ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

முல்லைக்கலி உணர்த்தும் மெய்ப்பாடுகள்

அ. அக்ஸிலியா மேரி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அக்சிலியம் கல்லூரி, வேலூர் 08 Dec 2020 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

     இக்கட்டுரையானது முல்லைக்கலியில் ஆயர்களின் வீர விளையாட்டாகிய ஏறுதழுதல் பற்றியும், மேய்ச்சல் நிலத்தில் ஏறுகளின் தோற்றம், காளைகளோடு வீரா்கள் செய்த போர் பற்றியும்  ஆராய்ந்து கூறுகிறது. முல்லைக்கலியில் பயின்று வந்துள்ள மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை போன்ற மெய்ப்பாடுகளை சுட்டிக்காட்டுகிறது. மேலும் ஆயர் இன மக்களின் உணர்வுகளை காதலுடன், வீரத்தையும் ஒப்பிட்டு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.  சங்க காலத்தில் களவுக் காதல், சமுதாயத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டதாயினும் திருமணம் பெற்றோராலும், சுற்றத்தாலும் முடிவு செய்யப்பட்டத்தையும், ஆண்மகனின் பண்புகளில் வீரம் சிறப்பான இடம் பெற்றிருந்ததையும் இக்கட்டுரையானது கூறுகிறது.

முன்னுரை

     சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் கற்றறிந்தார் ஏத்தும் கலி என்று பாராட்டும் புகழ் தாங்கி மிளிர்வது கலித்தொகை. 150 கலிப்பாக்களைக் கொண்ட இந்நூல் குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, நெய்தல்கலி, மருதக்கலி என்று ஐந்து திணைகளுக்கும் ஐந்து புலவர்களால்  தனித்தனியே பாடப்பட்டுள்ளது. 17 பாடல்கள் கொண்ட முல்லைக்கலியினைச் சோழன் நல்லுருத்திரன் என்னும் புலவர் பாடியுள்ளார். முல்லைக்கலியில் முல்லைத்திணை ஒழுக்கமாகிய இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்பதைப் பாடுதலை விட முல்லை நிலத்து ஆயர் குடியினரின் வீர விளையாட்டாகிய ஏறுதழுவுதலையும், ஆயர் மகளிர் ஏறு தழுவி வென்ற ஆடவரைக் காதலித்து மணந்த செய்தியையும் சிறப்பித்துப் பாடுகின்றார். வீரமில்லாத ஆடவரை இப்பெண்டீர் தம் நெஞ்சில் இருத்தார் என்பதை இவர் எடுத்துக் கூறும்

     கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்

    புல்லாளே ஆயமகள் (முல்லைக்கலி 130 : (63 – 64)

என்னும் அடிகள் புலவர்  நல்லுருத்திரன்  அவர்களின்  சிந்தையைக் கவர்ந்தவையாகும்.  மேலும், முல்லை நிலத்து வாழும் ஆயர்களின் வாழ்க்கை எளிமையும், அமைதியும், இன்பமும் நிறைந்தது என்பதை,

கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாவி இல்லை  (சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை :121)

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கோவலர் வாழ்க்கைக்கு நற்சான்று தந்துள்ளார். இத்தகைய சிறப்பு  பெற்ற முல்லைக்கலியில் ஆயர்குடி மக்களின் உணர்வுகளைப்  பாடல்கள் வழி அழகாக சித்தரிக்கின்றார் புலவர். இக்கட்டுரையானது முல்லைக்கலி உணர்த்தும் மெய்ப்பாடுகள் என்ற தலைப்பில் ஆராய முற்படுகின்றது.

மெய்ப்பாடுகள்

மனதிலிருந்து புறப்படும் ஒவ்வொரு சொல்லும் உணர்ச்சிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டே வருகின்றது. அதுபோல மனத்திற்குள் செல்லும் ஒவ்வொரு சொல்லும் ஒரு குறிப்பிட்ட அளவிலான உணர்ச்சிகளைச் சுமந்துக் கொண்டு செல்கின்றன. சொல்லுக்கும் உணர்ச்சிக்கும் உண்டான இணைப்பு  மிகவும் திடமானதாகும். தொல்காப்பியர் மெய்ப்பாடுகள் பற்றி கூறும்பொழுது,

நகையே அழுகை இளிவரல் மருட்கை

         அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

 அப்பால் எட்டாம் மெய்ப்பா டென்ப  தொல். பொருள்  : 247

என்று நூற்பா வழி விளக்குகின்றார்.

மருட்கை மெய்ப்பாடு

     மருட்கை என்பது வியப்பு அல்லது மலைப்பு அல்லது திகைப்பு   என்று பொருள்படும். புதிதாக கண்டனவும், மிகவும் பொியதாய் இருப்பினும் மிகவும் சிறியதாய் இருப்பினும் ஒன்று வேறொன்றாய் திரிந்து காட்சி தருதலும் என நான்கு காரணங்கள் பற்றி வியப்பத் தோன்றும்.

          புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு

         மதிமை சாலா மருட்கை நான்கே  தொல். பொருள் :251

மேய்ச்சல் நிலத்தில் ஏறுகளின் தோற்றம்

     கொழுத்த திமிலுடன் விளங்கும் நல்ல ஏற்றினங்கள், காலாலே தரையைக் கிளறி, புழுதியை எழுப்பின. மழை பெய்தமையால் ஈர மண்ணைக் கிளறி சாடின. ஒன்றோடொன்று மாறுபட்டுச் சண்டை இட்டன. அவையெல்லாம் போர்களம் புகும் வீரா்களின் அழகை ஒத்து விளங்கின என்பதை

     நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை

     மாறு ஏற்றுச் சிலைப்பவை மண்டிப் பாய்பவையாய்

     துளங்கு இமில் நல் ஏற்றினம் பல களம்புகும்

    மள்ளர் வனப்பு ஒத்தன முல்.கலி : 106  (7- 10)

போர் செய்யும் வீரா்களுக்கு இணையாக ஏறு தழுவும் காளைகள் இருந்தன என்பதை  மாலைப்பானச்  செய்தியாக அறிய முடிகிறது.

        ஏறுகள் எதிரியை விடாமல் குத்தியமையால் உடல் முழுவதும் புண்ணாகி இரத்தம் பொழியப் பெற்ற காட்சியினை மழை பெய்யும் மேகத்தைப் போன்று ஒத்திருந்தது என்பதை

     பெய்வார் குருதிய ஏறெல்லாம் பெய் காலைக்

 கொண்டல் நிறையொத் தன  முல்.கலி :106  (13- 14)

என்ற பாடல் மூலம் அறிய முடிகிறது.

தொழுவத்தில் ஏறுகளின் தோற்றம்

     ஏறுகள் திரண்டிருந்த தொழுவம் புழுதிப் படலத்தில் இடையே காணப்பட்டது. மழை பெய்யும் காலத்தே மலைக் குகையில் சிங்கமும், குதிரையும், களிறும். முதலையும் ஒருங்க கூடி இருந்தால் எப்படி இருக்குமோ அந்த அளவிற்கு ஆரவாரத்துடன் இருந்தது தொழுவம் என்பதை

பொருமுரண் முன்பின் புகல் ஊறு பல பெய்து

அாிமாவும், பாிமாவும், களிறும், கராமும்

பெருமலை விடாரகத்து ஒருங்கு உடன் குழீஇ

படுமழை ஆடும் வரையகம் போலும்

கொடிநறை சூழ்ந்த தொழூஉ  முல்.கலி :103  (17 -21)

பாடலில் வியப்பின் வழி தோன்றும் மருட்கை மெய்ப்பாட்டைப் புலவர் புலப்படுத்துகின்றார்.

காளைகளாடு வீரா்களின் போர்

     போர் செய்யாமல் தடுக்க எண்ணி வேறு சில ஏறுகளை இடையிலே புகவிட்டு அவற்றை விலக்கித் தத்தம் இனத்தோடு சேர்த்து மேய்புலத்தில் செல்லுமாறு இரண்டு கூட்டங்களாகப் பிாித்து விட்ட பொதுவர்களின்  செயல்  அனைத்தும் அழிந்த ஊழிக்காலத்திற்குப் பிறகு நிலவுலகத்தை மீண்டும் படைக்கப் பிரம்மன் விாிந்த சிந்தனையோடு முதற்கண் எங்கும் பரந்த நீர்பரப்பாகிய கடலை நிலத்தை விட்டுப் பிாித்த செயல் போல் ஒத்திருந்தது என்பதை

பிரிவு கொண்டு இடைப்போக்கி இனத்தோடு புனத்து ஏற்றி

இருதிறனா நீக்கும் பொதுவர்

ஒருகெழு மாநிலம் இயற்றுவான்

விாிதிரை நீக்குவான் வியன்குறிப்பு ஒத்தன்  முல்.கலி : 106  (16 -19)

புதுமையின் வெளிப்பாடாக புலவர் வெளிப்படுத்துகின்றார்.

     ஏறுகள் தம் அழகிய கொம்பால் தோண்டி எடுத்த பொதுவர்களின் குடர்களைப் பருந்து தூக்கிச் செல்ல அதன் வாயிலிருந்து அவை தவறி ஆலமரம், கடம்ப மரம் ஆகியவற்றின் கிளைகள் தோறும் விழுந்து அவற்றில் உறையும் தெய்வங்களுக்குச் செய்யும் அணியாக இட்டு வைத்தவைப் போல தோன்றின என்பதை

ஏறுதம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரிக்குடர்

ஞாலக் கொண்டு எழூஉம் பருந்தின் வாய்வழீஇ

ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட

மாலை போல் தூங்கும் சினை  முல்.கலி : 106 (26-29)

மேலும்  பிற பொருட்கண் தோன்றிய புதுமையை அகநானூற்றில் ,

     மந்தி நல்லவை மருள்வன நோக்கக்

     கழைவளர்  அடுக்கத் தியலி யாடுமயில் (அகம்  : 82)

மயில்கள் முன்பெல்லாம் ஆடும் நெறியானன்றிப் புதுமையாக ஆடின. அவற்றை மந்திகள் வியந்து நோக்கின என்பதை மருட்கை நிலைக்களன்களாக அமையும் மெய்ப்பாடுகள் வழி அறியப்படுகிறது.

அச்சம் மெய்ப்பாடு

    அச்சம் என்பது பயம். அச்சத்தின் இயல்பினைத் தொல்காப்பியர்,

       அணங்கே விலங்கே கள்வர் தம் இறையெனப்

     பிணங்கல சாலா அச்சம் நான்கே

என்ற விதியால் கூறுவர்.

     அணங்கு என்பது வருந்துந் தெய்வம் பேய், பூதம், பாம்பு போன்றவற்றைக் குறிக்கும். விலங்கு என்பது உயிருக்கு நெருக்கடி தரும் விலங்கு அல்லது பூச்சி  போன்றவை. கள்வர் என்பது தீயத் தொழில் புரிவோர்கள். தம் இறைவர் எனப்படுவோர் தந்தையர், ஆசிரியர், ஆட்சியாளர் போன்றவர்கள்  ஆவார்கள் .

     முல்லைக்கலியில் பெண் எருமையின் கொம்பை வீட்டினுள் நட்டு வைத்து அதனைத் தெய்வமாகப் பாவித்து வழிபட்டமையை,

     எருமைப் பெடையோடு எமர் ஈங்கு அயரும்

     பெரு மணம் எல்லாம் தனித்தே ஒழிய முல்.கலி : 114 ( 13 -14)

மேற்கண்ட பாடலில்  அச்சம் தரும் விலங்கினைத் தெய்வமாக வழிப்பட்டதை அறிய முடிகிறது.

பெருமிதம்

    கல்வி தறுகண் ணிசைமை கொடையெனச்

     சொல்லப்பட்ட பெருமித நான்கே  (தொல். பொருள்  : 253)

     கல்வி என்பது நுட்பங்களைக் கற்றுத் தோ்ந்தது. தறுக்கண் என்பது அஞ்சாமை. இசைமை என்பது புகழ். கொடை என்பது மற்றவருக்கு பொருட்களைக் கொடுத்தல்.

     தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் விளையாட்டுகளுள் ஒன்று ஏறுதழுவுதல். ஏறு என்பது, காளை மாட்டைக் குறிக்கும். ஏறுதழுதல் என்பது காளையைத் தழுவி அதன் வீரத்தை அடக்குவதாகும். இன்று வீர விளையாட்டு என்று சொல்லப்படுகின்ற ஜல்லிக்கட்டு, மஞ்சள்விரட்டு ஆகிய விளையாட்டுகளுக்கு அடிகோலியதும் ஏறுதழுவுதல் என்று கூறுவது பெருமிதத்தை வெளிக்காட்டுகிறது.

     கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன்

     ஆடி நின்று அக்குடர் வாங்குவான் பீடு காண்

     செந்நூற் கழி ஒருவன் கைப்பற்ற அச்நூலை

     முந்நூலாக் கொள்வானும் போன்ம் முல்.கலி : 103 (28 – 31)

தன் வயிற்றினின்றும் சரிந்து குடலைத் தாங்கித் தன் வயிற்றினுள் இட்டுக் கொண்டு மீண்டும் ஏறு தழுவினன் என்பது அவனது பெருவீரத்தைக் புலப்படுத்துகிறது.

உவகை மெய்ப்பாடு

     செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்

     றல்ல னீத்த வுவகை நான்கே  (தொல் . பொருள் : 255)

     உவகை அவை தோன்ற நான்கு காரணங்கள் உள்ளன. அவைகள் செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு என்பனவாகும். இதில் செல்வம் என்பது நுகர்ச்சி, புலன் என்பது கல்வி பயனாகிய அறிவுடைமை. புணர்வு என்பது காமப்புணர்ச்சி,  விளையாட்டு என்பது ஆட்டம் என்று பொருள் படும். உவகை கொள்வதன் வழியாக மனத்திற்கு ஊக்கம் கிடைக்கிறது.

 செல்வம்

     ஏறு தழுவிய வீரனை மணக்க வேண்டும், அவ்வாறு மணந்த பின் ஊரார் தன் கணவனின் வீரத்தைப் புகழ வேண்டும் என்றும், தான் மோர் விற்கச் செல்லும் போது ‘இவள் கணவன் அந்த ஏற்றை அடக்கி வென்றவன்’ என்று ஊரார் சொல்லும் சொல்லைத் தன் செவி கேட்க வேண்டும் என்றும், அத்தகைய வீரச் செல்வமே தான் விரும்புவது  என்று ஆய்ச்சி  கூறுகிறாள்.

     கொல்லேறு கொண்டான் இவள்கேள்வன் என்று - ஊராா்

     சொல்லும் சொல் கேளா அளைமாறி யாம்வரும்

     செல்வம் எம் கேள்வன் தருமோ? எம் கேளா!  முல்.கலி  :  106 (43 -45)

இவ்வாறு வீரத்தை எடுத்துக் கூறியப் புலவர், ஆயிாிடையே காதலும்  வீரத்துடன் கலந்து வாழ்கிறது என்னும் உண்மையை விளக்குகின்றார்.

      சங்க காலத்தில் களவுக் காதல், சமுதாயத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டதாயினும் திருமணம் பெற்றோராலும், சுற்றத்தாலும் முடிவு செய்யப் பட்டது என்றும், பெண்ணின் காதலைப் பெற்றோர் அறிந்த பின்பும் ஆடவனின் பண்புநலன்களைப் பற்றி அவர்கள் நன்கு கேட்டறிந்த பின்னரே திருமணத்தை  முடிவு  செய்வர்  என்பதையும் முல்லைக்கலியில் அறியப்படுகிறது.

     மேலும் முல்லை நிலத்து மகளிர் தமக்கு வரக்கூடிய கணவன் வீரமுடையனவாக இருக்க வேண்டுமென்பதையே விரும்பினர் என்றும் அதனையே பெருஞ் செல்வமாகவும் கருதினா் என்பதையும் முல்லைக்கலி நுட்பாக வலியுறுத்துகிறது.

புணர்வு

    தலைவியைக் கண்டு அவளுடன் புணர்ந்து பெற்ற மகிழ்ச்சியினை  தலைவன் கூறுகையில்

     அளைமாறிப் பெயர் தருவாய்! – அறிதியோ- அஞ்ஞான்று

    தவள மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றாற்று அயல்

    இளமாங்காப் போழ்ந்தன்ன கண்ணியால்,  என் நெஞ்சம்

    களமாகக் கொண்டு ஆண்டாய்;  ஓர் கள்வியை அல்லையோ?  முல்.கலி : 108 ( 26 -29)

      தலைவி மோர் விற்று திரும்பி வருகின்ற பொழுது தலைவியைப் பார்த்து தலைவன்,  முல்லைப் பூக்கள் நிறைந்த  சிறு காட்டாற்றின் கரையில் மாவடுவைப் பிளந்தது போன்ற கண்ணினால் நோக்கி என் மனத்தை உனக்கு இருப்பிடமாகக் கொண்டு என்னை அடிமைப் படுத்திய கள்வியன்றோ? என்று  கூறும் பாங்கானது புணர்ச்சியின் மெய்ப்பாடாக  உணரமுடிகிறது.

     மேலும், களவுக் காலத்தில் தலைவன் கொடுத்த பூவைத் தலைவி பிறர் அறியச் சூடுதல் வழக்கம் இல்லை. மறைவாகவே சூடுவர். களவொழுக்கத்தை இதுவரை மறைத்து வந்ததை அப்பூ காட்டிக் கொடுத்து விட்டதே என்று தலைவி அஞ்சும் பாங்கினைப் புலவர்,

     முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்!

     கூந்தலுள் பெய்து முடித்தேன் மன்; தோழி!  யாய்

     வெண்ணெய் உரைஇ விரித்த  கதுப்போடே

     அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண,

     அன்னை முன் வீழ்ந்தன்று, அப் பூ (முல். கலி : 115 (4 – 9)

 மேற்கண்ட பாடலில் தலைவிக்குப்  புணர்வு வழி உவகை மெய்ப்பாடு வெளிப்பட்ட உணர்வை நம்மால்  அறிய முடிகிறது. மேலும்  தலைவியைக் கண்டு அவளுடன் புணர்ந்து பெற்ற மகிழ்ச்சியைத் தலைவன் கூறுவதை  அகநானூற்றில்,

     தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்

     வடிப்புறு நரம்பில் தீவிய மொழிந்தே ( அகம் :142)

தலைவன் தலைவி இவ்வாறு முயங்கினமையால் ‘ நன்றும், உவஇனி வாழிய நெஞ்சே!’   என்று தன் நெஞ்சத்திற்குச் சொல்லுவதைக் புணர்வு மெய்ப்பாடு வழி காண முடிகிறது.

முடிவுரை

    மனித சமூகம் நாகரிகம் பெற்று வாழ்வதற்கான சான்றுகள் முல்லைக்கலியில் வெளிப்படுத்தப்படுகின்றன. ஏறு தழுவுதல் வீரத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது, இருப்பினும் முல்லைக்கலியில் கற்பு வாழ்வின் அடித்தளமாக ஏறுதழுவலில் வெற்றி பெறுபவர்களுக்கு தன் மகளை திருமணம் செய்வித்தனர். அதோடு மட்டுமின்றி ஆநிரைகளை செல்வமாகவே ஆயர்கள் கருதினர் என்பதும் இக்கட்டுரை வழி சுட்டப்பட்டுள்ளது. மாடு என்பதை செல்வம் என்ற பொருளில் வள்ளுவரும் பயன்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

     மாடு அல்ல மற்றவையவை (குறள் : 400)

துணை நூற்பட்டியல்

  1. கலித்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.., சென்னை
  2. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம்,சென்னை.
  3. மனதின் இயல்புகள், ஆசிரியர் யோகி, தெய்வப் புலவர்,  தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம், சென்னை.
  4. தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை, பேராசிரியர் ந. சுப்புரெட்டியார், பாரத் பதிப்பகம், மாங்காடு, சென்னை -122.
  5. முல்லைத்திணை,மு. வரதராசனார், சாது அச்சுக்கூடம், இராயப்பேட்டை, சென்னை – 14
  6. அகநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.., சென்னை
  7. திருக்குறள் பரிமேலழகர் உரை