ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சங்க இலக்கியத்தில் யானைகள்

முனைவர் நா. குமாரி, உதவிப்பேராசிரியர் & துறைத்தலைவர் தமிழ்த்துறை, அக்சிலியம் கல்லூரி, வேலூர் - 6. 04 Feb 2021 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்:

         

       வாழ்வின் பல்வேறு கூறுகளைச் செம்மையாக எடுத்தியம்புபவையே இலக்கியங்கள்;. நிலத்தில் முளைக்கின்ற விதையே அந்நிலம் எப்படிப்பட்டது என்பதைக் காட்டிவிடும். அதுபோலவே நம்முடைய இலக்கியங்களும், அந்தக்கால சூழ்நிலை, நாகரிகம், பண்பாடு, போன்றவற்றைத் தௌ;ளத் தெளிவாக நமக்கு எடுத்தியம்புகின்றன. இன்றைய இலக்கியங்களுக்கும், சங்க இலக்கியங்களுக்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றின் பொருண்மை என்னவோ ஒன்றாகத்தான் காணப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் சொற்களின் பொருள்களில் மட்டுமே பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அக்காலம் தொட்டு இன்றுவரை தமிழில் பல்வேறு இலக்கியங்கள் தோன்றியுள்ளன. இலக்கியங்களில் கருப்பொருளுக்கென ஒரு தனித்துவம் உண்டு. கதைமாந்தர்களின் வாழ்வோடு விலங்குகளும் பறவைகளும் பல இடங்களில் பின்னிப்பிணைந்துள்ளன. அவ்வகையில்  சங்க இலக்கியத்தில் யானைகள் எவ்வாறு சுட்டப்படுகின்றன என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

                   சங்க  இலக்கியங்களில்; பெரிதும் இடம் பெற்றுள்ள விலங்கு யானை எனலாம். காடுகளில் சுற்றித்திரியும் யானைகளின் பயனைவிட வளர்க்கப்பட்ட யானைகளின் பயனையே சங்க இலக்கியத்தில் அதிகம் காணமுடிகிறது. யானைகள் பெரும்பாலும் அரண்மனைக் கொட்டாரத்திலும், பாறைகளிலும் வளர்க்கப்பெற்று பகைவர்களின் கோட்டை, அரண்மனைகளை உடைக்கவும், பகைவரின் காவல் மரத்தை முறிக்கவும், பயிர் பச்சைகளைச் சேதப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டன. அக்காலத்தில் “யானைப்போர்ப் படைப்பிரிவு” என்று தனியாக ஒன்று வைத்துப் பேணி வந்தனர். அதனால் பெரிய யானைப்படையை உடைய அரசன் பெரிதும் மதிக்கப்பட்டான்.

திறவுச் சொற்கள்:

கொடை, படைக்காட்சி, போர்க்களத்தில் யானைகள், மன்னர்கள் - களிறு, யானை – செயல்.

யானை கொடை

      அரசர்கள் தம்மை நாடி வருபவர்களுக்கு யானையைப் பரிசாக அளித்திருப்பதைச் சங்க இலக்கியங்களின் மூலம் அறிய முடிகிறது. அரசனாகத் தருவது மட்டுமல்லாமல் புலவர்களே யானை வேண்டும் என்று வேண்டிப் பெற்றுள்ளனர்.

      பெருஞ்சித்திரனார் குமணனிடம்” பனை போன்ற துதிக்கையுடன், முதிர்ந்த தந்தங்களையுடைய யானை மீது ஒளி மிகும். அதன் நெற்றிப்பட்டம் விளங்கும் படியாக இரண்டு பக்கங்களிலும் உள்ள மணிகள் ஒன்றுடன் ஒன்று மாறி மாறி ஒலிக்கும் படி ஏறித் தலைமை விளங்க அமர்ந்து என் ஊருக்குப் போவதை நான் விரும்பினேன்” என்று கூறுகிறார்.

      குன்றுகளோடு கூடிய யானைகளைப் பரிசிலாகக் கேட்கும் புலவர்களும் இருந்துள்ளனர். பொருந்திய பொன்னிறம் வியந்த உயர்ந்த உச்சியையுடைய இமயமலை போன்று பட்டம் அணிந்த நெற்றியையும், சுருங்காத துடி போன்ற அடியைக் கொண்ட கன்றுடன் உள்ள பெண் யானைகள் இடையிடையில் உள்ள களிறுகளான பரிசிலை எமக்கு அளிப்பாயாக” என்று அரசனிடம் புலவர் வேண்டுகிறார்.

     யானைகளைக் கொடையாகத் தந்த வள்ளல்களைப் பற்றிக் கூறுகையில், அரசன் ஆய் அண்டிரன் இரப்பவர்க்கு அளித்த யானைத் தொகைக்கு இணையாக வானம,; மேகம் இல்லாது பல நட்சத்திரங்களைத் தோற்றுவிக்குமாயினும் அவற்றின் கூட்டம் இதற்கு இணையாகாதாம். தனியாக யானைகளைத் தராமல் கன்றோடு பெண் யானைகளைப் பரிசாக அளிப்பானாம்.

     ஆய்அண்டிரன்  உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் தன்னையும் தன் குன்றையும் பாடி வருபவர்கட்கு யானைகளை மிகுதியாக பரிசில் நல்குபவன்.  அவ்வாறு பரிசில் பெற்று திரும்புபவர்கள் யானைகள் பலவற்றுடன் வருவதை அடிக்கடி பார்த்திருக்கிறார். அவனது குன்றை நோக்கிப்  போய்க்கொண்டிருக்கும் போது முடமோசியார் மிகப் பலவாகிய யானைகள் காட்டில் மேய்ந்து திரிவதைக் காணுகின்றார். இந்த காட்டிற்கு இத்தனை யானைகள்  எப்படிக் கிடைத்தன? இதுவும் ஆய் அண்டிரனது குன்றத்தைப் பாடிப்பரிசு  பெற்றது போலும்!” என்று வியப்போடு கேட்கிறார்.

 

        மழைக்கணம் சேக்கும் மாமலைக்கிழவன்

         வழைப்பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்

         குன்றம் பாடின கொல்லோ

         களிறுமிக வுடைய இக்கவின் பெறுகாடே? (புறம் - 131)

 

     பிரிந்த தலைவன் பல நாள்களாகத் வராததால் எப்போது வருவான் என்று ஏங்கியிருந்தாள் தலைவி. அப்போது பாணன் ஓடிவந்து தலைவன் வருகிறான் என்று கூறுகிறான். இருப்பினும் தலைவியால் இதை நம்ப முடியவில்லை. “யார் தலைவன் வரும் செய்தியை உமக்கு கூறியது. யாராயினும் ஆகட்டும் ,இத்தகைய நற்செய்தியைக் கூறிய அவருக்கு யானைகள் குளிக்கும் சோனையாற்றங்கரையிலே இருக்கக்கூடிய பாடலிபுரத்தையே  பரிசிலாகக் கொடுப்பாயாக” என்று துள்ளிக் குதித்தாள். இப்பாடல் குறுந்தொகையில் பருமரத்து மோசிகீரனரால் இயற்றப்பெற்றுள்ளது.

 

வெறும் யானையை பரிசாக அளிக்காமல் அதனை பொன்னாலும் மணியாலும் அலங்கரித்துப் பின்பு அதனை பரிசாகத் தருவானாம் ஆதன் ஓரி. காண்டிரக் கோவின் நாட்டில் பெண்கள் தம் கணவன் நெடுந்தொலைவு சென்றிருந்தால் இவர்களே அலங்கரிக்கப்பட்ட பெண் யானையைப் பரிசிலாகத் தருவார்களாம்.

 

யானைப்படைக்காட்சி

     சோழன் நெடுங்கிள்ளியின் யானைக் கொட்டாரத்தில் யானைகள் பொருந்தியுள்ள காட்சியைக் கோவூர்கிழார்” மன்னனே சுழலும் யானைகள் கரிய பெண் யானை கூட்டத்துடன் பெரிய நீர்நிலையில் பரந்து நீராடாமலும் ,நெல்லையுடைய கவளத்துடன் நெய்யால் மிதித்து செய்யப்பட்ட உணவைப் பெறாமலும் திருந்திய பக்கத்தையுடைய வலிய கட்டுத்தறிகளைச் சாய்த்து நிலத்தில் புரளும் கைகளைக் கொண்டும் பெருமூச்சுவிட்டு இடிபோல் முழங்குகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை,

 

         “இரும்பிடித்தொழுதியோடு நெய்ம்மிதி பெறாஅ

         நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ

         திருத்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி

         நிலமிசைப்புரளும் கைய வெய்துயிர்த்தி” (புறம்-44)

என்ற பகுதி விளக்குகிறது.

 

போர் யானையின் செயல்கள்

     பகைவர் நாட்டு நீர்நிலைகளை பாழ்படுத்தும் செயலிலும் யானைகள் ஈடுபடுத்தப்பட்டன. பகைவர் நாட்டின் நீர்நிலைகளில்; பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி தனது யானையைச் செலுத்தியதை,

 

        “.....நின் தெவ்வர் தெஎத்துத்

        துளங்கு இயலாற் பனை எருத்தின்

        பாவடியாற் செறல் நோக்கின்” (புறம் - 6-9)

எனப் புறநானூறு கூறுகிறது.

 

   “அசையும் இயல்புடன், பெரிய கழுத்தையும் பரந்த அடியுடன் சினத்துடன் கூரிய பார்வையையும், கொம்பையும் கொண்ட ஆண் யானையை அப்பகைவரின் காவல் உடைய நீர்நிலையில் படியச்செய்தாய்” என்று புகழ்ந்து பாடுகிறார் நெட்டிமையார். போர்க்களத்தில் போரிடும் யானைகள் சூழ்ந்து கொள்வது கருமேகம் திரண்டு சூழ்ந்தது போல் இருந்ததாம். போர்க்களத்தைத் தனதாகக் கொண்டு போர் புரியும் யானைகள் பற்றிக் கபிலரும் கூறியுள்ளார். 

 

இளவிச்சிக்கோவைப் பாராட்டுரையில் “களத்தைத் தனதாக்கிக் கொண்டு சினந்து கொல்லும் அஞ்சாமையுடைய யானைகளைக் கொண்ட விச்சிக் கோவே!” எனக் குறிப்பிடப்படுகிறார்.

 

 

 

போர்க்களத்தில் யானைகள்

     ஆண் யானைகள் மதிற் கதவுகளை முறித்துச் சினமுடன் திரிந்து கூர்முனை மழுங்கிட  கொம்புகளை உடையனவாதலால் உயிரை உண்ணும் எமனைப் போன்றனவாயின. இதனை 

 

        களிறு கதவு எறியா, சிவந்து, அராஅய்,

        துதி மழுங்கிய வெண் கோட்டான் ,

        உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன” (புறம்-4)

என்ற புறநானூறு பாடல் சுட்டுகிறுது.

 

மற்றொரு பாடலில் போரில் பகைவரைத் தாக்கி அழித்தால் முனை முறிந்த கொம்புகளையுடைய அதியமானின் யானையைக் கண்ட பகைவர்கள் தங்கள் கோட்டை மதிலில் உள்ள கணைய மரத்தாலான கதவுகளைப் புதிதாக மாற்றத் தொடங்கினர். இதனை,

 

        முனைக்கெவ்வர் முரண் அவியப்

        பொரக்குறுகிய நூதிமருப்பின் நின்

        இனக்களிறு செலக்கண்டவர்

        மதிற்கதலவம் எழுச்செல்லவு” (புறம்-104)

 

ஏன்ற பாடல் மூலம் அறிய முடிகிறது.

     ஆயிரம் யானையினை தனி ஒரு மனிதனாக வெட்டி வீழ்த்தக் கூடியவனுக்காக  பாடக்கூடிய இலக்கியமாகப் பரணியினைப் படைத்துள்ளார். அவ்வாறு மன்னர்களை விடவும் வீரம் பொருந்திய யானையைப் போர்க்களத்தில் தனி ஒருவராக நின்று கொல்லுவது அவ்வீரனுக்குப் பெருமையாக கருதப்படுகிறது. இதனைப் புறநானூற்றில் உள்ள பல பாடல்கள் எடுத்துரைக்கின்றது. இத்தகைய வீரரின் சிறப்பை,

        “மேனா ளுற்ற செருவி விற் கிவர் தன்னை

        யானை யெரிந்து களத் தொழிந் தனனே” (புறம்-144)

என்னும் பாடல் மூலம் அறியலாம்.

 

     போர்க்களத்தில் யானைகள் போரிடும் காட்சியைக் குன்றேறி யானைப் போர் கண்டார் போல என்ற கூற்றினைப் போல் பெரிய கடலின் பெரிய ஆழத்திடத்து காற்று புடைக்கப்பட்ட மரக்கலம் நீரைக் கிழித்து ஓடுமாறு யானைகள் இடம் அகல செய்ததாக,

        “நளிகட லிங்குட்டத்து

        வளிபுடைத்த கலம்போலக்

        களிறுசென்று கனைகற்றவும்” (புறம்-13)

இப்பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.

மன்னர்களும் களிறும்

     யானைகளின் வீரத்திற்கு மன்னர்களின் வீரம் பல்வேறு இடங்களில் ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளன. அதியனைப் பற்றி ஒளவையார் குறிப்பிடும் நீர்த்துறைகளில் யானைகளை குளிப்பாட்டும் போது சிறுவர்கள் அதன் தந்தங்களைப் பிடித்து அதன் மீது ஏறி விளையாடுவர். அப்போது அவை குழந்தைகளோடு விளையாடும். ஆனால் போர்க்களம் புகுந்துவிட்டாலோ பகைவரை துண்டாடும் அதுபோல அதியன் தன் குடிமக்களிடம் அன்பு, கருணையுடன் நடந்து கொள்வான். ஆனால் தன் பகைவருக்கு கூற்றுவன் போல் விளங்குகிறான். எப்படி யானைகளுக்கு இருவேறு தன்மைகள் உண்டோ! அதுபோல் அதியனுக்கும் உள்ளன. 

     மேலும் தன்னோடு எதிர் நின்று போரிட வீரம் இல்லாமையால் போர் நிகழாமல் இருந்தால் அதியமான் சிறிதும் கவலை கொள்ளவில்லை. போர்க்களத்தில் எதிரே வந்த யானைகளைக் கொன்று அதன் தந்தங்களால் தன் மார்பில் விழுப்புண் பட்டான் என்றும்

        “அன்னல் யானை அடுகளத்து ஒலியிய

        அருஞ்சமம் தயயிய நூறிநீ

        பெருந்தகை விழுப்புண்பட்டமாறே” (புறம் - 22)

என்றும் பாடல் வரிகள் மூலம் ஒளவையார் விளக்குகின்றார்.

     சேர மன்னர்களுள் சிறப்பு மிக்கவனாகக் கருதப்படுபவன் சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை. இச்சேரமன்னனின் இயற்பெயர் சேய் என்பது. இவன் சேர மரபில் இரும்பொறை குடியில் பிறந்தவன். யானையினது நோக்குபோலும் நோக்கினை உடையவன் என்பது பற்றி இவன் யானைகட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை எனப்படுகிறான். வேழ நோக்கினான் விரல் வெஞ்சேய் என இவனை குறுங்கோழியூர் கிழார் பாராட்டுகின்றார்.

 

யானை உணவு

     யானைகள் உணவு உட்கொள்ள கைப்போன்று உதவும் உறுப்பு தும்பிக்கையாகும். பpற உயிரினங்களுக்கு இல்லாத உறுப்பாக தும்பிக்கை காட்சியளிக்கிறது. யானையின் கை அறிவியல் படி அதன் மூக்கும் மேல் உதடும் சேர்ந்து மாறிய உறுப்பாகும். தேவாரத்தில் நெடு மூக்கு என்றே அதன் துதிக்கை அழைக்கப்படுகிறது என்று பி.எல் சாமி கூறுவார். இதன் மூலம் தும்பிக்கையின் பயன்பாடு தெரிய வருகிறது. சங்க புலவர்கள் நீண்டு கருமையாக இருக்கும் தும்பிக்கையை பனை மரத்திற்கு உவமைப்படுத்துவர் இதனை,

      “பனை தடி புனத்தில் கைதடிப்பு பலவுடன்

       யானை பட்ட வான் மயண்கு கடுந்தார்” (பதிற்று- 36:5-6)

     யானைகள் இயற்கையாக உண்ணக்கூடியது மூங்கில். பசுமையான மரங்கள், மரப்பட்டைகள் போன்றவையாகும். கபிலர் பாரியின் பறம்பு மலை வளத்தை, யானையின்; உணவோடு ஒப்பிடுகிறார். ”யானை மென்று துப்பிய கவளத்தின் கோது போல் மது பிழிந்து கொண்டு போடப்பட்டவற்றினின்றும் மது ஒழுகும் முன்றிளை உடைய தேர் அளிக்கும் இருப்பை உடைய பாரியின் பறம்புமலை என்கிறார்.

     யானைக்கு விளாம்பளம் மிகவும் விருப்பமானது என்று சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. மூகையலூர் சிறுகருதும்பியார் தனது பாடலில்; “மன்றத்தினிடையே வளர்ந்துள்ள விளாமரத்தின் மனையில்; எழுந்த விளாம்பழத்தைக் கரிய கண்ணையுடைய மறத்தியரின் புதல்;வனுடனே காட்டில் வாழும் கரிய யானையினது கன்றும் வந்து எடுக்கும்” என்று விளக்குகிறார்.

 

மரம் தூக்கும் யானைகள்

     சங்க காலத்தில் யானைகளைப் பழக்கிப் பெரிய மரங்களை வெட்டியபின் துண்டுகளை எடுத்து வரப் பயன்படுத்தி இருக்கிறார்கள். விறகு கொண்டு வரும் யானை பற்றி மாப்பித்தியார்,

         “கழைக்கண நெடுவரை அருவியாடி

         கான யானை தந்த விறகின்

         கடுந்தெறல் செநதீ வேட்டுப்

         புறம் தாழ் புரிசடை புலர்த்துவோனே” (குறுந் - 59)

என்கிறார்

 

யானை வேட்டை

     அகநானூற்றில் மாமூலனார் பாடிய பாலைத்திணைப்பாடலில் யானைக் குடும்பம் குழியில்; வீழ்ந்து கிடக்கும் காட்சியைக் காண முடிகிறது. யானை வேட்டையில்; ஈடுபடுவோர் ஆழக்குழித்தோண்டி மேற்பரப்பில் தழை இலைகளை மூடி வைத்திருப்பர். தும்பிக்கை வழி நிலத்தின் தன்மையை ஆராய்ந்து அறிந்து தான் யானை அடியெடுத்துச் செல்லும.; எனினும் இலை தளை உணவு ஆசையால் தழையை உண்ணச் சென்று குழியில் விழுந்து விடும். அவ்வாறு குட்டியுடனும் பெண் யானையுடனும் வீழ்ந்துவிட்ட ஆண் யானையை எழினி என்பான் வேட்டையாடி வரவில்லை என்பதற்காகத் தண்டனை பெறுவதாக மாமூலனார் கூறுகிறார்.

 

         “பறைகண்டன்ன பாஅடி நோன்தாள்

         துண்நிலை மருப்பின் வயக்களிறு வரிஞடிதாறும்

         குழியிடைக்கொண்ட கன்றுடைப் பெருநிரை

         பிடிபடுபூசலின் எய்தாது ஒழிய”  (அகம்-211)

யானையின் கால்கள் வலிமை மிகுந்தவை. ஆண் யானைக்கே உறுதியான கொம்புகள் உண்டு. கடம்ப மரத்தில் உடலை உரசும் என்ற செய்தியைப் புலவர் எடுத்து உரைக்கிறார்.

இதே செய்தியினை பட்டினப்பாலையிலும் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

 

         பிறர் பிணியகத்து இருந்து பீடு காழ் முற்றிட

          நுண்ணிதின் உரை நாடி நண்ணார்” (.பா.222-225)

என்ற அடிகளால் அறிய முடிகிறது.

    களிறு, பிடி என்ற சொற்களை ஆசிரியர் பட்டினப்பாலையில் பயன்படுத்தியுள்ளதை அறிய முடிகின்றது.

          

உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும்

                 வெயில் இளக்கும் களிறு போல” (.பா.171-172)

                “பெரு நல் யானையொடு பிடிபுணர்ந்து உறையும்” (.பா.251) 

நிலத்தில் ஈர்த்துச் செல்லத்தக்க அளவில் தும்பிக்கை இருப்பதே யானைக்குச் சிறப்பு என்று கூறப்பட்டுள்ளது.

              “இரும்பணந் தடக்கை யிருநிலஞ் சேர்ந்த” (குறுந் – 163)

               “பள்ளி யானையின் வெய உயிரினை” (நற் 253:2)

 

இசையில் அயர்ந்து உறங்கும் யானைகள்

 

     மதம் பிடிக்கும் யானையானது இசையினைக் கேட்டு ,இவ்விசைக்கு உருகி அமைதி கொள்ளும் தன்மை உடையது என்பதனை அகநானூற்றில் காணலாம். தினைப்புனம் காவல் காக்கும் பொருட்டு சென்ற கானவன் பரம்மேல் கள்ளுண்டு உறங்குவான். அவனுடைய மனைவியோ கூந்தலை கோதிக்கொண்டிருப்பாள். அந்தச் சமயம் வீரம் பொருந்திய ஆண்யானை தினைப்புனத்தில் நுழையும். அதனை அறிந்த கொடிச்சியோ, தினைப்புனத்தினைக் காக்கும் பொருட்டு யாழ் எடுத்து குறிஞ்சிப் பண்ணைப் பாடுகிறாள். தினைக் கதிர்களைத் தின்ன வந்த யானை அசையாமல் அயர்ந்து உறங்கிவிடுகின்றன. இதனை,

 

          உளையாமான் துப்பின் ஓங்குதினைப் பெரும்புனத்துக்

          கழைதின் கானவன் பிழிமகிழ்ந்து வந்தென

                       …………………………………………….

          படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென

          மறம்புகல் மழகளிறு உறங்கும்” (அகம் - 102)

என்ற பாடல் வரிகளால் யானை இசையில் மயங்கி நிற்பதைப் புலவர் சேந்தங்கூத்தன் தன் கற்பனையில் அமைத்து பாடுகிறார்.

 

 

 

 

 

 

முடிவுரை

     போர்க்களத்தில் யானைகள் பெரும்பங்காற்றின. யானைகளைப் போர்க்களத்தில் வீழ்த்துவதும் யானைகளால் போர்க்களத்தில் விழுப்புண்பட்டு வீழ்வதும் வீரமாகக் கருதப்பட்டன. மன்னர்களின் ஆற்றலுக்கு யானைகளின் ஆற்றல் ஒப்புமையாகவும் உதாரணமாகவும் கூறப்பட்டுள்ளன. அக்கால உழவர்கள் யானை கட்டிப் போரிட்டனர். அக்கால மன்னர்கள் யானை போர் செய்து தங்கள் வீரத்தை நிலைநாட்டினர். இவ்வாறாக சங்க இலக்கியத்தின் மூலம் பண்டைய தமிழர்கள் யானைகளை சார்ந்து வாழ்ந்த தன்மை புலனாகிறது.

 

பார்வை நூல்கள்:

1. புறநானூறு – சு. துரைசாமிப்பிள்ளை உரை – கழக வெளியீடு.

2. குறுந்தொகை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கழக வெளியீடு.

3. அகநானூறு – ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – கழக வெளியீடு.

4. பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை, சாமி சிதம்பரனார் இலக்கிய நிலையம்.

5. நற்றிணை, பின்னாத்தூர் நாராயணச் சாமி ஐயர், கழக வெளியீடு, சென்னை – 1

6. பத்துப்பாட்டு, உ.வே.சா, கழக வெளியீடு.

7. பதிற்றுப்பத்து, அ. மாணிக்கனார், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை – 17

8. சாமி. பி.எல், சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், கழக வெளியீடு, சென்னை-1