ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

குறுந்தொகைக் காதல் - அறிவியல் பார்வை

ச .கல்பனா, ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், அவனாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் கல்லூரி, கோவை 08 Dec 2020 Read Full PDF

நெறியாளர்:  முனைவர் க.கலாவதி

               உதவிப்பேராசிரியர்

               தமிழ்த்துறை

               அவனாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் கல்லூரி

               கோவை

 

 

ஆய்வு சுருக்கம்

     

       அறிவியல் பார்வையில் காதலை அணுகி மூளையில் ஏற்படுகின்ற காதல் சார்ந்த வேதியியல் மாற்றங்களையும்,  சமூகம் காதலை கையாளுகின்ற விதங்களையும்  குறுந்தொகை இலக்கியம் குறிப்பிடும் காதலின் உயர்வான குணங்களையும் மையமாகக்கொண்டு இவ்வாய்வு இயங்குகின்றது.

 

திறவுச்சொற்கள்

 

       குறுந்தொகை - காதல் - மூளை - வேதியியல் மாற்றம் - சமூகம் - சங்க காலம் - சமத்துவம்.

 

முன்னுரை

 

     அகண்ட வானமும் ஆழ் கடலும் சமவெளியும் தோன்றி மனித குலம் தோன்றிய பொழுதே இயற்கையில் காதலும் இவ்வுலகில் தோன்றிவிட்டது. இன்றைய நாள் வரையிலும் காதலின் புரிதல் மாறிக்கொண்டு இருக்கின்றதே தவிர காதல் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. அன்பு, அறம், கருணை, சமத்துவம், விருப்பு, காமம், தேவை என்ற பலதரப்பட்ட உணர்வுகளைக் கொண்ட முழுமையான நீதியின் வடிவமே காதலாகும். காதலைப் புகழ்ந்து பாடாத மொழிகளுமில்லை; கொண்டாட விரும்பாத மனிதனுமில்லை. எங்கெல்லாம் காதல் கொண்டாடப்படுகிறதோ அங்கெல்லாம் அறிவும் அமைதியும் சிறந்து விளங்கும். காதலென்பது இயற்கையின் மொழி. இயற்கையைப் புரிந்து கொள்ள காதலென்னும் பெரும்பாதையில் மனத குலம் இன்றுவரை பயணிக்கின்றது. காதலையும் இயற்கையையும் குறுந்தொகைச் செய்யுட்களில் அழகுறப் பதிவு செய்த சங்கப்புலவர்கள், சங்க காலக் காதலினை கொண்டாட்டம் நிறைந்த இயல்பு வாழ்வியலை ஆவணமாக்கியுள்ளனர். கீழடி ஆய்வில் மேலோங்கிய தமிழர் மாண்பு குறுந்தொகைக் காதலை மீட்டுருவாக்கம் செய்து நடைமுறைப்படுத்துவதென்பது பழந்தமிழரின் பொதுவுடைமை வாழ்விலை மீட்டெடுப்பதற்கு இணையான செயல் முறையாகும். அறிவியல் மற்றும் சமூகவியல் பார்வையில் குறுந்தொகைக் காதலென்னும் தலைப்பின்கீழ் சங்க கால காதல் நெறிகளும் சமகால சமூகம் சந்திக்கின்ற சிக்கல்களும் தீர்வுகளும் இவ்வாய்வுக் கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன.

 

அறிவியல் பார்வையில் காதல்

 

     பன்முகத்தன்மையுடன் உலகெலாம் பறந்து விரிந்து நிலைத்து நிற்கின்ற காதலினை ஒரு புள்ளியில் சுருக்கி விளக்கிட முடியாது. அத்தகைய விளக்கங்களெல்லாம் அறிவியல் முறையில் அமையாத வெற்றுக் கற்பனைக் கதைகளின் புனைவுகளேயாகும். காதலினை புரிந்து கொண்டு விளக்க வேண்டுமென்றால் மூளையின் இயக்கவிலையும் சமூகக் கட்டமைப்பினையும் புரிந்து கொள்வது அவசியமாகின்றது.

 

மூளையின் இயக்கவியலில் காதல்

 

     மூளையில் ஏற்படுகின்ற வேதியியல் மாற்றமே காதலாகின்றது. வேதியியல் மாற்றங்களைக் கொண்டு காதலை மூன்று நிலைகளாகப் பகுத்துணர முடியும். அட்டவணை 1.1.ல் காதலின் மூன்று நிலைகளும் அந்நிலைகளுக்கான ஹார்மோன்களும் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.

 

 

வ.எண்

காதலின் நிலைகள்

ஹார்மோன்கள்

1.

காமம்

(Lust)

டெஸ்ய்டோஸ்டிரோன்

(Testosterone)

 

ஈஸ்ட்ரோஜன்

(Estrogen)

 

2.

ஈர்ப்பு

(Attraction)

டோப்பமைன்

(Dopamine)

 

நேரோபினிஃப்ரைன்

(Norepinepherine)

 

செரோடோனின்

(Serotonin)

3.

பிணைப்பு

(Attachment)   

ஆக்ஸிடோஸின்

(Oxytocin)

 

வாஸப்ரஸின்

(Vasopressin)

                          அட்டவணை 1.1.

 

 

 

     காதலென்பது சாதி, மத, இன, வர்க்க பேதங்கள் பார்த்து செயற்கையாக ஏற்படும் நிகழ்வல்ல. மனிதத் தேவையினைப் பூர்த்தி செய்து கொள்ள மூளையில் தூண்டப்படுகின்ற இயற்கை நிகழ்வேயாகும்.

 

     காதல் உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் உயிர்களிடத்தே ஏற்படுத்த வல்லது.

 

    

      காதலில் உண்டாகின்ற காமம், மனித உடலின் அனைத்து பாகங்களுக்கும் நன்மையையும், நலத்தினையும் ஏற்படுத்தக் கூடியது. மேலும் உயிர் ஆற்றலை புதுப்பிக்கக்கூடியது.

 

     ஈர்ப்பு இருவருக்குமிடையே உறவை பலப்படுத்தி, தன்னுடையதென்றிருக்கின்ற சுயநலச்சுவர்களை அழித்து பொதுமையை பரப்பக்கூடியது.

 

     பிணைப்பானது இருவருக்குமிடையேயான காதலை சமூகத்துடன் இணைத்து நீதியிற்காக செயல்படத் தூண்டும்.

 

     காமம், ஈர்ப்பு, பிணைப்பு என்ற மூன்று இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு காதல் பல்வேறு கோணங்களில் பயணித்துக் கொண்டே இருக்கின்றது.

 

     பொதுவாக காமம் இனவிருத்தியிற்கான நிலையாகவே பலராலும் கருதப்படுகின்றது. ஆனால் காதல் இனவிருத்தியிற்கான நிலை மட்டுமல்ல. அதையும் தாண்டிய சமூக உணர்வு மிக்கது. எனவேதான் பல முற்போக்கு நாடுகள் தன் பாலின ஈர்ப்பாளர்களின் காதலை சட்டபூர்வமாக அங்கீகரித்திருக்கின்றன. காதலை புனிதப்பிம்பம் கொண்டதாக அணுகுவதை விட அறிவியல் சோதனைகளுக்குட்படுத்தி மூளையின் உளவியலை புரிந்து கொள்வதன் மூலமே காதலை முழுமையாக அறிந்திட முடியும். தனி மனித மூளை, சமூகக் கட்டமைப்பிற்கேற்றவாறே இயங்கும் என்பதனால் சமூகத்தை ஆய்வதும் அவசியமாகின்றது.

 

சமூகக் கட்டமைப்பும் காதலும்

 

     காதலைக் கொண்டாடுகின்ற சமூகம் சிறப்பான கட்டமைப்பை கொண்டிருக்கும் என்பதற்கு சான்றாக தமிழர்களின் சங்க காலம் அமைகின்றது. காதல் வாழ்வினை அறமாகக் கருதி (அகத்திணை) இலக்கண இலங்கியங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

 

சங்க காலமும் காதலும்

 

     கைக்கிளை, ஐந்தினை, பெருந்திணை என்று வகைப்படுத்தி காதலின் பொருட்டு ஏற்படுகின்ற அனைத்து வகை உணர்வுகளையும் அங்கீகரித்து சங்க கால மக்கள் கொண்டாடினர்.

 

     கைக்கிளை என்பது ஒரு தலைக் காமமென்றும், ஐந்தினை என்பது அன்புடைக்காமமென்று

 

1. குறிஞ்சி (புணர்தலும் புணர்தல் நிமித்தமும்),

2. முல்லை (இருத்தலும் இருத்தல் நிமித்தமும்),

3. மருதம் (ஊடலும் ஊடல் நிமித்தமும்),

4. நெய்தல் (இரங்கலும் இரங்கல் நிமித்தமும்),

5.பாலை (பிரித்தலும் பிரிதல் நிமித்தமும்) என ஐந்து நிலைகளில் காதலின் அடுத்தடுத்த நகர்வுகளை ஒழுகலாறாக வகைப்படுத்தி இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.

 

     பெருந்தினை என்பது பொருந்தாக் காமம் என்று இனவிருத்தியிற்கு அப்பாட்பட்ட காதலை வகைப்படுத்திகின்றது.

 

     பொதுச் சமூகம் காதலை இனவிருத்தியாக மட்டுமே இன்று வரை பார்க்கும் பட்சத்தில் சங்க காலத்திலேயே முற்போக்கான வகைமையை தமிழர்கள் வகுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

 

     காதல் வாழ்வினை களவென்றும், கற்பென்றும் பிரித்திருந்தனர். களவென்பது இருவருக்குமிடையேயான தனிப்பட்ட உறவினைக் குறிக்கும். மேலும் களவு வாழ்வு அறிவியல் வகைப்படுத்துகின்ற காமம், ஈர்ப்பு என்ற நிலைகளை உள்ளடக்கியதாகும். பிணைப்பை உள்ளடக்கிய கற்பு வாழ்வு சமூகத்துடன் நெருங்கிய பொது வாழ்வினை குறிக்கின்றது.

 

     இயற்கையுடன் பொருந்திய காமத்தையும், பெருங்காதலையும் கொண்டாடி இன்றைய நவீன அறிவியல் பகுக்கின்ற காதலை ஒத்த பெருவாழ்வினை சங்க கால மக்கள் அனுபவித்திருந்தனர் என்பதனை நமக்கு சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.

 

இன்றைய காலமும் காதலும்

 

     யாதும் ஊரே யாவரும் கேளிர்1 என்று கூடி வாழ்ந்த தமிழ் சமூகம் இன்று சாதிய சமூகமாகப் பிரிந்துள்ளது.

 

     மலரினும் மெல்லிது காமம்2 என்று காமத்தை மலருடன் ஒப்பிட்ட சமூகம் இன்று காமத்தை முள்ளுடன் ஒப்பிடும் அளவிற்கு வன்முறையில் திளைத்திருக்கின்றது.

    

     ஒருபுறம் பாலியல் கல்வியும் சுதந்திரமும் இல்லாமல் பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாலியல் வன்முறைகளுக்குள்ளாக்குகின்றனர். தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வறிக்கைகளின்படி உலகில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்திய முதலிடத்தில் உள்ளது.

 

     மறுபுறம் மாற்று சாதியினரைக் காதலித்தால் ஆதிக்கச் சாதியினர் ஆணவப் படுகொலை செய்கின்றன. எவிடென்ஸ் அமைப்பின் அறிக்கையின்படி தமிழகத்தில் கடந்த 2014ல் 239, 2015ல் 175, 2016ல் 180, 2017ல் 123, 2018ல் 130 என்ற எண்ணிக்கையில் ஆணவப் படுகொலை நடந்திருக்கின்றன.

 

     இவற்றையெல்லாம் நாம் ஆராய்ந்து பார்க்கையில் இன்றைய சமூகத்திடையே காதல் ஒரு சடங்காய் மட்டும் சுருங்கியிருக்கின்ற விதத்தினையும் காதலின் இயல்பு செயற்கையாக மாற்றமடைந்து போலித்தன்மையடைந்திருப்பதையும் உணர முடியும். இத்தகைய நிலையில் சாதிய பாகுபாடுகளற்ற சமத்துவம் நிறைந்த குறுந்தொகைக் காதலை மறுவாசிப்பு செய்து மீட்டுருவாக்கம் செய்வது அவசியமான ஒன்றாகும்.

 

குறுந்தொகை குறிப்பிடும் காதலின் இலக்கணம்

 

     காதலென்பது இயற்கை நிகழ்வாகும். வயதிற்கேற்ப விபத்தாக தீடீரென்று மூளையில் தூண்டப்படுகின்ற வேதியியல் மாற்றமாகும். இடம், பொருள், ஏவல் என்ற விதிகளுக்குட்படாமல் பெரு மழையைப் போல காதலும் ஏற்படுகின்றது. நிலம், சாதி, மதம், நாடு என பாகுபாடின்றி பெய்யும் மழையைய் போலவே காதலும் பாகுபாடற்று பரவும் தன்மை கொண்டது என்பதே காதலின் இயற்கையாகும். இயற்கைத்தன்மையையே அறிவியலும் வலியுறுத்துகின்றது.

 

 

              யாயும் ஞாயும் யாராகியரோ

            எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்

            யானும் நீயும் எவ்வழி அறிதும்

            செம்புலப் பெயல் நீர் போல

            அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

 

                                           குறுந்தொகை — 40

 

     என்னும் இச்செய்யுளில் செம்மண்ணில் பெய்கின்ற மழை இயற்கையிலேயே அம்மண்ணில் கலந்து பிரிக்கவியலா செந்நீராய்க் காட்சியளிப்பது போல காதலர் இருவரும் (தலைவனும்  தலைவியும்) தாயும் தாயும், தந்தையும் தந்தையுமென முறையே எவ்வித பந்தமற்ற நிலையிலும் தாங்களும் முன்பின் அறிமுகமில்லாத நிலையிலும் ஒருவரையொருவர் இயற்கையிலேயே சந்தித்து காதல் உள்ளமானது பிரிக்கவியலா தன்மையில் கலந்து விட்டன என்று காதலின் இலக்கணத்தை வலியுறுத்துகின்ற பாங்கில் ப videoதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்செய்யுள் நுட்பமான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றது.

 

     காதலை மழையுடன் ஒப்பிடுவதன் மூலம் இண்டு நிகழ்வும் இயற்கையானவை என்ற ஒப்புமையை சுட்டிக் காட்டுகின்றது. மேலும் மழையானது இந்த நிலப்பரப்பில்தான் பெய்ய வேண்டுமென்ற கட்டுப்பாடுகளற்று எந்நிலத்திலும் பெய்யும் பரந்துபட்ட இயல்புடையது. அதுபோலவே காதலும் எவ்வித கட்டுப்பாடுகளும் அற்ற சுதந்திரமான பந்தம் என்ற கருத்தையும் இச்செய்யுள் குறிப்பால் உணர்த்துகின்றது.

    

    

      பல்வேறு முற்போக்கு இலக்கியங்கள் மற்றும் அறிவியல் கோட்பாடுகள் சுட்டிக்காட்டுகின்ற காதலின் அடிப்படை உண்மைகளை இவ்வொற்றைக் குறுந்தொகைச் செய்யுள் வெளிப்படுத்துகின்றது.

 

சமத்துவமே காதல்

 

     சமநிலையைச் சீர்படுத்துகின்ற பணியினைச் செய்யும் புரட்சியின் வடிவமே காதலாகும். ஈர்ப்பு, பிணைப்பு, காமம் என்ற காதலின் உணர்வுகள் அனைத்தும் இயற்கையாகவே மனிதர்களுக்குள் ஏற்படக்கூடியது. மேலும் இவ்வுணர்வுகள் சமமாகவே மனிதர்களுக்குள் உண்டாகும் தன்மை கொண்டது. இவ்வுணர்வுகளில் ஒருவருக்கு சமமின்மை ஏற்படுகின்றதெனில் அதற்கு அடிப்படையில் அவருடைய மூளையிலோ அல்லது அவர் வாழ்கின்ற சமூகத்திலோ ஏதாவது குறைபாடு உண்டு என்றே அர்த்தம்.

      

       காம உணர்வினை ஆண் வெளிப்படுத்தினால் வீரமாகவும், பெண் வெளிப்படுத்தினால் கலாச்சாரச் சீர்கேடாகவும் சித்தரிக்கின்ற வகையில் புரிதலற்ற நிலையில் இன்றைய சமூகம் செயல்படுகின்றது.

 

              முட்டுவேன்கொல் தாக்கு வேன்கொல்

              ஓரென் யானுமோர் பெற்றி மேலிட்டு

              ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்

              அலமரல் அசைவெளி அலைப்பவென்

              உயவுநோ யறியாது துஞ்சம் ஊர்க்க

                                    

                                       குறுந்தொகை  — 28.

 

     இச்செய்யுளில் காதலனைப் (தலைவன்) பிரிந்த பெண்ணொருத்தி (தலைவி) தன் காம உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்ற பொழுது எவ்வித கவலையுமின்றி உறங்கும் ஊரினைக் கடிந்து கொள்ளும் செய்தி வெளிப்படுகின்றது.

     

       சங்க காலத்தில் பெண்ணின் காம உணர்வையும் இயல்பாகவே கருதியிருந்த விதத்தினையும் இக்குறுந்தொகைச் செய்யுள் உணர்த்துகின்றது. மேலும் இக்காட்சியை செய்யுளில் பதிவு செய்த ஒளவையாரும் பெண்பாற் புலவர் என்பதால் காமத்தை எழுவதிலும் சமத்துவம் நிலவியிருக்கின்றது என்பதையும் உணர முடிகின்றது. குறுந்தொகைக் கூற்றும் காதல் சம விகிதத்தில் உணரக்கூடிய மற்றும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்று என்பதனை வலியுறுத்துகின்றது.

 

குறுந்தொகை மணமுறை

                       குறுந்தொகைக் காதலென்பது பொதுவுடமைக் காதலாக இயல்பில் நிகழ்ந்திருக்கின்றது. இன்று முதலாலித்துவ சமூகத்தில் திருமணமென்பது ஒரு வியாபாரம் போலாகிவிட்டது. இன்று காதலென்பதே இயல்பில் கூடி மகிழ்வதன்றி செயற்கை ஏற்பாடுகளுடன் நடந்தேறக்கூடிய ஒன்றாக மட்டுமே இருக்கின்றது. இன்றை சமூகம்  வாழ்வதற்காகக் காதல் செய்து சம்பிரதாயத்திற்காக சடங்குகள் செய்த குறுந்தொகை காதலை  மறுத்து பெரும் பொருட்செல்வத்தைக் கொட்டி திருமணச்சடங்குகளை நிகழ்த்தி அதன் மூலம் வெற்றுப் பெருமைகளைத் தூக்கிப்பிடிக்கின்றனர். சம்பரதாயத்திற்காகவாவது காதலிப்பார்களா என்று ஆராய்ந்தால் காதலை பின்னுக்குத்தள்ளிவிட்டு சாதியமும் வர்க்கமும் மேலோங்கி நிற்கின்றன. இன்று  திருமணங்கள் சொர்க்கத்தில் நிட்சயிக்கப்படுவதாக பெருமை பேசுகிறோம். உண்மையில் வர்க்கத்தின் அடிப்படையில்தான் திருமணங்கள் நிட்சயிக்கப்படுகின்றன. காதல் இயற்கையானது என்பதே அறிவியலின் கருத்து.  ஆனால் அந்தக் காதலை போர்க்களத்தில் வைத்து சாதி,  வர்க்கமென்ற பேதங்களைக் காட்டி போர்த்தொடுக்கின்றோம். திருமணம் என்பது நாமே உருவாக்கிய உருவாக்குகின்ற செயற்கைத்தனமானது. ஆனால் திருமணத்தைe தங்கத் தட்டில் வைத்து தாங்குகின்றோம்.

        சங்க காலத் திருமணமுறையை விவரிக்கின்ற தொல்காப்பியம்

                 

                  அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

              காமக் கூட்டம் கானுங்காலை

              மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

              துறைமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே3

 

               என்று அன்பொடு புணர்கின்ற  ஜந்திணை ஒழுக்க காமக்கூட்டடத்தினரின் ( சங்கத் தமிழரின்) திருமணமுறையென்பது மறையோர் வகுத்த திருமணமுறைகள் எட்டனுள் ஒன்றான கந்தர்வ மணமுறையை ஒத்த இயல்புடையது என்கின்றார்.

                கந்தர்வ மணம் என்பது தலைவனும் தலைவியும்  இயல்பாய் சந்தித்து கொடுப்போரும் பெருவோரும் இன்றி தாமே கூடி மகிழ்வதாகும்.  காதலென்பது இயற்கையில் மூளையில் ஏற்படுகின்ற வேதியியல் மாற்றம். எனவே காதல் சார்ந்த கொண்டாட்டங்களும் இயல்பில் அமைவதே முறையான நிகழ்வாகும்.

                  ஆரல் மீனின் வரவை நாடிக் காத்திருக்கும் நாரை மட்டுமே இருக்க தலைவனும் தலைவியும் கூடி மகிழ்ந்து கந்தர்வ முறையில் மணந்த செய்தியினை கீழ்க்கண்ட குறுந்தொகைச்  செய்யுள் பதிவு செய்திருக்கின்றது.

                   

                     தினைத்தாள்அன்ன சிறுபசுங்கால

                     ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்

                     குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே

                                              குறுந்தொகை - 25

 

       சங்க காலத்திற்கு முன்னமும் பெரும்பான்மையாக சங்க காலத்திலும் திருமணமென்ற சடங்கு நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. சங்க இலக்கியங்களிலிலுமே தலைவனும் தலைவியும் இயல்பில் கூடி மகிழ்கின்ற செய்திகளே பெரும்பாலும் இடம்பெருகின்றனவே தவிர திருமணச்சடங்கு குறித்த பதிவுகள் குறைவாகவே உள்ளன. எனவே திருமணச்சடங்குகளை விட காதலையே இயல்பில் கொண்டாடி மகிழ்ந்திருப்பர் சங்க காலத்தினர் எனலாம்.

   திருமணத்தின் தோற்றத்தை குறிப்பிடும் தொல்காப்பியம்,

                    

                      பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

                      ஐயர் யாத்தனார் கரணம் என்ப4

   

         என்ற நூற்பாவில் பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர்கள் திருமண முறைய வகுத்தனர் என்று குறிப்பிடுகின்றது. பொய்யும் வழுவுமென்ற சொற்கள் வெறுமனே தலைவியும் தலைவனும் ஒருவரை ஒருவர் காதல் செய்து ஏமாற்றுவதை மட்டுமே குறிப்பிடுகின்றது என்று கடந்துவிட முடியாது.ஒரு சமூகத்தில் ஏற்படுகின்ற பொய்யையும் வழுவையும்கூட இவ்விரு சொற்கள் குறிப்பிட்டிருக்கலாம்.தமிழர்கள் ஆதியில் யாதும் ஊரே யாவரும் கேளிரென்று வாழ்ந்த பொதுவுடமைச் சமூகத்தினர். இச்சமூகத்திடையே உயர்ந்தவன் தாழ்ந்தவனென்ற பாகுபாடும் பிறப்பினடிப்படையில் உருவாக்கப்பட்ட /திணிக்கப்பட்ட சாதிய பாகுபாடுகளுமே மிகப்பெரிய பொய்யாகும். அறிவியலிற்கும் இயற்கைக்கும் மாறான கூற்றுகளாகும். இத்தகைய பாகுபாடுகொண்ட வாழ்வியலை தமிழர்கள் ஏற்றுக்கொண்ட காலம் பொய்யும் வழுவுமுடைய காலமாகும். பொய் என்பது உண்மையிற்கு மாறானாது. உண்மையென்பது இயற்கையோடினைந்தது. உண்மைக்குப் புறம்பாக உயர்ந்தவன் தாழ்ந்தவனென்று பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை பாகுபடுத்திய தமிழர்களின் மரபிற்கெதிரான நெறியே பொய்யும் வழுவுமாகும். இத்தகைய பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் திருமண முறையை ஐயர் வகுத்திருக்கலாம். பிறகு சுரண்ட நினைக்கின்ற பெரு முதலாலிகள் திருமண

மண்டபம் போன்ற ஆடம்பரங்களினால் திருமணத்தை இன்று வியாபாரமாக்கியிருக்கலாம். இடையில் ஆணாதிக்கவாதிகள் பெண்களை அடிமைப்படுத்த வசதியாக வரதட்சனை பெருதல் போன்ற சடங்குகளை உருவாக்கியிருக்கலாம். இப்படியாக திருமணம் இன்று சமூகத்தில் வளர்ந்து காதல் மறைந்திருக்கின்றது எனலாம். பொய்யும் வழுவமற்ற சங்க காலத்தில் காதல் காதலாகவே இருந்திருக்கின்றது. சம்பரதாயத்திற்காக சில சடங்குகள் நிகழ்ந்திருக்கின்றனவே  தவிர, சம்பரதாயத்திற்காவே காதல் வணிகத்தட்டில் விலைபோகவில்லை என்பதே உண்மை.

          சங்க காலத் காதல் வாழ்வினைப் போற்றியும் ஆரியர்தம் பொய்யும் வழுவும் நிறைந்த தமிழருக்கொவ்வாத மணமுறை எட்டனைச் சாடியும் முத்தமிழறிஞர் கலைஞர்,  தமிழ்  வழி தனி வழியென்று மணமுறையினை கீழ்கண்ட பாடலில் நுட்பமாகவும் விளக்கமாகவும் பதிவு செய்திருக்கின்றார்.

 

              களவொழுக்க இயல்பு எனும் நூற்பாவுக்கு தமிழ்

              உளங்கொண்ட பெரியோன் வெள்ளை வாரணார்

              உரை வகுத்துச் சொல்வதைக் காணின்

              மறையோர் தேயத்து மணமுறை எட்டு என்று

              தொல்காப்பியர் சுட்டிக்காட்டுவது ஏன் என்று புரியும்

              நிறையுடைய தமிழர் ஏற்றாரில்லை என்றும்

              வடமொழியாளர்க்கே அந்த முறையனைத்தும்

              வகையாகப் பொருந்துமென் - அவற்றுள்

              ஒன்றிரண்டே தமிழர் மணமுறைக்கு

              ஒத்துப் போனதென்றும் உரையாளர் மொழிகின்றனர்

              எட்டுவகை மன்றல் முறை என்னவென்று

              சுட்டும்போது

              அய்ம்பதை நெருங்கிடும் ஆண்மகன்

              ஆறிரண்டு பனிரெண்டு வயதாளை மணப்பதெனில்

              பிரமம் என்று பெயர் பெறுமாம்

              பிரசாபத்தியம் எனும் பெயரோ

              பிரியமுடன் மைத்துன கோத்திரத்தானுக்கு

              பெண் கொடுத்தல் என்றும்

              பெண்ணுக்கு பசுவும் எருதும் சிலையாகப்

              பொன்னாலே செய்து தருதல் ஆரியம் என்றும்

              அசிரியன் ஒருவன் வேள்ளி மூட்டச் செய்து

              அதன் முன்னே ஆரணங்கை காணிக்கையாக்கல்                                                     தெய்வீக மணம்                   

              ஆணும் பெண்ணும்  அவரவரும் தாமே எதிர்பட்டு

              அணைத்து மகிழ்ந்து ஆயிற்று எல்லாம் எனிலோ அதனைக் காந்தர்வ மென்றும்

              மற்றும் கொல்லேற்று கொம்பொடிந்து அடக்கியவனை

              கற்றலில் வித்தைப் போட்டியில் கரைகண்டு வென்றவனை

              பற்றுண்டு பொருள்மேல் எனப் பேழை கேட்டுப் பெற்றவனை

             

              அதற்கு பெயர் அசுர மணமென்பர்

              அவள் விருப்பத்திற்கு மாறாக நடத்தும் மணம் இராக்கதமென்றும்

           வயதில் மூத்தவளை தூங்குவதே வழக்கமாகக் கொண்டவளை

              பயமின்றி மதுவருந்திக் களிப்பவளை

              கட்டி வைக்கும் மண நிகழ்வுக்கு

              அட்டியின்றி பெயர் வைத்தார் பைபாசம் என்று

              இந்த எட்டுவகை மணமுறை ஏற்பாட்டை

              ஏற்காத காரணத்தினால்தான்

              மறையோர் தேயத்து மணமுறை இவையென்று கூறி

              மறைமுகமாக உணர்த்துகின்றார் காப்பியர் என்றுரைத்து

              மதிப்புமிகு பெரும்புலவர் மறுப்புரையே எழுதிவிட்டார்

              களவு என்பது கையாடல் சிறிய கொள்ளை

              கயவர் செயல் அவை என்று கருதி வெறுப்பது இயல்பு

              அவ்வியல்புக்கு மாறாக ஆணழகன் ஒருவனும்

              ஆரணங்காம் ஒருத்தியும் அருகருகே நின்றாலும்

              உடற்புணர்ச்சிக்கு அவசரம் காட்டாமல்

              உள்ளங்களின் புணர்ச்சியாலே உவகைகொண்டு

               நிறை கடவாமல் நினைந்துருகி

              மறைமுகமாய்ச் சந்தித்து மகிழ்வர் என்றும்

              ஆங்கதற்கான துணைநின்று ஆவன செய்தல்

              பாங்கன் பாங்கியர் பாசமிகு பணிகள் என்றும்

              அறம் பொருள் இன்பமொடு

              அய்ந்தொழுக்கமிணைந்த அன்பும் கலந்தும்

              அருங்காதல் பிணைப்புத் தோன்று மென்றும்

              ஆருயிர் இரண்டும் ஓருயிராய் ஆகுமென்றும்

              யாழ் நீட்டும் இசைவல்லார்

              ஆழ்கடல் முத்து போல்

              அருந்தமிழ்ச் சொல்லெடுத்து

              வாழ்கதிர்ச் செல்வனை வாழ்த்திடுவார்

              களவியல் குற்றமல்ல

              உளமென்று படுவதாலே

              தாழ்வொன்றும் இல்லையெனப்

              பாழ்மனப் பிறவிகட்கும்

                  விளக்கம் சொல்லி

                  விரித்து வைப்பார் களவியல் நிகழ்வுகளை5

 

          தொல்காப்பியர் சுட்டும் மணமுறை எட்டனையே தமிழரின் மணமுறை என்று கருதுவோரும் உளர். ஆனால் தொல்காப்பியர் மேற்கோள் நான்கில் எடுத்துக்காட்டியுள்ள நூற்பாவில்  மணமுறை எட்டனுள் கந்தர்வமுறையினை ஒத்தது தமிழர் மணமுறை என்றே சுட்டிக்காட்டியுள்ளார். கந்தர்வமுறைதான் தமிழர்தம் மணமுறையென்று தொல்காப்பியர் குறிப்பிடவில்லை என்பதனையும் கலைஞர் இப்பாடலின் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

                சங்க இலக்கியங்களுக்கு பின்னான காலங்களில் காதல் பெருமளவு கொண்டாடப்படவில்லை என்பதே உண்மையாகும். சாதியும்,  குலமும்,  செல்வமும், ஆணாதிக்க சிந்தனைகளுமே மேலோங்கி நின்று காதலைப் பின்னுக்குத் தள்ளின.

காதல்மணமென்பது இருவருக்குமுண்டான மனமாற்றம்/ எண்ண மாற்றம். இருவரின் விருப்பு வெறுப்புகள் ஒத்திருப்பதே முதன்மை.சாதி,  மதம்,  குலம், வர்க்கம் ஒத்திருக்க வேண்டுமென்பதையெல்லாம் குறுந்தொகைச்செய்யுட்களோ அறிவியலோ வலியுறுத்தவில்லை.

             வணிக நோக்கிலமைந்த திருமணமுறைகள் பல்வேறு குற்றங்களை பின்னாளில் தனக்குள் கொண்டியங்கியது என்பதற்கு சான்றே வரதட்சணை முறையாகும். வரதட்சணை முறை பெண்ணை உணர்ச்சியற்ற பண்டப்பொருளாக்கியது.

 

                  அதிகம் இல்லை பெண்ணே

              சிறிதளவு தங்கமும் வெள்ளியும்

              வசதிக்கேற்ப வாகனமும்

              குடித்தனம் நடத்த பாத்திரங்களும்

              ஆயுசுக்கும் விசுவாசமும் உழைப்பும்

              உன் பசிக்களுக்குணவும் தந்து

              நீ

              குருடாய் செவிடாய் ஊமையாய்

              முடமாய்

              மூடமாய்

              நின்றால் போதும்6

 

             என்ற புதுக்கவிதை வரதட்சணை திருமணமுறையில் பெண்ணை உணர்ச்சியற்ற பொருளாக பாவிக்கின்ற சமூகத்தின் அவளத்தை எடுத்துக்காட்டுகின்றது. பெருமளவில் இன்றைய நாளில் வரதட்சணை கொடுமைகள் நிகழாததால் வரதட்சணை கொடுமையே இல்லாத சமூகமென்று ஏற்றுவிட முடியாது. இன்றும்இக்கொடுமைவேறுவடிவங்களில் நடந்தேறுகின்றது என்பதே உண்மை. இக்குற்றங்கள் நிகழாமலிருக்க சமூகத்தில் சிந்தனை மாற்றம் உண்டாக வேண்டிய கட்டாயமிருக்கின்றது. சாதி, வர்க்க,  ஆணாதிக்க சிந்தனைகளற்ற அறிவியல்பூர்வமான சிந்தனைகள் சமூகத்தில் ஏற்படவேண்டும். கொடுப்போறும் பெருவோறுமின்றி நிகழ்ந்த குறுந்தொகை மணமுறைகள் மீண்டும் நிகழ வேண்டும்.  சாதி வர்க்க பேதங்கள் உடைந்து மீண்டுமொரு சங்க கால வாழ்வியல் நெறி கொண்ட சமூகம் மலர வேண்டும். வேறு சாதி இளைஞணைக் கரம் பிடித்தால் வெட்டுகின்ற மகள்கள்களைப் பெற்ற தந்தையர்களின் சாதி வெறிமறைந்து போகட்டும்.பெண்ணிற்கு காதல் உண்டாயின் ஆணுடன் உடன்போக்கு மேற்கொள்ளட்டும். பெண்ணிண் சுற்றத்தார் அறத்தொடு நின்று காதலைப் வாழ்த்தட்டும்.  பெண்ணைப் போகப் பொருளாய் பண்டமாய் நடத்தும் ஆணாதிக்க சிந்தனை ஒழியட்டும். சமத்துவம் உண்டாகட்டும். பாலியல் வன்முறைகளற்ற மகிழ்வான சமத்துவக் குறுந்தொகைக் காமம் பரவட்டும். இவ்வாறு வாழ்வியல் நெறிகளமைந்தா. தமிழர்தம் பெருமை பாடாலாம் ஆசிரியப்பா கொண்டு உலகிற்கே அறிவுருத்தும் குறுந்தொகைஇலக்கியம்போன்றதொரு பெருந்தொகை இலக்கியத்தினை பாடலாம்.

 

முடிவுரை

 

     குறுந்தொகையில் இடம் பெறுகின்ற காதல் சங்ககால மக்களின் உயரிய காதல் வாழ்வின் திறத்தனை எடுத்துரைக்கின்றது. மேலும் குறுந்தொகைக் காதல் பொதுவுடைமையையும் சுதந்திரத்தினையும் வெளிப்படுத்துகின்றது. அறிவியல் முறையிலும் அமைந்துள்ளது. குறுந்தொகைக் காதல் சமூகத்தில் மீண்டும் மலர்ந்தால் தமிழ்ச் சமூகத்திடையே பெரும் அமைதியும் நீதியுணர்ச்சியும் ஏற்படும். தமிழர்தம் வாழ்வும் செழிப்படையும்.

 

 

சான்றென் விளக்கம்

 

  1.  புறனாநூறு — 192

  2.  திருக்குறள் — 1289

  3.  தொல்காப்பியம் - 1047

  4.  தொல்காப்பியம் - 1091

  5.  தொல்காப்பியப் பூங்கா - 40

  6.  வத்சலா கவிதைகள்

 

 

                         துணைநூற்பட்டியல்

 

 

1.    புறனானூறு மூலமும் உரையும், 

      வ.த.இராமசுப்பிரமணியம்,

      திருமகன் நிலையம், 

      சென்னை - 600 017.

      முதற்பதிப்பு - 2000

 

2.    குறுந்தொகை மூலமும் உரையும்,

      முனைவர்.வி.நாகராசன்,

      நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,

      சென்னை - 600 098.

      முதற்பதிப்பு - 2004

 

3.    திருக்குறள் மூலமும் உரையும்,

      மு.வரதராசனார்,

      சாரதா பதிப்பகம்,

      சென்னை - 600 017.

      முதற்பதிப்பு - 2005

 

4.    தொல்காப்பியம் (பொருளதிகாரம்),

      இளம்பூரனார்,

      சாரதா பதிப்பகம்,

      சென்னை - 600 017.

      முதற்பதிப்பு - 2005

 

5.    தொல்காப்பியப் பூங்கா,

      கலைஞர் மு. கருணாநிதி,

      பூம்புகார் பதிப்பகம்,

      சென்னை - 600 108.