ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஷோபாசக்தியின் ‘இச்சா’ இடுக்கண் வருங்கால் நகுதலும் துயரத்தைப் பகடி செய்தலும்

முனைவர் தெ.வெற்றிச்செல்வன் உதவிப்பேராசிரியர், அயலகத்தமிழியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 08 Dec 2020 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

    இனி தமிழிலக்கிய வரலாறு எழுதப்புகுவோர், உலகத்தமிழிலக்கியம் எனும் விரிந்த தளத்தில்தான் எழுதவேண்டும்; முடியும் என, கார்த்திகேசு சிவத்தம்பி கூறுவார். ஈழம், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் என திக்கெட்டும் தமிழ்முழக்கம் கேட்கிறது. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து, பிரான்ஸில் புகல் தரித்துள்ள ஷோபாசக்தி கவனிக்கத்தக்க, படைப்புகளால் அறியப்படுபவர். அவரது இச்சா ஒரு காத்திரமான படைப்பு எனும் வகையில், ஈழத் தமிழ் வாழ்வு சொந்தப்புலத்திலும் புலத்துக்கு வெளியே அயலிலும் அலைந்துழன்று கிடக்கிற நிலையைப் பகடி மூலமும் துயர்ப்படு வாதைகளை சொற்களால் புனைந்தும் காட்டும் இச்சா நாவலின் உள்ளும் புறமும் குறித்துக் கட்டுரை ஆய்கிறது.

திறவுச்சொற்கள் :

இச்சா,இனவெறி,குருதிக் கவிச்சு,சிங்களப்பாடகி,ஆலா,புளூடு

 

முன்னுரை

ஷோபாசக்தி, தமிழ்ப் புனைகதையாடலை, அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய வகையில் குறிப்பிடத்தக்கவரும் ; தமிழில் வாதை இலக்கிய வகைமையின் முன்னோடிக் கதைசொல்லி எனும் வகையில், காத்திரமான படைப்புகளால் கவனம் ஈர்த்தவருமான  நவீன படைப்பாளி. நாவல், சிறுகதை, திரைத்துறை, அல்புனைவு, எனப் பல்பரிமாணம் கொண்டவர் என்பதோடு, ராணுவமயப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டத்தை முரணியல்போடு அணுகியவர். பயங்கரவாதம் எத்தரப்பிலிருந்து வந்தாலும், அதை ஏற்கமுடியாது என, படைப்புக்குள் கண்டனமும் பகடியும் செய்தவர். அவரது ‘ம்’,  ‘கொரில்லா’, ‘வேலைக்காரிகளின் புத்தகம்’, ‘எம்.ஜி.ஆர்.கொலைவழக்கு’, ‘தேசத்துரோகி’,  ‘இச்சா’ என எல்லாப் படைப்புகளினதும் மையக்குருதியோட்டம் இப்படியாகவே அமையப்பெற்றிருக்கிறது எனலாம்.

 

நிறவெறிக்கும் இனவெறிக்குமான சிலுவைப்பாடு

 

“இலங்கையைக் கடவுள் படைத்தார். இந்தச் சிறையை பிரிட்டிஷ்காரர்கள் படைத்தார்கள். இதுவரையான இலங்கை வரலாற்றிலேயே, அதிக வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றிருக்கும் பெண் நான்தான். விடுதலையாகி வெளியே வரும்போது எனக்கு முன்னூற்று இருபத்தியிரண்டு வயதாகியிருக்கும். சுக்கிராச்சாரியாரின் சாபத்தால் முதுமையடைந்த யயாதிக்கு, அவனின் மகன் புரு, தனது இளமையைத் தானமாகக் கொடுத்ததுபோல, நான் விடுதலையாகிவரும்போது உங்களின் இளமையை  எனக்குத் தானமாகத் தரப்போவது உங்களில் எவர்? ஒரேயொரு நாள் இளமை மட்டுமே எனக்குத்தேவை” என்கிற வேண்டுகோளோடும் துயரத்தின் மீதான பகடியோடும் தொடங்குகிற நாவல், அகதிகளை இயேசுகளாகப் படிமப்படுத்திக் காட்டுகிறது. “எரிந்த  நகரத்தின் மேம்பாலங்களின் கீழும், பாதாள மெத்ரோ நிலையங்களிலும், நகரத்தின் ஒடுங்கிய குறுக்கு வீதிகளின் இருட்பொந்துகளிலும், கடல் அலைகளின் மீதும் நடந்துவந்த கருப்பும் பழுப்புமான இயேசு கிறிஸ்துகள், தாகத்தாலும் பசியாலும் வருந்திக் கிடக்கிறார்கள். அவர்களைக் குத்தும் குளிரைத் தணிக்க வஸ்திரங்களுமற்றவர்கள். பிரெஸ்ஸல்ஸ் நகரத்தின், நடைபாதைகளிலும் பூங்காக்களிலும் சுருண்டு கிடக்கும் இயேசு கிறிஸ்துகளை நான் ஒவ்வொருநாளும் பார்க்கிறேன். சிலரிடம் பேச்சும் கொடுத்திருக்கிறேன். கொந்தளிக்கும் மத்தியத் தரைக்கடல் அலைகள் மீது நடந்துவந்து அற்புதம் நிகழ்த்தியவர்கள் இவர்கள். கடந்த மூன்றுவருடங்களில் மட்டும் பதினான்காயிரம் இயேசுக்கள் மத்திய தரைக்கடலுக்குள் உப்பு நீரினால் அறையப் பட்டிருக்கிறார்கள்.” போர்ச்சமூகங்களில் சிலுவையில் அறையப்படுகிற கோரங்களைச் சொல்ல, இயேசு படிமம் ஷோபாசக்திக்கு அருள்பாலிக்கிறது. ஆனாலும், இங்கே அறையப்படுவதுதான் வேறு. சிலுவையில் அல்ல, உப்பு நீரினால் என்கிறார். கருப்பு இலக்கியத்தின் தந்தை எனப்படுகிற லாங்ஸ்டன் ஹியூக்ஸின் கவிதையொன்றில் தமது ‘கருப்பு இயேசு நாதர்’1 கவிதையில்,

                         

இயேசுவானவர்                           

ஒரு கருப்பனாக                           

திரும்பி வருவாரானால்                           

அது நல்லதல்ல                           

இயேசுவே

நீர் நிச்சயம் மீண்டும்                            

சிலுவையில் அறையப்படுவீர்

 

என்று எழுதுகிறார். ஈழத்திலிருந்து கனடாவில் புகல் தரித்துள்ள செழியனும்,

 

 நீர் காணப்படுவீராயின்

கைது செய்யப்படுவீர்

விசாரணை முடிவில்

சிலுவையில் அல்ல

தேசதுரோகியாக

மின்கம்பத்தில்

அறையப்படுவீர்2

 

என்று எழுதுகிறார். இப்படி,  நிறவெறிக்கும் இனவெறிக்குமான சிலுவைப்பாடாக, நீட்சி பெற்று  உலகளாவிய தொன்மமாகிவிடுகிறது. அது லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் ஆனாலும் செழியன் ஆனாலும் ஷோபாசக்தியானாலும் இயேசுவின் படிமம் இப்படிச் சமகாலப் பொருத்தப்பாட்டைப் பெற்றுவிடுகிறது.

 

நாவல் எழுதப்படுவதற்கான பின்னணியை, முன்னோட்டமாகக் கொண்டு, இரத்த ஞாயிறு என்றுதான் தொடங்குகிறார், ஷோபாசக்தி. நாவல் முழுவதுமே, வதைகளால் குருதி ஓடியபடியேதான் இருக்கிறது. குருதிக் கவிச்சு, எல்லாப் போர் இலக்கியங்களினதும், பொது அடையாளமாகிவிடவே செய்கிறது. செத்து மிதக்கும் பிணங்களின், அழுகிய நெடி  நாசியைத் துளைத்து, மனதையும் துளைத்துச் செல்லும் படைப்பாக்கமே போர்சார்ந்த புகலிடப் படைப்பாக்கமாவது, தவிர்க்க இயலாத ; முகத்திலறைகிற உண்மையாக இருக்கிறது.“எனக்குப் பத்துப் பன்னிரெண்டு வயதிருக்கும் போது, சாட்டி வெள்ளைக் கடற்கரையில் ஒருபிரேதம் அடைந்திருக்கிறது என, மக்கள் ஓடிச்சென்றார்கள். நானும் அவர்களுக்குப் பின்னால் காற்சட்டையைக் கைகளால் பிடித்தவாறே, ஓடினேன். அப்படியொரு கோரக்காட்சியை, நான் மறுபடி திரைப்படங்களில் கூடப் பார்க்கவில்லை. ஆறடிக்குள் உள்ள மனித உடல், உப்பு நீரில் நீண்டு வளர்ந்து பத்தடியாக இருந்தது. ஒரு குட்டி யானையின் பருமனாக இருந்தது. தோலின் நிறம், சுண்ணாம்பு வெள்ளையாக மாறியிருந்தது. கண்களை மீன்கள் பிடுங்கியிருக்கவேண்டும். அந்தப் பிரேதம் காற்றடைக்கப் பட்ட இராட்ச வெண்ணிற பலூன் போல, அலைகளில் துள்ளிக்கொண்டு வந்தது. அதேபோன்று, இலங்கைத்தீவே செத்துக் கடலில் வெள்ளைப்பிரேதமாக மிதந்து வருவதான ஒரு படிமம் இப்போது என் மனதில் தோன்றி என் இருதயத்தை முறித்துப்போட்டது” என்று ஈழத்தில் அண்மைக்காலத்தில்  நிகழ்ந்த (2019) கிறித்துவ தேவாலய குண்டுவெடிப்பு மற்றும் சிறுவயதில் கடலில் மிதந்து வந்த பிரேதம் ஆகியனவற்றை இணைவுபடுத்தி கதைக்குள் இழுத்துச்செல்கிறார். அதேவேளை நாடு கடந்து வந்து, ஏதோ நாட்களை நகர்த்தி, வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தாலும் சர்வதேச உளவு நிறுவனங்கள், போரில் ஈடுபட்டுப் பின், பெயர்ந்துவந்து அகதியான பிறகும் குறுங்குழுவாதங்கள்... நாடுகடந்தும் பாயும் சிங்களப் பெருந்தேசிய வாதிகளினது கண்காணிப்பு அரசியல்.. எனவே எந்த நேரமும் பழைய தொடர்புகள் குறித்து விசாரிப்புகள்... அகதி அந்தஸ்துகோரி விண்ணப்பிக்கையில் பின்தொடரும் நிழலாய்… போர்ச்சமூக உறவுகுறித்த ஆய்வுகள் என நீளும் வெளித்தெரியாத வாழ்வின் போக்கும் சித்திரிக்கப்படுகிறது.

 

“இந்த சிங்களப்பாடகி மனோலி கூஞ்ஞ, தனது கணவனையும் மாமனாரையும் கொலைசெய்த வழக்கில், மரணதண்டனை பெற்று, இங்குதான் இருக்கிறார். அவர் பாடும் ஒரு சிங்களப்பாடல் “அப மர தெமுவடா அப நகன ஹந்தா ஸட நொமினு எற்ற ..... என்று ஆரம்பிக்கும். “நீங்கள் எனது வாயைத் தைத்திருக்கலாம் குரல்வளையை முறித்துப்போட்டு இருக்கலாம். ஆனால், எனது குரலை எப்படி உங்களால் தொடமுடியும் என்று முடியும்.”3 என, நாவலில் இடம்பெறுகிறது. ஈழத்தில் சிங்களப் பகுதியிலும் பின்னர், போரால், நாடுகடந்த நிலையில் பிரான்ஸிலும் இப்படிப் பல புலங்களில் வசிக்க நேர்ந்த கட்டாயத்தால், தமிழ், சிங்களம், உரோவன், பிரெஞ்சு எனப் பல மொழி வழக்காறுகள், படைப்பில் இடம்பெறுவது, ஷோபாசக்தியின் தனித்துவக் கதையாடலுக்குக் கட்டியம் கூறுகிறது. உரோவன் மொழிச்சொற்கள் சிலவற்றையும் முகப்பிலேயே தமிழ் நிகரிகளோடு தந்திருக்கிறார், ஆசிரியர். மொழி மற்றும் இன அடையாள அரசியல் மேலெழுந்து வருகையில், சிங்களக் காடையரால் தாக்குண்டு சிதறிக்கிடக்கிற தமிழ்ச் சமூகம், சிங்கள மொழி இலக்கியத்தை, வழக்காற்றை மேற்கோள்களாக்கிக் கொள்வதில் ஒவ்வாமை அற்றிருப்பது என்பது கூட, ஒருவித படைப்பு ஜனநாயகமன்றி வேறென்ன? சேரன், ஜெயபாலன், குணாகவியழகன், தேவகுமாரன், எஸ்.பொ என, பல ஈழத்தமிழர் படைப்பாக்கங்களிலும் இப்போக்கு காணப்பட்டாலும், சேரனிலும் ஷோபாசக்தியிலும் இந்த ஜனநாயகத்தின் எல்லை, சற்று விரிந்தே கிடக்கிறது, எனலாம். மனோலி கூஞ்ஞ மொழிவதுபோல், குரல்வளையை முறித்துப்போட்டு இருக்கலாம். ஆனால், குரலை எப்படித் தொடமுடியும் என்கிற அறைகூவல்தான் போர்ச் சமூகங்களினது வாழ்வியலைத் தக்கவைக்கிறது என்றுகூடச் சொல்லலாம். 

     

ஒரு குயிலிலும் சிறிதான ஆலா, பறவையினங்களிலேயே அதிகதூரம் பறக்கக் கூடியது. பூமியின் ஒரு துருவத்திலிருந்து எதிர்துருவம் வரை பறக்கக்கூடியது என்றும் அத்தகு ஆலா பறவையைக் குறிக்கும்  kuldsed என்று உரோவன் மொழிச் சொல்லுக்குத் தமிழ் நிகரி தங்கச்சிறகுகள் என்றும்  சொல்லப்பட்டு தொடர்கிறது, கதை..…. ஆலா எனும் ஒரு பறவையின் பெயர் கொண்ட விடுதலைப்புலி கெப்டன் ஆலாவின் கதை, பொன்வண்டு போன்ற ஒரு விரலியில் (pen drive) சேமிக்கப்பட்டு, மர்லின் டெமி என்கிற உளவுத்துறை அதிகாரி மூலம் கொடுக்கப்பட்டு, பின் அக்கதை, முன்னும் பின்னுமாகவும் திருப்பங்களோடும் பன்முகவாசிப்புப் பிரதியாகவும் ஷோபாசக்தியால் இச்சா எனும் பெயரில் கதையாடப்படுகிறது என்ற புரிதலுக்கு வருகிறோம்.

 

போரூழியின் நினைவுத் தொழிற்சாலையிலிருந்து போரின் வடுக்கள், மனக்காயங்கள், கொடும் வாதையினால் விரையும் தளர்ச்சி, மூப்பு, அந்நியமாதல் விரட்டிவரும் அச்சம் இவற்றை இன்னொரு புலத்தில் ஓரளவு பாதுகாப்போடு வாழ்கிற போதும் இச்சா படைப்பில்,  “வயதாக வயதாக அச்சம் ஒரு நோயாக என்னில் தொற்றி விடுகிறது என நினைத்துக் கொண்டேன். இந்த அகதிவாழ்க்கை, ஒரு மனிதனின் சுயத்தை மெல்ல மெல்ல அழித்து  கடைசியில் அவனை அரைத்துண்டு விசா காகிதமாக உருமாற்றி விடுகிறது. ஒரு மெல்லிய காற்றுக்கே பறந்துவிடக் கூடியவனாக இருக்கிறான் நாள்பட்ட அகதி”.என்று எழுதுவதும்4“உயிர் தப்பிப்பிழைத்திருக்கும் என்னைப் போன்றவர்கள் உண்மையில் சாட்சியங்கள் இல்லை. நாங்கள் ஊமைகளாகவே மீண்டோம். மண்ணில் ஆழப் புதைக்கப்பட்டவர்களே முழுமையான சாட்சியங்கள்” 5 என்று எழுதுவதும் ஈழத்து அனுபவ மொழியாக மட்டுமல்ல…சர்வதேச சமூகத்துக்கும் பொது மொழியாகவே பார்க்கமுடியும்.  பதுமர்குடி எனும் ஈழத்தமிழ் குலக்குடியினது வாழ்வியல் வழக்காறுகள்… புளுடு எனும் பேய்சார்ந்த நம்பிக்கைகள்.. பேயோட்டுச்சடங்கு முறைமைகள்.. நம்பிக்கைகள்.. சிங்களப்பகுதிக்குள் தமிழ்ச் சிறுபான்மையாகச் சிக்கிவாழ நேர்ந்து, தாயாய்ப் பிள்ளையாய்ப் பழகி, உறவுகொண்டாடிப் பின் பகைப்புலமாகிப் போர்மேகங்கள் சூழ்ந்தகாலத்தின் கொடூரங்கள்…படுகொலைகள்…அவமானங்கள்… கழுத்தறுப்புகள் ஒப்பீட்டளவில் நெருக்கடி குறைந்த (?) தமிழர் செறிந்துவாழும் பகுதியில் வதியும் தமது ரத்தச்சொந்தங்களினது, போரச்சம் காரணமான புறக்கணிப்புகள்.. தனிமைப்படுத்தல்கள்… எல்லாவற்றையும் பதுமர்குடிக் கிளை மொழியால் சர்வதேசப் பின்னணியில் எழுதப்படும் எழுதுவினைமை கூடிய, புதிய கதைசொல்லலின்  ஈர்ப்பு…. துயரத்தைத் தொடர்ந்து பகடிசெய்து நகரும் தன்மை கொண்ட; அதேசமயம் மனதைப் பிழியும் வலிதரும் அனுபவங்கள்…என, போரின் உட்புகுந்து கதைக்கும் கதையாடலாக அமைகிறது இச்சா.

         

“நான் பிறந்த கிராமத்தின் பெயர் இலுப்பங்கேணி. இலங்கை வரைபடத்தில் இப்போது அது மடுப்பகம எனச் சிங்களத்தில் குறிப்பிடப் படுகிறது. என் அழகிய கிராமம் பட்டிப்பளை ஆற்றின் கரையிலிருக்கிறது, எங்கள் கிராமத்துத் தமிழ் மக்கள் அதைக் களியோடை ஆறு என்பார்கள். ஆறும் தனது பெயரை மறந்துவிட்டது. இந்த ஆற்றின் பெயர், இப்போது கல்லோயா எனச் சிங்களத்தில் ஆகிவிட்டது. எனக்கு ஒன்றரை வயதாயிருக்கும்போது, 400 தமிழ்மக்கள் ஊர்க்காவல் படையால் வெட்டிக் கொல்லப்பட்ட வீரமுனை சித்ரா யாத்திரைப் பிள்ளையார் கோயில் என்னுடைய கிராமத்திலிருந்து 15 கிமீ தூரத்தில்தான் உள்ளது. அந்த ஊர்க்காவல் படையின் தலைவன் முகமது ரியால் பின்னொரு நாளில் விடுதலைப் புலிகளின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டான் அப்போது எனக்கு ஏழுவயதிருக்கும்.” என்று நீளும் இப்பகுதி வழியாக, மொழி இனம் சார் அடையாள அழித்தொழிப்புகள் வல்லாண்மைகள் மிகு துலக்கமாகப் பதியப்பட்டு விடுகின்றன. சிங்கள ஊர்க்காவல்படை 400 பேரைக் கொன்றபோது ஒன்றரை வயது. பழிக்குப் பழியாக  சிங்கள ஊர்க்காவல்படையின் தலைவனை அழிக்கையில் ஏழரை வயது எனப் பதிவதில் தன்னைத் தற்காத்துக்கொள்ள, பதிலடி கொடுக்க ஆறு ஆண்டுகள் ஆகும் ஒரு விளிம்புச் சமூகமாக தமிழ்ச்சமூகம் காட்சிக்குள்ளாகிறது.        

 

 “அப்பா எங்கள் வீட்டுக்கு கிட்ட முட்ட வந்த பின்பும், புளூடு பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. சித்தப்பா வீட்டு முற்றத்தில் இருந்து அசைவதாக இல்லை சித்தப்பா ஆற்றாமல் போய் எனக்கு பெத்தாச்சியைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னார் . பெத்தாச்சி வீட்டுக்குள் இருந்தவாரே பெரிய குரலெடுத்து படு தூஷணத்தால் பேசத் தொடங்கினார். நானும் தம்பியும் திகிலில் அம்மாவுக்குள் சுருண்டு கொண்டோம் என்பதான, பதுமர் குடி வழக்காற்று நம்பிக்கைகளும் பேய் பிசாசு(புளுடு) குறித்த சுவாரசியமான செய்திகளும் இடம்பெறுகின்றன. எப்பேர்ப்பட்ட புளுடுவும் படுதூஷணமாகப் பேசினால் பயந்தோடிவிடும் எனும் அப்பாவித்தனமான நம்பிக்கை சிங்களப்பேரினவாதப் பேய்களுக்குப் பொருந்துமா என்ன? இருப்பினும் போர் சார்ந்த அச்சங்களுக்கு கையிலிருக்கும் இந்த நம்ம்பிக்கைகள் பொய்த்துப் போனாலும் விட்டுவிடமுடியாத வழக்காறுகள் தொடர்வதைக் காண்கிறோம்.

 “நான் ரகசிய விசாரணைக்குட்பட்டபோது, போர்த்துக்கீசர் காலத்து தண்டனை ஒன்றை எனக்கு வழங்குவார்கள். நிர்வாணமான எனது உடலின் கைகளைக் கட்டிவிட்டு குப்புறப் போட்டுவிட்டு என்னுடைய ஆசன வாய்க்குள் உருகிய பன்றிக் கொழுப்பை செலுத்துவார்கள். பின் என் மீது இரண்டு நாய்களை ஏவி விடுவார்கள். அவை ஆசனவாயை அப்படியும் இப்படியும் உறிஞ்சியும் முதுகுகளில் நகங்களால் கீறியும் விளையாடும். சற்றே அசைந்து நின்றாலும் சதையைக் கவ்விவிடும்”. இப்படியான ஆபத்தும் குரோதமும் வக்கிரமும் நிறைந்த தண்டனைகள் போர்ச்சூழல் வாழ்வை உக்கிரமானதாகக் காட்சிப்படுத்துவதை படைப்பு பேசிச்செல்கிறது.  

 “ஆண் நிழலில் நின்று போ, பெண் நிழலில் இருந்து போ என்பது பெத்தப்பா அடிக்கடி சொல்லும் வாக்கு.  அம்மாச்சி விமானம் ஏறச் சென்றபோது, விமான நிலையத்தில் இருந்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் அம்மாச்சியை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருக்கிறார்கள் அரசனிடமிருந்து தப்பினாலும் அரண்மனை நாய்களிடம் இருந்து தப்பிக்க முடியாது. ஆடைகளை அவிழ்த்து பார்த்தபோது, அம்மாச்சியின் முழங்கைகளிலும் முழங்கால்களிலும் காய்ப்பு இருந்ததாம். எனவே அம்மாச்சி ஒரு பயிற்சி பெற்ற பயங்கரவாதி என்ற சந்தேகத்தில், அவரைக் கைது செய்தார்களாம் எனப்பேசும் படைப்பு, காற்றிலே தவழ்ந்து ஓங்கிய மரங்களில் ஏறி இறங்கி ஆற்றிலே மீன் குத்தும் மனிதனுக்கு முழங்கைகளிலும் முழங்கால்களிலும் காய் இல்லாமல் பூவா பூத்திருக்கும் எனப் பதிலடியும் பகடியுமாக நகர்கிறது.  

இலங்கை உலகத்திலேயே முதலாவதாக இடத்தை பிடித்திருக்கிறது என்று ஒருமுறை பாடகி மனோலி கூஞ்ஜ என்னிடம் சொன்னார். ஒன்று தற்கொலை இரண்டு பாம்புக்கடியால் சாவு. மூன்று கண் தானம். மூன்றாவது விஷயம் பெருமைப்படக்கூடிய விஷயம் என்றாலும், நீங்கள் மூன்றாவது வரை எண்ணுவதற்கு ஒன்றிலிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும் என , போக்குகளைப் பகுத்தாய்வதினூடான துயர் புலப்படுத்தப் படுகிறது.

”வாய், தம்பி தம்பி என்று அரற்ற, கண்கள் இரண்டும் உடைந்து என்முகம் நீர் ஆறாகி, நான் ஓடிய பாதை எங்கும் முகம் ஒழுகிக்கொண்டே வந்தது. சாவின் உருவமும் பெயரும் பதித்த, கற்பலகையில் கீழே தம்பியின் உடல் கிடந்தது. கைகளும் அவனது சாரத்தில் இருந்து கிடைத்த துணியால் கட்டப்பட்டு இருந்தன. தம்பியின் இடுப்பின் பாதிதான் கிடந்தது. அவனது தலை கழுத்து வெட்டப்பட்டு அவனது பாதங்களில் வைக்கப்பட்டிருந்தது. என்னவென்று எழுத? தம்பியின் தலையை கழுத்தோடு சேர்த்துக் அப்பாதான் பொருத்தி வைத்தார். பொருத்தப்பட்ட இடத்தை கற்பூரத்தைத் தூள்செய்து பூசி அடைத்தார். தம்பி என நினைத்தால் கற்பூரமே உரைக்கிறது தம்பி என எழுதினால் அந்தத் தாளில் ஏதோ கற்பூரம் நாறுகிறது….

   கடல் நிகழ்த்திய கொடூரம் என்னவெனில், இன்று அன்று மதியத்திற்கு மேல் தான் எங்களுக்கு முழுமையாக புரிந்தது கடலில் வந்தது சுனாமி என்றார்கள். யாரும் முன்பின் கேட்டிராத பெயர் அரசி என்ற போராளி . நயினாதீவு என்ற சிறு தீவிலிருந்து இயக்கத்திற்கு வந்தவர். தனது குடும்பத்திற்கு என்னவானது என்னவானது என்று துடித்துக் கொண்டிருந்தாள் அரசி. என்னிடம் வந்து சுனாமி என்பது சிங்களப் பெயரா எனக் கேட்டாள். இந்த அழிவும் சிங்களவரால் தான் வரும் என்று நினைக்கக்கூடிய போராளி. அவர் கடற்கரையை நெருங்க நெருங்க மக்கள் அழுது குளறிக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள் இறந்துபோன நிறைய பேருக்கு அழுவதற்கு யாருமே இல்லை குடும்பமாக செத்து, கரையில் ஒதுங்கிக் கிடந்தார்கள். சாவு தண்ணீராகவா வரவேண்டும். திருக்கோவிலுக்கு போன அந்தச் சுனாமியில் எனது அம்மாவும் சித்தப்பாவும் சாம்பசிவம் அம்மாச்சியின் மனைவியும் அவரது 3 குழந்தைகளும் இறந்து போனது 6 வருடங்கள் கழித்துத்தான் எனக்குத் தெரியவந்தது …..

 

   ஒரு முறை சயனைடைக் காட்டிலும் பல மடங்குகள் வீரியமான ஒரு ரசாயன அமிலத்தை வன்னிக்கு கடத்திச்செல்ல திட்டமிடுகிறார். கொழும்புக்கு கைக் குழந்தையோடு வந்திருந்த புலிகளின் ஆதரவாளரான பெண் ஒருவரிடம் அந்த அமிர்தம் கடத்தும் வேலை ஒப்படைக்கப்படுகிறது. பால் புகட்டும் தொட்டியினுள் அந்த அமிலம் நிரப்பப்பட்டு பெண்ணின் கையிலேயே கொடுக்கப்படுகிறது. அந்தப் பெண் பயணப்பட்ட பேருந்து ராணுவச் சோதனைச்சாவடியில் வழமையான சோதனைக்காக நிறுத்தப் படுகிறது. உச்சிவெயிலில் அந்தப்பெண் சோதனைச்சாவடி முன்பாக நீண்ட வரிசையில் வலது கையில் குழந்தையுடனும் இடது கையில் பால் மூடியுடனும் காத்திருக்கிறாள். வெயிலை தாங்க முடியாமல் குழந்தை திடீரென வீறிட்டு கத்த ஆரம்பிக்கிறது. அங்கே இருந்த ராணுவவீரன் ஒருவனுக்குக் குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியவில்லை. குழந்தைக்குப் பால்புகட்டுமாறு சிங்களத்தில் சொல்கிறான். இந்தப்பெண் அவள் சொல்வது போல, பாவனை செய்கிறாள். குழந்தை இப்போது இன்னும் அதிகமாக அழுகிறது. ராணுவவீரன் அந்த பெண்ணின் கையிலிருக்கும் பால்புட்டியை சுட்டிக்காட்டி, பால்புகட்டுமாறு சைகை காட்டுகிறார் அந்தச் செய்தியும் புரியாததுபோல இந்தத் தாய் பாவனை செய்கிறாள். பெண்ணை நெருங்கி வருகிறான். நான் மொழிபெயர்த்த பத்திகளை அம்மாவிடம் கொடுத்துவிட்டு, அம்மா படித்து முடிக்கும் வரை காத்திருந்தேன். அதற்குமேல் மொழிபெயர்க்கத் தேவையில்லை என்று, அம்மா சொன்னார்”.

”பூனகரி சண்டையிலே அவருக்கு காலில் அடிபட்டது. அவரது உடம்பில் ஏற்பட்ட வடுக்கள் நூறாவது இருக்கும் என்று, அம்மா சொல்லியிருக்கிறார். பப்பா என்னிடம் உள்ளே வாருங்கள் என சொல்லிவிட்டு, முன்னே நடந்தார். மனிதரின் உடலில் குண்டுகள் தைத்து, உலோகமாகவே மாறிவிட்டார் என, நினைக்குமாறு அவரது குரல் நெருப்பில் இலக்கிய இரும்பில் சுத்தியலால் அடித்த ஓசை போல் இருந்தது. அந்த வீட்டின் கதவுகள் திறந்து கொண்டன.

இப்படியான துயர்ப்படு காதையாக நாவல் நெடுக வாழ்வு அகதிமையாகக் கொட்டிக்கிடக்கிறது.

 கிழக்கு மாகாணத்தின் காட்டில் பிறந்த எனக்கு, சாதி என்றாலே என்னவென்று தெரியாது. என்னுடைய சாதிப்பெயரும் எதுவென்று தெரியாது. குடிப்பெயர்ப் பதுமர்குடி என்பது மட்டுமே எனக்குத் தெரியும். அதைத்தவிர….. போன்ற குடிகளும் அங்கே உள்ளன ஆனால் அந்த குடிகள் இடையே சண்டை சச்சரவுகள் கிடையாது. மாறிச்சாறி கல்யாணமும் கட்டுவார்கள். என்றெல்லாம் பதிவுசெய்கிறது, நாவல். எக்கச்சக்கமான சாதிகள்… சாதிப்பிரச்சனைகள்…. அதைச் சமாளிப்பதற்கு தனியாக ஒரு புலிப்படை தொடங்க வேண்டும் என்று செந்தூரி அக்கா , ஒருமுறை சொன்னார். பயிற்சிக்கு வந்திருக்கும், இந்த அணிக்குள்ளும் அரசல் புரசலாக சாதிப் பேச்சுக்கள் இருந்தன. எவராவது இந்த குற்றச்சாட்டில் அகப்பட்டால் செந்தூரி அக்கா, வழங்கும் தண்டனை மிகக் கடுமையானதாக இருக்கும் என விமர்சனமும் பதிவாகிறது.

ஈழத்திலும் மேற்குலகிலும் கதைப்பரப்பு விரிகிறது. வெறும் துயர்ப்பதிவாக மட்டுமல்லாமல் போர் உக்கிரமும்  வடுவும் பகடியால் விமர்சனத்தால் எதிர்கொள்ளப் படுகின்றன. பதுமர்குடி வழக்காறுகள் பழமொழிகள்..சொலவடைகள் மேலைத்தேய போருக்குப் பிந்தைய (post war issuses) தமிழர் பாடுகள் எல்லாம் விரிகின்றன. இனவாதமும் மதவாதமும் அழித்தொழிப்பை தொடர்ந்து நிகழ்த்திவருகின்றன. மொழிக்கு வசமாகாத மொழிபெயர்க்க முடியாத அப்பாற்பட்ட அனுபவங்கள் (inexplicable experience) சொற்களுக்குள் கட்டுண்டிருந்தாலும்  (நாவல் நெடுகவும்) இன்குலாபின் வார்த்தையில் சொன்னால், முளைக்க மண்தேடி சிறகு முளைத்து விதைகள் பறந்தபடியே அலைகின்றன.6

 

சான்றெண் விளக்கம்

1. லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ், இந்திரன் (மொ.பெ.), கருப்பு இயேசுநாதர், அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், ப.61.

2 செழியன், அதிகாலையைத் தேடி, ப.35.

3. இச்சா, பக் 33

4.இச்சா, பக் 23

5.மேலது, பக் 25

6.இன்குலாப் கவிதைகள்