ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பாரதி - அரவிந்த கோஷ் சம்பாஷணை

முனைவர் தே. தேன்மொழி வேல்ஸ்அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி உயராய்வு நிறுவனம், பல்கலைக்கழகம்.பல்லாவரம், சென்னை 08 Dec 2020 Read Full PDF

ABSTRACT

Bharathiyar. revolutionary poet had done many remarkable achievement in Tamil Literature. His literary  talent not only grew up Tamil literature and patriotism but also carried out every corner of the Tamil society. He wrote poems and songs. They stimulated nationalism among the people. He dedicated his whole life to the freedom struggle in India. As result of it. Thousands of people came forward to support him in his efforts. One of them was Aurobindo-Gose. He came to puthucherry for sprituval. He befriended Bharathiyar.Their friendship and conversation carried a strong basement in their efforts to freedom struggle .on the other hand. Aurobindo-Gose also published many works in English literature related to freedom movement. One of them was` karmayogi`.Bharathiyar's `India News`was so famous in the period. Therefore. The aim of this article is to analyse their conversation. revolutionary principle. Struggle against Government and Nationalism. Moreover. It would also highlight how their conservation stimulated patriotism among the Indian people before Indipendence.

Keywords :Bharathiyar. Modern literature.

ஆய்வுச்சுருக்கம்

மகாகவி பாரதியார் இலக்கியத்தில் படைத்துள்ள சாதனைகள் பல. அவரது இலக்கிய நுண்ணறிவு தமிழை வளர்த்ததோடு சுதந்திரப்பற்றை. பட்டிதொட்டி எங்கும் சென்று சேர்க்க பயன்படுத்தினார். அவரது பாடல்கள். கவிதைகள். காப்பியங்கள் போன்றவை தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சுதந்திரத்திற்காக போராடிய போராட்டத்தில். அவரது வாழ்வில் இணைந்து செயல்பட்டவர் பலர். அதில் அரவிந்த கோஷ் பாரதியின் புதுச்சேரி வாழ்வில் இணைந்து செயல்பட்டவர்.இவர்களின் நட்பு உரையாடல் போன்றவை இந்தியாவின் சுதந்திரத்தைக் குறித்ததாகவே அமைந்தது. அரவிந்தரின் கர்மயோகி. பாரதியின் இந்தியா இதழ். பாரதி-அரவிந்தர் சம்பாஷணை (உரையாடல்) போன்றவற்றில் வெளிப்படும் விடுதலை குறித்த விழிப்புணர்வு கொள்கைகள். அரசுக்கு எதிரான போராட்டங்கள். தேசப்பற்று போன்ற செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மேலும் அக்கால நண்பர்கள் இடையே நிகழ்ந்த உரையாடல்கள் தேசத்தின் விடுதலைக்கு வித்திடும் வகையில் அமைந்ததை இக்காலத்தோர் அறியும்படி செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

திறவுச்சொற்கள்: தேசியகவி ,பாரதியார், அரவிந்தகோஷ், சம்பாஷ்னைகள், தமிழ் கவிஞர்கள்.

முன்னுரை

    தேசியக் கவி பாரதியாரைத் தமிழுலகில் அறியாதவர் இல்லை. வீரந்ததும்பும் பாடல்களும், மனத்துட்புதைந்து, பொதிந்து கிடக்கும் சுதந்திர தாகத்தை உயிர்ப்பித்து அதனையெழுப்பி, நம்மை சுதந்திர வேட்கையர்களாகச் செய்யும் பாடல்களும் தந்த வீரமகன்தான் நமது பாரதி அரவிநித கோஷ் – பாரதி இவர்களின் சம்பாஷனை குறித்து ஆராய்வதே இக்கட்டுரை ஆகும்.

பாரதியார்

     கல்வியென்னும் கண்களற்றவர்களாக கருதப்படும், ஒருவேளை உப்புக்கும் அரிசிக்குமே தன்வாழ்நாளை விற்றுத் தவிக்கும் பாமர மக்களுக்கு, அவர்களுக்கு சீர்திருத்தம் அடையும்படி இலேசான இசைகளில் மனதைக் கவர்ந்து மாண்புறச் செய்ய வந்தவர்தான் பாரதி. இவரது வீரத்தமிழ்ப்பாடல்களை நாம் படிக்கும்போது, நம் உள்ளமும், உணர்வும் எழுந்து குதித்துக் கூத்தாட ஆரம்பித்து விடுகின்றன.

     சுதந்திரமே மனித வாழ்க்கையின் இலட்சியம். எத்தனை துன்பங்கள் வந்து சேர்ந்தாலும் சுதந்திரத்தைப் பெறும் எண்ணத்தைக் கைவிடக் கூடாது. அதனை,

     இதந்தரு மனையினீங்கி, இடம்மிகு சிறைப்பட்டாலும்,

    பதந்திரு விரண்டுமாறி, பழிமிகுந் திழிவுற்றாலும்,

    விதந்தரு கோடியின்னல் விளைந்தெனை யழித்திட்டாலும்,

    சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே

 

1 (பாரதியாரின் தேசிய கீதங்கள்:29.பாரதியார்)

என்று தம் வீர மனவுறுதியைப் பாரதி வெளிப்படுத்தும்போது அவரது முழுஉணர்ச்சி உள்ளத்தையும், உறுதியையும் அறிய முடிகிறது.

அரவிந்த கோஷ்

     அரவிந்த கோஷ் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், யோகி, தத்துவஞானி எனப்பன்முகம் கொண்ட மானுட அறிஞர் ஆவார். விடுதலைப்போராட்ட வீரராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, ஆன்மிகவாதியாக வாழ்ந்தவர். ஆகஸ்டு 15, 1872இல் கொல்கத்தாவில் பிறந்த இவரது இயற்பெயர் அரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்பதாகும். இவரது இளமைக்காலங்களில் படித்துக் கொண்டிருக்கும் போதே புரட்சிக்கரமான சிந்தனையாளராக விளங்கிய அரவிந்த கோஷ் அவர்கள் உலக இலக்கியங்கள், வரலாறு, புவியியல் என அனைத்தும் கற்றுத் தேர்ந்தவராக விளங்கினார்.

     தன்னுடைய 21வயது வரை இங்கிலாந்தில் கல்வி பயின்று தாய்நாடு திரும்பி பரோடா சமஸ்தானத்தில் அரசப் பணியில் ஏழு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு வங்காள தேசிய கல்லூரியில் முதல்வராக பணியைத் தொடர்ந்தார். இந்தியாவில் கர்சன் பிரபுவின் சூழ்ச்சியால் ஏற்பட்ட வங்கப் பிரிவினையைக்கண்டு கொதித்துப்போன அரவிந்த கோஷ் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அப்பிரிவினையை எதிர்த்தார். தேச விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு ‘வந்தே மாதரம்’ இதழை ஆரம்பித்து அரசுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

     1907, 1908-லும் இருமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ‘கர்மயோகி’, ‘தர்மா’ போன்ற பத்திரிகை மூலம் மக்களிடையே சுதந்திரவேட்கையைத் தூண்டும் கட்டுரைகள் எழுதி விழிப்புணர்வஏற்படுத்தியவர்.2(www.encyclopedia.com/topic/Aurobido-Gose.)

பாரதியும் அரவிந்தரும்

     பாரதியின் புதுச்சேரி வாசத்தை உள்ளது உள்ளபடி நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் காலக் கண்ணாடியாக பாரதியின் ‘சித்தக்கடல்’ என்னும் நூல் விளங்குகிறது. திலகரின் கொள்கையையும் வழியையும் ஆதரித்துத் தமது ‘இந்தியா’ பத்திரிகையில் ‘எரிமலையாய்’ எழுதிக் கொண்டிருந்த காலம் பாரதிக்கு நெருக்கடியைத் தந்தது. திலகர் கோஷ்டி மீது பிரிட்டிஷ் அரசாங்கம் அடக்குமுறைக்கு ஆளாக்கியபோது, பாரதி மீதும் ‘இந்தியா’ பத்திரிகை மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தலைப்பட்டதும் பாரதியின் நண்பர்கள் அவரை உடனே புதுச்சேரிக்கு போய் விடும்படி கூறினர். இந்தச் சமயத்தில் பாரதி தேச விடுதலைக்காகச் சிறை செல்வதைக் காட்டிலும், கவிதைத் தொண்டு மூலமாக விடுதலை வேள்வியை வென்றெடுக்க வேண்டும் என புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார்.

     நண்பர்களின் வேண்டுகோலுக்கிணங்கிப் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தபின் பாரதியார் பட்ட கஷ்டங்கள், சிறைக்கஷ்டங்களைக்காட்டிலும் அதிகம் என்றுதான் சொல்லவேண்டும். எண்ணெய் காய்கிற இரும்புச்சட்டியிலிருந்து, எரிகிற நெருப்பில் வீழ்ந்த கதையைப்போல் ஆயிற்று பாரதியின் புதுச்சேரி வாசம். 3.(புதுவையில் பாரதி. ப. கோதண்டராமன். பழனியப்பா பிரதர்ஸ். சென்னை.)

     1908ஆம் ஆண்டு புதுச்சேரிக்குச் சென்றதும் அங்கு அவரை அரசாங்கத்துக்குப் பயந்து பாரதியார் ஓடிவந்தவிட்டார் என்று ஏளனம் செய்தனர்.  சர்க்காரை எதிர்த்த கலகக்காரர் என்று எண்ணி பயந்தனர். ஈசுவரன் தர்மராஜா கோயிலைச் சுற்றியுள்ள வீதியில் அய்யங்கார் வீட்டில் குடிபுகுந்தார். பாரதி புதுச்சேரிக்குப் போனதும் மண்டைய்ம் சீனிவாசாச்சாரியாரும் போய்ச் சேர்ந்தார். புதுச்சேரியிலிருந்து ‘இந்தியா’ பத்திரிகை வெளியிட வேண்டும் என்பது தேசபக்தர்களின் யோசனை. சென்னையிலிருந்து அச்சு யந்திரம் வரவழைக்கப்பட்டு ‘இந்தியா’ பத்திரிகை வெளிவரத் தொடங்கியது.

     இந்தியா பத்திரிகைக்கு எதிர்ப்பு எழுந்து அது நிற்பதற்கு முன்னே தமது வீட்டை விளக்கெண்ணெய் செட்டியாரின் வீட்டிற்கு குடிமாற்றிக் கொண்டார். செட்டியாரின் வீடு இல்லையெனில் பாரதியின் புதுவை வாசம் பாழாய், பாலைவனமாய்ப் போயிருக்கும். அவ்வீட்டில் தான் சங்கப்பலகை கானமந்திரம், அபயவிடுதி, சுதந்திர உணர்ச்சிக் களஞ்சியம், அன்னதான சத்திரம், மோட்ச சாதன வீடு, ஞானோபதேச அரங்கம் போன்ற அனைத்துக்காரியங்களும் நடத்தப்பட்டன. 4.(மகாகவி பாரதியார் வரலாறு. Cylontamilnet/2018.)

     தேசபக்தர்களுடைய உணர்ச்சி துடிதுடிக்கிற அளவுக்குத் தக்கபடி அரசியல் நிர்வாகிகளுக்கு கோபம் உண்டாவது இயல்பு. அந்நேரம் பாரதியாரின் வாழ்வில் மீண்டும் நெருக்கடிநிலை ஏற்பட்டது. பாரதியார் மனமுடைந்து போக வேண்டிய தருணத்தில் அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். மானிக் டோலா வெடிகுண்கு வழக்குக் காலத்தில் காவலில் இருந்த அரவிந்தர் சிறையில் கண்ணனைக் கண்டு தைரியமும் மனச் சாந்தியும் கொண்டதாக கூறியுள்ளார். இத்தகையவரைக் கண்ட பாரதியார் உள்ளம் பூரிப்படைந்தார். அரவிந்தரின் சம்பாஷையினால் பாரதியாரின் ‘ஊக்கமும் உள்வலியும்’ வளர்ந்தன. பாரதியாரின் பேச்சினால் அரவிந்தரும் மகிழ்ச்சி அடைந்தார்.

     அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்ததும் பங்களா முதலிய வசதிகள் இல்லை. கலவை சங்கர செட்டியார் வீட்டு மூன்றாவது மாடியில் அரவிந்தரும் அவரது சிஷ்யரும் வாசம் செய்தனர். சாயங்கால வேளைகளில் பாரதியாரும் நெருங்கிய நண்பர்களும் சம்பாஷணைக்காக அரவிந்தரின் இடத்துக்குச் செல்வார்கள். சம்பாஷணையின் மாண்பிலும் இனிப்பிலும் அரவிந்தருக்கும் பாரதியாருக்கும் இணையாக யாரையுமே சொல்ல முடியாது. மேலும் பாரதி அரவிந்தரிடமிருந்து ரிக் வேதத்தில் உள்ள 200 ரிக்குகளையும் பயின்றார். 5.(புதுவையில் பாரதி. ப. கோதண்டராமன். பழனியப்பா பிரதர்ஸ். சென்னை.)

     அரவிந்தர் ‘கர்மயோகின்’ என்ற ஆங்கில வாரப்பத்திரிகையைச் கல்கத்தாவில் நடத்தி வந்தார். நாற்பது மலர்கள் மட்டுமே வெளிவந்தன. அவர் புதுச்சேரிக்கு வருமுன்னே கர்மயோகின் பத்திரிகை மறைந்து போனது. அரவிந்தரின் பத்திரிகையைத் தழுவி பாரதியார், ‘கர்மயோகி’ என்ற தமிழ்ப் பத்திரிகையை வெளியிட்டார். அது புதுச்சேரி ஸெய்கோன் சின்னையா அச்சுக்கூடத்தில் முத்து முத்தாய் அழகாய் அச்சடிக்கப்பட்டது. எழுத்துப்பிழை ஒன்றும் காண முடியாது. ‘கர்மயோகி’ பத்திரிகை தொடங்கிய காலத்தில் இந்தியாவில் கிளர்ச்சிகள் அதிகம் இருந்தது

     பாரதியார் – அரவிந்தர் சம்பாஷணையில் நவரசங்களும் ததும்பும், ஒழுகும். கவிதை, சரித்திரம், தத்துவம், அனுபவம், கற்பனை, ஹாஸ்யம், குறுக்கு வெட்டு, விஸ்தாரம் உண்மையை வெளிப்படுத்தும் ஆவல், அபரிமிதமான இலக்கியச் சுவை, எல்லை எல்லாத உடல்பூரிப்பு எல்லாம் இடையே இடைவிடாது நர்த்தனம் செய்யும். 6.(www.tamilvu.org)

     அய்யர், பாரதியார், சீனிவாஸாச்சாரியார் முதலியோர் அரவிந்தரின் வீட்டுக்குச் சென்று பேசத் தொடங்கினால் பொழுது போகிறதே தெரியாது. மாலை நான்கு மணிக்குப் பேச ஆரம்பித்தால் இரவு 10 மணி வரைக்கும் எந்த சிந்தனையுமே இருக்காது. சாப்பாடு குறித்த கவலையே இருக்காது. இந்த சம்பாஷணையின் அற்புதம் என்னவென்றால் சாதாரணமாக முடியாதவை என்று தோன்றும் காரணங்களையெல்லாம் சுளுவாகச் செய்து முடித்துவிடலாம் எனத்தோன்றும். மலையை நகரச் செய்யும் தன்னம்பிக்கை இவர்களிடம் இருந்தது.

     மிண்டோ – மார்லி சீர்த்திருத்தத்தின் மூலமாய் மாகாணச் சட்டசபையில் ஜனங்களின் பிரதிகள் பெரும்பான்மையில் இருப்பார்கள் என்று அரவிந்தர் தனது ‘கர்மயோகி’ பத்திரிகையில் தெளிவாக எழுதினார். சட்ட சபையில் கேள்வி கேட்கும் உரிமைதான் ஜனங்களுக்கு மிச்சப்படும் என்றும், கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சர்க்காரிடமிருந்து பெறமுடியாது என்று எழுதியதை தேச மக்கள் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அனுபவத்தில் தெரிந்து கொண்டார்கள்.

     சில்லறை சீர்த்திருத்தங்கள், புரட்சிகரமான பெரிய சீர்த்திருத்தங்களுக்கு விரோதிகள் என்று மார்லி பிரபு கூறியதை பாரதியார் ‘கர்மயோகி’யில் அழுத்தமாக எழுதத் தொடங்கினார். ‘பதஞ்சலி யோக சூத்திரம்’ போன்ற நூல்கள் சமஸ்கிருதத்தில் இருந்ததை விவேகானந்தர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கர்மயோகியில் பகுதி பகுதியாக வெளியிட்டார். பாரதியின் மொழிபெயர்ப்பு அருமை என அரவிந்தர் பாராட்டியுள்ளார். 7.(பாரதியின் வாழ்வில் புதுச்சேரி..கவிதா சரண். கீற்று. மார்ச் 2009.)

     ஒருமுறை சுந்தர ராமைய்யருக்கும் பாரதியாருக்கும் இடையில் வாதம் வந்தது. ‘எவனும் ஈசுவரத்தன்மையை அடையலாம்’ என்பது பாரதியார் கருத்து. ‘எல்லாம் ஈசன்’ என்பது அய்யருடைய வாதம். இதைப்பற்றி அரவிந்தரின் பங்களாவில் சம்பாஷனை பிறந்தது. “தத்துவத்தைத் தர்க்கத்தால் காணமுடியாது. அதை அனுபவிக்க வேண்டும்’ என்றார் அரவிந்தர். சுந்தர ராமய்யர் பாரதியின் ஆங்கிலப் புலமையைப் போற்றினார். ஆனால் வாதத்தை ஒப்புக்கொள்ளவில்லை. அய்யர், அரவிந்தர் எழுதிய கீதை கட்டுரைகளை அழுத்தமாகக் கண்டித்திருக்கிறார். வாதமும் கண்டனமும் இப்புலவர்களின் பொழுதுபோக்காகத் திகழ்ந்தது. 8.(பாரதியாரின் வாழ்வில் புதுச்சேரி. கவிதா சரண். கீற்று. மார்ச் 2009.)

     இந்தியா பத்திரிகையில், நாடு விரைந்து சுதந்திரம் அடையவதற்காகத் தீவிர தேசிய இயக்கத்தை நடத்திய தேசியவாதிகளுக்கு முட்டுக்கட்டை போட்ட மிதவாதிகளை பாரதி தயக்கமின்றித் தாக்கி எழுதினான். கேலிச்சித்திரம் ஒன்றின் அவர்களைச் ‘சுதேசிய ஒளிக்கு அஞ்சும் ஆந்தைகள்’ என்று பழித்தான். பிரிட்டிஷாரின் அதிதீவிர விசுவாசியான வி. கிருஷ்ணசாமி ஐயரின் ‘கன்வென்ஷ்ன்’ முயற்சியைப் ‘பசுத்தோல் போர்த்த புலிக்குட்டி’ என்று தன் சித்திரத்தில் நையாண்டி செய்தான். சென்னையில் மிதவாதிகள் நடத்திய கூட்டத்தை ‘சென்னையில் ஆட்டுமந்தை’ என்று தலையங்கத்தில் பரிகசித்தான்.9.(புதுவையில் பாரதி. ப. கோதண்டராமன். பழனியப்பா பிரதர்ஸ். சென்னை.)

     பாரதி ‘இந்தியா’ பத்திரிக்கையில் எத்தனையோ சுவையுள்ள பல அரசியல், பண்பாடு, சமயம், சமூகம், கலை, மொழிகள் பற்றிய கட்டுரைகள், வரலாறுகளையும் எழுதினான். ‘அமிர்தபஜார்’, ‘வந்தேமாதரம்’, போன்ற வடநாட்டுப் பத்திரிகைகளில் வந்த அறிய கட்டுரைகளை மொழிபெயர்த்தார். அரவிந்தர் வங்காளத்திலும், சூரத் காங்கிரசுக்குப் பின் பல இடங்களில் ஆற்றிய சொற்பொழிவுகள், ‘வந்தே மாதரம்’. ‘கர்மயோகின்’ இதழில் எழுதிய கட்டுரைகள் ‘இந்தியா’ நிருபர் அரவிந்தரை கல்கத்தாவில் பேட்டி கண்ட விஷயங்கள், அரவிந்தர் தம் மனைவிக்கு எழுதிய கடிதங்கள், சிறுவர் கதைகள், ஞானரத்தின் பகுதிகளையும் இந்தியா இதழில் பிரசுரித்தார்.10. (பாரதியின் வாழ்வில் புதுச்சேரி. கவிதா சரண். கீற்று. மார்ச் 2009.)

     1909ஆம் ஆண்டு இந்தியா இதழில் ‘மாதாவின்  கட்டளை’ என்ற கட்டுரை மூலம் தொழிலாளிக்கும், விவசாயிகளுக்குமே பூமி சொந்தமானது. மனித சமுதாயத்தில் இவர்களே தேனீக்கள் இவர்களை ‘வந்தே மாதரம்’ என்ற மந்திரத்தால் வணங்குகிறோம். இவர்களுடைய எண்ணங்களும் ஆசைகளும் பிரார்த்தனைகளும் மற்றோர்களால் கட்டளைகளாகப் பாராட்டிப் போற்றத் தக்கனவாகும் என்று எழுதியுள்ளார்.

     அதே ஆண்டு ஜுன் 12ம் தேதி இந்தியா இதழில் ‘கடல்’ என்ற தலைப்பில் அரவிந்தர் எழுதிய கவிதை ஒன்றின் மொழிபெயர்ப்பை வெளியிட்டிருந்தார்.

    வெள்ளைத் திரையாய், வெருவுதரு தோற்றத்தாய்

    கொள்ளை ஒலிக்கடலே நல்லறம் நீ கூறுதிகாண்

    விரிந்த பெரும்புறங்கள் மேல்எரிந்து உன் பேயலைகள்

    பொருந்தும் இடையே புதைந்த பிளவுகள்தாம்

    பாதலம்போல் ஆழ்ந்திருப்பப் பார்க்கரிதாய் அவற்றின்

    மீது அலம்பி நிற்கும் ஒரு வெள்ளைச் சிறுதோணி

11.(இந்தியா இதழ். கடல். அரவிந்தர். ஜூன் 12.)

என்று தொடங்கும் கவிதையை தாய் நல்லுணவு சமைப்பதைப் பின்பற்றிக் குழந்தை மணற்சோறாக்கி விளையாட்டுச் சமையல் செய்வதைப் போல, அந்த மகானுடைய செய்யுளை நான் அன்பினால் மொழிபெயர்க்க நேர்ந்தது என்று கூறுவதில் பாரதிக்கு அரவிந்தர் மீது இருந்த அன்பு வெளிப்படுவதை அறிய முடிகிறது.

     “ஸ்வதந்திரமில்லா வாழ்க்கை ஓர் வாழ்க்கையன்று; அது பன்றி வாழ்க்கையினும் இழிந்தது” என்ற பாரதியின் பிரகடனத்தோடு வெளிவந்த இந்தியா இதழ் அரசாங்கத்தின் அடக்கு முறையின் காரணமாக 13.03.1910இல் வெளியான கடைசி பத்திரிகையோடு நின்றுவிட்டது.12.(புதுவையில் பாரதி. ப. கோதண்டராமன். பழனியப்பா பிரதர்ஸ். சென்னை.)

     ‘இந்தியா’, ‘கர்மயோகி’ தவிர பாரதி புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் ‘சூர்யோதயம்’, ‘விஜயா’ ஆகிய பத்திரிகைகளையும் நடத்தி வந்தார். ஒரு சந்தர்ப்பத்தில்  இவையாவும் நின்று போய்விட அதன்பின்னர் புதுவையில் பாரதியின் படைப்புகள் யாவும் ‘காட்டாற்று வெள்ளம் போல’ கணக்கின்றி வெளிவரத் தொடங்கின. வேதாந்தப் பாடல்கள், சக்திப்பாடல்கள், பெண் விடுதலைப் பாடல்கள், சுயசரிதை, வசன கவிதை போன்ற தமிழின் உன்னதமான படைப்புகளும் ‘கண்ணன் பாட்டு’, ‘குயில் பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’ ஆகிய மூன்று சிறு காப்பியங்களும் வெளிவந்தது. கவிதையை மக்களின் கலையாக்கமாக மாற்றி அமைத்தது. மக்களின் வாழ்வையும், அதன் இன்பதுன்பங்களையும் மனித சமூகத்தின் விடுதலை வேட்கையையும், வாழ்வின் மகத்தான இலட்சியங்களையும், மனச் சித்திரங்களையும் அழகுபட, நேர்பட கவிதா மேன்மையோடு எவருக்கும் அஞ்சாது பதிவு செய்த இடம் புதுச்சேரி என்பதற்கு பாரதியின் படைப்புகளே சான்றாக அமைகின்றன.

முடிவுரை

     சுதந்திரப் போராட்டம், தேசப்பற்று, கலை, இலக்கியம் படைக்கும் படைப்பாற்றல் போன்ற பண்புகளில் ஒத்திருந்த பாரதியாரும் அரவிந்தகோஷ் அவர்களும் ஒன்றாக இணைந்து உரையாடி (சம்பாஷணை) பல அரிய செயல்களைச் செய்துள்ளனர். அவர்களின் உரையாடலில் நாட்டு விடுதலையும், மக்களிடையே விடுதலை குறித்த விழிப்புணர்வும் அடங்கியிருந்தன. அரசுக்கு எதிரான போராட்டங்கள், விழிப்புணர்வு கொள்கைகள் பற்றிய செய்திகளே இவர்களிடையில் காணப்படுகிறது. தேசப்பற்று மிகுந்த இவர்களைப் போன்ற பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒன்றிணைந்த நட்பே, இன்றைய சுதந்திர இந்தியா என்பதில் பெருமிதம் கொள்வோம்.

வாழ்க இந்தியா! ஓங்குக தேசப்பற்று!

 

அடிக்குறிப்புகள்

 

பாரதியாரின் தேசிய கீதங்கள்:29.பாரதியார்.

2. www.encyclopedia.com/topic/Aurobido-Gose.

3. புதுவையில் பாரதி. ப. கோதண்டராமன். பழனியப்பா பிரதர்ஸ். சென்னை.

 4. மகாகவி பாரதியார் வரலாறு. Cylontamilnet/2018.

5. புதுவையில் பாரதி. ப. கோதண்டராமன். பழனியப்பா பிரதர்ஸ். சென்னை.

 6. www.tamilvu.org

7. பாரதியின் வாழ்வில் புதுச்சேரி..கவிதா சரண். கீற்று. மார்ச் 2009.

8. பாரதியாரின் வாழ்வில் புதுச்சேரி. கவிதா சரண். கீற்று. மார்ச் 2009.

9. புதுவையில் பாரதி. ப. கோதண்டராமன். பழனியப்பா பிரதர்ஸ். சென்னை.

10. பாரதியின் வாழ்வில் புதுச்சேரி. கவிதா சரண். கீற்று. மார்ச் 2009

11.(இந்தியா இதழ். கடல். அரவிந்தர். ஜூன் 12.)

12. புதுவையில் பாரதி. ப. கோதண்டராமன். பழனியப்பா பிரதர்ஸ். சென்னை.

துணைநூற்பட்டியல்

1.பாரதியாரின் தேசிய கீதங்கள். பாரதியார்.

2.www.encyclopedia.com/topic/Airobindo-Gose.

3.புதுவையில் பாரதி. ப. கோதண்டராமன். பழனியப்பா பிரதர்ஸ்.

சென்னை .

4.பாரதியின் வாழ்வில் புதுச்சேரி. கவிதா சரண். கீற்று. மார்ச் 2009.

5.மகாகவி பாரதியார். வ. ரா.. சந்தியா பதிப்பகம். சென்னை.

6.பாரதியார் ஆய்வுகள் -சிக்கல்களும் தீர்வுகளும். சீனி. விசுவநாதன். மாடல் ஹவுஸ்லேன் .சென்னை.

7.பாரதியார் பெருமை. முல்லை முத்தையா. பாரதி பதிப்பகம். சென்னை.

8.பாரதி நினைவுகள். யதுகிரி  அம்மாள். அமுத நிலையம். சென்னை.

9.மனசாட்சியின் குரல் பாரதி. இளசை மணியன். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். சென்னை.

10.மகாகவி பாரதியார் வரலாறு. Ceylotamilnet /2008.

11.பாரதி-சித்தக்கடல் வலைப்பூ.

12.www.tamilvu.com

13.www.itstamil.com

14.tamilandvedas.com