ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

வள்ளலாரின் இறைநெறிக் கொள்கைகள்

முனைவர். (திருமதி) மா. ரமாதேவி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, செல்லம்மாள் மகளிர் கல்லூரி, கிண்டி, சென்னை 08 Dec 2020 Read Full PDF

 

    வள்ளலாரின் இறைநெறிக் கொள்கைகள்

 

முனைவர். (திருமதி) மா. ரமாதேவி,

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

செல்லம்மாள் மகளிர் கல்லூரி,

கிண்டி, சென்னை - 600 032.

 

 

 

Abstract:

 

Vallalar has made Godliness as love and Philosophical information as their content to make everyone understand the divine Ethics which is the principle of his poems, is the purpose of this study. The study is based on the events in our myth which highlights the glory and greatness of the Almighty (God). The Sub- Topics of this study are about the Divine ethics, the capacity of the line of credits for the living beings un the world, the greatness and the characteristics of God, the human nature in praising God and finding God  in nature Moreover, this study approaches the explanation Methods and performance Methods for this research.

 

 

ஆய்வுச்சுருக்கம் :

     வள்ளலார் இறைபக்தியைக் காதலாக்கி, தத்துவச் செய்திகளை அதன் உட்பொருளாக்கி யாவரும் அறிந்துகொள்ளும் வகையில் அகமரபில் பாடிய பாடல்களில் காணும் இறைநெறி கொள்கைகளை ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். புராண நிகழ்வுகளில் இறைவனின் பெருமையும், பேராற்றலும் பெரிதும் வெளிப்படுதலால் அவற்றை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

          இறைநெறி, உலக உயிர்களுக்கு பற்றுக்கோடாகும் தன்மை, இறை பெருமைகளும் குணவியல்புகளும், அடியாரை போற்றும் பண்பு, இயற்கையில் இறைவனை காணும் தன்மை ஆகிய உட்தலைப்புகளின்கீழ் ஆய்வுப்பொருள் விளக்கப்பட்டுள்ளது. 

     மேலும் இவ்வாய்வு விளக்கவியல் முறையிலும், திறனாய்வு முறையிலும் அணுகப்பட்டுள்ளது.

 

 

 

 

திறவுச் சொற்கள்:வள்ளலார்,இறைக்கொள்கை,தமிழர் சமயம்,தமிழர் இறைநெறி,ஆன்மீகம்

 

முன்னுரை :

மனித வாழ்வோடு தொடர்புற்று அமைவதாலேயே இலக்கியம் மனதைக் கவருகின்றது. அத்தகைய இலக்கியத்தைப் படிக்கும்போது நம் வாழ்வோடு நெருங்கிய, புதிய பேருறவு கொள்ளுகின்றோம்.  மனிதன் வாழ்வில் கண்டதும், அனுபவித்ததும், நினைத்ததும், உணர்ந்ததும் ஆகியன இதில் வெளிப்படுவதால், இது வாழ்வு பற்றிய சொல்லுருவமாக அமைகின்றது.

     காலந்தோறும் மாறிவரும் பண்பாட்டுக்கும் சூழலுக்கும் ஏற்றவகையில் பல்வேறு இலக்கியங்கள் தோன்றியுள்ளன.  பொருண்மை அமைப்பாலும், வடிவ நிலையாலும், நோக்கு நெறியாலும் மாறுப்பட்டு விளங்கும் இலக்கியங்கள் பலபல.  ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புலவர்கள் தங்களது பாடுபொருளுக்கும், அணுகுமுறைகளுக்கும் இயைந்து நிற்கும்படி தங்களது இலக்கிய நெறிகளை வகுத்துக் கொண்டனர்.

     சமயவுலகில் அருட்சான்றோர்கள் பலரும் தத்தம் கடவுளர்களையே ஆன்மீக நாயகர்களாக ஏற்றுப் போற்றியுள்ள நெறியை பின்பற்றி வள்ளலாரும் தம் தோத்திரப் பாடல்களில் இறைமையுணர்வு ஊட்டுவதற்குத் தமிழுக்கே உரிய அகமரபுகளைக் கையாண்டுள்ளார். 

 

இறைநெறி:

‘தான் வேறு தன் கணவன் வேறு’ என்றில்லாமல் தன் கணவனுக்கே தன்னை முற்றுமாக்கிக் கொள்ளும் கற்பரசி போல, இறைவனைப் புகல் அடைந்தால் தானே அவன், அவனே தான் என்ற இறை அநுபூதி நிலை அடையலாம்”1 என்பதை உணர்ந்து நாயகன்-நாயகி பாவத்தில் பாடல்களைப் புனைந்துள்ளார்.

     காலமெல்லாம் அன்பையும் அருளையும் போதித்து, ஆன்மீகம் தழைக்கச் செய்து, மனித நேயத்திற்கு மகுடம் சூட்டிய இராமலிங்க வள்ளலார், அகப்பாடல் பாடியதன் நோக்கம் யாதெனில், இறைவன் பெருமையை பேசுவதற்கும், அவ்விறைவன் கோயில் கொண்டுள்ள தலங்களை போற்றுவதற்குமேயாம். எல்லாம் வல்ல இறைவனின் திருமேனியழகிலும், குணவியல்பை வெளிப்படுத்தும் புராண நிகழ்வுகளிலும் அவ்விறையின் பெருமையும், பேராற்றலும் பெரிதும் வெளிப்படுதலால் அவற்றை வள்ளலார் தம் அகப்பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

     இராமலிங்க வள்ளலார் இளம்பருவம் முதலே முருகனை வழிபடு கடவுளாகக் கொண்டவர்.  முருகனையே முதன்முதலில் பாடினார். முருகனே வள்ளலாருக்கு இளமையில் கல்வி பயிற்றினான். வள்ளலார் பாடிய ஆறுதிருமுறைகளுள் முதல் திருமுறை முழுவதும் முருகன் திருமுறையேயாம். கந்தகோட்டத்து முருகனை, திருத்தணிகை முருகனை, ஒற்றி முருகனை, புள்ளிருக்கு வேளூர் முருகனை, சிங்கபுரி முருகனை வழிபட்டார்.

     “வள்ளலார் முதலில் முருக உபாசகர். பின்னர் சிவபக்தர், அதன் பின்னர் நடராசர் மீது மையல் கொண்டவர். இறுதியில் அருட்பெருஞ்சோதி அடியார்”2 என ஊரன் அடிகளார் கூறியுள்ளார்.

     முருகனைப் பற்றி வள்ளலார் பலவிடங்களில் பேசுகின்றார். முருகனைப் புராண முறையில் காண்பது ஒருமுறை. தத்துவமுறையில் காண்பது மற்றோர் முறை;  எனினும், அவனது அருட்செயல்களையும் வடிவத்தையும் புராண முறையில் கூறுவதே பெருவழக்காகும்.

 

உலக உயிர்களுக்கு பற்றுக்கோடாகும் தன்மை :

     முருகப்பெருமானைப் பற்றிப் பல கதைகள் புராணங்களில் காணப்படுகின்றன.  சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய தீச்சுரில் இருந்து உதித்தவர். என்றும், சிவபெருமான் ஓங்காரத்திற்குப் பொருள் யாது என்று வினவ, முருகன் தந்தைக்கு ஓங்காரத்தின் பொருளை உபதேசித்தார் என்றும் பல செய்திகள் கூறப்படுகின்றன.

    சிவனுடைய நெற்றிக்கண் சுடர்களில் இருந்து அவதரித்த வரலாறு பற்றி வள்ளலார்,

     சிவந்த கண்களையுடைய விடையேறும் சிவபெருமான்

      அளித்தருளும் மகனாகிய முருகப்பெருமான்3

என்று உரைக்கிறார். மேலும்,

 

     ஆமல ருடையாட் கென்பெயர் பலவாம் அவையுள்ளே

      ஓமல ரடிகே ளொன்றினை யொன்றென் றுரையாயே4

என்ற பாடலில், பிரணவப் பொருளை உணர்த்தருளிய முருகனிடத்து வள்ளலாராகிய தலைவி, தலைவனாகிய முருகனிடத்து தூது செல்லுமாறு வண்டினை வேண்டி நிற்கின்றார்.

இப்புராணச் செய்தியை வள்ளலார் தம் அகப்பாடலில் கையாண்டதன் நோக்கம் யாதெனின், உலக உயிர்களுக்கு பற்றுக்கோடாக அமைந்த பிரணவப் பொருளை இவ்வுலகிற்கு உணர்த்திய முருகப்பெருமானே, தம் உயிருக்கும் பற்றுக்கோடாக அமைபவன் என்ற கருத்தை வலியுறுத்தவேயாம்.

 

இறை பெருமைகளும், குணவியல்புகளும்:

வள்ளலார் பாடிய அகப்பாடல்களில் சிவபெருமான் குறித்த புராணச் செய்திகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.  இச்செய்திகள் இறைவனை இன்ப வடிவாகவும், அருள் வடிவாகவும் காட்டவல்லன.  எவர்க்கும் எந்நாளும் எளிமையாகக் காட்சி வழங்கி, ஆறுதலும் இன்பமும் அளிக்கவல்லன.  வானவர் வாழ்வை மண்ணகத்தே காட்டக்கூடியன.  இத்தகைய புராணச் செய்திகளை கேட்கும்போது மனமாசு நீங்கி, நிலைத்த மதி அமையும் என்பது வள்ளலாரின் துணிபு.

சிவபெருமானின் பெருமையும், குணவியல்புகளும் வெளிப்பட்ட காரணங்களால் புராணங்கள் சிறப்புமிக்கதாக வள்ளலாரால் போற்றப்பட்டன.

சிவபெருமானின் திருவிளையாடல்களில் நஞ்சுண்ட வரலாறு, திரிபுரம் எரித்த வரலாறு, அடிமுடி தேடிய வரலாறு, மார்க்கண்டேயன் வரலாறு, அர்ச்சுனனுக்கு பாசுபதம் அளித்த வரலாறு, காமனை எரித்த வரலாறு, வையைக் கரைக்கண் பிரம்படிப்பட்ட வரலாறு என பலவற்றை வள்ளலாரின் அகப்பாடல்களில் காணமுடிகின்றது.

     முத்திக் குடையார் மண் எடுப்பார்

      மொத்துண் குழல்வார்5

என்ற இப்பாடல் அடிகளில் இறைவன் அடியார்கள் பொருட்டு பிரம்படிபடவும் சித்தமாயிருந்த செய்தி கூறப்பட்டுள்ளது.  இங்கு பிரம்படிபட்ட நிலையில் உலகத்திற்கு ஓர் இறையுண்மை உணர்த்தப்படுகின்றது. அஃது அனைத்துயிர்களிடத்தும் “அந்தரியாமிநிலை”யில் இறைவனிருக்கும் தன்மையேயாம்.

     மற்றொரு பாடலில், திரிபுரம் எரித்த வரலாற்றினை பற்றி கூறுமிடத்து,

     விருந்தார் திருந்தார் புரமுன் தீ

      விளைத்தார் ஒற்றிநகர் கிளைத்தார்6

என தன்னை வழிபாடு செய்தவர்களை ஆட்கொள்பவரும், அவர்களிடம் உள்ள ஆணவத்தைப் போக்குபவரும், தமது மார்பின் மாலையைக் காதலிக்கும் மகளிர் வேட்கை நோய்க்கு மருந்தாகுபவருமான சிவபெருமான், இந்நிலவுலகத்தில் நமக்கு திருவருள் இன்பம் தருவார் என்ற கருத்தை மெய்ப்பிக்கவே இப்புராணச் செய்தியைக் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றால் ஆணவம் அழிக்கப்படும் நிலையும், வேண்டுவோர்க்கு வேண்டுவன நல்கும் தன்மையும் அறியப்படுகின்றது.

     வள்ளலாரின் அகப்பாடல் தலைவி இறைவனின் ஈரத்தையும், வீரத்தையும் எடுத்துக்காட்ட புராணங்களை கூறுவாள் என்று கொள்ளினும், பிரிவாற்றாது புலம்பும் தலைமகள் எதற்காக இடையிடையே இறைவனின் திருவிளையாடல்களைக் கூறினாள் என்பது சிந்திக்கத்தக்கதாகும்.

    இறைவனின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றும் பயன்கருதியே மேற்கொள்ளப்பட்டது;  பிறர் வாழத் தான் துன்பத்தை ஏற்றலே சிறந்த தலைமைக்கு அழகு என்னும் மெய்ப்பொருளை எடுத்துக்காட்டுவது; தன்னைவிடத் தாழ்ந்தோரிடத்தும் சிறியோரிடத்தும் உறவாடும் நீர்மைக்குணம்; சரண் அடைந்தவர்க்கு அடைக்கலம் தரும் மேன்மைப் பண்பு கொண்டு விளங்குவது; உயர்ந்த சரணாகதித் தத்துவத்தை உணர்த்தும் வகையால் அமைந்தது. இதன் காரணமாகவே, வள்ளலார் தமது அகப்பாடல்களில் புராணச் செய்திகளை இடம்பெறச் செய்தார் எனல் பொருந்தும்.

 

அடியாரை போற்றும் பண்பு :

     சைவ சமயக் குரவர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரிடமும் அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டவர் வள்ளலார்.  சம்பந்தரை வழிபடு குருவாகவும், மாணிக்கவாசகரின் திருவாசகத்தை வழிபடு நூலாகவும் கொண்டவர். வள்ளலார் தம் திருவருட்பாவில் ஆங்காங்கே நால்வரின் சிறப்புகளையும் அற்புதங்களையும் கூறியுள்ளதுடன் நில்லாமல், ஐந்தாம் திருமுறையின் நிறைவில் நால்வரைப் பற்றியும் நான்கு அருள்மாலைகளையும் அருளியுள்ளார்.

     என்னை உடையார் ஒரு வேடன்

         எச்சில் உவந்தார் என்றாலும்

      அன்னை அனையார் என்றாலும்

         அறுக்க உரைத்தார் என்றாலும்

      துன்னும் இறையார் தொண்டனுக்கு

         தூதர் ஆனார்7

என்றாலும் தலைவனாகிய சிவபெருமான் மீது கொண்ட அன்பை விடேன் என தலைவி கூறுவதாக அமைந்த பாடலில், கண்ணப்பர், சிறுதொண்டர், சுந்தரர் ஆகிய மூவரின் வரலாற்றையும் கூறியுள்ளார்.

     …………….மலர்தூ வியமதனைக்

      கண்ணால் சுட்டார் கல்எறிந்தோன்

      வரப்பார் மிசைக்கண் வாழ்ந்திருக்க

      வைத்தார்8

என்ற பாடலில் மன்மதன் மலரை அம்பாக ஏவிச் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளானான்.  அடியவராகிய சாக்கியர் கல்லெடுத்து எறிந்தும் பெருமானின் அருளிற்கு உரியவரானார்.  மன்மதன் இறைவன் மீது மலரம்புகளை ஏவினாலும் அவனது உள்நோக்கம் இறைவனின் தவத்தைக் கலைப்பதே. ஆனால் சாக்கியர் கல்லெடுத்து எறிந்ததன் உள்நோக்கம் சிவனை வழிபடுவதேயாம்.

ஆகவே செய்யும் செயலை விட செயலின் நோக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.  இவ்வகையில் சிவபக்தர் தாம் கல்லெறிந்து வழிபட்ட செயல் இறைவனுக்கு உவப்பாயிற்று. அதனால் இறைவன் இக்கற்களையே நறுமலர்களாக ஏற்றுக்கொண்டான்.

இதனால், இடைக்கால அருளாளர்கள், எந்தவொரு செயலும் அவனின்றி நடவாது என்பதை உணர்ந்து “அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என்பதையே தம் செயலின் தாரகமந்திரமாகக் கொண்டொழுகினர் என்பது பெறப்படுகின்றது.

இத்திருவிளையாடல்கள் எல்லாம் பெரும்பாலும் அடியார் பொருட்டு அருள்சுரந்த வரலாறாக இருக்கத் தன் பொருட்டு தன் காதல் நோய் தணிதற்பொருட்டு பெருமான் வரலாகாதோ எனும் ஏக்கத்தால் தலைமகள் பாடினள் எனக் கருதலாம்.

    இறைவனின் திறம் கூறும் பாடல்களில் இலக்கியச் சுவையும் இடம்பெற்றால்தான் கற்போர் மனதில் பக்தியுணர்வு மிகப் பதியும் என்று கருதிய வள்ளலார், உலக இயல்பு கூறுதற்கும், சமய நம்பிக்கையை வலுப்பெறச் செய்வதற்கும், மக்களுக்கு வாழ்க்கையிலே பற்று ஏற்படுவதற்கும், இறைவனின் செயல்கள் எல்லாம் உலக உயிர்களின் நலன் கருதியே நிகழ்கின்றன என்பதை வலியுறுத்துவதற்கும் புராண நிகழ்வுகளைக் குறிப்புகளாய் அமைத்து பல்வேறு நிலைகளில் பாடியுள்ளார்.  சீவன் சிவனாகும் அரியத் தத்துவத்தை நாயகன் நாயகி பாவனையால் பாடி விளங்க வைத்துள்ளார்.

 

இயற்கையில் இறைவனை காணும் தன்மை :

நாயன்மார்களைப் போல் வள்ளலார் தல வழிபாட்டினை அதிகமாகச் செய்யாமல் போனாலும் தலவழிபாட்டின் பொருண்மையைத் திருவருட்பா உரைநடைப் பகுதியில் கூறியுள்ளார்.  இஃது, வள்ளலார் உருவ வழிபாடும், தல வழிபாடும் மேற்கொண்டார் என்பதை அறிய துணைசெய்கின்றது.

     வள்ளலார் தம் அகப்பாடல் பதிகங்களில் தில்லை நடராசனையும், திருவொற்றியூர் தியாகேசனையும், திருத்தணிகை முருகனையும் தம் உள்ளம் கவர்ந்த நாயகனாகக் கொண்டு தலைவி, தோழி, தாய் ஆகியோர் நிலையில் நின்று பாடல்களை புனைந்துள்ளார். அப்பாடல்களில் அத்தலங்களின் இயற்கை வளத்தையும் காட்சிபடுத்தியுள்ளார்.

     கருமுகில் தவழும் தணிகை9

     மரங்கள் நிறைந்த மலையின்கண்

      சிந்தாமணி போன்றுள்ள தணிகை10

     வானளாவும் சோலைகளின் செறிவால்

      அழகு பொருந்திய தணிகை11

என திருத்தணிகையின் இயற்கை வளத்தை இயம்புகின்றார்.

     இயற்கையில் இறையைக் கண்டவர் எனக் கூறும்படி இறையுறை கோயில்களைப் பாடும்போது சூழலான இயற்கையையும் வருணித்துள்ளார். இறைவனின் பெருமையை பேசுமிடத்து இயற்கையழகைப் பாடுவதும், சிலவிடத்து இயற்கையே முதன்மை பெற்று நிற்றலையும் காணும்பொழுது, இயற்கையில் உள்ளம் ஈடுபட்டபோதும் வள்ளலார் இறையீடுபாட்டில் பெறும் அனுபவத்தையே பெறுகிறார் என்பதை உணரமுடிகின்றது.  இறையுறைவதால் இயற்கைக்கு அளிக்கப்பட்ட ஏற்றம் என இதனை கருதலாம்.

 

 

முடிவுரை  :

  1. உலக உயிர்களுக்கு பற்றுக்கோடாக அமைபவன் இறைவன்.
  2. புராணச் செய்திகள் இறைவனை இன்ப வடிவாகவும், அருள் வடிவாகவும் காட்டவல்லன.
  3. இறைவனைக் குறித்த செய்திகளை கேட்கும் பொழுது மனமாசு நீங்கி, நிலைத்த மதி அமையும் என்பது வள்ளலாரின் துணிபு.
  4. இறைவனின் திருவிளையாடல்கள் அனைத்தும் சரண் அடைந்தவர்க்கு அடைக்கலம் தரும் மேன்மை பண்பை கொண்டு விளங்குவது.  இதன் காரணமாகவே, வள்ளலார் தமது அகப்பாடல்களில் புராணச் செய்திகளை இடம்பெறச் செய்தார்.
  5. அனைத்துயிர்களிடத்தும் ‘அந்தரியாமிநிலை’யில் இறைவனிருக்கும் தன்மை
  6. செய்யும் செயலை விட செயலின் நோக்கம் முக்கியத்துவம் பெறும் தன்மை
  7. ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதையே அருளாளர்கள் தம் செயலின் தாரகமந்திரமாக கொண்டொழுகிய தன்மை.
  8. உலக இயல்பு கூறுவதற்கும், சமய நம்பிக்கையை வலுப்பெறச் செய்வதற்கும், மக்களுக்கு வாழ்க்கையிலே பற்று ஏற்படுவதற்கும் புராண நிகழ்வுகளைக் குறிப்புகளாய் அமைத்து பாடிய தன்மை
  9. சீவன் சிவனாகும் தத்துவத்தை நாயகன் நாயகி பாவனையால் பாடி விளங்க வைத்த தன்மை.
  10. இறையுறைவதால் இயற்கைக்கு அளிக்கப்பட்ட ஏற்றம்.

ஆகியன வள்ளலார் கண்ட இறைநெறி கொள்கைகளாம்.

 

தொகுப்புரை :

வள்ளலாரின் இறைநெறிக் கொள்கைகள் என்ற தலைப்பிலான இக்கட்டுரையில் அவர்தம் அகப்பாடல்களில் காணப்படும் இறைநெறிகளே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.  அதிலும் குறிப்பாக புராணச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டே வள்ளலாரின் இறைநெறி ஆராயப்பட்டன. மேலும் இவர்தம் அகப்பாடல்களில் தத்துவச் செய்திகளும், உளவியல் சிந்தனைகளும் மிகுதியாக காணப்படுகின்றன. எனவே, வள்ளலாரின் பாடல்களில் தத்துவச் செய்திகள், வள்ளலார் பாடல்களில் உளவியல் சிந்தனை ஆகிய தலைப்புகள் இவ்வாய்வின் மேலாய்வுக் களங்களாக கண்டறியப்பட்டுள்ளன. பின்வரும் காலங்களில் இவையும் ஆய்வுப்பொருளாக்கப்பட்டால் ஆய்வுச் சிறக்கும்.

 

 

அடிக்குறிப்புகள்

  1. கு. அருணாசலம், தமிழ்ப் பண்பாட்டில் வைணவம், பக். 163, சமுதாயம் பிரசுராலயம், கோவை, பதிப்பு : 1982
  2. இராமலிங்க அடிகள் வரலாறு, ஊரன் அடிகள், பக். 639, சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், முதற்பதிப்பு : 1971
  3. ஒளவை துரைசாமிப்பிள்ளை (உரையாசிரியர்), திருவருட்பா மூலமும் உரையும், முதல் திருமுறை, பா. 446, வர்த்தமானன் பதிப்பகம், மறுபதிப்பு : 2010
  4. மேற்படி, முதல் திருமுறை, பா. 449
  5. மேற்படி, இரண்டாம் திருமுறை, பா. 1582
  6. மேற்படி, இரண்டாம் திருமுறை, பா. 1565
  7. மேற்படி, இரண்டாம் திருமுறை, பா. 1699
  8. மேற்படி, இரண்டாம் திருமுறை, பா. 1577
  9. மேற்படி, முதல் திருமுறை, பா. 493
  10. மேற்படி, முதல் திருமுறை, பா. 496
  11. மேற்படி, முதல் திருமுறை, பா. 409