரை, யானை, காடை(குறும்பு+ழ்) ஆகியவற்றைத் தலைவி பலவகைப் பரத்தையர்களாக உருவகஞ் செய்து கொண்டு ஊடல் கொள்கிறாள்.

     வீட்டிற்கு காலம் தாழ்த்தி வந்த தலைவன், தலைவியிடம் நமது வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் கடவுளைக் கண்டு வந்தேன் எனக் கூறினான். ஆனால் தலைவியோ இதைக் கேட்டு நீளமான கூந்தலை உடைய கடவுளிடம் சென்று தங்கி வந்தாயோ எனக் கூறி ஊடல் கொள்கிறாள். (கலித்.93:23-26) மேலும்

    பால் பிரியா ஐங் கூந்தற் பல் மயிர்க் கொய் சுவல்

    மேல் விரித்து யாத்த சிகழிகைச் செவ் உளை,

    நீல மணிக் கடிகை வல்லிகை, யாப்பின் கீழ்

    ஞால் இயல் மென் காதின் புல்லிகைச் சாமரை,

    மத்திகைக் கண்ணுறையாகக் கவின் பெற்ற

    உத்தி ஒரு காழ், நூல் உத்தரியத் திண் பிடி,

    நேர் மணி நேர் முக்காழ்ப் பல்பல கண்டிகை,

    தார் மணி பு+ண்ட தமனிய மேகலை,

    நூபுரப் புட்டில், அடியொடு அமைத்து யாத்த

    வார் பொலம் கிண்கிணி, ஆர்ப்ப இயற்றி, நீ

    காதலித்து ஊர்ந்த நின் காமக் குதிரையை,

    ஆய் சுதை மாடத்து அணிநிலா முற்றத்துள்

    ஆதிக் கொளீஇ அசையினை ஆகுவகை       (கலித்.96:8-20)

என்னும் பாடலடிகளில் தலைவி பரத்தையைக் குதிரையாகவும் தலைவனைக் குதிரைக் காரனாகவும் உருவகித்து இல்லது மொழிந்து ஊடல் கொள்வதை அறியமுடிகின்றது. மேலும் பல இனிய சொற்கள் கொண்டு தலைவியைப் பாராட்டியவன் இன்று பிரிந்து செல்லவுள்ளான் என்பதை அறிந்தவள்,

          பலபல கட்டுரை பண்டையின் பாராட்டி,

         இனிய சொல்லி, இன்னாங்குப் பெயர்ப்பது

         இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே        (கலித்.14:7-9)

என்றுரைக்கிறாள். தலைவன் பலபல பாராட்டிப் பேசியது தன்னை விட்டுப் பிரிந்து செல்வதற்காகவே என்பதை அறிந்த தலைவி ஊடல் கொள்வதைக் காணமுடிகின்றது.

     இன்றைய சூழலிலும் ஒருவரைச் சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கும் போதும் அதீத அன்பைக் கொண்ட போதிலும் மற்றவர்கூறக் கேட்டு அவர்கள் செய்யாததைச் செய்ததாகக் கூறி அடிக்கடி ஊடல் கொள்வது என்பது இன்று அனைவருக்கும் பொதுவாக உள்ள மெய்ப்பாடாக மாறியுள்ளதைக் காணமுடிகின்றது.

உள்ளது உவத்தல்

     உள்ளது உவத்தல் என்பதற்கு “உள்ளதனை உவர்த்துக் கூறுதல். அது தலைவன் செய்கின்ற தலையளியை வெறுத்தல்”10 என இளம்பு+ரணரும் “தலைமகனாற் பெற்ற தலையளி உள்ளதே யாயினும் அதனை உண்மையென்றே தெளியாது அருவருத்து நிற்கும் உள்ள நிகழ்ச்சி”11 எனப் பேராசிரியரும் பொருள் உரைக்கின்றனர்.

     தலைவனது புறத்தொழுக்கத்தைத் தலைவி வெறுத்தல் என்பது இயல்பான ஒன்றாகும். அத்தகைய பரத்தமை ஒழுக்கத்தை வெறுக்கும் தலைவி தலைவனிடம் உள்ள வேறுசில நல்ல பண்புகளையும் வெறுத்தவள் போலக் கூறுவாள். இதுவே உள்ளது உவத்தல் என்னும் மெய்ப்பாடாகும். ஒருவரிடம் உள்ள தீய ஒழுக்கத்தை வெறுக்கும் போது அவரிடம் உள்ள நல்ல பழக்கமும் சேர்த்து வெறுக்கப்படுவது மனித இயல்பாகும்.

     மருதத்திணைப் பாடல்களில் இம்மெய்ப்பாடு காணப்படுகின்றது. இது தலைவன் தலைவி இருவருக்கும் இடையே நடைபெறும் ஊடல் போரைக் காட்டுகின்றது. தலைவனின் புறத்தொழுக்கத்தைத் திருத்தும் தலைவியின் முயற்சியே இம்மெய்ப்பாடு தோன்றக் காரணமாகின்றது. மருதக்கலியில் நாற்பது12 இடங்களில் இம்மெய்ப்பாடு இடம்பெறுகின்றது.

     தலைவன் பரத்தையர் இல்லம் சென்று வந்ததை அறிந்த தலைவி,

     அணைமென் தோள்யாம் வாட, அமர்துணைப் புணர்ந்து நீ,

    ‘மணமனையாய்என வந்த மல்லலின் மாண்பு அன்றோ -

    பொதுக் கொண்ட கவ்வையின்பு+ அணிப் பொலிந்த நின்

    வதுவைஅம் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை? (கலித்.66:9-12)

என்றுரைக்கிறாள். இது பரத்தையர் பு+சிக் கொள்ளும் நறுமணச் சாந்துடன் வைகறையில் இல்லம் வரும் தலைவனை நிந்திப்பதாக உள்ளது. மேலும் தலைவன் பரத்தையர் இல்லம் செல்லவில்லை எனப் பொய்யுரைக்கின்றான். அதனைக் கேட்ட தலைவி நீ பரத்தையர்கள் துணங்கை கூத்து ஆடும் இடத்திற்குச் சென்றதால் அவர்களின் சிலம்பு உன் ஆடையில் பட்டுக் கரைப் பகுதியானது கிழிந்துள்ளது. அதுவே நீ அங்கு சென்று வந்ததைக் காட்டிக் கொடுத்துவிட்டது என்கிறாள். (கலித்.73:14-17)

     தலைவி மட்டுமல்லாது காமக்கிழத்தியும் பரத்தையர் இல்லம் சென்று வந்த தலைவனைக் கடிந்துரைக்கின்றதை,

    பட்டுழி அறியாது, பாகனைத் தேரொடும்

    விட்டு, அவள் வரல் நோக்கி, விருந்து ஏற்றுக் கொள நின்றாய்

    நெஞ்சத்த பிறவாக, ‘நிறையிலள் இவள்என,

    வஞ்சத்தான் வந்து, ஈங்கு வலி அலைந்தீவாயோ? (கலித்.69:12-15)

என்னும் பாடலடிகள் உணர்த்தும். தலைவனின் பரத்தைமை ஒழுக்கத்தைத் தலைவியும் காமக்கிழத்தியும் வெறுத்துக் கூறுதலைக் காணமுடிகின்றது. இன்றும் ஒருவரிடம் உள்ள தீய பண்பை வெறுத்து அதனைத் திருத்த முயற்சி செய்யும் போது இம்மெய்ப்பாடானது தோன்றுகின்றது.

புணர்ந்துழி உண்மை

     புணர்ந்துழி உண்மை என்பதற்கு “புணர்ந்த வழி யு+டலுள்வழி மறைத்துக் கூறாது அவ்வழி மனநிகழ்ச்சியுண்மை கூறுதல்”13 என இளம்பு+ரணரும் “முற்கூறிய இல்லது காய்தலும் உள்ளதுவர்த்தலுமாகிய விகாரமின்றிப் புணர்ச்சிக் காலத்துச் செய்வன சென்ற உள்ள நிகழ்ச்சி”14 எனப் பேராசிரியரும் கூறுகின்றனர்.

     தலைவனது புறத்தொழுக்கத்தைக் கண்ட தலைவி தலைவனுடன் ஊடல் கொண்டு இல்லது காய்தலும் உள்ளது உவத்தலும் செய்வாள். அவனது செயல்கள் அனைத்தையும் அறவே வெறுப்பவள் போன்று மாறுபடப் பேசுவாள். ஆனால் புணர்ச்சிக் காலத்து தலைவனின் மனது ஒன்றி உண்மை கூறுவாள். இதுவே புணர்ந்துழி உண்மை என்னும் மெய்ப்பாடாகும்.

     கலித்தொகையில் ஒரு பாடலில் மட்டுமே இம்மெய்ப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பாடலில் புணர்ச்சிக் காலத்தில் தலைவன் உண்மையைக் கூறுவதாக உள்ளது. புணர்ச்சிக்குப் பின்னர் உறங்கும் வேளையில் கனவு கண்ட தலைவன் தான் பொருள்வயின் பிரிந்து சென்று பொருள் ஈட்டி வரும் வரை மனையறம் காத்துத் தலைவி இருப்பாளா என்று அரற்றுவதை,

    மாசு இல் வண் சேக்கை, மணந்த புணர்ச்சியுள்,

    பாயல் கொண்டு என்தோள் கனவுவார், ‘ஆய்கோல்

    தொடி நிரை முன்கையாள் கையாறு கொள்ளாள்,

    கடிமனை காத்து, ஓம்ப வல்லுவள் கொல்லோ -

    இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும்

    நெடு மலை வெஞ்சுரம் போகி, நடு நின்று,

    செய்பொருள் முற்றும் அளவு? என்றார்       (கலித்.24:6-12)

என்னும் பாடலடிகள் சுட்டும்.

பொழுது மறுப்பாக்கம்

     பொழுது மறுப்பாக்கம் என்பதற்கு களவில் இரவுக்குறி பகற்குறி என்ற பொழுது வரம்பு உண்டு. கற்பு வாழ்வில் இத்தகைய வரம்பு இல்லை. எனவே கற்பில் நீங்காது உடனுறையுந் தலைவி மகிழ்ச்சியாக இருத்தல் இம்மெய்ப்பாட்டிற்கு உரியதாகும். கலித்தொகையில் இம்மெய்ப்பாடு இடம்பெறவில்லை.

அருள்மிக உடைமை

     அருள்மிக உடைமை என்பதற்கு “தலைமகன் மாட்டு அருள் புலப்பட நிற்கும் நிலை”15 என இளம்பு+ரணரும் “களவுக் காலத்துப் போலத் துன்பமிகுதலன்றி அருண்மிகத் தோன்றிய நெஞ்சினளாதல்”16 எனப் பேராசிரியரும் விளக்கம் தருகின்றனர்.

     இல்லற வாழ்வில் இனிதொழுகும் தலைவி கொண்ட கொழுநன் பாலும் சுற்றத்தார் பாலும் அருளுடையவளாக விளங்க வேண்டும். தலைவி அருளால் நிரம்பிய நெஞ்சினளாகத் தோன்றுவதே இம்மெய்ப்பாடாகும். கலித்தொகையில் இம்மெய்ப்பாடு இரண்டு17 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

     தலைவன் வினைவயிற் பிரிவு வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாகும் என்பதை அறிந்த தலைவி அருள்மிக்க நெஞ்சினளாக இருக்கின்றாள். தலைவனது பிரிவு, துன்பத்தைத் தந்தாலும் தலைவன் செல்லும் பாலை நில வழியானது கடுமையுடையது என்பதை அறிந்து அறக்கடவுளையும் ஞாயிற்றையும் தலைவி வணங்குதல் இதற்குச் சான்றாகும்.

     புறத்தொழுக்கம் சென்று வந்த தலைவனைத் தலைவி ஏற்றுக் கொள்வதினை,

     புல்லி அவன்சிறிது அளித்தக்கால், என்

    அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல்       (கலித்.122:18-19)

என்னும் பாடலடிகள் விளக்கும். மீண்டு வந்த தலைவன் சிறிது அருள் செய்தாலும் என் நெஞ்சம் அவனிடம் தஞ்சம் அடைந்து விடுகின்றது என்கிறாள் தலைவி.

அன்புதொக நிற்றல்

     அன்புதொக நிற்றல் என்பதற்கு “அன்பு புலப்பட நிற்றல்”18 என இளம்பு+ரணரும் “களவுக் காலத்து விரிந்த அன்பெல்லாம் இல்லறத்தின்மேற் பெருகிய விருப்பினானே ஒருங்குதொக நிற்றல்”19 எனப் பேராசிரியரும் உரை செய்துள்ளனர்.

     இல்லற வாழ்க்கையில் அன்பு நிறைந்திருக்க வேண்டும். பிரிவுக்காலத்தும் தலைவி அன்பு திரியாது ஒழுகும் பண்புடையவள். அன்பின் பிணைப்பில் தான் இல்லறம் சிறக்கும் என்பதை இம்மெய்ப்பாடு காட்டுகின்றது. கலித்தொகையில் இம்மெய்ப்பாடு நான்கு20 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

பிரிந்து செல்லும் தலைவன் வினைமுற்றி மீண்டு வரும் போது அவனை அன்போடு வரவேற்கும் தலைவியைப் பாலைக்கலிப் பாடல்கள் பதிவு செய்துள்ளன. பரத்தையர் காரணமாகப் பிரிந்து சென்று திரும்பிய தலைவனிடம் ஊடல் கொள்ளும் தலைவி அவன் காட்டும் சிறிய அன்பிற்கு ஊடலைத் தீர்த்து அவனுடன் உடன்படுகின்றாள். பிரிந்து சேரும் தலைவன் தலைவியரிடையே இம்மெய்ப்பாடு தோன்றுகின்றது.

பிரிவாற்றாமை

     களவுக்காலத்தில் தலைவனின் பிரிவை ஏற்றுக் கொள்ளும் தலைவி கற்புக் காலத்தில் ஏற்றுக் கொள்ளா நிலையில் வெளிப்படுவதே பிரிவாற்றாமை என்னும் மெய்ப்பாடாகும். “களவுக் காலத்தில் பிறர் அறியாமல் ஒழுக வேண்டுதலின் பிரிவு தேவைப்பட்டது. கற்புக் காலத்தில் பிறர் அறியாது ஒழுகல் வேண்டுவதின்றாகலின், தலைவன் ஓதல் தூது முதலிய குறித்துப் பிரிதலைத் தலைவி ஆற்றாதவளாய்ப் பிரியாதிருத்தலையே வேண்டும் குறிப்பினளாதல் இது கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் ஓன்று”21 என்கிறார் பேராசிரியர்.

     தலைவன் பொருள்வயிற் பிரிவு காரணமாகச் செல்லும் போது தலைவியின் பிரிவுத் துயரைப் பெருங்கடுங்கோ அழகாகக் கூறியிருப்பர். தலைவன் பிரிய எத்தனிக்கும் போது தலைவி நடையில் ஏற்படும் தடுமாற்றத்தாலும், கண்ணீர் அரும்பலாலும், பெரு மூச்சு விடுதலாலும் அவளது ஆற்றாமையைத் தலைவனுக்கு உணர்த்த முற்படுவாள். கலித்தொகையில் ஐம்பத்து ஒன்பது22 இடங்களில் இம்மெய்ப்பாடு இடம்பெற்றுள்ளது. பாலை பாடிய பெருங்கடுங்கோவே இம்மெய்ப்பாட்டை பல பாடல்களில் பாடியுள்ளார்.

     பாலைக்கலியில் தலைவன் ஒருவன் பொருள் தேடப் பிரிந்து செல்ல எண்ணுகிறான். இதனை உணர்ந்த தலைவி வேற்றூரில் கடமையைக் கண்ணாகச் செய்து கொண்டு இருக்கும் போது இங்கிருந்து பொருள் தேட வருவோரிடம் என்னைப் பற்றி விசாரிக்காதே அவ்வாறு நீ கேட்டாயானால் உனது வேலை கெடும் படியான அவலச் செய்தியை நீ  அறிய நேரிடும். நீ இல்லையேல் நான் உயிர் வாழமாட்டேன் இறந்துபடுவேன் என்று உரைக்கின்றாள். (கலித்.19) பொருள் ஈட்டச் செல்லும் தலைவனிடம், நீ தலைவியைப் பிரியாமல் இருத்தலே சிறந்த பொருள் எனத் தலைவியின் பிரிவுத் துயரைத் தோழி நுட்பமாக வெளிப்படுத்துவதை,

    இடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு, என,

    கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ

    வடமீன் போல் தொழுதுஏத்த வயங்கிய கற்பினாள்

    தடமென்தோள் பிரியாமை பொருளாயின் அல்லதை?      (கலித்.2:19-22)

என்னும் பாடலடிகள் விளக்கும். மனைவியைப் பிரியாமல் இருத்தல் வேண்டும் என்று தலைவனுக்குத் தோழி அறிவுறுத்தும் நிலையில் இம்மெய்ப்பாடு அமைந்துள்ளது. தலைவியிடம் நகையாட விரும்பிய தலைவன் ஒருநாள் நெடுநேரம் அருகில் வராமல் இருந்தான். அதனால் தலைவன் தன்னைக் கைவிட்டு விட்டானோ எனத் தலைவி கலங்குகிறாள். இதன்மூலம் தலைவனின் சிறுநேரப் பிரிவைக்கூடத் தாங்காதவளாக (கலித்.10:8-9) தலைவி உள்ளதை அறியமுடிகின்றது.

     கற்புக் காலத்தில் தலைவனது பிரிவைத் தாங்காத தலைவியின் நிலைக்கு அவன்மீது கொண்ட அதீத காதலுணர்ச்சியே காரணம். இதுவே பிரிவின் போது துயர உணர்ச்சியாக மாறி பிரிவாற்றாமை என்னும் மெய்ப்பாடாக உருப்பெருகின்றது. இன்றைய நவீன காலத்திலும் ஓதற்காகவும், பொருளீட்டவும் மனைவியைப் பிரிந்து செல்ல வேண்டிய நிலைக்குப் பல கணவன்மார்கள் தள்ளப்படுகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் கணவனைப் பிரிந்த மனைவியிடம் பிரிவாற்றாமை என்னும் மெய்ப்பாட்டைக் காணமுடிகின்றது.

மறைந்தவை உரைத்தல்

     மறைந்தவை உரைத்தல் என்பதற்கு “களவுக் காலத்து நிகழ்ந்தனவற்றைக் கற்புக் காலத்துக் கூறுதல்”23 எனப் பேராசிரியர் கூறுகின்றார். இம்மெய்ப்பாடு நிகழும் நிலையைக் கற்பியலில் தலைவிக்குரிய கூற்றின்கண்

    களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி

    அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும் (தொல்.நூ.1092)

எனக் கூறுவர் தொல்காப்பியர். இந்நிலையில் கற்பின்கண் தோன்றும் மனக்குறிப்பைப் புலப்படுத்தலே மறைந்தவை உரைத்தல் என்னும் மெய்ப்பாடாகும். கலித்தொகையில் இம்மெய்ப்பாடு பதினொரு இடங்களில்24 பதிவு செய்யப்பட்டுள்ளது. களவில் தலைவியின் உறுப்பு நலன்களைப் பாராட்டிய தலைவன் கற்பில் பாராட்டவில்லை என்பதை,

    நறுமுல்லை நேர்முகை ஒப்ப நிரைத்த

    செறி முறை பாராட்டினாய்@ மற்று, எம்பல்லின்

    பறிமுறை பாராட்டினாயோ? - ஐய!

    நெய்இடை நீவி மணிஒளி விட்டன்ன

    ஐவகை பாராட்டினாய்@ மற்று, எம் கூந்தல்

    செய்வினை பாராட்டினாயோ? - ஐய!

    குளன் அணி தாமரைப் பாசரும்பு ஏய்க்கும்

    இளமுளை பாராட்டினாய்@ மற்று, எம் மார்பில்

    தளர்முலை பாராட்டினையோ? ஐய; (கலித்.22:9-17)

என்னும் பாடலடிகள் விளக்கும். இதில் தலைவியின் பல்லையும் கூந்தலையும் முலையையும் முறையே முல்லையரும்பு நீலமணி தாமரைமொட்டு போன்றவற்றுடன் முன்னர் ஒப்பிட்டு பாராட்டிய தலைவன் தற்போது பாராட்டவில்லை. களவுக் காலத்தில் இரந்து பெற்ற முகபாவம் வேறு பின்னர் கற்புக் காலத்தில் காட்டும் முகபாவம் வேறு எனத் தலைவி களவில் நிகழ்ந்ததைக் கற்பில் நினைத்துக் கூறுவதாக உள்ளது.

சான்றெண்விளக்கம்

  1. ஆ.சிவலிங்கனார், தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல் உரைவளம் ப.98
  2. மேலது ப.101
  3. கலித். 75:18-21, 89:13-14, 90:24-25, 91:6-8, 16:9-12, 88:20-21
  4. ஆ.சிவலிங்கனார், தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல் உரைவளம் ப.102
  5. கலித். 8:21-22, 18:10-12, 27:1-2, 75:14-17, 75:25-30, 81:11-12
  6. ஆ.சிவலிங்கனார், தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல் உரைவளம் ப.99
  7. மேலது ப.102
  8. வ.சுப.மாணிக்கனார், தமிழ்க்காதல், ப.129.
  9. கலித் 14:7-9, 81:25-28, 81:33-34, 89:10-11, 90:4, 91:6-8, 96:8-20, 93:23-26, 97:9-21, 98:13-18, 98:31-33, 98:9-12
  10. ஆ.சிவலிங்கனார், தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல் உரைவளம் ப.99
  11. மேலது ப.103
  12. கலித். 66:9-12, 66:13-16, 66:17-20, 66:23-25, 67:12-13, 67:10-11, 67:14-15, 68:7-9, 69:8-11, 69:12-15, 69:16-17, 70:9-10, 71:11-12, 71:15-16, 71:19-20, 72:9-12, 72:13-16, 72:17-20, 73:7-9, 73:11-13, 73:14-17, 77:10-11, 77:14-15, 77:18-19, 79:11-14, 79:15-18, 79:20-23, 81:29-32, 88:10-14, 90:7-10, 90:11-19, 91:1-5, 91:9-15, 93:14-16, 95:1-4, 95:8-9, 96:1-4, 98:1-6
  13. ஆ.சிவலிங்கனார், தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல் உரைவளம் ப.99
  14. மேலது ப.103.
  15. ஆ.சிவலிங்கனார், தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல் உரைவளம் ப.100
  16. மேலது ப.104
  17. கலித்.66:22-23, 95:27-29
  18. ஆ.சிவலிங்கனார், தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல் உரைவளம் ப.100
  19. மேலது ப.104
  20. கலித்.72:1-4, 80:1-9, 85:34-36, 5:1-11, 106:31-33
  21. ஆ.சிவலிங்கனார், தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல் உரைவளம் ப.104
  22. கலித்.2:8-10, 2:11-14, 2:15-18, 2:19-22, 3:6-7, 3:10-11, 3:14-15, 5:10-11, 5:12-13, 5:14-15, 5:18-19, 7:18-21, 10:8-9, 10:10-11, 10:12-15, 10:16-19, 16:1-3, 17:1-3, 17:5-8, 17:9-12, 17:13-16, 19:7-13, 23:3-5, 23:8-9, 23:10-11, 23:12-13, 24:14-17, 26:17-18, 26:13-14, 27:9-10, 27:13-14, 27:17-18, 28:12-15, 29:12-13, 29:16-17, 29:20-21, 30:5-6, 30:9-10, 30:13-14, 31:11-12, 31:15-16, 31:19-20, 32:12-13, 33:7-9, 33:17-20, 33:24-25, 34:12-13, 34:16-17, 35:13-16, 41:26-27, 118:9-10, 122:1-3, 131:19-20, 131:28-30, 132:23-24, 133:16-17, 137:1-3, 146:6-9
  23. ஆ.சிவலிங்கனார், தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல் உரைவளம் ப.104
  24. கலித். 14:1-9, 21:6-8, 22:9-11, 22:12-14, 22:15-17, 76:10-11, 76:14-15, 88:19-21

 

பார்வை நூல்கள்

  1. தமிழண்ணல்               தொல்காப்பியம் மூலமும் கருத்துரையும்

மீனாட்சி புத்தக நிலையம்,

மயு+ரா வளாகம்,

48, தானப்ப முதலி தெரு,

மதுரை 625001.

  1. தாமோதரம்பிள்ளை.சி.வை.     கலித்தொகை

முல்லை நிலையம்

9, பாரதி நகர் முதல் தெரு

தி.நகர் சென்னை-17.

  1. விசுவநாதன். (.)         கலித்தொகை (மூலமும் உரையும்)

நியு+செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை-98

  1. மாணிக்கம்..சுப.                தமிழ்க்காதல்

நியு+செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல்

எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98

  1. சிவலிங்கனார்.ஆ                 தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்

உரைவளம்,

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

டி.டி.டி.ஐ (அஞ்சல்) தரமணி,

சென்னை - 600 113

1998.