ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

வள்ளலாரும் நாராயணகுருவும் - ஓர் ஒப்பீட்டு நோக்கு

முனைவர் க.கதிரவன் துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை & ஆய்வுமையம், அரசுக்கல்லூரி, சித்தூர், பாலக்காடு 08 Dec 2020 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம் :

வள்ளலாருக்கும் நாராயணகுருவுக்கும் இடையே உள்ள கால ஒற்றுமை, வாழ்வியல் ஒற்றுமை குறித்தும் இருவரிடையே தீண்டாமை மறுப்பு, சனாதனம், கல்வி ஆகியன குறித்து நிலவிய கருத்தொற்றுமை குறித்தும் இருவரும் தத்தம் கருத்துக்களைச் செயற்படுத்த அமைப்புகளைத் தோற்றுவித்து வழிநடத்திய சிறப்புத்தன்மை குறித்தும் இக்கட்டுரை ஒப்பிட்டுக் காட்டுகிறது.

திறவுச் சொற்கள் : வள்ளலார், நாராயண குரு, ஜீவகாருண்ய பஞ்சகம், திருவருட்பா, வள்ளுவர், ஜாதிநிர்ணயம், சாதிபேதமின்மை, மதபேதமின்மை

 

முன்னுரை :

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னகத்தில் தோன்றிய இருபெரும் பெரியோர் வள்ளலாரும் நாராயணகுருவும். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை இனங்கண்டு கூறமுயல்கிறது இக்கட்டுரை.

கால ஒற்றுமை:

வள்ளலார்      (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1873)

நாராயணகுரு     (ஆகஸ்ட் 28, 1855 - செப்டம்பர் 20, 1928)

வள்ளலாரும் நாரயணகுருவும் வாணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள் ஆட்சியதிகாரத்தையும் கைக்கொண்டு கிறித்துவம் பரப்பிக்கொண்டிருந்த காலகட்டத்தில் சனாதன இந்து தர்மத்தில் காணப்பட்ட குறைகளாகத் தோன்றிய சில கூறுகளைக் களைந்தெடுத்து இந்து மதத்தினைத் தக்கவைக்கப் போராடிய இலக்கியவாதிகள் எனலாம்.

வடகிழக்கில் தோன்றிய ராஜாராம் மோகன்ராய் போல் தென்னிந்தியாவில் தோன்றிய சமூக சீர்த்திருத்தவாதிகள் இவர்கள் எனவும் குறிப்பிடலாம். ஆனால் இவர்கள் இருவரும் அரசு சார்ந்து இயங்கிய அவரைப்போலன்றி, அரசு சாராது இயங்கியவர்கள்.

வள்ளலாரும் நாராயணகுருவும் வாழ்ந்த காலகட்டம் என்பது, ஓரிறைக் கோட்பாட்டை முன்வைக்கும் அயல்மதங்களையும் மனித சமத்துவம் பேசும் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிந்தைய ஐரோப்பியர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்த காலகட்டம். இங்குள்ளோர் பல இறைக்கோட்பாட்டை உடையவர்களாய் சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் வருணாசிரம வேறுபாடுகளை தலைமேற்கொண்டு தீண்டாமை பாலிப்பவர்களாய் இருந்த நிலையில், இந்திய சமய மரபைப் போற்றி ஆனால் அதன் அவலத்தை மாற்ற முயன்ற போராளிகள் வள்ளலாரும் நாராயணகுருவும்.

தீண்டாமை மறுப்பு :

முள்ளை முள்ளால் எடுப்பது போல், தீண்டாமையின் அடிப்படையாக விளங்கிய தூய்மைவாதத்தையே தம்  கையிலேந்தி தீண்டாமையை ஒழிக்க முயன்றவர்கள் இவர்கள். உயிர்ப்பலி கோரும் சிறுதெய்வ வழிபாட்டையும் குலதெய்வ வழிபாட்டையும் நீக்கி உயர்த்தப்பட்ட சாதியினர் கைவசம் இருந்த பெருந்தெய்வ வழிபாட்டை தாழ்த்தப்பட்ட சாதியினர் வசம் கொண்டுசேர்த்தவர்கள்.

வழிபாட்டு முறை :

ஒரே ஜாதி ஒரே மதம் ஒரே தெய்வம் என்னும் கொள்கையை இருவரும் முன்னெடுத்தனர்.

இவர்கள் இருவரில் காலத்தால் முற்பட்டவரான வள்ளலார் சிவ வழிபாட்டினைத் தேர்ந்து பின் அதனின்றும் விலகி ஒளிவழிபாட்டை முன்வைத்தார் எனில் காலத்தால் பிற்பட்டவரான நாராயணகுரு சிவ வழிபாட்டினைத் தேர்ந்து அத்துடன் முருகன், தேவி போன்ற பெருந்தெய்வங்களையும் இணைத்துக்கொண்டு இறுதியில் கண்ணாடி வழிபாட்டை முன்வைத்தார்.

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை எனும் தொடரினை வள்ளலார் தெய்வ வாக்காய்ப் பூசித்ததுபோல சத்யம் தர்மம் தயை கருணை எனும் தொடரையே தெய்வமாய் நிறுவி வழிபடச்செய்தவர் நாராயண குரு. நீங்கள் தேடும் தெய்வத்தை உங்களில் காணுங்கள் என கண்ணாடியினை கருவறையில் தெய்வமாய் நிறுத்தியவர் நாராயணகுரு.

இவர்கள் இருவரும் தாங்கள் தேர்ந்துகொண்ட வழிபாட்டுமுறைக்கேற்ப செய்யுள்களைத் தாமே படைத்துக்கொண்டவர்கள். சமஸ்கிருதம், தமிழ் என இருமொழிப் புலமை மிக்கவர் வள்ளலார். சமஸ்கிருதம், மலையாளம், தமிழ் என்னும் மும்மொழிப் புலமைகொண்டவர் நாராயணகுரு.

இருவருக்கும் எதிர்ப்புகள் தோன்றின. வள்ளலார் தம் பாடல்களுக்கு திருவருட்பா எனப் பெயர் சூட்ட, அவை அருட்பாக்கள் அல்ல மருட்பாக்கள் என யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் தொடுத்த வழக்கு வள்ளலார் நேர்கொண்ட எதிர்ப்புக்கு ஒரு சான்று. சனாதனப் பெருந்தெய்வங்களை நிறுவி வழிபடு உரிமை மறுக்கப்பட்டிருந்தவர்களைத் திரட்டி வழிபடச்செய்த நாராயணகுருவை பெருந்தெய்வங்களை நிறுவும் உரிமை உங்களுக்கு எப்படிக் கிடைத்தது  நம்பூதிரிகள் எதிர்த்தமை நாராயணகுரு நேர்கொண்ட எதிர்ப்புக்கு ஒரு சான்று.

சனாதன தர்மம் :

இருவருமே கருவிலே திருவுடையவர்களாக இனங்காணப்பட்டவர்கள். சனாதன தர்மத்தைப் புதுப்பிக்க முனைந்த இவர்கள் இருவரும் சனாதன தர்மத்தில் ஆழ்ந்த மரபுவாதிகளின் எதிர்ப்பினை பெற்றனர். வள்ளலார் பிற்காலத்தில் ஒரு சனாதனவாதியாகவே உணரப்பட்டார்.

கல்வியின் தேவை :

இருவருமே கல்வியின் தேவையை வலியுறுத்தினர். ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக கல்விபெறவேண்டியதன் இன்றியமையாமையை எடுத்துரைத்தனர்.

அமைப்பு உருவாக்கம் :

இருவரும் தாங்கள் தேர்ந்துகொண்ட வழிபாட்டுமுறையையும் சமூகத் தொண்டையும் மேற்கொண்டுசெல்ல அமைப்புகளை நிறுவி அதன்வழி தொண்டாற்றியவர்கள்.

வள்ளலார் சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் 1867ஆம் ஆண்டில் சத்திய ஞானசபையையும் சத்திய தரும சாலையையும் நிறுவினார். அதன் கிளைகள் இன்றளவும் பல இடங்களிலும் பரவிச் செயற்படுகின்றன.

நாராயணகுரு கேரள மக்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட  மக்களின் நிலையை மாற்றம் செய்யவும் முன்னேற்றம் செய்யவும் 1903-இல் திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டு அருவிப்புரத்தில் "ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா" எனும் அமைப்பை நிறுவினார். SNDP என்ற பெயரில் இன்றைக்கு கேரளம் முழுவதும் இந்த அமைப்பு பரவியிருக்கிறது.

ஆர்ய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்ற அமைப்புகளின் பெயர்களோடு ஒப்பிட்டு நோக்க இவர்கள் இருவர் ஏற்படுத்திய அமைப்பின் பெயர்களிலும் தர்மம் எனும்சொல் இடம்பெறல் கவனிக்கத்தக்கது.

இல்லறமும் துறவறமும் :

இருவரும் சிறுவயதிலேயே இல்லறவாழ்வில் பெரியோரால் ஈடுபடுத்தப்பட்ட போதிலும் இல்லறம் துறந்து துறவறம் மேற்கொண்டவர்கள். ஆனால் மற்றோர்க்குத் துறவறம் போதித்து இல்லறத்தைத் தூற்றியவர்கள் அல்லர். இல்லறத்திருந்து துறவியானதினாலும் அமைப்புகள் நிறுவி சமூகத் தொண்டாற்றியமையாலும் இருவருமே புத்தரோடு ஒப்பிடப்பட்டார்கள்.

புகழ்வோர் புத்தரோடு ஒப்பிடுவதற்கும் இகழ்வோர் புத்தரோடு ஒப்பிடுவதற்கும் வேறுபாடுண்டு.

சமரச சன்மார்க்க வாதிகளை புத்தரோடு இணைத்து இழிவுபடுத்துவது சைவசமயவாதிகளின் வழக்கம் என்பதை மாணிக்கவாசகரை புத்தரோடு ஒப்பிடுவதிலிருந்தும் அறியலாம்.

கருத்தொற்றுமை:

கள்ளுண்ணாமை, கொல்லாமை ஆகியவற்றை இருவருமே வற்புறுத்தினர். இவற்றை புறத்தூய்மை, அகத்தூய்மை பேணும் முயற்சியின் அங்கங்கள் எனவும் புரிந்துகொள்ளலாம்.

நாராயணகுருவின் இளமைக்காலத்தில் வள்ளலார் வாழ்ந்திருந்தார் எனினும் இருவரும் நேரடியாகச் சந்தித்துக்கொண்டமை இருவர் வரலாற்றிலும் பதிவாகவில்லை. ஆனால் வள்ளலார் பதிப்பித்த ஒழிவிலொடுக்கம் என்னும் தமிழ்நூலை நாராயணகுரு மலையாளத்தில் மொழிமாற்றம் செய்துள்ளமை கொண்டு நாராயணகுருவுக்கு வள்ளலாரையும் அவர்தம் நெறியினையும் தெரிந்திருக்க வேண்டும் என ஊகிக்கலாம்.

பசிநீக்கல்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை                 (குறள்: 322)

என வள்ளுவர் முன்வைக்கும் அறத்தைத் தலைமேற்கொண்டு வள்ளலார் பசிப்பிணி போக்க அன்னதான ஏற்பாடுகள் செய்து அணையா அடுப்புண்டாக்கினார்.  ஓரளவினோர்க்குப் பசிதீர்ந்தது எனினும் பசிக்காய்ப் பிறர்கை நாடும் பரதேசிகள் பல்கிப் பெருகினர்.

நாராயணகுரு பசிப்பிணி போக்க வருவாயருகிய தொழில்களைச் செய்துவந்தோருக்கு புதிய வேலைகளை இனங்காட்டி தன் பசி நீக்க தானே முயலும் வகைசெய்தார்.

பசித்தவனுக்கு உணவளித்தார் வள்ளலார். பசித்தவன் உணவினைத் தேடிக்கொள்ள வழிகற்பித்தார் நாராயணகுரு.

கொல்லாமை

கொல்லாமையை இருவரும் வற்புறுத்தினர். நாட்டார் தெய்வ வழிபாட்டை நீக்கிப் பெருந்தெய்வ வழிபாட்டை ஊக்குவிக்க அடிப்படைக்காரணங்களுள் ஒன்றாக நாட்டார் தெய்வங்களுக்கு இடப்படும் உயிர்ப்பலியைக் குறிப்பிடலாம்.

கொல்லாமை மேற்கொண்டவர்களுக்கு மட்டுமே இறைவன் அருள் தருவான் என்றும் கொல்லாமை மேற்கொள்ளாதவர்களைத் தள்ளிவிடுவான் என்றும் கூறுகிறார் வள்ளலார்.

கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்

தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்

தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி

எள்ளானை இடர்தவிர்த்திங் கென்னை ஆண்ட

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. (திருவருட்பா, 3936)

          … … ..கொல்லாமை குறித்தி டாரை

அடையானைத். . . .                    (திருவருட்பா, 3953)

கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார்

சொல்லால் உவந்தது சுத்தசன் மார்க்கந் துணிந்ததுல

கெல்லாம் அளிப்ப திறந்தால் எழுப்புவ தேதம்ஒன்றும்

செல்லா வளத்தின துத்தர ஞான சிதம்பரமே     (திருவருட்பா, 4053)

 

கொல்லாத நெறிதான் சிறந்த நெறி எனத் தெய்வமே தனக்குப் பல்காலும் உணர்த்தியதாகக் குறிப்பிடும் வள்ளலார் இறைவனையே கொல்லாத நெறியாகக் காண்கிறார் வள்ளலார். (திருவருட்பா, 4105)

கொல்லாமையை வலியுறுத்தி ஜீவகாருண்ய பஞ்சகம் பாடியுள்ளார் நாராயணகுரு.

எல்லாரும் ஆத்ம சகோதரர்கள்

எனும்சொல் நினைவிருந்தால்

கொல்வது எப்படி உயிர்களைக்

கொன்று தின்பது எப்படி         (ஜீவகாருண்ய பஞ்சகம், 1)

என்பது அவர் வினா.   கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்னும் குரலுக்கு மாற்றாக

     கொல்லாமை சிறந்தன்று ஊன்

    உண்ணாமை அதனினும் சிறந்தன்று

எல்லா மதங்களின் அடிப்படையும்

உணர்ந்தோர் கூற்றும் இதுதானே (ஜீவகாருண்ய பஞ்சகம், 2)

    கொல்லுதல் பாவமாகும் கொல்வித்து

உண்ணல் அதனினும் பாவமாகும் (ஜீவகாருண்ய பஞ்சகம், 4)

கொல்பவனை விலங்குக்குச் சமமானவன் என உரைக்கும் நாராயணகுரு, கொல்பவன் எத்தகைய நன்மைகள் செய்திருப்பவனாக இருந்தாலும் அவன் இழிந்தவனே எனவும் கூறுகிறார்.

கொலைவினை ராகிய மாக்கள் புலைவினையர்

புன்மை தெரிவார் அகத்து             (குறள், 339)

எனவும்

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி             (குறள், 334)

எனவும் வள்ளுவர் கூறுவதை வழிமொழிகிறார் நாராயணகுரு. நாராயணகுரு குறளின் நான்கு அதிகாரங்களை (கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார்பெருமை, வாழ்க்கைத் துணைநலம்) மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சாதியொழிப்பு:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனக் கொண்டு சாதி சமய பேதங்களால் நிலவும் தீண்டாமையைப் புறந்தள்ள முயன்றவர்கள் வள்ளலாரும் நாராயணகுருவும்..

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே  (திருவருட்பா, 5566)

என சாதிபேதத்தையும் மதபேத த்தையும் பேணி மோதிக்கொண்டழிவோரை நோக்கி அறிவுறுத்தும் வள்ளலார்

உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக

செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே      (திருவருட்பா, 970)

என மனிதகுலம் மட்டுமல்ல அனைத்துயிரும் சமம் என இறைவன் ஆணையிட்டதாக எடுத்துரைக்கிறார்.

     இறைவனோடு சேர்ந்த நொடியில் சாதிபேதங்கள் அழிந்துபோகின்றன எனவும் குறிப்பிடுகிறார்.

அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்

அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம்

இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்

எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம்

மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம்

மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன்

தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத்

திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே.

(திருவருட்பா, 5810)

 

     சாதியாச்சாரங்கள் சாத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன என்று கூறி அதனை வலியுறுத்துவோர்க்கு விடையாக

சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த

சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே

ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே

அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன் (திருவருட்பா, 5805)

அவ்வாறு உரைக்கும் சாத்திரங்கள் ஒரு பொருட்டல்ல என்று புறந்தள்ளுகிறார் வள்ளலார்.

     சாதியாச்சாரங்களிலும் மத பேதங்களிலும் ஆழ்ந்திருப்போர்க்கு தானும் தொடக்கத்தில் அவ்விதமே இருந்ததாகவும் தற்போது அதைக்கடந்து வந்ததாகவும் அறிவிக்கும் வள்ளலார் அத்தகையோரின் தாழ்நிலைக்கு இரங்கி இறையருள் நாடுகிறார்.

கான மேஉழல் விலங்கினிற் கடையேன்

காம மாதிகள் களைகணிற் பிடித்தேன்

மான மேலிடச் சாதியே மதமே

வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன்

ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன்

இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன்

ஞான மேவுதற் கென்செயக் கடவேன்

நாய காஎனை நயந்துகொண் டருளே.     (திருவருட்பா, 3311)

சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்

சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்   

(திருவருட்பா, 3319)

சாதிமத பேதங்கள் அழிந்துபோன ஓர் இலட்சிய உலகினையும் கற்பனைசெய்கிறார் வள்ளலார்.

சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப

நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற

பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்

வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.          (திருவருட்பா, 5508)

மனிதனுக்கு மனிதம் என்னும் சாதி மட்டுமே உண்டு என்று கூறும் நாராயணகுரு, கோவினங்களுக்கு மட்டுமே கோத்திரம் உண்டு என்கிறார். (ஜாதிநிர்ணயம், 1)

          ஒரு ஜாதி ஒரு மதம்

         ஒரு தெய்வம் மனிதனுக்கு

         ஒரு யோனி ஓருருவம்

         ஒரு பேதமும் இல்லை இதில்               (ஜாதிநிர்ணயம், 2)

என்பது நாராயணகுருவின் புகழ்பூத்த பொன்மொழி.

     மனிதப் பெண்ணிடமிருந்து பிறந்துவரும் அனைவரையும் ஒரே ஜாதியில் உள்ளவர்களாகக் கருதவேண்டும் என்பது நாராயணகுரு வாக்கு.

     ஒரு ஜாதியிலிருந்துதானே புறம்நீள்கிறது சந்ததி

    மனிதஜாதி இதை சிந்தித்தால் ஒரு ஜாதியில் உள்ளதாம் 

(ஜாதி நிர்ணயம், 3)

தலையில் பிறந்தவன், மார்பில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என வர்ணபேதம் பேசும் சாத்திரங்களுக்கு எதிர்க்குரல் இது.

ஜாதியில் உயர்ந்தவராகக் கருதப்படும் பெரியோர், ஜாதியில் தாழ்ந்தவராகக் கருதப்படுவோரிடம் பிறந்ததாகச் சொல்லப்படும்போது ஜாதியின் உயர்வு தாழ்வு பிறப்பால் வருவதில்லை அல்லவா என்கிறார் நாராயணகுரு. பறைச்சி பெற்ற பிள்ளை பராசர முனியாகப் போற்றப்படுவதையும் முக்குவச்சி பெற்ற பிள்ளை வேதவியாசனாகப் போற்றப்படுவதையும் எடுத்துரைத்து உயர்வும் தாழ்வும் பிறப்பால் வருவதல்ல என வள்ளுவன் வழி நிற்கிறார்.

ஜாதிபேதம் உண்மை எனக்கொண்டால் விலங்கியலின்படி இத்தகைய பரிணாமம் சாத்தியமில்லை அல்லவா என்றும் வினாத்தொடுக்கிறார் நாராயணகுரு.

வள்ளலாரும் நாராயணகுருவும் ஒன்றுபடும் இடங்களை அவர்தம் படைப்புகள் வழி ஆய்ந்தெழுதின் ஒருபெரு நூலளவு விரியும்.

---

துணை நின்ற நூல்கள்:

 

  1. திருக்குறள் - திருவள்ளுவர்
  2. திருவருட்பா - வள்ளலார்
  3. ஜாதிநிர்ணயம் - ஸ்ரீநாராயணகுரு - மலையாள மூலம்
  4. ஜீவகாருண்ய பஞ்சகம் - ஸ்ரீநாராயணகுரு - மலையாள மூலம்