ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கம்பராமாயணத்தில் தீ

முனைவர் க. மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை 08 Dec 2020 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

       தீ என்பது பஞ்சபூதங்களுள் ஒன்று. கற்கால மனிதன் சிக்கி முக்கிக் கற்களை உராய்வதனால் நெருப்பைக் கண்டு பிடித்தான். கம்பராமாயணத்தில் தீ என்றவுடனே இலங்கையை அனுமன் எரித்ததும்,இராமன் சீதையை அக்னிப்பிரவேசம் செய்ய வைத்ததும் தான் பெரும்பாலும் நினைவிற்கு வரும். அதையெல்லாம் கடந்து, யாகத்தீ, வேள்வித்தீ,ஹோமத்தீ, ஈமத்தீ, சக்தி, முக்தி, சதி, யுக்தி, பக்தி, பதிபக்தி, சரணாகதி, மதி, விதி என்று பல இடங்களில் தீ பற்றிய செய்திகளைக் குறித்து இக்கட்டுரை எடுத்து இயம்புகிறது.

திறவுச்சொற்கள்

      யாகத்தீ, வேள்வித்தீ, ஹோமத்தீ, ஈமத்தீ, சக்தி, முக்தி….

முன்னுரை

      இயற்கையாகக் கிடைத்ததை, அப்படியே உண்டுவந்த கற்கால மனிதன், பின் நெருப்பைக் கண்டுபிடித்து உணவு சமைத்தான். தன்னை தாக்க வரும் விலங்குகளை, நெருப்பை வைத்து பயமுறுத்தினான். நெருப்பு என்பது வெப்பத்தை உமிழும் செயலாகும். நெருப்பு எரிவதற்கு பிராணவாயு எனப்படும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. நெருப்பை ‘அக்னி’ என்னும் பெயரில் கடவுளாக வணங்கினர். நெருப்பு பஞ்சபூதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கம்பராமாயணத்தில் தீ பற்றி காண்போம்.

கம்பராமாயணத்தில் தீ

     அஸ்வமேதயாகம், புத்திரகாமேஷ்டியாகம் செய்ய யாகத்தீ, விசுவாமித்திரர், ஜனகன், இந்திரஜித் செய்த வேள்வித்தீ, சீதை, கைகேயி திருமண ஹோமத்தீ, தசரதன், சடாயு, வாலி, இராவணன், மண்டோதரி, அரக்கர்களுக்கு செய்யப்படும் ஈமத்தீ, அனுமன் இலங்கையை எரித்த சக்தி, தசரதனின் அறுபதினாயிரம் மனைவியர் இறந்த சதி (உடன்கட்டை ஏறுதல்), கைகேயியின் யுக்தி (தாம் விரும்பியதைப் பெற செய்யப்படும் தந்திரம்), பிரகலாதனின் பக்தி, சரவங்க முனிவர், வேதவதிமுக்தி, சீதையின் பதிபக்தி (அக்னிப்பிரவேசம்), பரதன் இராமனிடம் கொண்ட சரணாகதி, தசரதன் சீதையிடம் பேசி, இராமன் மேல் தவறில்லை என்று பேசும் மதி, இராவணன் ஏவிய அக்னி அஸ்த்திரத்திற்கு இராமன் ஏவிய நீர் அஸ்த்திரம் எதிர்த்த விதி என்று பதிமூன்று வகையாக தீ குறித்து காணலாம்.

இலக்கியங்களில் பஞ்சபூதங்கள்

     உலகம் என்பது நீர், நிலம், நெருப்பு (தீ), காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது. இதனை

     “நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்

     கலந்த மயக்கம் ஆதலின்”

- (தொல்காப்பியம் - மரபியல் நூ86)

     “நீர் நிலம் தீ வளி விசும்போடைந்தும்”

- (பதிற்றுப்பத்து 24 : 15)

     “தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்”

- (பரிபாடல் 3 : 4)

     “மண் திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும்

     விசும்பு தைவரு வளியும்

     வளித்தலை இயதீயும்

     தீ முரணிய நீரும் என்றாங்கு

     ஐந்பெரும் பூதத்து இயற்கைபோல்”

- (புறநானூறு 2 : 1-6)

     “திடவிசும்பு எரிவளி நீர் நிலம் இலைமிசை

     படர் பொருள் முழுவதுமாய் அவையவை தோறும்

     உடன் மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளனை”

- (திருவாய்மொழி 1-1-2)

    “நிலம் நீர் நெருப்புயிர்

     நீள் விசும்பு நிலாப்பகலோன்

     புலனாய மைந்தனோ

     டென்பகையாய்ப் புணர்த்து நின்றான்”

-  (திருவாசகம் - திருத்தோணோக்கம் - 317)

    

“நீரும் வையமும் நெருப்பும் வேல் நிமிர் நெடுங்காலும்

     வாரி வானமும் வழங்கல் ஆகும் தம் வளர்ச்சி”

(சுந்தரகாண்டம் - ஊர்தேடு படலம் 114 பா)

என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.

யாகத்தீ 1

 

      தீயும், புகையும் கொண்டு யாகமும், வேள்வியும் செய்வது ஆரியவழிபாடு.ஐம்பூதங்களின் ஆற்றல்  அமைப்புகளும் மனிதனின்வாழ்விற்கு ஆதாரமாய் அமைந்திருப்பதால், அவைகளை வாழ்த்திவணங்கிடச் செய்தான்.

       அரசன் என்பவன் நாட்டிற்கும், குடி மக்களுக்கும், நலன்தருவதற்கென்று சில வேள்விகள் செய்ய வேண்டும் என்பதேஅரசனுக்குரிய  ஒழுக்கமாகக் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

         வடபுலத்திலிருந்து வந்தவர்களின் செல்வாக்கால்தமிழகத்தில் நிலைபெற்ற போது, தமிழக வேந்தர்கள் அவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினர். அதன்படி பல யாகங்கள்செய்தனர்.

      கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தில் அஸ்வமேதயாகம், புத்திரகாமேஷ்டி யாகம் இரண்டையும் தசரதனுக்காகக் கலைக்கோட்டு முனிவன் செய்தான் என்பதை

     “தகவுடை முனியும் அத்தழலின் நாப்பணே

     மிக அருள் ஆகுதி வழங்கினான் அரோ”

(பாலகாண்டம் - திருஅவதாரப்படலம் 256 பா)

 

என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.

யாகத்தீ 2

     ‘குசநாபன்’ என்ற மன்னனும் புத்திர காமேஷ்டி யாகம் செய்தான் என்பதை பாலகாண்டம் வேள்விப் படலத்தில் கூறப்பட்டுள்ளது.

     “கவனவேகத் துரங்கக் காதி வந்து உதயம் செய்தான்”

(பாலகாண்டம் - வேள்விப்படலம் 409 பா)

     வேள்வித்தீயின் நடுவே அழகு மிக்க, விரைந்த நடையைப் பெற்ற குதிரைப்படையை உடைய ‘காதி’  என்பவன் தோன்றினான் என்பதை அறிய முடிகிறது.

       தசரதனும், குசநாபனும், தங்களுக்குக் குழந்தைப்பேறு இன்மையால் புத்திரகாமேஷ்டி யாகத்தின் மூலம் குழந்தைப் பேறு பெற்றனர்.

வேள்வித்தீ 1

     இராம இலக்குவணரைக் காவலாகக் கொண்டு விசுவாமித்திரர் வேள்வி இயற்றினார்.

     “வேண்டுவ கொண்டு தம் வேள்வி மேவினான்

     காண் தகு குமரரைக் காவல் ஏவியே”

(பாலகாண்டம் - வேள்விப்படலம் 438 பா)

என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.

வேள்வித்தீ 2

    கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தில் கார் முகப் படலத்தில் ஜனகன் சீதையின் வரலாற்றைக் கூறுமிடத்து

     “உரம் பொருஇல்நிலம் வேள்விக்கு அலகு

     இல் பல கால் வழுதேம்”

(பாலகாண்டம் - கார் முகப்படலம் 630 பா)

 

     வேள்விக்குரிய வேள்விச்சாலையை அமைப்பதற்கு பூமியைத் தோண்டும் போது கிடைத்தாள் என்று கூறுவதை அறிய முடிகிறது.

வேள்வித்தீ 3

     இந்திரஜித் இராவணனிடம் பிரமாஸ்த்திரம் செலுத்தப் போகிறேன் என்றும், அதற்கு முன் நல்ல வேள்வி செய்யப் போவதாகவும் கூறுகிறான்.

     “இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை நல் வேள்வியை இயற்றி

     முடிப்பேன் இன்று வாழ்வை ஓர் கணத்துஎன மொழிந்தான்”

(யுத்தகாண்டம் - பிரமாஸ்த்திரப்படலம் 2474 பா)

என்பதை அறிய முடிகிறது.

     விசுவாமித்திரர் வேள்வி, ஜனகர்வேள்வி, இந்திரஜித் வேள்வி போன்ற வேள்விகளை அறிய முடிகிறது.

ஹோமத்தீ (மணவறைத்தீ)

   எல்லாம்வல்ல பரம்பொருளினை, உரிய மந்திரங்களினால் எழுந்தருளச் செய்து வேள்விஆற்றி,  தீ மற்றும் கலசத்தில் முன்னோக்கி இறைவன் முன் திருமணம் செய்விக்கப்படுகிறது

     இராமன் சீதையின் கைப்பற்றி தீ வலம் வந்தான்.

 

          “நெய் அமை ஆவதி யாவையும் நேர்ந்தே

          தையல் தளிர்க் கை தடக்கை பிடித்தான்”

     (பாலகாண்டம் - கடிமணப்படலம் 1196 பா)

 

     ஹோமத்தீயை வலம் வரும் போது இராமனைப் பின் தொடர்ந்து சீதை சென்றாள். அக்காட்சி வேறு வேறாக எடுக்கும் பிறவிகளில் உயிரானது உடம்பைத் தொடர்வதற்கு மாறாக, உடம்பு உயிரைப் தொடர்ந்து செல்வது போல இருந்தது என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

அக்னிசாட்சி

     தசரதன் கைகேயியை நிந்தனை செய்தான் அப்போது,

     “பண்டே எரிமுன் உன்னைப் பாவி தேவி ஆகக்

     கொண்டேன் அல்லன் வேறு ஓர் கூற்றம் தேடிக் கொண்டேன்”

(அயோத்தியா காண்டம் - நகர் நீங்கு படலம் 339 பா)

 

     முன்பொரு நாள் அக்னிசாட்சியாக உன்னை என் மனைவியாகக் கொள்ளவில்லை. எனக்கு ஒரு புதிய எமனை நானே தேடிக்கொண்டேன் என்றான்.

     இராமன் சீதையை, தசரதன் கைகேயியை “தீ வலம்” வந்து மணம் செய்து கொண்டனர் என்பது பெறப்படுகிறது.

1 ஈமத்தீ (தசரதனுக்கு இறுதிக்கடன்)

       இவ்வுலகில் பிறந்த எந்த உயிரும் இறந்தால், பஞ்சபூதங்களில்ஒன்றில் அடக்கமாக வேண்டும். மனிதர்கள் இறந்தால் அவர்களதுஉடலைப் புதைக்கவோ, எரிக்கவோ செய்வர்.

     தசரதன் இறந்ததால் சத்ருக்கணன் அவனுக்கு ஈமச்சடங்குகளைச் செய்தான்.

     “அன்று நேர்கடன் அமைவது ஆக்கினான்

     நின்று நான்மறை நெறி செய் நீர்மையான்”

(அயோத்தியா காண்டம் - பள்ளியடைப்படலம் 919 பா)

 

     சத்ருக்கணனைக் கொண்டு செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளை, நான்கு வேதங்கள் கூறும் நெறியிலே நின்று வசிட்டன் முறைப்படி நடத்தினான்.

2 சடாயுவுக்கு இறுதிக்கடன்

     சடாயு இறந்தபின் இராம இலக்குவணர் இறுதிக்கடன் செய்தனர்.

     “ஏந்தினான் இரு கைதன்னால் ஏற்றினான் ஈமம் தன் மேல்”

(ஆரண்யகாண்டம் - சடாயு உயிர் நீத்தப்படலம் 1021 பா)

 

     மலரையும், நீரையும் பெய்து சடலத்தைத் தூய்மையாக்கி, தன் கைகளால் ஏந்திச் சென்று, அடுக்கி வைத்திருந்த விறகுகளின் மேலே வைத்துத் தீ மூட்டினான்.

3 வாலிக்கு இறுதிக்கடன்

     இராமபிராணின் அம்பினால் வாலி இறந்தான். வாலியின் மைந்தன் அங்கதன் இறுதிக்கடனைச் செய்தான்.

     “கடன் யாவும் கடைகண்டு கண்ணனோடு

     உடன் ஆய்உற்ற தெலாம் உணர்த்தலும்”

     - (கிட்கிந்தாகாண்டம் - வாலிவதைப்படலம் 404 பா)

 

     வாலிக்கு செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் அங்கதனைக் கொண்டு செய்யச் செய்தான்.

4 இராவணன், மண்டோதரி, அரக்கர் குலத்துக்கு இறுதிக்கடன்

     இராவணன் இறந்தவுடன் அவன் மனைவி மண்டோதரியும் இறந்துவிட்டாள். அவர்களது உடலுக்கு வீடணன் இறுதிக்கடன் செய்தான்.

     “உற்ற ஈமவிதியின் உடன்பட”

     “உடைந்து போன மயன் மகளோடு உடன்

     அடங்க வெங்கனலுக்கு ஆவி ஆக்கினான்”

(யுத்தகாண்டம் - இராவணன்வதைப்படலம் 3889 -90 பா)

 

     ஈம விதிச்சடங்கு பெருத்தசுற்றத்தாரும் பெண்டிரும் தன்னைத் தொடர்ந்து, சூழ்ந்துவர வீடணன் நெருப்பை விதிப்படி வைத்தான்.

போரில் இறந்த அரக்கர் குலத்துக்கும் வீடணனே இறுதிக்கடன் செய்தான் என்பதை 3891 வது பாடலின் வழி அறிய முடிகிறது.

     தசரதனுக்கு சத்ருக்கணனும், சடாயுவுக்கு இராமனும், வாலிக்கு அங்கதனும், இராவணன் மண்டோதரிக்கு வீடணனும் இறுதிக்கடன் செய்ததை அறிய முடிகிறது.

இலங்கையை எரியுண்ணுதல் (சக்தி)

      ஐம்பூதங்களில்  ஒன்றான தீ அனைத்தையும் தன்னுள் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது.

     இராவணன் ஆணைப்படி வீரர்கள் அனுமன் வாலில் தீ வைத்தனர். அப்போது அனுமார் இலங்கை நகருக்கேத் தீ வைத்தார்.

     “காலமே என்ன மன்னோ கனலியும் கமதின் உண்டாம்”

(சுந்தரகாண்டம் - பிணிவீட்டுபடலம் 1182பா)

 

     உலகங்கள் அனைத்தையும் அவியைப்போல உண்ணும் ஊழியான் இறுதி காலத்துத் தீயைப் போல இலங்கைநகர் முழுவதையும் விரைவாக உண்டு அழித்தான்.

     அனுமனின் சக்தி புலப்படுகிறது.

உடன்கட்டை ஏறி தீயில் உயிர்விடுதல் (சதி)

    தலைவன் இறந்த செய்தியைக் கேட்ட அளவில் தலைவியும் உடன் உயிர்த்துறத்தல் 'தலைக்கற்பு' எனப்பட்டது.

    தலைவன் இறந்தப்பின் அவன் பிரிவுத்துன்பம் தாழாமல் அவனை எரிக்கும் சிதையிலேயே வீழ்ந்து உயிர்த்துறந்தால் ‘இடைக்கற்பு' எனப்பட்டது.

          கணவனது சிதைத்தீயில் மனைவி வீழ்ந்து தற்கொலை செய்து கொள்ளுதலை ‘உடன்கட்டை ஏறுதல்' (சதி) என்ற சொல்லாட்சி குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் இதனை

'நல்லோள் கணவனோடு நனியழல் புகீஇச்

சொல்லிடை இட்ட பாலைநிலையும்'

(தொல்காப்பியம்-பொருளதிகாரம்-                                 

       புறத்திணையியல்-நூ22)

 

என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.இந்நூற்பா உடன்கட்டை ஏறுதலை 'அழல் புகுதல்' என்ற சொல்லால் குறிப்பிடுகிறது.

     தசரதன் இறந்ததால் அவனது மனைவியர் அறுபதினாயிரம் பேரும், அவனது ஈமத்தீயில் இறங்கி மூழ்கினர்.

     “முழையில் மஞ்ஞை போல் எரியில் மூழ்கினார்”

(அயோத்தியா காண்டம் - பள்ளிப்படைபடலம் 920 பா)

 

     தாமரை மலர்கள் நிறைந்த பூக்காட்டிலே மலைக்குகையில் வாழும் மயில்களைப் போல ஈமத்தீயில் இறங்கி மூழ்கினர்.

அரக்கியரும் எரியும் தீயில் இறத்தல்

     அனுமன் இலங்கையை எரித்ததால் தீப்பற்றிய இல்லத்திலேயே இருந்து அரக்கியர் உயிர்விட்டனர்.

     “இல் கடந்து இனிஏகலம் யாம் எனா

     வில் கடந்த நுதலியார் வீடினார்”

(சுந்தரகாண்டம் - இலங்கையை எரியூட்டு படலம் 1200 பா)

     தங்களுடைய கணவரை அனுமன் கொன்றுவிட்டதால் தங்களுக்கு இனி மங்கள வாழ்க்கை இல்லை என்பதால், எரியும் வீட்டிற்குள்ளேயே இருந்து தம் உயிரையும் விட்டனர்.

     தசரதன் மனைவியர் மட்டுமல்ல, இலங்கை அரக்கியரும்(சதி) தீயில் இருந்து எரிந்து தம் உயிர்த்துறத்தனர்.

1. தீக்குளித்து இறப்பதாக பரதன் கூறல்

     இராமனிடம் பரதன் பேசும் போது “14 ஆண்டுகள் வனவாசம் முடிந்த உடனே அயோத்தி வந்து பட்டாபிசேகம் செய்துகொள்ள வேண்டும். அது வரை நான் காத்திருப்பேன் நீ வரவில்லை எனில், தீயில் விழுந்து உயிர்த்துறப்பேன்” என்கிறான்.

     “கோமுறை புரிகிலை என்னின் கூர் எரி

     சாம் இது சரதம் நின் ஆணை சாற்றினேன்”

     (அயோத்தியாகாண்டம் - திருவடி சூட்டுப்படலம் 1189 பா)

 

என்று இராமன் மேல் ஆணையிட்டுக் கூறினான்.

பரதனின் “சரணாகதி” தெரியவருகிறது.

2. தீக்குளித்து இறப்பதாக சீதை கூறல்

     இராமன் மாரீசனைப் பின் தொடர்ந்து செல்ல, “லட்சுமணா” என்ற அலறல் கேட்க சீதை, இலட்சுமணனைச் சென்று பார்க்கக் கூறினாள். இலட்சுமணன் மறுக்க, கோபமடைந்த சீதை “நீ இப்போது செல்லவில்லை எனில் நான் நெருப்பில் விழுந்து என் உயிரைமாய்த்துக்கொள்வேன்” என்றாள்.

     “எரியிடைக்கடிது வீழ்ந்து இறப்பேன் ஈண்டு எனா”

     (ஆரண்யகாண்டம் - சடாயு உயிர் நீத்த படலம் 815 பா)

 

 

பலரும் இறப்பதாகக் கூறல்

    அனுமன் பரதனிடம் (யுத்த காண்டம் மீட்சிப்படலம் 4132 பா) இராமன் சொன்ன நாளில் இன்னும் 40 நாளிகை எஞ்சியுள்ளது. நான் சொல்லும் இச்சொல் பொய்க்குமானால், அடியேனான நாய் போல இழிந்த நான், உனக்கு முன்பே இந்தத் தீயில் விழுந்து இறப்பேன் என்றான்.

யுக்தி

      தான் நினைத்ததை சாதிக்கவேண்டி, தன்னை எவருக்கு மிகவும்பிடிக்குமோ, அவர்களிடம் நிரந்தரமாகவே நின்னைப் பிரிந்து இறப்பேன் என்று ஒருவித மிரட்டல் விடுப்பதாகும்

     கைகேயி தசரதனிடம் இரு வரங்களை வேண்டும் பொழுது, தரவில்லையெனில் என் உயிரையும் விட்டு விடுவேன் என்று கூறினாள் என்பதை (அயோத்தியா காண்டம் கைகேயி சூழ்வினைப்படலம் 223 பா) அறிய முடிகிறது.

    இரணியன் பிரகலாதனுடன் உரையாடும் போது, இறைவன் எல்லாயிடங்களிலும் இருக்கிறான் என்று கூறினான். அதற்கு இரணியன், “நீ காட்டிய இடத்தில் இறைவன் இல்லை என்றால், நான் உன்னைக் கொல்வேன்” என்றான். அப்போது பிரகலாதன் “நான் கூறியபடி, இறைவன் இல்லை எனில் நானே என் உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்கிறான். (யுத்தகாண்டம் - இரணியன் வதைப்படலம் 255 பா)

     சீதை அசோகவனத்தில் இருந்த போது, நான் இறப்பதே அறநெறியாகும் (சுந்தரகாண்டம் - உருக்காட்டுப்படலம் 508) அரக்கியர் அனைவரும் இப்போது உறங்குகின்றனர். இதைத் தவிர உயிரை விடுவதற்கு வேறு தகுந்த நேரம் கிடையாது என்று நினைத்து ஒரு குருக்கத்தி மரத்தை அடைந்தாள்.

     சீதையைத் தேடிச் சென்று கண்டுபிடிக்க முடியாத நிலையில், அங்கதன் உள்ளிட்ட வீரர்கள் (கிஷ்கிந்தா காண்டம் - சம்பாதிப்படலம் 943) நாம் கிஷ்கிந்தைக்குச் செல்லாமல் இங்கேயே இருந்து தவத்தைச் செய்வோமா? அல்லது மாற்று மருந்து இல்லாத நஞ்சினை உண்டு இறப்போமா என்றனர்.

     இராவணன் வீடணன் மேல் வேல் எறிந்த போது, இலட்சுமணன் குறுக்கே சென்று, வீடணனைக் காப்பாற்றினான். அதைக்கண்ட வீடணன் இலட்சுமணன் இறந்துவிட்டான் என்று எண்ணி, இந்தக் கணத்திலேயே நானும் இறப்பேன் என்று கூறினான் என்பதை யுத்த காண்டம் - வேல் ஏற்றுப்படலம் - 350 பா) வழி அறிய முடிகிறது.

அக்னிப்பிரவேசம் (பதிபக்தி)

       பதியின் மேல் கொண்ட பக்தியே பதிபக்தி. பதியின் எண்ணப்படி நடத்தலை பதிபக்தி.

     சீதையை இராமன் கடுஞ்சொல் கூற, சீதை இலட்சுமணனிடம் தீயை மூட்டச்சொன்னாள். தீயை நோக்கி, “நான் மனத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ களங்கம் உடையேன் என்றால் என்னை நீ கடுமையாக எரித்திடுக” என்று கூறி, இராமனை வணங்கி அக்னியினுள் பிரவேசித்தாள்.

     “மனத்தினால் வாக்கினால் மறு உற்றேன் எனின்

     சினத்தினால் சடுதியால் தீச் செல்வா என்றாள்”

(யுத்தகாண்டம் - மீட்சிப்படலம் 3976 பா)

 

தீக்குள் இறங்கிய  சீதையைத் தீ ஒன்றும் செய்யவில்லை.

பிரகலாதன் பக்தி

    எந்நிலை வந்தாலும் இறைவனே எம்மைக் காப்பான் என்ற நம்பிக்கையே பக்தி.

     பிரகலாதன் இரணியனை வணங்காமல் “ஓம் நமோ நாராயணா” என்று நாராயணனை வழிபட்டதால், இரணியன் பிரகலாதனை தீயில் இட்டான்.

     “இழுது நெய் சொரிந்திட்டனர் நெருப்பு

     எழுந்திட்டது விசும் பெட்ட”

     “தொழுது நின்றனன் நாயகன் தான இணை

     குளிர்ந்தது சுடு தீயே”

(யுத்தகாண்டம் - இரணியன் வதைபப்டலம் 214 பா)

 

     பெரிய குழியில் விறகுக் கட்டைகளை அடுக்கி, குடங்களில் எண்ணெயும், வெண்ணெயும் நெய்யும் ஊற்றி, தீ வைத்து பிரகலாதனையும் அத்தீயில் இட்டனர். ‘அரி’ என தொழுது நிற்க, சுடும் தன்மை கொண்ட அந்தத்தீ குளிர்ச்சியடைந்தது.

     சீதையும், பிரகலாதனும் தீயில் இடப்பட்டபோதும் தீ அவர்களை ஒன்றும் செய்யவில்லை. “பதிபக்தியும், பக்தியும்” அறியப்பட்டன.

பரமபதம் அடைய தீக்குளித்தல் முக்தி

      பரம்பொருளின் திருவடியை அடைதலே முக்தியாகும்.

பொய்மை இல்லாமல் மனம் அடங்கப் பெறுபவர்,முடிவிலே முக்தி நிலையை அடையும் தகுதியைப் பெறுகின்றனர்.

     சரவங்கமுனிவர் இப்பிறவியிலிருந்து விடுபட்டு பரமபதம் (முக்தி) அடைய எண்ணினார். இது பற்றி இந்திரனிடம் கூறிவிட்டு, இராமனிடம் விடைபெற்று மனைவியுடன் சேர்ந்து தீக்குளித்தார்.

     “காதலி அவளோடு கதழ் எரி முழுகி”

(ஆரண்யகாண்டம் - சரவங்கன் பிறப்பு நீங்கு படலம் 113 பா)

 

     பரமபதத்தை நான் அடையும்படி அருள் செய் என்று இராமனிடம் விடைபெற்று “முக்தியும்” பெற்றார்.

வேதவதி தீயில் மூழ்குதல்

     தெய்வத்தன்மை கொண்ட வேதவதி இராவணனால் தீயில் மூழ்கினாள்.

     “தீயிடைக் குளித்தவத் தெய்வக் கற்பினள்

     வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ”

     (யுத்தகாண்டம் - இராவணன் மந்திரப்படலம் 92 பா)

 

     இராவணன் தன் அமைச்சர்களுடன் போர்க்குறித்து ஆலோசனை செய்த போது, தீயில் மூழ்கியவளும் தெய்வத்தன்மைக் கொண்ட கற்பினை உடையவளுமான வேதவதி என்பவள் வாயால் சொல்லிய சொல்லின் விளைவை வாராமல் தடுக்கும் ஆற்றல் நமக்கு உள்ளதோ என்று கூறினான்.

    சரவங்கமுனிவர், வேதவதி “முக்தி” அறியப்படுகிறது.

மண்ணுலகம் வந்த தசரதன் சீதையைத் தேற்றுதல் மதி

தான் சொல்ல நினைப்பதை, அடுத்தவர் மனம் ஏற்றுக் கொள்ளும் விதம் நுட்பமாகக் கூறுவது மதி.(புத்திசாலித்தனம்)

     இறந்து போன தசரதன் மண்ணுலகம் வந்து, சீதையைக் கண்டு, அவளைத் தேற்றுகிறான். “இராமன் உன்னுடைய கற்பின் திறத்தை மற்றவர்களும் அறியுமாறு செய்வதற்குத் தான் உன்னைத் தீயில் இறங்கச் செய்தான்” என்று கூறினான்.

     “நங்கை மற்றுநின் கற்பினை உலகுக்குநாட்ட”

(யுத்தகாண்டம் - மீட்சிப்படலம் 4013 பா)

 

     நின் கற்பின் மாட்சியை உலகத்தில் யாரேனும் ஐயப்பட்டிருப்பின், அந்த ஐயத்தைப் போக்குவதன் பொருட்டுத்தான் தீயில் இறங்கச் செய்தான். எனவே இராமன் மீது சினம் கொள்ளக் கருத வேண்டா” என்று கூறினான்.

     தசரதனின் “மதி” புலப்படுகிறது.

கணையும், எதிர்க்கும் கணையும் விதி

     இயற்கையாகவே விதிக்கப்பட்டது விதி. நெருப்பு எரிந்தால் அதைத் தண்ணீர் ஊற்றினால் அது அணைந்துவிடும்.

     இராவணனின் மோகனப்படையும், இலக்குவனின் ஆழிப்படையும் ஒன்றையொன்று எதிர்த்தன. (வேல் ஏற்ற படலம் - 3493 பா)

     இராவணன் மோகனப் படையை ஏவ, பதிலுக்கு “திருமால் கணையை ஏவு” என வீடணன், இலக்குவணனிடம் கூறினான்.

     “அன்பின் வீடணன் ஆழியான் படையினை நிறுத்தி”

(வேல் ஏற்ற படலம் - 3494 பா)

 

     மோகனப்படைக்கு எதிராக திருமால்கணையே சரியானது என்பது விதியாகும்.

முடிவுரை

     கம்பராமாயணத்தில் யாகத்தீ, வேள்வித்தீ, ஹோமத்தீ, ஈமத்தீ, சக்தி, சதி, யுக்தி, பக்தி, முக்தி, பதிபத்தி, கதி, மதி, விதி ஆகியன குறித்து விரிவாக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

துணை நூற்பட்டியல்

1.    ஆலிஸ் (உரை.ஆ) பதிற்றுப்பத்து மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக்  ஹவுஸ் (பிரைவேட்) லிமிடெட், சென்னை, 2004.

2.   இளம்பூரணர் உரை, தொல்காப்பியம்-பொருளதிகாரம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் சென்னை,1953.

3.   கமலக்கண்ணன் இர்.வ. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் மூலமும்  விளக்கவுரையும், தொகுதி 1,2, வர்த்தமானன் பதிப்பகம்,     சென்னை,  2001.

4.   சிவராமன்.என். திருவாசகம், சாமி வெளியீடு,சென்னை,2012

5.   சுப்பிரமணியன். பெ.(உரை.ஆ) தட்சிணாமூர்த்தி.அ. பரிபாடல்     மூலமும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட்   சென்னை, 2004

6.   பாலசுப்பிரமணியன்.கு.வை (உரை.ஆ) புறநானூறு மூலமும்   உரையும், நியூ செஞ்சுரி  புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட்    சென்னை, 2004

7.    பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி   1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.